வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/16

வாசன் மேலும் வருந்தினான்


10
வேகத்தில் விட்டசொல் வாகோ? வதகனுக்கு
யாகத்தில் வேறேனும் ஈகுமோ? வேகும்
உலையிலே நெல்மீட்கும் உன்மத்த மோயென்
நிலையிலாச் சொல்லின் விலை?

    வசரத்தில் கொடுத்த வாக்கு பொருந்துமோ? யாகத்தில் எமனுக்கு வேறேதும் கொடுக்க முடியுமோ? (என் செயல்) கொதிக்கும் சோற்றிலிருந்து நெல்லை மீட்க முயலும் மடத்தனமோ? இதுவே என் அறிவற்றச் சொல்லுக்கு விலையோ?!

வாகு: பொருத்தம், அழகு
வதகன்: மரணத்தைத் தருபவன், இங்கே எமனைக் குறிக்கிறது
ஈகுதல்: வழங்குதல்
உன்மத்தம்: அறிவு மயக்கம்



    துயரத்திடம் ஒரு கெட்டப் பழக்கம் உண்டு; எப்பொழுதும் தாமதமாகவே வரும். அறியாமை மின்னலைத் தொடர்வது, அறிவு இடி. பிறகு, துயர மழை. சொல்லின் தாக்கத்தையோ செயலின் குரூரத்தையோ கண்ணீரால் கழுவ முடியுமா? வேறு ஏதாவது வழியில் ஈடுகட்ட முடியுமா? எல்லாம் சிந்தித்து, முடிவில் விளைவுகள் மறைக்க முடியாத, மறக்க முடியாத வடுக்கள் என்ற புரிதல் ஏற்பட்டக் கணமே, துயரம் நிரந்தரச் சுமையாக மாறிவிடுகிறது.

சுமையை எங்கே இறக்கி வைப்பது?

மனம் என்பது, பிறக்கும் பொழுது பல அறைகளைக் கொண்டப் பெரிய வீடாகப் பிறக்கிறது. தன்னம்பிக்கை, அன்பு, கருணை, பெருந்தன்மை, மனிதாபிமானம், பொறுமை, மகிழ்ச்சி போன்ற அறைகள் பிறக்கும் பொழுதே நிரம்பி வழிவன. மனவீட்டில் இரண்டு அறைகள் வித்தியாசமானவை. ஒரு அறை முழு வெற்றிடமாகவும், மற்றது அரை வெற்றிடமாகவும் பிறக்கிறது. முழு வெற்றிடமாகப் பிறக்கும் அறையின் பெயர் நிம்மதி. தெளிந்த சொல்லாலும் செயலாலும் சிறுகச்சிறுக நிம்மதியைச் சேர்த்துச் சேமிக்க வேண்டியக் காரணத்தால் இந்த அறை முழு வெற்றிடமாகப் பிறக்கிறது.

சுமையை எங்கே இறக்கி வைப்பது என்ற கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கிறது. 'நிம்மதி என்ற அறையில் ஏதுமில்லையே? அங்கே வைப்போம்' என்று இறக்கி விடுகிறது மனம். நிம்மதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம், அறிவற்ற சொல் செயல்களால் சேர்த்தத் துயரச் சுமைகளுக்கு நிரந்தரக் கிடங்காகி விடுகிறது.

இரண்டு வித்தியாசமான அறைகளில், ஒன்று நிம்மதி. இன்னொன்று? அறிவு. பிறக்கும் போது பாதி அறிவு, பாதி வெற்றிடமாகப் பிறக்கிறது. நிம்மதி சேரும் அதே நேரம் உடன் வரும் அறிவும் சேர, வெற்றிடம் நிரம்புகிறது; அல்லது, துயரச்சுமை சேரச்சேர உடன் வந்த அறியாமை எனும் புதுக்குடி, இருந்த அறிவை மெள்ளத் துரத்தி விடுகிறது.

இதன் நடுவே, அறியாமை மற்றும் துயரச்சுமையுடன் குடியிருக்கப் பிடிக்காமல் தன்னம்பிக்கை பொறுமை கருணை மனிதாபிமானம் போன்றவை, தத்தம் அறைகளை விட்டுத் தலைதெறிக்க ஓடத் தொடங்குகின்றன. மகிழ்ச்சி முதலில் ஓடுகிறது. முடிவில், மனம் எனும் வீட்டில் பல வெற்றிடங்களுக்கு நடுவே அறியாமை மட்டும் துயரச்சுமையுடன் ஆட்டம் போடுகிறது. எண்கட்டு என்பது இது தான்.

ஞாயிறு காலைகளில் வெளிவீடெங்கும் தூசு தட்டிச் சுத்தம் செய்வது போல், உள்வீட்டையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வழி தெரிந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ன்னன் வாசன், சுமை தாங்காமல் துடித்தான். குறுக்கு வழிகள் தோன்றின. அவசரமாகக் கொடுத்த வாக்கு செல்லாது என்று சொல்வதா? வந்திருக்கும் எமதூதருக்கு வேறு ஏதாவது கொடுத்து 'அட்ஜஸ்ட்' செய்து விடுவதா? 'இதென்ன சோதனை!' என்று சோர்ந்தான். அண்டவாகை வேள்வியில் தானம் கொடுப்பதாகச் சொன்னது கொடுத்தது போலவே என்பதால், வாக்கைத் திரும்பப் பெற முடியாதுத் தவித்தான். தான் அறியாமல் சொன்ன சொல்லுக்குக் கொடுக்க நேர்ந்த விலையை எண்ணி நிம்மதியிழந்து துயரத்தில் ஆழ்ந்தான்.

வேகும் சோற்றிலிருந்து நெல்லை எடுக்க இயலுமோ? சோறு வடிக்க எண்ணி வைத்த உலை பொங்குகிறது. நெல் அரிசியாகி உலையில் விழுந்து சோறாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெல் மீட்பது இயலாதது மட்டுமல்ல, மடத்தனம் அல்லவா? மன்னன் தன்னுடையதை அறிவில்லாமல் தகாத தானம் கொடுத்த கணமே, மகன் தனக்குச் சொந்தமில்லை என்றாகிவிட்டது. தானம் கொடுத்தது தெரிந்ததும், எமதூதர்கள் தங்களுக்குச் சொந்தமானதைப் பெற வந்துவிட்டார்கள். இப்போது இன்னொருவருடைய பொருளை முன்போல் தனக்குச் சொந்தமாக்குவதென்பது முடிகிற செயலா, முட்டாள்தனமா?

எமதூதர்களைப் பார்த்தான் நசிகேதன். அவர்களுடன் போகுமுன், துயரச்சுமையில் வருந்தியழும் தந்தைக்கு ஆறுதல் சொல்லி விடை பெற எண்ணினான். ஆழ்ந்தத் தத்துவமும் செறிந்த பண்பும் கலந்த நெறியொன்றை எடுத்துச் சொல்லித் தேற்ற, வாசனை அணுகினான்.

14 கருத்துகள்:

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

மிக வித்தியாசமான பதிவு. நன்றிங்க.

ஸ்ரீராம். சொன்னது…

நிம்மதி, சுமை மன அறை உதாரணங்கள் பிரமாதம்.

சிவகுமாரன் சொன்னது…

//உலையிலே நெல்மீட்கும் உன்மத்த மோ?/ "சென்றதினி மீளாது மூடரே" என்ற பாரதியின் வரிகளை நினைவுப் படுத்தியது.
மன அறைகள் பற்றிய விளக்கம் மிக அருமை. நிறைய யோசிக்க வைக்கிறது. ஒவ்வொரு வெண்பாவும் அட்சரலக்ஷம் பெறும்.

துளசி கோபால் சொன்னது…

தொடர்கின்றேன்.

geetha santhanam சொன்னது…

வெண்பா ரசிக்க வைக்கிறது. உங்கள் விளக்கம் சிந்திக்க வைக்கிறது. மன அறைகளின் விளக்கம் அருமை.

பத்மநாபன் சொன்னது…

வதகன்... பெயர்காரணம் .. வதைப்பதனாலோ ..புதிது புதிதாக தெரிந்துகொள்வது சுகம்.

எல்லோரும் சொன்னாலும், என்னாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை... உலையில் நெல் மீட்பது.... இந்த மொழி வரலாற்றில் புதிதாக புகுந்த உவமையாகவே எனக்கு தோன்றுகிறது.

மனம் ...ஒரு புதிர் என்று சொல்வார்கள் ..அந்த புதிர் கணக்கை அழகாக விவரித்துள்ளீர்கள்... அறிவு அறியாமை , துயரம் , நிம்மதி இப்படி பல காரணிகள் அததனின் மதிப்பிற்கு ஏற்ப மனம் எனும் புதிரின் சிக்கல் கூடுகிறது அல்லது குறைகிறது....

ஆழ்ந்த தத்துவத்தை ஆவலோடு எதிர்பார்த்து .........

பத்மநாபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹா..இதைப் பார்க்காமல் விட்டு விட்டேனே, இத்தனை நாளும்!!

அப்பாதுரை சொன்னது…

நன்றி சங்கரியின் பதில்கள், ஸ்ரீராம், சிவகுமாரன், துளசி கோபால், geetha santhanam, பத்மநாபன், ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, ...

வந்தது தானே முக்கியம் ராமமூர்த்தி சார், வந்த நேரம் இல்லையே? நீங்க படிச்சதில் பெரு மகிழ்ச்சி.

அப்பாதுரை சொன்னது…

நன்றி சிவகுமாரன். உங்கள் பாராட்டு நெஞ்சைத் தொடுது.

அப்பாதுரை சொன்னது…

'மன அறைகள்' ரொம்ப நாளாகவே எனக்குள் உளைந்து கொண்டிருந்த கருத்து. வாய்ப்புக் கிடைத்தது பகிர்ந்து கொள்ள. ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம், சிவகுமாரன், geetha santhanam, பத்மநாபன்.

என் மகன் சமீபத்தில், "i spoke to my conscience, dad" என்று சமீபத்தில் சொன்னதும் அசந்து போனேன். அவன் களங்கப் படாமல் எப்பொழுதும் இந்த நிலையிலேயே வாழவேண்டுமே என்ற ஆசையும் உடன் வந்தது. மன அறை பற்றிய வியாக்கியானங்கள் எல்லாம் வளர்ந்தவர்களுக்குத் தானோ?

சிவகுமாரன் சொன்னது…

ஒகோ.. நசிகேதன் வீட்டிலேயே இருக்காரோ

பத்மநாபன் சொன்னது…

//மன அறை பற்றிய வியாக்கியானங்கள் எல்லாம் வளர்ந்தவர்களுக்குத் தானோ //

அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையாக்கள் கூடி வருகிறார்கள்..இந்த போட்டி உலகம் அவர்களுக்கு பல வியாக்கியானங்களை உள்ளுணர்வாக வைத்துள்ளது....அதை கெடுக்காமல் இருந்தாமல் சரி...

meenakshi சொன்னது…

வாக்கு என்பதே பெரும்பாலும், ஒரு அவசரத்திலும், உணர்ச்சி பெருக்காலும் கொடுப்பதுதானே. நெல்லை கொட்டினா திரும்ப அள்ளலாம், சொல்லை கொட்டினா அள்ளமுடியாது. ஒரு வேகத்தில் வாக்கை கொடுத்து, அந்த மன்னன் துடிப்பதை அழகான உதாரணத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்.
மன அறை விளக்கம் பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.