நல்பால் தராதிவா நோகுமன்றோ? செல்வழியின்
பொய்யான நீரோடை யன்றோ வெறுங்கொடை
செய்தோர்கள் சேரும் இடம்?
    இந்தக் *கால்நடைகள் புல்லைப் புசிக்கவோ, நீரைப் பருகவோ, கன்றுகளைப் பெறவோ, பால் சுரக்கவோ இயலாதிருக்கின்றனவே? வெற்றுத் தருமங்கள் புரிவோர் சேருமிடம், வழியில் புலப்படும் கானல் நீரோடைக்கு ஒப்பானதல்லவா?
*தராதிவா: தராத இந்த ஆ; ஆ என்றால் பசு; இங்கே கால்நடைக்கு பொதுவாகி வந்திருக்கிறது.
    அறம் செய்யும் பொழுது அது பிறருக்குப் பயன்படத்தகுந்ததாக இருப்பின் கொடுத்தவருக்கும் நன்மை - பெறுவோருக்கும் நன்மை. பகட்டுக்காகப் பொதுநலச் சேவைகள் செய்தால் பெறுபவருக்குப் பலனளித்தாலும், கொடுப்பவருக்கு நிம்மதியோ நிறைவோ கிடைப்பதில்லை. கொடையின் இருபுறமும் மேன்மை என்று ஒரு பொன்மொழி உண்டு. இதை சேக்ஸ்பியர் அருமையாகச் சொல்லியிருக்கிறார்:"the quality of mercy is not strain'd... it is twice blest; it blesseth him that gives and him that takes".
    நசிகேதன் மனதில் ஓடிய எண்ணங்கள் இவை. தந்தை தானம் செய்த பசு, குதிரை, ஆடு, யானை போன்ற கால்நடைகளும் படைவிலங்குகளும் சோர்ந்து தளர்ந்து வரண்டு போயிருப்பதைப் பார்த்தான். 'நடப்பதற்கே நோகும் இந்தக் கால்நடைகளை வேள்வித் தானமாகவும் பலியாகவும் கொடுத்துப் பெறக்கூடியப் பேறு எத்தகையதாக இருக்கும்?' என்று எண்ணினான். 'பாசாங்குத் தர்மத்துக்குப் பாசாங்குப் பேறு அல்லவா கிடைக்கும்?' என்று அஞ்சினான். சொர்க்கமே கிடைத்தாலும் அது நிலைக்காது என்று அவனுக்குத் தோன்றியது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? செயலைக் குறை சொல்லாது, பெற்றவனின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'தருமங்கள் செய்யத் துணிந்திருக்கும் என் தந்தைக்கு அவை பயனற்றுப் போகக்கூடும் என்பது புரியவில்லையே, இதைத் திருத்த முடியுமா?' என்று சிந்தித்தான். அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. ►