வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/22

நசிகேதன் கதை நிம்மதி தரும்


75
அசிந்தவர் இல்லம் அமைதியுடன் ஆறும்
நசிகேதா நின்நூல் நவின்றால் - ஒசிவின்றி
இப்பாலில் உய்வாரே உள்ளவர் உன்கதையைத்
தப்பா துரைக்கும் தினம்.

   சிகேதா! உன் சிறப்பைச் சொன்னால், மரணம் உண்டான வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். (மேலும்) உயிரோடிருப்பவர்கள் உன் கதையைத் தவறாமல் உரைத்தால் மரணக் கலக்கமின்றி இம்மையிலே மேன்மையடைவார்கள் (என்றான் எமன்).


அசிந்தவர்: இறந்தவர்
ஒசிவின்றி: வருத்தமின்றி (ஒசிவு என்பது அழிவு, இழப்பைப் பற்றிய வருத்தம்)
இப்பாலில்: இம்மையில், இப்பிறவியில்


    ங்கேயோ எப்போதோ படித்தது: 'death leaves an ache hard to heal; love leaves a memory hard to steal'.

அழியப்போவதை எண்ணிக் கலங்கி, அழிக்க முடியாததை மறந்து விடுகிறோம். சற்றே இறுக்கமான எண்ணம் தான், எனினும் அடுத்த நிமிடம் நாம் இறந்தால், எத்தகைய சொத்தை விட்டுப் போகிறோம் என்று சிந்திப்போமா? (ஆசானும் நண்பருமான அரசன் என்னிடம் இந்தக் கேள்வியைக் காப்பீடு விற்பனையாளர் போல அடிக்கடி கேட்டதால், அவரோடு பேசுவதையே சில நாட்கள் நிறுத்தியிருந்தேன். அவர் கேள்வியைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை. இன்னும்.)

கொண்டு வந்ததென்ன, அதில் கொண்டு போவதென்ன என்ற வேதாந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உலகாயதப் பார்வையில் அந்தக் கேள்வி பொருத்தமே. 'கொண்டு போவதென்ன?' என்பதை மாற்றி, 'விட்டுச் செல்வதென்ன?' என்றச் சித்தாந்தப் பார்வையில் புரியும் காட்சி, நம்மில் பலரைத் திடுக்கிட வைக்கும் என்றே நினைக்கிறேன்.

'விட்டுச் செல்லும்' சொத்துக்களை, விலைமதிப்புக்கு உட்பட்டவை அப்பாற்பட்டவை என, இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இன்றைய உலக நிலவரத்தில் நம் சந்ததிகளுக்கு இரண்டுமே தேவை.

சந்ததி என்ற பார்வையிலும் சூட்சுமம் இருக்கிறது. ஊனில் கலந்தது சந்ததியா, உறவில் கலந்தது சந்ததியா, உலகம் முழுதும் சந்ததியா? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதப் பார்வையில் அணுகுவார்கள் என்றே நினைக்கிறேன். தவறில்லை. பொருளுக்கேற்ற மருளும் தெருளும் அவர்களின் சிந்தையிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.

உள்ளிறங்கிய உலகத்தை விட வெளியேறும் உலகம் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களைச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதில் குறியாக இருக்க வேண்டும்.

விலை மதிப்புக்கு அப்பாற்பட்டவை என்றால் மிகப் பெரும் சாதனைகளாக இருக்க வேண்டியதில்லை. எனில் இவை யாவை?

கோவில் கும்பாபிக்ஷேகம் பூஜை விரதம் புண்ணியச்சடங்குகளில் மட்டுமே இவை உண்டு என்று எண்ணிச் செயல்படுவோர், பெரும் ஏமாற்றத்தை எதிர்நோக்கிப் புரியாமலே பயணிக்கிறார்கள். பேதைகள்.

தன்னைச் சார்ந்தவர்களின் நலனையும் உலக மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படுவோர், சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.

மேம்பாடு, தான தருமங்களால் மட்டுமே வரவேண்டியதில்லை. அன்பு, கருணை, நல்லெண்ணம், கல்வி, உதவி, வளம், அளவான ஆசை, அளவுக்குட்பட்ட தேவை, மறுமலர்ச்சி, ஆக்கம், அமைதி என்று எத்தனையோ வகையில் மேம்பாட்டை அணுகலாம். அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப 'விட்டுச் செல்ல வேண்டிய' இத்தகைய சொத்துக்களைத் திட்டமிட்டு, அவற்றைச் செயலாற்றும் திறனும் வயதும் இருக்கும் பொழுதே செய்து முடிக்க வேண்டும்.

விலைமதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களை வழங்க வேண்டியதில்லை; தடுக்க நினைத்தாலொழிய அவை தானாகவே சந்ததிகளிடம் சேருகின்றன. வீடு மனை பணம் பண்டம்... தடுத்தாலும் இச்சொத்துக்கள் வழக்கு நீதிமன்றம் என்று கிளம்பி, சந்ததிகளைச் சேர்ந்துவிடும்.

விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களோ தானாகச் சந்ததிகளுக்குச் சேர்வதில்லை. அன்பு கருணை புன்னகை பொறுமை உதவி தியாகம் நன்னெறி கல்வி அறிவு அடக்கம் அமைதி கூட்டுறவு நேயம்... எந்த நீதிமன்றமும் இவற்றைச் சந்ததிகளுக்குப் பிரித்து வழங்க முடியாது. சேர்ப்பதும் கொடுப்பதும் நம் கையில், நம் முயற்சியில், நம் தீவிரத்தில் இருக்கிறது.

விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சிறிய சொத்தை விட்டுச் செல்வது என்று நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துச் செயலாற்றினால், அடுத்த நூறு வருடங்களில் மனிதம் எத்தனை தூரம் நிறைவை நோக்கிப் பயணித்திருக்கும் என்பதைக் கற்பனையிலும் கட்ட முடியவில்லை.

கண்ணதாசன் தனக்கு எழுதிக்கொண்ட இரங்கற்பாவிலிருந்து:
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
   தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
   கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
   காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
   எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
   சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
   இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
   கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
   கொண்டவன் தான் புறப்ப டானோ!
'ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் பிழைத்தோம், இனி இப்படியே வாழ்ந்து முடிப்போம்' என்ற எண்ணமே பெரும்பாலும் நம்மைக் கட்டிப் போடுகிறது. வெட்கக்கேடு, எனினும் இது இயல்பானது என்பதை அறிந்து, தன்னை மறுக்கும் தன்மை பெற வேண்டும். தவறினால் புத்தாவியை எண்ணிப் புலம்பத் தெரிய வேண்டும் :)

சாதனை என்பது உள்பார்வை என உணர்ந்து கொண்டக் கணத்தில், வாழ்வில் நிறைவை நோக்கி அடியெடுக்கிறோம். அவ்வாறு அடியெடுக்கச் சாக்குகளும் புகார்களும் சடங்குகளும் சொன்னோமானால், இன்னும் உணரவில்லை என்றே பொருள்.

நானும் இன்னும் உணரவில்லை.

    "நசிகேதா! இன்னொரு வரமும் தருகிறேன். நம்மிடையே நடந்த உரையாடலை விரிவாகப் படித்து விவாதித்து உன் சிறப்பை எடுத்து சொன்னால், மரணம் ஏற்பட்ட வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்" என்ற எமன், நசிகேதனுக்கு வாழ்த்துச் சொல்லி விடை கொடுத்தான்.

17 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

எதை நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்ற செய்தி சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. கொஞ்சம் அவசரமாகவே நசிகேத வெண்பாவை முடிக்கிறீர்களோ?

ஸ்ரீராம். சொன்னது…

முத்திரை அந்து விட்டது போல....கடைசி சரணமா...

//"எத்தகைய சொத்தை விட்டுப் போகிறோம் என்று.."//

எந்த சொத்தை விட்டுப் பிரிந்து போகிறோம் என்ற கவலை கூடாது சரி...எதையாவது விட்டு விட்டுப் போக வேண்டுமா என்ன? என்ன கட்டாயம்?

ஸ்ரீராம். சொன்னது…

முதல் இரண்டு பாராவைப் படித்த உடனேயே பின்னூட்டமிட்டு விட்டேன்! அவசரம்! அப்புறம்தான் மற்ற பாராக்கள் படித் தேன். கண்ணதாசன் பாட்டு பிரமாதம். சந்ததி ஊனா, உறவா, உலகமா...சிந்தித்து ரசித்து சிந்திக்கிறேன்.
//இன்னும் உணரவில்லை என்றே பொருள். //...........................உணர முடியுமா...? ஹூம்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உள்ளிறங்கிய உலகத்தை விட வெளியேறும் உலகம் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களைச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதில் குறியாக இருக்க வேண்டும்.

உணர்த்திய உன்னதமான வரிகளுக்கு நன்றி ஐயா..

ஸ்ரீராம். சொன்னது…

//இப்பாலில் உய்வாரே உள்ளவர் உன்கதையைத்
தப்பா துரைக்கும் தினம்//

முத்திரை வந்து விட்டது போலிருக்கே என்று அடிக்க நினைத்தது தட்டச்சுப் பிழையாகி விட்டது மன்னிக்கவும்!

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி geetha santhanam, ஸ்ரீராம்., இராஜராஜேஸ்வரி, ...

அப்பாதுரை சொன்னது…

geetha santhanam: 'என்ன இது இழுத்துக் கொண்டே போகிறீர்களே' என்று கேட்டுவிடுவீர்கள் என்று நினைத்தேன்... சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.. தொடங்கியது எல்லாம் முடிந்து தானே ஆகவேண்டும்?

அப்பாதுரை சொன்னது…

முதலில் அந்ததே புரிந்தது ஸ்ரீராம் :) கரெக்டா பிடிச்சிட்டீங்களேனு சொல்ல நினைத்தேன். விளக்கியதற்கு நன்றி.

விட்டுச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அது ஒரு கண்ணோட்டம் தான்.
பிறந்ததிலிருந்து பெறுவதிலும் சேர்ப்பதிலுமே கவனமாக இருக்கிறோம். பெற்றோரிடமிருந்து, உற்றோர் நண்பர் உறவிடமிருந்து, உலகிலிருந்து, சந்ததிகளிடமிருந்து.... அதுவும் போதாமல் 'போகிற வழிக்குப் புண்ணியம் சேர்க்கணும்' என்று கண்மூடித்தன சேர்ப்பு வேறே... இல்லையா? அப்படி சேர்க்கும் எண்ணத்துடன் புரியும் செயல்களில் சில உன்னதமாக இருந்தாலும் சுயநல எதிர்பார்ப்பின் தொட்டு செயல்கள் கறைபடிந்துவிடுவதை நாம் பொருட்படுத்துவதில்லை. இத்தனை அருமையான பிறவியிலிருந்து உள்ளதையெல்லாம் எடுத்துக்கொள்கிறோமே... அதுவும் போதாதென்று 'செத்தும் எடுத்தான் சுந்தரவதனன்' போல 'நமக்கு' புண்ணியம் என்று இன்னும் எடுக்கிறோமே... கொஞ்சமாவது திருப்பிக் கொடுப்போம் என்ற எண்ணம் இருந்தால் நல்லது தானே? எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லையே? ஆனால் எடுத்துக் கொள்கிறோம்.

எடுப்பது நியதி, கொடுப்பது கடமை. நியதி என்றைக்குமே சுலபமாகத் தோன்றுகிறது. சுவாரசியமான கேள்வி.

அப்பாதுரை சொன்னது…

சுவாரசியமான ஹூம் ஸ்ரீராம் :)
//...........................உணர முடியுமா...? ஹூம்!

இதுவும் இயல்பே.

எத்தனை துயர் வந்தாலும் 'தலையெழுத்து' 'நெத்திலே எழுதி வச்சிருக்கான்' 'பிராரப்தம்' 'பூர்வ ஜென்ம பாவம்' என்று உடனே உணர்ந்து அடங்கி தோப்புக்கரணமோ விரதமோ ஹோமமோ பரிகாரமோ அல்லது எதுவும் செய்யாமலோ இருக்கிறோம். அந்தப் பரிதாபம் நம்மைப் பாதிப்பதேயில்லை. போதாக்குறைக்கு பிள்ளைகளையும் மற்றவரையும் அதே பரிதாபத்துக்கு தயக்கமே இல்லாமல் ஆளாக்குகிறோம்.

அதே பார்வையில், மனிதத்தை உணர்ந்து நடப்போம் என்றால் மட்டும் அந்த உணர்வு வருவதேயில்லை. ஏனென்று தெரியவில்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு 'அவன் நெத்தில அப்படி எழுதியிருக்கான்' என்று நம்பிக்கையின்மைக்கும் ஒரு நியதியை உண்டாக்கிய வேடிக்கையை எண்ணிச் சிரித்ததுண்டு. "சிவனை நம்பவேண்டும் என்று எழுதப்பட்டக் கணம் வரும் வரை நம்பாமல் இருப்பார்கள்" என்ற பொருள் சிவபுராணத்தில் வருகிறது. அரசனோடும் இன்னும் சில நண்பர்களோடும் இது பற்றி அரட்டையடித்த அனுபவம் உண்டு. 'நானும்' சாந்தினியுடன் ஒருமுறை 'theist existential' கண்ணோட்டம் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது. 'leap of faith' என்பதை எல்லோருமே நடைமுறையில் கடைபிடிக்கிறோம் - நம்மைத் தாக்கும் புறவிசைகளை (கடவுள் மதம் போன்ற கற்பனை விசைகள் உள்பட) 'leap of faith' அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் நாம், நாம் இயக்கும் விசைகள் என்று வரும் பொழுது அதே அடிப்படையை ஒதுக்கி விடுகிறோம், அல்லது பெரும்பாலும் மறந்து விடுகிறோம். அந்த அடிப்படையை உள்வாங்கி முழுதும் internalize செய்து இயங்க ஒரு சிலருக்கும் மட்டும் தெரிந்திருக்கிறது.
அந்த வகையில் அவர்களுடன் இந்த உலகைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ வேண்டியது தான். இதுவும் existential சிந்தனை தான் என்று இப்போது தோன்றியது.

சிவகுமாரன் சொன்னது…

நூற்பயன் எழுதி விட்டீர்களே . நசிகேத வெண்பா அவ்வளவு தானா ? உங்கள் வெண்பாத் தமிழுக்காவே நசிகேதனை நான் மிகவும் ரசித்தேன், தத்துவார்த்தங்களை முழுதுமாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. பாதுகாத்து போற்ற வேண்டிய பொக்கிஷம் இது. மிகப் பெரிய தமிழ்த் தொண்டு இது. " பிற மொழியின் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் " என்ற பாரதியின் கனவுக்கு ஒரு படி .
நூலாக வெளியிடும் உத்தேசம் உண்டா?

சிவகுமாரன் சொன்னது…

இருந்து பாடிய இரங்கற்பா -என்னும் இந்த கவிதையை நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பழனியில் அப்பச்சி புத்தகக் கடை என்று உள்ளது, அதில் என் தந்தையர் வாங்கிக் கொடுத்த கண்ணதாசன் கவிதைகள்-இல் படித்தேன். இரங்கற்பா என்பதற்கு பொருள் சொன்னார் என் தந்தை. பின்னாளில் இதைப் போல் ஒன்று எழுதி என் அம்மாவிடம் காட்டி ,அழ வைத்தேன்.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! புத்தகம் எப்போது வருகிறது?ஒவ்வோருவெண்பாவிற்கும் நீங்கள் எழுதிய விளக்க உரை புத்தகத்தில் இடம் பெறவெண்டும். பின்னுட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சொரிந்து கொண்டவைகளை தவிர்த்து நல்ல விவாதங்களை உள்ளடக்கியவைகளையும் சேர்த்து புத்தகமாக்குங்கள் . இந்த நூல் நீங்கள் தமிழ் மொழிக்கு கொடுக்கும் கொடை. தயங்காமல் பதிப்பியுங்கள். ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன், kashayapan,...

//நசிகேத வெண்பா அவ்வளவு தானா ?
எல்லாமே அவ்வளவுதான் சிவகுமாரன்! அந்தப் பக்குவம் தானே நசிகேத வெண்பா? பாராட்டுக்கு மிகவும் நன்றி.

//புத்தகம் எப்போது வருகிறது?
புத்தகம் இப்போது மனதளவில் மட்டுமே. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி kashyapan சார்..
//பின்னுட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சொரிந்து கொண்டவைகளை..
யதார்த்தம் மனம் விட்டுச் சிரிக்க வைத்தது.

அப்பாதுரை சொன்னது…

சிவகுமாரன், நீங்கள் எழுதிய இரங்கற்பாவை இன்னும் வைத்திருக்கிறீர்களா? எழுதியதைப் படித்துக் காட்ட அம்மாவா கிடைத்தார்கள்? ஆண்களின் நாடகம் அம்மாவிடமும் மனைவியிடமும் தான் செல்லும். நீங்களும் டிராமா பேர்வழியா? :)
என் பெண்ணிடம் இது போல் ஒன்றெழுதிப் படித்துக் காட்டினால் என்ன சொல்வாளென்று யோசித்துப் பார்க்கிறேன்: 'அதெல்லாம் சரி டேடி, உயில் எழுதினியா?'

சிவகுமாரன் சொன்னது…

அது எழுதி 15 வருடங்கள் இருக்கும். அம்மா கிழித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

\\ஆண்களின்நாடகம் அம்மாவிடமும் மனைவியிடமும் தான் செல்லும். நீங்களும் டிராமா பேர்வழியா? :)//

ஹா ஹா. என் கவிதைகளின் முதல்(ஒரே ) ரசிகை என் அம்மா தான் அப்போது.

\\
'அதெல்லாம் சரி டேடி, உயில் எழுதினியா?///'

ரசித்தேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

அப்பாதுரை சார் எனக்கு சிலிர்க்கிறது. இன்றுதான் நான் ஒரு பதிவிட்டேன். அதற்கு மிடில்கிளாஸ் மாதவி இட்டிருந்த பின்னூட்டம் கண்டு உங்கள் பதிவுக்கு வந்தால்... ஆச்சர்யமாக இருந்தது. காரணத்தை என் பதிவில் பார்க்கவும்

பெயரில்லா சொன்னது…

சந்ததிகள் ஊனா? உறவா? உலகமா?
அன்பு காட்டும் எல்லோருமே நம் சந்ததியினர்தான் என்று தோன்றுகிறது. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்' இதுதான் உண்மை என்று நம்புகிறேன்.

வெண்பா அருமையாக இருக்கிறது. 'அசிந்தவர்', 'ஒசிவின்றி' இந்த வார்த்தைகளை இப்பொழுதான் அறிந்து கொண்டேன். நன்றி!

// தொடங்கியது எல்லாம் முடிந்து தானே ஆகவேண்டும்?// சிலவற்றை நாமே முடித்துக் கொண்டு முடிந்து விட்டதாகவும் நினைத்துக் கொள்கிறோம், பூனை கண்ணை மூடினால் புலோகமே இருண்டுவிட்டதாக நினைப்பது போல்.

நசிகேதன் கதையை தப்பாது உரைத்த அப்பாதுரைக்கு மிக்க நன்றி! //உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்"// உயிரோடு இருக்கும்போதே இந்த கதையை படித்ததால் நான் மேன்மை பெறுகிறேன். எங்களை மேன்மை அடைய செய்த நீங்கள் மென் மேலும் மேன்மையுற வாழ்த்துக்கள்! :)