43
சுகந்தேடிச் செல்வார்போல் மெய்யறிவில் மூழ்க
மிகவும் மனங்கொள்வாய் மைந்தா - அகத்தின்
ஒளியே அவந்தேடி ஓட்டும் அதனால்
வெளியே சிவந்தேடல் வீண்.
மிகவும் மனங்கொள்வாய் மைந்தா - அகத்தின்
ஒளியே அவந்தேடி ஓட்டும் அதனால்
வெளியே சிவந்தேடல் வீண்.
என் மகன் போன்றவனே! சுகம் தேடுவோரின் தீவிரத்தோடு மெய்யறிவைப் பெறுவதில் கவனமாக இரு. அறிவை வெளியே தேடிப் பயனில்லை; ஏனெனில், அறியாமைத் தீங்கை அடித்து விரட்டும் அறிவொளி உனக்குள்ளே இருக்கிறது (என்றான் எமன்).
மைந்தன்: மகன், மாணவன்
அவம்: தீங்கு
சிவம்: உண்மை, மெய்யறிவு, தூயறிவு
['we all try to escape pain and death, while we seek what is pleasant' - albert einstein]
'விடியோ கேம் விளையாடு' என்றால் மகிழ்ச்சியோடு மெய்சிலிர்க்கும் மகன், 'வீட்டுப்பாடம் செய்' என்றால் மனமொடிந்து போகிறான். விடியோ விளையாட்டில் சுகத்தைக் கண்டவன், வீட்டுப் பாடத்தில் சுகம் காண்பதில்லையே, ஏன்? சிறுவர் முதல் முதியோர் வரை இதே நிலை. சுகத்தைத் தேடியடைவதில் தோன்றும் விருப்பமும் வேகமும் கண்மூடித்தனமும், ஏனோ பிற தேடல்களில் வெளிப்படுவதில்லை.
எது சுகம்? அவரவர் பார்வையில் சுகம் பல விதங்களில் புலப்படும். இளம்பனிச் சாரலில் நடப்பது சுகம். சிறு பிள்ளையின் சிரிப்பைக் கேட்பது சுகம். காதலிப்பது சுகம். காபி குடிப்பது சுகம். பணம் சேர்ப்பது சுகம். செல்வத்தை அனுபவிப்பது சுகம். அடுத்தவரை விட நாம் உயர்ந்தவர் என்று அடுத்தவரே சொல்லிக் கேட்பது சுகம்.
எது சுகமானாலும், சுகங்களில் எத்தனை வகையானாலும், தேடுவோரிடம் பொதுவான குணம் ஒன்று உண்டு. சுகம் தேடுவோர் நுனிப்புல் மேய்வதில்லை. மொத்த சுகத்தையும் குத்தகை எடுத்தாக வேண்டும். குளிர் நாளில் முகத்துக்கு மேலே இழுத்துப் போர்த்திக் கொண்டு உறக்கத்தை அனுபவிப்பது போல சுகத்தில் மூழ்கிவிட வேண்டும். சுகத்தை வேரோடுப் பிடுங்கி எடுத்து அனுபவித்தாக வேண்டும் அவர்களுக்கு.
இது தவறா சரியா என்ற ஆய்வு பொருட்டல்ல. ஒன்றைத் தேடிப் போகும் பொழுது, அரைகுறை முயற்சி பலனளிக்காது என்பது உண்மையே. எனினும், சுகந்தேடலில் செலுத்தும் முழு முயற்சியை பிற தேடல்களில், செயல்களில், நமக்கும் பிறருக்கும் நன்மையளிக்கக் கூடியவற்றில், செலுத்த முடிவதில்லையே?
விடியோ விளையாட்டில் தோல்வியடைந்தாலும் உற்சாகம் குன்றாமல், வேகம் குறையாமல், விடா முயற்சியோடு ஆடி முதல் வெற்றி பெற்றதும் மேலும் கீழும் குதிப்பதில் இருக்கும் சுகம், கணக்குப் பாடத்தில் முயற்சி செய்து சரியான விடை எழுதிக் குதூகலிப்பதில் வெளிப்படுவதில்லையே?
சின்னத்திரைக் கதாபாத்திரம் ஊர்ப்பட்டத் துன்பங்களை வாரந்தோறும் சந்தித்து, வென்று, இறுதியில் நிம்மதியடைவதை ஒரு காட்சி விடாமல் பார்த்து மகிழ்வோர், உயிரற்ற அந்த வெற்றியில் சுகமடைவோர், அதே நேரம் தம் வாழ்வில் சந்திக்கும் அசல் துன்பங்களைப் போக்கத் துரும்பைக் கிள்ளிப் போடவும் சலிப்பதேன்?
கூட்டத்தில் நின்று அடிதடியைப் பொருட்படுத்தாமல் முதல் நாள் முதல் காட்சி சினிமா படம் பார்த்த சுகம், ஆளில்லாத நூலகத்தில் அரைமணி படிப்பதில் வருவதில்லையே?
தம் செயலில் முட்டாள்தனமும் கண்மூடித்தனமும் கலந்திருப்பது புரிந்தும் பலர் தயங்காமல் அந்தப் பாதையிலேயே தொடர்ந்து செல்வதேன்? நற்பயன் தரும் முயற்சியில் ஆயாசம் கூடி அரைகுறையாய் விடுவதேன்?
அறிவில் சுகமில்லை. ஆசையில் சுகமுண்டு. சுகத்தின் மயக்கம், சுயத்தில் இல்லையோ? சுகம் பெறும் எதிர்பார்ப்பே சுகம் தருவதால், எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சுகம் தேடுகிறோமா?
['சுகம், சுகம்.. அது துன்பமான இன்பமானது' - கண்ணதாசன்]
வரம் வழங்கி ஓய்ந்திருந்த எமன், நசிகேதனை மாணவனாக ஏற்று மெய்யறிவுப் போதனையைத் தொடங்கினான். "நீ நல்ல மாணாக்கன். என் மகன் போன்றவன். உனக்கு மெய்யறிவு வழங்குவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி" என்றான். "நசிகேதா! மெய்யறிவின் நுண்மைகளை நன்கு அறிந்து கொள்ள, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உனக்கு எத்தனையோ சுகமும் செல்வமும் தருவதாகச் சொன்னேனே? அத்தனையும் ஒதுக்கி விட்டு மெய்யறிவே வேண்டுமென்றாய். இருப்பினும், சுகங்களைத் தேடுவோர் காட்டும் தீவிரத்தை, நீ அறிவைப் பெறுவதில் தொடர்ந்து காட்ட வேண்டும்" என்ற எமன், மெய்யறிவின் முதல் பாடத்தைத் தொடங்கினான்.
"மெய்யறிவை நீ வெளியே தேட வேண்டியதில்லை. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்துக் கொண்டு வெளியே சுத்தத்தைத் தேடும் வீணர்கள் என்றுமே சுத்தம் பெறுவதில்லை. அறிவொளி உனக்குள்ளேயே இருக்கிறது. அந்த ஒளியை வைத்து உன் வாழ்க்கைப் பாதையை அடையாளம் காண்பாய். அறியாமை எனும் இருளைப் போக்குவாய். உனக்குள்ளிருக்கும் மெய்யறிவென்னும் ஒளியை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு. தம்முள் இருக்கும் அறிவுச்சுடரை அணையாமல் காத்து அறிவுத் தீப்பந்தமாக்குவதே ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டிய பிறவி ரகசியம்" என்றான்.
"வெளியே தேடுவதா? அப்படியென்றால்? ஒரு உதாரணம் சொல்லுங்களேன்?" என்றான் நசிகேதன்.
"நீ இங்கு வந்து சேர்ந்த விதமே ஒரு உதாரணம்" என்றான் எமன். "உன் தந்தையின் செயலைக் கவனி. சொர்க்கமும், சொர்க்கத்தில் கிடைப்பதாகச் சொல்லப்படும் குறைவற்ற மகிழ்ச்சியும், பிறப்பற்ற நிலையும் பெற விரும்பினான் உன் தந்தை. அதற்காகத் தன்னையும் தன்னை நம்பி இருந்த மக்களையும் தவிக்கவிட்டு, தேவையற்றச் செயல்களைப் புரிந்தான். நிம்மதியும் மகிழ்ச்சியும் தன்னைச் சுற்றி இருப்பதை அறியாமல், எடுத்தப் பிறவியில் நிம்மதியைத் தேடாமல் எடுக்காதப் பிறவியில் நிம்மதியைச் சேர்க்க எண்ணினான். தானம் கொடுத்தவனுக்கு நிம்மதி கிடைத்ததா? வேள்வி புரிந்தவனுக்கு பலன் கிடைத்ததா? இல்லையே? தன்னை இழந்து, கண்மூடித்தனத்தில் உன்னையும் இழந்தான். உன்னை இழக்க நேர்ந்ததால் ஊராரின் அவச்சொல்லுக்கு ஆளானான். இருந்த நிம்மதியையும் இழந்தான்" என்று எடுத்துச் சொன்னான் எமன்.
"அறிவொளியை அடையாளம் சொன்ன நீங்கள், சுகம் தேடுவோரின் தீவிரத்தைக் கடைபிடிக்கச் சொல்வானேன்? எனக்குச் சுகங்களில் ஈடுபாடில்லை என்று தெளிவாகச் சொன்னேனே? சுகம் தேடுவோரின் தீவிரத்தைப் பற்றி நானறிய வாய்ப்பில்லையே? அதைப் பற்றிச் சொல்லுங்களேன்?" என்றான் நசிகேதன்.
"தான் சொர்க்கம் போக வேண்டுமென்பதற்காகப் பெற்ற பிள்ளையை எமனுலகம் அனுப்பிய உன் தந்தையின் அறியாமையை, கண்மூடித்தனத்தை, எப்படியாவது சொர்க்க சுகத்தைப் பெற வேண்டும் என்ற தீவிரத்தை, நீ உணரவே இதை உதாரணமாகச் சொன்னேன்.
உன் தந்தையைப் போல் எண்ணற்ற உலக மக்கள் இருக்கிறார்கள். குறிக்கோள் ஒன்றிலாது எதையோ செய்து, யாரையோ பின்பற்றி, சுகமென்று எதையோ நம்பி, எங்கேயோ போய், கடைசியில் விதி என்று நொந்து மடிகிறார்கள். அறியாமை எனும் மயக்கம் தீவிரமானது. கொடும் போதையிலும் கொடியது. இன்ப முலாம் பூசியத் துன்பம். மயங்கிச் சிக்கியவர்கள் தொடர்ந்து அறியாமையில் மூழ்கவே தீர்மானமாயிருப்பார்கள். அத்தகையத் தீவிரத்தை, அறிவைப் பெறுவதில் நீ செலுத்த வேண்டும்.
அறியாமை அண்டிவளரும். தானம் மற்றும் தவங்களால் தொலைவதில்லை. சடங்குகளால் சரிவதில்லை. கண்மூடித்தனத்தால் கலைவதில்லை. அறிவால் மட்டுமே அழிகிறது. மேலும், தானம் தவங்களால் அறிவு வளர்வதுமில்லை. கண்மூடி வெளியே தேடிப் பார்த்தால் அறிவு தெரிவதில்லை. கண்திறந்து உனக்குள்ளே பார். அறிவொளி தெரியும். அறிவொளியை, அறியாமைப் புயல் அணைத்துவிடாமல் காப்பது உனது கடமை. அறிவை வளர்க்க நெறிகளே உதவுகின்றன. மெய்யறிவின் நோக்கம், இன்பம் நன்மை இரண்டையும் பகுத்தறிந்து அடையாளம் காண்பதே. நல்ல நெறிகளை நாடுவதே. மெய்யறிவைப் பற்றித் தொடர்ந்து சொல்கிறேன்" என்றான் எமன்.►
13 கருத்துகள்:
நிறைய விசயங்களோடு வந்திருக்கிறீர்கள் அப்பாஜி.
முதலில் அந்த ஈற்றடி " வெளியே சிவந்தேடல் வீண் " அருமை. இந்த ஒரு வரியே ஒரு கவிதை. ஆத்திச்சூடி மாதிரி. "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" என்ற வரியை ஞாபகப்படுத்தியது.
"அறியாமை அண்டிவளரும்.'
இந்த இடத்திலும் நறுக்கென்று சொல்லி அசத்தி விட்டீர்கள். அருமை அப்பாஜி.
கூகிள் ரீடரில் படித்து விட்டு, ஈற்றடி அருமையா இருக்குன்னு சொல்ல வந்தால், சிவகுமாரன் முந்திகிட்டார். மிக நல்லா இருக்கு அப்பாதுரை சார்.
//பணம் சேர்ப்பது சுகம். செல்வத்தை அனுபவிப்பது சுகம். //
பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் - சுகம் இருந்ததோ இல்லையோ - சேர்த்தேன்
ஆனால் அதை அனுபவிப்பதை இழந்துவிட்டேன் என்று நினைக்கின்றேன் - உடலாலும் உள்ளத்தாலும் உறவாலும் !
அழகான விளக்கம். கண்ணதாசனின் அர்த்தமான பாடலை மேற்கோள் காட்டியது அழகு
//"நிம்மதியும் மகிழ்ச்சியும் தன்னைச் சுற்றி இருப்பதை அறியாமல், எடுத்தப் பிறவியில் நிம்மதியைத் தேடாமல் எடுக்காதப் பிறவியில் நிம்மதியைச் சேர்க்க எண்ணினான்"//
ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல், இருக்கும் இடத்தில் நிம்மதியாய் இருந்து விட்டு அடுத்த இடம் போகும்போது அப்போது அங்கும் நிம்மதி சந்தோஷத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற கருத்து ஏற்புடையதாக இருக்கிறது. சுலபமானதாக இருக்கிறது. (இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே...)
எதில் சுகம், நிம்மதி என்று அறிவதில் இருக்கிறது சூட்சுமம்...!
வருக சிவகுமாரன், கெபி, சாய், ஸ்ரீராம்,...
அப்பாதுரை அவர்களே!அறியாமை அறிவால் மட்டுமே அழிகிறது.தானங்களாலும் தவங்களாலும் அறிவு வளர்வதில்லை.Well said.வாழ்த்துக்கள் ---காஸ்யபன்
உள்ளொன்று வைத்து புறமொன்று செய்வார் உள்ளொளி தீயாகி உடலை கெடுத்துவிடும்... அறிவொன்றே அறியாமையை அகற்றும் அருமருந்தென நெற்றியடி பதிவு.....
அஹோ! என்னாயிற்று என் பெரும் பின்னூட்டத்திற்கு?
வருக kashyapan, பத்மநாபன், மோகன்ஜி,...
மெய் என்றால் என்ன ? மெய்யை அறிதல் என்றால் என்ன? சுகம் என்றால் என்ன ?
அறியப்படுகிற மெய்யில் சுகம் அடங்கியதா இல்லையா ? இருப்பதெல்லாம் மெய் என்றால், சுகம் என்பது ....?
அடுத்து, லைப்ரரி போய் படித்து இன்பம் காணும் வாசக அன்பர்கள், எப்போது தங்கள் பரவச உணர்வை, வாவ்..ஆஹா, ஓஹோ வென,
குழந்தைகள் முன் தங்கள், பரவசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்? படிப்பது சுகம் என உணர்த்துவார் யார் ?
வீடியோ கேம் விளையாடும் ஒருவரின் பரவச உணர்வின் வெளிப்பாட்டுக்கு முன், நாவல் படிப்போரின் உணர்வு வெளிப்பாடு எம்மாத்திரம்? அதை பார்த்து வளரும் குழந்தைகள், எது சுகமென நினைப்பர்?
--
வருக 'நானும்'.
கேட்டீர்களே கேள்வி.. போட்டீர்களே போடு! (எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும் :)
படிப்பது சுகம் என்று உணர்த்துவார் யாருமே இல்லை என்றே நினைக்கிறேன். (உரைப்பார் சிலர் உண்டு, உணர்த்துவார்? நல்ல கேள்வி)
சுகம் தேவையே; எனினும் புலன் தொட்ட சுகமும் மனம் தொட்ட சுகமும் வேறு எனும் பொழுது, ஒன்றில் காட்டும் தீவிரம் மற்றதில் இல்லாமல் போகும் போது, எப்படி திருத்துவது?
திருத்த வேண்டும் என்று நினைப்பது தவறு என்றான் என் மகன்: "if you think video games are for the stupid, then stay away daddy"
:) நல்ல பதில். நன்மையையும் தீமையும் இல்லா இவ்வுலகில், அல்லது ஒன்றான இவ்வுலகில்,
நெறிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி. அவரவர் வாழ்வு அவரவர்க்கு.
உங்கள் மகனின் ஸ்மார்ட் ஆன பதில் கவர்கிறது. உண்மையில் வீடியோ கேம் விளையாட பொறுமையும், புத்திசாலித்தனமும் நமக்கில்லை என்பதே உண்மை. உங்களால் அதை அனுபவிக்க முடியாத தெரியாத தவிப்பே, அது நல்ல விஷயம் அல்ல என்ற முன்முடிவை உங்களிடம் உருவாக்குகிறது. பின்னாளில் எல்லா செயல்களுக்கும் கணினியையும், ரோபோக்களையும் பயன்படுத்தப் போகும் ஒரு தலைமுறை தன்னை இப்படித்தான் தகவமைத்துக் கொள்ள முடியும். துன்பங்கள் என கருதப்படும் எண்ண அலைகளை இன்ப உணர்வுகளாக மாற்ற சொல்லி கொடுப்பது மட்டுமே, அனுபவம் வாய்ந்த ஒரு பெற்றோரின் கடமை. குழந்தைகளின் வாழ்வில் குறுக்கிட நமக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் தன்னை பார்த்துக் கொள்ளும் வரை, வாழும் வசதிகள் செய்யலாம். வாழ்வில் குறுக்கிட முடியாது.
கருத்துரையிடுக