85
பதினொரு பொத்த லதிசய மித்தன்
பதியறும் பத்து முதிரும் - விதியறி
மூச்சறு முன்னரே பேச்சிலும் வீச்சிலும்
ஆச்சிய மாச்சறு ஆறு.
பதியறும் பத்து முதிரும் - விதியறி
மூச்சறு முன்னரே பேச்சிலும் வீச்சிலும்
ஆச்சிய மாச்சறு ஆறு.
பதினொரு துளைகளைக் கொண்ட அதிசயமாம் இவ்வுடலின் அரசனான ஆன்மா (மூச்சு நிற்கும் பொழுது) விலகும். அப்பொழுது ஐம்புலன்களும் ஐந்துணர்வுகளும் அழியும். இந்த உண்மையை அறிவீர். (அறிந்து) மூச்சு நிற்கும் முன்னரே உங்கள் சொல்லிலும் செயலிலும் கேவலத்தையும் குற்றத்தையும் அகற்றி அடங்குவீர் (என்றான் நசிகேதன்).
பதினொரு பொத்தல் அதிசயம்: உடல்1
பத்தும்: ஐந்து புலன்கள், ஐந்து உணர்வுகள்2
இத்தன்: இதன்
பதி: ஆளுனன், அரசன் (ஆன்மா, உயிர்)
அற: அற்றுப் போக, விலக, விடுபட
விதி: உண்மை
ஆச்சியம்: கேலிக்குரியது, கேவலமானது
மாச்சு: குற்றம்
ஆறு: அடங்கு
1 மனித உடலின் பதினொரு துளைகளாவன: உச்சந்தலை அல்லது கபாலம் ஒன்று, கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய் ஒன்று, தொப்புள் ஒன்று, குய்யம் ஒன்று, குதம் ஒன்று (கபாலம் துளையல்ல என்பாரும் உண்டு)
2 ஐம்புலன்களாவன: மெய், வாய், கண், மூக்கு, செவி | ஐந்துணர்வுகளாவன: தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் (புலனுகர்ச்சியால் உருவாகும் ஆசை, பாசம், மகிழ்ச்சி, வருத்தம், கோபம் எனும் ஐந்து வேர் உணர்வுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்)
நசிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! நாமே உருவாக்கி நாமே சிக்கித் தவிக்கும் கண்மூடித்தனங்கள் பற்றியும், நிலையாமை மற்றும் மனித இயல்புகள் பற்றியும், நான் கற்றதை சில கதைகள் வழியே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி நாமே குழி வெட்டி, அதில் நாமே விழுந்து, நாமே நம்மை மூடிக் கொள்வதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.."
"ஆகா! சொல்லுங்கள் இளவலே!"
"இந்த உடல் ஒரு பை போன்றது. ஓட்டைப் பை" என்றான்.
"நம் உடல் ஓட்டைப் பையா? என்ன சொல்கிறீர்கள்?"
"ஆம். நம் உச்சந்தலையில் ஒரு ஓட்டை. மூச்சடங்கி ஆன்மா வெளியேறும் தருணத்தில் பிளக்கும் ஓட்டை. கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித்துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று என முகத்திலே ஏழு ஓட்டைகள். பிறவியை அடையாளம் காட்டும் தொப்புள் ஒரு ஓட்டை. நீர்வாயில், மலவாயில் என்று இடுப்பின் கீழே இரண்டு ஓட்டைகள்".
அவையோர் சிரித்தனர். நசிகேதன் தொடர்ந்தான்.
"அன்புடையீர். பையில் ஓட்டை விழுந்தால் என்னவாகும்?"
"பையிலிருப்பது கீழே கொட்டும்"
"கொட்டாதிருந்தால்?"
"கொட்டாதிருக்க அது என்ன மாயப் பையோ?"
"ஆகா! மாயப் பை! நன்றி, அவையோர்களே! நம் உடல் ஒரு மாயப் பை போன்றது. ஓட்டைப் பையில் எதையும் கொட்டாது பிடித்து வைக்க முடியுமா? அப்படி முடிந்தால் அது அதிசயப் பை அல்லவா? நம் உடல் அத்தகைய அதிசயப் பை.
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களால் நாம் பெறும் உணர்வுகளைப் பற்றி முன்னர் சொன்னேன். ஐம்புலன்களால் நாம் பெறும் பற்றுகளையும் பந்தங்களைப் பற்றியும் சொன்னேன். புலனுகர்ச்சியால் விளையக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் அறிந்தோம். புலனுகர்ச்சியின் போது நன்னெறிகளைப் பற்றினால் அகத்திலும் மேன்மை கூடுகிறது; நன்னென்றிகளை மறந்து தீய வழிகளில் சென்றால் ஆசை, கோபம், பொறாமை, களவு, பிணி போன்றவற்றைச் சுமக்க நேரிடுகிறது.
ஓட்டைப் பையின் குணம் என்ன? பையிலிருப்பது கீழே கொட்டும் அல்லவா? ஆனால் இந்த உடல் எனும் ஓட்டைப் பையைப் பாருங்கள். எத்தனை தீக்குணங்கள் ஏற்றித் தாங்குகிறது! எதுவும் வெளியே கொட்டுவதில்லையே? இது அதிசயப் பை அல்லவா?
அதே போல் நற்குணங்களைப் பேணினால் நிம்மதியும் நிறைவும் ஏறும். பையிலிருந்து கொட்டாது. ஆனால் நாம் இந்த மாயப்பையில் தீக்குணங்களையே திணித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டு, நன்னெறி, நிம்மதி, நிறைவினைத் திணிப்போமானால் தன்னறிவைப் பெற்று ஆன்மாவை அறிய முடியும்.
மாயப் பை என்பதை மறவாதீர்கள். ஓட்டைப் பையில்.. மாயப் பையில்.. நன்மை, தீமை இவற்றில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதைச் சேர்க்கப் போகிறீர்கள்?
அதிசயமான இந்தப் பொத்தல் மாயப்பை உடலை ஆளும் ஆன்மாவும், ஆன்மாவுக்கு அடங்கும் அல்லது ஆன்மாவை அடக்கும் புலன்களும் உணர்வுகளும்... எல்லாமே சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைந்துவிடுவன. ஆன்மா விடுபட்டதும்.. மூச்சு நின்றதும் புலன்களும் உணர்வுகளும் காய்ந்த இலைகள் போல் உதிர்ந்து விழுகின்றன. அழிகின்றன. அந்தக் கணத்திலிருந்து நிலைத்திருப்பது மறைந்த விதமல்ல; வாழ்ந்த விதம்.
மாயப் பையின் மாயம் தொலைந்துவிடும். ஆனால் பையுள் சேர்த்தவை மறையாது. எனவே மாயப்பை நிலைக்கும் பொழுதே தீநெறிகளைக் களைவோம்.
நம் எண்ணங்களும் சொற்களும் செயல்களும் நமக்கும் நம் சந்ததிக்கும் இந்த உலகுக்கும் பெருமை சேர்க்கலாம். அல்லது சிறுமை சேர்க்கலாம். பெருமை சேர்க்கும் சொல்லையும் செயலையும் நமதாக்குவோம். புலனில் தொடங்கி மனதில் இறங்கி ஆன்மாவை அழுக்கடையச் செய்யும் மாசு படிந்த எண்ணங்களையும் செயல்களையும் தவிர்ப்போம். புலன்களை அடக்குவோம். அதனால் ஏற்படும் நிறைவில் அடங்குவோம். அமைதி பெறுவோம்" என்றான். ►