12
பெற்றோர் வருத்தமும் உற்றோரின் வேதனையும்
கற்றோர் கருத்தையுங் கட்டினான் - துற்றுத்
தடைமுற்றுந் தன்தமிழால் தீர்த்தான் வணங்கி
விடைபெற்றான் விண்ணேக வித்து.
கற்றோர் கருத்தையுங் கட்டினான் - துற்றுத்
தடைமுற்றுந் தன்தமிழால் தீர்த்தான் வணங்கி
விடைபெற்றான் விண்ணேக வித்து.
    தாய் தந்தையின் துயரமும், உறவினர்களின் மனவேதனையும், அறிஞர்களின் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கினான். தன் ஆழ்ந்தக் கருத்துக்களாலும் இனிமையான உரையாலும், மேலும் தடைகளை நீக்கினான். அவையோரை வணங்கி, விண் போக விடைபெற்றான் நசிகேதன்.
கட்டினான்: அடக்கினான்
துற்று: பிறகு, மேற்கொண்டு
தமிழ்: செறிவுடைய இனிய மொழி, நசிகேதனின் ஆறுதல் பேச்சுக்கு ஆகிவந்தது
வித்து: விதை, சந்ததி, இங்கே நசிகேதனைக் குறிக்கிறது
    உணர்ச்சியும் உணர்வும் ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், இரண்டுக்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. உணர்ச்சி நெஞ்சைத் தொடுவதில்லை. உணர்வு நம் நெஞ்சைத் தொடுகையில் புனிதமாகத் தோன்றினாலும், கண்ணையும் நெஞ்சையும் ஒரு சேரக் கட்ட வல்லது. உணர்வுகளுக்கு அடிமைப்படுவதால் கண்மூடித்தனங்களில் நிலை மறக்கிறோம். எத்தனை கற்றாலும் அறிவுரை பெற்றாலும், உணர்வு கலந்த நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்வது நடைமுறையில் மிகவும் கடினம்.
தொலைந்தக் காதலைச் சுமையாகப் பிடித்துக் கொண்டு காலமெல்லாம் வாடுவோரைப் பார்க்கிறோமே? துன்பம் நேர்ந்தாலும் 'கல்லானாலும் கணவன்' என்ற நெறியைக் கடைபிடிக்கும் எத்தனை மாதர்களை அறிவோம்?! சூதாட்டம், கள், போதை, பக்தி போன்றவை உணர்ச்சியைக் கடந்து உணர்வைக் கைப்பற்றும் பொழுது அடிமையாகிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டதால் ஏற்படுத்திக்கொண்ட உபாதைகளே. பாசமும் பந்தமும் அத்தகைய உணர்வுகளே. பாசமும் பந்தமும் நன்னெறிகள் போல் தோன்றினாலும் அவை பாசாங்கு நெறிகள். கண்களைக் கட்டித் தெருவில் நிறுத்தக் கூடியவை.
ஒரு நிகழ்வை, நிகழ்வின் செயல்-விளைவாகப் பார்த்துப் பழகினால் முழுமைக் கண்ணோட்டத்துடன், உணர்வுகளுக்குக் கட்டுப்படாமல் நடக்கலாம், முடிவெடுக்கலாம், வாழலாம்.
நசிகேதன் கதையின் ஒரு முக்கியக் கட்டம் இளவல் விடை. முழுமையானக் கண்ணோட்டமும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு சிறுவன், தன்னை விட முதியப் பெற்றோரையும் கற்றோரையும் தங்களின் கண்மூடித்தனங்களை அறியச் செய்தக் கட்டம். உணர்வுகளுக்கு அடிமையான அவையினரும், உணர்வுகளை வென்ற நசிகேதனும், எடுத்த முடிவுகளையும் செய்கைகளையும் பற்றிய இந்த கட்டத்தின் பாடம், இனிவரும் பகுதிகளுக்கு அடிப்படை எனலாம்.
    பெற்றோர்கள் அழுது புரண்டார்கள்; உறவினர்கள் துடித்தார்கள்; பொன்னால் செய்த நசிகேதனின் சிலையைத் தானமாக வழங்குவதும் சாஸ்திரப்படிச் செல்லும் என்று வேதங்கற்ற அறிஞர்கள் மாற்று வழிகள் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, கலவரத்தையும் குறுக்கு வழிகளையும் கட்டுப்படுத்தி, தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன்.
தன்னுடையத் தெளிவானக் கருத்துக்களாலும் இனிமையான மொழியினாலும் அனைவருக்கும் ஆறுதல் அளித்துத் தூதர்களுடன் எமனூர் சென்ற நசிகேதனுக்கு, எமன் வீட்டில் எத்தகைய வரவேற்பு காத்திருந்தது? ►