8
உன்னாது சொன்னாலும் உத்தமரே இத்தானம்
பின்னாள் பெரும்பேறே என்றறிவீர் - என்னளவில்
முன்னவன் நானெனினும் மூத்தோருள் நாசனுக்கிச்
சின்னவனால் என்ன சிறப்பு?
பின்னாள் பெரும்பேறே என்றறிவீர் - என்னளவில்
முன்னவன் நானெனினும் மூத்தோருள் நாசனுக்கிச்
சின்னவனால் என்ன சிறப்பு?
    சிந்திக்காமல் சொல்லியிருந்தாலும், உத்தமராகிய நீங்கள் பின்னாளில் பெறப்போகும் பெரும்பேறே இந்தத் தானமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். என் வயதொத்தவருள் நான் சிறந்தவன் என்றாலும், என்னை விட முதிர்ந்தவர்கள் இருக்குமிடத்தில் எமனுக்கு என்னால் என்ன பயன்? (என்று கேட்டான் நசிகேதன்).
உன்னாது: சிந்திக்காமல்
நாசன்: எமன்
    வீட்டில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து பட்டுக் கணணாடிப் பொருள் உடைந்துவிட்டது. என்ன செய்கிறோம்? பிள்ளையைக் கடிந்து கொள்கிறோம் அல்லது இரண்டு அடி முதுகிலும் தலையிலும் வைக்கிறோம். உடைந்த பொருள் திரும்பி வரப்போவதில்லை. கடிந்ததால், பிள்ளையின் மனதில் நம்மைப் பற்றி ஒரு பயமும் வெறுப்பும் பதிந்ததே தவிர, தன் செயலின் படிப்பினை மறந்துவிட்டது. உடன்படாத செயலைச் செய்தாரென்று மனைவியையோ கணவனையோ கடிந்து பேசுகிறோம். நடந்ததை மாற்ற முடியாது. மேலாக, காழ்ப்பு வேறு சேர்ந்து விட்டது.
'நடந்தது' என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 'நடந்ததை மாற்ற முடியாது' என்பதை அறிந்துகொள்ளவே முடியும். அறிந்துகொண்டால், நம் செயல்களும் அதற்கேற்ப அமையும். புரிதலுக்கும் அறிதலுக்கும் உள்ள வேறுபாடு இதுவே. "நீங்கள் சொல்வது புரிகிறது" என்று தலையாட்டிவிட்டு மீண்டும் செய்ததையே செய்பவர்களை நாளில் எத்தனை முறை சந்திக்கிறோம்?! அவர்களுக்கு 'அறியும் சக்தி' இல்லையென்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடப்பதே நன்று.
தனக்கோ அல்லது இன்னொரு உயிருக்கோ ஆபத்து இல்லாத சூழலில், நடந்து முடிந்த ஒரு செயலுக்கான நம் எண்ணங்களையும் எதிர்செயலையும் வெளிப்படுத்தும் முன்னால், நிதானிக்கச் சொல்கிறார்கள். பெருமூச்சுகள் விடவும், பத்து வரை எண்ணவும், வெளியே சுற்றி வரவும் பலவகை வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
எதிர்பாராத நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது, தெய்வத்தையோ விதியையோ மற்றவற்றையோ போற்றாமலும் பழியாமலும், நிகழ்வுகளில் அடங்கியிருக்கும் நன்மை-தீமை மற்றும் ஆக்கம்-அழிவுக்கான வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றபடி நடப்பது அறிவுள்ள மனிதரின் இலக்கணம் எனலாம். மனித அறிவுக்கு மட்டுமே இது சாத்தியம். (இதுபோன்ற ஆழ்ந்த கருத்துக்களைக் கேள்வி-பதில் பாணியில் உணர்த்தும் பல பாடல்கள் கடோபனிஷதத்தில இனித் தொடர்ந்து வருகின்றன.)
    தந்தை தன்னை எமனுக்குத் தானம் கொடுப்பான் என்பதை நசிகேதன் எனும் சிறுபிள்ளை தெரிந்து கொண்டிருக்கச் சாத்தியமில்லை. தானம் கொடுத்ததுமே அதன் பரிமாணம் அவனுக்குப் புரிகிறது. அந்த நிலையில் அவன் அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று மட்டுமே. 'தந்தையின் தானத்தைப் பயனுள்ள தானமாக்குவது எப்படி?' என்பதே. "ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் உங்கள் மகனில்லையா? உங்களுக்குப் பொறுப்பில்லையா?" போன்ற கேள்விகளுக்கு அவன் மனதில் இடமில்லை.
அரச குடும்பத்திலே பிறந்து வளர்ந்த காரணத்தினாலும், அறிவைப் பயன்படுத்தும் இயல்பினாலும், தன் வயதொத்தவருள் நசிகேதன் முன்னணியில் நிற்கச் சாத்தியமுண்டு. அதனால் அவன் தன்னை, 'என்னளவில் முன்னவன்' என்றான். அது ஆணவமில்லாத விவரமறிந்த கருத்து என்பது, தொடரும் கேள்வியிலிருந்து புரிகிறது. போகுமிடமோ எமனுலகம். 'வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் அங்கிருக்கையில், தான் எந்த விதத்தில் பயனுள்ளவனாக இருப்போம்?' என்று அவனுக்கு ஐயம் தோன்றியது. 'பயனில்லாத பசுக்களைப் போலவே தானும் பயனற்றத் தானமாகி விட்டால், தந்தைக்கு இன்னும் அல்லல் தீர்ந்தபாடில்லையே!' என்பது அவன் எண்ணம். 'தன்னைப் பயனுள்ளவனாக மாற்றிக் கொள்ள ஏதாவது வழி உண்டா?' என்று அவன் சிந்தித்ததாகவும் கொள்ளலாம். அந்த நிலையிலும், 'எமன் தன்னைப் பயனுள்ளவனாகக் கருத வேண்டுமே' என்று நசிகேதன் நினைத்தது, தந்தை மேல் அவன் கொண்டிருந்தக் கருணையைக் காட்டுகிறது.
கேள்வி கேட்குமுன்னர், 'தந்தை ஒரு முட்டாள் என்பதை எப்படிச் சொல்வது?' என்று நினைத்தான் நசிகேதன். எடுத்துச் சொல்லாவிட்டால், அடுத்த முறை மனைவியையோ வேறு ஏதாவது சொந்தத்தையோ தானம் கொடுத்து விட்டால்? நசிகேதன் அளந்து சொன்னான்: 'உன்னாது சொன்னீர்'. "சிந்திக்காமல் பேசிவிட்டீர்கள்" என்று தொடங்கினான். ஒரே ஒரு சூடு! நாட்டுக்கே மன்னன், சிந்திக்காமல் நடப்பது எத்தகைய அவமானம்! சிறுவனிடமிருந்து இப்படிப் பேச்சு வாங்குவது இன்னும் அவமானமாயிற்றே! நசிகேதன் அத்தோடு நிறுத்தாமல், "பரவாயில்லை, இது உங்களுக்குப் நற்பேறையே சேர்க்கும்" என்ற நற்செய்தியோடு அறிவுரையை வழங்கினான். "சிந்திக்காமல் செய்வதே இத்தகையப் பலனைத் தருமென்றால், மனிதராகிய நீங்கள் சிந்தித்து நடந்தால் இன்னும் பெரும்பேறு பல பெறலாமே?" என்பது மறைபொருள்.
    மகனின் கேள்விக்கு மன்னன் தகுந்த பதில் சொன்னனா? ►
15 கருத்துகள்:
/சிந்திக்காமல் செய்வதே இத்தகையப் பலனைத் தருமென்றால், மனிதராகிய நீங்கள் சிந்தித்து நடந்தால் இன்னும் பெரும்பேறு பல பெறலாமே?" என்பது மறைபொருள்.
/
சிந்திக்க வேண்டியது
தொடருங்கள்
அன்புடன்
திகழ்
புத்துப்புது சொற்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.
உன்னாது...... அருமை!!!!!
ஆழ்ந்த கருத்துக்கள், அருமையான விளக்கங்கள். அறிவுள்ள மனிதரின் இலக்கணத்தை பலமுறை படித்தேன், அருமை!
அந்த சிறுவனின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. சிறியவர் பெரியவர் ஆவதும், பெரியவர் சிறியவர் ஆவதும் அவர்கள் சிந்தனையிலும், நடத்தயிலும்தான் என்பதை அழகாக விளக்குகிறது இந்த கதை.
சொல்வதை புரிந்துகொண்டு அதன்படி நடக்க முடியாதவர்களுக்கு அறியும் சக்தி இல்லை என்று நீங்க எழுதி இருப்பதை ஏனோ ஒப்புக் கொள்ள முடியவில்லை. புரிந்து கொண்டதை செயல் படுத்தும் திறன் இல்லாதவர்களை அறியும் சக்தியே இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? இவர்களை ஒரு விதத்தில் சூழ்நிலை கைதிகள் என்று சொல்லலாம்.
வெண்பாவும், விளக்கமும் அருமை.
தந்தை சிந்திக்காமல் செய்பவற்றைப் பார்ப்பதனாலேயே மகன் சிந்தித்துச் செயல் படுகிறான் போலும். வீட்டில் பெரியவர்கள் செய்யும் தவறான செயல்களைப் பார்க்கும் சிறியவர்கள் அவ்வாறு செய்யாமல் மாற்றி செயல் படுவதைப் பார்க்கிறோமே...
உன்னாது.... என்னாதிது.. ரொம்ப புதுசா இருக்கு அப்பாஜி. நசி வாயிலாக நல்லதொரு தமிழ்ப் பாடம். வெண்பாவில் பாடும் புலவருக்கு நன்றி. ;-)
பிள்ளைகளின் பல கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை. இன்று பாரதியைப் பற்றிய எனது பதிவைப் படித்து விட்டு என் மகன் "உங்கள் வயது இருக்கும் போதே பாரதி இறந்து விட்டார் தானேப்பா " என்றான். எனக்கு சுருக்கென்றது. என் மனைவி என்ன பேசுகிறாய் என அடிக்கப் பாய்ந்தாள். பிள்ளை மலங்க மலங்க விழித்தான். அவன் கேட்டதில் என்ன தவறு? பிள்ளைகள் நசிகேதனாய் இருக்கிறார்கள். நாம்தான் வாசன்களாய் இருக்கிறோம்.
துரை
தெரியதனமா வந்துக்கினேனன் நைனா. ஒண்ணுமே பிரியல.
நீ ஏதோ சபெசிலா தான் எழுதிக்கினு இருப்பே; ஏன்னா எல்லா பய / புள்ளைகளும் ஆகோஓஹோ சொல்லுதே
நமக்கு விளங்கிலே நைனா, நான் ஜகா வாங்கிக்கிறேன். பிரிதா ? நீ டென்ஷன் ஆவத எழுது.
"உன்னாது..." என்ன அழகான சொல்! அபிராமி அந்தாதியை நினைவு படுத்தி விட்டீர்கள்.
“தன்னை உன்னாது ஒழியினும்,உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.”
(மாந்தர் உன்னை நினைக்காவிட்டாலும், நினைத்தாலும், உனக்கு அதனால் ஆகவேண்டியது ஏதும் இல்லை தாயே!)
அற்புதமாய் நடை பழகுகிறது நசிகேத வெண்பா! அருமை அப்பாஜி!
உயர்வு நவிற்சியாகவும், வஞ்ச புகழ்ச்சியாகவும் நசிகேதன் சொல்பவை நல்ல மேலாண்மை.
என்னளவில் முன்னவன்...வியக்க வைக்கும் தன்னடக்கம்...இளவயதில் இப்படி ஒரு அபூர்வம்...
பெரும்பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிந்தித்து செயல் படுதல் எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாக எடுத்து காட்டியுள்ளது....
திகழ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றிக் கணினிப் பக்கம் வரவில்லை - உடனே நன்றி தெரிவிக்க இயலவில்லை. உங்கள் வருகை எனக்குப் பெரிய மகிழ்ச்சி.
நன்றி திகழ், துளசி கோபால், meenakshi, geetha santhanam, ஸ்ரீராம், RVS, சிவகுமாரன், சாய் (தெரிந்தே வரவும்), மோகன்ஜி, பத்மநாபன், ...
தாமதத்துக்கு வருந்துகிறேன்.
அருமையான கருத்து, சிவகுமாரன். சிந்திக்க வைக்கிறது. பிள்ளையின் கேள்வியில் எந்தக் கள்ளமுமில்லை. பெற்றவரின் செயலிலும் எந்தக் கள்ளமுமில்லை. அறிவுப்பசியினால் எழுந்த கேள்வியை அன்புப்பிடியினால் எழுந்த செயல் தடுக்கப் பார்த்தது. பல சமயம் வளர்ந்தவர்கள் கண்களின் மூடுவது அன்பும் கூட!
உங்கள் மகனுக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.
மோகன்ஜி, 'எண்ணினாலும் எண்ணாவிட்டாலும் அபிராமிக்கு பொருட்டில்லை' என்றால் ஏன் அபிராமியை உன்ன வேண்டும்? இது பற்றிய என் கருத்தை இன்னொரு பதிவில் எழுதியிருக்கிறேன். 'மின்னாயிரம் வடிவ மெய்ப்பொருள்' என்ற பட்டரின் கற்பனை வியக்க வைக்கிறது.
meenakshi, நீங்கள் சொல்வது "புரிகிறது" என்று தலையாட்டிவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன், அனுமதியுங்கள்.
தெரிதல், புரிதல், அறிதல் எனும் மூவகை அறிவுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். (பின்னால் ஒரு பாடலில் இதைப் பற்றி எழுதப் போகிறேன், கவனம் :)
தெரிதல் சாதாரண அறிவு - தெரிதல் கூட இல்லாதவர்களைத் தான் 'சூழ்நிலைக் கைதி' என்று அழைப்பார்கள். சாதிக் கொடுமையினால் தலைமுறைக் கணக்கில் மிதிபட்டு வந்தவர்கள், புத்தி சுவாதீனமில்லாதவர்கள், கைக்குழந்தைகள், சிறு பிள்ளைகள், மிகவும் நொடித்துப் போன முதியவர்கள், தவிர்க்க முடியாத வன்முறைக்குள்ளானவர்கள், அகதிகள் - இவர்களெல்லாம் 'சூழ்நிலைக் கைதிகள்' எனலாம். நான் குறிப்பிட்டிருக்கும் உதாரணம் 'சூழ்நிலைக் கைதி'க்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன்.
புரியும் அறியும் வசதி படைத்தவர்கள் தங்களைச் 'சூழ்நிலைக் கைதிகள்' என்றால், அவர்கள் படித்த பெருச்சாளிகள் அல்லது கொழுத்த அரசியல்வாதிகள் என்பதே பொருள். 'if you cannot resolve, blame it on circumstances' என்பது பரவலான பழிமாற்று மேலாண்மைத் தந்திரம்.
மற்றவர்கள் விதி, சாமி, கர்மபலன் என்பதை நீங்கள் 'சூழ்நிலைக் கைதி' என்கிறீர்களோ?
கருத்துரையிடுக