வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/07

தன் தவறை உணர்ந்தான் வாசன்


6
உரைத்ததன் வன்சொல் உறைத்ததும் மன்னன்
தரைதொட்ட மீனாய்த் துடித்தான் - கரைந்தழுதான்
அந்தோ! எனதம்பே என்னை அடித்ததென்று
வெந்து புலம்பினான் வேந்து.

    தான் சொன்ன கொடிய சொற்களின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட அரசன், தரையில் விழுந்த மீன் போல் துடித்தான். உருகி அழுதான். "அந்தோ! நானெறிந்த அம்பு என் மேலே பாய்ந்ததே!" என்று வாடினான்.

வேந்து: அரசன்
ஈற்றடி உதவி: சிவகுமாரன்


    வசரத்திலும் ஆத்திரத்திலும் சொற்களை வீசுவது மிக எளிது. ஞானிகளும் மேதைகளும் கூட இப்படித் தவறுவதைப் பார்க்கிறோம்; மதக்குருக்களும் ஒழுக்க சீலர்களும் வழிகாட்டிகளுமே அடிக்கடி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஏதாவது சொல்லி வம்பில் சிக்கிக்கொள்வதைப் பார்க்கிறோம்.

கொட்டினால் அள்ளக்கூடியதா சொல்? நாவினால் சுட்ட வடு ஆறாது எனும் இருவரி நெறியை மறக்கலாமா? நா காக்கத் தவறிய வாசனின் அறியாமை, நமக்கெல்லாம் ஒரு இலவசப் பாடம். எத்தனை பாடம் படித்தாலும், சாதாரண மனிதர்களுக்கு அளந்து பேசும் இயல்பு ஏற்படுவது மிகக் கடினம் என்பதே நடைமுறை உண்மை. சிறுபிள்ளையாக இருக்கையில், 'பேச்சு வரவில்லையே' என்று கவலைப்படுகிறோம். வளர்ந்து பேசத்தொடங்கியதும், 'பேச்சை நிறுத்தினால் பரவாயில்லையே?' என்று கலங்குகிறோம். நம்மில் எத்தனை வாசன்கள் என்பது நமக்குத்தான் தெரியும்! அவசியமில்லாத, அறிவற்ற, ஆத்திரப் பேச்சு எனும் மாயவலையில் சிக்கினால் விடுபடமுடியாது என்பது புரிந்தாலும், சிக்குவதைத் தவிர்க்கச் சரியான வழி தெரியவில்லை.

    வேள்வியில் தானமும் பலியும் வழங்கும் நேரத்தில் 'தந்தேன்' என்ற பொருளில் எது சொன்னாலும் அதை வழங்கியது போலாகும். "எமனுக்குத் தந்தேன் உன்னை" என்று எந்த நிமித்தமாக வாசன் சொல்லியிருந்தாலும், அது தானம் தந்ததாகவே ஆகிவிட்டது. அறிவில்லாமல், அவசரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், கொடுத்த வாக்கை எடுக்க முடியாமல் தவித்தான். பெற்ற பிள்ளையை இழக்க மனமில்லை. 'மரபுப்படிக் கொள்ளி வைக்க சந்ததி வேண்டுமே?' என்ற கூடுதல் சுயநலத்தால் புலம்பினானா? அல்லது, தான் செய்த தவறை எண்ணி உண்மையிலேயே வருந்திப் புலம்பினானா?

தந்தை புலம்புவதைக் கண்டான் நசிகேதன். தான் நினைத்தபடியே தந்தை தன்னை வேள்வியில் தானம் வழங்கியதை எண்ணி நிம்மதியடைந்தாலும், காலனுக்குக் கொடுத்தத் தானம் பற்றிய முக்கியக் கேள்வி ஒன்று அவன் மனதில் எழுந்தது. தந்தையிடம் அக்கேள்வியைக் கேட்குமுன், அவர் கழிவிரக்கம் தணியட்டும் எனக் காத்திருந்தான். தந்தையைப் போல் தானும் அவசரப்படக் கூடாது என்று, பொறுமையாக வாசனின் வருத்த மொழிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

20 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

மூன்று வயதில் பேசக் கற்றுக் கொள்ளும் நாம் எப்படிப் பேசக் கூடாது என்பதை ஒரு வாழ்நாள் முழுவதுமே நாம் கற்றுக் கொள்ளவில்லை என்று சொல்வார்கள். எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் பெரிய மனமாக இருக்க வேண்டும் என்று கட்டாயமுமில்லை என்றும் தெரிகிறது. தகப்பன் பாசத்தில் துடிக்கும்போது இள வயது மகன் பாசத்தை மீறி சிந்திப்பது....

பத்மநாபன் சொன்னது…

உரைத்ததன் வன்சொல் உறைத்ததும் ...... உரைத்தது உறைத்தது .. சொல் அலங்காரம் ....

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டுப்படுகிறது .... அறிவு குறையும் பொழுது உணர்ச்சி ஆட்சியை எடுத்துக்கொள்கிறது....

உணர்ச்சி மிகு தந்தை வாசனுக்கு.. அறிவு மிகு மகன் நசிகேதன் அறிவுரையாக என்ன கேள்வி வைக்க போகிறான்......

துளசி கோபால் சொன்னது…

உரையும் உறையும் சும்மா அட்டகாசமான சொல் விளையாட்டு!

கோபம், என்னெல்லாம் பேச வச்சுருச்சு பாருங்க:(

கோபத்தைக் குறைச்சு அது இல்லாம செஞ்சுட்டால் உலகமே ஆனந்தம்தான்.

RVS சொன்னது…

ஹிந்து மஹா சமுத்திரத்தில் சோ எழுதி படித்தேன் இந்த நசிகேதுவை. இப்போது வெண்பாவில் உங்கள் கைவண்ணத்தில் படிக்கிறேன்.
கடோ உபநிஷத் இறந்தபின் நமக்கு என்ன நேரும் என்று மூன்று நாட்கள் யமலோகத்தில் தங்க நேர்ந்த நசி யமியிடம் கேட்டதாக சுருக்கென்று படித்தேன். இங்கே நீங்கள் நறுக்கென்று தமிழ் வெண்பாவில் அசத்துகிறீர்கள். நன்றி அப்பாஜி. ;-)

மோகன்ஜி சொன்னது…

நானிட்ட பின்னூட்டம் ஏதாயிற்றோ கண்டீரா?

அப்பாதுரை சொன்னது…

நன்றி ஸ்ரீராம்,பத்மநாபன், துளசி கோபால், RVS (வாங்க வாங்க), மோகன்ஜி, ...

சனி, ஞாயிறில் ஊரெங்கும் பனிபெய்தது. ஞாயிறு மாலை வரை பனியை ஒதுக்கி வீட்டைச் சுற்றி சுத்தம் செய்து, ஒரே முதுகு வலி! :). இரண்டு மூணு நாளா ஓய்வு எடுத்ததால் பதிவை கவனிக்கவில்லை மோகன்ஜி. பின்னூட்டம் காணோமா? புரியவில்லையே?

மோகன்ஜி சொன்னது…

பேசறதை பற்றிதான் அப்பாஜி! விரிவா போட்டிருந்தேன். போஸ்ட் செய்யும் போது தெரிந்ததே... என்னவோ தப்பு பண்ணியிருப்பேன். என்ன போட்டேன்னு வார்த்தைகளை யோசிச்சு,அப்புறம் விட்டுவிட்டேன். சேர்த்து போட்டுவிடலாம். விடுங்க! தத்துவ விளக்கமாய் அன்றி சமுதாய நோக்கில்,மானுடனின் குணநலம் பற்றி ந.வெ.நல்லமுறையில் சொல்லிச் செல்கிறது. துடுப்பை இந்த திசையிலேயே ,இந்த நிதானத்திலேயே போடுங்கள்.ஐலசா போட நானாயிற்று!

மோகன்ஜி சொன்னது…

முகமதியை முக்காடிட்டே மறைத்தல் ஏனோ? கண்ணையில்ல கட்டியிருக்கணும் !

சிவகுமாரன் சொன்னது…

பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.
பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.
--என்று சொல்வார்கள்.
எண்ணி உரைக்க எதையும் உரைத்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு.

வளர்மதி கணேசன் சொன்னது…

இங்கே நள்ளிரவு. தந்தை என்ற சொல் சரியாகப் பொருந்தவில்லையே என்று பின்னூட்டம் எழுதிச் சரிபார்க்கும் போது கண் முன்னால் அந்தச் சொல் 'முன்பு' என்று மாறியது. அதற்குள் அழுத பெண்ணை தூங்க வைத்து திரும்பினால் அடியே மாறி விட்டது. ஒருவேளை அந்தப் பதிவின் பூதம் இங்கே வந்துவிட்டதோ என்று நடுங்கி பதிவை மூடி விட்டேன்.

மறுபடி தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். புதுவாழ்வின் நெருக்கடியால் முன்போல் எழுத முடியவில்லை. வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

உதவி என்பதெல்லாம் பெரிய வார்த்தை அப்பாஜி.
நாங்கள் பழனி பாதயாத்திரை போகும் போது நகரத்தார் ஆங்காங்கே நின்றுகொண்டு தண்ணீர் பாக்கெட்டும், புளியோதரையும் தருவார்கள். வாங்கிக் கொண்டால் நன்றி சொல்வார்கள். பாதயாத்திரையில் தாங்களும் பங்கெடுத்துக் கொண்ட திருப்தி அவர்களுக்கு. உங்கள் புனிதப் பயணத்தில் நான் தந்தது ஒரு தண்ணீர் பாக்கெட் தான்.

அப்பாதுரை சொன்னது…

சிவகுமாரன், உங்கள் பெருந்தன்மை என்னைச் சிலிர்க்க வைக்கிறது.

பழனி பாதயாத்திரையா? எவ்வளவு தூரம் நடப்பீர்கள்? வித்தியாசமாக இருக்கிறதே?

அப்பாதுரை சொன்னது…

தமிழ்ப்பெயரான அப்பாதுரையை சாப்பாட்டு பொருள் போல் ஜிப்பிய மூவரை என்ன செய்தால் தகும்?

சிவகுமாரன் சொன்னது…

பழனி பாத யாத்திரை கேள்விப்பட்டதில்லையா அப்பாஜி. ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறதே. பழனியை சுற்றிலும் சுமார் 300 கி.மி. சுற்றளவில் உள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் தைபூசத்தை ஒட்டி நடந்து வருவார்கள். சென்னையிலிருந்து வரும் அன்பர்களும் உண்டு. எங்கள் ஊரிலிருந்து 220 கி.மி. ஒரு வாரம் நடந்து வருவார்கள். எனக்கு விடுப்பு கிடைப்பதில்லை என்பதினால் திண்டுக்கல்லில் (60 கி.மி. இருக்கும்போது) இணைந்து கொள்வேன். இரவு நேரங்களில் கவியரங்கமும் பட்டிமனடபமும் களைகட்டும். எல்லாரும் எனக்காக எதிர்பார்த்திருப்பர்கள் புதிதாக நான் எழுதப் போகும் கவிதைகளுக்காக
(அவர்கள் மொழியில் அருட்கவிகள் ).
உடம்புக்கும் மனதுக்கும் சார்ஜ் ஏற்றிக்கொள்வது போலிருக்கும் அந்த பொழுதுகள்.இறை சிந்தனை தவிர வேறெதுவும் இல்லாத இனிய பொழுதுகள்.

சிவகுமாரன் சொன்னது…

அப்பாஜி ன்னு கூப்பிடுறது பிடிக்கலையா அப்பாஜி. எங்களுக்கு பிடித்திருக்கே. வெள்ளைக்காரத் துரை, சீமைத் துரை, காந்திஜி, நேருஜி எது நல்லாருக்கு ?

அப்பாதுரை சொன்னது…

நீங்க சொல்றதுல ஒரு பயலுக்காவது தமிழ் தெரியுமா, சிவகுமாரன்?
(பொக்கைவாயராவது கொஞ்சம் தமிழ்க் கத்துட்டாருனு படிச்சிருக்கேன்.)

இருந்திருந்து எங்க குடும்பத்துலயே எனக்கு மட்டுந்தான் தமிழ்ப்பெயர், மத்த எல்லாருக்கும் வடமொழிக் கடவுள் பெயர்கள் - என்னோட தமிழ் முடியும்னு தெரிஞ்சு எனக்கு அப்படி வச்சாங்களோ என்னவோ!

பாதுரையில் கிடைக்கும் சுகம் பாஜியிலா கிடைக்குதுனு சொல்றீங்க? என்னவோ போங்க. என் கல்லூரி லாஜிக் ப்ரொபசர் எங்களை ஜெயில் கைதி போல் எண் வைத்துக் கூப்பிடுவார். என் எண் 502. அதையே பொறுத்தேன் ஜி என்ன ஜி, விடுங்க! (சைடுல ஒரு சித்தாந்தம்: திருடனுக்கு நெம்பர், பிடிக்கிற போலீஸ்காரனுக்கும் நெம்பர் தான் - உலக நீதி)

ஜிக்கும் சீக்கும் அத்தனை வித்தியாசம் இருக்குறாப்பல தெரியலையே?

அப்பாதுரை சொன்னது…

பழனி யாத்திரை கேள்விப்பட்டதில்லை. சென்னைக் கிணற்றுத்தவளையின் இன்னொரு வருத்தம்.

நீங்க சொன்னபுறந்தான் இணையத்துல தேடிப் பார்த்தேன். அடடா! ரெண்டு வருசத்துல ஒரு முறை போனாக்கூட போதுமே? சபரிமலை பெரியவழி போயிருக்கேன் - இப்ப ரூட் மாத்தி பழநி போயிட வேண்டியது தான். இது இன்னும் மேல்னு தோணுதே?


பகெட் லிஸ்டுல சேத்துக்கிட்டேன். தகவலுக்கு நன்றி.

துளசி கோபால் சொன்னது…

வட இந்திய அரசியல் வியாதிகளுக்கெல்லாம் 'தமில்' நல்லாவே தெரியும்.

மேடையில் பேச ஆரம்பிச்சதும் 'வனக்கம்' சொல்லிருவாங்க.

சிவகுமாரன் சொன்னது…

இன்னொரு தகவல் அப்பாத்துரை
(சரியாக விளிக்கிறேனா ? ஆனாலும் நெருடலாக இருக்கிறதே)
ஒரு குழுவினர் ஏழு ஆண்டுக்கு ஒருமுறை இராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள். பிப்ரவரி 2011 இல் இம்முறை செல்கிறார்கள். என் ஆன்மீக குரு என் சித்தப்பா கலந்து கொள்கிறார். மொத்தம் 118 நாட்கள் நடக்க இருக்கிறார்கள். ஆன்மிகம் தான் நோக்கம் என்றாலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி என்று அறிவித்திருக்கிறார்கள். இது 5 வது பாதயாத்திரை.

அப்பாதுரை சொன்னது…

ராமேஸ்வரம்-காசி பாத யாத்திரையா?! தேசிய ஒருமைப்பாடே ஒரு சிறந்த ஆன்மீகம் தானே? வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள், சிவகுமாரன். இவர்களைப் போன்றவர்களுடன் இந்த உலகத்தைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பே பேறு தான்.