77
விழியிழந்துப் பின்விழி பெற்றாலும் வாசன்
மொழியிழந்தான் மைந்தனைக் கண்டு - எழில்கூடி
மண்வந்த மைந்தன் கடலானான் தந்தையின்
கண்களில் காவிரி கண்டு.
மொழியிழந்தான் மைந்தனைக் கண்டு - எழில்கூடி
மண்வந்த மைந்தன் கடலானான் தந்தையின்
கண்களில் காவிரி கண்டு.
தன் மைந்தனைக் கண்ட வாசன் கண்ணிழந்த குருடர் கண் பெற்றது போல் மகிழ்ந்தாலும், அதை வெளிப்படுத்தும் மொழியிழந்து நின்றான். பேச்சிழந்தத் தன் தந்தையின் கண்களில் நதியெனப் பெருகியக் கண்ணீரைக் கண்டதும், அழகும் உயர்வும் பெருகி மண்ணுலகம் மீண்ட மகன் நசிகேதனின் கண்கள் கடலானது.
எமனின் ஆட்கள் நசிகேதனை வாசனின் அரண்மனையில் விட்டுப் போனார்கள்.
நசிகேதனைக் கண்டக் காவலர்கள் அவன் காலில் விழுந்து வணங்கினார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தான் நசிகேதன். அவனைக் கண்டவரெல்லாம் கும்பிட்டனர். காலில் விழுந்தனர். 'யார் இந்த இளைய மகான்? எம் இளவரசர் போலவே இருக்கிறாரே?' என்று அச்சத்திலும் அதிசயத்திலும் வணங்கினார்கள். சலசலப்பு அரண்மனைக்குள்ளும் எட்டியது. சிலர் ஓடிச்சென்று மன்னன் வாசனிடம் செய்தி சொன்னார்கள்.
'இதென்ன எமதூதர்களின் வருகை!' என வெருண்டு வெளியில் வந்த வாசன், அறை வாயிலில் நின்றவனைக் கண்டு வாயடைத்துப் போனான். 'என் மகன் போலவே இருக்கும் இவன் யாராக இருக்கும்?. என் மகனை இழந்த சோகத்தில் யாரைப் பார்த்தாலும் நசிகேதன் போலவே இருக்கிறதே? இவன் நசிகேதனை விட அழகாகவும் பொலிவுடனும் இருக்கிறானே! இவன் முகத்தில் வீசும் அமைதியின் ஒளி ஆயிரம் தீப்பந்தங்களைத் தோற்கடிக்கிறதே! யார் இவன்?' என்று பலவாறு எண்ணியபடி வாயிலை நோக்கி நடந்தான்.
"அப்பா!" என்றான் பிள்ளை. ஆயிரம் தீப்பந்தங்கள் சுட்டாற் போல் இருந்தது வாசனுக்கு. இருந்தும் தேன் குடங்கள் சரிந்தாற் போல இனித்தது.
"நசிகேதா! என் மகனே!" என்று உரக்கச் சொல்லி உவகை பெற நினைத்தவன், திடுக்கிட்டான். பேச முடியவில்லை. நா எழவில்லை. 'இதென்ன கொடுமை! இத்தனை நாள் குருடனாக இருந்தேன். கண் திறந்தக் கணத்தில் வாய் மூடியதே?' என்றுக் கலங்கினான். 'இதுவும் நன்மைக்கே. வாய் தவறியதால் வந்த வினையில் தானே இவனை இழந்தேன்? வாய்ச் சொல்லில் என்ன பயன்?' என்று அடங்கினான்.
'மகனே!' என்று மனதால் அழைத்தான் வாசன். கண்களில் திரண்டக் கண்ணீர் நதியாக ஓடியது.
தந்தையின் நிலையைக் கண்ட மகன் நசிகேதனின் மனமும் கரைந்துருகியது. நதியைத் தேடிவந்த கடல் போல் அவன் தந்தையிடம் ஓடினான். அவன் கண்களிலும் கடலெனக் கண்ணீர்.
காலில் விழப்போன மகனைத் தடுத்து நிறுத்தினான் வாசன். அனைவரும் பார்த்து நிற்க, மகனின் கால்களில் விழுந்து வணங்கினான் தந்தை. ►