1
விண்மேவும் நாற்பேறும் வேண்டிய வாசரசன்
கண்போலுங் கிள்ளை நசிகேதன் - மண்ணரசன்
சேர்த்திருந்த நாற்பேறும் வேள்வியில் வீசியதைப்
பார்த்திருந்தான் பால்மணத் தான்.
கண்போலுங் கிள்ளை நசிகேதன் - மண்ணரசன்
சேர்த்திருந்த நாற்பேறும் வேள்வியில் வீசியதைப்
பார்த்திருந்தான் பால்மணத் தான்.
    வாசன்* என்றொரு அரசன், தன் மகன் நசிகேதனைக் கண்போல் வளர்த்து வந்தான். சொர்க்கவாசம், இந்திரபதவி, தேவமாதர் பணிவிடை, இறவாமை எனும் நால்வகை விண்ணுலகச் செல்வங்களை அடைய விரும்பிய வாசன், மண்ணிலே தான் சேர்த்த நான்கு வகைச் செல்வங்களையும் அண்டவாகை* எனும் வேள்வியிலே வழங்கிக் கொண்டிருந்தான். இன்னும் பால்மணம் மாறாப் பசும்பிள்ளையான நசிகேதன், தன் தந்தையும் அரசனுமான வாசனின் வள்ளன்மையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
*வாசன்: கடோபனிஷதில் அரசனின் பெயர் வாஜஸ்ரவஸ்
அண்டவாகை: விஸ்வஜித் எனும் யாகம்
பால்மணத்தான்: குழந்தை, சிறுபிள்ளை
    ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாட்டை நம்மில் எத்தனை பேர் அறிந்து நடக்கிறோம்? நாமறிந்த இன்றையத் தேவைகள் தீர ஆசைப்படலாம். கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படும் நாளைய தேவைகளைத் தீர்த்துக் கொள்ள ஆசைப்படலாம். அறிவுக்குப் புலப்படும் எதிர்காலத் தேவைகளைத் தீர்க்க ஆசைப்படுவதும் முறையே. ஆனால், அறிவுக்கும் புலப்படாதத் தொலைகாலத் தேவைகளை, அனுமானங்களை, தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவது முறையாகுமா?
    உயிருள்ள போது இந்த உலகத்தில் சுகம் பெற நினைப்போர் எளியோர். இறந்தபின் விண்ணுலகிலும் சுகம் அனுபவிக்க நினைத்தான் மன்னன். சொர்க்க சுகம் அனுபவிக்கும் ஆசை முறையென்றே கொண்டாலும், அது நிறைவேற இவ்வுலகச் சொத்துக்களை, இல்லாதாருக்கு பயன்படக்கூடிய சொத்துக்களை, வேள்வியிலிடுவதும் தானம் தருவதும் முறையா? பொறுப்புள்ள மன்னனின், ஒரு குடும்பத் தலைவனின், அறிவுள்ள மனிதனின் செயலாகுமா? தந்தையின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன் மனதில் என்ன ஓடியது? வள்ளலென்று நினைத்தானா, வேடமென்று நினைத்தானா? ►
27 கருத்துகள்:
கவிதையில் வார்த்தை கோர்வை ரசிக்க வைத்தது ..
விஸ்வ ஜித் – அண்டவாகை ...வட மொழி புரிய ஆரம்பிக்கிறது..
ஆசை , பேராசை அழகாக வேறுபடுத்த ப்பட்டுள்ளது...
தேவையை ஒட்டி வருவது ஆசை...இந்த ஆசை தேவையான ஆசை ..இந்த ஆசை தான் அசைவிற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.
தேவையயை தா...ண்டி வருவது பேராசை ..அழிவிற்கு காரணமாய் இருக்கிறது ...
பால் மணப்பிள்ளையின் பார்வையை அறிய ஆவல் கொள்கிறது
நல்லாப் புரியும்படி இருக்கு உங்கள் விளக்கம்.
தொடருங்கள்.
பால்மணப் பிள்ளைக்கு பெரியவர் போடும் வேஷம் எல்லாம் புரியுமா! அப்பா நடத்தும் அந்த மாபெரும் வேள்வியை வேடிக்கையாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பான். வெண்பாவும், விளக்கமும் அருமை. தொடருங்கள்!
//சில நாட்களுக்கு முன் மறைந்த நண்பர் அரசனுக்கு, இது என் உயிரிலிருந்து வரும் சிறிய அஞ்சலி. நல்ல ஆசிரியனுக்கு ஒரு மோசமான மாணவனின் மனந்திருந்தியக் காணிக்கை.//
துரை, துக்ககரமான செய்தி தான். ஸ்ரீலங்காவில் இருந்த அவருக்கு என்னவாயிற்று ? ஏதும் உடம்பு திடீரென்று சரியில்லையா ?
பூத்துரிகையில் ப்ளோகில் அவரின் உதவியால் ஏதோ நானும் ஐந்து பத்து கவிதைகள், மூன்று நான்கு கதைகள் எழுத முடிந்தது. அந்தவகையில் அவரும் என் எழுத்து திறமையை வளர்த்தவர்.
ஒரு சின்ன சந்தேகம். தானம் கொடுப்பது எப்படி தப்பாகும்?
>>>அது நிறைவேற இவ்வுலகச் சொத்துக்களை, இல்லாதாருக்கு பயன்படக்கூடிய சொத்துக்களை, வேள்வியிலிடுவதும் தானம் தருவதும் முறையா?
ஒரு கேள்வி: பூவுலகத்தில் நால்வகை செல்வங்கள் யாவை?
நன்று.. மிக நன்று!! நெருடாத வெண்பா.
‘விஸ்வஜித்’ யாகத்துக்கு அண்டவாகை என்று அழகான பெயரோடு!
அடடா.. பின் பாட்டு பாடறேன்னு சொன்னேன் இல்லை?
வாஜஸ்ரவஸ் என்ற பெயருக்கு “அன்னதானம் செய்து கீர்த்தி பெற்றவன்’’ என்று அர்த்தம். இந்த அரசனுக்கு ‘ஒத்தாலகன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு.
விஸ்வஜித் யாகத்தின் போது, அதை மேற்கொள்பவர், தன்னுடைய உடமைகள் அனைத்தையும் ‘ஒரே நாளில்’ தானமாய்க் கொடுத்திட வேண்டும் என்பது நியதி.
// நசிகேதன், தன் தந்தையும் அரசனுமான வாசனின் வள்ளன்மையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.//
கடோபநிஷ்தம் இங்கே நசிகேதன் “சிரத்தையுடன்” என்ற பதத்தை உபயோகிக்கிறது. இதற்குப் பொருள் நம்பிக்கை, மற்றும் தன்னம்பிக்கையாகும். நசிகேதன் சத்தியத்தில், தர்மத்தில்,நீதிநூல்களில் கொண்ட நம்பிக்கையின் ஊடாக,
தந்தை செய்யும் யாகத்தின் தன்மையையும் , முறையையும் , அது செய்யப்பட வேண்டிய விதத்தில் செய்கிறாரா என்றும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.
மனிதனின் ஆசைக்கு அளவுண்டோ? இம்மையிலும்,மறுமையிலும், ஏழேழ் பிறப்பிலும் தான் எல்லாம் பெற வேண்டும் என்பதே மனிதனின் ஓயாத ஆசை.
ஆசை என்றும் திருப்தியுருவதில்லை.
“ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று மேலோர் ஆசையை விடச் சொல்லி தான் வலியுறுத்துகிறார்கள்.
எனக்கென்னவோ ஆசை ,பேராசை என்ற பாகுபாடு இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக நிறைவேறிய ஆசை,நிறைவேறாத ஆசை என்றே பிரிக்க வேண்டும்.
என்னமோ போங்க..
”ஆசை,தோசை,அப்பளாம்,வடை”
நன்றி பத்மநாபன், துளசி கோபால்,meenakshi, சாய், geetha santhanam, மோகன்ஜி, ...
நல்ல கருத்து, மோகன்ஜி. நசிகேதன் ஒன்பது வயதுக்கும் குறைந்த சிறுவன். அவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். 'யாகத்தின் தன்மையையும், முறையையும், அது செய்யப்பட வேண்டிய விதத்தில் செய்கிறாரா' என்பதையும் அவனால் தீர்மானிக்க முடியாத வயது. எனினும், தொட்டால் சுடும் தீ என்ற அளவில் காரண-காரிய-பலன் பற்றிய அறிவு அவனுக்குத் தெரிந்திருந்தது.
ஆசைக்கும் பேராசைக்கும் வேறுபாடு இருக்கிறது. நானும் என் குடும்பமும் நன்றாக வாழவேண்டும் என்பது ஆசை. நானும் என் குடும்பமும் மட்டும் நன்றாக வாழவேண்டும் என்பது அரசியல் :)
பேராசைக்குத் தமிழில் இன்னொரு சொல் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் wish vs. greed, want vs.need தலைப்பில் பெரும் தத்துவ விளக்கங்கள் கிடைக்கின்றன.
நல்ல கேள்வி, கீதா; அடுத்தவர் உபயோகத்திற்கு பயனுள்ள தானம் கொடுப்பதில் தவறில்லை; தன் பலனைக் கருதி தானம் தருவது தவறா என்பதே கேள்வி. உதாரணமாக, எனக்கு சொர்க்கம் கிடைக்கணும், இந்தா சைக்கிள் என்று நொண்டிக்குத் தானம் செய்தால் அது சரியா? தனக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவர் செலவில் குருடருக்குக் கலர் டிவி கொடுப்பது தானமாகுமா?
அடுத்த கேள்விக்கு அடுத்த பாடலில் பதில்.
'விரலுக்குத் தகுந்த வீக்கம்' என்பது ஆசை-பேராசையின் எளிய விளக்கம் மோகன்ஜி. பத்மநாபன் சொல்வது போல் ஆசை அவசியம். அதைக் கட்டுக்குள் வைக்கும் பக்குவமும் அவசியம். ஆசை இல்லாவிட்டால் பல மனித இயக்கங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆசையின் தாக்கத்தையும் வீச்சையும் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று காந்தி ஆசைப்பட்டார். தீபாவளிக்குப் பட்டாசு வேண்டும் என்று ஏழைச் சிறுவன் ஆசைப்பட்டான். நல்ல மதிப்பெண் வாங்கி கல்லூரியில் சேரவேண்டும் என்று மாணவி ஆசைப்பட்டாள். ஆசை குறிக்கோளின் விதை. என்ன சொல்கிறீர்கள்?
//ஆசை குறிக்கோளின் விதை//
உண்மை. தொடருங்கள். தொடர்கிறேன்...
நன்றி, பத்மநாபன். முடிந்த வரையில் நடைமுறைச் சொற்களையே பயன்படுத்திப் பாட்டெழுத முயற்சிக்கிறேன். (என் தமிழறிவு அவ்வளவுதான் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கம் :)
அன்பு அப்பாஜி! நசிகேதனுக்கு சிறிய பிராயம் எனினும்,
அவனுக்கு செறிந்த ஞானம் உண்டென்பது கடோபநிஷதின் ஆதாரமான, அடிப்படையான வெளிப்பாடு. இந்தக் கருத்தை இல்லையென்று கொண்டால், மேற்கொண்டு நசிகேதனின் நடவடிக்கைகளும், யமனிடம் அவன் மேற்கொள்ளும் உரையாடல்களையும் குழந்தையின் பேச்சா இது? என்று
மறுக்கவேண்டி வரும். மேலும் தன் தந்தை யாகத்தினை மேற்கொள்ளும் முறையின் பிறழ்வுகளைக் கண்டு,தன் மறுப்பை பிரதிபலிக்கும் வண்ணம் “என்னை யாருக்குத் தரப் போகிறீர்கள்” என்கிறான்..
கதோபநிஷதம் வேதாந்தத்தின் உயரிய வெளிப்பாடு. சிறந்த மாணாக்கனாய் நசிகேதனையும்,உயரிய ஆசிரியனாய் யமனையும்
கதாபாத்திரங்களாக்கி, குரு சிஷ்ய உறவையும், இம்மை
மறுமைகளின் ரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது.
நசிகேதனை சுயகட்டுப்பாட்டிற்கும், சத்தியத்தின் மீதான நம்பிக்கைக்குமான குறியீடாக கொள்கிறது. அவனைக் குமாரன் என்றபடியால், மாணாக்கனுக்கு தேவையான தூய்மை, துணிவு, தீராத்தேடல், சக்தி, உந்துதல் நிரம்பிய குமாரபருவம் போன்றவை அந்த குறியீட்டிற்கு லட்சணங்கள் ஆயின
எமனோ வாழ்வின் முன்னமும், முடிவின் பின்னரும் அறிந்த அறிவு ஊற்றான குருவுக்கு குறியீடாகிறான்
எனவே நசிகேதனை பால்மணம் மாறா பச்சிளம் பாலகன் என்று கொஞ்ச வேண்டாம். அது ஞானக் குழந்தை.
குறைவில்லா உங்க தமிழுக்கே வெட்கப்படனும்னா...நாங்கள் எல்லாம் முக்காடல்ல போட்டுக்கணும்...
நடைமுறைச்சொல்ல பயன்படுத்தி இப்படி பாட்டு கிடைக்கிறது தான் கடினம் ..அகராதி இல்லாமல் புரிகிறது...தொடர வாழ்த்துக்கள்.
// நிறைவேறிய ஆசை,நிறைவேறாத ஆசை // இந்த தத்துவம் நல்லாத்தான் இருக்கு மோகன்ஜி.. ஆனா தேவையான ஆசையவே அறுக்கச்சொல்வது எப்படி?
பேராசை எனும் கொடும் தன்னலம் என்ற ஒன்று இருக்கவே இருக்கிறது.
//ஆசை குறிக்கோளின் விதை // அதை மலர வைப்பது தேவையும் முயற்சியும்.
மோகன்ஜி, உங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது. சிறுபிள்ளை அவ்வாறு பேசமுடியாது என்பதால், வடமொழியில் 'ஆழ்ந்த நம்பிக்கை - விவேகம் அவன் மனதில் குடியேறியது' என்று மிகச் சாதுர்யமாகச் சேர்த்திருக்கிறார்கள்; 'ஸ்ரத்தா' என்றால் கேள்விக்கப்பாற்பட்ட ஆழ்ந்த நம்பிக்கை - தமிழில் இதற்கு இணையான சொல் இருக்கிறதா தெரியவில்லை - நம்பிக்கை/விவேகம் குடியேறியதால் தான் ஊனக் குழந்தை ஞானக் குழந்தையானது - என்று அறிகிறேன். 'ஸ்ரத்தை'யின் பிடியில் பேசும் பொழுதெல்லாம் நசிகேதன் வயதில் மட்டுமே சிறியவன். மற்ற குழந்தைகள் போல் தான் நசிகேதனும்' என்ற 'balance' கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எமனுடன் பேசும் பொழுது 'சின்னக் குழந்தை பேசும் பேச்சா?' என்று நீங்கள் சொல்வது போல் கேட்கத் தோன்றும் - there is a profound difference - அது தான் கடோவின் சிறப்பு. எமனுடன் பேசும் சிறுவனின் பேச்சு, சிறுவனின் பேச்சல்ல. எமனகம் செல்வது சிறுவனின் 'தோற்றம்' மட்டுமே. (தோற்றம் உடல் அல்ல என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்). எமனுடன் பேசுவது, 'வெளி, ஆத்மா, soul - ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிகளின் மொத்த ஞானம், பட்டறிவு' என்ற ஆழத்தை சிறுவன் என்ற தட்டைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள் கடோ எழுதியவர்கள். 'சிறுவன் பேச்சு' என்று பூசியதால் அழகாக இருக்கிறது. எண்ணிக்கையில்லாத அறிவு பேசியது என்பதில் வசீகரம் இல்லையே?
நசிகேதன் தந்தையிடம் கேட்ட கேள்வியின் பின்னணி 'யாகப் பிறழ்வு' அல்ல; மாறாக, நசிகேதன் நச்சரித்த காரணம் ஒரு மிக உயர்ந்த பண்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன். சொல்லும் வரை சஸ்பென்ஸ் :). அந்தப் பண்பை குழந்தைகளிடம் காணமுடியும் - அறிவு வளர்ந்தவுடன் தொலைத்து விடுகிறோம். 'அம்மாவுக்கு ஒரு முத்தம் தாடா' என்று தாய் கேட்டதும் கொஞ்சம் கூடச் சிந்திக்காமல் எந்த வித பதிலெதிர்பார்ப்பும் இல்லாமல், முத்தம் தர விழையும் குழந்தையின் பண்பு. முத்தம் பெற்ற தாயின் மகிழ்ச்சியில் 'கொடுத்த' தானும் கலந்து கொள்ளும் பண்பு. இதற்கு ஞானம் தேவையில்லை - இருங்கள், ஹ்ம்ம்ம், ஞானம் தேவையோ? அதைத் தான் வளர்ந்ததும் இழந்தோமோ?
எப்படி ஆய்ந்தாலும், நசிகேதன் சிறுபிள்ளை தான் என்பது கடோவின் கடைசியில் புரிந்து விடுகிறதே? வயதுக்கு மீறிய செய்கைகள் எல்லாமே 'ஸ்ரத்தை'யின் பிடியில் இருக்கும் பொழுது நடப்பதாகச் சொல்லியிருப்பது நல்ல உத்தி - என்று நினைக்கிறேன்.
முதலில் கீதா மேடம் கேட்ட தானம் பற்றி...
ப்ருஹுதாரன்யக உபநிஷத்தில் ஒரு சின்ன கதை.
தேவர்கள்,மானுடர்கள்,அசுரர்கள் ஒருமுறை பிரம்மாவை தனித்தனியாக சந்தித்து, உபதேசம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்களாம்.
பிரம்மா, முதலில் தேவர்களுக்கு “த” என்ற வார்த்தையை சொல்லி, உபதேசம் புரிந்ததா? எனக் கேட்டாராம். தமது பலவீனங்களை எண்ணி, தேவர்களும் அவர் ‘தாம்யத’ என்று சொன்னதாய்க் கொண்டு “புரிந்தது” என்றார்கள். ‘தமம்’ என்றால் புலனடக்கம் என்று பொருள். தேவர்கள் புலனடக்கம் இல்லாது மனம்போன போக்கில் இருப்பர் ஆதலால், உபதேசமாய்
புலனடக்கம் சொல்லப்பட்டது என்று கொண்டார்கள்.
மனிதர்கள் சென்ற போது அதே “த” உபதேசமாயிற்று. மனிதர்கள் கொடுப்பதற்கு யோசிப்பவர்கள் ஆதலால், ‘த’வுக்கு ‘தத்த’ என்று தமது பலவீனத்தை உத்தேசித்து சொல்லப்பட்டதாய்க் கொண்டார்கள். ‘தத்த’ என்றால் தானம் கொடுத்தல்.
அவ்வாறே, அசுரர்களுக்கும் உபதேசிக்கப்பட்ட அதே ‘த’வை தம்மிடம் இல்லாத ‘தயத்வம்’ என்று புரிந்து கொண்டனர். ‘தயத்வம்’ என்றால் கருணையோடு இருங்கள் என்று அர்த்தம்.
தானம் உயர்ந்த தர்மம். வலது கை போடுப்பதை இடது கை அறியாமல் செய்யப் பட வேண்டியது. ஈவது விலக்கேல். தானம் செய்பவன் நோக்கம் ஏதாகிலும் இல்லாதவனுக்கு அது பெரும் பயன் தரும் அல்லவா? .நம்மால் இயன்ற வரையில், பாத்திரமறிந்து இயன்றதை தருவது மோட்சம் தருமோ என்னவோ ,கண்டிப்பாக மனத்திருப்தியை அளிக்கும்.
‘ஈத்துவக்கும் இன்பம்’ பெறுவோம் மேடம்!
நன்றி பத்மநாபன். (கொஞ்சம் கருத்தாழமிக்க பாடல்கள் வந்ததும் இப்படிச் சொல்வீர்களா, பார்ப்போம் :)
சாதாரண வார்த்தைகளை வைத்து அலகிட்டு தளைபார்த்து எழுதப் பயிற்சி கொடுத்தவர் ஆசிரிய நண்பர் அரசன். 'முத்தம் பெறவேண்டும் சத்தம் வராமல்' என்பதில் வெண்பா ஒளிந்திருப்பதை அவர் சொன்னதும் - அட! என்று எழுந்து உட்கார்ந்தேன் :)
'அகராதித் தேடவைத்தால் அப்பா துரைப்பா நகராதிருக் கும்பார்' என்று கரும்பலகையில் அனைவரும் காண எழுதிவைத்து வகுப்பெடுத்தார் ஒருமுறை. தமிழ்ப் பாட்டெழுதினால் துட்டு கிடைக்காது என்ற அறிவு வந்ததும் எல்லாம் துருப்பிடித்து விட்டது. என்ன செய்ய!
ஆகா, மோகன்ஜி!
உண்மை அப்பாஜி. உங்கள் கதையின் போக்கில் குறுக்குசால் போட்டு விடுவேனோ எனும் அச்சத்தில் , நசிகேதன் நிலையை அடக்கியே சொல்ல விழைந்தேன். நாம் இப்போது கையாளும் ஸ்ரத்தையையும் நசிகேதன் ஞானமும் கதையின் பிற்பகுதியில் விவாதிக்கலாம். என் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட கடோவின் குறியீடு நீங்கள் சொல்வதை தானே?
உங்கள் ஆசிரிய நண்பர் அரசன் வகுப்பெடுத்ததை படித்து நெகிழ்ந்தேன். தமிழ் படித்தால் துட்டு கிடைக்காது. ஏன் திட்டு மட்டுமே கிடைக்கும்.எனினும், அது ஓர் பேரின்பம்.. எதைப் படிக்கிறோம் என்பது தான் கேள்வி.சின்ன வாழ்க்கையில் படிக்க வேண்டிய தமிழ் என்னும் ஓர் மலையாய் தென்படுகிறது.
பத்துஜி உங்கள் "ஆசை" கும்மியை நாளை தொடர ஆசைப் படுகிறேன். இப்போது ஐயப்பன் மீது பழைய விடுதி விருத்தங்கள் படிக்க உத்தேசம்.
மோகன்ஜி, பத்மநாபன் மாதிரி அறிவார்ந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு எழுதத் தெரியலை.ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருகிறேன், அந்த பால்மணப் பிள்ளையைப் போல...
//சாதாரண வார்த்தைகளை வைத்து அலகிட்டு தளைபார்த்து எழுதப் பயிற்சி கொடுத்தவர் ஆசிரிய நண்பர் அரசன். 'முத்தம் பெறவேண்டும் சத்தம் வராமல்' என்பதில் வெண்பா ஒளிந்திருப்பதை அவர் சொன்னதும் - அட! என்று எழுந்து உட்கார்ந்தேன் :)// அந்த சிலிர்ப்பு இதைப் படித்தவுடன் எனக்கும் எற்ப்பட்டது.
இவ்வளவு சிறப்பான ஆசிரியரை இழந்துவிட்டோமா ..நாங்கள் தாமதமோ அவர் சீக்கிரமோ இழப்பு இழப்பு தானே..அவரது வலைப்பூவும் திறக்க முடியவில்லையே?
விளக்கத்திற்கு நன்றி மோகன்ஜி. கொடுப்பவன் நோக்கம் எதுவானாலும் பெறுபவனுக்குப் பயன் தருமானால் தானம் நல்லதுதான் என்பதுதான் என் கருத்தும்கூட.
//தானம் செய்பவன் நோக்கம் ஏதாகிலும் இல்லாதவனுக்கு அது பெரும் பயன் தரும் அல்லவா?//
அருமை
வாழ்த்துகள்
நசிகேதஸ் என்றால் எனக்கு ஞாபகம் வருவது தகப்பன்ஸ்வாமிதான்.
குறைவில்லா உங்க தமிழுக்கே வெட்கப்படனும்னா...நாங்கள் எல்லாம் முக்காடல்ல போட்டுக்கணும்...
நடைமுறைச்சொல்ல பயன்படுத்தி இப்படி பாட்டு கிடைக்கிறது தான் கடினம் ..அகராதி இல்லாமல் புரிகிறது...தொடர வாழ்த்துக்கள்.//
அதானே, நல்லாவே புரிகிறது.
அதே போல் மோகன் ஜியும், பத்மநாபனும் சொல்வதைக் கேட்டால் மேற்கொண்டுபின்னூட்டங்கள் கொடுக்கவே வெட்கமாய் இருக்கு; அந்த அளவுக்கு ஞானம் எல்லாம் இல்லை என்னிடம். மெதுவாப் படிச்சுக்கிறேன்.
மத்தியானமே கேட்க நினைச்சு மறந்து போச்ச்; அதென்ன பென் அப்பாதுரை??? இந்தப் பதிவிற்குத் தேவை இல்லைதான்; ஆனால் பாருங்க மண்டையை உடைக்குது. :))))
கருத்துரையிடுக