வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/03/23

ஆன்மா எனும் பேரொளி


87
கதிருங் கணப்பொறியுங் கங்குல் கலையுங்
கதிர்க்குங் கணங்களுங் கங்குல் - கதிநாடிக்
கட்கிலியைக் கண்பெறுங் காலையிற் காரிரியக்
கிட்டுங் ககனக் கனல்.

   திரவனும் மின்னலும் இருளே. நிலவும் ஒளிவீசும் விண்மீன்களும் இருளே. தன்னறிவைத் தேடி, எளிதில் புலப்படாத ஆன்மாவை அகத்தே அறியும் வேளையில் அண்டத்தின் இருளகற்றும் ஒளி பிறக்கும்.


கதிர்: கதிரவன்
கணப்பொறி: மின்னல்
கங்குல்: இருள்
கலை: நிலவு
கதிர்க்கும்: ஒளி வீசும்
கணங்கள்: விண்மீன்கள்
கதி: தன்னறிவு
கட்கிலி: புலப்படாதது
கண்பெறும்: அகத்தே அறியும்
காலை: வேளை
கார்: இருள்
இரிய: விலக
ககனம்: அண்டம்
கனல்: சுடர், ஒளி


    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! ஒளியைப் பற்றி முன்னர் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள். ஆன்மா ஒளியைப் போன்றது. நம் குணங்களின் அழகையோ அழுக்கையோ அறியச் செய்கிறது. ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்ற வேண்டும் என்றேனல்லவா? மேலும் சொல்கிறேன் கேளுங்கள். ஆன்ம ஒளியின் முன்னே மற்ற ஒளிகள் எல்லாம் இருளாகும்"

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம்! பழம் போல் சிவந்து நீர் போல் வெளுத்து வானில் ஒளி தரும் கதிரவனுக்கு ஒளியைக் கொடுத்தது யார்? குளிர்ச்சியைத் தரும் நிலவின் ஒளி எங்கிருந்து வந்தது? அழகாகத் தோன்றும் அதே நேரம் அச்சத்தையும் தரும் மின்னலைப் பார்க்கிறோம். மின்னல் ஒளியை எங்கிருந்து பெற்றது? இரவிலே கண்ணுக்கும் மண்ணுக்கும் குளிர்ந்த ஒளியைத் தரும் விண்மீன்கள் வானில் வைரங்களாக மின்னுகின்றனவே? அந்த வைர ஒளி எங்கிருந்து வந்தது?" என்று அவையினரைக் கேட்டான் நசிகேதன்.

"இதென்ன, கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கிறது இந்தப் பிள்ளை? சொர்க்கம் பற்றி ஏதாவது சொல்லுமென்று பார்த்தால்..."

"ஐயா மகா ஞானியே... இளவல் ஒரு வேளை சொர்க்கத்தைப் பற்றித்தான் சொல்கிறார் போலிருக்கிறது.. சற்றுச் செவிமடுத்துக் கேட்போம்..."

"சூரியனுக்கு ஒளி எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கும் சொர்க்கத்துக்கும் என்னய்யா தொடர்பு? பாமரர்களை ஞானச்சபையிலே அனுமதித்தால் இப்படித்தான்.."

"என்னதான் சொல்கிறார் இளவரசர் என்று கேட்போமே ஐயா.."

நசிகேதன் அவையோரைப் பார்த்துப் புன்னகைத்தான். "என் கேள்வியை மதித்துச் சிந்தித்ததற்கு நன்றி" என்றான். தொடர்ந்தான். "சொர்க்கத்தில் உள்ளதே இங்கே இருக்கிறது. இங்கிருப்பதே சொர்க்கத்தில் உள்ளது என்றேன் அல்லவா?"

"சொர்க்கத்தில் சூரியன் ஒளி இன்னும் அதிகமோ?"

"சொர்க்கத்திலும் சூரிய ஒளி இல்லை. இங்கேயும் சூரிய ஒளி இல்லை"

"என்ன?"

"ஆம்! சொர்க்கத்தில் சந்திரனுக்கு ஒளியில்லை. இங்கேயும் ஒளியில்லை. சொர்க்கத்தைப் போலவே இங்கும் மின்னல்களும் விண்மீன்களும் மையிருளானவை. அவ்வளவு ஏன்? தீச்சுடருக்குக் கூட சொர்க்கத்திலோ இங்கேயோ ஒளியில்லை"

"சற்றுமுன் தானே ஐயா ஒளி எங்கிருந்து வந்தது என்று கேட்டீர்கள்? இப்போது ஒளியில்லை என்கிறீர்களே? அரச மைந்தன் என்ற காரணத்துக்காக எங்களையும் பாமர மக்களையும் இப்படிக் குழப்புவதைப் பொறுக்க முடியாது..."

"மன்னிக்க வேண்டும் அரச குருவே!" என்றான் நசிகேதன். "நான் யாரையும் குழப்ப எண்ணவில்லை. என் ஆசான் எனக்கு விளக்கியதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனுமதியுங்கள்" என்றான்.

பிறகு அவையோரைப் பார்த்து, "அன்பர்களே! ஆன்மா என்பது ஒளிப்பிழம்பாகக் கூடியது. நம்முள் முடங்கிக் கிடக்கையில் குன்றியிருப்பது. தன்னையறிந்து ஆன்ம ஒளியை வளர்க்க வேண்டும். அந்த ஒளிதான் சூரியனுக்கும் சந்திரனுக்கும் மின்னலுக்கும் விண்மீன்களுக்கும் தீச்சுடருக்கும் ஒளியாகிறது.

நாம் நிதம் காணும் சூரியனும் சந்திரனும் மின்னலும் தீயும் தாரகைகளும் புற ஒளிகள். புற ஒளிகளைப் புரிய வைப்பதும் அறிய வைப்பதும் அறிவாகும். அன்பர்களே! வாழ்வின் குறிக்கோள் மெய்யறிவு எனும் தன்னறிவைப் பெறுவதாகும். வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் உண்மை எனும் மெய் இழைந்திருக்கிறது. வாழ்வது, உண்மையை அறியத்தானே தவிர வேறெதற்குமில்லை.

வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் பொய்மை எனும் போலியறிவும் இழைந்திருக்கிறது. பொய்மை, கண்மூடித்தனங்களையும் பலனற்ற செயல்களையும் மனித நேய அழிவையும் வளர்க்கிறது. பொய்மையை அறிந்து அகற்ற வேண்டும். உண்மை எனும் மெய்யறிவைப் பெறும் பொழுது பொய்யறிவு தறிகெட்டு ஓடித் தங்க இடமில்லாமல் அழியும்.

ஆனால் நாம் பொய்யறிவை நம்பி உண்மைகளைப் புறக்கணிக்கிறோம். உண்மையான அன்பு, உண்மையான பாசம், உண்மையான நேயம், உண்மையான உடைமை போன்றவற்றை அறிய மறுக்கிறோம். பொய்மை ஆழமாகக் குடியிருக்கும் மனங்களில் உண்மையறிய வாய்ப்பேயில்லாது போய்விடுகிறது. மெய்யறிவுப் பாதையிலே அடியெடுத்தும் வைக்காமல் வாழ்வின் பொருளையறியாமல் வாழ நேரிடுகிறது.

பொய்மையில் உழலத் துணிவு தேவையில்லை. எந்த முயற்சியும் தேவையில்லை. ஆனால் உண்மையறியத் துணிவு வேண்டும். விடாமுயற்சி தேவை. உண்மையை அறிந்தக் கணத்தில் பொறி தட்டுகிறது. உண்மையின் ஒளி மகத்தானது. உண்மையின் பொறி தீயாகப் பரவி வாழ்வின் அத்தனைக் கேடுகளையும் தீக்குணங்களையும் போலிப் பற்றுக்களையும் பொய் நம்பிக்கைகளையும் அழிக்கத் தொடங்குகிறது. மனம் புடமிட்டப் பொன்னாகிறது. அகவொளியை அறியத் தொடங்கிய கணத்தில் புற ஒளிகளின் இருள் புரியத் தொடங்குகிறது.

வாழ்வின் இந்தத் தேவையை உணர்ந்து, மதித்து, அதைத் தேடுவோர் சிலரே. தேடுதலில் பற்று வைத்துத் தீவிரமாக முனைவோர் மிகச் சிலரே. முனைப்பைக் கைவிடாது புலனைக் கட்டித் தன்னறிவைப் பெறுவோர் இன்னும் சிலரே. தன்னறிவைப் பெற்ற நிலையில்.. அந்த அமைதியில்.. ஆன்மாவை, தன் உண்மையான சக்தியை, அறியத் தொடங்குவோர் அரிதானவர்.

இது எளிதன்று. எளிதன்று என்ற காரணத்தினால் முயற்சியைக் கைவிடுவது ஒரு சாபம் போன்றது. வருந்தத்தக்கது. வேதனைக்குரியது.

சற்று சிந்திப்போம். பிறப்பும் இறப்பும் யாதென்று அறிந்தோம். ஆன்மா கருவில் சேர்ந்தக் கணத்தில் உயிர் துடிக்கத் தொடங்குகிறது. ஆன்மா பிரியும் கணத்தில் உயிரடங்குகிறது. உயிரற்ற நிலையில் சூரிய ஒளியை அறிவோமா? சந்திர ஒளியை அறிவோமா? அப்படியெனில், உயிருடன் இருக்கையில் நாம் அறியும் ஒளிகளுக்கு ஒளியைக் கொடுத்தது ஆன்மா தானே?

ஒளிகளுக்கெல்லாம் ஒளியை வழங்கி ஒளிக்கப்பாற்பட்ட ஒளியாக விளங்கும் ஆன்மாவை அறிந்தக் கணத்தில் எந்த ஒளியுமே ஒரு பொருட்டில்லை. உயிர் பிரியும் அந்தக் கணத்தில் ஆன்மா ஒளிப்பிழம்பாக விளங்கும் வகையில் வாழ்வோம். இதுவே மெய்யறிவு. இதுவே சொர்க்கம். நாமே அந்த ஒளி. தன்னறிவே அந்த ஒளியின் சுடர். நாமே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளியை வழங்கும் சக்தி. மனித சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பிழம்பாக வாழ்வோம். இருள் படியாமல் வாழ்வோம்" என்றான்.

அவையோர் தங்களுக்குள் பேசத்தொடங்கி அடங்கினர். நசிகேதன் சொன்ன பொருளில் ஆழங்களைத் தேடினர். முன்பு தோன்றிய கிழவி மீண்டும் கூட்டத்திலிருந்து முன்னேறி வந்தாள். நசிகேதனின் அருகே வந்து புன்னகைத்தாள். "ஐயா.. நீ பெற்ற அறிவை அனைவருடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் ஒரே ஒரு கேள்வி என் மனதில் தோன்றியது..." என்றாள்.

நசிகேதன் கிழவியை வணங்கினான். "சொல்லுங்கள்.. உங்கள் மனதில் தோன்றியதைக் கேளுங்கள்" என்றான்.

"ஐயா. மெய்யறிவு பற்றிச் சொன்னீர்கள். ஒளியைப் பற்றிச் சொன்னீர்கள். தன்னறிவு ஆன்மா என்றெல்லாம் சொன்னீர்கள். நானோ வயதானவள். இன்றைக்கோ நாளைக்கோ என் உயிர் பிரியும் நிலையில் இருக்கிறேன். எனக்குத் தன்னையறியவும் ஆன்மாவை அடையாளம் காணவும் ஆசை... உயிர் பிரியும் அந்தக் கணத்தைப் பற்றி ஏதாவது அறிய முடியுமா ஐயா?" என்றாள்.

நசிகேதன் சிந்தித்தான். கிழவி கேட்டக் கேள்வியின் நோக்கம் என்ன? உயிர் பிரியும் தருணத்தை அறிய முடியுமா என்று கேட்கிறாரா? உயிர்ப்பறவை எப்போது பறக்கும் என்று யாராலும் சொல்ல இயலாதே? பிறகு இந்தக் கேள்வியை என் முன் வைப்பானேன்? நசிகேதன் கிழவியை மீண்டும் வணங்கினான். "ஆன்மாவை அறியக்கூடிய அந்தக் கணத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. மகான்கள் அனைத்தையும் அடக்கி ஆன்மாவை அறியும் சமாதி எனும் நிலையை அடைந்திருக்கிறார்கள். புலனை அடக்கி மூச்சைக் கட்டி.. எல்லாம் அடங்கிய நிலையான சமாதி எனும் நிலை பற்றிச் சொல்கிறேன்" என்றான்.

"நன்றி ஐயா" என்ற கிழவி, நசிகேதன் பார்வை தொடரும் பொழுதே கூட்டத்தில் கரைந்து மறைந்தாள்.


          கடோவின் மிகச் சிறந்த, நுண்மையான பாடல் இது. வடமொழிப் பாடலை இதுவரை நூறு முறையாவது படித்திருப்பேன் என்றால் மிகையாகாது. சூட்சுமம் புரிந்து கொண்டே இருக்கிறது :)

பாடலின் சாரம் தமிழில் சரியாக வெளிவரவில்லையெனில் அதற்கு நானே பொறுப்பு. மொழி தெரிந்தால் இன்னும் உன்னலாம் எனினும் கருத்தின் அற்புதம் மொழிக்கப்பாற்பட்டது என்பதால், வடமொழிப் பாடலின் நேர் தமிழ் வடிவத்தைத் தருகிறேன்:

அங்கே சூரியனும் பிரகாசிப்பதில்லை; சந்திரனும் தாரகைகளும் பிரகாசிப்பதில்லை; மின்னல்களும் ஏன் தீயும் பிரகாசிப்பதில்லை. அவன் பிரகாசிக்கும் பொழுது எல்லாம் பிரகாசிக்கின்றன; அவனுடைய ஒளியால் இவை எல்லாமே பிரகாசிக்கின்றன.

வடமொழிப் பாடலில் 'அவன்' என்று குறிப்பிடப்படுவது ஆன்மா. சூட்சுமக் குறிப்பு.

ஒன்றிரண்டு கருத்துக்களை மட்டும் தெரிவித்து மற்றதை உங்கள் சிந்தனைச் சுகத்துக்கே விடுகிறேன்.

கடோவுக்குப் பிறகு எழுதப்பட்டதான கீதையில் "என்னிலிருந்தே எல்லா ஒளியும் உண்டாகின்றது" என்று கண்ணன் சொல்வதாக வருகிறது. ஒளி உணரப்படுவதா, அறியப்படுவதா? ஒளி என்பது அறியப்படுவதாகும். சூரிய சந்திரனின் ஒளி இப்படிப்பட்டது என்று அறியமுடிகிறது. கண்கள் சூரியனைப் பார்த்ததும் நம் அறிவு நமக்கு அது ஒளி தருகிறது என்று அறிய வைப்பதால், சூரியன் ஒளி தருகிறது என்கிறோம். எனவே, இங்கே சூரியனின் 'ஒளி'த்தன்மைக்குக் காரணமாயிருப்பது சூரியனா, நம் அறிவா? குருடன் ஒளியை அறிவது எப்படி? ஆன்மா எனும் ஒளியை அகக் குருடர்களாகிய நம்மால் அறிய முடியுமா?

10 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆன்ம ஒளியின் முன்னே மற்ற ஒளிகள் எல்லாம் இருளாகும்"

ஆன்மா ஜொலிக்கும் பிரகாசம் பொருந்தியதாக அறிவிக்கிறானோ நசிகேதன் !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சூரியனின் 'ஒளி'த்தன்மைக்குக் காரணமாயிருப்பது சூரியனா, நம் அறிவா? குருடன் ஒளியை அறிவது எப்படி? ஆன்மா எனும் ஒளியை அகக் குருடர்களாகிய நம்மால் அறிய முடியுமா?

அகக்கண்களை திறக்க அருமையான முயற்சி !

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே!தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தில் (dialectical meterialism) ஒரு கேள்வி எழுப்பப்படும். what is liight? ஒளி என்றால் என்ன? energy in its radiant form. சக்தி ஒளிரும் தன்மை பெற்ற நிலை என்பார்கள். சக்தியை உருவாக்க முடியாது.அழிக்கவும் முடியாது.அப்படியானால்.....---காஸ்யபன்

சிவகுமாரன் சொன்னது…

யப்பா. எவ்வளவு நுட்பமாய் சிந்திக்க வைக்கிறீர்கள்.

meenakshi சொன்னது…

க க க க க என்றிருக்கும் கரடுமுரடான வெண்பா உங்கள் விளக்கத்தால் சுகமானது.
பதிவின் பல வரிகள் மிகவும் அற்புதம். பிரமாதமாய் எழுதி இருக்கிறீர்கள்.
//பொய்மையில் உழலத் துணிவு தேவையில்லை. எந்த முயற்சியும் தேவையில்லை. ஆனால் உண்மையறியத் துணிவு வேண்டும். விடாமுயற்சி தேவை.// சத்தியத்தின் பாதையில்தான் சோதனைகள் ஏராளம்.
இந்த பாதையில் செல்ல முதலில் எண்ணத்திலேயே துணிவு வேண்டும்.


கடோவின் மிகச் சிறந்த, நுண்மையான பாடல் மிகவும் அருமை. ஆன்மாவின் ஒளி எப்பேற்பட்டது என்று படித்த போது உடல் சிலிர்த்தது. பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நுட்பமான ஆன்ம கருத்துகளை விளக்குகிறது பதிவு. ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. பல்வேறு வினாக்களை நெஞ்சில் எழுப்புகிறது.

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

அடடா.... வார்த்தை என்ன இருக்கு சொல்ல...

ராமசுப்ரமணியன் சொன்னது…

காலங்காலை அமைதியில் நசிகேத வெண்பா விட்டதை படித்து முடிச்சது இன்னும் அமைதியான உணர்ச்சி. Thank you for the impressive work. இந்தப் பகுதி நன்றாகவே உல்ளது அப்பாதுரை. ஆமா இந்தப் பாட்டில் எல்லாமே ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் டெக்னிக் பேர் ஏதாவது உண்டா வெண்பா புலவரே? (நல்ல டைடில் கொடுத்தாங்க உங்களுக்கு!)

ராமசுப்ரமணியன் சொன்னது…

"டிஎம்எஸ் அவங்க குரல் நல்லா வருதுன்னா ரேடியோ பெட்டிய கொண்டாட முடியுமா? அவரு கண்ணுக்குத் தெரியலே, குரல் மட்டும் நிறைவா இருக்குது. காதுல விழுந்த ஒலிக்கு மூலம் யாரோ அதை தெரிஞ்சுக்கிட்டாத்தான் ரசனை அனுபவம் முழுமையாவும். சினிமா பாட்டே இதுபோலனு சொன்னா தெரிஞ்சது தெரியாதது புரிஞ்சது புரியாதது எல்லாத்துக்கும் மூலம் உண்டல்லவா? கண்ணுக்குத் தெரிந்ததை கொண்டாடுறோம். தெரியாத அத்தனையும் அந்தக் கந்தன் கடம்பன் கதிர்வேலன் அவனுக்குள்ளே அடங்கிக்கிடக்கு. அவன் தான் மூலம்" என்பார் வாரியார்.

prabhu சொன்னது…

உங்களின் அருமையான, ஆழமான இப்பதிவினை யான மேற்கோளிட்டு காட்டிட விழைகிறேன், என் பதிவில். தங்களின் ஒப்புதல் கிடைக்குமா? எதிர்பாரக்கிறேன். நன்றி.