வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/02/10

முக்திக்கான வேள்வி


81
சித்தறியுஞ் சத்துவமே உத்தமரே வித்தகரே
முத்தியெனு மத்தமத்துந் தித்தியம் - சித்தமதில்
துத்துநத்து மத்தரிப்புப் பித்தடக்கும் பத்ததியத்
தித்தியத்துள் தத்திடுந் தீ.

   ல்லுள்ளங்களே! அறிஞர்களே! ஆன்மாவை அறியும் நோக்கத்துடனான உள்தூய்மையே முக்தியெனும் நிலையைத் தரும் வேள்வியாகும். பொய்மை, பேராசை, சினம், அறியாமை எனும் இவற்றை உள்ளத்திலிருந்து அகற்றும் ஒழுக்கமே அந்த வேள்வியில் ஒளிவீசும் தீயாகும் (என்றான் நசிகேதன்).


சித்து: ஆன்மா
சத்துவம்: நல்லெண்ணம், உளத்தூய்மை
அத்தம்: அருநெறி
அத்தும்: அடையும் (அத்தம்+அத்தும்: அருநெறி அடையும் | முத்தி யெனும் அத்தமத்தும்)
தித்தியம்: வேள்வி (வேள்விக்கூடம்)
சித்தம்: உள்ளம்
துத்து: பொய்மை
நத்து: பேராசை
மத்தரிப்பு: சினம்
பித்து: அறியாமை
பத்ததி: ஒழுக்கம் (முறைகளை விளக்கும் நூல்)
தத்திடும்: பரவும் (ஒளிவீசும்)    சிகேதன் தொடர்ந்தான். "பேரின்பம் அல்லது பிறவாமையை வழங்கும் யாகம் பற்றிக் கேட்டீர்களே, சொல்கிறேன். பேரின்பமும் பிறவாமையும் தரும் முக்தி எனும் அரிய நெறி, அரிதான நிலை, அதனை அடைவதற்கு ஒரு வேள்வி உண்டு. ஆன்மாவை அறியும் தன்னறிவைப் பெறுவதே அத்தகைய வேள்வி. தன்னறிவைப் பெற்றவர்கள் பிறப்பையோ இறப்பையோ பற்றிக் கவலைப்படுவதில்லை. பிறவாமை என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இப்பிறவியில் தன்னறிவு பெற்றவர்கள், ஆன்மாவைக் கண்டறிந்தவர்கள், முத்தி அடைந்தவர்களாவர். இதைப் பற்றி மேலும் விவரமாகச் சொல்கிறேன்..."

நசிகேகதனைத் தொடரவிடாமல் அவையில் கேள்விக் கணைகள். 'வேள்வியா? எப்படிச் செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? பெண்களுக்கு அனுமதி உண்டா? இதற்காக வேதங்கள் படித்து ஞானம் பெற வேண்டுமா? விரதங்கள் கடைபிடிக்க வேண்டுமா?' என்று வந்தக் கேள்விகளைப் பொறுமையோடு கேட்டபின் தொடர்ந்தான்.

"இந்த வேள்வியை யார் வேண்டுமானாலும் புரியலாம். இந்த வேள்விக்கான வேதம் மிக எளிதில் புரியக்கூடியதாகும். பெரும் தானங்களும் விரதங்களும் தேவையில்லை. ஆண் பெண் என்ற பேதமில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. ஏழை செல்வந்தர் என்ற பேதமில்லை. படித்தவர் பாமரர் என்ற பேதமும் இல்லை. இன்னார் தான் வேள்வி செய்யவேண்டும் என்ற நியதியில்லை. இந்த வேள்வி வெளியிலே செய்வதல்ல. உள்ளுக்குள் புரியும் வேள்வி. தூய உள்ளத்தை வளர்ப்பதே இந்த வேள்வியாகும். தூய உள்ளத்தில் தொடங்கி தீவிர யோகத்தினால் ஆன்மாவை அறியமுடியும்."

நசிகேதன் சொல்லைக் கேட்டச் சிலர் சிரித்தனர். "சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே? அத்தனை வேதங்களும் முறைகளும் பொய்யாகி விடுமா? உளத்தூய்மை ஆன்ம அறிவாகுமா? இதையெல்லாம் கேட்டு மக்கள் குழம்பப் போகிறார்கள்" என்றனர்.

நசிகேதன் தயங்காமல் தொடர்ந்தான். "வேதங்களும் முறைகளும் பொய்யென்று சொல்லவில்லை. ஆனால் வேதங்களும் முறைகளும் உளத்தூய்மை இல்லாத நிலையில் பலனற்றுப் போய்விடுகின்றன. கண்மூடித்தனத்தை வளர்க்கும் கபடங்களாகின்றன. ஏமாற்றுச் சாதனங்களாகி விடுகின்றன. உளத்தூய்மை இருந்தால், வேதங்களுக்கும் முறைகளுக்கும் தேவையில்லாமல் போகிறது. உளத்தூய்மையை எல்லோரும் பெற முடியும். சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் என்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்காமல், சடங்குகளும் கண்மூடித்தனங்களும் நிறைந்தப் பாதையிலே அழைத்துச் செல்லுமானால் வேதங்களும் நெறிகளும் பொய்யே. தன்னையறியும் பாதையிலே நல்லுணர்வோடு நற்குணங்களோடு பயணம் செய்ய உதவாமல் போனால்.. வேதங்களும் சடங்குகளும் பொய்யே!"

"ஆகா!" என்றனர் சிலர்.

"ஆனால் உளத்தூய்மை பெறுவது எளிதல்ல. புற வேள்வியில் தீ வளர்ப்பது போலவே அக வேள்வியிலும் தீ வளர்க்க வேண்டும். புற வேள்வித் தீயில் தானங்களை வழங்குவது போலவே அக வேள்வித் தீயிலும் புரியவேண்டும்."

"புரியவில்லையே.."

"நம்மை நன்னெறியினின்றுப் பிறழச் செய்யும் ஆசை, பொய்மை, கோபம், அறியாமை போன்றவை நம் மனதிலே குடிகொண்டு அறிவை விரட்டியடிக்கக் கூடியவை. இவற்றை அறிந்து களைய வேண்டும். ஆசை, கோபம், களவு, அறியாமை இவற்றை உணரச்செய்யும் ஒழுக்கமே இந்த வேள்விக்கான வேதம். இந்த ஒழுக்கமே வேள்வித்தீயாக ஒளிவீசி, நாளடைவில் வேள்விப்பயனான தன்னறிவைப் பெற வழி செய்கிறது. அகவேள்வித் தீயில் நாம இடவேண்டியவை நம் தீக்குணங்கள். தூய மனதில் துக்கமில்லை. தூய மனதுக்கு சுகம் துக்கம் நன்மை இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றே. அந்த நிலையில் புறத்தியாகங்களைப் புரிந்து பொய்யான பலன்களை எதிர்நோக்கும் அவசியமில்லை"

"நல்ல பிள்ளையப்பா! நீதி சொல்லக் கிளம்பிவிட்டான்.." என்றார் ஒரு அறிஞர். "சாத்திரங்கள் சொல்லாதப் புதுக்கதையை சொல்கிறான். இதைக் கேட்க வந்தோமே!" என்று அவையை விட்டுக் கிளம்பினார்.

"ஐயா, பொறுங்கள்" என்றார் இன்னொரு அறிஞர். நசிகேதனிடம், "இளவரசே! நீங்கள் சொல்வது போல் உள்தூய்மையால் தன்னறிவு பெற முடிந்தால் ஏன் அனைவரும் பெறுவதில்லை?" என்றார்.

அவையில் சிலர், "ஆமாம் மகனே.. எங்களுக்கும் அந்த ஐயம்.. பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம் என்று பயந்து கொண்டிருக்கும் எங்களுக்கு உள்தூய்மை பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.. பேரின்பம் இவ்வளவு எளிதானதென்றால் ஏன் எல்லோரும் சடங்குகளை நம்பிக் கொண்டிருக்கிறோம்?" என்றனர்.

நசிகேதன் தொடர்ந்தான். "சொல்கிறேன். ஆன்மாவை அறியும் நோக்கத்துடன், ஆசை கோபம் களவு அறியாமை இவற்றை அகற்றி உள்தூய்மையை வளர்ப்பதே முக்தி என்னும் அரிய நிலையடையும் வழி. எனினும், உள்தூய்மை என்பது எளிதல்ல. உள்தூய்மை அடைய விடாமல் தடுப்பவை, நம் புலன்களாகும்" என்றான்.

6 கருத்துகள்:

ராமசுப்ரமணியன் சொன்னது…

விட்டைதையெல்லாம் படிச்சு முடிச்சேன். தனியாக முத்திரை பதிக்கிறீர்கள். கடோபனிஷத கவசம் தேவையேயில்லை. keep it up.

ஸ்ரீராம். சொன்னது…

பாமரர்கள் மெய்யறிவை சுலபமாகப் பெறத் தகுதியானவர்கள்// ஆஹா..அப்போ என் போன்றவர்களுக்குச் சுலபமாக இருக்கும் போலிருக்கே...... அதிகம் கற்ற மக்களுக்கு நடுவில் இருந்தால் ஞானம் வருமா அல்லது பாமரர்கள் மத்தியில் இருந்தால் ஞானம் வருமா? (நசிகேதனுக்கு தந்தையின் ஆத்திர அவசரம்தானே அறிவூட்டக் காரணமானது?) இறந்தபின் அறிய முடியுமா...அறிந்தாலும் பலனைத் துய்க்க முடியுமா?

பிறவாமை இறவாமை பற்றிக் கவலைப் படாத தன்னறிவைப் பெற்றவர்கள் பிறவா வரம் பெற்று முக்தியடைந்து விடுவது ஒரு விதத்தில் பேரான்மாவின் ஓரவஞ்சனை இல்லை....மற்றவர்களுக்கு அந்தத் தன்னறிவைப்பெற வைக்க அவர்கள்தானே வேண்டும்?! ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளை நினைவுக்கு வருகிறது.

ஜால்ரா என்று தோன்றினாலும் வெண்பா தகிட தகிட என்று மலைப் பாதையில் குதிரையில் செல்வது போல உள்ளது. பா வகை தெரியா விட்டாலும் திருப்புகழ் வாசனை அடிக்கிறது. புரிந்தவர்க்கு பொன்னுலகும், பொண்ணை அறியும் மக்கள் தன்னை அறியவும், மெய்யறிவைப் பையிலடைத்து போன்ற வரிகள் வசீகரிக்கின்றன.

Unknown சொன்னது…

கூகிள் ரீடரில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். பாட்டு மனனம் செய்யும் ஆசையைத் தூண்டுகிறது! படித்துவிட்டு கூகிள்+இலும் பகிர்ந்திருக்கிறேன்.

நன்றியும் வாழ்த்துகளும்!

Santhini சொன்னது…

வெகு அழகான வெண்பா. திரும்ப திரும்ப பாடிப் பார்த்தேன். அப்பாதுரை!.. கலக்குகிறீர்கள் போங்கள் !

அப்பாதுரை சொன்னது…

நன்றி ராமசுப்ரமணியன், ஸ்ரீராம்., Anuja Kekkepikkuni, Santhini, ...

சிவகுமாரன் சொன்னது…

பத்துரதன் புத்திரனின் மித்துருவின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்.
-- என்று ஒரு கவிதை வரி நினைவுக்கு வந்தது.