வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/10/15

உயிரின் நிலையான இருப்பிடம்


69
வெய்யோன் வருகையும் வெண்சுடர் வாட்டமும்
மெய்யோ மருக்கமும் சிந்தனையோ - செய்யக்
கடல்நீர் மழையானால் கார்க்குமோ மாலில்
அடல்சேர் அளவறிந்தார் ஆர்?

   சூரியன் உதிப்பதும் சந்திரன் தேய்வதும் உண்மையா? காற்று கற்பனையா? கடல்நீர் மழையாக மாறினால் கரிக்குமா? வலையில் எவ்வகை மீன் விழும் என்பதை அறிந்தவர் உண்டா?


வெய்யோன்: சூரியன்
வெண்சுடர்: சந்திரன்
மருக்கம்: காற்று
செய்ய: பண்புச்சொல் (செய்யக் கடல்நீர்: மிகவும் கரிக்கும் கடல்நீர்)
கார்க்குமோ: கரிக்குமோ
மாலில்: வலையில்
அடல்: மீன், கடல்மீன் வகை


    ட்டவாதத்துக்கும் வாட்டவாதத்துக்கும் ஒரு கால் வேறுபாடு :).

வட்டவாதம் வாட்டவாதம் என்பது புலனாகும் போது ஓடுகிறோம், ஒதுங்குகிறோம், ஒடுக்குகிறோம்.

உண்டா இல்லையா என்பது வட்டவாதம். அது புரியாதோர், வட்டவாதத் தீர்வைக் காணாது வாட்டமடைகிறார்கள். உண்டா இல்லையா என்பது, புறச்சிந்தனையை, புறத்தெளிவை நோக்கியப் பயணம். புறத்தெளிவின் மிகப்பெரியச் சிக்கல், அதன் நிலைமாற்றம். புறத்தெளிவினால் பயன் அதிகமில்லை. அகத்தெளிவு சற்றே நிலையானது (புறத்தெளிவைக் காட்டிலும்). அகத்தெளிவின் அடிப்படையில் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் வளர்ப்பதால் குழப்பங்களையும், சிக்கல்களையும், ஏமாற்றங்களையும் குறைத்துக் கொள்ளமுடியும். குறிப்பாக, விழிப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், ஏற்படுத்தவும் முடியும்.

'உண்டா இல்லையா' என்பது புறத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனையெனில், 'தேவையா இல்லையா' என்பது அகத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனை.

கடவுள், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் பற்றிய 'உண்டா இல்லையா' வகைச் சித்தாந்த வேதாந்தச் சிந்தனைகள் ஒருபுறம் இருக்கட்டும். 'தேவையா இல்லையா' என்ற அகத்தெளிவுக் கேள்வி, மனித வாழ்க்கையை இன்றைக்கு.. இப்போது.. நடைமுறையில் எளிமைப்படுத்தக் கூடியச் சாதனம். என் தலைமுறை இதைச் சரியான முறையில் பயன்படுத்த மறந்ததும் மறுத்ததும் வேதனை. வரும் தலைமுறைகள் புறத்தெளிவுக்கும் அகத்தெளிவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து நடப்பார்கள் என்ற நம்பிக்கையின் வித்து, இன்றைய இளைய தலைமுறையின் சிந்தனைகளில் தெரிகிறது. அகத்தெளிவு வளர வளர, இக்கேள்விகள் மதம் கடவுள் சொர்க்க நரகங்களுக்குத் தாவும் என்று நினைக்கிறேன். பல கண்மூடித்தனங்கள் ஒழியும் என்று நம்புகிறேன்.

அண்டம் தோன்றி 13 பிலியன் வருடங்களாகின்றன என்கிறார்கள். விடுங்கள், நம் solar system தோன்றி எட்டு பிலியன் வருடங்களாகின்றன. விடுங்கள், நம் பூமி தோன்றி நாலரை பிலியன் வருடங்களாகின்றன. விடுங்கள், மனித இனம் பரவத் தொடங்கி ஒரு இலட்சம் வருடங்களே ஆகின்றன. விடுங்கள், மனித இனம் பசிக்கு அப்பால் சிந்திக்கத் தொடங்கி எண்பதாயிரம் வருடங்களே ஆகின்றன. 'missing link' என்று தேடப்படும் இடைப்பட்ட இருபதாயிரம் வருடங்களைச் சாக்காக வைத்துக் கொண்டு 'அப்பாற்பட்ட சக்தி' என்று கிளப்பிவிட்டுக் குழப்பியடிக்கும் எண்ணற்றக் காவி அங்கிகளின் கருத்தை மேற்பொருத்திப் பார்த்தால், அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப, ஏறக்குறைய நாலரை பிலியனலிருந்து பனிரெண்டு பிலியன் தொள்ளாயிர மிலியன் சில்லறை வருடங்கள் வரை 'எல்லாம் வல்லப் பெருஞ்சக்திகள்' தனியே கும்மியடித்துக் கொண்டிருந்திருக்கிறன என்ற கணிப்பு, அதிர வைக்கிறது. குறைந்த பட்சம் வியக்க வைக்கிறது. குறைவிலும் குறைந்த பட்சம் சந்தேகிக்க வைக்கிறது.

மனிதசக்தி மகத்தானது. உணர வல்லது. உருவாக்க வல்லது. உபயோகிக்க வல்லது. வேறு பெருஞ்சக்திகள் தேவையில்லை. மனிதநேயம் வளர, மனித இனம் உயர, மனிதசக்தி போதும்.

'அப்பாற்பட்ட' அதிசயங்கள் சிலவற்றை இதுவரை கோடிட்டிருக்கிறேன். இங்கே இன்னொன்று. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடக்கிறது. contact lensக்குள் கணிணியும் இணையமும் புகுத்தியிருக்கிறார்கள். இவற்றைக் கண்களில் அணிந்து கொள்ளும் பொழுது, மூளையுடன் நேரடியாக அதிவேகத் தொடர்பு ஏற்படுகிறது. ஒரு பொருளையோ நபரையோ பார்க்கும் பொழுது உடனடியாக அந்தப் பொருளைப் பற்றிய அல்லது நபரைப் பற்றிய அத்தனை விவரங்களும் கண்களுக்கு முன்னே விரிவடைந்து தெளிவாகிறது. காணாத காட்சி காணமுடிகிறது. இன்னும் நூறு வருடங்களுக்குள் இது பரவலாக மூக்குக்கண்ணாடி போல் கிடைக்கும்.

கண்பார்வை அளித்த உண்மையான சக்தி வாய்ந்த மூக்குக்கண்ணாடி தோன்றி முன்னூறு வருடங்களே ஆகின்றன. அதற்குள் அதன் பயன் முழுமையடைந்து மெள்ள மறைந்து வருகிறது. கண்திறக்கும் அசல் சக்தியான மூக்குக்கண்ணாடிக்கு முன்னூறு வருடங்களில் சமாதி கட்டிவிட்டோம். கண்மூடித்தனப் போலிச் சக்திகளை முன்னூறு வருடங்களுக்கு மேல் தொடர்வது பாவிப்பது வருந்த வைக்கிறது. வியக்க வைக்கிறது. சந்தேகிக்க வைக்கிறது.

உருப்படாத அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுவதால் நொபெல் பரிசைப் பற்றிய சந்தேகம் எழுந்தாலும், அவ்வப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுவதால் சற்றே மரியாதைக்குட்பட்டு நிற்கிறது. சமீபத்தில் அண்டவிரிவுக்கான ஆராய்ச்சிக்கு நொபெல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அண்டவிரிவில் அப்படியென்ன அதிசயம்? அண்டவிரிவும் அதைப்போன்ற ஆய்வுகளும் அகத்தெளிவுச் சாதனங்கள்.

பிள்ளைகள் physics படிக்கவேண்டும். இல்லை... எல்லோரும் physics படிக்கவேண்டும். மொழிவன்மையைப் போல இயற்பியல் வன்மை அவசியமாக்கப்பட வேண்டும். சில நியதிகள் அதிகமாக மாறுவதில்லை. அகத்தெளிவுச் சாதனங்களைப் போல. மாற்றமே நிலையானது என்ற சித்தாந்தம் பரவிய உலக வாழ்க்கையில், நிலையாமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி (!) வாழ்வதற்கு அகத்தெளிவுச் சாதனங்கள் தேவை. மனிதசக்தியின் மகத்துவத்தை இளமையிலேயே புரிந்து கொள்ள வித்திட வேண்டும். இளமைக்கான இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், இயற்பியல் கருத்தாகப் படிக்க ஆசை :)

    "நசிகேதா, நீ பல கேள்விகள் கேட்டாய். இனி என் முறை" என்றான் எமன்.

"கேளுங்கள்"

"சூரிய சந்திரனை அறிவாய் அல்லவா?"

"அறிவேன். சூரிய ஒளி பூமியில் வளர்ச்சியை உண்டாக்கக் காரணமாகிறது. எம்மக்கள் பலர் சூரியனைக் கடவுளென்று வணங்குகிறார்கள். சந்திர ஒளி இரவில் குளுமையைத் தந்து எம்மக்களை மகிழச் செய்கிறது. சூரியன் தினம் கிழக்கில் உதயமாகி மேற்கே மறைகிறது. சந்திரன் தினம் வளர்ந்து தேய்கிறது, தேய்ந்து வளர்கிறது"

எமன் சிரித்தான். "நசிகேதா.. நன்றாகப் பார். சூரியன் தோன்றவுமில்லை, மறையவுமில்லை. சந்திரன் வளரவும் இல்லை, தேயவும் இல்லை. நன்றாகச் சிந்தித்துப் பார். பூமியைப் போலவே சந்திரனும் ஒரு கோள். சூரியனோ மாபெரும் ஒளிப்பிழம்பு. சந்திரன் தேய்வதில்லை. சூரியன் மறைவதும் இல்லை. இருப்பினும் பூமியின் நடைமுறை வாழ்க்கைக்கு, இவற்றின் தோற்றமும் மறைவும் அவசியமாகின்றன. சூரியன் தோன்றாவிட்டால், சக்தி குன்றி ஆக்க சாதனமற்றுப் போகிறது. மறையாவிட்டால், சக்தி மேம்பட்டு அதுவே அழிவுச் சாதனமாகிறது. சூரியன் சந்திரன் பூமி இவற்றின் இயக்கங்களில் இப்படிப்பட்டத் தோற்றமும் மறைவும் அவசியக் கற்பனைகள். புரிகிறதா?"

நசிகேதன் தலையசைத்தான். எமன் தொடர்ந்தான். "சூரிய சந்திர தோற்றமும் மறைவும் கற்பனை என்றேன். அவற்றின் தோற்றதையும் மறைவையும் கண்ணால் காண முடிந்தாலும் கற்பனைதான், ஏற்கிறாயா?"

"ஆம். புரிகிறது. கண்ணெதிரே தோன்றி மறைந்தாலும், அவை மக்கள் மனதில் ஏற்படுத்திக்கொண்ட கற்பனையே"

"அடுத்தக் கேள்வி. கண்ணுக்குத் தெரிவதில்லை. தோன்றுவதில்லை. மறைவதில்லை. இருப்பினும் காற்று வீசுகிறது என்கிறோம். காற்றும் கற்பனையோ?"

"இல்லை. காற்றின் சக்தியைப் புரிந்து கொள்ள அசைவுகள் உதவுகின்றன. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் காற்றெனும் சக்தி புலனாகிறது"

"விந்தை. கண்ணுக்குப் புலனாவது கற்பனை, கண்ணுக்குப் புலனாகாதது உண்மை என்கிறாய். விந்தையிலும் விந்தை. சரி, கடலலை பற்றி முன்பு விவாதித்தோம். கடல்நீரை அருந்தப் பிடிக்குமா?"

"கரிக்கும் எமனாரே. அருந்துவதற்கு ஏற்றதல்ல"

"ஆழ்கடலில் எடுத்தால் கரிக்காதோ ஒருவேளை?"

"இல்லை. கரிப்பு, கடல்நீரின் தன்மை. கரையருகிலோ அல்லது நடுக்கடலிலோ சென்று குடித்தாலும் கரிக்கும்"

"மழைநீர்?"

"குடிப்பதற்கேற்றது"

"கடல்நீரும் மழையாக மாறி விழுகிறதே? அப்பொழுது கரிக்குமா?"

நசிகேதன் விழித்தான். ஆசிரியர் ஏன் இப்படிப்பட்டக் கேள்விகளைக் கேட்கிறார்? நானல்லவா கேள்வி கேட்கவேண்டும்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது புரிந்து, சிந்திக்கத் தொடங்கினான். எமனுக்குத் தன் மாணவன் சிந்திக்கத் தொடங்குவதும் தெரிந்தது. "நசிகேதா, இன்னுமொரு கேள்வி" என்றான்

"கேளுங்கள் குருவே"

"மீனவன் வலை வீசுகிறான். வலையில் எத்தகைய மீன் விழும் என்பதை அறிவானா? சிறிய மீன், பெரிய மீன், கறுப்பு மீன், சிவப்பு மீன், ஒரு மீன், பல மீன்.. என்று வகையோ வண்ணமோ அளவோ அறிய முடியுமா? வலை வீசும் முன்போ வீசும் போதோ அறிந்தவர் யாராவது உண்டா?"

நசிகேதன் மீண்டும் விழித்தான். "நீங்கள்தானே ஆசிரியர்? என்னிடம் கேட்டால்?" என்றான். பதில் தெரியாத ஆதங்கம் அவன் மறுகேள்வியில் தொனித்தது.

எமன் மீண்டும் பலமாகச் சிரித்தான். அறிவுள்ளவன் என்றாலும் தன் மாணவன் வயதால் மிகவும் சிறியவன் என்பதை உணர்ந்த ஆசிரியன் அல்லவா? நசிகேதனை அன்புடன் தட்டிக் கொடுத்தான். "நசிகேதா.. உனக்கு விடை தெரியாவிட்டால் தவறில்லை. மனிதன் தன்னைச் சுற்றி இருப்பதையும் நடப்பதையும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கேள்விகளை கேட்டேன். உலகில் மனிதரைச் சுற்றி இருப்பது எல்லாமே மனிதருக்காக ஏற்பட்டவை, மனித அறிவு வளர உருவானவை, மனிதநேயம் வளரத் தோன்றியவை, படிப்பினைகளும் பாடங்களும் நிறைந்தவை என்பதை உணர வேண்டும். உலகம் பிறந்ததும் ஓடும் நதிகளும் காற்றின் ஒலிகளும் கடலின் அலைகளும் மனிதருக்கான பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கேட்கும் நாளில், கேட்டுச் செயல்படும் நாளில், மனிதம் சிறப்படையும்..

..பேரான்மா என்பது, சூரியனைப் போல அபரிமித ஒளிப்பிழம்பு, சக்திக்கூட்டு. சந்திரனைப் போல அமைதியின் சாரம், குளுமையின் உறைவிடம். பேரான்மா தனித்திருந்தால் ஒரு பயனும் இல்லை. பூமியின் கண்களுக்குச் சூரியனும் சந்திரனும் தோன்றி மறைவது போலவே, மனிதத்தின் கண்களுக்கு பேரான்மா தோன்றி மறைகிறது. பேரான்மா உயிர்ப்பயணம் மேற்கொள்கிறது. பூமியின் வளர்ச்சிக்கு சூரிய சந்திர தோற்றமும் மறைவும் அவசியம் என்றாயே, அது போலப் பேரான்மா, ஆன்மாவாகி வந்து போனால்தான் மனிதம் வளர முடியும்..

..அசையாத காற்று மூச்சாகி உயிரை வளர்த்தாலும், அசையும் காற்றை மட்டுமே மனிதனால் உணர முடிகிறது. பேரான்மாவின் சக்தியும் அப்படியே. மனித மேம்பாட்டில் மட்டுமே பேரான்மாவின் சக்தியை உணர முடியும். பேரான்மாவெனும் காற்றை அசைத்து உணர தன்னறிவு உதவுகிறது..

..கடல்நீர் கார்க்கும் என்றாலும், அது மழைநீராக மாறும் பொழுது மழைநீரின் இயல்பைப் பெறுகிறது. ஆன்மாவும் அப்படியே. பிறவிக்கேற்ப, வளர்ச்சிக்கேற்ப, தனித்தன்மையைத் தேடிக்கொள்கிறது. சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ, மறைக்கவோ செய்கிறது. எனினும், நீர் எனும் அடிப்படைத் தன்மை மாறுவதில்லை. பேரான்மாவின் அடிப்படைச் சக்தி மாறுவதில்லை. நீரின் சக்தி வெளிப்படுவது நிலத்தில் தானே? ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துவது மனிதம்..

..பிறப்பும் இறப்பும் விபத்துக்கள் என்றேன். வலை வீசும் மீனவன் 'இத்தகைய மீனைப் பிடிப்பேன்' என்ற திட்டத்துடன் செயல்படுவதில்லை. இத்தகைய மீன் வலையில் விழும் என்று எவராலும் அறிந்து சொல்லமுடியாது. அதுபோலவே, ஆன்மாவும் பிறவி வலையில் விழுகிறது. நழுவுகிறது. எப்படி எப்பொழுது விழும், நழுவும் என்று கணிக்கவியலாது, கணிப்பதால் பலனுமில்லை..

..இவை எல்லாம் இயற்கையாக நிகழ்பவை. தன் இயல்பை நிகழ்வுக்கேற்ப வெளிப்படுத்துகின்றன. மீண்டும் இயல்பையே சேருகின்றன. ஆன்மாவும் அப்படியே. பிறப்பும் இறப்பும் அப்படியே. பேரான்மா எனும் மனிதக் கூட்டுச்சக்தி, மனிதநேயம் தோன்றி வளர்ந்து செழிக்க அவ்வப்போது தன் இயல்பை மாற்றிக் கொண்டு வெளிப்படுகிறது. பின், மாறாத நிலையை மீண்டும் அடைகிறது" என்றான்.

நசிகேதன் எமனை வணங்கினான். "மிக்க நன்றி. பேரான்மா ஆன்மா தன்னறிவின் இணைப்பையும், பிறப்பிறப்பின் இயல்பையும் அறிந்து கொண்டேன். உயிர் உடலை விட்டு விலகினாலும் நம்மைச் சுற்றியே பெருஞ்சக்தியாய் நிலவுகிறது என்பதையும் புரிந்து கொண்டேன். அதுவே உயிரின் நிலையான இருப்பிடம் என்பதையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி" என்றான். "இருப்பினும்..."

"என்ன நசிகேதா?"

"இருப்பினும்.. சில கேள்விகள் இன்னும் சுற்றி வருகின்றன. சொர்க்கம் நரகம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். அவை உண்மையா? அவற்றுக்கான வேள்விகள் பற்றிச் சொன்னீர்கள். அவை தேவையா? எம்மக்கள் ஏழாவது பானையாக என்ன செய்ய வேண்டும்? பாவ புண்ணிய சொர்க்க நரகங்களுக்கு அஞ்சியும் ஆசைப்பட்டும் எண்ணற்றச் சடங்குகளைச் செய்கிறார்களே? அவற்றால் பலனுண்டா? இல்லையெனில எப்படி அறிவுறுத்துவது? எம்மக்கள் விழிக்க வழியுண்டா?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

17 கருத்துகள்:

ராமசுப்ரமணியன் சொன்னது…

no comment. கடோபனிஷதுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லையே?

பத்மநாபன் சொன்னது…

முழுதாக படித்துக் கொண்டே இருக்கிறேன்… நிறைய கருத்துகள உள்ளன..
அது வேறு இது வேறு என்று பார்க்கும் பொழுது தான் பில்லியன் கணக்குகள் வரும் ..மனித சக்தி மகத்தானது தான் …நீங்கள் சொன்ன அத்தனை பில்லியன் வருடங்களிலும் படிப்படியாக ஒரு ஸ்கேலிங் படிந்துள்ளது … இந்த படிமாணம் முன்னூறு வருடங்களில் மட்டும் படியவில்லை …
இரவு வருகிறேன்……

அப்பாதுரை சொன்னது…

வருக ராமசுப்ரமணியன், பத்மநாபன்,...

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ராம்?

பத்மநாபன் சொன்னது…

//அண்டவிரிவும் அதைப்போன்ற ஆய்வுகளும் அகத்தெளிவுச் சாதனங்கள்// எனக்கென்னவோ இதைப் படிக்க படிக்க இன்னமும் அந்த ஆற்றல் மீது ஒரு நம்பிக்கையும் அதை சார்ந்த வாழ்வின் மீது பெரு நம்பிக்கையும் கூடுகிறது... கடவுளை ஜெயிக்க வைக்க ஒரு கூட்டம் ( அட நாம் யார்)..ஏதேச்சையை ஜெயிக்க வைக்க ஒரு கூட்டம்.. எதேச்சைக்கு அதி பயங்கர ஆராய்ச்சிகள்...
’’எல்லாம் கடவுள் செயலி’’ல் ஆபத்தாக பார்க்கிறீர்கள்.. ’’எல்லாம் எதேச்சை’’யில் தான் பேராபத்து... அது வருதோ இல்லையோ நிச்சயம் ஆபத்தை தான் எதிர்பார்க்கும் அல்லது
எதிலும் நாட்டமில்லாமல் ஆபத்தில் விழும்...

காவிகள்..அங்கிகள்..எத்தனை நாள் ஆட்டம் போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்…. ஓயக்கூடிய ஆட்டம்… மற்றோரு கோணம் தேவை ( நீங்கள் கண்மூடிகளின் மீதுள்ள பார்வையை குறைத்து விட்டு ..நசிகேதத்தில் இன்னமும் எங்கள் பெரிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் )
மனித சக்தி… அறிவியல் முன்னேற்றம் …அதி புலனுணர்வுகள் ( குறிப்பிட்ட பார்த்தாலே அனைத்தையும் உணரும் சாதனம்) இவை யனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெரும்சக்தியை இனம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்….

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பேரான்மா எனும் மனிதக் கூட்டுச்சக்தி, மனிதநேயம் தோன்றி வளர்ந்து செழிக்க அவ்வப்போது தன் இயல்பை மாற்றிக் கொண்டு வெளிப்படுகிறது. பின், மாறாத நிலையை மீண்டும் அடைகிறது" /
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

சிவகுமாரன் சொன்னது…

தாங்கள் என்னையும் சேர்த்து சாடுகிறீர்கள் என்பது புரிந்தாலும் , வியந்து போய் கைதட்டுகிறேன்.
நல்ல வேளை, அப்பாஜி போல் நான் அறிவுஜீவி இல்லை என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

அப்பாதுரை சொன்னது…

வருக இராஜராஜேஸ்வரி, சிவகுமாரன்,...

அப்பாதுரை சொன்னது…

கடோவிலிருந்து அதிகமாக விலகவில்லை. நான் பேரான்மா என்கிறேன். கடோ 'ப்ரம்மம், புருஷம்' என்கிறது. அவ்வளவு தான். உங்களுக்குத் தெரியாததா ராம்?

பத்மநாபன் சொன்னது…

//( நீங்கள் கண்மூடிகளின் மீதுள்ள பார்வையை குறைத்து விட்டு ..நசிகேதத்தில் இன்னமும் எங்கள் பெரிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் )//இதற்கு அப்பாதுரையின் மைன்ட் வாய்ஸ் ''விடிய விடிய ராமாயணம் ''

அப்பாதுரை சொன்னது…

இது சற்று சிக்கலான வாதம் பத்மநாபன்.

நம்பிக்கையில்லாமல் வாழ்வா? அன்னையின் அன்பிலிருந்து.. காசு கொடுத்து வாங்கும் பொருள் விலைக்கேற்ற தரத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வரை.. நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நிகழ்வில்லை. நம்பிக்கைகள் வாழ்க்கையில பிடிப்பு ஏற்பட அவசியம் என்பதை ஏற்க முடிகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் என்ன செய்கிறோம் என்பது தான் இங்கே சிக்கல்.

ஆற்றல் வெளியே இருந்தே ஆகவேண்டும் என்பது எத்தனை கண்மூடித்தனமோ அத்தனை கண்மூடித்தனம் ஆற்றல் உள்ளேயே இருந்தாக வேண்டும் என்பதும் என்று அறிவேன். அதனால் என்னால் புறச்சிந்தனைகளில் இறங்க முடிவதில்லை. பேராற்றல் புறத்தே இல்லை என்று தெளிந்து என்றைக்கோ வேறு பாதையில் போகத் தொடங்கிய அந்த நொடியிலிருந்து என் மனதில் குழப்பமே இல்லாது போனது உண்மை.

வட்டவாதம் ஆபத்தானது. என்ன சொன்னாலும் வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
எனவே, நம்பிக்கைகளை அவரவருக்குத் தோன்றும் விதத்திலும், தேவையான அளவிலும் வளர்த்துக் கொள்வது முறையே என்று அமைகிறேன்.

உங்கள் பின்னூட்டம் மற்றும் ராமசுப்ரமணியனின் 'no comment' commentம் வைத்துப் பார்க்கும் பொழுது.. ஒரு வேளை நசிகேத வெண்பாவில் பிரசாரம் தொடங்கிவிட்டதோ? நான் அஞ்சியது போலவே என் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதோ?

நம்பிக்கைகளைச் சாடவில்லை சிவகுமாரன். உங்களையும் சாடவில்லை. அந்தக் குணம் எனக்கில்லை என்று நினைக்கிறேன் :) தகுதி நிச்சயமாக இல்லை.

என் தனிப்பட்ட கருத்துக்கள் சற்று முள்ளுரசலாக இருந்தால் என்னுடைய editorial தவிர்த்து மற்றதைத் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

அப்பாதுரை சொன்னது…

நசிகேத வெண்பாவே கண்மூடிகளைப் பற்றி... ஓஹோ.. நீங்களும் அதைத்தான் சொல்கிறீர்களோ பத்மநாபன் ? :)

பத்மநாபன் சொன்னது…

editorial தானே நசிகேத வெண்பாவின் முதுகெலும்பு ... அதை விட முடியாது ....

சிவகுமாரன் சொன்னது…

Rightly said Rasikamani

meenakshi சொன்னது…

இந்த வெண்பாவை படிக்கும்போதே ஒரு மெட்டு போட்டு அழகாக பாட்டாக பாடலாம் போல தோன்றியது.

//'உண்டா இல்லையா' என்பது புறத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனையெனில், 'தேவையா இல்லையா' என்பது அகத்தெளிவைச் சார்ந்தச் சிந்தனை.// மிகவும் அருமை!
அகத்தெளிவு வளர வளர கண்மூடித்தனம் ஒழியும் என்பது அருமையான கருத்து.

ராமசுப்ரமணியன் சொன்னது…

உங்கள் கருத்து பத்தின comment அல்ல அப்பாதுரை. உங்கள் கட்டுரை நசிகேத வெண்பாவை விட ஆழம்னு சொல்வேன். நீங்கள் எடுத்துத் தரும் சிந்தனைகளும் கதைகளும் quotationகளும் அதை வைத்து நீங்கள் எழுதும் கருத்துக்களூம் பண்பட்ட அறிவின் வெளிப்பாடு என்கிறேன். கடோபனிஷது என்று சொல்லிவிட்டு அதில் இருப்பதை அப்படியே (ஓகே தமிழுக்கு ஏத்த மாதிரி) எழுதாமல் விடுவது ஒரு விதத்துல திரிப்பது போலத் தானே? ஓகே.. நீங்க சொல்வது போல புருஷன் பிரம்மன் என்றிருக்கலாம், அதை நீங்க பேரான்மாவென்பது ஓகே. அதே நேரம் காவிகளைத் திட்டுவதும் சடங்குகளைத் திட்டுவதும் கடோவில் இல்லை என்பதையும் சொல்ல வேண்டாமா? மற்றபடி உங்களைக் குறை சொல்லவில்லை.

ராமசுப்ரமணியன் சொன்னது…

காவி என்பதே கொஞ்சம் degraded வார்த்தை. ஒன்றிரண்டு சொத்தை இருப்பதும் சாதாரணம் தானே?

ராமசுப்ரமணியன் சொன்னது…

விவேகானந்தர் காவி தானே? இல்லையா?