88
புலனைந்தும் பூட்டிப் புறமாறும் போக்கப்
பலனேழும் எட்டுமென்ற புத்தன் - புலப்பகையில்
தன்னறிவும் ஒன்றிநிற்கும் உன்மனியின் உத்தமத்தை
நன்றுரைத்தே நின்றான் நயந்து.
பலனேழும் எட்டுமென்ற புத்தன் - புலப்பகையில்
தன்னறிவும் ஒன்றிநிற்கும் உன்மனியின் உத்தமத்தை
நன்றுரைத்தே நின்றான் நயந்து.
ஐந்து புலன்களையும் கட்டி ஆறு புறங்களையும் மறந்த யோகத்தில் ஏழு பலன்களையும் அடையலாம் என்ற ஞானி (நசிகேதன்), ஐம்புலன்கள் அடங்கிய நிலையில் அறிவையும் அடக்கும் (சமாதியெனும்) பெரும் யோக நிலையின் சிறப்பை மிகுந்த விருப்பத்தோடு தெளிவாக (அவையறிய) விளக்கினான்.
புலனைந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து உணர்ச்சிக் கருவிகள்
புறமாறு: மேல், கீழ், இடம், வலம், முன், பின் எனும் நம்மைச் சுற்றிய ஆறு புறங்கள்
பலனேழு: ஒழுக்கம், மலமொழிப்பு, உடல்நலம், மனநலம், பற்றறுப்பு, பக்குவம், மெய்யறிவு எனும் ஏழு பலன்கள்
புத்தன்: பேரறிவு பெற்றவன் (நசிகேதனைக் குறிக்கும்)
புலப்பகை: ஐம்புலன்களை அடக்கிய நிலை
உன்மனி: அனைத்தையும் அடக்கிய யோக நிலை
கிழவி மறைந்தத் திசையைக் கவனித்த நசிகேதனுக்கு அவள் யார் என்று புரிந்தது. அவையோருக்குச் சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம் என்னவென்று புரிந்தது. "இன்னும் நான் சொல்ல வேண்டிய நுண்மை ஒன்று உள்ளது. மனிதகுலம் அறிய வேண்டிய நுட்பம். நம் எல்லோராலும் அறியக் கூடிய நுட்பம். இறப்பைப் பற்றிய உங்கள் கேள்விகளையும் கவலைகளையும் குழப்பங்களையும் போக்கடிக்கும் நுண்மையிதை விளக்குகிறேன்" என்று உற்சாகத்தோடு தொடங்கினான். "முதலில் ஒரு கேள்வி.." என்ற நசிகேதனை ஆவலோடு கவனித்தது அவை.
"என் அருமைத் தந்தையே! அரச குருக்களே! ஞானிகளே! அன்பார்ந்த மக்களே! இதுவரையில் நாம் படித்தப் பாடங்களில் உங்கள் மனதில் நிற்பது என்னவென்று சொல்வீர்களா?" என்றான்.
நசிகேதன் முடிக்கும் முன்னரே, "இருப்பதையெல்லாம் இல்லையென்றாய் எல்லாம் தெரிந்தவன் போல, வேறென்ன?" என்றார் ஒரு மதகுரு.
"சும்மா இருமய்யா. இதுவரை நீர் தான் அப்படிச் சொல்லியிருக்கிறீர் என்பது எமக்கு விளங்கி விட்டது!" என்று அவரை அடக்கினர் ஒரு சிலர்.
சிறிது தயக்கத்துக்குப் பின், "இளவலே! சொர்க்கத்தையும் பிறவாமையும் வேள்விகள் தரா. நம் மனதின் ஒழுக்கமே மேன்மையறியும் வேள்வி. முக்திக்கான வேள்வி. மனிதம் பற்றிய அறிவே மேன்மை என்றீர்கள்" என்றார் ஒரு ஞானி.
அவர் அமர்ந்த திக்கை நோக்கி வணங்கினான் நசிகேதன்.
"அய்யா! சொர்க்கம் நரகம் என்று தனியாக எதுவுமில்லை. இங்கேயே இருப்பது தான் சொர்க்கமும் நரகமும் என்றீர்கள்!" என்றார் இன்னொருவர்.
தயக்கம் விலகி, அவையினர் பலர் தங்கள் கருத்தைச் சொல்லத் தொடங்கினர்.
"பிறப்பும் இறப்பும் தோன்றி மறையும் சூரியனைப் போன்ற சுழற்சி. ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்கான பயணமே பிறவி"
"நம்முடைய உடலும் மனமும் இயல்பில் புறத்தையே நாடுகிறது. அவற்றை அடக்கி ஒடுக்குவதே சொர்க்கத்தின் திறவுகோல்"
"உறங்கும் நிலையில் புலன்களை மறந்திருப்பது போலவே உறங்காத நிலையிலும் புலன்களைக் கட்டப் பயிற்சி செய்ய வேண்டும்"
"ஓட்டைப் பையான இந்த உடல் அழியும் முன்பே மனதைச் சுத்தமாக்கி மேன்மை பெற வேண்டும்"
"இருமைகளின் ஒருமையை அறிந்தால் அமைதி காண முடியும்"
"ஆன்மாவை அறிவதால் அனைத்து ஒளிகளையும் அறியச் செய்யும் பேரொளியை அறியலாம்"
"நன்று!" என்று அவர்களை வணங்கினான் நசிகேதன்.
"இன்னும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்களா? அல்லது முக்கியமான பாடமென்று சொல்ல வந்ததைச் சொல்லப் போகிறீர்களா?" என்றார் ஒரு அரசகுரு.
நசிகேதன் புன்னகைத்தான். "அன்பர்களே! இதுவரை நான் உரைத்தவற்றை மிக ஆவலோடும் பொறுமையோடும் கேட்டுப் புரிந்து கொண்டு என் ஆசானுக்குப் பெருமை சேர்த்தீர்கள். உங்களுக்கு என் நன்றி!" என்று வணங்கினான். தொடர்ந்தான். "ஐந்து, ஆறு, ஏழு என்பதை நினைவில் வையுங்கள். ஐந்து புலன்கள், ஆறு புறங்கள், ஏழு பலன்கள்.
"மெய், வாய், கண், மூக்கு, செவியெனும் புலன்களைப் பற்றியும் அவற்றின் இயல்புகளையும் அறிந்தோம். பிறப்பிற் திறக்கும் புறத்தே தறிக்கும் உறுப்பு என்றோம். இறக்கும் வரையிலும் புறத்தையே இயல்பாக நாடுகின்றன. அதனால் அவை புலனுகர்ச்சிக்கானக் கருவிகளாகவே இயங்குகின்றன.
நம்மைச் சுற்றி ஆறு புறங்கள் உள்ளன. நமக்கு மேல், கீழ், இடம், வலம், முன், பின் எனும் இந்த ஆறு புறங்களின் ஊடுறுவல்கள் புலனுகர்ச்சியாகப் பரவுகின்றன. நம்மைச் சுற்றிய நிகழ்வுகளின் நாயகர்கள் நாமே. இயக்குனர்கள் நாமே. இயங்குவோரும் நாமே. அதனால் உண்டாகும் பலன்களை நுகர்வோரும் நாமே. மகிழ்வோரும் நாமே. மனமுடைந்து வருந்துவோரும் நாமே. இது மாயச் சுழற்சி. இந்த நுகர்ச்சிகளின் விளவாக ஆசை, பாசம், பந்தம், பொறாமை, பகை எனப் பலவாறு சிக்கித் தவிக்கிறோம்.
இவ்வாறு ஐந்தும் ஆறும் நம்மைப் பெரும் துயரப்பாதையில் கொண்டு சென்றன. செல்வன. செல்லக்கூடியன. இவற்றை அறிந்து அடக்க வேண்டும். அடங்க வேண்டும். ஐந்து புலன்களையும் கட்டி ஆறு புறங்களையும் மறக்க மூச்சடக்கிப் பழக வேண்டும் என்றேன். தொடர்ந்தப் புலனடக்கப் பயிற்சியின் விளைவாக ஐந்தையும் ஆறையும் ஒன்றாக்கிக் கட்டி, ஓரத்தில் போட முடியும். புலன் கட்டிய புறம் மறந்த அகத்தை அறிய வேண்டும்.
தொடர்ந்தப் பயிற்சியினால் நாம் ஏழு வகைப் பலன்களைப் பெற முடியும். நாம் நம் புலன்களைக் கட்டுவதானால் ஒழுங்குறுகிறோம். புலனுகர்ச்சித் தேடல்களின் நன்மை தீமைகளை அறியத் தொடங்குகிறோம். அந்த அறிவின் பயனாக, ஆசை கோபம் பொறாமை போன்ற தீக்குணங்கள் தாமாகவே வெளியேறுகின்றன. புலன்களைக் கட்டியதால் உடல்நலமும், மலங்கள் வெளியேறிதால் மனநலமும், கூடுகிறது. இவற்றின் தொடர்ந்த பாதிப்பினால் தீக்குணங்கள் மட்டுமல்லாது அவை உருவாகத் தூண்டுதலாக அமையும் பந்தம் பாசம் சுயநலம் போன்ற பற்றுகள் மறையத் தொடங்குகின்றன. இருமைகளில் ஒருமையைக் காணும் பக்குவம் வளர்கிறது. பக்குவம் வளர்ந்து மனதில் பெரும் அமைதி உண்டாகிறது. தொடர்ந்த அமைதியின் பலனாக, தன்னறிவு எனும் மெய்யறிவைப் பெற முடிகிறது.
சுழத்தி எனும் உறக்க நிலை பற்றி முன்னர் சொன்னேன். புலன் புறம் அடங்கிய நிலைக்கு எடுத்துக்காட்டான உறக்க நிலை. அந்நிலையில் புலன்கள் இயங்குவதில்லை. புறங்கள் அன்னியமானவை. பெரும் அமைதியான நிலையில் உடல் அடங்கி மனம் அடங்கி நிற்கிறது.
மெய்யறிவைப் பெறுவதும் அது போன்ற செயலே. உறங்காத நிலையிலும் புலன்களைக் கட்டி, புறங்களை மறந்து, ஆழ்ந்த அமைதியிலே மெய்யறிவைத் தேடி ஆன்மாவை அறியும் யோக நிலை.
உறக்க நிலையில் அறிவு தொடர்ந்து இயங்குகிறது. யோக நிலையிலே அறிவையும் அடக்கி, புலன் புறம் அறிவு என மூன்றும் அடங்கிய நிலையில் ஆன்மாவுடன் ஒன்றாகி இணைந்த அமைதியான நிலைக்குச் சமாதி என்று பெயர்.."
"ஐயா.. அது இறந்தவர்களுக்கு வழங்கும் பெயர் அல்லவா?" என்றார் ஒருவர்.
"இந்தப் பிள்ளை சொல்வதைக் கேட்டால் நமக்கு என்னவாகும் என்று தெரிந்தால் சரிதான்!" என்றார் ஒருவர்.
"சும்மா இருமய்யா. இளவலே, நீங்கள் தொடருங்கள். சமாதி அடைந்தவர்களை உணர முடியும் அறிய முடியும் என்று சொல்வார்களே? சமாதியில் இருப்பவர்கள் உண்மையில் இறக்கவில்லை என்றுகூடச் சொல்கிறார்களே?"
நசிகேதன் தொடர்ந்தான். "நீங்கள் சொல்வது உண்மையே. இறந்தவர்களைச் சிலநேரம் அப்படி வழங்குகிறோம். சமாதி அடைந்தவர்கள் இறக்கவில்லை என்றும் சொல்கிறோம். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் பிறப்பதும் பயிரின் சுழற்சி போன்றது என்பதை நாமறிவோம். அதனால் இறந்தார்களா என்ற கேள்வியை ஒதுக்குவோம்.
பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள முடியாமல் அதை மாபெரும் சக்தியொன்றின் செய்கை என்று கண்மூடுகிறோம். இறப்புக்கு அஞ்சி வேள்விகள் புரிகிறோம். பிறப்பை வேண்டி வேள்விகள் புரிகிறோம். பிறப்பிலோ இறப்பிலோ அதிசயமில்லை. அச்சமில்லை. மாபெரும் சக்தி ஒன்று உண்டென்றால் அது நம்முள் இருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டே சமாதி எனும் யோக நிலையின் விளக்கம்.
உறக்கம் மரணத்தின் முன்னோட்டம் என்பார்கள். ஏன்? உறங்கும் நிலையில் நம்மைச் சுற்றிய நிகழ்வுகளை அறிய முடியாது. நம் உணர்வுகள் அடங்கி விடுகின்றன. விழித்தெழும் உத்தரவாதம் இல்லை. அந்நிலையில் மூச்சு மட்டுமே உறக்கத்துக்கும் மரணத்துக்குமானப் புற வேறுபாடாக இருக்கிறது. அறிவு மட்டுமே உறக்கத்துக்கும் மரணத்துக்குமான அக வேறுபாடாக இருக்கிறது. அவற்றையும் அடக்க முடிந்தால்?
அதுவே அக மேன்மை. சமாதியெனும் அக மேன்மை. மனிதம் மரண ரகசியத்தை அறியும் மகத்தான தருணம். புலன்களையும் புறங்களையும் கட்டி அறிவையும் அடக்கி அகத்துள் உழலும் ரகசியம். அதில் அச்சமேதும் இல்லை. அமைதியே உண்டு.
மிக உன்னதமான யோக நிலையைப் பழகியவர்களே இதை அறிய முடியும். எல்லாம் அடங்கிய நிலையிலே எல்லாம் தொடங்குகிறது! எல்லாம் அடங்கிய நிலையில் எல்லாம் தொடங்கும் ஒருமையை அறிய முடிவது எத்தனை மகத்தானது!
இந்தச் சக்தியை மனிதம் உணர முடியும். எனினும், நமக்குள் அடங்கியிருக்கும் மாபெரும் சக்தியை அறிய முடியும், நம்முள்ளிருக்கும் அனைத்தையும் அடக்கும் சக்தியை அறிந்து.. விரும்பினால், அதற்குள் அடங்க முடியும் என்பதே சமாதி நிலையின் மெய்ப்பொருள்.
இச்சக்தி மனிதத் தேடலுக்குட்பட்டது என்பதே மகத்துவமான உண்மை. அதுவே மெய்யறிவு. மனிதரைக் காட்டிலும் தெய்வமில்லை எனும் மகத்துவம்" என்றான்.
உரையை முடித்த நசிகேதன், தன் ஆசானை எண்ணி நீண்ட அமைதி காத்தான். அவையோரை வணங்கி நின்றான்.
அமைதியாக இருந்த அவையில் திடீரென்று ஒலிவெள்ளம். நசிகேதனின் கருத்துக்களை விவாதிக்கத் தொடங்கினர். பலர் நசிகேதனை வணங்கினர். பாராட்டினர். "எம்மை உய்ப்பிக்க வந்த உத்தமரே!" என்று அவனை உச்சிமோந்து களித்தனர்.
நசிகேதனின் உரையைக் கேட்டும், அவையினரின் போக்கைக் கண்டும், அகமகிழ்ந்த வாசனின் மனதில் பெரும் அமைதி நிலைவியது. சிறு எண்ணம் உதித்தது. ►
3 கருத்துகள்:
ஐந்து பூட்டி ஆறு போக்க ஏழு எட்டும்
அருமை அப்பாஜி
அப்பாதுரை அவர்களே! எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம் ?
எங்கே சொர்க்கம்? எங்கேசோர்க்கம்?---என்றே தேடுவீர்!
அது அங்கே இல்லை ! இங்கே உண்டு ! அன்பால் நாடுவீர் !
அன்பல் நாடுவீர்! எல்லோரும் ஒன்றாய் கூடுவீர்
பஞ்சம் இல்லா நாடு !--உயர்
பத்தினி மேவும் வீடு !
சம்சாரம் தோட்டம் காடு ---யாவும்
மேன்மையான சொர்க்கம் தான் !
அன்பே சொர்க்கம் ! அது நீதியின் பக்கம் !
அது அங்கே இல்லை! இங்கே உண்டு என்றே கூறுவர்!---உண்மை
இங்கே உண்டு ! அங்கே இல்லை!
அன்பால் நடுவீர்! எல்லோரும் ஒன்றாய் கூடுவீர்!
ஐம்பதுகளில் "சொர்க்க வாசல் "என்ற படம் வந்தது. அண்ணாதுரை எழுதியது .பெரியாரே ஒருபாத்திரமாக வருவார்,அவர் பாடுவதாக வரும் பாடல். உடுமலை நாராயணகவி எழுதியது.நினவிலிருந்து எழுதுகிறேண்---காஸ்யபன்.
"நன்றுரைத்தே நின்றான் நயந்து" வெண்பா மிகவும் அழகாக இருக்கிறது.
ஐந்து புலன்கள், ஆறு புறங்கள், ஏழு பலன்கள் பற்றிய விளக்கமும், உறக்கம் மரணத்தின் முன்னோட்டம்..... என்று உறக்கத்தை பற்றிய விளக்கங்களும் பிரமாதம்.
//புலன்களைக் கட்டியதால் உடல்நலமும், மலங்கள் வெளியேறிதால் மனநலமும், கூடுகிறது.//
இத்தனை காலமும் நான் புலன்களை கட்டுவதால் மனமும், மலங்கள் வெளியேறுவதால் உடலும் நலம் பெரும் என்று மாற்றி புரிந்து கொண்டிருந்தேன்.
மனம் கொஞ்சம் அமைதி அடைய உதவிய நல்ல பதிவு. நன்றி!
கருத்துரையிடுக