44
நன்மையும் இன்பமும் நேரெதிர் பாதையிவை
மன்பதையைத் தக்கி முடக்கிடும் - தன்மையிலே
இன்பவழி ஊர்சுற்றிச் சேரா இடஞ்சேரும்
நன்மையே நேர்வழி ஆகும்.
மன்பதையைத் தக்கி முடக்கிடும் - தன்மையிலே
இன்பவழி ஊர்சுற்றிச் சேரா இடஞ்சேரும்
நன்மையே நேர்வழி ஆகும்.
இன்பத்தைத் தேடுவதும் நன்மையைத் தேடுவதும் முரணான செயல்கள்; இரண்டுமே உலகத்தாரைத் தமது பிடியில் வசப்படுத்தி வைக்கின்றன. இன்பத்தையே தேடுவோர், தவறான வழியில் சுற்றி இலக்கையும் தவறவிடுவர்; நல்வழிகளோ, பாதை தவறாமல் இலக்கை அடையச் செய்கின்றன (என்றான் எமன்).
மன்பதை: மானிடம்
தக்கி: பிணைத்து, கட்டி, வசப்படுத்தி
['..there are two principles, whose guidance we follow to where they may lead; one, an organic desire of pleasure; the other, an acquired judgment of goodness' - socrates ]
கவை நிறைந்த வாழ்க்கை என்கிறோம்.
எந்தச் செயலுக்கும் குறைந்தது இரண்டு வழிகள், அனேகமாக எதிர்வழிகள், தோன்றுகின்றன. யாரிடமாவது அறிவுரை கேட்டால், இன்னும் இரண்டு சொல்வார்கள். அவர்கள் சொன்ன இரண்டு வழிகளில் எதைப் பற்றுவது என்ற சிக்கல் ஒரு கவை; அவர்கள் சொன்ன வழிகள் நாம் நினைத்தவைக்கு எதிர்மாறாக இருந்தால், அவர் வழிப் போவதா, நம் வழியே மேலென்று தொடர்வதா என்று இன்னொரு கவை. இதைப் போக்க இன்னொருவரை வழி கேட்கத் தோன்றும். இப்படியே கிளைவிட்ட எண்ணங்கள், கடைசியில் யாரைக் கேட்டு, எதைப் பற்றி, எங்கே முடியும் என்றே சொல்ல முடியாது. நம்மில் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
வீடு, வேலை, படிப்பு, செலவு, சேமிப்பு, காதல், திருமணம், பிள்ளை வளர்ப்பு போன்ற சற்றே முக்கியமான நிகழ்வுகள் மட்டுமல்ல, எந்த சினிமா பார்ப்பது, எந்த ஹோட்டலுக்குப் போவது, என்ன வாங்கிச் சாப்பிடுவது போன்ற மிகச் சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட பாதைகளின் போக்கிற்குக் கட்டுப்பட்டு நேரத்தையும் அறிவையும் விரயம் செய்கிறோம். சமீப அனுபவம்: பேருந்து நிலையப் பத்திரிகைக் கடையில் இருந்த என்னிடம் பத்திரிகை வாங்க வந்த ஒருவர், "சார், டைம்பாசுக்கு ஏதாவது வாங்கலாம்னு பாக்கறேன், குமுதமா குங்குமமா என்ன வாங்கலாம்றீங்க?" என்றார்.
இடையில், வாழ்வின் மிக முக்கிய முடிவுகளுக்கு, 'நாம் யார், நமக்கு என்ன தேவை? நமது எதிர்காலம் என்ன?' போன்ற சற்றே தீவிர முடிவுகளுக்கு, நேரம் ஒதுக்க முடியாமலோ அல்லது கவைகளில் சிக்கியோ சீரழிந்து போகிறோம். சில நேரம் சமாளித்து எப்படியோ கரையேறினாலும், கடந்து வந்த பாதையை எண்ணி கலங்கிச் சோர்ந்து அடுத்த அடியெடுக்க முடியாமல் ஓய்ந்து போகிறோம்.
இன்னும் சில கவைகள் உண்டு. ஆசைகளை அடைய நினைக்கும் பொழுது எந்தப் பாதையில் போவதென்ற முடிவுகள் எடுக்க நேர்கையில், நம்மில் நிறைய பேர் குறுக்கு வழிகளை நினைக்கிறோம். குறுக்குவழிகள் ஒன்றுக்கொன்று பிணைந்து கடைசியில் நேர்வழியை விட நேரமும் தூரமும் அதிகமென்று உணரும் பொழுது, சக்தியின்றி அடங்கி விடுகிறோம். உண்மையில் நம்மைச் சுற்றியடிக்கிறது என்று தெரிந்தும் குறுக்குவழியை விடாமல், 'இன்னும் கொஞ்சம் சென்று பார்ப்போம், இன்னும் ஐந்து நிமிடம், அடுத்தத் தெரு வரை..' என்ற உந்துதல்களில் சிக்கிப் பாதை தவறிப் போய்க்கொண்டே இருக்கிறோம்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இந்தப் பாதை-பயண உவமை பொருந்தும். எனில், முதலிலேயே சரியான பாதை இன்னதென்று அறிய முடியுமா?
சாத்தியம் என்று அறிவு சொன்னாலும், சாத்தியமில்லை என்கிறது அனுபவம். ஒரு வினையைத் தொடங்குமுன் பயனைப் பற்றிச் சிந்தித்து, அது நம்மை 'எந்த விதத்தில் பாதிக்கும், எந்த வித்ததில் உயர்த்தும், நம் நிலைக்கும் சுபாவத்துக்கும் பொருந்துமா, பயன் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காவிட்டால் எப்படி விலகுவது?' என்ற அளவில் சிந்தித்து முடிவெடுத்தால், ஓரளவுக்குச் சரியானப் பாதை பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் அனுபவம் சொல்கிறது.
இத்தகைய ஆய்வு எல்லாச் செய்கைகளுக்கும் பொருந்தினாலும், அவசரமும் ஆசையும் ஆய்வை அடக்கி, அறிவை ஒடுக்கி உடனடியாகச் செயலில் இறங்க வைக்கின்றன. பிறகு, 'இப்படிச் செய்திருக்கலாமே.. அப்படிப் போயிருக்கலாமே, வந்தது வந்து விட்டோம்.. அரை மணி பொறுப்போம், தவறிச் செய்துவிட்டோம்.. அடுத்த வருடம் திருத்திக் கொள்வோம், நம் தவறு யாருக்குத் தெரியப்போகிறது?' போன்ற சமாதானம், மறைப்பு மற்றும் சாக்குபோக்குகளில் நம் அறிவையும் நேரத்தையும் இழுத்தடிக்கின்றன.
வாழ்வின் சுவையே அவசர முடிவுகள்தான் என்போரும் உண்டு. 'இன்றுள்ள வாழ்வு நாளை இருக்காது, வாழ்வே குறுகியது' என்ற நிலையில், ஆராய்ந்து முடிவெடுப்பது 'சாத்தியமற்றது மட்டுமல்ல, பைத்தியக்காரத்தனம் கூட' என்ற கட்சியும் உண்டு.
இரண்டு வகை எண்ணங்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. என் அனுபவத்தில் பெற்ற ஒரு படிப்பினையை முன்வைக்கிறேன். முடிந்தவரை வினைப்பயன் பற்றிய தொலைநோக்கு அவசியம். அது முடியாமல் பயணத்தைத் தொடங்க நேர்ந்தால், போகும் பாதை சுற்று என்று தெரிந்தால், உடனே விலகி வேறு பாதைக்குச் செல்வது நல்லது. ஒரு செய்கை தவறு என்று தெரிந்து விட்டால், உணர்ந்த கணமே தவறுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, சரியான செய்கையைத் தொடர வேண்டும்.
'rational thinking', 'life strategies' போன்ற கலைகளை மேல்நிலைப் பள்ளிப் பாடமாக்க வேண்டும்.
['பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய்ச் சேராது' - கண்ணதாசன் ]
மெய்யறிவின் நோக்கத்தை விவரித்தான் எமன்.
"மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது" என்றான்.
'என்ன சொல்கிறான் கிழவன்?' என்று எண்ணிய நசிகேதன், எமன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
எமன் தொடர்ந்தான். "மெய்யறிவின் குறிக்கோள், நோக்கம் என்ன? அறிவு என்பதென்ன? அறிவு, மெய்யறிவு ஆவதெப்படி? பொய்யறிவு என்று உண்டா?
சொல்கிறேன், கேள். எந்த எண்ணத்திலும் செயலிலும் இரண்டு வகைப் பலன்களை எதிர்பார்ககலாம்.
முதலாவது, உடனடியாகவோ தொடர்ந்தோ புலனின்பத்தைத் தரக்கூடியது. பார்க்க, பழக, அனுபவிக்கச் சிறந்த இன்பங்களைத் தரக்கூடியது. நான் உனக்கு வழங்குவதாகச் சொன்ன பொன்னும் பொருளும் பெண்ணும் சந்ததியும் சொர்க்கமும்... இவையெல்லாம் இன்பங்கள்.
இரண்டாவது, உடனடியாகத் துன்பமோ சிக்கலோ தந்தாலும் தொடர்ந்து நன்மையைத் தரக்கூடியது. தனக்கும் தம்மைச் சூழ்ந்தவருக்கும் நன்மை தரக்கூடியது. சொர்க்கம், பிறவி போன்ற கவலைகளற்ற நிம்மதியைத் தரக்கூடியது.
இரண்டையும் அடையாளம் கண்டு, நன்மையைத் தரும் செயல்களைச் செய்ய வேண்டும். மெய்யறிவின் நோக்கம் அதுவே" என்றான்.
பொறுமையாகக் கேட்ட நசிகேதன், "ஐயா, இன்பம் நன்மை இரண்டையுமே அடையாளம் காட்டுவது அறிவு என்கிறீர்கள். எனில், அறிவின் தன்மையிலேயே குறையுள்ளது போல் தோன்றுகிறதே? இத்தகையக் குறையுள்ள அறிவை வைத்து மெய்யறிவை எப்படிப் பெறுவது? நொண்டிக் குதிரையால் பந்தயத்தில் வெல்ல முடியாதே?" என்றான்.
நசிகேதனின் கேள்வியில் எமன் பெருமிதம் கொண்டான். "அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நீயாகக் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நீ தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், உன் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாடும் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே உன்னை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி உன்னை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு" என்றான்.
"இன்பங்களைத் தேடுவதில் என்ன தவறு?" என்றான் நசிகேதன்
"தவறில்லை. இன்பங்களைத் தேடுவதில் மனிதன் தன்னை இழந்து விடுவதால், பிறவியின் காரணத்தையே மறந்துவிட நேர்கிறது. இன்பத்தேடலால் அறிவையும், அறிவினால் இன்பத்தேடலையும், ஒருங்கே கட்டிவிடுவதால் ஒரு சுழல் உருவாகிவிடுகிறது. அந்தச் சுழலில், மீள வழியில்லாமல், மானிடம் சிக்கித் தவிக்கிறது. மனித அறிவுக்கோ, 'சுழலில் சிக்கியது நிறையா குறையா' என்று புரியாததால், தொடர்ந்து இன்பத்தேடலிலும் அதற்கான உந்துதல்களிலும் சுழற்றி அடிக்கிறது.
இன்பத்தையே தேடி அலையும் மனிதம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறது. தவறுகளைச் செய்யத் துணிகிறது. தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறது. பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறது. தன்னைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறது. குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால் மானம் கெட்டு மடிகின்றனர்.
எனில், அறிவை எப்படி வளர்ப்பது? நன்மையை மனதில் கொண்டு தேடினால் அறிவை இழக்காமல், செம்மையாக வளர்க்க முடியும். சாதாரண இன்பங்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பாங்கைப் பெற முடியும். மெய்யறிவுக்கான பாதையில் செல்ல முடியும்" என்றான் எமன்.
தொடர்ந்து, "நசிகேதா, 'நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?' என்ற கேள்வியை ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் கலந்துவிட்டால், உன் மனம் மெய்யறிவுப் பட்டறையின் முதல் நிலையைக் கடக்கிறது. புடமிடத் தகுதி பெறுகிறது. நன்மையைத் தருவதும் இன்பத்தைத் தருவதும் எதிரெதிர் எண்ணங்கள், செயல்கள். நன்மையை அடைவது நேர்வழி; தடங்கலும் தாமதமும் நிறைந்த வழி. இன்பத்தை அடைவது சுற்றுவழி; குறுக்குவழி; போகாத ஊருக்கு வழி" என்றான்.
"நன்மையை அடையும் நேர்வழி என்பது என்ன?" என்றான் நசிகேதன்.
"உன்னை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. உன் ஒவ்வொரு செயலும் உன்னை - முதலில் உனக்கும், பிறகு உன் குடும்பத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. உலகும் உன்னோரும் நீயும் காணும், உன்னைப் பற்றிய அந்த அடையாளம் எந்த வகையில் உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உனது சொந்த நெறியைப் பின்பற்ற வைப்பது நல்வழி. உன் செய்கைகளால் நீயும், உன்னோரும், உலகத்தோரும் உயர்வடையும் வழி. அதைப் பற்றி மேலும் சொல்கிறேன்" என்றான்.►