வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/09

விளைவை எண்ணி வாசன் துடித்தான்


7
தொல்லைப் பொறுக்காதுத் தூற்றி உறுக்கிலே
எல்லை மறந்துநான் ஏசினேன் - வல்லைக்
கடுஞ்சொல் விடுத்திந்த வேள்வியிலே கோடிக்
கொடுத்துங் கெடுத்தேன் குடி!

    ன் தொல்லை பொறுக்காமல், கோபத்தில் வரம்பு மீறி நான் ஏசினேன். கோடி தானங்கள் வேள்வியில் கொடுத்தாலும், வேகத்தில் கடுமையாகப் பேசி என் குடியை நானே கெடுத்தேன் (என்றான் மன்னன், மகனிடம்).

உறுக்கு: கோபம்
வல்லை: வேகம், கடுப்பு, வருத்தம்    றிவு, அறியாமை இரண்டுமே சக்திகள் தாம். அறிவை விட, அறியாமை சக்திக்கு ஆயுள் குறைவு. தாக்கிய மறுகணமே தன் எதிரியான அறிவிடம் சரணடைந்து விடும். நம்மில் பெரும்பாலானோர், அறியாமையின் விளைவை அதன் தாக்கத்தில் செயல்பட்ட அடுத்த கணத்திலேயே புரிந்துகொண்டு விடுகிறோம். அறியாமை மறைந்து அறிவு தோன்றிவிடுகிறது. அறிவை விட ஆயுள் குறைவென்றாலும் அறியாமையின் தாக்கம் வலுவானது. அறிவைப் போலவே, பலநேரம் அறிவைக் காட்டிலும், அறியாமையின் விளைவு நிலைக்கிறது. அறியாமையின் ஒரு கணத் தாக்குதல் பல ஆயுளுக்கும் நிலைக்கும் தன்மையது. மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகும் வாசனின் அறியாமையைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நடக்கிறதே! அறிவை அடக்க முடியாது. அறியாமையை அடக்க முடியும். இந்த உண்மையைக் காலங்கடந்தே புரிந்துகொள்கிறோம். நம் கண்மூடித்தனத்தினால் அறிவை அடக்க முயற்சி செய்கிறோம்; அறியாமையை அடக்காது நிற்கிறோம். விந்தையான முரண் அல்லவா?

சுயநலமும் பேராசையும் மனதுள் புகுந்து விட்டால் விலகாது. சாதாரண உரையாடலைக் கூட உடனே தன்னிலைப் படுத்திப் பேசுவதிலிருந்து
("இன்னிக்கு கணக்கில் நூத்துக்கு நூறு வாங்கினேன்பா" - "இதென்ன பிரமாதம், நான் எப்பவுமே கணக்குல நூத்துக்கு நூறு தான்" | "லட்ச ரூபாய் கொடுத்து இந்த நகை வாங்கினேன்" - "என்னோட நகை பத்து லட்சமாக்கும்" | "ஒரு நிமிசம் பொறுங்க, பிள்ளைக்கு சாப்பாடு போட்டு வரேன்" - "சம்பாதிக்கிற என்னை மொதல்ல கவனி" | "அடுத்த வருசம் ஸ்விட்சர்லந்து போலாம்னு இருக்கேன்" - "ஸ்விட்சர்லந்து நான் மூணு தடவை போயாச்சு" | "எனக்குக் காலைலந்து தலைவலி" - "எனக்குத் தலைவலி வரப்பல்லாம்...")
பொதுவாழ்வின் முக்கியச் செயல்கள் வரை
(வீட்டு-அலுவலக அரசியல், சகோதர-சுற்றத்துப் பழக்கம், நாட்டு-உலக நடப்பு)
இவற்றின் தாக்கத்தில் நாமும் நம்மைச் சுற்றி இருப்போரும் தினமும் பல விதங்களில் இயங்குகிறோம். நம் செயல்கள் பலநேரம் சுயநலம் மற்றும் பேராசையின் விளைவுகள், வடிவங்கள், என்பது நமக்குப் புரிவதில்லை. அல்லது, காலம் கடந்து புரிகிறது. அடுத்தவர் நம்முடன் உரையாடும் பொழுது ஒரு முறை, நாளில் ஒரே ஒரு முறை, நாம் கவனிப்பதோடு நிறுத்தி, தன்னிலைப்படுத்தாமல் உரையாடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

    கனை எமனுலகு அனுப்பியதைக் கூடத் தன்னிலைப்படுத்தி வருந்துகிறான் மன்னன். தவறு செய்து புலம்பும் பொழுதும், "உன்னுடைய தொல்லையினால் இப்படிப் பேசினேன்" என்று பழியை மகன் மேல் சுமத்துவது போலிருக்கிறது. மகனைத் தானம் செய்த மாபெரும் தவறு ஒரு புறம் இருக்க, "கோடிப்பொன் தானம் போனதே, பயனில்லையே" என்ற ஆதங்கமே மேலாக வெளிப்படுகிறது. "குடி கெடுத்தேனே" என்ற வருத்தத்திலும், "சந்ததி இல்லாமற் போனதே" என்ற தன்னிழப்பு மேலோங்கியிருப்பதாகச் சொல்லலாம்.

தொடர்ந்துப் புலம்பியத் தந்தையைப் பொறுமையுடன் கவனித்ததால், அவர் புலம்பலிலும் பேராசை மற்றும் சுயநலச் சுவடுகள் இருப்பதை அறிந்த நசிகேதன், தன் தந்தையின் தவறை எடுத்துச் சொல்லி, தான் கேட்க எண்ணிய முக்கியக் கேள்வியைக் காலதாமதமின்றி அவர் முன் வைக்கத் துணிந்தான்.

11 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

கொடுத்துங் கெடுத்தேன் குடி!
--கலக்குறீங்க அப்பாஜி.
வர வர அப்பாஜி, மோகன்ஜி, காஷ்யபன் அய்யா இவங்களுக்கெல்லாம் நான் அடிமையாயிட்டேன்னு சொல்றாங்க வீட்டுல.

சிவகுமாரன் சொன்னது…

///அறிவை அடக்க முடியாது. அறியாமையை அடக்க முடியும். நம் கண்மூடித்தனத்தினால் அறிவை அடக்க முயற்சி செய்கிறோம்; அறியாமையை அடக்காது நிற்கிறோம். விந்தையான முரண் அல்லவா?///
என்ன ஒரு நிதர்சனமான வார்த்தைகள். முகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டீர்கள்.என்னைப் போன்ற பாமரனுக்கும் கடோபநிஷத்தை கொண்டு சேர்க்கும் உங்களுக்கு காலமெல்லாம் நன்றி சொல்ல கடைமைப் பட்டிருக்கிறேன் அப்பாஜி. நானெல்லாம் எந்த ஜென்மத்தில் சமஸ்கிருதம் கற்று கடோவை அறிந்து கொண்டிருக்க முடியும் ?

meenakshi சொன்னது…

//கொடுத்துங் கெடுத்தேன் குடி//
அழகான ஓசை நயம். அருமையாக இருக்கிறது வெண்பா.

//பலநேரம் அறிவைக் காட்டிலும், அறியாமையின் விளைவு நிலைக்கிறது. அறியாமையின் ஒரு கணத் தாக்குதல் பல ஆயுளுக்கும் நிலைக்கும் தன்மையது.//
பொட்டில் அடித்தார் போல் தாக்குகிறது உங்கள் வரிகள்.

நெருக்கடியான சூழ்நிலைகளில்தான் ஒருவரின் சுயரூபம் முற்றிலும் வெளிப்படும் என்பது எவ்வளவு உண்மை என்பதை மன்னனின் புலம்பல் தெள்ளத் தெளிவாக்குகிறது.

அருமையான பதிவு!

துளசி கோபால் சொன்னது…

கெட்டது குடி. அதுவும் கோடிகள் கொடுத்தும்....

அருமையோ அருமை.

தொடர்கின்றேன்.

geetha santhanam சொன்னது…

அறிவு, அறியாமை பற்றிய வரிகள் அருமை. வெண்பாவில் பின்னுகிறீர்களே. எப்படித்தான் 'உறுக்கு' போன்ற வழக்கிலில்லாத சொல்லெல்லாம் போட்டு பாட்டெழுதுகிறீர்களோ, great.

RVS சொன்னது…

//அறிவை விட ஆயுள் குறைவென்றாலும் அறியாமையின் தாக்கம் வலுவானது. அறிவைப் போலவே, பலநேரம் அறிவைக் காட்டிலும், அறியாமையின் விளைவு நிலைக்கிறது. அறியாமையின் ஒரு கணத் தாக்குதல் பல ஆயுளுக்கும் நிலைக்கும் தன்மையது//

அறியாமையால் விளைந்த தாக்கத்தை,விளைவை அது அறியாமையால்தான் விளைந்தது என்று தெரியாமல் அறியாமையில் இருப்போர் பலர்.
விளக்கங்கள் அருமை. நசிகேது வழியாக எங்களின் அறியாமை இருளை போக்குகிறீர்கள். நன்றி ;-)
பல புதிய தமிழ் வார்த்தைகள். தேமா, புளிமா, நிரைநேர், நேர்நேர், நேர்நிரை, நிரைநிரை எல்லாம் மறந்து போச்சு. உங்க பாணியில் வெண்பா இயற்றுவது பற்றி சொல்லித்தர இயலுமா அப்பா ஜி ;-) உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது...

ஸ்ரீராம். சொன்னது…

பாராட்ட நினைத்ததை எல்லோரும் பாராட்டி விட்டார்கள். சிறப்பாக அமைந்த பதிவு.

மோகன்ஜி சொன்னது…

இந்தப் பா எனக்கு இப்போது மனப்பாடமாகிவிட்டது அப்பாஜி.

அறிவு, அறியாமையின் தாக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள் ஆழமானவை. அதொத்ததே தன்னிலை படுத்தி,பிறரைப் படுத்தும் இயல்பு பற்றிய உங்கள் பார்வையும்.

மனிதன் பெரும்பாலும் இத்தகு
தவறுகளையேயே by default செய்கிறான்.பிரச்சனை அதுவல்ல.. செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல்,புதிதுபுதிதாய் தவறுகளை செய்பவன் மன்னிக்கபடுகிறான். செய்த தவற்றையே மீண்டும்மீண்டும் செய்பவனோ தவிர்க்கப் படுகிறான் அல்லது தண்டிக்கப் படுகிறான்.

பத்மநாபன் சொன்னது…

இந்த முறை நசிகேதம் நுழைந்ததே தெரியவில்லை...

இந்த வெண்பா பாரதியை மிகவும் நினைக்க வைத்தது..

அறிவு- அறியாமை விளக்கம் பல எல்லைகளை தொடுகிறது ..அறியாமையின் ஆயுள் சிறிதெனினும் அதன் தாக்கம் பெரிது -நல்லதொரு விளக்கம்

சுய நலம், பேராசை சம வாழ்வு உதாரணங்கள் மிக சரியாக இருக்கிறது...அந்த வசனங்கள் மிக இயல்பாக போய்விட்டது.

தமிழ் சொன்னது…

/கொடுத்துங் கெடுத்தேன் குடி!/

அருமை

நல்ல விளக்கம்

அப்பாதுரை சொன்னது…

RVS.. நியாயமா.. என்னிடம் பாடம் கேட்கிறீர்களே? பிழையாகச் சொல்லிக் கொடுக்கவா?

அகரம் அமுதனின் 'வெண்பா எழுதலாம் வாங்க!' அருமையான தளம் - வெண்பா மட்டுமல்ல, பலவகைத் தமிழ்ப்பா புனையக் கற்றுத் தருகிறார். தமிழநம்பியின் வலைப்பூ அருமையான தமிழ்ப் படிக்கவும் கற்கவும் ஒரு சாதனம். திகழின் 'வெண்பா வனம்' சுவையான தளம். தமிழ் நாட்டுப் பாடநூல் கழக வெளியீடான 'ஒன்பதாம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூல்', யாப்பிலக்கண அடிப்படைகளைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது (என் அறிவின் உச்சவரம்பு இங்கேதான்). அதற்கு மேல் உதவி தேவைப்பட்டால் சிவகுமாரன் எனும் செந்தமிழ்ச் சித்தனைச் சரணடைவதே நன்று.

ஒரு குறுக்குவழி - என் ஆசிரிய நண்பர் அரசன் சொல்லிக் கொடுத்தது. மூன்று டெம்ப்லேட் கொடுத்தார் - ஒவ்வொரு டெம்ப்லேட் வைத்து ஒரே ஒரு வகை வெண்பா மட்டுமே எழுத முடியும். விளையாட்டுக்காக வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். அரசன் இதை 'கிண்பா' என்பார்.

அரசனின் எழுத்திலிருந்து:
----
அசை மட்டும் தெரிந்தால் போதும், கீழே இருக்கும் எழுதுமுறைப் பட்டியை வைத்துக் கொண்டு வெண்பா எழுதலாம். எண்களுக்கு ஏற்றபடி எழுத்தைச் சேர்த்து விட்டால் போதும். திடீர் வெண்பா ரெடி. இதனைக் கிண்பா என்பேன்.

00 100 00 110
00 110 010 -- 000
00 110 010 010
00 100 0

0: நேரசை
1: நிரையசை

தனிச்சொல், எதுகை, மோனை, இயைபு என்று மேலும் நுட்பங்களும் விதிகளும் வழிகளும் இருந்தாலும், அடிப்படை இதுவே. எண் வரிசையைத் தட்டாமல் போட்டால் சூடான கிண்பா தயார். இப்போதைக்கு இந்த பட்டியை வைத்துக் கொண்டு ஓட்டலாம். ஒரு மூத்த தமிழ்ப்பாட்டி எழுதிய வெண்பா இந்தப் பட்டியில் பொருந்தும். பாட்டியே பட்டிக்குள் அடக்கம். பிறகென்ன, அஞ்சாமல் எழுதுங்கள்.
----