வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/11/17

என்னுரை

    'உபநிஷது' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'பிரம்மத்தைப் பற்றிய அறிவுரை' என்று பொருள். 'பிரம்மம்' என்றால் மெய்யறிவு. 'பிரம்மன்' என்ற சொல்லுக்கு 'அறிந்தவன்' என்று பொருள் உண்டு. 'அகம் பிரம்மம்' அதாவது 'தானே பிரம்மம்' என்ற பொதுவான நோக்குப்படி பார்த்தால், 'தானே அறிவு' அல்லது 'தன்னைப் பற்றிய அறிவு' என்று பொருள் கொள்ளலாம். சுய அறிவு என்று நான் பொருள் கொண்டிருக்கிறேன். கடோபனிஷது: ஒரு கதை வழியாக மனித நேயங்களைப் பற்றிய போதனை. தன்னறிவுக்கான வழிகாட்டி.

கடோபனிஷதைப் புரிந்து கொள்ள, நான் படித்தாலோசித்தப் புத்தகங்கள்:
• ஸ்ரீ சந்திரவசு எழுதிய 'யஜூர்வேதீய கடோபனிஷத ப்ராரம்ப:' எனும் வடமொழி நூல் (1900 காலப் பதிப்பு, சிகாகோ பொது நூலகம்)
• சந்திரவசுவின் புத்தகத்தைப் பற்றி சிகாகோ மாணவர்கள் எழுதியப் பழைய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் (சிகாகோ பொது நூலகம்)
• 'ஆதிசங்கரர் எழுதிய கடோபனிஷத பாஷ்யம்' பற்றிய ஆங்கில விளக்கக் கட்டுரைகள் (உலக வேதாந்தக் கல்வி, சிகாகோ பொது நூலகம்)
• திரு.ராஜாஜி எழுதிய கடோபனிஷத நூல் சுருக்கம் (வானதி பதிப்பகம்)
• சுவாமி சின்மயானந்தாவின் கடோபனிஷத விளக்கம் (சின்மயா மிஷன்).

சந்திரவசுவின் வடமொழி வடிவத்தில் ஆறு பகுதிகள், நூற்றுப் பத்தொன்பது செய்யுட்கள் உள்ளன. பிற புத்தகங்களில் ஒன்றிரண்டு கூடவோ குறையவோ காணப்படுகிறது.

வடமொழிக் கடோவில் ஆறு பகுதிகள். முதல் மூன்று பகுதிகளின் கருத்துக்களே மீண்டும் கடை மூன்றில் சொல்லப்படுகின்றன. கடோவைத் தழுவி எழுதினாலும், தமிழில் சற்றுச் சுறுக்க நினைத்திருக்கிறேன்.

தமிழ் நூலில் சற்றே மாறுபடவும் எண்ணியிருக்கிறேன். உதாரணமாக, 'நசிகேதன் எமன் வீட்டில் காத்திருந்தான்' என்ற சாதாரணக் கருத்தைப் பல பாடல்களில் விளக்கும் வடமொழிச் செய்யுட்களைச் சுருக்க முற்பட்டிருக்கிறேன். யாக மற்றும் யோகச் சடங்குளின் விவரங்களாக எழுதப்பட்டிருக்கும் பல செய்யுட்களை ஓரிரு செய்யுளில் சுருக்க எண்ணியிருக்கிறேன். ஒரே செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் சில அருமையான கருத்துக்களை விரிவாக்க முயற்சித்திருக்கிறேன். எனவே, செய்யுட்கள் குறையுமா கூடுமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. என்னிடம் இருப்பவை நானெடுத்தக் குறிப்புகள் மட்டுமே :)

நானும் அரசனும் தொடங்கிய கூட்டு முயற்சி எனினும், கடவுள்-மத நம்பிக்கையின்மை குறுக்கே வருகையில், எடுத்துக்கொண்ட சுதந்திரங்களுக்கு (தவறுகளுக்கும்) நானே பொறுப்பு. நசிகேத வெண்பாவின் சில சுதந்திரங்களையும் வேறுபாடுகளையும் விலகல்களையும், இங்கே குறிப்பிடவேண்டியது என் கடமை. உதாரணமாக, நசிகேத வெண்பாவில்
• ஓம் என்ற சொல் ஒரு தியான சாதன ஒலி மட்டுமே
• கடவுள் வாழ்த்துக்குப் பதில் அறிவுக்கு வாழ்த்து
• 'ஆரியன்' போன்ற சமூகக் குறிப்புணர்த்தும் விவரங்கள் இல்லை
• சடங்குளின் விவரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன
• 'ஆண்களுக்கு மட்டும்' என்று எதுவும் இல்லை
• மரணபய வெற்றியின் ரகசியம் பொதுவுடமை (வடமொழியில், 'தகுதியுடையோர்' புரிதலுக்கு மட்டுமே!)

நூலின் கருப்பொருள் சேதமடையவில்லை என்று நம்புகிறேன். தமிழ் வடிவில் குற்றமோ தவறோ இருந்தால், அதற்கு என்னுடைய சிற்றறிவும் கவனக்குறைவுமே காரணம். கடவுள் மதக் கொள்கைகளில் வேறுபட்டாலும், வாழ்க்கை நெறிகளிலும் மனிதநேயத்திலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொதுவான நம்பிக்கை உண்டு. அந்த வகையில், இந்த நூல் படிப்போர்க்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உளமார்ந்த நன்றி
• நூலகத்துள் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் புத்தகங்களைத் தினமும் எனக்காக ஒதுக்கிவைத்த சிகாகோ பொது நூலகத்தின் சூசன் பெகோஸ்காவுக்கு
• ஓய்வுக்காக இலங்கை சென்ற பின்னும், நான் எழுதியவற்றைப் படித்துத் திருத்தங்களும் அறிவுரையும் ஊக்கமும் அவசரமும் கொடுத்த அரசனுக்கு
• என் எழுத்தையும் ஒரு பொருட்டாக எண்ணிப் படிக்கத் துணிந்திருக்கும் அன்புக்குரிய உங்களுக்கு.

16 கருத்துகள்:

அரசூரான் சொன்னது…

//கடவுள் மதக் கொள்கைகளில் வேறுபட்டாலும், வாழ்க்கை நெறிகளிலும் மனிதநேயத்திலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொதுவான நம்பிக்கை உண்டு. அந்த வகையில், இந்த நூல் படிப்போர்க்குப் பயனுள்ளதாக இருக்கும்//
பொதுவில் இருப்பின் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்... உலகப் பொதுமறை திருக்குறள் போல.

பத்மநாபன் சொன்னது…

அறிவு, இயற்கை பெயரில் ஒன்றுமில்லை .. அந்த பேரறிவை, நம்முடைய சுய அறிவு கையாளும் விதம் தான் முக்கியம். அதற்கு கடோபனிஷதத்தில் விடையை நெருங்கமுடியும் போல் உங்கள் உரையை படித்தவுடன் தோன்றுகிறது..இந்த பொருளை எடுத்ததற்கு மிக்க நன்றி..நன்றிகள் தொடரும்

அப்பாதுரை சொன்னது…

பத்மநாபன், கடவுளையும் இயற்கையையும் ஒரே தட்டில் வைக்க மனமொப்பவில்லை. சடங்குகளுக்கும் பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது இயற்கை. இருந்தாலும், நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. கடவுளுக்குப் பதிலாக அறிவுக்கு வாழ்த்து என்று நான் எழுதியது தவறோ?. கடவுள் நம்பிக்கை இருப்போருக்கு அறிவில்லை என்ற பொருளில் எழுதவில்லை. கடவுளை எத்தனை நம்பிக்கையோடு வணங்குகிறோமோ, அமைதியையும் அறிவையும் அத்தனை நம்பிக்கையோடு வணங்குவோம் என்ற பொருளில் சொல்லியிருக்கிறேன். அறிவை விட அமைதிக்கு வாழ்த்து என்பது இன்னும் பொருத்தமென்று நினைக்கிறேன். (இப்பொழுது தோன்றுகிறது :) வாழ்த்துப் பாடலைப் படித்ததும் என் கருத்தை ஏற்பீர்களென்று நினைக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

பத்மநாபன் சொன்னது…

பாகுபாடுகள் மனித குறைபாடுகள்...இப்பொழுது சடங்குகள் என்று சொல்பவை ஒரு சாரத்தோடு ஆரம்பித்து இருப்பார்கள் . சாரத்தை விட்டு விட்டோம் எனவே சடங்குகள் பாரமாக இருக்கின்றன.கூடவே கடவுளும் கனக்கிறது.. மனமொப்பாதவர்களை கடவுள் என்றும் கசக்குவது இல்லை..ஆதிசங்கரர் ஆகட்டும் நீங்கள் குறிப்பிட்ட மற்ற ஆசிரியர்கள் ஆகட்டும் செயற்கை, இயற்கை, தாண்டி கடவுள் வரை ( எனக்கு முழுமுதற் பொருள் கடவுள் என்று பெயர் ..மற்றவர்களுக்கு எப்படியோ ) சென்று திரும்பியிருக்கிறார்கள்.

சீக்கிரம் ’’அந்த’’ வாழ்த்துப்பாடலை ப்போடுங்கள்.

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் சொல்வது சரியே, பத்மநாபன். எல்லாமே மனிதனின் படைப்புகள் தான்.

பின்னுரையில் விரிவாகச் சொல்ல எண்ணியிருக்கிறேன். உங்கள் பின்னூட்டம் கொஞ்சம் கோடி காட்ட வைக்கிறது. என்ன சுதந்திரம் எடுத்துக் கொண்டாலும் கடோபனிஷது புத்தகம் அடிப்படையில் 1) 'நம்பிக்கை' புத்தகம், கடவுளின் தேவையை அறிவுறுத்தும் புத்தகம் தான்; இருப்பினும், கடவுள் யாரென்பதை அறிய வைக்கும் புத்தகம் 2) தியாகச் சடங்குகளின் தேவைகளை வலியுறுத்தும் புத்தகம் தான்; இருப்பினும், தியாகம் செய்ய வேண்டியவை பொன்னும் பொருளும் மட்டுமல்ல என்பதை அறிய வைக்கும் புத்தகம் 3) மரணத்துக்குப் பின் உயிரின் போக்கைச் சொல்லும் 'கண்மூடித்தன'ப் புத்தகம் தான்; இருப்பினும், மரணம் என்றால் என்ன என்று அறிய வைக்கும் 'கண் திறக்கும்' புத்தகமும் கூட.

நசிகேதன் கதையை முதலில் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பாடல்களுக்குப் போக எண்ணியிருக்கிறேன். (அதற்குள் ஒன்றிரண்டு எழுதிவிடலாம் என்ற எண்ணமும் தான் :)

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி, இயற்கை என்பது கடவுளின் விளையாட்டாகத்தான் இருக்க முடியும். இயற்கையின் பரந்த ஒழுங்கும்,அதன் பல கூறுகளும் கூட ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்றாய் விரியும் நேர்த்தியும் ஏதோ ஒரு பெரிய கணக்கின் கண்ணிகளே அல்லவா? அந்தக் கணக்கைப் படைத்தவன் இறைவன். விடையை மனிதன் தேடும் களமாக இயற்கையை அமைத்த சூத்திரதாரி இறைவன்.

உங்கள் படைப்பை அனுபவிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது பின்பாட்டு பாடவும் உத்தேசம். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் எனும் பிரார்த்தனையுடன்
மோகன்ஜி,ஹைதராபாத்

அப்பாதுரை சொன்னது…

சூத்திரதாரி கடவுள் என்று நீங்கள் நம்பினால் நான் குறுக்கே வரவில்லை மோகன்ஜி; கடவுளைப் பற்றி இன்னொரு வலைப்பூவில் சந்திக்கலாம் :)

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

meenakshi சொன்னது…

இன்றுதான் இந்த பதிவை தற்செயலாக பார்த்தேன். நீங்கள் மீண்டும் இதை எழுத தொடங்கி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அப்பாதுரை! நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தேன். தொடர்ந்து படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். தொடருங்கள்.......

ஸ்ரீராம். சொன்னது…

பத்மநாபன், மோகன்ஜி போன்றோரின் பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் இணைத்து சேமித்து படிக்கிறேன்... தொடருங்கள்..

geetha santhanam சொன்னது…

கடோபனிஷத் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அபிராமி அந்தாதி போல் இதையும் நன்றாக எழுதி முடிக்க வாழ்த்துக்கள்.
அரசன் அவர்கள் மறைவு குறித்துப் படித்ததும் வருத்தமாக இருந்தது. அவரைப் பார்த்திராவிட்டாலும் உங்கள் பல பதிவுகளில் என் ஆசான் என்று அவரைப் பற்றி பெருமையாகச் சொல்லி படித்திருந்ததால் அவரின் மறைவு மனதை வருத்துகிறது.

meenakshi சொன்னது…

அரசன் அவர்களின் மரணம் பற்றி நேற்றிரவு இந்த பதிவில் படித்துபோதுதான் தெரிந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இரவு முழுவதும் உறக்கம் வராமல் வேதனையில் மனம் அழுதது. வலைப்பூ பயணத்தில் தொடங்கிய அறிமுகம் அதிலேயே முடிந்து விட்டது. தமிழ் மொழி மேல் அவருக்கிருந்த பற்று போற்றுதற்குரியது. அவரின் அருமையான எழுத்தும், மொழி வளமும் மிகவும் பாராட்டுக்குரியது. பதிவின் மூலம் கிடைத்த நட்புதான் என்றாலும் பின்னூட்ட கருத்துக்கள் மூலம் நான் உணர்ந்துகொண்ட அவருடைய நல்ல மனமும், பண்பும் எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. மிகவும் நல்ல மனிதர். இன்னமும் மனம் ஆறவில்லை.

R. Gopi சொன்னது…

மற்ற பகுதிகளையும் படிக்கிறேன்

அப்பாதுரை சொன்னது…

Gopi Ramamoorthy, உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி.

நல்ல யோசனை. குறிப்பிட்ட சொல் ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள், என் அறிவுக்கு எட்டியவரை உச்சரிப்பு விவரம் சேர்க்கிறேன்.

எனினும், இது தமிழ்ப் படைப்பு. முடிந்தவரை வடமொழி நினைவுபடுத்தாத விதத்தில் எழுத எண்ணியிருக்கிறேன். தவறாக நினைக்காதீர்கள். பெயர்ச்சொல் உச்சரிப்பு எப்படி இருந்தாலும் தமிழில் அது இனிமை தான். (ஏஆர்ஆர் பாடல்கள், ரஜினிகாந்த் பேச்சு..:)

உடல்நலமில்லாத காரணத்தால் உங்களுக்கு உடனே நன்றி தெரிவிக்க முடியவில்லை, மன்னியுங்கள்.

Geetha Sambasivam சொன்னது…

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. இயற்கை குறித்து என் கருத்தும் மோகன் ஜி கருத்தே. பயங்கரமாக ஆராய்ச்சி செய்திருக்கீங்க. இதிலே உங்க எழுத்தை ஒரு பொருட்டா மதிக்கறதை வேறே சொல்றீங்க. நானெல்லாம் எங்கே போய்ச் சொல்றது!

Geetha Sambasivam சொன்னது…

• ஓம் என்ற சொல் ஒரு தியான சாதன ஒலி மட்டுமே //

ம்ம்ம்ம்ம்??? தொடர்ந்து "ௐ" அடி வயிற்றிலிருந்து சொல்லிப் பார்த்திருப்பீர்கள் தானே? அப்போதும் மாற்றம் தெரியவில்லையா?

Geetha Sambasivam சொன்னது…

அறிவுக்கு வாழ்த்து? ம்ம்ம்ம்ம்?? சரி, சரி. ஒருத்தர் இயற்கையைக் கடவுளாகக் கும்பிட்டால் நீங்க அறிவை?? ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்து தானே இருக்கு?

இயற்கையைப் புரிந்து கொள்ளும் அறிவு இருந்தால் கடவுள் என்னும் உன்னத தத்துவத்தையும் புரிந்திருக்கும். மற்றபடி இதில் பேசவும், சொல்லவும் நிறைய இருக்கு. வளரும். இங்கே நசிகேதனை மட்டுமே பார்க்கலாம்.