வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/25

நசிகேதன் விடைபெற்றான்


76
காலனின் கால்பணிந்தான் தான்கற்றத் தத்துவமோ
ஞாலத்து மையகற்றும் ஞாயிறென்றான் - சால
அமைதி அறிவு அருளுடன் மீண்டான்
இமையான் இதயக் கனி.

   லகத்தின் இருளகற்றும் கதிரவனைப் போன்றதாகும் தான் கற்ற உண்மை, என்று சொல்லி எமனைப் பணிந்து வணங்கினான். மிகுந்த அமைதி அறிவு மற்றும் எமனின் அருளுடன் தன்னுலகம் திரும்பினான், எமனின் இதயத்தில் இடம் பிடித்த நசிகேதன்.


தத்துவம்: உண்மை, நுட்பமான அறிவு
சால: மிகுந்த
இமையான்: எமன்


    சாபம், சாபக்கேடு இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

நாம் கண்மூடித்தனமாக நடக்க வேண்டும் என்பது சாபம். நம் கண்மூடித்தனங்கள் நம் சந்ததிக்கும் பரவ வேண்டும் என்பது சாபக்கேடு. சாபத்தை உணர்ந்துச் சாபக்கேட்டைத் தவிர்ப்பவர்கள் மகான்கள். சாபம் என்பது தெரிந்தும் சாபக்கேட்டைத் தொடர்வோர் மலத்தினும் கேவலமானவர்கள். மதத்தினும் கேவலமானவர்கள் என்று சொல்ல வந்தேன், வசதியானப் பிழையாகி விட்டது.

மகான்களின் வெளிப்பாடுகளை மட்டும் பிடித்துக்கொண்டு, அவ்வெளிப்பாடுகளின் உந்துதலைப் புரிந்து கொள்ளாமல், கிடைத்தப் புதையலை இழக்கிறோம். உதாரணத்துக்கு, காந்தியிடமிருந்து உண்ணாவிரதம் சத்தியாகிரகப் பழக்கங்களைப் பிடித்துக் கொண்டோம். தன்மானம், அமைதியான எழுச்சி, எளிமை, பொதுநலக் கொள்கைத் தீவிரம், தியாகம் போன்றவற்றை உதறிவிட்டோம்.

எத்தனை மகான்கள் தோன்றினாலும் மனிதம் மந்தையினமாகவே இருக்கிறது. இதுவே நியதி என்று நினைக்கும் பொழுது கலக்கமாக இருக்கிறது. பாருங்கள், இத்தனை சூரியன்கள் நட்சத்திரங்கள் இருந்தும், அண்டத்திலும் இருளே அதிகம்.

எனினும், மந்தைகளைப் புரிந்துகொள்ள மகான்கள் தேவை.

    "ஐயா, அறிவிலே ஏழையாக இருந்த எனக்கு மெய்யறிவு எனும் பெருஞ்செல்வத்தை வழங்கினீர்கள். நீங்கள் சொன்னது போலவே அறிவுச் செல்வத்தின் சுமையை உணரத் தொடங்கிவிட்டேன். இதனைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே சுமை குறையும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

நீங்கள் எனக்களித்த அறிவை எம்மவரிடம் சேர்ப்பேன். தன்னறிவின் தன்மையையும் பெரும்பேற்றின் உண்மையையும் எம்மவருக்கு எடுத்துரைப்பேன். உங்கள் அருளால் நான் கற்றத் தன்னறிவுப் பாடம், எம்முலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவல்ல ஆதவனாகும்.

பெரும் கலக்கத்தோடு இங்கு வந்தேன். நிறைந்த அறிவு, தெளிவு, மற்றும் அமைதியுடன் விடைபெறுகிறேன். எல்லாம் உங்கள் அருள்" என்று எமனைப் பணிந்து நன்றி சொன்ன நசிகேதன், புறப்பட்டான். மண்ணேக விரைந்தான்.

தன் பேரறிவுச் சுமை விலகியதை உணர்ந்தாலும், விடை கொடுத்த எமன் கலங்கினான். வாராது வந்த மாமணியைப் பிரிகிறேனே? இனி என் அறிவைப் புடம் போட இவனைப் போல் யார் வருவார்? இவன் உரையைக் கேட்டு உய்வார்களா இவனுலக மக்கள்? இவனுக்குப் பின் வரும் கண்மூடிகளை நினைத்தாலே கலங்குகிறதே? ஒருவேளை இவன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால்? இவன் பேச்சைக் கேட்டு இவனுலகத்தாரும் மரண பயத்தை விடுத்தால் என்னாவது? கண்மூடித்தனங்களைக் கைவிட்டால் என்னாவது?... என்று பலவாறு எண்ணினான். தன் மாணவனின் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நசிகேகதனுக்குப் பூமியில் காத்திருந்த வரவேற்பை எண்ணியக் காலனின் முகத்தில் கனிவும் புன்னகையும் நிறைந்திருந்தது.

மூன்றாம் பகுதி முற்றும்

11 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

நான்காம் பாகத்துக்காக ஒரு மாத உழைப்பு தேவைப்படும் தான். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

\\எத்தனை மகான்கள் தோன்றினாலும் மனிதம் மந்தையினமாகவே இருக்கிறது//

-- கிருஷ்ணர் மாடு மேய்த்ததும் இயேசு ஆடு மேய்த்ததும் அதனால் தானோ ?

அப்பாதுரை சொன்னது…

-- கிருஷ்ணர் மாடு மேய்த்ததும் இயேசு ஆடு மேய்த்ததும் அதனால் தானோ ?

ஆகா! சிவகுமாரன்!

middleclassmadhavi சொன்னது…

குருவின் மனநிலையை அழகாகப் பிரதிபலித்து விட்டீர்கள்!

ராமசுப்ரமணியன் சொன்னது…

விட்ட அத்தனையும் படித்தேன். துக்க நிவாரண ஆசீர்வாதம் தமிழில் ரொம்ப நன்றாகவே இருக்கிறது. இமயான் இதயக்கனி சூபர். மூண்றாவது பாகம் உங்க பாணியில நன்றாக வந்திருக்கிறது. மிச்ச மூணு பகுதிகளை சுருக்கப் போறீங்களா? y dis அவசரம்?

பெயரில்லா சொன்னது…

//ஞாலத்து மையகற்றும் ஞாயிறென்றான்// பிரமாதம்!
படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்று இருந்தால் எத்தனை மகான்கள் வந்தால்தான் என்ன, ஒரு பயனும் இல்லை.

// ஒருவேளை இவன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால்? இவன் பேச்சைக் கேட்டு இவனுலகத்தாரும் மரண பயத்தை விடுத்தால் என்னாவது? கண்மூடித்தனங்களைக் கைவிட்டால் என்னாவது?//
யமன் கூட இப்படி எல்லாம் புலம்புவாரா! மிகவும் ரசிக்க வைத்தது.

மிக மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இது ஒரு புத்தகமாக வெளி வரவேண்டும் என்பதுதான் என் விருப்பமும். விரைவில் அதற்கான வாய்புகள் ஏற்பட வாழ்த்துக்கள்.

நான்காவது பதிவை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் இரண்டு தளத்தை போலவே இந்த தளமும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

ஸ்ரீராம். சொன்னது…

எமனுக்கும் கலக்கம் வருமா?!
ஆறாம் தேதியில் எதாவது விசேஷம் உண்டா? மூன்றாம் பாகம் கூட ஒரு ஆறாம் தேதியில்தானே தொடங்கிற்று?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எத்தனை மகான்கள் தோன்றினாலும் மனிதம் மந்தையினமாகவே இருக்கிறது. இதுவே நியதி என்று நினைக்கும் பொழுது கலக்கமாக இருக்கிறது. பாருங்கள், இத்தனை சூரியன்கள் நட்சத்திரங்கள் இருந்தும், அண்டத்திலும் இருளே அதிகம்.

நிதர்சன்மாக கண்கூடாக காண்கிற சத்திய வாக்கு அருமையான பகிர்வு..
பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒருவேளை இவன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால்? இவன் பேச்சைக் கேட்டு இவனுலகத்தாரும் மரண பயத்தை விடுத்தால் என்னாவது? கண்மூடித்தனங்களைக் கைவிட்டால் என்னாவது?... என்று பலவாறு எண்ணினான். /

அப்படி எல்லாம் நிகழ்ந்துவிடாது அற்புதம்...

கண்மூடித்தனங்களைக் கைவிட மனிதகுலம் ஒரு போதும் தயாராகாது!

Santhini சொன்னது…

ஒரே மாதம் ! நெட் கனெக்சன் இல்லாமல் போனதில் எத்தனை இழப்புக்கள் ! . "நான்" இல்லாமலேயே நிறைய நடந்து விட்டது.
ஒரே மூச்சில், விட்டதை எல்லாம் முடித்துவிட்டேன்( சிரித்தும்,சிந்தித்தும்) . மூன்றாம் பாகம் வெகு தெளிவாகவும் அழகாகவும் முற்றுப் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் அப்பாதுரை. நான்காம் பாகத்தின் விவாதங்களில் முழு வீச்சுடன் கலந்துகொண்டு இழந்ததை நேர் செய்துவிட வேண்டியதுதான். :)