வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/20

தடுக்காதீர் என்றான் வாசனிடம் நசிகேதன்


11
விதைப்பயிராய்ப் பின்விதை யாம்போலே வாழ்வின்
கதைப்பயின்றுங் கண்ணீர் விழலே - எதையும்நாம்
கற்றறிந்தே செய்யுங் குலமன்றோ? நீர்தடுத்தால்
முற்றகையா மேயும் மொழி.

    விதை பயிராகிறது; பின் பயிரே விதையாகிறது. வாழ்வும் அப்படியே. இந்த உண்மையை அறிந்தும் வருந்துவது பயனற்றது. எதையும் நன்கு ஆய்ந்து செயலாற்றும் குலத்தில் வந்தவர்கள் நாம். என்னைப் போகவிடாதுத் தடுத்தால், முள் போன்றதாகி விடும் உமது சொல் (என்றான் நசிகேதன் தந்தையிடம்).

விழலே: பயனற்றதே, வீணே
முற்றகையாம்: முள்+தகையாம், முள் போன்றதாகும்    முள் தைக்கும் பொழுது வலிக்கிறது. தைத்த முள்ளை விலக்கும் போதும் வலிக்கிறது. சில சொற்கள் அவ்வகையே. வாக்கு கொடுத்துத் திரும்பப் பெறுவது முள்ளுக்கு ஒப்பாகும். ஆத்திரப் பேச்சு, தீச்சொல்; சுடும். ஏமாற்றுப் பேச்சு, முட்சொல்; முன்னும் பின்னும் வலிக்கும்.

மனப்பக்குவத்தின் மறுபக்கம் சுயஅறிவு. சுயஅறிவின் அச்சாணி? தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை கொண்டவர்கள் எதையும் முழுமைக் கண்ணோட்டத்துடன் காணும் திறனுடையவர்கள். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம், தம்பட்டம், பொறாமை இருப்பதில்லை. தன்னம்பிக்கை குறையும் போதே கண்டவற்றையும் காணாதவற்றையும் நம்புகிறோம்; அதிகமாகப் பேசத் தொடங்குகிறோம்; கண்மூடித்தனமாக இயங்குகிறோம். தன்னம்பிக்கையே அமைதி மரத்துக்கான ஆணி வேர். நம்மினும் இளையவருக்கு நாம் வழங்கக் கூடிய நிரந்தரச் சொத்துக்களில் ஒன்று, தன்னம்பிக்கை பற்றியத் தெளிவு.

    'வாக்குத் தவறியச் சுயநலக்காரன்' என்ற பழியை விட, 'அவசரத்தில் அறிவிழந்தவன்' என்ற பழியில் குறைந்த இழிவிருப்பதை அறிந்த நசிகேதன், தந்தையின் மேல் கருணை கொண்டு தன்னைத் தடுக்க வேண்டாம் என்றான். நசிகேதனின் பண்புள்ள சொல்லாலும் செயலாலும் வாசனுக்கு வாக்குத் தவறியப் பழ ஏற்படவில்லை. நசிகேதனின் ஆறுதலுரையில் தெளிந்த பக்குவமும், முழுமைக் கண்ணோடமும், மேலாக, அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் விரவியிருப்பதை அறியலாம். நசிகேதனின் தன்னம்பிக்கை எத்தனை வலுவானதென்பது இனி வரும் பாடல்களில் தெற்றென விளங்கும்.

விதையானது பயிராகி மீண்டும் விதையாகும் விவரத்தை எடுத்துச் சொன்ன நசிகேதன், "தந்தையே, பிறந்தவரெல்லாம் இறந்து மீண்டும் இந்த உலகில் பிறப்பதை நீங்கள் அறிந்தவர் தானே? என்றோ ஒருநாள் இறக்கத்தானே போகிறேன்? இன்னொரு நாள் எமன் வீட்டிற்கு போவதால், யாருக்கென்ன நன்மை? இன்றைக்கு நான் எமன் வீட்டுக்குப் போவதால் உங்களுக்காவது நன்மை உண்டாகுமே? உங்களுக்கு நன்மை கிடைப்பதற்காக எமனுலகம் போகும் வாய்ப்பு பொன்னானது அல்லவா?" என்றான்.

"ஐயா, சொன்னதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும் நம் குலவழக்கம் அல்லவா? எந்தச் செயலையும் எண்ணித் துணியும் கூட்டத்தில் வந்தவரல்லவா நாம்? நீங்கள் அவசரத்தில் சொன்னது போல் தோன்றினாலும், குலகுணம் உங்களுள் ஊறியதால் இது நன்மையிலேயே முடியும். கவலையை விடுங்கள்" என்றான். தந்தையின் செயல் முட்டாள்தனமானதென்றாலும், இடக்கரடக்கல், அவையடக்கம், முதியவர் பேணல் எனும் உயர்ந்த பண்புகளைக் கடைபிடித்து தந்தையின் செய்கையில் பொதிந்திருந்த நன்மையை மட்டும் எடுத்துச் சொன்னான், பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை.

தந்தை இன்னும் தெளியாதது கண்டு, தன் இறுதி வாதத்தை முன் வைத்தான். "தந்தையே, நீங்கள் அவசரமாகக் கொடுத்த வாக்கு என்றே வைப்போம். அதைத் திருப்பிக் கொண்டால் இன்னும் கேடல்லவா? உங்கள் பெயருக்கு மேலும் இழுக்கு அல்லவா? தைக்கும் பொழுதும் பிரிக்கும் பொழுதும் துன்பப்படுத்தும் முள் போன்றதாகிவிடுமே உம் சொல்?" என்றான்.

தந்தை ஓரளவுக்கு அமைதியானது கண்டு, அங்கிருந்த அனைவரிடமும் விடைபெறத் தொடங்கினான் நசிகேதன்.

13 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

'சுருக்'ன்னு முள் தைப்பதுபோல் கேட்டானே ஒரு கேள்வி!!!!

ரசிக்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

தன்னம்பிக்கை விளக்கம் அபாரம்.
பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை..ஐ...
தைத்த முள்ளில் வாக்கு சாதுர்யம்..இவ்வளவு சாதுர்யமாக இவ்வளவு சின்னப் பிள்ளை இருப்பானா? இந்தக் காலத்தில் அந்த வேர் எங்கே போச்சு?

RVS சொன்னது…

ஒரு சேர எல்லாவற்றையும் படித்தேன். வெண்பாவிற்காக கொடுத்த சைட் சூப்பர். கிண்பா அதை விட பிரமாதம். ரொம்ப நாள் படிக்கணும் போலருக்கு. முயற்சி பண்றேன். ;-)
//பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை.//
உச்.உச்........ மிகவும் ரசித்தேன். நன்றி அப்பாஜி!!! ;-)

சென்னை பித்தன் சொன்னது…

உங்கள் விளக்கம்,எளிமையாகவும், நன்கு புரியும்படியும் இருக்கிறது. ஸ்வாமி.ஆசுதோஷானந்தரின் விளக்கத்தைப் படிக்கும்போது புரிந்ததை விட இப்போது தெளிவாக விளங்குகிறது.
நற்பணியைத் தொடருங்கள்.

பத்மநாபன் சொன்னது…

//தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம், தம்பட்டம், பொறாமை இருப்பதில்லை.// சிறப்பு...

விதை முளைத்து விதையாகும் வித்தை மனித பிறவிக்கும் பரவுவதை இளவலின் விளக்கம் அருமை...

இவ்வளவு விளக்கமளிக்கும் தியாகச்சுடரின் மேல் கருணையும் அனுதாபமும் மேலோங்குகிறது...

meenakshi சொன்னது…

மிகவும் அருமையாக இருக்கிறது வெண்பா!
சுய அறிவின் அச்சாணி தன்னம்பிக்கை. அற்புதமான விளக்கம். நீங்க இவ்வளவு தெளிவாக, எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதுதான் இந்த பதிவின் சிறப்பே. தொடருங்கள்.....

சிவகுமாரன் சொன்னது…

வெண்பாவில் மட்டுமல்ல
விளக்கத்திலும் கவிநயம் விளையாடுகிறது
பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை
அருமை

அப்பாதுரை சொன்னது…

நன்றி துளசி கோபால், ஸ்ரீராம், RVS, சென்னை பித்தன், பத்மநாபன், meenakshi, சிவகுமாரன், ...

அப்பாதுரை சொன்னது…

ஆசுதோஷானந்தரின் விளக்கம் படித்ததில்லை சென்னைப் பித்தன் - தேடிப் பார்க்கிறேன். உங்கள் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. போகப் போக உண்மையிலேயே ஆழமான கருத்துக்களைச் சொல்லும் பொழுது எளிமையைக் கடைபிடிக்க முடியுமா தெரியவில்லை.

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராம், உங்கள் கேள்வி சரியே. சிறுபிள்ளைக்கு இதுபோல் "உலகறிவு" இருப்பதாகச் சொல்வதே கேலிக்குரியது தான். வளர்ந்தவர் வாயிலாகச் சொன்னால் கருத்தின் தாக்கம் குறையுமென்பதற்காக இந்த முரணை (வயதுக்கு மீறிய அறிவு) பயன்படுத்தியிருக்கலாம். இது சாதாரண உத்தியே. நம் புராணங்கள் (கிரேக்கப் புராணங்களும்) ஒரு சுலபமான வழியைப் பயன்படுத்தினார்கள்: பிள்ளைக்கு 'அருள்' வந்ததாகச் சொல்லி பிள்ளை வழியாகத் தங்கள் கருத்தைச் சொன்னார்கள்.

இந்தக் கதையிலும் நசிகேதனுக்கு அப்படி அறிவு வரக்காரணம் பின்னால் வருகிறது.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! ஆயிரம்,ஆயிரம், பல்லாயிரம் வணக்கங்கள். நேற்று இரவு தான் " நசிகேத வெண்பா" ஆறாவது பதிவினைப் பார்த்தேன். இன்று காலை நான்கு மணியிலிருந்து அத்துணையையும் படித்தேன். இப்போது மணி ஆறு. சிறு வயதில் எஸ்.ஆர்.துரைசாமி(மானிலக்கல்லூரியில் பெராசிரியராக இரு ந்தவர்) அவர்களிடம் கீதை படித்தேன்.வாலிப வயதில் சின்மயாவிடம் உபநிஷதை கற்றேன். சாந்த்வீபனி கல்லுரியில் சேர்ந்து பரிவ்ராஜகனாக மாற நினத்தேன்.பின்னர்தத்துவ விசாரணயில் இறங்கி இப்போது மார்க்சீய மெய்ஞானத்தில் வந்து நிற்கிறென்."நசிகெத வெண்பா" நூலாகவெளிவந்துவிட்டதா.? மிகவும் அற்புதமான பணி. உங்களின் பின்னூட்டங்கள் உங்கள் ஞானத்தை மறைக்கும் முகமூடி.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

சிவகுமாரன் சொன்னது…

////உங்களின் பின்னூட்டங்கள் உங்கள் ஞானத்தை மறைக்கும் முகமூடி///

.....மிகச் சரியாக சொன்னீர்கள் அய்யா. முதலில் அப்பாத்துரை அவர்களை உங்கள் பதிவின் பின்னூட்டம் மூலமாய்த் தான் அறிமுகமானேன். அவரது பதிவிற்கு வந்த பிறகுதான் அவரது ஞானம் புரிந்தது.

அப்பாதுரை சொன்னது…

காஸ்யபன் ஐயா, நீங்கள் படித்ததே மிகவும் நிறைவாக இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. சின்மயாவிடம் பயின்றிருக்கிறீர்களா? கொடுப்பினை. என் எழுத்திலும் கருத்திலும் பிழைகள் இருந்தால் தயவுசெய்து திருத்தம் சொல்ல வேண்டுகிறேன்.
நூலாக வருமென்ற எண்ணமெல்லாம் இல்லை. இப்போதைக்கு அடிப்பயணம், அவ்வளவுதான்.

(என் பெயரை அப்படியே சொன்னதற்காக உங்களுக்கு இன்னொரு வணக்கம்.:)