வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/01/06

மண்வந்தான் மைந்தன்

77
விழியிழந்துப் பின்விழி பெற்றாலும் வாசன்
மொழியிழந்தான் மைந்தனைக் கண்டு - எழில்கூடி
மண்வந்த மைந்தன் கடலானான் தந்தையின்
கண்களில் காவிரி கண்டு.

   ன் மைந்தனைக் கண்ட வாசன் கண்ணிழந்த குருடர் கண் பெற்றது போல் மகிழ்ந்தாலும், அதை வெளிப்படுத்தும் மொழியிழந்து நின்றான். பேச்சிழந்தத் தன் தந்தையின் கண்களில் நதியெனப் பெருகியக் கண்ணீரைக் கண்டதும், அழகும் உயர்வும் பெருகி மண்ணுலகம் மீண்ட மகன் நசிகேதனின் கண்கள் கடலானது.

    மனின் ஆட்கள் நசிகேதனை வாசனின் அரண்மனையில் விட்டுப் போனார்கள்.

நசிகேதனைக் கண்டக் காவலர்கள் அவன் காலில் விழுந்து வணங்கினார்கள். உள்ளே அடியெடுத்து வைத்தான் நசிகேதன். அவனைக் கண்டவரெல்லாம் கும்பிட்டனர். காலில் விழுந்தனர். 'யார் இந்த இளைய மகான்? எம் இளவரசர் போலவே இருக்கிறாரே?' என்று அச்சத்திலும் அதிசயத்திலும் வணங்கினார்கள். சலசலப்பு அரண்மனைக்குள்ளும் எட்டியது. சிலர் ஓடிச்சென்று மன்னன் வாசனிடம் செய்தி சொன்னார்கள்.

'இதென்ன எமதூதர்களின் வருகை!' என வெருண்டு வெளியில் வந்த வாசன், அறை வாயிலில் நின்றவனைக் கண்டு வாயடைத்துப் போனான். 'என் மகன் போலவே இருக்கும் இவன் யாராக இருக்கும்?. என் மகனை இழந்த சோகத்தில் யாரைப் பார்த்தாலும் நசிகேதன் போலவே இருக்கிறதே? இவன் நசிகேதனை விட அழகாகவும் பொலிவுடனும் இருக்கிறானே! இவன் முகத்தில் வீசும் அமைதியின் ஒளி ஆயிரம் தீப்பந்தங்களைத் தோற்கடிக்கிறதே! யார் இவன்?' என்று பலவாறு எண்ணியபடி வாயிலை நோக்கி நடந்தான்.

"அப்பா!" என்றான் பிள்ளை. ஆயிரம் தீப்பந்தங்கள் சுட்டாற் போல் இருந்தது வாசனுக்கு. இருந்தும் தேன் குடங்கள் சரிந்தாற் போல இனித்தது.

"நசிகேதா! என் மகனே!" என்று உரக்கச் சொல்லி உவகை பெற நினைத்தவன், திடுக்கிட்டான். பேச முடியவில்லை. நா எழவில்லை. 'இதென்ன கொடுமை! இத்தனை நாள் குருடனாக இருந்தேன். கண் திறந்தக் கணத்தில் வாய் மூடியதே?' என்றுக் கலங்கினான். 'இதுவும் நன்மைக்கே. வாய் தவறியதால் வந்த வினையில் தானே இவனை இழந்தேன்? வாய்ச் சொல்லில் என்ன பயன்?' என்று அடங்கினான்.

'மகனே!' என்று மனதால் அழைத்தான் வாசன். கண்களில் திரண்டக் கண்ணீர் நதியாக ஓடியது.

தந்தையின் நிலையைக் கண்ட மகன் நசிகேதனின் மனமும் கரைந்துருகியது. நதியைத் தேடிவந்த கடல் போல் அவன் தந்தையிடம் ஓடினான். அவன் கண்களிலும் கடலெனக் கண்ணீர்.

காலில் விழப்போன மகனைத் தடுத்து நிறுத்தினான் வாசன். அனைவரும் பார்த்து நிற்க, மகனின் கால்களில் விழுந்து வணங்கினான் தந்தை.

14 கருத்துகள்:

meenakshi சொன்னது…

ஜொலிக்கும் முகத்திற்கு ஆயிரம் தீபந்தங்கள் உவமையாக அழகாய் இருக்கிறது.
நசிகேதனின் காலில் அவன் தந்தை விழுந்தது, அவன் அருமையை உணர்ந்ததின் உச்சம். எதுவுமே இழந்த பின்தான் அதன் அருமை புரியும். அப்படி இழந்த பொக்கிஷத்தை மீண்டும் பெறும்போது அதில் இருக்கும் நிறைவும், ஆனந்தமும் கடலினும் பெரிது. இதை அழகாய் விளக்கி இருக்கிறீர்கள்.

'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி, பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி'. இது எல்லா உறவுக்கும்தான்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"அப்பா!" என்றான் பிள்ளை. ஆயிரம் தீப்பந்தங்கள் சுட்டாற் போல் இருந்தது வாசனுக்கு. இருந்தும் தேன் குடங்கள் சரிந்தது போல இனித்தது.


கண்ணிழந்தான் பெற்ற இன்பமல்லவா..

புத்திர சோகம் தீர்ந்ததே .. தேன் குடம் சரிந்து நாவில் இனித்தாற்போல்..

அருமையான பகிர்வு..

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

சென்னை பித்தன் சொன்னது…

//எழில்கூடி
மண்வந்த மைந்தன் கடலானான் தந்தையின்
கண்களில் காவிரி கண்டு.//
அருமை!தொடர்ந்ததற்கு நன்றி.

பத்மநாபன் சொன்னது…

சொன்ன நேரத்தில் சரியாக சுகமாக மூன்றாம் பகுதியை ஆரம்பித்து விட்டீர்கள் இரண்டாம் பகுதியில் படிக்க வேண்டியது பாக்கியுள்ளது . இந்த சுக ஆரம்பித்தில் மூழ்கி விட்டேன் . தந்தை தனயன் பாசப்பிணைப்பை நன்றாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள் .. இனி எமனிடம் கற்ற பாடங்கள் வாசனுக்கு செல்லும் வழியில் எங்களுக்கும் எட்டும் ...

Santhini சொன்னது…

Nice start.

சிவகுமாரன் சொன்னது…

அருமை.
சூடாமுடியின் பாதிப்பு தெரிகிறது நடையில்.

ஸ்ரீராம். சொன்னது…

//வாய் தவறியதால் வந்த வினையில் தானே இவனை இழந்தேன்? வாய்ச் சொல்லில் என்ன பயன்?' என்று அடங்கினான்//

ஆஹா....அது!

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, இராஜராஜேஸ்வரி, சென்னை பித்தன், பத்மநாபன், Santhini, சிவகுமாரன், ஸ்ரீராம்., ...

Expatguru சொன்னது…

அத்தனை பகுதிகளையும் இன்று தான் படித்து முடித்தேன். உண்மையிலேயே திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். உங்களது தமிழ் புலமைக்கும் ஆழ்ந்த கருத்துரைகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

காவிகளை பல இடங்களில் சாடியிருக்கிறீர்கள். எதோ அனைத்து தீமைகளுக்கும் காவிகளே பொறுப்பு என்பது போல் அல்லவா சில இடங்களில் கருத்து அமைந்துள்ளது? மத்திய கிழக்கு நாடுகளில் இன்றும் கூட மதவாதிகள் நடத்துகிற‌ கொடுமைகள் உங்கள் கண்களுக்கு ஏன் புலப்படவில்லை? (நான் நேரில் அனுபவ பட்டிருக்கிறேன்). அது போல, "குருடர்களுக்கு தேவன் கண்களை கொடுப்பான், முடவர்களுக்கு கால் கொடுப்பான்" என்று மெரினா கடற்கரையில் புருடா விடுபவர்கள் உங்களுக்கு தெரியவில்லையா?


பேரான்மாவை பற்றாத சிறிய ஆன்மாக்களை போல தானே (சிற்றலைகளை போல)இவர்களும்? நான் கூற வந்தது என்னவென்றால், காவிகளை மட்டும் குறிப்பிட்டு குற்றம் சாட்டாதீர்கள் என்று தான்.


அதே போல, விதி என்பது மடத்தனம் என்று பல இடங்களில் கூறியிருக்கிறீர்கள். தரமற்றவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருவதும், உண்மையிலேயே உழைத்து கற்றவர்கள் சாதாரணமான நிலையில் இருப்பதும் நிதர்சனம் தானே? (உதாரணம், படிக்காமலேயே, உழைக்காமலேயே மந்திரி பதவி வகிப்பவனும், படித்து வறுமையில் வாடும் தமிழாசிரியரும்). இது தான் விதி என்பதோ?


மற்றபடி, மிக மிக சிறப்பாக இருந்தது ஐயா. வெகு நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு காவியத்தை படித்த திருப்தி கிடைத்தது.

சென்னை பித்தன் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

Geetha Sambasivam சொன்னது…

அப்பாதுரை, இன்னும் என்னவெல்லாம் ஒளிச்சு வைச்சிருக்கீங்க? உண்மையைச் சொன்னால் உங்களைப் பார்த்துக் காதிலிருந்து புகை வருது எனக்கு. இதை இன்னும் படிக்கலை; வலைச்சரம் மூலமா அறிமுகம். இனிமேல் தான் படிக்கணும். படிச்சுட்டு மத்த பின்னூட்டங்கள்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி சென்னை பித்தன்.
உங்களுக்குத் தெரியும்னு நெனச்சிட்டிருந்தேன் கீதா. நேரம் கிடைக்குறப்ப படியுங்க. படிக்கிறதா சொன்னதே பெரிசு தான்.

அப்பாதுரை சொன்னது…

வருக expatguru. படிச்சதுக்கும் sincere கருத்துக்கும் ரொம்ப நன்றி.

நீங்க கொடுத்திருக்கறது feedback, அதனால நான் விவாதம் பண்றதா நெனக்காதீங்க. i take your feedback as is.

காவிகள் அங்கிகள் தாடிகள் எல்லாமே ஓரினம் தான். மதம் வளர்க்கும் அத்தனை பேரும் கடவுள் மர நிழலில் கடை விரித்தவர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது; நாம் ஏமாறுகிறோம் என்றே சொல்ல முடிகிறது என்னால். நாம் கண்மூடத் தயங்கும் கணமே கடை காணாமல் போய்விடும் அதிசயம் நிகழும். எவரையும் குற்றம் சாட்டும் எண்ணமில்லை ஐயா. நசிகேத வெண்பா எழுதத் தொடங்கியதே அதற்குத்தான். நம்மைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கடோபனிஷதக் கரு என்னை மிகவும் பாதித்தது காரணம். தெரியாமல் படித்தப் புத்தகம் கடோ, தெரிந்து எழுதும் புத்தகம் இது. :) பிழைகளுக்கு நானே பொறுப்பு.

காவிகளை சிறிய ஆன்மாக்கள் என்று நீங்கள் சொல்வது... சிலிர்க்க வைக்கிறது. மனதில் எழுந்ததை எழுத்தில் வடிப்பது மிகச் சிரமம். அதுவும் தமிழில் எழுதுவது எனக்கு கூடுதல் சிரமம் (இப்பொழுது எத்தனையோ மேல்). ஒற்றி ஒடுங்கும் என்று நான் எண்ணியதை.. அதே ஆழத்தை.. புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது gratifying. நன்றி.

விதி பற்றி நீங்கள் சொல்வது சரியே. அதைத் தானே பூர்வ ஜென்ப பாபம் புண்ணியம் என்று விற்றுக் கொண்டிருந்தோம் (காவிகள் அங்கிகள் எல்லாரும்). 'இந்த மாதிரி தர்மங்கள் செஞ்சா அடுத்த ஜென்மத்துலே ராஜாவா பொறக்கலாம்'னு நம் புராணங்களிலும் சாத்திரங்களிலும் இல்லாத பட்டியலா? in general, some of us win this lottery, most of us lose. உலக உருவாக்கமே ஒரு lottery தானே? அத்தனை கோள்கள் இருக்கும் பொழுது இந்த ஒரு கோளில் மட்டும் carbon கிடைப்பானேன்? கொஞ்சம் உரிக்க ஆரம்பித்தால் இந்த வெங்காயத்தை கை வலிக்கும் வரை உரிக்கலாம். உயர்ந்த இடம், சாதாரணமான இடம் என்று எதைச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தது அவற்றை ஏற்கும் மனப்பாங்கும். there is always someone taller.

'வாடுவது' is a choice we make. choice எடுத்துவிட்டு அடுத்தவன் வாழ்கிறானே என்று புலம்புவதால் என்ன பயன்? 'அடுத்தவன் நன்றாக இருக்கிறானா? கொட்டமடிக்கிறானா? போகட்டும். என்னுடைய தீர்மானங்களும் தேர்வுகளும் என்னை என் பாதையில்.. ஒரே ஒரு முறை தான் வாழ்கிறோம் - அதனால் என் மனதுக்கு நிறைவான வழியில்.. எடுத்துச் செல்கின்றனவா? இன்னொருவன் மனதுக்கும் நிறைவாக வாழ முடிந்தால் இன்னும் அபாரம்' என்ற பாணி வாழ்க்கையில் விதிக்கே இடமில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு பதிவில் மகான்களுக்கும் சாதாரணர்களுக்குமான வேறுபாட்டை சொல்லியிருக்கிறேன். மகான்களும் விதிக்கு உட்பட்டவர்களா? இல்லையென்று நம்புகிறேன். நிறைய மகான்கள் இருந்தாலும் தாங்காது :) unfortunately, பத்து கோடி ஹிட்லர்களுக்கு ஒரு தெரசா கூட வருவதில்லை. அதனால் விதியின் vicious வீச்சு என்று அடங்கி விடுகிறோம் என்று நினைக்கிறேன்.

அருமையான கருத்துக்கு நன்றி.

meenakshi சொன்னது…

விதி பற்றிய உங்கள் கருத்து அபாரம். அருமையான பின்னூட்டம். 'தமிழ் அறிஞர்' என்று உங்களுக்கு பட்டம் கொடுத்தது சரிதான். :)