வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/08

தன்னறிவு பெற்றவரால் மானிடம் சிறக்கும்


59
தாவிக்கும் தாடிக்கும் காவிக்கும் பாவிக்கும்
தீவிர யோகிக்கும் திண்டாட்டம் - ஆவிகையாய்த்
தன்னறிவைத் துய்ப்பவர் கோடியொன்றில் கோடிகுறை
மன்னுயிர்க்கு மன்னாரால் மாண்பு.

   பேதைகளும் நிலையற்றோரும் மட்டுமல்ல, துறவிகளும், மதகுல குருக்களும், முனிவர்களும் கூடத் தன்னறிவு பெறத் திண்டாடுகிறார்கள். கோடியில் ஒருவரே ஆன்மாவைப் பற்றுக்கோடாய் எண்ணி, தன்னறிவைப் பெறுவார். அவரால் மனிதத்துக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கும் சிறப்பு (என்றான் எமன்).


தாவி: நிலையில்லாதவர், புலனைக் கட்டாதவர்
தாடி: சன்னியாசி, பிரசாரகர், குரு, சித்தர் (முகமுடி வழிக்காதவர்; புறக்கோலத்தைப் பொருட்படுத்தாதவர்)
காவி: துறவி, குரு (காவியுடை அணிந்தவர்)
யோகி: மனதைக் கட்ட மூச்சடக்கிப் பயற்சி செய்வோர், இலக்கைத் தேடுவோர்
ஆவிகை: பற்றுக்கோடு
துய்ப்பவர்: அனுபவித்து உணர்வோர்
மன்னுயிர்: பிறவி, ஆன்மா


['..fifteen billion human beings, where's our destiny?' - cliff richard ]

    ன்மா உண்டா? அதை அறிவு நிலையில் விளக்க முடியுமா? ஆன்மாவின் அமனித சக்தியை மனிதக் கட்டுக்குள் கொண்டு வந்து பயன்படுத்த முடியுமா? இதைப் பற்றி உலகத் தத்துவப் பல்கலைக் கழங்களிலும் ஸ்கேன்டிநேவியா நாடுகளின் சில தனியார் நிறுவனங்களிலும் தீவிர ஆராய்ச்சி செய்கிறார்கள். அறிவுஜீவிகளான பெருஞ்செல்வந்தர்கள் சிலரின் ஆதரவில் பல நிழலான ஆய்வுகளும் நடைபெறுகின்றன. உலகப்போர் நாட்களில் ஜெர்மனி இந்த வகை ஆய்வில் நிறைய நேரமும் பணமும் செலவழித்ததாகச் சொல்வார்கள். இன்றைய 'psychological warfare'ன் பின்னணியில் ஆன்மா ஆராய்ச்சியின் ரேகை ஓடுகிறது.

    electrical energy ஆன்மாவுக்கு நெருக்கமாகச் சொல்லப்பட்டு வருகிறது. நம் உடலின் electromagnetic radiationஐ வைத்து சில வியத்தகு, குறுகிய வரைபாட்டு வித்தைகள் செய்கிறார்கள். எண்ண அலைகளைப் பொறி வைத்துப் பிடித்து, காலப்பெட்டகத்துள் அடக்கி, மெய்சிலிர்க்க வைக்கும் பரிசோதனைகள் செய்கிறார்கள். எண்ண அலைகளும், ஒளியொலியலைகள் போல் கால காலமாகப் பயணித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். வலிப்பு நோயாளியின் துடிப்பில் பிறவி எண்ணங்களைப் படித்ததாகச் சொல்கிறார்கள். ஜூலியஸ் சீசர் விட்ட மூச்சின் அணுக்கள், 'வெளியே காத்தாடப் போய்' வரும்பொழுது நம் சாதா நுரையீரல்களில் புகலாம் என்கிறார்கள். தொழில் நுட்பம் வளரும் பின்னொரு நாளில் புத்தன் யேசு காந்தியின் சிந்தனைகளை அடையாளம் காணலாம் என்கிறார்கள். மனித சக்தி பிரமிக்க வைக்கிறது!

    இன்னொரு சமயம் இந்தப் பரிசோதனைகளைப் பற்றி நானறிந்ததை விரிவாக எழுதுகிறேன். இதையறிய முற்பட்டதில், ஒரு கதை எழுதும் அளவுக்கு சுவையான விவரங்கள் கிடைத்தன (நண்பர் பத்மநாபன் விருப்பத்துக்காக, மூன்றாம் சுழியில் எழுதியது. பாவம், நண்பர் :).

    ஆன்மா உண்டோ இல்லையோ, ஆன்மாவை அறிய வகை செய்யும் தன்னறிவு பெற்றவர்கள் உண்டு என்று நம்புகிறேன். தன்னறிவை எல்லாரும் பெற முடியாது என்றும் நிச்சயமாக நம்புகிறேன். தன்னறிவு கண்டவர்கள் நம்மைப் போல் வெளித் தோற்றம் கொண்டாலும், சிந்தையிலும் செயலிலும் வித்தியாசனமானவர்கள். நம்மைப் போல் பிறந்து வளர்ந்தவர்கள் தான், எனினும் எங்கேயோ ஒரு தீப்பொறி பற்றியிருக்கிறது. அக்கினிக் குஞ்சொன்று கண்டிருக்கிறார்கள். அது தெரிந்துத் தீ வளர்த்திருக்கிறார்கள். சொல்லடிக்கும் கல்லடிக்கும் அஞ்சாமல், ஒரு இலக்கை நோக்கி, தளராமல், தன்முனைப்போடு, விழுந்தாலும் எழுந்து, தீவிர உறுதியோடுச் செயல்பட்டிருக்கிறார்கள். வாழ்வில் சிறு மாற்றங்களைச் செய்யவே சோர்ந்து போகும் நமக்கு, இவர்களின் மன உறுதி அச்சுறுத்துவதாக இருக்கிறது. கோவில் கட்டிக் கடவுள் என்று கும்பிட்டு ஒதுங்கத் தோன்றுகிறது.

    தன்னறிவு பெற்றவர்கள் நம்முள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தன்னறிவு பெற்றவர்களிடம் இனம் புரியாத, சில சமயம் விபரீத, அமைதியும், ஆழ்ந்த உள்நோக்கும், அடுத்தவர் மனதுடன் தொடர்பு கொள்ளும் சக்தியும், சிறியதானாலும் பொருளுள்ள வழிகாட்டும் அற்புதங்களை நிகழ்த்தும் திறனும் இருப்பதாக நினைக்கிறேன். கோபம், பொறாமை தவிர்த்தக் கட்டத்திலிருந்து, தன்னறிவு பெற மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஆசை, கோபம், பொறாமை தவிர்த்தும், அதற்குப் பின்னும் பல்லாண்டுகள் ஆகலாம் தன்னறிவைக் கண்டறிய என்று நினைக்கிறேன். தன்னறிவு கண்டவர்கள், பெரும் சாகசக்காரர்களாக, பில் கேட்ஸ் போல் பிரபல சாதனையாளராக இருக்கவேண்டியதில்லை. மகாத்மா காந்தி, அன்னை தெரசா போல் தியாகச் சின்னங்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. விவேகானந்தர் போல் எழுச்சியின் அடையாளமாக இருக்க வேண்டியதில்லை. பரமஹம்சர் போல் அமைதியின் உருவமாக இருக்க வேண்டியதில்லை.

    தன்னறிவு பெற்றதாக நான் நம்புவோரில் சிலருடன், சில நாட்களோ மணிகளோ நிமிடங்களோ பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். உதாரணம் சொல்கிறேன். தன்னறிவு பெற்றதாக நான் நம்பும் ஒருவர், என் சிறுவயதில் எங்கள் மாமா வீட்டில் உபரிவேலை பார்த்த சுந்தரம் எனும் பெண்மணி. படிப்பறிவில்லாதவர். பரம ஏழை. எனினும், அவர் பேச்சிலும் செயலிலும் ஆழமானப் பண்பிருக்கும். அமைதியிருக்கும். பிரமிப்பூட்டும் சகிப்புத் தன்மையிருக்கும். சந்தோஷமிருக்கும். கூச்சத்தினால் அதிகம் பேசமாட்டார், பேசினால் சேரிப்பேச்சினூடே ஒரு சிந்தனைத்தளம் இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அவர் புரிந்த ஒரு தியாகச் செயலினால் ஒரு சாக்கடைச்சேரிப் பிரதேசத்து அத்தனை பிள்ளைகளும் (முன்னூறு பேர் போல்) இன்றைக்கு சற்றே மேன்மையான வாழ்க்கையைப் பெற முடிந்திருக்கிறது. அந்த முன்னூறு பேரின் சந்ததி என்று தொடர்ந்து எண்ணும் பொழுது, அவர் செயலின் தொலைநோக்கையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். இன்னும் ஐம்பது வருடங்களில் தங்களின் பாட்டனார்கள் சேரியில் மிகச் சாதாரணமாக வாழ்ந்தவர்கள் என்பது அவர்களுக்குப் புரியுமா தெரியாது, ஆனால் அந்த முன்னூறு பேரின் ஆயிரக்கணக்கான வழித்தோன்றலகள், தங்கள் வாழ்வின் நிலை உயர, சுந்தரம் எனும் ஒரு மூதாதையக் கிழவி இட்ட ஒரு சிறிய கோடு பெரும் பாதையானதைப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சேரி நிலம் பற்றி சுந்தரம் அன்று முடிவெடுத்த போது, அவரை "லூசுக்கிழவி" என்றார்கள். 'தெரிந்து செய்த செயல்' என்பது முப்பது வருடங்களுக்குப் பின் புரிந்து, இன்றைக்கு 'லேசுக்கிழவி அல்ல' என்கிறார்கள். நாளைக்குக் கடவுள் எனலாம்.

    முகத்தில் உரசினாலும் தன்னறிவை நான் அடையாளம் காண்பேனா என்பது சந்தேகமே. தன்னறிவு பெற்றவர்கள் என் போல் சாதாரண மானிடருக்கும் இலவச மேன்மையைத் தருகிறார்கள். அந்த வகையில் அவர்களின் தொடர்ந்தத் தேடலுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

['..பூமியில் நேராக வாழும் மனிதரெல்லாம் சாமிக்கு நிகரில்லையா?' - கண்ணதாசன் ]

    "தனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிய முயன்று தோல்வியுற்றவர்களைப் பற்றிச் சொன்னீர்கள். ஆன்மாவை அறிய வேண்டும் என்று உறுதியாக இருந்தால் தன்னறிவு பெற முடியாதா?" என்றான் நசிகேதன்.

    எமன் சிரித்தான். "தன்னறிவு பெற முடியும். அது தேடுவோர் உறுதியின் தீவிரத்தைப் பொறுத்தது. சொல்கிறேன் கேள்.

   பலவற்றையும் கற்று, வேதாந்த சாத்திரப் பொருளறிந்து, உலகத்துக்கு உபதேசம் செய்யும் ஞானிகள் கூட மனதைக் கட்டி மூச்சைக் கட்டித் தவமிருந்து தன்னறிவு பெறுவார்களா என்றால் அதிகம் பெற்றதில்லை என்பேன். ஆன்மாவை அறிய வேண்டும் என்ற ஆவல் உண்டே தவிர, அவர்கள் தங்கள் உறுதியில் அடிக்கடித் தளர்ந்து இலக்கைத் தவறவிடுவார்கள்.

   மதம், சடங்கு, நெறி என்று பலவாறு பிரசாரம் செய்யும் குருக்கள் ஆன்மாவை அறிந்தவர்கள் என்று நினைக்கிறாயா? தன்னறிவு பெற்றவர்கள் பிரசாரம் செய்ய மாட்டார்கள். போலிகளே காவி கட்டி, தாடி வளர்த்து தன்னையறிந்த ஞானி போல் 'உய்யும் வழி' என்று கண்மூடித்தனங்களைச் சொல்வார்கள். அவ்வாறு பிரசாரம் செய்யாத காவிகளும் தாடிகளும் உண்டு என்றாலும், அவர்களுக்கும் தன்னறிவு கிடைப்பது கடினம்.

   ஆன்மாவை அறிய முயன்று தோற்ற முனிவர்கள் அதிகம். தவமியற்றி முடிக்கத் தெரியாத முனிவர்களைப் பற்றி நீ அறிவாய் அல்லவா?

   சன்னியாசிகளுக்கும் துறவிகளுக்குமே இந்தக் கதி என்றால், தங்கள் தினசரி வாழ்வில் எண்ணிலா இன்னல்களைச் சந்தித்து ஒவ்வொரு நாளையும் கழிக்கப் பாடுபடும் பேதைகளுக்கு என்ன கதி என்று எண்ணிப் பார். தன்னறிவு பெறுவது சாத்தியமான செயலா? அவ்வாறு முயலும் ஒன்றிரண்டு பேரும் பாதியிலேயே நிறுத்திவிட்டு உலகாயதச் சிக்கல்களைக் கவனிக்கப் போய்விடுகிறார்கள்.

   மனிதர்கள் நிலையில்லாதவர்கள். மனித மனம் இயற்கையிலேயே அலைபாயும் வகையில் அமைக்கப்பட்டது. அதனால் தான் அலைபாயும் புலன்களால் உலகைக் காண்கிறது மனிதம்.

   இவை எல்லாவற்றையும் மீறி, உள்ளிருக்கும் சக்தியை அறிந்தே தீருவது என்று தீர்மானத்துடன் செயல்பட்டு தன்னறிவு பெற்றவர்கள் கோடியில் ஒருவர் என்பேன். அப்படி முயன்று தன்னறிவு பெற்றவர்கள் தனக்கு மட்டுமல்ல, மனித இனத்துக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கே சிறப்பு சேர்க்கிறார்கள்" என்றான் எமன்.

   எமன் சொன்னது நசிகேதனுக்குப் புரிந்தது. எமன் சொல்லாதது இன்னும் தெளிவாகப் புரிந்தது. 'வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வாசல் திறந்திருக்கிறது, நசிகேதா. உனக்கும் உன் சுற்றத்துக்கும், உன் மானிட இனத்துக்கும், ஏன் ஆன்மாவுக்குமே.. சிறப்பு செய்யத் தயாரா?' என்று எமன் கேட்காத கேள்வி நசிகேதனுக்கு உறைத்தது.

12 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! நியூ ஜெர்சிக்குஅடுத்தது சிகாகோவில் தான் இந்தியர்கள் அதிகமென்று சொல்வர்கள். அங்கு தமிழ் புலவர்கள் அதிகம் என்று தற்பொது உணர்கிறென். கடந்த இரண்டு மூன்று இடுகைகளில் வெண்பா தூக்கலாக இருக்கிறது. விளக்கங்களும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

பத்மநாபன் சொன்னது…

//தொழில் நுட்பம் வளரும் பின்னொரு நாளில் புத்தன் யேசு காந்தியின் சிந்தனைகளை அடையாளம் காணலாம் என்கிறார்கள்.//மகத்தானதொரு ஆராய்ச்சி..

தனி அடையாளமின்மையே தன்னறிவாளருக்கு அடையாளம் என சுட்டி காட்டின உதாரணங்கள்...

சுசுமோ கதைக்கு நீங்கள் மேற்கொண்ட உழைப்புக்கு நன்றி. இப்படி வாசித்து எழுத்தில் கொடுக்கும் அறிவு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...

( சில விஷயங்கள் மண்டையில் ஏறாத வகையில் இருக்கும் பாவம்தான் பத்மநாபன் )

பத்மநாபன் சொன்னது…

வெண்பாவில் காவி எனும் சொல்லின் புகுத்தல் பொருந்தி நவீன வெண்பா என்பதை எடுத்துக் கூறியது..( மழித்தலும் நீட்டலும் வேண்டா என அய்யன் எழுதிய காலத்தில் புதுமையாக பார்க்க பட்டிருக்குமோ )

தாவி யெனும் வினைகூடிய பெயர்ச்சொல்லை வெகுவாக ரசித்தேன் .

தாவிகளுக்குள் மேன்மையானவன் மேதாவியோ.....

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//kashyapan சொன்னது… அப்பாதுரை அவர்களே! நியூ ஜெர்சிக்குஅடுத்தது சிகாகோவில் தான் இந்தியர்கள் அதிகமென்று சொல்வர்கள். அங்கு தமிழ் புலவர்கள் அதிகம் என்று தற்பொது உணர்கிறென்.//

அப்பாடா !! நியூ ஜெர்சி என்றவுடன் பயந்து விட்டேன்.

அழகான மேல்கோள், தங்கு தடையில்லாத தமிழ் என்று ஓடும் நதியை போல் இருக்கிறது உன் தமிழ். அப்பாதுரை, நிஜமாகவே உங்களை தெரிந்தவன் என்ற முறையில் எனக்கு பெருமை.

அந்த வருங்கால கடவுளுக்கு (சுந்தரம் பாட்டி) இன்னொரு கடவுள் (நான் படைப்பதனால் கடவுள்) கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமையான மேற்கோள்

அப்பாதுரை சொன்னது…

உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி kashyapan.

உழைப்பு என்றெல்லாம் இல்லை பத்மநாபன். எப்படியும் பொழுது போகப் படிப்பது தானே? கைவசம் இதுபோல் பத்து பூனைகளாவது இருக்கும் என்று நினைக்கிறேன்.

மகத்தான ஆராய்ச்சி சொன்னீர்களே.. இப்போதைக்கு திடுக்கிடுவதும் கூட. ஏற்கனவே கண்டுபிடித்ததைக் கூட அடக்கி வாசிக்கிறார்களோ என்று ஒரு சந்தேகம் - தொழில் நுட்பம் இன்னும் முன்னேறவில்லை என்ற சாக்கில்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி சாய்.
கண்ணதாசன் வரிகளை நானும் மிகவும் ரசிப்பவன். சுந்தரம் பாட்டி கடவுளா? சரிதான். (குஷ்பூவுக்கு கோவில் கட்டினவங்களாச்சே நாம? சொல்ல முடியாது சுந்தரத்துக்கும் கோவில் கட்டினாலும் கட்டுவோம்)

சிவகுமாரன் சொன்னது…

\\\ஒளியொலியலைகள் போல் கால காலமாகப் பயணித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். ///கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து பேசிய ஒலியலைகளை தேடிப் பிடித்துக் கண்டு கொள்ளும் ஆராய்ச்சி நடை பெறுவதாகக் கூட எப்போதோ படித்தேன்.
வியக்க வைக்கிறது

சிவகுமாரன் சொன்னது…

சுந்தரம் கிழவி என்ன செய்தார் அப்பாஜி ?

geetha santhanam சொன்னது…

இந்த வெண்பாவும் அருமை. தன்னறிவு பெற்றவர்கள் பற்றி விளக்கமும் அருமை. சுந்தரம் அவர்கள் செய்த காரியத்தைப் பின்னூட்டத்தில் விளக்கினால் நன்றாயிருக்கும்.

Expatguru சொன்னது…

Absolutely fascinating. Recently I came across a news item where a secret research is being conducted by intelligence agencies to decipher war room conversations which are supposed to be stored as sub atomic particles and entrapped in the walls of buildings. The researcher went on to add that it was possible even to hear the voice of Shahjahan, Aurangzeb etc., from the walls of Agra fort. Nothing much is being revealed, but after reading this post, it is really mind-boggling. Not sure if you would read this comment (because it is written several months after you wrote this post), but I want to congratulate you on this Nachiketha Venbaa which has changed my perception of life.

அப்பாதுரை சொன்னது…

நன்றி Expatguru!

bandhu சொன்னது…

//தன்னறிவைத் தேடிப் பெற்றவர்கள், ஆன்மா எனும் தீயுடன் கலக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆன்மாவைப் போல் நிலையாக ஒளி வீசுகிறார்கள். பிறப்பிறப்பற்ற நிலையைக் கடக்கிறார்கள்//
ஆஞ்சநேயர் புராணத்தில் ராமர் - சபரி நிகழ்ச்சியை விவரிக்கும்போது, ராமர் அங்கு வந்தவுடன் அங்கு காத்திருந்த பல ரிஷிகள் தங்கள் புண்ணியங்கள் எல்லாவற்றையும் கொடுத்து தீயில் கலந்தனர் என்பது கூட இந்த தீயை தானோ? (ஜாம்பவான்கள் மத்தியில் முதல் முறையாக ஒரு பின்னூட்டம் போடுகிறேன்! )