வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/04

வேள்வி விவரம் சொன்னான் எமன்


24
அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள்
முடக்கவொரு மூச்சில் வருந்தீ - புடமிட்டப்
பொன்போலே மின்னும் மனிதமும் பற்றற்றுத்
தன்னுள்ளே தீவளர்க்கும் போது.

    திர் நிலைகளைச் சாராது, மனதுள் அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் சிந்தனைகளைச் செய்தபடி மூச்சை அடக்கிப் பழகுவதே வேள்வி; இந்த நல்லொழுக்க வேள்வித்தீ, மனிதரைப் புடமிட்டுப் பொன் போல் மின்னச் செய்யும் (என்றான் எமன்).


வேதமும் சாத்திரமும் நன்கு கற்றறிந்த ஞானி ஒருவர் இருந்தார். தனக்குச் சுய அறிவு முற்றும் வந்ததென்று நினைத்தார். தன்னை அறியும் வித்தையைப் பற்றி அந்த ஊர் அரசனுக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய பேரறிவைப் பகிரங்கப் படுத்த எண்ணினார். அரசனிடம் சென்று, "அரசே, முழுமையான சுய அறிவைப் பெறுவது எப்படி என்று உனக்குக் கற்றுத் தருவேன்" என்றார்.

அரசனும் அறிஞனே, எனினும் முழுமையான தன்னறிவைப் பெற பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். வாராது வந்த மாமுனி தாராது தரும் பேரறிவை விடுவானா? "பேரறிஞரே, உங்களுக்குப் பொன்னும் மண்ணும் பரிசளித்து மகிழ்வேன். தன்னறிவாம் பேரறிவைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவோடு கேட்டான்.

"ஒரு வேள்வி செய்ய வேண்டும்" என்றார் ஞானி. "மனதை ஒருமைப்படுத்தி மூச்சை அடக்கிப் பல காலம் செய்ய வேண்டிய வேள்வி. உன்னால் முடியுமா?"

"மூச்சைக் கட்ட ஓரளவுக்குத் தெரியும். மனம் தறிகெட்டு ஓடுகிறதே, எப்படி ஒருமைப்படுத்துவது என்று சொல்லித் தருவீர்களா?" என்றான் அரசன்.

"மனதை ஒருமைப்படுத்துவதே தன்னறிவின் முதல் படி. இதோ எதிரில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறானே, சூரியன். அவனே பேரறிவின் சின்னம். அவனையே மனதில் எண்ணி மூச்சைக் கட்டினால் ஒருமைப்படுத்தலாம்" என்றார் ஞானி.

"சூரியனை ஏன் மனதில் வரிக்க வேண்டும்?" என்றான் அரசன்.

"சூரியன் இருளை அகற்றி உலகெங்கும் விழிப்புக்கு வழி செய்கிறான்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சூரியன் என்பது மனிதன் வடித்த உருவம். சூரியன் என்ற உருவத்துக்கு எல்லையுண்டு. சுயேச்சையான சக்தி எதுவும் இல்லை. சுயேச்சையான எல்லயற்றத் தன்மையதான ஒளி சூரியனுக்குப் பின்னணியில் இருப்பதால், நான் ஒளியை மனதில் வரித்து மனதைக் கட்டுப்படுத்துகிறேன். சூரியனை வரித்தால் மனம் சூரியனுக்குக் கட்டுப்பட்டதாகி விடுமே? பிறகு மனம் நமக்கு எப்படிக் கட்டுப்படும்? மேலும், சுயேச்சையான குணத்தை ஒரு உருவத்துள் கட்டி வைத்தால், அவரவர் கட்டிய உருவங்களினால் கலவரம் வருமே? தன்னைப் பற்றிய அறிவை எப்படி வழங்கும்? ஒருமைப்பாடு எப்படி வரும்? என் மக்களுக்குள் உருவங்களால் பிரிவினை வரும். அவர்களுக்கு ஏற்பில்லாதது எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

"அப்படியா? சந்திரனை எண்ணி மனதைக் கட்டு. நான் பலமுறை அவ்வாறு செய்து சுய அறிவு பெற்றிருக்கிறேன்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சந்திரன் என்பதும் மனிதன் வடித்த உருவம். சந்திரனின் தன்மை தண்மை. மனித மனம் அன்பினாலும் பண்பினாலும் குளிர்கிறது. சந்திரனுக்குப் பதில் அன்பையும் பண்பையும் மனதில் வரித்தால், சந்ததியும் சுற்றமும் என்றைக்கும் கொண்டாடுவார்கள். நீங்கள் சொல்லும் வழி என் மக்களுக்கு உதவாது. அவர்களுக்கு உதவாத வழி எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

ஞானி யோசித்தார். வம்பாகி விட்டதே? "வெளி" என்றார். "மன்னா, உன் சிக்கலுக்குத் தீர்வு கண்டேன். வெளி உருவமற்றது, பரந்தது, எல்லையில்லாதது, தனித்தன்மையற்றது. வெளியை வரி" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "வெளியின் தன்மை என்ன? அளக்கமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை. வெளியின் குணங்களை மனதில் வரித்தால் மனம், நிறைவு மற்றும் நிலைத் தன்மைகளை அடையுமே? வெளியை அளக்க முடியும் - இதோ பாருங்கள்" என்று இரண்டு கைகளையும் பந்து போல் அடக்கி அவரிடம் காட்டினான். "இதோ, என் கைக்குள் சிறைப்பட்ட வெளியை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்ல முடியும்" என்று நகர்ந்து காட்டினான். "வெளி என்பதை விட, வெளியின் தன்மைகளான அளவிடமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை என்ற குணங்களை வரிக்கும் மனிதம், குறுகிய ஆசைகளை விடுத்துப் பரந்த நோக்கத்துடன் செயல்படும். நீங்கள் சொல்லும் வெளி என்ற காரியம் என் மக்களுக்குப் பயன் தராது. மக்களுக்குப் பயன் தராத எதுவும் மன்னனுக்கும் பயன் தராது" என்றான் பணிவுடன்.

ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து நீர் நெருப்பு ஒலி உரு கண்ணாடி திசை என்று உருவமும் அருவமுமாகப் பலவற்றை எடுத்துச் சொன்னார் ஞானி. எல்லாவற்றையும் பணிவோடு கேட்டு, குணங்களான காரணங்கள் குண வெளிப்பாடுகளான காரியங்களை விட மேன்மையானவை என்று சொல்லி ஏற்க மறுத்தான் மன்னன். காரணங்களே மனதை ஒருமைப்படுத்தாத நிலையில், காரியங்கள் மனதைக் கட்டாது என்று பணிவாகச் சொன்னான்.

ஞானி சற்று யோசித்து, "தான்" என்றார். "மன்னா, தன்னைத் தானே மனதில் வரித்து மூச்சைக் கட்ட வேண்டும். சுயம், அதாவது தன் ஆத்மாவை விட தன்னறிவைப் பெற்றுத் தரும் அருவம் எதுவும் இல்லை" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "தான் என்று நீங்கள் குறிப்பிடும் சுயம், சுயமல்ல. எல்லையுடையது. அளவுடையது. நிறைவில்லாதது. தான் என்பது சாரமாகும். மனிதத்தின் அடையாளம். மனிதம் என்பதோ பரந்த எல்லையற்ற அளவுகடந்த நிறைவான உணர்வைக் குறிக்கும். மொத்த மனிதத்தையும் மனதில் வரித்தால் மொத்த மனிதத்தின் தன்மைகளான நேயங்கள், அதைவிட மாற்றுக்குறைந்த 'தான்' என்பதற்கு வழிகாட்டுமே? தன்னை மனதில் வரிப்பது என் மக்களுக்கு ஏற்ற வழியல்லை; மக்களுக்கு ஏற்ற வழியே மன்னனுக்கு ஏற்ற வழி" எனறான் பணிவுடன்.

ஞானி பார்த்தார். சரிகை முண்டாசைக் கழற்றி வீசினார். பட்டு மேல்துண்டை மன்னன் காலடியில் வைத்து, மன்னன் காலில் விழுந்தார். "ஐயா, நான் ஞானி இல்லை. நீரே ஞானி. இந்தப் பட்டு மேல்துண்டு என்னுடைய காணிக்கை. என்னை உமது மாணவனாக ஏற்க வேண்டும். தன்னறிவு பெறும் வழியை எனக்கு விளக்க வேண்டும்" என்று மன்னனைக் கெஞ்சினார்.

மன்னன் அதிர்ந்தான். "ஐயா! என்ன இது! என்னைப் போன்றவருக்குப் பாடம் சொல்லி வழி காட்ட வேண்டிய உமக்கு நான் பாடம் சொல்வதா?" என்று பதறினான். ஞானியின் காலில் விழுந்தான். எழுந்து, "ஐயா, நீங்கள் தான் எங்களுக்குக் குரு. இருப்பினும் குரு-மாணவன் என்ற முறையை விட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புரியும் உதவியாக, தன்னறிவு பெறும் முறையை எனக்குத் தெரிந்த வரையில், உங்களுக்குச் சொல்கிறேன்" என்றான்.

பிறகு ஞானியைத் தன் அரண்மனைக்குள் வருமாறு அழைத்தான். இருவரும் அரண்மனைப் பணியாளர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனருகில் சென்றார்கள். "ஐயா பேரறிஞரே... இங்கே உறங்கிக் கொண்டிருப்பவனை வைத்து உங்களுக்கு நானறிந்ததைச் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

"இவன் தூங்கிக்கொண்டிருக்கிறானே?" என்று இழுத்தார் ஞானி.

"துயிலில் இரண்டு வகை. இருவகையிலும் ஐம்புலன்களும் புறவிசைகளும் மனிதனைப் பாதிப்பதில்லை. அறிவு கூட அடங்கியே இருக்கிறது. விழித்துக் கொள்ளக்கூடிய துயிலை வைத்து மட்டுமே என்னறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். மீளாத்துயிலுக்குப் பிறகு ஏற்படுவதை நானறியாததால், மனதையும் அறிவையும் கட்டுப்படுத்தி வைக்கும் சாதாரண உறக்க நிலையை வைத்து நான் அறிந்ததை எடுத்துக்காட்டுகிறேன். என் குறையான அறிவுக்கு என்னை மன்னியுங்கள். விரும்பினால் மேலும் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

    தை முடியவில்லை; தொடர்கிறது. மேற்கண்ட உபனிஷதக் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம். காசி மன்னன் அஜாதசத்ருவுக்கும் பிராமண ஞானி பாலாகிக்குமிடையே நடந்த உரையாடல். நசிகேதன்-எமன் உரையாடலுக்குப் பொருந்தியதால் பாதிக்கதையை என்னால் இயன்றவரை எளிமைப்படுத்தி இங்கே மேற்கோளாகச் சொல்லியிருக்கிறேன். (உபனிஷதக் கதை சற்று கனமானது; உட்பொருளைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் - புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் திருத்தி, மன்னிக்கவும்)

    எத்தனை உருவங்களை மனதில் வைக்கிறோம்! வைத்தும் உருப்படியாக ஏதாவது செய்கிறோமா? உருவங்களின் தன்மைகளை மறந்து விடுகிறோமே? 'கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம். என் உறவினர் ஒருவர் தன் பிள்ளையிடம் சொன்னது:"முண்டம், வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு. சாமி கும்பிட்டிருக்கேன் தெரியுதில்லே? இன்னொரு தடவை தொநதரவு செஞ்சே, பல்லைத் தட்டிக் கைல குடுத்துருவேன்". என்ன கும்பிட்டு என்ன பயன்?!

    இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் வேள்வி, மூச்சையடக்கி மனதைக் கட்டும் வித்தையாகும். இன்றைக்கு 'யோகா' என்று உலகமுழுதும் பழகி வருகிறது. அன்றைய இந்தியாவில் சில சமூகங்கள் பழகிய வித்தை. பிராணாயாமம் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். மூச்சை நன்கு உள்ளிழுத்து அடக்கிச் சீராக வெளியிடும் முறை. எல்லோரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும். உடல் மற்றும் உள்ள உபாதைகள் பலவும் இந்தப் பயிற்சியினால் குணமாகும் என்கிறார்கள். மூச்சை இழுத்து அடக்கிச் சீராக வெளியிடுவதில் பலனுண்டு. மேலாக, நல்ல எண்ணங்களை மனதில் தேக்கி அவற்றினூடே மூச்சடக்கிப் பழகினால், நிச்சயம் பரவலான பலனிருக்கும் என்றே தோன்றுகிறது.

    'அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கல்களை அடுக்கி அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி' என்றான் எமன். 'பற்றற்ற' என்றும் சொன்னான் (எத்தனை ற!). இதற்குப் பொருள், எல்லாவற்றையும் துறந்த நிலை அல்ல. இன்பம்-துன்பம் போன்ற இருநிலை-எதிர்நிலைகளை அறிந்து, எந்த நிலையையும் முற்றிலும் சாராமல் இருப்பதையே 'பற்றற்ற நிலை' என்றான் எமன். 'மனிதம் இருநிலைகளையும் அனுபவிக்க வேண்டும்; அனுபவத்தால் அறிய வேண்டும்; அறிந்த பின் தெளிய வேண்டும்' என்பதே எமன் சொன்னது.

    பற்றறுத்த நிலையில் நாள்தோறும் நல்லெண்ணங்களை மனதில் தேக்கி, மூச்சடக்கிப் புரிய வேண்டிய வேள்வியைப் பற்றி எமன் விவரித்ததை நசிகேதன் பொறுமையாகக் கேட்டான். மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்காக வேள்வி செய்வதாகச் சொன்னாரே தந்தை? எமனோ, 'தன்னுள்ளே தீ வளர்த்து நல்லெண்ண நெய் வார்க்க வேண்டும்' என்கிறாரே? மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? அவன் மனதில் மரணம் குறித்த சந்தேகங்கள் எழத் தொடங்கின.

20 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

வெண்பாவும் விளக்கமும் அருமை அய்யா

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! எனக்கு குறள் ஒன்று நினைவு தட்டுகிறது.
"பற்றுக; அப்பற்றான் பற்றினை, அப்பற்றினைப்
பற்றுக பற்றுவிடற்கு."
பற்றற்றவன் அவன்! அவன் காலினைப் பற்றிக்கோள்.எதற்குதெரியுமா? பற்றினை விடுவதற்கு" என்றார் வள்ளுவர்.
நம் முன்னோர்களின் சிந்தனைத்தெளிவு வியக்க வைப்பதாகும்.---காஸ்யபன்..

பத்மநாபன் சொன்னது…

'//அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கல்களை அடுக்கி அதனுள் மூச்சு எனும் தீயை வார்த்துப் புரிய வேண்டிய வேள்வி//' இதைத்தான் இங்கிருந்து அமெரிக்கா வரும் அனைத்து சாமியார்களும் சொல்லி வருகிறார்கள் சற்று நாட்களுக்குள் பல கோடியில் ஆஸிரமம் கட்டி விடுகிறார்கள்...இருப்பவன் சும்மா கொடுத்துவிடுவானா சாமியார்களுக்கு.. எல்லாம் கிடைத்தும் எதோ ஒரு வெறுமை ..அதனால் தான் சாமியார்களுக்கு அள்ளிக்கொடுத்து வெறுமையை நீக்கும் உபாயம் கேட்கிறார்கள்.வெறுமையை நீக்க நிங்கள் சொன்ன விஷயத்தை பல ஜோடனைகளோடு சொல்கிறார்கள். இந்தக் கையில் காசு கொடுத்து அந்த கையில் வாங்க கூடிய விஷயங்களா என்ன.....

தூக்கத்திலிருந்து ஞானம் கற்ற மன்னனின் மீதி கதையையும் கேட்கும் ஆவல் கூடியுள்ளது..

ஸ்ரீராம். சொன்னது…

//"பிராணாயாமம் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டிருக்கிறேன்."//

மூச்சுப்பயிற்சி..! சுவாசக் கட்டுப்பாடு...! ஆனால் ஏன் இதை தமிழ் 'படுத்த' வேண்டும்?

சாய்ராம் கோபாலன் சொன்னது…

அருமை அப்பாதுரை அருமை

//'பற்றற்ற' என்றும் சொன்னான் (எத்தனை ற!)//

ஆனால் எத்தனை அழகான வார்த்தை.

காஷ்யபன் சார், அப்பப்ப உங்கள் குரலில் இன்னும் அதிக "றற்"

சிவகுமாரன் சொன்னது…

வெண்பா அருமை.
உபநிஷதக் கதை இன்னும் அருமை.

\\\கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம்.///

என் அப்பா அடிக்கடி பூஜையறையில் நின்றுகொண்டு அது சரியில்லை இது சரியில்லை என்று என் அம்மாவை திட்டுவார், ஒருமுறை என் அம்மாவை வரம்பில்லாமல் திட்டும் போது என் தம்பி " ஒருநாள் சாமி கைநீட்டி அப்பாவை அறையப் போகிறது' என்றான்.

meenakshi சொன்னது…

உபநிஷத்து கதை மிகவும் அருமை. 'விரும்பினால் மேலும் சொல்கிறேன்' என்ற மன்னன் மேலும் என்ன சொன்னான் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. இந்த வெண்பாவிற்கு ஏற்ற அருமையான எடுத்துக் காட்டை பதிவிட்டு இருக்கிறீர்கள். மிகவும் நன்றி! வெண்பாவும் விளக்கமும் அருமையாக இருக்கிறது.
தன்னறிவு பெறுவது, பற்றற நிலை இதெல்லாம் அறிந்து தெளிவடையும் பக்குவமும், அறிவும் எனக்கு இருக்கிறதா, வருமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் யாரையும், எதற்காகவும் எதிர்பார்க்காமல், தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும், அதுவே பெருந் தவம் என்று தோன்றுகிறது.

சிவக்குமார் உங்கள் அப்பாவை பற்றி நீங்கள் எழுதி இருந்ததை படித்தபோது, என் அப்பாவை பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. என் அப்பா உயிரோடு இருந்தவரை தினமும் இரண்டு நேரமும் சுலோகம் சொல்லுவார். அப்பொழுது நானும் என் அண்ணாவும் பாடல்களை கேட்போம், டிவி பார்ப்போம். எங்கள் வீடும் மிக மிக சிறியது. ஆனால் ஒரு நாளும் என் அப்பா சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தியதில்லை. எனக்கு தெரிந்தவரை யாரையுமே எதற்கும் குறை சொன்னதும் இல்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையே ஒரு தவம்தான் என்று எண்ணி மனம் நெகிழ்கிறேன்

RVS சொன்னது…

ஒவ்வொரு பதிவாக அமைதியாக படித்து இன்புறுகிறேன். இங்கு கமெண்ட்டு போடும் நண்பர்கள் போல என்னால் விஸ்தரித்து கருத்துரைக்க முடியாமல் பிரமித்துப் போய் சத்தமில்லாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி அப்பாஜீ!!! ;-)

அப்பாதுரை சொன்னது…

நன்றி திகழ், kashyapan, பத்மநாபன், ஸ்ரீராம், சாய், சிவகுமாரன், meenakshi, RVS, ...

அப்பாதுரை சொன்னது…

அருமை காஸ்யபன். பற்றற்ற குறளில் மறைபொருள் உண்டு என்று அன்றைக்கும் நினைத்தேன்; கடோவின் contextல் மறைபொருள் தெளிவாகிறது போல் தோன்றுகிறது. கடவுள் என்ற பொருளே கண்மூடவேண்டாம் என்று சுட்டிக்காட்டத் தானோ?

அப்பாதுரை சொன்னது…

ஐடியா கொடுத்தீங்க பத்மநாபன் :)

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராம், பிராணாயாமம் என்று சொல்வதற்குள் மூச்சு வாங்குகிறது :) தமிழில் சொல் இருந்தால் இந்தப் பழக்கம் பல சமூகங்களுக்கும் பரவியிருக்கும் என்று நினைக்கிறேன். என் தென்கலை நண்பர்கள் யாருக்காவது கலைச்சொல் தெரிந்திருக்கும். கேட்க வேண்டும்.

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவது எளிது என்றாலும் ஓசை நயம் மறைந்துவிடுகிறது. தமிழ்ச்சொல்லுக்கும் தமிழ்ப்பொருளுக்கும் வேறுபாடு உண்டே? இந்நாளில் தமிழ்ப்பொருளே தமிழ்ச்சொல்லாகி விடுகிறது. என்ன செய்ய! (தமிழ்ச் சொல்லாக்கம் பற்றி நண்பர் மணிவண்ணன் அருமையாக எழுதியிருக்கிறார் அவர் பதிவுகளில். பாரதியார் ஒரு ஆங்கிலச்சொல்லுக்கு தமிழ் தேடித் ததிங்கிணத்தோம் போட்டாராம். நாம் இன்றைக்கு அவர் ஆடலின் பலனை அனுபவிக்கிறோம் - படித்துப் பாருங்களேன்?!)

அப்பாதுரை சொன்னது…

முற்றிலுஞ்சரி சிவகுமாரன். என்னப்பனும் யோக்கியமில்லை அந்த வகையில்.

meenakshi, உங்கள் தந்தையின் அன்பு உங்கள் வரம் என்று தோன்றுகிறது. நன்று.

இறைவழிபாடு இந்நாளில் பல விதங்களில் பகட்டாகி விடுவதைப் பார்க்கிறேன்.

போன வருட இந்தியப் பயணத்தில் சுவாமிமலை சென்றிருந்தேன். தமிழில் அர்ச்சனை நேரத்தின் போது சேராத கூட்டம் வடமொழி அர்ச்சனையின் போது சேர்ந்து விட்டது - கூட்டம் திடீரென்று வந்துவிடவில்லை, அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருந்தது! வடமொழி புரிந்த அளவுக்கு இவர்களுக்குத் தமிழ் புரியவில்லையோ என்று நினைத்தேன்.

கும்பிட வந்த கூட்டத்தில் ஒரு பெண்மணியின் பட்டுப்புடவை நகை மோதிரங்களைப் பார்த்து ரசித்த (பொறாமையில் வெந்த) அளவுக்கு அங்கிருந்தவர்கள் சிவகுமாரனைப் பார்த்தார்களா தெரியவில்லை சிவகுமாரன்!

வடபழனி கோவில் வாசலில் ஒரு பிள்ளையை நையப் புடைத்துக் கொண்டிருந்தார் இன்னொருவர் - சிறுபிள்ளையை எல்லார் முன்னாலும் அடித்தவர் நெற்றியில் விபூதியும் குங்குமமும் ஜொலித்தது!

எல்லாவற்றையும் விட என்னை அதிகம் பாதித்தது: பற்றறுக்க போதிக்கும் 'பரமகுரு'வுக்கு '75வது வருடப் பிறந்த நாள் கொண்டாடும்' விவரம் பற்றிப் பார்க்கும் இடமெல்லாம் போஸ்டர்!

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது சாதாரண குறைகளுடன் சாதாரணமாய் வாழும் சாதாரணர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

அப்பாதுரை சொன்னது…

RVS, நீங்கள் படிப்பதே எனக்குப் பெருமைதான்.

அப்பாதுரை சொன்னது…

பதமநாபன், meenakshi.. மிச்சக்கதை ப்ரஹதாரண்யக உபநிஷதில் வருகிறது. (பெயரைக் கண்டு நானும் பயந்தேன்;)

மோகன்ஜி சொன்னது…

கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்.
கள்ளம்உள் அறுத்தபோது கதியிதன்றிக் காண்கிலீர்.
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முள்ளே சிறந்ததே சிவாயமே.

உபநிஷதக் கதையின் சாரத்தை உள்ளபடியே தந்திருக்கிறீர்கள்.

பிராணாயாமத்துக்கு மூச்சுப் பயிற்சி,வாசிப் பயிற்சி என்பவை தமிழ் பதங்களாய் கொள்ளலாம். இந்த சொற்கள் கவர்ச்சியாய் இல்லையெனில் பிராணாயாமத்தையே உபயோகிக்கலாமே.(ரொம்ப மூச்சு வாங்கினால் வெண்டிலேட்டர் தான்!)

இதுக்கும் ஒரு பாட்டு சொல்லவா மொதலாளி?

கடைவாசலைக் கட்டிக் கலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல வந்திருப்போர்க்கு
உடையாமல் ஊழி இருக்கலுமாமே.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது சாதாரண குறைகளுடன் சாதாரணமாய் வாழும் சாதாரணர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது//

அப்பாதுரை கரெக்ட்

"சாய்ராம்" என்ற பொறுப்பில் எனக்கு இருக்கும் கடமையை சரிவர செய்யும்போது நானே ஒரு மகான் தான்.

போஸ்டர் போடாவிட்டாலும் சாணியை அடிக்காமல் இருந்தால் போதும் என்று இருக்கு

சாய்ராம் கோபாலன் சொன்னது…

// சிவகுமாரன் ....என் அப்பா அடிக்கடி பூஜையறையில் அது சரியில்லை இது சரியில்லை என்று என் அம்மாவை திட்டுவார், ஒருமுறை என் அம்மாவை வரம்பில்லாமல் திட்டும் போது என் தம்பி " ஒருநாள் சாமி கைநீட்டி அப்பாவை அறையப் போகிறது' என்றான் //

சாமி என்று ஒன்று இருக்கின்றதா சிவகுமாரன் ?

ஏதோ நாமாக மனதில் நினைப்பது தான் ? ஏதோ மன நிம்மதிக்காக உருவகபடுத்தி கும்புடுகின்றோம் ? அம்புட்டுதான் !!

பத்மநாபன் சொன்னது…

//ஐடியா கொடுத்தீங்க //
இந்த துறையில் கால்வாசி சுத்தமா இருந்தாலே பல கோடிகள் காலடிக்கு வந்துவிடும்..கோடிகள் வர ஆரம்பிச்சவுடன் புத்தி பேதலிப்பு ஆகிவிடுகிறது..
உண்மையில் `` வேள்வி`மாதிரி மறை பொருள் விளக்கத்திற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...
வள்ளலார் காலத்தில்தான் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்றார் ..இப்பொழுது கொள்வதற்கு கூட்டம் கூட்டமாக வரத்தயார் .... சொல்பவர் தான் கடைசி வரை தடம் மாறாமல் சொல்லிக்கொடுக்கவேண்டும்...

அப்பாதுரை சொன்னது…

வாங்க மோகன்ஜி.
கள்ளவுள்ளமே... சிவவாக்கியரா? அருமை.