13
ஓர்நாள் பிறகோர்நாள் பின்னோர்நாள் ஒன்றேலும்
சீர்காணா ஏரை எமன்கண்டான் - ஆர்த்தன்
முகத்திலகம் வெய்தறிந்தான் முந்து விருந்து
செகத்தகனம் செய்ச்சுடர் என்று.
சீர்காணா ஏரை எமன்கண்டான் - ஆர்த்தன்
முகத்திலகம் வெய்தறிந்தான் முந்து விருந்து
செகத்தகனம் செய்ச்சுடர் என்று.
    மூன்று நாட்கள் தொடர்ந்து (தன் வீட்டு வாயிலில்) கவனிப்பாரற்று இருந்த அழகிய நசிகேதனை எமன் பார்த்தான். களைத்துத் துன்புற்றிருந்தாலும் நசிகேதன் உலகத்தையே எரிக்க வல்லத் தீச்சுடர் என்பதை அவன் முகப் பொலிவிலிருந்துப் புரிந்து கொண்டான் (எமன்).
சீர் காணா ஏர்: மதிக்கப்படாத அழகு | கவனிப்பாரின்றிக் கிடந்த நசிகேதன்
ஆர்த்தன்: எளியவன், துன்பமுற்றவன் | பசி, களைப்பால் வாடிய நசிகேதன்
முகத்திலகம்: முக+திலகம் என்று பிரித்தால் பொலிவு, முகத்தில்+அகம் என்று பிரித்தால் 'உள்ளத்தைக் காட்டிய முகம்' என்று பொருள் | நசிகேதனின் அகமேன்மை புறத்தே தெரிந்தது
வெய்தறிந்தான்: வெய்து+அறிந்தான் | வெய்து என்றால் விரைவாக, விரும்பக்கூடியது (வெய்யது) என்றும் பொருளுண்டு. 'முகத்திலகம் வெய்து அறிந்தான்' என்று சேர்த்தால் 'முகப்பொலிவு விரும்பத்தக்கது என அறிந்தான்' என்றும், 'முகத்தில் அகம் வெய்து அறிந்தான்' என்று சேர்த்தால் 'உள்ளத்து ஆழத்தை வெளியே காட்டிய முகம் என்பதை விரைவாக அறிந்தான்' என்றும் பொருள் துய்க்கலாம்
முந்து: முதலில், எதிர்ப்பட்ட | 'வெய்தறிந்தான் முந்து' எனச் சேர்த்தால், 'எமன் அவசரமாக முதலில் தெரிந்து கொண்டான்' என்ற கருத்தாகும் | 'முந்து விருந்து' எனச் சேர்த்தால், 'முன்னாலிருக்கும், அல்லது, எதிரிலிருக்கும் விருந்தினன்' என்று பொருள்
செகத்தகனம் செய்ச்சுடர்: உலகத்தை அழிக்க வல்லத் தீச்சுடர், 'செய்ச்சுடர்' என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் மேலும் சுவை. (சான்றோர் சீற்றம் முக்காலத்திலும் சுடும் என்ற பொருளில்)
    மனிதக் கண்டுபிடிப்புகளில் தீ முதன்மையானது. மனித நாகரீகத்துக்கு வழி வகுத்த மூன்று கண்டுபிடிப்புகளில் ஒன்று தீ என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். தீயின் தன்மை வியக்கத்தக்கது. சிறிய விளக்கொளியாக அமைதியின் சின்னமாக விளங்கும் தீ, பரந்து காட்டையும் நாட்டையும் கடலையும் அழிக்கும் தன்மை கொண்டது. அறிவும் அப்படித் தான். ஆக்கவும் அழிக்கவும் வல்லது. அறிவு மிகுந்த சான்றோரைப் பேணுதல் நம் கடமையாகும், அந்தச் சான்றோன் நம் பிள்ளை என்றாலும்.
ஆங்கிலத்தில் 'first impression' பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் பல பிரபல அமெரிக்க நிறுவனங்களில் 'creator of first impressions' என்று வரவேற்பறைப் பணியாளரை அழைத்தார்கள். அறிமுகம் சரிமுகமாக இருக்கவேண்டும் என்பது எத்தனை முக்கியமோ, சரிமுகத்தை உடனே அறியவேண்டும் என்பதும் அத்தனை முக்கியம். பல ஜப்பானிய நிறுவனங்களில் விருந்தினரைப் பற்றி முன்பே அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்; விருந்தினர்களுக்கு வியப்பாக இருக்கும், தன்னைப் பற்றி இத்தனை தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று. விருந்தோம்பல் என்றாலும், இது ஒரு நுட்பமான மேலாண்மைத் தந்திரம். நம்மூர் மளிகைக் கடைகளிலும் இதைக் கவனிக்கலாம். முன்பின் பார்த்திராத வாடிக்கையைக் கூட உள்ளே நுழையும் பொழுதே 'அளந்து' விடும் தந்திரம். அதற்கேற்ப வரவேற்பார்கள்.
நசிகேதனைப் பார்த்த எமனின் செயலில் மேலாண்மை நுட்பம் புதைந்திருப்பதை இந்தப் பாடலிலும் பின்னாலும் பார்க்கலாம். மற்ற தேவர்களை விட காலதேவனுக்குப் பண்பு அதிகமென்பது போல் பல மதங்களில் சித்தரித்திருக்கிறார்கள். இந்து மதத்தில் எமனைத் தர்மராசன் என்றும் அழைக்கிறார்கள். நல்லதையும் அல்லாதையும் ஒருங்கே அறிந்து நியாயம் வழங்க வேண்டிய நிலையில் எமனைச் சித்தரித்திருக்கிறார்கள்.
    தூதர்கள் எமனைக் காணாது, நசிகேதனை எமன் வீட்டு வாயிலறையில் விட்டுச் சென்றனர். அங்கே மூன்று நாட்கள் எமனைச் சந்திக்காமல் உண்ண உணவோ பருக நீரோ, எந்த வகை வரவேற்பும் வசதியும் கொடுக்கப்படாமல் காத்திருந்தான் நசிகேதன். நான்காம் நாள் அவனைப் பற்றியும் அவன் அங்கு வந்த விதத்தைப் பற்றியும் அறிந்த எமன், நசிகேதனைச் சந்தித்தான். களைத்திருந்தாலும் சளைத்தவனல்லவே நசிகேதன்? அவன் முகப்பொலிவிலிருந்து, 'வந்திருப்பவன் சாதாரண விருந்தாளியல்ல, இவனுடைய அறிவுச் சுடர் உலகத்தை அழிக்கும் தீயாக மாறும் தன்மையுடையது' என்பதை அறிந்து கொண்டான்.
நசிகேதனை அழைத்து வந்த தூதர்கள், இறந்தவர்களைச் சேர்க்குமிடத்தில் அவனைச் சேர்க்காமல், தானமாக வழங்கப்பட்டது எமனுக்குச் சொந்தம் என்ற காரணத்தால், எமன் வீட்டில் விட்டுச் சென்றார்கள் எனலாம். அழையா விருந்தாளியென்றாலும், வீட்டுக்கு வந்த விருந்தினரை மூன்று நாட்கள் வாட விடுவது கொடுமையல்லவா? அதிலும் பச்சிளம் பாலகன், அவனைக் காக்க வைக்கலாமா? இதை உணர்ந்த எமன், உடனே தன் சேவர்களை அனுப்பி நசிகேதனை கவனிக்கச் சொல்லி, தானே அவனைப் பணிந்து வரவேற்றான். ►