வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/14

நசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்


9
புண்பட்ட நெஞ்சாலும் பண்பட்டுப் பேசுமுன்
கண்பட்டக் கோடெல்லாம் வண்சிறப்பு - எண்கட்டி
ஒண்கெட்டப் பண்ணிட்டுச் செண்கெட்டச் சேறெந்தன்
மண்தொட்டே மன்னித் திரு.

    னம் புண்பட்டாலும் குணம் குறையாமல் பேசும் திறன் கொண்ட உன் கண் பார்வை பட்ட இடமெல்லாம் சிறப்படையும்; விதியின் சூழ்ச்சியில் சிக்கி நெறி தவறிப் பேசியதால் (பெருமையிழந்து) கொண்டை இழந்த சேவல் போல் நிற்கும் என்னை மன்னித்து, என்னுடன் இந்த உலகத்திலேயே தங்கியிரு (என்று மன்னன் நசிகேதனிடம் சொன்னான்)

கண்பட்டக் கோடெல்லாம்: கண்பட்ட இடமெல்லாம் (கோடு:எல்லை)
வண்சிறப்பு: மிகுதியான சிறப்பு
எண் கட்டி: வினைச்சுழலில் சிக்கி ('கர்மம்', 'ப்ராரப்தம்' என்று வழங்கப்படும் வினைச் சூழ்ச்சி, சுழற்சி | எண்:வினை)
ஒண் கெட்டப் பண் இட்டு: பொருந்தாத, நெறி தவறிய நிந்தையை, இகழ்ச்சியைச் செய்து, பொருந்தாத ஒழுக்கத்தைக் கடைபிடித்து (ஒண்: பொருத்தம், நெறி | பண்: நிந்தை, ஒழுக்கம்)
செண் கெட்டச் சேறு: கொண்டை இழந்த சேவல்



    றியாமை மின்னல், கண்மூடச் செய்கிறது; தொடர்ந்து வரும் அறிவின் இடியோசை, விழிக்கச் செய்கிறது. 'என்ன செயல் செய்தோம்' என்று வெட்கமும் வேதனையும் பட வைக்கிறது. கடவுள் முதல் மனிதர் வரை விதிவிலக்கில்லாமல் சொல்லிழுக்குப் பட்டவர்களைக் காணலாம். அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஏற்படக்கூடிய நாசங்களைத் தவிர்க்க, அன்பும் அமைதியும் தான் வழி. சிறிய அளவிலே, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம், அன்பையும் அமைதியையும் கடைபிடிக்க முடிந்தால் அதன் மொத்த விளைவு மகத்தானதாக இருக்கும்.

    ன் ஆத்திரத்தின் விளைவைப் புரிந்து கொண்ட மன்னன், மகன் நசிகேதனின் கேள்வியைக் கேட்டு இரங்கினான். "எப்பேற்பட்ட பிள்ளை இது!" என்று அவனுக்கும் தோன்றியது. "ஐயா, நீ பார்த்தாலே போதும், அந்த இடம் சிறந்து விடும்" என்றான். 'எமனுக்கு உன்னால் பயனுண்டு, கவலைப்படாதே' என்றாலும், அவன் மனதில், 'இந்தப் பிள்ளையினால் எமனை விட தனக்கல்லவா மேன்மை!' என்ற ஏக்கம் தாக்கியது.

மன்னன் என்ன சொன்னாலும் செய்தாலும் இனி மக்கள் எள்ளி நகைப்பார்களே! கொக்கரித்தாலும், கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பு ஏது? தானும், தன் தீச்சொல்லின் விளைவால், பெருமையிழந்ததை உணர்ந்தான் வாசன். 'கொடுத்த வாக்கு கொடுத்ததே' என்பது அவனுக்குப் புரிந்தாலும், நசிகேதனிடம் தான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், தவறை மன்னித்துத் தன்னுடனேயே இருக்க வேண்டினான். தந்தையின் நிலை, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கியக் கதை என்பதை அறிந்தும் அமைதி காத்தான் நசிகேதன். சில கணங்களில் நசிகேதனைத் தானம் பெற எமனின் தூதர்கள் வருவார்களே என்று பதைத்து, மன்னன் இன்னும் புலம்பினான்.

6 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அடடா...... எப்படிங்க இப்படி!!!!!

கொண்டை இழந்த சேவல்..... சூப்பர் போங்க.

meenakshi சொன்னது…

இந்த ஒரு வெண்பாவிலேயே நிறைய அருமையான சொற்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ! கண்ணதாசன் வரிகள்.
கொக்கரித்தாலும் கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பேது? அப்பாதுரையின் வரிகள்.
தாங்கள் சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ப கவிஞர்களும், எழுத்தாளர்களும் கூறும் உவமைகள் மிகவும் ரசிக்க வைக்கிறது.
மிகவும் அருமை அப்பாதுரை!

அப்பாதுரை சொன்னது…

நன்றி துளசி கோபால், meenakshi

சிவகுமாரன் சொன்னது…

புண்பட்ட பண்பட்டுப்
கண்பட்டக் எண்கட்டி
ஒண்கெட்டப் பண்ணிட்டுச் செண்கெட்டச்
மண்தொட்டே
ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே.
கொண்டை இழந்த சேவல் உவமை
அபாரம் அப்பாஜி

ஸ்ரீராம். சொன்னது…

மன்னனின் காலங்கடந்த ஞானம். வெண்பா அபாரம். கொண்டையை இழந்தால் பெருமையில்லை என்று சேவலுக்குத் தெரியுமோ? ஒரு நாளைக்கு நாலுமணி நேரம் அன்பு அமைதி...நல்ல யோசனை. அல்லது வாரத்தில் ஒருநாள் விரதம் போல...!

பத்மநாபன் சொன்னது…

வெண்பா கைக்குள் நன்றாகவே உட்கார்ந்து விட்டது...

அறியாமை மின்னல்...அறிவு எனும் இடி ...ஒரே பெருஞ்செயலின் ஒளி, ஒலி இரு வடிவங்களை வைத்து அருமையாய் அன்பு அமைதிக்கான பிரச்சாரம் வியக்கவைக்கிறது..