76
காலனின் கால்பணிந்தான் தான்கற்றத் தத்துவமோ
ஞாலத்து மையகற்றும் ஞாயிறென்றான் - சால
அமைதி அறிவு அருளுடன் மீண்டான்
இமையான் இதயக் கனி.
ஞாலத்து மையகற்றும் ஞாயிறென்றான் - சால
அமைதி அறிவு அருளுடன் மீண்டான்
இமையான் இதயக் கனி.
உலகத்தின் இருளகற்றும் கதிரவனைப் போன்றதாகும் தான் கற்ற உண்மை, என்று சொல்லி எமனைப் பணிந்து வணங்கினான். மிகுந்த அமைதி அறிவு மற்றும் எமனின் அருளுடன் தன்னுலகம் திரும்பினான், எமனின் இதயத்தில் இடம் பிடித்த நசிகேதன்.
தத்துவம்: உண்மை, நுட்பமான அறிவு
சால: மிகுந்த
இமையான்: எமன்
சாபம், சாபக்கேடு இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
நாம் கண்மூடித்தனமாக நடக்க வேண்டும் என்பது சாபம். நம் கண்மூடித்தனங்கள் நம் சந்ததிக்கும் பரவ வேண்டும் என்பது சாபக்கேடு. சாபத்தை உணர்ந்துச் சாபக்கேட்டைத் தவிர்ப்பவர்கள் மகான்கள். சாபம் என்பது தெரிந்தும் சாபக்கேட்டைத் தொடர்வோர் மலத்தினும் கேவலமானவர்கள். மதத்தினும் கேவலமானவர்கள் என்று சொல்ல வந்தேன், வசதியானப் பிழையாகி விட்டது.
மகான்களின் வெளிப்பாடுகளை மட்டும் பிடித்துக்கொண்டு, அவ்வெளிப்பாடுகளின் உந்துதலைப் புரிந்து கொள்ளாமல், கிடைத்தப் புதையலை இழக்கிறோம். உதாரணத்துக்கு, காந்தியிடமிருந்து உண்ணாவிரதம் சத்தியாகிரகப் பழக்கங்களைப் பிடித்துக் கொண்டோம். தன்மானம், அமைதியான எழுச்சி, எளிமை, பொதுநலக் கொள்கைத் தீவிரம், தியாகம் போன்றவற்றை உதறிவிட்டோம்.
எத்தனை மகான்கள் தோன்றினாலும் மனிதம் மந்தையினமாகவே இருக்கிறது. இதுவே நியதி என்று நினைக்கும் பொழுது கலக்கமாக இருக்கிறது. பாருங்கள், இத்தனை சூரியன்கள் நட்சத்திரங்கள் இருந்தும், அண்டத்திலும் இருளே அதிகம்.
எனினும், மந்தைகளைப் புரிந்துகொள்ள மகான்கள் தேவை.
"ஐயா, அறிவிலே ஏழையாக இருந்த எனக்கு மெய்யறிவு எனும் பெருஞ்செல்வத்தை வழங்கினீர்கள். நீங்கள் சொன்னது போலவே அறிவுச் செல்வத்தின் சுமையை உணரத் தொடங்கிவிட்டேன். இதனைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே சுமை குறையும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
நீங்கள் எனக்களித்த அறிவை எம்மவரிடம் சேர்ப்பேன். தன்னறிவின் தன்மையையும் பெரும்பேற்றின் உண்மையையும் எம்மவருக்கு எடுத்துரைப்பேன். உங்கள் அருளால் நான் கற்றத் தன்னறிவுப் பாடம், எம்முலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவல்ல ஆதவனாகும்.
பெரும் கலக்கத்தோடு இங்கு வந்தேன். நிறைந்த அறிவு, தெளிவு, மற்றும் அமைதியுடன் விடைபெறுகிறேன். எல்லாம் உங்கள் அருள்" என்று எமனைப் பணிந்து நன்றி சொன்ன நசிகேதன், புறப்பட்டான். மண்ணேக விரைந்தான்.
தன் பேரறிவுச் சுமை விலகியதை உணர்ந்தாலும், விடை கொடுத்த எமன் கலங்கினான். வாராது வந்த மாமணியைப் பிரிகிறேனே? இனி என் அறிவைப் புடம் போட இவனைப் போல் யார் வருவார்? இவன் உரையைக் கேட்டு உய்வார்களா இவனுலக மக்கள்? இவனுக்குப் பின் வரும் கண்மூடிகளை நினைத்தாலே கலங்குகிறதே? ஒருவேளை இவன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால்? இவன் பேச்சைக் கேட்டு இவனுலகத்தாரும் மரண பயத்தை விடுத்தால் என்னாவது? கண்மூடித்தனங்களைக் கைவிட்டால் என்னாவது?... என்று பலவாறு எண்ணினான். தன் மாணவனின் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நசிகேகதனுக்குப் பூமியில் காத்திருந்த வரவேற்பை எண்ணியக் காலனின் முகத்தில் கனிவும் புன்னகையும் நிறைந்திருந்தது. ►