2
பொன்மா மறைமண்ணும் இன்னும் பலவீந்தும்
பின்னாள் பெறுவானோ பேரின்பம்? என்பிலாப்
பஞ்சாமோ பெற்றவன் ஈகை? பரிதவித்து
அஞ்சும் நசிகேதன் நெஞ்சு.
பின்னாள் பெறுவானோ பேரின்பம்? என்பிலாப்
பஞ்சாமோ பெற்றவன் ஈகை? பரிதவித்து
அஞ்சும் நசிகேதன் நெஞ்சு.
    பொன், நிலம், விலங்குகள்*, கல்வி* எனும் மண்ணுலகச் செல்வங்களான நான்கினையும் இன்னும் பல செல்வங்களையும் வேள்வித் தியாகமாகவும் தானமாகவும் வழங்கிய அரசன், பிற்காலத்தில் பெற எண்ணும் பேறுகளைப் பெற மாட்டானோ? பஞ்சடைத்த* எலும்பற்றப் பொருள்போல், தன்னைப் பெற்றவனின் தருமங்கள் பயனிழந்து போகுமோ என்று தவித்தது நசிகேதனின் மனம்.
*மா என்பது குதிரை, யானை, எருது, கழுதை போன்ற விலங்குகளைக் குறிக்கும் பொதுச்சொல். இலக்குமி எனப் பசுவுக்கு ஆகிவரும். வீட்டுக் கால்நடை மற்றும் படை விலங்குகளைத் தானமாகவும் பலியாகவும் கொடுப்பது யாக வழக்கம்.
மறை என்றால் கல்வி. இங்கே வேத அறிவு, மற்றும் வழிபாட்டுப் பயன்களைக் குறிக்கிறது. கல்விப்பயன்களைத் தானமாக வழங்குவதும் வேள்வித்தீயில் இடுவதும் யாக வழக்கம்.
'பஞ்சடைத்த பொம்மை' என்று ராமாயணத்திலும் வருகிறது. அந்த காலத்திலேயே பஞ்சைப் பிரித்து பொம்மையில் திணிக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் போல் நம் முன்னோர்.
நாற்பேறு: விண்ணுலகச் செல்வங்கள் நான்கு - இந்திரபதவி, தேவமகளிர் பணிவிடை, சொர்க்க வாழ்வு, இறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் நான்கு - பொன், பசு (விலங்கு), மண், அறிவு. மண்ணுலகப் பேறு, நன்மக்கள்; விண்ணுலகப் பேறு, பிறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும் நன்மக்கள் பெறத் தவம் செய்திருக்க வேண்டும்; விண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும், பிறவாமைக்குத் தவமிருக்க வேண்டும். வசதிக்காக நான் பேறு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும், பேறு-செல்வம் இரண்டுக்கும் மிதமான வேறுபாடு உண்டு: செல்வத்தை சேர்க்க, வாங்க, பெற முடியும்; பேறு பெற உழைப்பும் நல்லெண்ணமும் வேண்டும்.
    நேர்வழிப் பயணத்தின் கடுமையும் சோர்வும் தெரிந்தவுடன், அதுவரை மறைந்திருந்த குறுக்கு வழிகள் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படத் தொடங்குகின்றன. குறுக்கு வழியில் செல்வது தவறா இல்லையா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். பல சமயம் எது குறுக்கு வழி, எது நேர்வழி என்றே தெரியாமல் போய்விடுகிறது. இலக்கே கேள்விக்குறியாகும் பொழுது முயற்சியும் பயணமும் கேலிக்குரியதாகி விடுகிறது. வாழ்விலே சரியான இலக்கை அறிந்து தெளியும் பக்குவம் பெற, ஏதாவது பயிற்சி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பிறர் துன்பத்தையும் ஏமாற்றத்தையும் காணப் பொறாத நல்மனங்கள் எங்கேயும் என்றைக்கும் உண்டு. சிறுபான்மையானாலும், மகான்களின் இலக்கணம் அத்தகைய மனது. இன்ப-துன்ப, சுக-துக்க உணர்வுகளைக் கடந்த நிலையில், பிறர்நல மற்றும் பொதுநல எண்ணங்கள் அலையும் மனது. சிலருக்கு பிறப்பிலேயே அந்தப் பக்குவம் கிடைக்கிறது. பலருக்கு அனுபவங்களால் வளர்கிறது. நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா?
    நசிகேதன் இன்னும் பால் மணம் மாறாச் சிறுவன். மற்றச் சிறார்போல் அவனும் ஆடு, மாடு, புலி, யானை என்று பஞ்சடைத்த பொம்மைகளுடன் விளையாடியிருப்பான். அவை பஞ்சடைத்த பொம்மைகள், உயிரில்லாத, எலும்பில்லாத பொம்மைகள் எனப் புரிந்தவன். பொம்மையின் பயன்கள் நீடிக்காதென்ற அறிவு அவனுக்கு இருந்தது. பஞ்சுப் பொம்மைத் தன்மையினவோ என்று நசிகேதன் அஞ்சும்படி, பயனிலாத் தானம் புரிந்தானா வாசன்? குறுக்கு வழியில் பெரும்பேறு அடைய நினைத்தானா? மன்னனின் பேராசையைப் பற்றி மைந்தனுக்கு என்ன கவலை? தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா? இல்லை. 'பெற்றவன் பேறு பெறாது ஏமாறுவானோ?' என்றஞ்சியப் பிஞ்சு மனதுள் தன்னலமில்லை. பின், அய்யனின் ஈகையில் என்ன குறை கண்டான் இளவல்? 'ஏமாற்றாதே ஏமாறாதே' எனும் ஏமாற்றச் செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன்? அப்படி என்ன கவனித்தான்? ►
24 கருத்துகள்:
வித்தியாசமான பதிவு
//நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா//
தூங்கும்போது இருக்கிறோமே..!
எதையும் எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்யாமலிருந்தாலே போதுமே...பிரார்த்தனைகள் உட்பட...
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் துரை சார். "பேறு- என்பிலா " என்று வரக் கூடாதே.
இப்படி மாற்றலாமா பாருங்கள்.
"பொன்மா மறைமண்ணும் இன்னும் பலவீந்தும்
பின்னாள் பெறானோ பெரும்பேறு ? -என்பிலாப்
பஞ்சாமோ பெற்றவன் ஈகை? பரிதவித்து
அஞ்சும் நசிகேதன் நெஞ்சு."
வருக, KANA VARO, ஸ்ரீராம்.
ஸ்ரீராம்: தூக்கத்துல நடப்பீங்களா? :)
திருத்திவிட்டேன் சிவகுமாரன்.
தவறுக்கு வருந்துகிறேன்; வருகைக்கும் தவறைச் சுட்டியதற்கும் மிக்க நன்றி. (பெறுவானோவைத் தக்க வைக்க வேண்டியிருக்கிறது:)
அருமையான விளக்கம்!
பாதை மாறினால் என்ன, சேர வேண்டிய இடத்தில் சேர்வதுதான் முக்கியம்.
//பல சமயம் எது குறுக்கு வழி, எது நேர்வழி என்றே தெரியாமல் போய்விடுகிறது.// உண்மைதான்.
// தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா?// அந்த ஞான குழந்தை மனதில் இந்த எண்ணம் சொல்லிகொடுத்தாலும் வராது.
பொருளின் விளக்கத்தின் எழுத்து வடிவம் தெளிவாக இல்லை. இதை சென்ற பதிவிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். முடிந்தால் தயவு செய்து மாற்றுங்கள்.
// எலும்பிலாப் பஞ்சாமோ // இறங்கி வரவேண்டாம்.. என்பிலா ன்னே இருக்கலாம்..அய்யனிடம் கற்றவை கொஞ்சம் மிச்சம் இருக்கிறது... பொன்,மண்,இன், பின் இவையோடு ``என்`` நன்றாகவே உட்காரும்.
(விட மாட்டங்க போல ப ..வும் ..சி..யும் – அப்பாஜி )
மேலுள்ள வார்த்தை விளையாட்டு தாண்டி அவ்வுவமையின் ஆழ்ந்த கருத்தை உள் வாங்க உணவு இடைவேளை பத்தாது... இரவு வர்றேன்
மறுபடியும் கோட்டை விட்டேன் போலிருக்கிறது. அவசரத்தில் நேரும் அசிங்கம். தளை தவறியது திருத்தினால் வடிவத்திலேயே குறை வந்துவிட்டது. சுட்டியதற்கு நன்றி பத்மநாபன். (நசிகேத வெண்பா எழுதி முடிப்பதற்குள் ஒரு வழியாக வெண்பா எழுதக் கற்றுக் கொண்டு விடுவேன் போலிருக்கிறது. அடுத்து ஏதாவது காதல் காவியம் எழுத உபயோகமாக இருக்கும் :-)
தூங்குவதும் தன்னலம் கருதிதானே ஸ்ரீராம்? நம் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வும் வலுவும் சேர்க்கவே உறங்குகிறோம் அல்லவா?
'பெறுவானோ பேறெல்லாம்' - இந்தத் திருத்தத்தில் ஓசை நயம் சரியாக வரவில்லை போல் தோன்றுகிறது. பெறு பேறு என்று கொஞ்சம் விளையாடிப் பார்த்தால் தடுக்கி விழுந்து மூக்கு உடைகிறது.
சிவகுமாரன்: உங்கள் திருத்தத்தை அப்படியே உபயோகித்திருக்கிறேன்; நன்றி.
//வாழ்விலே சரியான இலக்கை அறிந்து தெளியும் பக்குவம் பெற, ஏதாவது பயிற்சி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. //
இலக்கு நோக்கி போவது போய்க்கொண்டிருக்கிறது..நம் மாய , மருள் சூழ்ந்த மனதிற்கு இலக்கு இன்னமும் பிடிபடவில்லை...பல இலக்குகள் உருவாக்கிகொண்டு ஒரு இடத்திலேயே சுற்றுகிறது.
//நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா? //
தான் என்பது எது ? நலம் என்பதன் எல்லை எது ? இது புரியும் வரை சாத்தியம் இல்லை..
//செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன் //
பால்மணத்தின் பக்குவம் வியக்க வைக்கிறது...
நசிகேதமும் கடோவும் படிக்க படிக்க வியப்பும் எதிர்பார்ப்பும் சுகமாக தொடர்கிறது...
உங்கள் கமெந்ட் இப்போது தான் புரிந்தது meenakshi; நான் பயன்படுத்தும் firefox உலாவியில் ஒரு பிரச்சினையும் இல்லை; internet explorerல் பார்த்தால் font எல்லாமே தாறுமாறாக இருக்கிறது - அதைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கொஞ்சம் சீர்படுத்தியிருக்கிறேன் - இப்போது பரவாயில்லையா சொல்லுங்கள். சுட்டியதற்கு நன்றி.
தேவையில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டோமோ என்று கொஞ்சம் பயந்து தான் போனேன். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி துரை சார்.
இப்பொழுது தெளிவாக இருக்கிறது. நன்றி!
சிவகுமாரன், தவறைச் சுட்டிக்காட்டுவதோடு நிற்காமல் திருத்தமும் சொன்ன பக்குவத்திற்கு உங்களுக்கு நான் தான் கடமைப்பட்டிருக்கிறேன்.. தொடர்ந்து வருகை தந்து மனதில் பட்டதைப் பிட்டு வைக்க வேண்டுகிறேன். (இன்னொரு விஷயம்: எனக்கு எருமை மாட்டுத்தோல் இருப்பதாக சின்ன வயதிலிருந்தே என் வீட்டிலும் வெளியிலும் சொல்வார்கள் :)
//நம் மாய , மருள் சூழ்ந்த மனதிற்கு இலக்கு இன்னமும் பிடிபடவில்லை...பல இலக்குகள் உருவாக்கிகொண்டு ஒரு இடத்திலேயே சுற்றுகிறது.//
அப்பாச்சித்தரே! நயம்! நயம்!
சிவகுமாரன் ! நன்று! நன்று!!
தொடர்கிறேன்
ஒரு சின்ன யோசனை. தவறாகத் தோன்றினால் மன்னித்து விடுங்கள்.
வடமொழிப் பெயர்கள் வரும் இடத்தில் அதை ஆங்கிலத்தில் அடைப்புக் குறிக்குள் கொடுத்தால் என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உதாரணம் Nachiketan vs Nasiketan. சரியான முறையில் உச்சரிக்க இது உதவும்.
ஏதாவது தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்.
//தொடர்ந்து வருகை தந்து மனதில் பட்டதைப் 'பிட்டு' வைக்க வேண்டுகிறேன்.//
bit அடிக்கும் பழக்கம் போகலையா?
பின்னூட்டங்களே அசத்துகின்றன.
உண்மைதான். ஒரு நாளின் சில மணிகளேனும் தன்னலமற்று நடக்க முயற்சிக்கலாம் தான். ஆனால் பிறர் நலம் பார்ப்பதும் ஒருவகைத் தன்னலம் தானோ? தன் மகிழ்ச்சிக்காகத் தானே பிறர் நலமும் பார்க்க வேண்டியுள்ளது.
இன்ப-துன்ப, சுக-துக்க உணர்வுகளைக் கடந்தவர்கள் வழி தனி. நம் போன்றோருக்கு??? சேவை செய்வதும் ஒருவகைத் தன்னலமே.
விஸ்தாரமாய் யாகம் செய்து பெறர்கரிய தானங்களையும் கொடுத்துப் பெரியதொரு பேறு பெற நினைக்கிறான் தகப்பன்; அது தவறு எனப் பட்டிருக்குமோ நசிகேதன் மனதில். ஏனெனில் அவன் அடைய விரும்பியவை அத்தகையவை. சொர்க்கவாசம் சரி, இந்திரபதவியும் சரி, தேவமாதர் பணிவிடையும் சரி ஏற்கலாம். ஆனால் தேவாதிதேவர்களே புண்யத்தின் பலன் இருக்கும்வரையில் சொர்க்க வாசம் அனுபவித்துவிட்டு மீண்டும் பிறக்கையிலே இவன் எப்படி பிறவாமை வேண்டினான்? பிறவாமை என்னும் பேறு அவ்வளவு எளிதில் கிட்டுமா?
தன் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் பார்ப்பது தன்னலம். பிறர் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் பார்க்கவேண்டும். சரியே. (தன் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் பார்க்க முடியுமா என்ன? அதற்குப் பெயர் கடமை என்று நினைக்கிறேன் :)
தன் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் என்பது இங்கே ஒருத்தருக்கு ஒரு உதவியோ அல்லது வேறு ஏதானும் அவங்க தேவைக்கோ அல்லது அவங்க கேட்காமலேயே நாம ஏதேனும் செய்து அதன் மூலம் அவங்க அடையும் மகிழ்ச்சியோ நமக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இல்லையா ? அப்போக் கடமை எங்கிருந்து வருகிறது? பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்குச் செய்யறதை வேணாக் கடமைனு சொல்லலாமோ என்னமோ!
என்னைப் பொறுத்தவரைக்கும் பசிக்குச் சாப்பாடு போட்டாலே மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். இதை உணர்ந்திருக்கேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று.
கருத்துரையிடுக