வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/04/03

தன்னறிவில் முன்னவன்


89
சின்னமகன் சன்னமறச் சொன்னதமிழ் உன்னியவர்
தன்னறிவில் முன்னனெனப் பன்னுகையில் - மன்னவனோ
இன்னுமிவன் என்னிளவல் அன்றெனவே மன்னவனாய்த்
துன்னுவனே தென்னவனைத் தேர்ந்து.

   யதில் இளையவனான நசிகேதன் தெளிவாக விளக்கிய உண்மைகளை உள்ளத்தில் ஏற்றி ஆராய்ந்து அறிந்த மக்கள், அவனை அறிவிலே மூத்தவன் என்றுப் பாராட்டினர். (இதைக் கவனித்த) மன்னன் வாசனோ, 'இவன் இனியும் என் மகனல்ல, இந்த நாட்டுக்கு மன்னனாக வேண்டியவன்' என்றுத் தீர்மானித்து, தன் தேர்வை எப்படி நிறைவேற்றுவதெனத் தீவிரமாக யோசித்தபடி அழகும் குணமும் நிறைந்த நசிகேதனை நெருங்கினான்.


சின்னமகன்: இளையவன், இளவரசன்
சன்னமற: மறைக்காமல், தெளிவாக
சொன்னதமிழ்: உரைத்த உண்மை
உன்னியவர்: நன்கு சிந்தித்தவர், உணர்ந்தவர்
முன்னன்: முதல்வன், மூத்தவன்
பன்னுகையில்: புகழும் போது (பன்னுதல்: புகழ்ந்து பேசுதல், போற்றுதல்)
துன்னுவனே: நெருங்குவான், அண்டுவான் (துன்னுதல்: தீவிர யோசனையுடன் நெருங்குதல்)
தென்னவன்: அழகன், இளையவன், நெறியுள்ளவன் (நசிகேதன்)    ன் மனதில் தோன்றியச் சிறிய எண்ணம் மெள்ள விரிந்து வலுவடைவதை உணர்ந்த மன்னன் வாசன், தன் அரியணையிலிருந்து எழுந்தான். அவையை நோட்டமிட்டான். ஆங்காங்கே மக்கள் சிறு கூட்டங்களாகச் சேர்ந்து நசிகேதன் சொன்னக் கருத்துக்களைக் கலந்துரையாடினர். சிலர் ஆவேசமாக வாதாடினர். சிலர் அமைதியாக உரையாடினர். சிலரது முகங்களில் மிகுந்த அமைதியும் பொலிவும் கண்டான். சிலரது முகங்களில் தீவிரத் தேடல்களின் சின்னங்களைக் கண்டான்.

சிலர் அவனருகே வந்து, "மன்னா! உங்கள் மகன் பெரிய ஞானி. அவனைச் சிறுவன் என்று எண்ண முடியவில்லை. வயதில் எங்களை விட இளையவனே தவிர, அறிவில் எம் எல்லோரையும் விட மூத்தவனய்யா உம் புதல்வன். சிறந்த தலைவன். சொர்க்கத்தை மண்ணுக்குக் கொண்டு வந்த செம்மல்!" என்று பலவாறுப் புகழ்ந்தனர்.

நசிகேதனைப் பார்த்தான்.

அவையினர் இன்னும் நசிகேதனைப் புகழ்ந்தபடி இருந்தனர். அவனைச் சுற்றி ஒரு கூட்டம். சிலர் அவனை வணங்கினர். சிலர் அவனிடம் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் புகழ்ந்து பாடினர்.

அவையோர் எண்ணங்களையும் பேச்சையும் புரிந்து கொண்ட மன்னன் வாசன், 'இவனை மகனாகப் பெற நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லை இல்லை. இவனை மகனாகப் பெற்றதால் நான் செய்த பாவங்கள் தொலைந்தன. என் கண்களைத் திறக்க வந்தவன். என்னால் என் மக்களின் உடலை வளர்க்க உதவி செய்ய முடியும். இவனால் அவர்கள் தங்கள் வாழ்வின் பொருளையறிய முடியுமே? இவனல்லவோ அரசாளத் தகுதியானவன்?' என்று எண்ணினான்.

மன்னன் வாசன் மெள்ளக் கூட்டத்தின் முடிவில் நுழைந்து நசிகேதனை நோக்கி முன்னேறினான். "இந்தச் சிறுவன் இவ்வுலகின் தலவன். இவனை இனியும் என் பிள்ளையாக, இளவரசனாக எண்ணுவது பொருந்தாது. இவனுடைய தலைமை எனக்கும், என் மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் தேவைப்படுகிறது. இவன் சிறந்த மன்னனாவான்" என்று நினைத்தபடி நசிகேதனருகே சென்றான் வாசன்.

நசிகேதனின் அண்மையில் வந்ததும் வாசன் சற்றுத் தயங்கினான். "பற்றறுத்தல் பற்றிப் பேசியவன் பதவியை விரும்பி ஏற்பானா? மறுத்து விட்டால்? இந்த மக்களின் அறிவுக்கண்களைத் திறந்தது போதும் என்று இருந்து விட்டால்? அனைவர் முன்னிலையில் என் விருப்பத்தை நிராகரித்து விட்டால் எனக்கு அவமானமாயிற்றே?" என்று நினைத்தான்.

அடுத்தக் கணங்களில் தானே முனைப்பானான். "இருக்காது. மக்களின் நலனில் அக்கறை உள்ளவன். நசிகேதனால் என் நாட்டு மக்களுக்கு மட்டுமா உய்வு? இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே? அரசபதவியில் இவனால் மேலும் சாதிக்க முடியும். நிச்சயம் பதவியை ஏற்றுக் கொள்வான். அப்படியே ஏற்காவிடினும் அவமானம் இல்லை. ஏற்றாலோ அனைவரையும் போல் மகிழ்வேன்" என்று அமைதியானான்.

மன்னன் வாசனுக்குத் தான் புரிய வேண்டியது புரிந்தது. நிறைந்த மனதுடன் நசிகேதனை நெருங்கினான்.

நான்காம் பகுதி முற்றும்

3 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நசிகேதனால் என் நாட்டு மக்களுக்கு மட்டுமா உய்வு? இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே? அரசபதவியில் இவனால் மேலும் சாதிக்க முடியும். /

சிறப்பான சாதனைகள் படைக்கவே பிறந்தவனாயிற்றே நசிகேதன்!

சிவகுமாரன் சொன்னது…

தமிழ் துள்ளுகிறது வெண்பாவில்.
இன்னும் எத்தனை பாகம்?
ஒன்று கவனித்தேன். தன்னறிவு என்ற சொல் உங்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.- என்னையும்.

ADMIN சொன்னது…

நசிகேதன் என்ன சொல்வார்? எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்..

தொடர் அருமையாகவும், எளிமையாகவும் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி..!!!