வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/24

எமதூதருடன் செல்ல நசிகேதன் விடைபெற்றான்


12
பெற்றோர் வருத்தமும் உற்றோரின் வேதனையும்
கற்றோர் கருத்தையுங் கட்டினான் - துற்றுத்
தடைமுற்றுந் தன்தமிழால் தீர்த்தான் வணங்கி
விடைபெற்றான் விண்ணேக வித்து.

    தாய் தந்தையின் துயரமும், உறவினர்களின் மனவேதனையும், அறிஞர்களின் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கினான். தன் ஆழ்ந்தக் கருத்துக்களாலும் இனிமையான உரையாலும், மேலும் தடைகளை நீக்கினான். அவையோரை வணங்கி, விண் போக விடைபெற்றான் நசிகேதன்.


கட்டினான்: அடக்கினான்
துற்று: பிறகு, மேற்கொண்டு
தமிழ்: செறிவுடைய இனிய மொழி, நசிகேதனின் ஆறுதல் பேச்சுக்கு ஆகிவந்தது
வித்து: விதை, சந்ததி, இங்கே நசிகேதனைக் குறிக்கிறது    ணர்ச்சியும் உணர்வும் ஒன்றையொன்று சார்ந்திருந்தாலும், இரண்டுக்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. உணர்ச்சி நெஞ்சைத் தொடுவதில்லை. உணர்வு நம் நெஞ்சைத் தொடுகையில் புனிதமாகத் தோன்றினாலும், கண்ணையும் நெஞ்சையும் ஒரு சேரக் கட்ட வல்லது. உணர்வுகளுக்கு அடிமைப்படுவதால் கண்மூடித்தனங்களில் நிலை மறக்கிறோம். எத்தனை கற்றாலும் அறிவுரை பெற்றாலும், உணர்வு கலந்த நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்வது நடைமுறையில் மிகவும் கடினம்.

தொலைந்தக் காதலைச் சுமையாகப் பிடித்துக் கொண்டு காலமெல்லாம் வாடுவோரைப் பார்க்கிறோமே? துன்பம் நேர்ந்தாலும் 'கல்லானாலும் கணவன்' என்ற நெறியைக் கடைபிடிக்கும் எத்தனை மாதர்களை அறிவோம்?! சூதாட்டம், கள், போதை, பக்தி போன்றவை உணர்ச்சியைக் கடந்து உணர்வைக் கைப்பற்றும் பொழுது அடிமையாகிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டதால் ஏற்படுத்திக்கொண்ட உபாதைகளே. பாசமும் பந்தமும் அத்தகைய உணர்வுகளே. பாசமும் பந்தமும் நன்னெறிகள் போல் தோன்றினாலும் அவை பாசாங்கு நெறிகள். கண்களைக் கட்டித் தெருவில் நிறுத்தக் கூடியவை.

ஒரு நிகழ்வை, நிகழ்வின் செயல்-விளைவாகப் பார்த்துப் பழகினால் முழுமைக் கண்ணோட்டத்துடன், உணர்வுகளுக்குக் கட்டுப்படாமல் நடக்கலாம், முடிவெடுக்கலாம், வாழலாம்.

நசிகேதன் கதையின் ஒரு முக்கியக் கட்டம் இளவல் விடை. முழுமையானக் கண்ணோட்டமும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு சிறுவன், தன்னை விட முதியப் பெற்றோரையும் கற்றோரையும் தங்களின் கண்மூடித்தனங்களை அறியச் செய்தக் கட்டம். உணர்வுகளுக்கு அடிமையான அவையினரும், உணர்வுகளை வென்ற நசிகேதனும், எடுத்த முடிவுகளையும் செய்கைகளையும் பற்றிய இந்த கட்டத்தின் பாடம், இனிவரும் பகுதிகளுக்கு அடிப்படை எனலாம்.

    பெற்றோர்கள் அழுது புரண்டார்கள்; உறவினர்கள் துடித்தார்கள்; பொன்னால் செய்த நசிகேதனின் சிலையைத் தானமாக வழங்குவதும் சாஸ்திரப்படிச் செல்லும் என்று வேதங்கற்ற அறிஞர்கள் மாற்று வழிகள் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, கலவரத்தையும் குறுக்கு வழிகளையும் கட்டுப்படுத்தி, தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன்.

தன்னுடையத் தெளிவானக் கருத்துக்களாலும் இனிமையான மொழியினாலும் அனைவருக்கும் ஆறுதல் அளித்துத் தூதர்களுடன் எமனூர் சென்ற நசிகேதனுக்கு, எமன் வீட்டில் எத்தகைய வரவேற்பு காத்திருந்தது?

18 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

உங்கள் வெண்பாவும் விளக்கமும் ஒவ்வொரு முறையும் அருமை.எமலோகத்தில் நடக்கும் சம்பாஷனைகளைப் பற்றி படிக்க ஆவலாக இருக்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

இனிய மொழி என்ற பொருளுக்கு தன்தமிழால் எனும் வார்த்தைப் பிரயோகம் இதமளிக்கிறது.( "தண்டமிழால்" இன்னும் பொருத்தமாக இருக்குமோ)
மனதுக்குள் நசிகேதன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டான்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி geetha santhanam, சிவகுமாரன், ...

அப்பாதுரை சொன்னது…

'தண்டமிழ்' எனக்கும் தோன்றியது சிவகுமாரன். நன்றி. தமிழில் புலப்பட்ட அழகு டமிழில் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. பிரித்துப் பார்க்காமலே தமிழ் என்று தனியாக வரும்படி எழுதப் பார்த்தேன். 'தன்தமிழ்' கூட எனக்குப் பிடிக்கவில்லை. 'தமிழால் தீர்த்தான்' என்று தனியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். முந்தைய சீரை ஈரைசையாகக் கொஞ்சம் மாற்றிப் பார்த்தேன், ஈற்றடி உதைக்கிறது. எதுவும் சரியாக வரவில்லை. (இதெல்லாம் பழக்கமாக பாப்புனைவோருக்குத் தான் வரும். சூடு போட்டுக்கொண்டாலும் பூனை பூனை தான்.)

சிவகுமாரன் சொன்னது…

இல்லை அப்பாத்துரை. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். பின்னூட்டம் இட்டபின் தான் புரிந்தது. இங்கு தமிழ் என்பது மொழி என்ற பொருளில் ஆகி வந்துள்ளது. தண்டமிழ் என்று சொன்னால் தமிழை மட்டுமே முன்னிலைப்படுத்தவதாகிவிடும். மொழி என்ற பொருள் அடிபட்டுவிடும். தன்தமிழ் தான் சரி.( இது தான் அதிகப் பிரசங்கித் தனம் அல்லது அவசரக்குடுக்கை என்பதோ. என்பதோ.

அப்பாதுரை சொன்னது…

தமிழ் இங்கே நசிகேதன் பேச்சைக் குறிப்பதாகத் தான் சொல்லியிருக்கிறேன். சரியாகச் சொன்னீர்கள். இருந்தாலும் தன்தமிழ் என்பதை விட தமிழ் என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிலேடையும் கிடைக்கும்.

சிலேடை என்றதும் இன்னொரு சிக்கல் நினைவுக்கு வந்தது - உங்கள் பார்வைக்கு. ஈற்றடியில் விடைபெற்றான் விடை என்று எழுத நினைத்தேன். இரண்டாம் சீர் சரியாக வரவில்லை. அப்படி இப்படி புரட்டி ஒன்றும் புலப்படாமல் தவித்துப் பின் வித்தைப் பிடித்த வித்தை.

அப்பாதுரை சொன்னது…

'தடையைத் தமிழால் துடைத்து வணங்கி
விடையைப் பெற்றான் விடை' - முதலில் எழுதிய அடிகள். தனித்துப் படித்தாலும் நான்கு அடிகளையும் சேர்த்துப் படிக்கும் பொழுதும் சரியாக வரவில்லை, சிவகுமாரன்.

பத்மநாபன் சொன்னது…

உணர்ச்சிப்பூர்வம்...உணர்வுப்பூர்வம் ஒப்பீடு நன்றாக இருந்தது...

நசிகேதனின் உணர்வு பூர்வமான விளக்கம் நமக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது..

இரண்டுக்கும் நடுவில் அறிவு இருப்பதாக சொல்லியுள்ளீர்கள்...

தமிழ் இங்கு ஒரு வித்தியாசமான பயணம் மேற்கொண்டுள்ளது..அய்யன்வள்ளுவர் கூட ஒரிடத்தில் கூட தமிழ் என்னும் சொல்லை பயன் படுத்தவில்லை எனும் செய்தியும் நினைவுக்கு வருகிறது...

சிவகுமாரன் சொன்னது…

நானும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் பத்மநாபன் சார். திருக்குறள் தமிழகத்துக்குள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக இருக்குமோ? அய்யனுக்கு மொழிப்பற்று இனப்பற்று எல்லாவற்றையும் தாண்டி மனிதநேயம் தான் முன்னின்றிருக்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

பாசமும் உணர்வு. பக்தியும் உணர்வு. பாசத்தை மறுக்க, விலக்க முடியாதவர்களால் பக்தியை மட்டும் எப்படி மறுக்க முடிகிறது?

//"ஒரு நிகழ்வை, நிகழ்வின் செயல்-விளைவாகப் பார்த்துப் பழகினால் முழுமைக் கண்ணோட்டத்துடன், உணர்வுகளுக்குக் கட்டுப்படாமல் நடக்கலாம், முடிவெடுக்கலாம், வாழலாம்"//

பாசத்தினால் ஏற்பட்ட உணர்வை வெல்ல பக்தி என்ற உணர்வு தேவைப் படுகிறதோ?

முக்கிய கட்டத்துக்கு வந்தாச்சு...ஆவலுடன் காத்திருக்கிறேன் இனி வருவதைப் படிக்க.

அப்பாதுரை சொன்னது…

இதுவரை அறியாத விவரம் பத்மநாபன், நன்றி.

நல்ல கேள்வி ஸ்ரீராம். கண்ணைக்கட்டுவது உணர்வின் பொது இயல்பு. உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் நாம் அதன் கண்களை மூடுகிறோம்; நாம் கட்டுப்பட்டால் அது நம் கண்களை மூடுகிறது. பாசமோ பக்தியோ நம்மைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் சரிதான் என்று நினைக்கிறேன். ஒன்றை ஒதுக்கி மற்றதை ஏற்பது என்பது அறியாமையே என்று தோன்றுகிறது.

meenakshi சொன்னது…

'தன்தமிழால்' என்பதை 'நற்றமிழால்' அல்லது 'செந்தமிழால்' என்று மாற்றினால் சரியாக வருமா? சிவகுமாரன் மற்றும் உங்கள் பின்னூட்டத்தை படித்ததால் இதை கேட்க தோன்றியது. எனக்கு வெண்பா படித்து ரசிக்க மட்டுமே தெரியும். அதன் இலக்கணம் பற்றி ஒன்றுமே தெரியாது. அதனால் நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னித்து, மறக்கவும்.

சிவகுமாரன் சொன்னது…

இல்லை மீனாட்சி மேடம். நற்றமிழ், செந்தமிழ், தண்டமிழ் எல்லாமே நல்ல, செம்மையான, தண்மையான என தமிழுக்கு கொடுக்கப்படும் அடைமொழிகள். ஆனால் இங்கு அப்பாத்துரை சொல்ல வந்தது தன்னுடைய மொழியால் அல்லது பேச்சால் என்ற பொருளில்.எனவே
தன்மொழி தான் சரியெனப்படுகிறது.சரிதானே அப்பாஜி. (ஆங்....நாக்கை கடித்துக் கொள்கிறேன் . மறுபடியும் ஜி )

meenakshi சொன்னது…

மிகவும் நன்றி சிவகுமாரன். நான் அவசரக் குடுக்கயேதான். மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னூட்டத்தையும், அதற்கு அப்பாதுரை அவர்களின் விளக்கத்தையும், நீங்கள் எனக்கு எழுதிய விளக்கத்தையும் படித்தேன். இப்பொழுது நன்கு புரிந்தது.
உங்கள் கவிதைகளை படித்தேன். மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

RVS சொன்னது…

//பாசமும், பந்தமும் பாசாங்கு நெறிகள்.//
எல்லோருக்கும் புரிய வைக்க முயலுகிறீர்கள். நன்று.

எமனூர் செல்ல உணர்வுகளை வென்ற பிள்ளையின் விடை பெரும் நிகழ்ச்சியை கண் முன்னே நிறுத்தினீர்கள். நன்றி.
எமி நசி சந்திப்பை ஆவலாய் எதிர்நோக்கி...... ;-)

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, RVS, சிவகுமாரன்...

நசிகேதன் சொன்ன ஆறுதல் உரைக்குத் தான் 'தமிழ்' என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அடைமொழியோடு சொன்னாலும் பொருந்தும் தான். தண்டமிழ் தான் மோனைக்காக எனக்கு முதலில் தோன்றியது.. (சிவகுமாரன் காற்று கொஞ்சம் மேற்காக வீசியதன் பலன்). 'தமிழ்' என்று தனியாக வர ஆசைப்பட்டதால் அதை ஒதுக்கினேன்.. 'தண்டமிழ்' - ஆறுதல் மொழியும் தண்மை தானே? பொருந்தும் தான்... இருந்தாலும் டமிழால் என்பது என் பெண் சொல்லும் டமிலால் என்பது போல் ஒலித்தது.. அதான்:)
'தமிழ்கொண்டு' என்று எழுதலாமென்றும் தோன்றியது. இலக்கணம் உதைத்து. இந்தச் சொல்லுக்காக மற்றதை மாற்றி.. அதற்குப் பிறகு பாடலின் சாரம் தான் முக்கியம் என்று நினைத்த போது தண் தன்னானது. அப்படியே விட்டுவிட்டேன். கருத்துக்கும் பதில் விளக்கத்துக்கும் நன்றி meenakshi, சிவகுமாரன்.. (எனக்கு ஒரே பெருமை போங்க..)

அப்பாதுரை சொன்னது…

'எமி' செல்லப்பெயரா RVS?

சிவகுமாரன் சொன்னது…

நசிகேத வெண்பா ஒரே தத்துவ விசாரமாக இருப்பதால், எல்லோரும் கொஞ்சம் நம்ம "குஷிகீத கிண்பா" (அதாங்க.... காதல் வெண்பாக்கள் ) படித்து இளைப்பாறுமாறு கேட்டுக் கொள்கிறேன். ( யப்பா எப்படியெல்லாம் ஆள் சேர்க்க வேண்டியிருக்கு.)