வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/10/21

சொர்க்க வேள்வி


70
பேரான்மா பேரின்ப மாகும் பிறப்பிறப்பின்
தீராதத் தீர்வாம் பெருஞ்சக்தி - சீராகத்
தன்னை அறிவதே வேள்வி தவறுமுயிர்
என்னை அறியும் அடுத்து.

   ன்னையறிந்த ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா, பெரும் சக்தியாகும். அதுவே சொர்க்கமாகும். தீராதப் பிறப்பு இறப்புச் சுழலின் தீர்வும் அதுவே. முறையாகத் தன்னறிவைப் பெறுவதே அச்சொர்க்கத்துக்கான வேள்வியாகும். அவ்வேள்வியைப் புரியாமல், தன்னறிவைப் பெற்று நடக்கத் தவறும் உயிர்கள் என்னை அறிந்து கொள்கின்றன (என்றான் எமன்).    காணாத காட்சி, பாடாத பாட்டு, பேசாத மொழி எனும் தொடர்களைக் கேட்டிருக்கிறோம். கண்டால்தானே காட்சி? பின், காணாத காட்சி என்பானேன்? பேசாத மொழியினால் யாதொரு பலனுமுண்டா? இப்படி எதிர்மறையாகச் சொல்வதேன்? ஏதாவது சூனியப் பொருளுண்டா?

பிரமாத சூனியமோ சூட்சுமமோ எதுவும் இல்லை. காட்சியை காணவும் முடியும். உணரவும் முடியும். மொழியைக் கேட்கவும் முடியும். உணரவும் முடியும்.

உதாரணமாக, கனவென்பது கண்ட காட்சியா? காணாத காட்சியா? கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் மனம் எங்கிருந்தோ எப்படியோ இணைப்புகளைத் தேடிக் கனவுகளில் வடிக்கிறதே? பிறவிக்குருடர்கள் கனவு காண முடியுமா? முடியும். அவர்கள் கனவில் காட்சி வருமா? வரும். ஒலிக்கனவுகளையும் உணர முடியும். குருடர்கள் விழித்திருக்கும் போதும் (!) உணரத்தானே செய்கிறார்கள்?

அஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். உறங்கும் மனிதன் காணும் 'காணாத காட்சி'யை மையமாக வைத்து அஜாதசத்ரு ஆன்மாவை விளக்கும் கதை. கதையில் கனவு காணும் பாமரனின் பிறவிகளை எடுத்துச் சொல்லி ஆன்மாவைப் பற்றிய அறிவை ஞானிக்கு வழங்குகிறான் அரசன்.

பேசாத மொழியைப் புரிந்து கொள்ளமுடியாதா? இன்னொருவர் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்றால், அங்கே உணர்வுக்கே இடமில்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது இதைத்தான். வார்த்தைகளில் வடித்தாலும் சிலர் மற்றவர் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில்லை என்பது வேறு விவாதம்.

இன்னொரு கண்ணோட்டமும் உண்டு.

கண்ட காட்சி மாறுவதில்லை (காட்சி மாறினாலும் கண்டது மாறுவதில்லை). காணாத காட்சி என்பது உணர்வை உள்ளிடுவதால் காணும் பொழுதே மாறும் இயல்பினது. ஒன்றைப் புரிந்துகொள்ள முனைந்து இன்னொன்றைப் புரிந்து கொள்வதில்லையா? அது போல. காணாத காட்சி, பேசாத மொழி இவை இன்னதென்று விவரிக்க இயலாத தன்மையன என்றும் கொள்ளலாம். ஒரு படிமத்துள் அடங்காதவை எனலாம்.

சொல்ல வந்தது இது தான்.

ஒன்று புறத்தெளிவுப் பாதை. இன்னொன்று அகத்தெளிவுப் பாதை. காணாத காட்சியைக் காணவும் பேசாத மொழியைப் புரிந்து கொள்ளவும் பக்குவம் வேண்டும். அதுவே அகத்தெளிவைத் தரும் பக்குவம். அறிவு முதிர்ச்சி, அகத்தெளிவில் வெளிப்படும். குணமும் பண்பும் அகத்தெளிவில் வெளிப்படுவன. காணாத காட்சிகளைக் காணும் திறனும் பேசாத மொழிகளைப் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவர்களால் சுலபமாக அகத்தெளிவை நோக்கிப் பயணம் செய்ய முடிகிறது. எனினும், இது எல்லோரும் பெறக்கூடிய இயல்பே. முயற்சியும் பயிற்சியும் செய்தால் போதும். ஒருவேளை அங்கேதான் சிக்கலோ?

தீராதத் தீர்வும் அத்தகையதே. பிறப்பு இறப்பில் தீர்கிறது. இறப்பு பிறப்பில் தீர்கிறது. புரிந்தவர்கள் ஒன்றிலொன்றைப் பார்க்கிறார்கள். காணாத காட்சி. பேசாத மொழி.

    "நசிகேதா! சொர்க்கம், நரகம் இரண்டும் உண்மையே. உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டையும் அனுபவிக்க முடியும். உடலைச் சேர்ந்து இருக்கும் பொழுதும், உடலைப் பிரிந்த நிலையிலும் - இரண்டு நிலைகளிலுமே உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்றை அனுபவிக்க முடியும்" என்றான் எமன்.

"அதெப்படி?"

"சொர்க்கம், நரகம் என்றால் என்ன அறிவாயா?"

"அவை உயிர் சேரும் இடங்கள்"

"அப்படியா? உன்னிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். மனிதர்கள் நரக வேதனை என்கிறார்களே? அது என்ன?"

"கொடுமையான அனுபவங்கள், துன்பங்கள், வலிகளை நரக வேதனை என்று சொல்வது உண்டு"

"வேறு ஏதேனும் உண்டா?"

நசிகேதன் யோசித்தான். "அன்பு இல்லாத குடும்பங்களில் சிக்கியவர்கள், தங்கள் வாழ்வை தினசரி நரகம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்" என்றான்.

"அருமையாகக் கவனித்திருக்கிறாய். இதிலிருந்து என்ன விளங்குகிறது? நரகம் என்பது ஒரு அனுபவம். அது போல சொர்க்கம் என்பதும் ஒரு அனுபவம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடையும் பொழுது மனிதர்கள் அதை சொர்க்கானுபவம் என்று சொல்வதில்லையா?"

"ஆமாம்.. சில நேரம் சுவையான சாப்பாட்டை வயிறு நிரம்ப உண்டபின் சிலர் அப்படி சொல்லிக் கேட்டிருக்கிறேன்"

எமன் சிரித்தான். "வயிற்றை நிரப்பும் சாதாரணச் செய்கையைச் சொர்க்கம் என்றால், சொர்க்கத்தை எப்படி வகைப்படுத்துவது?"

நசிகேதனும் சேர்ந்து சிரித்தான். "எம்மக்கள் சிலர், 'சோறு கண்ட இடமே சொர்க்கம்' என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சாப்பாட்டைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் பொருட்டில்லை. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஏதோ ஒரு சடங்கையும் சாப்பாட்டையும் இணைத்து, வாழ்வில் பெரும்பாலான நாட்களை விதவிதமாக உண்டே கழிக்கிறார்கள்"

எமன் இன்னும் பலமாகச் சிரித்தான்.

நசிகேதன் மெள்ளப் பணிந்து, "உங்கள் கேள்வியின் மகத்துவம் புரிந்தது குருவே" என்றான்.

எமன் நசிகேதனைக் கனிவுடன் நோக்க, நசிகேதன் தொடர்ந்தான். "சொர்க்கம் நரகம் இரண்டுமே உண்மை தான். ஆனால் அவை இடங்களல்ல. இடமென்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியாதவை. ஆனால், அவற்றை அனுபவங்கள் என்றக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது தெள்ளத் தெளிவாகிறது. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள்"

"பிரமாதம், நசிகேதா!" என்று எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். "உண்மை! சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது. ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தாய். ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளும் பேரான்மாவுடன் இணைவதே. தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. அதுவே ஏழாவது பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா? அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது. ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது"

"சொர்க்கத்தை அடைவதற்கான வேள்வி என்றீர்களே, அது?"

"வேள்வியும் உண்மையே, நசிகேதா. வேள்வித் தீ பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா?"

"நன்றாக நினைவிருக்கிறது. அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள் முடக்கவொரு மூச்சில் வரும் தீ என்றீர்கள். அதாவது அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கற்களை அடுக்கி, அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி என்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது நன்றாகப் புரிந்தது. அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது"

"உன் நினைவுத்திறனை மெச்சுகிறேன்"

"தன்னறிவைப் பெறாத உயிர்களின் கதி?"

"அதற்குத்தானே நானிருக்கிறேன்? உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கும் பொழுது, என்னை அறிந்து கொள்கின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க வேண்டும்"

"சொர்க்கம் செல்வதற்கான சடங்குகள்?"

"நசிகேதா. சொர்க்கம் நரகம் இரண்டுமே அனுபவங்கள் என்று அறிந்தபின் சடங்குகள் தேவையா என்பதை நீயே சிந்தித்து அறியலாமே?"

"நன்றாகத் தெரிந்து கொண்டேன். சடங்குகளால் ஆவதொன்றில்லை. எனினும் எம்மக்கள் சடங்குகளையும், சடங்குகளைத் தூண்டுவோரையும் நம்பி மோசமாவதைத் தடுக்க முடியாதா?"

"முடியும். தன்னறிவுக் கொள்கையைப் பரப்பி உணரச்செய்ய வேண்டும்" என்ற எமன் சற்றே சினந்தான். "சடங்குகளைத் தூண்டுவோருக்கு நிச்சயமாக நரகவேதனை காத்திருக்கிறது. அவர்களுக்காகவே என் வாசல் திறந்திருக்கிறது" என்றான்.

நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, மரணம் உயிர்ப்பயணம் சொர்க்கம் நரகம் என்று பலவற்றையும் விளக்கி, எனக்கு இந்த அறிவையளித்த உமக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? எதுவாகிலும் சொல்லுங்கள் ஆசானே! செய்து முடிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"தான் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்குவதே, நல்ல மாணவன் தன் ஆசிரியருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்" என்றான் எமன்.

18 கருத்துகள்:

meenakshi சொன்னது…

தன்னறிவு பெறுவது ஒன்றுதான் வாழ்வில் மேன்மை அடைய ஒரே வழி என்பதை மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்து விட்டது உங்கள்
நசிகேத வெண்பா. சொர்க்கம் நரகம் பற்றிய விளக்கங்கள் சுவாரசியமாகவும், அருமையாகவும் இருக்கிறது. வாழ்வில் நம்மிடம் எஞ்சி நிற்பது நாம் பெற்ற அனுபவங்கள் மட்டுமே. அந்த அனுபவங்கள் இனிமையானதாகவும், நிறைவானதாகவும் இருந்தால் சொர்க்கம், இல்லாவிட்டால் நரகம் அவ்வளவுதானோ!

middleclassmadhavi சொன்னது…

அழகான விளக்கங்கள்.பகிர்வுக்கு நன்றி !

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, middleclassmadhavi, ...
இந்தப் பதிவை இன்னும் எழுதி முடிக்கவில்லை. அரைகுறையாகத் தோன்றினால் மன்னிக்க வேண்டுகிறேன். வெண்பாவை எழுதிவிட்டு, அனேகமாக என்னுரையை கடைசியில் எழுதுவேன். நேற்றிரவு எழுதிப் பதிவு செய்ய நினைத்திருந்தேன். வீடு திரும்புவதற்குள் பதிவு வெளியாகி இரண்டு பின்னூட்டங்களும் வந்துவிட்டது. சூட்டோடு சூடாகப் படிக்கும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?
என்னுரையை முடித்து இன்று சேர்த்துவிடுகிறேன்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

ரொம்ப சிம்பிளான வெண்பா. இதான் எனக்குப் புரியும். தீராத தீர்வை சொல்லாமல் சொல்லியிருக்கும் விதம் brilliant.

ராமசுப்ரமணியன் சொன்னது…

அஜாதசத்ரு கதையை விடாம ஞாபகப் படுத்துறீங்க. பர்கதாரண்யத்தை படிச்சுடறேன்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

நாலு வருடம் கழித்து தீபாவளிக்கு ஊர் விசிட். இந்த வாரம் ஒழிவு. அதான் கமெண்ட் மேலே கமென்ட்.
தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்பாதுரை சொன்னது…

தொடர்ந்து படிப்பதற்கு நன்றி ராமசுப்ரமணியன். தீபாவளி வாழ்த்துக்கள்.

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே! சொர்க்கம் ,நரகம் பற்றிய பதிவினைப் படித்தேன். (a brilient exposition).சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது வேத வாக்காக இருக்கலாம்.உயிருள்ள பொருளுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எந்தப் பொருள் தனக்குத்தேவையானதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக்கொள்கிறதோ,எந்தப்பொருள் தனக்குத்தேவையில்லாததை தன்னிலிருந்து வெளியேற்றுக் கொள்கிறதோ (Katabolism,metabolism) அது உயிருள்ள பொருள் .பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.. பிராணோவா அன்னம்:(உணவுதான் உயிர்)
தத் வ்ரதம் :(அது அளவுக்கு உட்பட்டது)
அன்னம் நிந்தயேத் ( உணவை வெறுக்காதே)
அன்னமேவ ப்ராணன்(உணவுதான் உயிர்)
இப்படிச்சொன்னவரை நாத்திகர் என்று கட்டம் கட்டிவிட்டார்கள்
அன்புடன்... காஸ்யபன்

சிவகுமாரன் சொன்னது…

பதஞ்சலி நாத்திகரா?
புதிதாய் இருக்கிறதே காஷ்யபன் அய்யா ?

kashyapan சொன்னது…

சிவகுமரன் அவர்களே! இந்த உலகமும் உயிரும் ஸ்கந்தங்களல் (molicule)ஆனவை என்ற வர்த்தமானரை சாமியாக்கினார்கள்.கடவுள் இல்லை என்ற புத்தரை அவதாரமாக்கிவிட்டார்கள்.சிதம்பரம் நடராசர் சிலையப் பார்திருப்பீர்களே!ஈசன் நடனமாட காலடியில் அசுரன் இருப்பான்.அருகில் குட்டியாய் ஒரு முனிவரின் சிலையிருக்கும்.மனிதன் உயிர் வாழ உணவுவேண்டும். கடவுள் வேண்டியதில்லை என்ற பதஞ்சலி முனிவரை சிவபக்தனாக்கி நடராஜர் காலடியில் நிருத்தி விட்டார்கள் சைவர்கள்--- அன்புடன் காஸ்யபன்.

அப்பாதுரை சொன்னது…

வருக காஸ்யபன் ஐயா.
பதஞ்சலி விவரத்துக்கு நன்றி.
மதக் கொள்கைகளை மறுக்கவோ எதிர்க்கவோ செய்தவர்களை கடவுளுக்கு எதிராக நிறுத்துவது காலம் காலமாக செய்யப்பட்டு வருவதை சரித்திரத்தில் காணலாம். கபடத்தை எதிர்த்தவர்களை கற்பனையை எதிர்த்ததாகச் சொல்லிக் கூண்டில் நிறுத்தியதை கேலிக்குரியது என்று நான் நினைப்பதுண்டு. சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்ற சாதாரண உண்மையைச் சொன்னால் மதக்காரர்கள் உதைப்பார்களே என்று பயந்து, சாகும் தறுவாயில் உண்மையைச் சொல்லவில்லையா கலிலியோ? தன்னறிவே முக்கியம் என்று சிந்தனை வளர்த்த சாக்ரேட்சுக்குப் பரிசு ஒரு கோப்பை விஷம். நல்ல வேளையாக 'சாக்ரேட்சாசுர வதம்' அளவுக்கு அந்த மதங்கள் போகவில்லை.
புத்தன் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது. அப்படி இருக்குமோ?

அப்பாதுரை சொன்னது…

சாந்தினி அவர்கள், சுவாரசியமான விவரம் ஒன்றைச் சமீபத்தில் சொன்னார். 'பிரம்மகீதை' பற்றியப் புத்தகம்.. தவறான விவரம் தந்துவிடுவேனோ என்று தயக்கமாக இருக்கிறது..அவரே எழுதினால் நன்றாக இருக்கும். அவர் சொல்லி, நான் புரிந்து கொண்டது இது: தனியாகக் கடவுள் எதுவும் தேவையில்லை என்ற கருத்து, கடவுள் உண்டு என்ற காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது (சாதாரண விஷயம்). உயிர்கள் எல்லாம் சக்தியின் (energy) அம்சமே - அதில் உருவாகி அதிலே எருவாகும் தன்மையது - என்பது சொல்லப்பட்டிருக்கிறது. பிற்கால இந்துமதம் எப்படியோ இதைத் திரித்து சாமி சடங்கு என்ற போதைமருந்துக் கடைவைத்து விட்டது. (இது தான் பெரிய விஷயம்)

கண்மூடித்தனம் ஒரு போதை. அந்தப் போதை நம் நரம்புகளில் ஊறி அணுக்களில் கலந்து சந்ததி தோறும் பரவி வருகிறது என்று நினைக்கிறேன். சந்ததி தோறும் போதையின் சக்தி குறைந்து வருகிறது என்றும் நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பதில் பாதகம் ஏதும் இல்லை. ஆனால் அதையொட்டியக் கண்மூடித்தன நம்பிக்கைகள் தான் சிக்கல். சிந்தையை மழுங்கச் செய்யும் போதை. அதன் பக்கவிளைவுகள் ஏராளம்.

போதைக்கு அடிமையானவர்கள் போதையில் இருப்பதை ஏற்க மாட்டார்கள். சாதாரண சிகரெட் பழக்கத்தில் கூட இந்த manifestationஐக் காணலாம். சாப்பாட்டுப் போதை நம் எல்லாருக்கும் உண்டு. பசிக்கிறதோ இல்லையோ தேவையோ இல்லையோ சாப்பிடத் தோன்றுவதில்லையா? உள் உபாதைகளைப் பற்றி அறிவது இன்னும் கஷ்டம். பொய், கோபம், ஆசை இவையெல்லாம் உள் போதைகள். உபாதைகள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்: "நான் கோபக்காரன் தான். என்னால் மாற முடியாது. நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்". இவர் போதைக்கு அடிமையானவரா இல்லையா?

தேவையில்லாதத் துன்பங்களை விதி என்று ஏற்று நம்மில் எத்தனை பேர் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்! வட்டப் பாதையில் போகிறோம் என்று தெரிந்தும் பாதையிலிருந்து விலக பயப்படுகிறோமே? பாதை விலகினால் எத்தகைய சிக்கல்கள் உண்டாகும் என்று கற்பனை செய்ய நேரமும் அறிவும் செலவழிக்கும் நாம், புதுப்பாதைக்கான முதல் படியை எடுத்து வைக்க அஞ்சுகிறோம். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிடுகிறோம்.

சிந்தையை மழுங்கச் செய்யும் கண்மூடித்தனப் போதையைப் பற்றி அறிந்து தெளிய நேரமும் வாய்ப்பும் எத்தனை பேருக்குக் கிடைக்கப் போகிறது?!

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே! சிறையில் அடைக்கப்பட்ட கலீலியொவை போப்பின் முன் நிறுத்தி மன்னிப்பு கேட்கச்சொன்னார்கள். "போப் ஆண்டவரே! என்னை மன்னியும்.இருந்தாலும் பூமி சூரியனைச்சுற்றிகொண்டுதான் இருக்கிறது" என்று கூறிகோண்டே கலீலியோ என்ற கிழட்டுச்சிங்கம் கீழே விழுந்து இறந்தது.உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் நாடக ஆசிரியரான பெற்றொல் ப்ரஸ்ட் இதனை உணர்ச்சி மிக்க நாடகமாக எழுதியுள்ளார்.சர்.சி.வி ராமன் அவர்களின் நினவாக நடந்த விஞ்ஞான தினத்தன்று தமிழில் மொழிபெயர்கப்பட்ட இந்த நாடகம் நடந்தது. அதில் கலீலியொவாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்.---காஸ்யபன் .

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

அடடா காஷ்யபன் அய்யா. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லாமல் போய்விட்டதே.

அப்பாதுரை சொன்னது…

நாடகப் பாத்திரம் கண்முன் நிற்கிறது காஸ்யபன் ஐயா. விஞ்ஞான தினமா? தெரியாமல் போனதே?!

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவ்ர்களே! சயின்ஸ் பாரம் என்றொரு அமைப்பை இடதுசாரிகள் நடத்துகிறார்கள். அறிவியல் மக்களுக்காக என்பது அவர்கள் நோக்கம். சர் .சி .வி.ராமன் பிறந்த தினம் 7.11.1988அதனால் இந்த அமைப்பினர் ஒவொவொரு ஆண்டும் நவம்பர் 7ம் தெதியை விஞ்ஞான தினமாக நடத்துகிறார்கள். சயின்ஸ் பாரத்தில் செயல்பட்டவர்களில் நானும் ஒருவன் ---காஸ்யபன்

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே! சர்.சி.வி.ராமன் பிறந்தது 1888ம் வருடம்.தவறாக 1988 என்று குறிப்பிட்டுவிட்டேன்.---காஸ்யபன்