வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/05

அறியப்படாத ஆன்மா அடங்கிவிடும்


58
ஆறுகுணம் ஆறாமல் ஆராய்வோர் ஆற்றறுத்து
ஆறுமட்டும் ஆன்மா அறியாரே - ஆறுகைக்கு
ஆறுகாட்டும் ஆறாத்தீ ஆரும் அவருள்ளே
ஆறும் அகலான ஆறு.

   று தீய குணங்களை அடக்காதவர்கள் தங்கள் தேடலை இடையிலேயே கைவிட்டு, தாங்கள் இறக்கும் வரையிலும் ஆன்மாவை அறியமாட்டார்கள்; அமைதிக்கு வழிகாட்டும் அடங்கா ஒளிவடிவான ஆன்மாவோ, அன்னாரின் உள்ளத்திலே, அடங்கிவிடும் ஒரு அகல் விளக்கின் எளிய சுடர் போன்ற நிலையடையும் (என்றான் எமன்).


ஆறுகுணம்: ஆறுவகைக் குறைகுணங்கள்
ஆறாமல்: அடங்காமல், அகற்றாமல், நீங்காமல்
ஆராய்வோர்: தீவிரமாகத் தேடுவோர்
ஆற்றறுத்து: முடிக்காமல் விட்டு, பாதியில் நிறுத்தி, தோல்வியுற்று
ஆறுமட்டும்: அடங்கும் வரை, இறக்கும் வரை
ஆறுகை: பெரும் அமைதி, ஆறுதல்
ஆறுகாட்டும்: வழிகாட்டும் (ஆறுகாட்டி: வழிகாட்டி)
ஆறாத்தீ: அணையாத தீ, ஆறாவது தீ (ஆறாம்+தீ) எனவும் மருவிக் கொள்ளலாம்
ஆரும்: பெறும், ஆகும்
ஆறும்: அடங்கக் கூடிய, ஒடுங்கக் கூடிய
அகல்: விளக்கு, தகழி (அகல்+ஆன)
ஆறு: நிலை
* ஆறுவகைத் தீ: பொறி, சுடர், சுவாலை, கொழுந்து, அனல், ஒளி.


['..you don't have a soul.. you are a soul.. what you have is a body..' - c.s.lewis ]

    வமிருப்பது சுலபமென்றால் நமக்குச் சாகுந்தலம் கிடைத்திருக்காது. இப்படி ஒருசில உபயோகங்கள் இருந்தாலும், பொதுவாக உறுதியின்மையால் தனக்கோ பிறருக்கோ எந்தப் பயனும் கிடைப்பதில்லை. ஒரு எண்ணத்தை மனதில் ஏற்றோமானால் அது நிறைவேறும் வரை ஓயாதிருக்க வேண்டும். ஆன்மாவை அறிவதிலாகட்டும், அடுத்த வேளை சோற்றுக்கான வழி தேடுவதிலாகட்டும் - எடுத்தக் காரியத்தை முடிக்கும் துணிவும் உறுதியும் வேண்டும். 'கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்' என்பது வெறும் சொல்லாட்சி அல்ல. முயற்சியின் வெற்றி தோல்வியை விட, முயற்சியைக் கைவிடுவது உள்ளும் புறமும் பரவலாகப் பாதிக்கிறது. மரணத்தாலன்றி வேறு காரணங்களால் தன் உறுதியைக் கைவிடுவோர் கேவலமானவர்கள்; கோழைகள் மனிதசக்தியையே குன்றச் செய்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. சென் ஞானம் சொல்கிறது. சென் சொல்வதை நான் ஏற்கிறேனா மறுக்கிறேனா என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

   ஞானம் பெறுவதற்காக, நகரத்திலிருந்து வந்த மாணவனை வரவேற்று உபசாரம் செய்தாராம் ஆசிரியர். "வா, டீ சாப்பிடலாம்" என்று மாணவனிடம் ஒரு கோப்பையைத் தந்து டீ ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிவதைக் கவனித்த மாணவன் ஆசிரியரைத் தடுத்து "ஏனிப்படி செய்தீர்கள்? நிரம்பி வழிவதைக் கவனிக்கவில்லையா?" என்றானாம். "உன் கவனம் கோப்பையிலும், என் கவனம் டீயிலும் உள்ளது" என்றாராம் ஆசிரியர்.

   நான் சுட்டும் பொழுது என் விரலைப் பார்ப்பதால், சந்திரனைக் காணவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறாது மாணவரே!

   மிகச் சிறந்த மல்யுத்த வீரனாக விரும்பிய ஒரு அப்பள நோஞ்சான், சென் ஆசிரியரிடம் உதவி கேட்டானாம். மல்யுத்தப் பயிற்சி பெற இங்கு வந்தானே என்று எல்லோரும் சிரித்தார்களாம். ஆசிரியர் அவனை அழைத்து, "இந்தக் கணத்திலிருந்து உன் பெயர் 'பேரலை'. உன் முன் தோன்றும் அத்தனையையும் விழுங்கி ஏப்பம் விட்டுச் சீறி முன்னேறும் பேரலையாக உன்னை மனதுள் நினைத்து தியானம் செய்" என்றாராம். பல நாட்கள் தியானம் செய்த நோஞ்சான் மனதில் பிற எண்ணமெல்லாம் மறைந்துவிட, ஆசிரியர் அவனை அழைத்து, "நீ மல்யுத்தம் செய்யத் தயார்" என்றாராம். நோஞ்சானைப் பார்த்து ஏளனம் செய்த மல்யுத்த வீரர்களையெல்லாம் பேரலை விழுங்குவதைப் போல் தூக்கியடித்து, நோஞ்சான் மாநிலத்திலேயே மிகச்சிறந்த மல்யுத்த வீரன் என்று புகழடைந்தானாம்.

   னதைக் கட்டுப்படுத்தி ஒரு இலக்கினை நோக்கி விலகாமல் செல்லும் வித்தையை அறிய விரும்பிய மாணவன், சென் ஆசிரியரிடம் வந்து உதவி கேட்டானாம். ஆசிரியர் அவனைப் பார்த்ததும், "உனக்கு முதிர்ச்சி வரவில்லை போ, பிறகு வா" என்றாராம். பலமுறை இப்படித் திருப்பி அனுப்பப்பட்டாலும், மாணவன் தினமும் காலையில் ஆசிரியரிடம் வந்து பயிற்சி தருமாறு கேட்டுக் கொண்டிருந்தானாம்.

ஆசிரியர் அவனிடம், "சரி, உனக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதிக்கிறேன். தயாரா?" என்றாராம். ஆர்வத்துடன் தலையாட்டிய மாணவனிடம், "ஒரு கை ஓசையை அறிந்து வா" என்றாராம்.

   எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு முறை 'transcendental meditation' பழகப் போயிருந்தேன். முதல் நாள் ஒருவரைச் சந்தித்த போது, "எதற்காக இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டார் சென் ஆசிரியர் போல். பதில் தெரியாமல் விழித்த என்னை, "அடுத்த வாரம் வாங்களேன்" என்றார். மூன்று மாதங்கள் பொறுத்து, மீண்டும் அங்கே போய் அவரையே சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டது ஆச்சரியம் என்றால், "பதில் தெரிந்ததா?" என்று அவர் தன் கேள்வியை நினைவில் வைத்திருந்தது அதைவிட ஆச்சரியம். இந்த நினைவையும் 'ஒரு கை ஓசை' சென் கதையையும் பாதியில் நிறுத்தி, பிறகு முடிக்கிறேன். செய்தி, கதையாகக் கூடாதே என்று பார்க்கிறேன் :).

   சிலருக்கு எண்ணம் பிடிக்கிறதே தவிர, செயலாக்கம் பிடிப்பதில்லை. பொருந்தாத, பலநேரம் முட்டாள்தனமான, சாக்குகளைச் சொல்லிச் செயலில் இறங்காமலே சாகிறார்கள். சாதாரண உலகாயத விஷயங்களுக்கே இப்படி என்றால், இவர்களால் தன்னறிவு போன்ற நுட்பங்களை அறிய முடியுமா? வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

   ஒவ்வொருப் புறத்தாக்கமும் 'இலக்கிலிருந்து நம்மை விலகி அழைத்துச் செல்கிறதா?' என்று சிந்தித்து அதற்கேற்ப நடந்தால், செயலில் உறுதியாக இருக்கலாம். இலக்கையே கணந்தோறும் மாற்றிக் கொள்ளும் முட்டாள்களை அறிந்து விலகுவது, ஆரோக்கியமானது. உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நீருள் மூழ்குவோரை நீந்தத் தெரிந்தவர் காப்பாற்றி இழுத்து வரும் சிக்கலுக்கு ஒப்பானது, இத்தகைய முட்டாள்களுடன் பழகுவது. நாமே முழுகிவிடும் அபாயம் உண்டு.

   தீக்குணங்களை முழுதும் அறுத்த பின்னரே மனதைக் கட்டவேண்டும் என்று நினைத்ததுண்டு. அலை ஓய்ந்து கடலில் குளிக்க முடியாது என்பது புரியும் வரை. மனதைக் கட்டவேண்டும் என்ற உறுதியைப் பற்றுக்கோடாகக் கொண்டால், தீக்குணங்கள் தானே அடங்குமென இப்போது நினைக்கிறேன். (நற்குணங்களின் பாதிப்பும் இயல்பாகவே அமைந்துவிடும் - இருமைகள் அடங்கிய ஒருமை). தீக்குணங்களில் பொறாமை, கபடம், பேராசை.. இவை மூன்றையும் அடக்குவது ஓரளவுக்கு எளிதென்று நம்புகிறேன். மூடமும் வெகுளியும் மிகக் கடினமானவை என்று நினைக்கிறேன். இரண்டில் வெகுளியை விட மூடம் மிகவும் மோசம் என்று அறிந்து கொண்டிருக்கிறேன். வெகுளி பிறரைத் தாக்குகிறது; மூடம் தன்னையே அழிக்கிறது. இவையிரண்டுக்கும் இடையில் மயக்கத்தை வைத்திருக்கிறேன்.

['..ஆறு மனமே ஆறு..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை அறியத்தான் வேண்டுமா என்று முன்பு கேட்டாய். ஆன்மாவை அறியாதவர்கள் என் வலையில் விழுந்து விழுந்து எழுவார்கள் என்றேன் அல்லவா? பிறவி எனும் பிணி, பேருலகப் பேராசையில் மண்ணுலக வாழ்வை நாசமாக்கும் குணம், போன்றவை ஒடுங்கவும் கண்மூடித்தனம் ஒழியவும் தன்னறிவு பெற வேண்டும். அறியத்தான் வேண்டுமா என்பதையும், அதைவிட, அறியாவிட்டால் ஆன்மாவுக்கு என்ன ஆகும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

   தன்னறிவைத் தேடுவோர் தம் இலக்கில் தீவிரமாக இருக்க வேண்டும். புறத்தே தென்படும் பலவித இடையூறுகளை வென்று புலனின்பம் அடைவோரை அறிவாய். அகத்தின் இடையூறுகள் தீக்குணங்கள். அவற்றை ஒடுக்காதவர், எத்தனை தேடினாலும் தன்னறிவு பெற இயலாது. காரணம், அத்தீக்குணங்கள் அவர்களை இலக்கினின்று விலகச் செய்து விடும். பேராசை, வெகுளி, மூடம் போன்றத் தீக்குணங்கள் அவர்களின் தேடலையே மறைத்து மறக்கச் செய்வன.

   தீயானது பொறியாக, தன் இருப்பிடத்தை அறிவிக்கிறது. சுடரான நிலையில், பற்றுதலுக்கு முனைப்பாக, எளிய வெற்றியின் நிறைவு போல, விளங்குகிறது. சுவாலையான நிலையில், சுற்றி வெப்பத்தை உணர வைக்கிறது. கொழுந்தான நிலையில், அண்மையையும் எரிக்கத் தொடங்கி வலுவாகிறது. அனலாக, பெரும் ஆக்கிரமிப்புடன் பரவத் தொடங்குகிறது. ஒளியான நிலையில், ஓயாமல் எரிந்து சுற்றிலும் வெப்பமும் ஒளியும் தந்து வளர்ச்சியின் உருவாக மாறிவிடுகிறது.

   உள்மனக்குகையில் புதைந்துள்ள ஆன்மாவைப் பற்றிச் சொன்னேன். அதுவும் தீ போன்றது. பொறியை அறிந்துத் தேடி, அதை வளரவிட்டு ஒளிவடிவமாக மாற்ற வேண்டியது தன்னறிவுத் தேடலின் நோக்கம். தன்னறிவின் ஒளியில் மட்டுமே மனிதம் பரந்த ஆன்மாவை அறிய முடியும்.

   தீக்குணம் கொண்டோரின் உள்மனக்குகையிலும் ஆன்மா இருக்கிறது. தங்கள் தேடல்களை இடையிலேயே நிறுத்தி விடுவதாலும், தீக்குணக் குறுக்கீட்டுக்குப் பணிவதாலும், இவர்களின் தேடல் நிறைவேறாது போகிறது. எந்தப் பிறவியிலும் இவர்களால் நிறைவும் நிம்மதியும் பெற இயலாது போகிறது. இவர்களது ஆன்மா, அணைந்து ஒடுங்கக் காத்திருக்கும் அகல் விளக்கின் சுடர் போன்ற நிலையை அடைகிறது" என்றான் எமன்.

9 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

ஆறில் ஆறேனப் பொருள்கள்.. ஆற்றிப்படித்து வருகிறேன்...

ஸ்ரீராம். சொன்னது…

/"எடுத்தக் காரியத்தை முடிக்கும் துணிவும் உறுதியும் வேண்டும்...."//

"எண்ணிய எண்ணியாங்கெய்துப....

ஸ்ரீராம். சொன்னது…

//"மரணத்தாலன்றி வேறு காரணங்களால் தன் உறுதியைக் கைவிடுவோர் கேவலமானவர்கள்..."

என்னங்க இப்படி திட்டறீங்க...ஸாரி 'றாங்க'...?உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் போகச் சொன்ன நடைப் பயிற்சியே தொடர்ந்து செய்ய முடியலை...

//"நான் ஏற்கிறேனா மறுக்கிறேனா என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை"//

நான் என்பதை நானும் நான் என்றே கொள்கிறேன்! நமக்கு ஆதுரமாக இருந்தால்தானே ஏற்றுக் கொள்வோம்..? ஏற்காதது கூட கோழைத்தனம்தானோ...?!

ஸ்ரீராம். சொன்னது…

(எமனுக்கு) பசி நேரமோ...இந்தப் பகுதியில் எல்லாம் கொஞ்சம் அழுத்தமாகவும் கடுமையாகவும் இருக்கிறதே...!அல்லது வேலைக்கு டைமாச்சோ என்னமோ...!

"நீரில் மூழ்கும் முட்டாள்களை..." என்ன செய்ய..உண்மை சுடுகிறது!

பத்மநாபன் சொன்னது…

சென் கதைகளின் வரிசை அருமை.. ஒரு கையோசை கதை உச்சம்.. உங்கள் எழுத்தில் அதன் முடிவு கேட்க கூடுதல் ஆவல்..

அகல்விளக்கை வைத்து எமன் கொடுத்த ஆன்ம விளக்கம் நல்ல புரிதலுக்கு நற்றுணை...

மோகன்ஜி சொன்னது…

வெண்பாவே ஒரு அகல் விளக்காய் மனத்துள் அலைகிறது. ரஸமாய் சொல்லப்பட்ட ஜென் கதைகள். உன்னதமான எழுத்து அப்பாஜி!

அப்பாதுரை சொன்னது…

நன்றி பத்மநாபன், ஸ்ரீராம், மோகன்ஜி,..

திட்டு..றாங்களா? சென் ஞானம் இன்னும் கன்னாபின்னா ஸ்ரீராம். புழுவை விடக் கேவலம்னதை, நான் தான் புழு என்ன பண்ணிச்சு பாவம்னு கட் பண்ணிட்டேன். அதுலயும் எந்தப் புழுன்னு படிச்சதும் பாதியிலயே நிறுத்திட்டேன் :)

meenakshi சொன்னது…

C.S. Lewis quote மனதில் சட்டென்று ஒட்டிக்கொண்டு விட்டது.
///"மரணத்தாலன்றி வேறு காரணங்களால் தன் உறுதியைக் கைவிடுவோர் கேவலமானவர்கள்..."// உண்மைதான். சாக்கடையில் நெளியும் புழுவை விட கேவலம்தான் இந்த பிறவி என்ற எண்ணம் தோன்றும் சிலநேரம். என்ன செய்வது!
// இலக்கையே கணந்தோறும் மாற்றிக் கொள்ளும் முட்டாள்களை அறிந்து விலகுவது, ஆரோக்கியமானது. உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. // இதையேதான் வள்ளுவரும் ஆராய்ந்து பாராமல் ஏற்படுத்தி கொள்ளும் நட்பானது விடுபட முடியாத கேடுகளை உண்டாக்கும், ஒருவர் சாவுக்கு காரணமாகிற அளவுக்கு துயரத்தை கொடுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

வெண்பா மிகவும் அருமை.

geetha santhanam சொன்னது…

வெண்பா மிக அருமை. 'ஆறி'ல் விளையாடிய உங்கள் தமிழறிவு மலைப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.