வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/11/28

வாசனின் கொடையில் குறைகண்டான் நசிகேதன்


3
புல்லுணாது நீரும் பருகாது கன்றிவாது
நல்பால் தராதிவா நோகுமன்றோ? செல்வழியின்
பொய்யான நீரோடை யன்றோ வெறுங்கொடை
செய்தோர்கள் சேரும் இடம்?

    ந்தக் *கால்நடைகள் புல்லைப் புசிக்கவோ, நீரைப் பருகவோ, கன்றுகளைப் பெறவோ, பால் சுரக்கவோ இயலாதிருக்கின்றனவே? வெற்றுத் தருமங்கள் புரிவோர் சேருமிடம், வழியில் புலப்படும் கானல் நீரோடைக்கு ஒப்பானதல்லவா?

*தராதிவா: தராத இந்த ஆ; ஆ என்றால் பசு; இங்கே கால்நடைக்கு பொதுவாகி வந்திருக்கிறது.


    றம் செய்யும் பொழுது அது பிறருக்குப் பயன்படத்தகுந்ததாக இருப்பின் கொடுத்தவருக்கும் நன்மை - பெறுவோருக்கும் நன்மை. பகட்டுக்காகப் பொதுநலச் சேவைகள் செய்தால் பெறுபவருக்குப் பலனளித்தாலும், கொடுப்பவருக்கு நிம்மதியோ நிறைவோ கிடைப்பதில்லை. கொடையின் இருபுறமும் மேன்மை என்று ஒரு பொன்மொழி உண்டு. இதை சேக்ஸ்பியர் அருமையாகச் சொல்லியிருக்கிறார்:"the quality of mercy is not strain'd... it is twice blest; it blesseth him that gives and him that takes".

    சிகேதன் மனதில் ஓடிய எண்ணங்கள் இவை. தந்தை தானம் செய்த பசு, குதிரை, ஆடு, யானை போன்ற கால்நடைகளும் படைவிலங்குகளும் சோர்ந்து தளர்ந்து வரண்டு போயிருப்பதைப் பார்த்தான். 'நடப்பதற்கே நோகும் இந்தக் கால்நடைகளை வேள்வித் தானமாகவும் பலியாகவும் கொடுத்துப் பெறக்கூடியப் பேறு எத்தகையதாக இருக்கும்?' என்று எண்ணினான். 'பாசாங்குத் தர்மத்துக்குப் பாசாங்குப் பேறு அல்லவா கிடைக்கும்?' என்று அஞ்சினான். சொர்க்கமே கிடைத்தாலும் அது நிலைக்காது என்று அவனுக்குத் தோன்றியது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? செயலைக் குறை சொல்லாது, பெற்றவனின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'தருமங்கள் செய்யத் துணிந்திருக்கும் என் தந்தைக்கு அவை பயனற்றுப் போகக்கூடும் என்பது புரியவில்லையே, இதைத் திருத்த முடியுமா?' என்று சிந்தித்தான். அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

14 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

தராதிவா ....இந்த வார்த்தையில் இன்ப சிக்கு சிக்கி வெளி வந்தேன்..அர்த்தம் தாண்டி. அதன் அசையில் ஒரு ஆர்வம்..

பகட்டுதானம் பால்மணத்திற்கு பிடிபட்டதும் ..அதை அடக்கி கொண்டதும் ..அடுத்தென்ன எனும் ஆர்வம் கூடுகிறது...

meenakshi சொன்னது…

கடனே என்று செய்யும் எந்த செயலும் நிறைவையும் தராது, முழுமையான பலனும் கிடைக்காது. இந்த பிள்ளையின் சிந்தனையை பார்க்கும்போது, இந்த பிள்ளை யாரை கொண்டு பிறந்தது என்று கேட்க தூண்டுகிறது.
இப்பொழுதெல்லாம் தனக்கு வேண்டாதவைகளையும், பிடிக்காதவைகளையும் அடுத்தவரிடம் தள்ளி விடுவதுதான் தான தர்மம் என்றாகி விட்டது.

பத்மநாபன் சொன்னது…

'பாசாங்குத் தர்மத்துக்குப் பாசாங்குப் பேறு' பால்மணத்திற்கு எவ்வளவு ஒரு நியாமான ஆதங்கம்...

இக்காலத்தில் கூட பேறு பேறு தானே அதிலென்ன பாசங்கு பேறு என்று ஆட்டம் போடுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்...

அப்பாதுரை சொன்னது…

பால்மண ஆதங்கம் நியாயமானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட என்றும் தோன்றுகிறது பத்மநாபன். சிறு பிள்ளையை மையமாக வைத்து அவன் வயதுக்கப்பாற்பட்ட ஆழமான கருத்தைச் சொல்ல முனைந்த கடோவின் ஆசிரியர்(களை) எண்ணி நான் வியக்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

அப்படிப் பட தகப்பனுக்கு எப்படி இப்படி ஒரு பிள்ளை? இன்றைய தமிழக வியாபாரிகள் செய்யும் இலவசக் கொடைகளும் அவற்றை நுகர்பவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

அப்பாதுரை சொன்னது…

அறிவு சில சமயம் எங்கிருந்து வருகிறது என்பதில் எனக்கும் வியப்பு தான் ஸ்ரீராம். பொதுவாக 'பிள்ளை மனதில் கள்ளம் இல்லை' என்பது காரணமோ? வியாபாரிகள் செய்யும் கொடை? ஹா ஹா!

மோகன்ஜி சொன்னது…

தாமதமாய் வந்து விட்டேன் நசிகேதா!

தானம் கொடுக்கப்படும் பொருளைவிட , அது கொடுக்கப்படும் முறையும் முக்கியமானது. நல்லவற்றையே தானம் தர வேண்டும். பயனற்றுப் போன ஆவினத்தை தானமாகத் தருபவன் 'அனந்தா'எனும் இன்பமற்ற உலகத்தை அடைவான் என்கிறது கடோ.

வீடுகளில் கூட,சமைத்து மிகுந்ததை பிரிட்ஜில் வைத்து, மேலும் உபயோகிக்க வேண்டாம் எனத் தோன்றிய பின்னரே பிச்சைக் காரனுக்கோ, வேலை செய்பவர்களுக்கோ தருவோர் பலருண்டு.
எறும்புக்கும் கூட பசியாற்றும் வகையில் அரிசிமாக்கோலம் இட்ட வழக்கம் போய், மொக்குமாவு கோலம்
போட தலைப்பட்டது நம் தலைமுறை.அடுத்த தலைமுரைக்கோ கோலமே தெரியாது..
தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு தர்மகாரியங்கள் செய்தார்கள் முன்பு. இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில்,தேவைகள் அதிகரித்து,பற்றாக்குறை பட்ஜெட்டில் தானமேது?தர்மமேது??

அப்பாதுரை சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் மோகன்ஜி. எங்கள் வீட்டிலும் அப்படித்தான். மிகுந்து போனதைக் கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை சாப்பிடவோ கையோடு எடுத்துக்கொண்டு போகவோ வற்புறுத்த வேறு செய்வோம்! இப்போது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.
>>மேலும் உபயோகிக்க வேண்டாம் எனத் தோன்றிய பின்னரே பிச்சைக் காரனுக்கோ, வேலை செய்பவர்களுக்கோ தருவோர்

சிவகுமாரன் சொன்னது…

"தராதிவா"- முதலில் குழம்பித்தான் போனேன். விளக்கம் அருமை.ஆர்வமாய் படித்துக் கொண்டிருக்கிறேன் தொடரை.
"தனக்கு மிஞ்சினா தான் தானமும் தர்மமும்" என்று ஒரு சொலவடை உண்டு ஊர்ப்பக்கம் .மிஞ்சுதல் என்பதற்கு வீணாய்ப் போதல் என்ற பொருளிலும், சொல்வார்கள்

அப்பாதுரை சொன்னது…

'தனக்கு மிஞ்சித் தானம்' என்பது யதார்த்தம். உண்மைதான்.

தமிழ் சொன்னது…

படிக்க‌
படிக்க‌

பல வித எண்ண அலைகள்

geethasmbsvm6 சொன்னது…

அப்படியா? இம்மாதிரியான ஒரு கேவலமான தானத்தையா செய்தான்? எனில் இதில் பயனில்லை தான். பயனற்ற தானத்தால் பயன் ஏதும் இல்லைதான்.

உணவை நம் வீடுகளில் அதிதி வரவிற்காகவே வைப்பார்கள்; ஒருவேளை திடீரென யாரேனும் வந்துவிட்டால்?? திடீர் விருந்தாளிகள் வரும் அனுபவம் எனக்கு நிறைய உண்டு. கணக்காகச் சமைக்கவும் முடியாது. சமைத்து வைத்தாலும் மீந்துவிடும். சில சமயம் திடீர் விருந்தாளிகளுக்கு அக்கம்பக்கம் வாங்கிச் சமாளித்ததும் உண்டு.

அப்பாதுரை சொன்னது…

தானம் கொடுக்கிறவர்களுக்கு அது மோசமான தானமா இல்லையா என்று தெரியாது - தெரிந்தால் கொடுக்க மாட்டார்கள் :).

பொதுவாகவே இந்தப் பழக்கம் உண்டு. எங்கள் வீட்டில் பணிசெய்ய வரும் பெண்ணுக்கு காபி கொடுப்பார்கள். பத்து முறை இறக்கின காபிப்பொடியில தண்ணி விட்டு இறக்கி கொடுமையான டிகாக்ஷன்ல பாலை இன்னும் தண்ணி கலந்து ஏதோ காபினு கொடுப்பாங்க. அந்த வேலைக்காரம்மா ஏதாவது சொன்னா இன்னும் மோசமாயிடும். 'நாம இந்தமாதிரி காபி குடிப்போமா?' என்று எங்க வீட்டுல யாரும் யோசிச்சதே இல்லை. அதே போல சாப்பாடு கொடுத்தாலும் அதை பாத்ரூம் ஓரமா ஒதுக்கி வச்சு பாக்கவே பாவமா இருக்கும்.. ஆனா கொடுக்குற எங்க வீட்டுக்காரங்களுக்கு அது புண்ணிய காரியம், தானமாகத் தோன்றியது. 'நாம் அதை சாப்பிடுவோமா?' என்று ஒரு தடவை கூட எங்கள் வீட்டில் யாரும் நினைத்ததில்லை.

'கொடுப்பவரெல்லாம் மேலாவார்' என்பதை நம்மில் பெரும்பாலோர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

geethasmbsvm6 சொன்னது…

சரியாப் போச்சு போங்க, எங்க வீட்டுக் காஃபிக்காகவும், சாம்பாருக்காகவுமே எங்க வீட்டிலே வேலை செய்யறதுக்குப் போட்டி போடறாங்க. :))))))) மாமி வீட்டிலே நல்லாக் கொடுப்பாங்கனு தான் எல்லாரும் சொல்வாங்க. அதோட நாங்க கொடுக்கும் துணிகளுக்காகவும். இவை தனி. தீபாவளி சமயம் ஒரு மாதச் சம்பளத்தை போனஸாகக் கொடுப்போம்.
அதே சமயம் வேலைக்கு ஆளே இல்லாமலும் நாங்களே செய்து கொள்ளும்படியும் நேர்ந்திருக்கிறது. எல்லாமே சவாலே சமாளி தானே!