வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/01

ஆன்மா தேடினால் புலப்படுவது


57
அசையாது ஆயின் திசையெட்டும் ஏகும்
பசையற்றோர் பக்குவமாம் ஆன்மா - இசையிது
உட்கார்ந்த கட்டில் உலகமேவும் கட்கிலி
கொட்கும் கடைபிடிப்பார் கட்கு.

   ற்றறுத்தோர் அறியக்கூடியதான ஆன்மா எனும் மேன்மை, அசையாமல் எட்டுத்திக்கிலும் பரவக்கூடியது; அமர்ந்த இடத்திலிருந்து அனைத்துலகும் செல்லக்கூடியது; புலப்படாதது எனினும், தளராமல் தீர்மானத்தோடுத் தேடுவோருக்குத் தன்னைத் தெரியப்படுத்தும் (என்றான் எமன்).


பசை: பற்று, பந்தம்
பக்குவம்: தன்மை, முதிர்ச்சி, அறிவு, தகுதி
இசை: உண்மை, அறிவு, மேன்மை, புகழ்
கட்டில்: நிலையில்
கட்கிலி: புலப்படாதது, புலப்படாதவர், மறைந்திருப்பவர்
கொட்கும்: புலப்படுவது, வெளிப்படுவது (வெளிப்படுத்தும், புலப்படும்)
கடைபிடிப்பார்: முடிவைக் காணும் வரையில் உறுதியாகச் செயல்படுத்துவோர்


['..i feel within me a peace above all earthly dignities..' - william shakespeare ]

    "புலனடக்கி, புறத்தாக்கம் மறைந்து விட்ட நிலையில், மனிதம் தன்னறிவைத் தேடும் வாய்ப்பைப் பெறுகிறது" என்ற அஜாதசத்ரு, தொடர்ந்தான். "வாய்ப்பைப் பெறுவதனால் மட்டும் தன்னறிவை அடையமுடியாது. தீவிர முயற்சி வேண்டும். வேகம் வேண்டும். குறிக்கோள் வேண்டும். அலைவது போல் பாவனை காட்டும் ஆன்மாவை, அறிந்தே தீருவது என்ற உறுதி வேண்டும். சிலந்தி வலையைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?"

"பார்த்திருக்கிறேன்" என்றார் ஞானி.

"எத்தனை பெரிதாக வலையைப் பின்னிப் பிணைந்திருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் பூச்சி சிக்கியதைச் சிலந்தி உணர்ந்து விடும். வலையின் குறுக்கும் நெடுக்கும் பயணித்து, சிக்கியப் பூச்சியை உண்டு முடிக்கும் வரை சிலந்தி ஓயாது. நம் மனம் சிலந்தி வலை போன்றது. நமக்குள் புதைந்தத் தன்னறிவு, வலையில் சிக்கியப் பூச்சி போன்றது. நாம் சிலந்தி போன்றவர்கள். அகத்தே சிக்கிய அறிவுப் பூச்சியைக் கண்டறிந்து ஞான விருந்து உண்பதே நமது இலக்கு, குறிக்கோள், பொறுப்பு ஆகும்" என்றான் மன்னன்.

ஞானி தலையாட்டினார். மன்னன் தொடர்ந்தான். "முழுமையான சுய அறிவு என்றால் என்னவென்று உங்களுக்கு இப்போது நான் சொல்கிறேன்" என்றான். ஞானி மறுபடியும் தலையாட்டினார்.

"தன்னறிவில் இருவகை உண்டு. நுட்பமான, குறுகிய, வரைக்குட்பட்டது ஒரு வகை. மற்றது, அறியவும் இயலாத அளவுக்கு நுட்பமான, தொடர்ந்து பரவும், எல்லையற்றது. நீங்கள் குறிப்பிட்ட ஐம்பொறிகள் நுட்பமானவை, மகத்தானவை, சக்தி வாய்ந்தவை; எனினும் அவற்றை அடக்கிச் சுருட்டிச் சாப்பிட்டு விரிந்து கொண்டே இருக்கும் அண்டவெளியோ அளவிட முடியாதது. எல்லையில்லாத மகத்துவம் கொண்டது. வெளியை முழுமையாக அறிய முடியாது, ஆயின், வெளியின் அம்சமான ஐம்பொறிகளைப் புரிந்து கொள்ள முடியும். வெளியின் அம்சமான ஐம்பொறிகளைப் பற்றிய அறிவில், வெளியைப் பற்றிய அறிவுக்கான வழிகள் அடங்கியுள்ளன. ஐம்பொறியின் அறிவை வைத்து வெளியைப் பற்றியத் தெளிவைப் பெறலாம். நமக்குள் இருக்கும் தன்னறிவு, ஐம்பொறிகள் போன்றது. நாம் அதைத் தேடி அறிந்தால் பரந்த ஆன்மாவைப் பற்றிய, முழுமையான சுய அறிவைப் பற்றிய, தெளிவைப் பெறலாம். முழுமையாக அடைய முடியாது எனினும், தன்னறிவைப் பெற்ற நிலையில் முழுமையான சுய அறிவை உணர முடியும். அதுவே ஞானம்" என்ற மன்னன் தொடர்ந்தான். "கேளுங்கள் ஞானியே! மெய்யறிவின் உண்மையான பொருள் "இது அல்ல" என்பதே. பரந்து விரிந்து கொண்டிருக்கும் அண்டம் போன்ற ஆன்மாவைக் குறிப்பிட்ட அடையாளத்தில் கட்டிவிட இயலாது. அது போல், தன்னறிவின் ஒவ்வொரு நிலையையும் "இது அல்ல" என்ற உணர்வோடு கடப்பதே முழுமையான சுய அறிவைப் பெறும் வழி" என்று முடித்தான்.

ஞானி தலையாட்டினார்.

    ப்ரகதாரண்யக உபனிஷதில் இடம்பெறும் அஜாதசத்ரு-பாலாகி உரையாடல் இத்துடன் நிறைவடைகிறது. ஒரே ஒரு மாறுதல் செய்திருக்கிறேன். உபனிஷதில் சிலந்தி ஆன்மாவுக்கு உவமையாக வருகிறது. எனக்கோ, சிலந்தி தன்னறிவைத் தேடும் மனிதனுக்குப் பொருத்தமாகத் தோன்றியது. மற்றபடி, கதைச்சுவைக்காக ஆங்காங்கே உரையாடலில் இட்டுக் கட்டியிருக்கிறேன். பொருளில் எங்கேனும் தவறு செய்திருந்தால் தெரிவித்து, மன்னிக்க வேண்டுகிறேன்.

மற்றக் கதையையும் முடித்துவிடுகிறேன்.

    ஆதிசங்கரர் குறவனிடம், "ஏய், உன்னைத்தான். உன்னைச்சுற்றி இருக்கும் இவை எல்லாவற்றையும் நகர்த்து. நீயும் எழுந்து ஒதுங்கி வழிவிடப்பா" என்றார்.

குறவன் இளித்தான். "ஹிஹி.. சாமியோவ். இதெல்லாம் என்னுதில்லிங்கோ. நானா கொண்டு வந்தேன்? இந்த ஓட்டை ஒடிசல் உசிருங்க எல்லாம் வழியில மானாவாரியா சேந்ததுங்கோ சாமி. நான் சொல்லியா எங்கூட வருதுங்க? நான் சொல்லியா என்னை விட்டுப் போவுதுக? ஏதோ வருது போவுதுங்க சாமியோவ். இதுங்களைப் போய் என்னுதுன்றீங்களே சாமி?" என்று, நாய் குரங்கு பூனைகளை விரட்டினான். அவை குரைத்தும் முறைத்தும் மெள்ளத் தம் வழியே சென்றன.

"சரியப்பா, நீயாவது எழுந்து ஒதுங்கு. குளித்து முடித்து வருகிறோம்; அதே சுத்தத்துடன் சிவபூஜைக்குப் போகணுமப்பா" என்றார் சங்கரர்.

பெரிதாகச் சிரித்தான் குறவன். "ஆவட்டுங்க சாமியோவ். நீயாவது எந்திரிச்சு ஒதுங்குன்றீங்களே, யாருங்க அந்த "நீ"? நானா? நான்றது இந்த ஒடம்பா, இல்லே இதுக்குள்ளாற இருக்குற ஆம்மாவா? உடம்பை எடுத்துட்டு ஒதுங்கிட்டா உள்ளாற ஆம்மா எங்கே போவுதுங்க சாமி? அங்கயே தானே நிக்குது? நின்னுகிட்டே எல்லா இடத்துலயும் வருதுலா? சுத்தம்ன்றீங்களே சாமி, ஹிஹிஹி, ஒடம்புக்குத் தானே சுத்தம்? ஒடம்பு ஒதுங்கினாலும் அதோ இதோ உதோனு ஒளியுற ஆம்மாக்கு ஏது சுத்தம் சாமி? அட, ஆம்மாவை விடுங்க சாமி. எம்மேலே பட்ட காத்து, வெயில், நெழல் தானே உங்கமேலயும் படுது?" என்று தலையைச் சொறிந்தான். "ஆவட்டும் சாமி. நீங்க நல்லா சுத்தமா காவி கட்டியிருக்கிற சாமிங்கோ. உங்க கூட எட்டுபத்து ஆசாமிங்கோ. ஆவட்டும். எல்லாரும் சுத்தமா போங்க சாமி, நான் இதா எந்திரிச்சு ஒதுங்குறேன்" என்றபடி, குறவன் பலத்தக் கொட்டாவியுடன் எழ முனைந்தான்.

சங்கரருக்குப் பொறி தட்டியது. "ஐயா, யாரய்யா நீ? உனக்கிருக்கும் அறிவு எனக்கில்லையே?!" என வருந்திக் குறவனின் காலில் விழுந்தார்.

    இரண்டு கதைகளுக்கும் பொதுவான கரு உண்டு. தன்னறிவைப் பெற வேண்டிய தேவையின் தீவிர வெளிப்பாடு. தன்னறிவைப் பிறர் மேன்மைக்குப் பயன்படுத்தும் பக்குவம். ஆன்மாவைப் பற்றியத் தேடல்.

    இருவரின் தேடலுக்கும் தனிப்பட்ட உந்துதல்கள் உண்டு. அஜாதசத்ரு-பாலாகி கதையில் தன்னறிவைத் தேடியது யார்? அரசனா, ஆண்டியா? சற்றுச் சிந்தித்தால் மறைந்திருந்த வியப்பான உண்மை தெரியும். சங்கரரின் கதைக்கு வருவோம். அவருடைய அத்வைத சிந்தனைகளின் ஆணிவேர் இந்தக் கதையே என்பார்கள். குறவனாக வந்து சங்கரருக்கு வேதங்களையும் தத்துவங்களையும் போதித்தவர் சிவன் என்று கதை தொடர்வது, சாதாரணம். விளைவான சங்கரரின் அத்வைத சிந்தனைகள், அசாதாரணம். விதையானத் தன்னறிவுத் தேடலோ, மகத்துவம். சங்கரரின் மனதில் அதை விதைத்த உந்துதல்? அங்கே தான் பிரமிக்க வைக்கிறது. தன்னறிவுத் தீப்பொறி? (சங்கரரின் உந்துதலை விளக்க ஒரு சுவாரசியமான முன்கதையும் உண்டு).

    ஆன்மாவை அறிய முடியுமா? தன்னறிவு பெற முடியுமா? இந்தக் கேள்விகள் இவர்களைப் போல் என்னையும் வாட்டியுள்ளன, வாட்டுவன. ஒரே ஒரு வேறுபாடு. இவர்கள் கேள்விக்குப் பதிலையும் தேடி, விடாமல் முயன்று, உறுதியோடு நின்று கண்டறிந்தார்கள். நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு அஜாவோ குறவனோ கண்ணெதிரில் வந்தாலும் ஹலோ சொல்லாமல் ஒதுங்கிப் போவேன். பத்து வருடம் பொறுத்து வந்தால், இன்னும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பேன். தேடினால் தானே பதில் கிடைக்க வாய்ப்புண்டு? தேடும் எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறதே தவிர, தேடும் செயல் அல்ல.

    ஆன்மாவை விடுங்கள். சூட்சுமம். விளக்க முடிகிற வாழ்வை, கண்ணுக்குப் புலப்படுகிற சாதாரண வாழ்வை, பத்தாங்கிளாஸ் அறிவுக்குட்பட்ட காரண-காரிய வாழ்வை, எனக்கும் பிறருக்கும் பயனுள்ளவாறு மாற்றியமைக்கும் எண்ணம் அடிக்கடி வரும். ஆனால், ஆயிரம் நொண்டிச் சாக்குகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் மனம். செயலில் இறங்க மாட்டேன். நொண்டிச் சாக்கு கிடைக்காவிட்டாலும் சோம்பித் திரிவேன். மாறுதல் பழம் தானாகத் தலையில் விழக் காத்திருப்பேன். போலிச் சமாதானம் செய்து கொள்ள அனுமதிக்கும் மனதை, செயலில் தீவிரம் காட்ட அனுமதிக்க மறுக்கிறேன். எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போல் எத்தனை பேர் இங்கே?

['..நாடினேன் தந்தது, வாசலில் நின்றது, வாழ வா என்றது, தேடினேன் வந்தது..' - கண்ணதாசன் ]

    "ஆன்மாவை அறிய வேண்டுமா என்ற கேள்வியில் பெரும்பாலான மானிடம், தம் வாழ்நாளைக் கழிக்கிறது. ஆன்மாவைப் பற்றிய அறிவு, மேன்மைக்கான அறிவு. சாதாரண வாழ்வில் சுகம் காணும் சாதாரண மானிடம், ஆன்மாவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஆன்மாவை விட கண்ணுக்குத் தெரிகிற இன்பமும் நன்மையும் பிணியும் துயரும், அவர்கள் மனதையும் அறிவையும் ஆட்கொள்கின்றன. தன்னறிவைப் பெறத் தயங்குவோர் பிறருக்கு நன்மை ஏற்படும் விதத்தில் வாழ முடியாமல் போவது மட்டுமல்ல, தங்களுடைய வாழ்விலும் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களைச் செய்ய முடியாமல் போவார்கள். பிணியில் வாடுவார்கள். பிணியில் வாடுவது தெரிந்தும் தொடர்ந்து அதையே பற்றியிருப்பார்கள்" என்றான் எமன்.

   எமன் பிணி என்றது உடற்பிணி மட்டுமல்ல என்பதை உணர்ந்த நசிகேதன், "நீங்கள் சொல்வது புரிகிறது. எனினும், சாதாரண மனிதம் அசாதாரண ஆன்மாவை அறிய முற்படுவதே சோதனையான முரணல்லவா?" என்று கேட்டான்.

   "ஆம் நசிகேதா. அதனால்தான் தன்னறிவு எளிதில் கிடைப்பதில்லை. சாதாரண மனிதம் அதைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது போகிறது. தீச்செயல் புரிவோர் தொடர்ந்து தீச்செயல் புரிவார்கள். அறியாமையில் உழல்வோர் தங்கள் பரிதாப நிலையை அறிந்து கொள்ளாமலே வாழ்ந்து மடிகிறார்கள். ஏற்கனவே மலிந்த அவர்களின் வாழ்வு, ஆன்மாவை அறியாததனால் இன்னும் குறைந்துவிடப் போவதில்லை. எனினும், தங்களின் முழுச் சக்தியையும் உணர முடியாமலே மடிகிறார்கள். வேதனைக்குரியது. அவர்களின் செயல், திகட்டாத அறுசுவை விருந்தை உண்ண மறுத்துக் கட்டிவைக்கும் புலனின்பக்காரர்களின் செயலை ஒத்தது.

   ஆன்மாவை அறியத்தான் வேண்டுமா என்ற எண்ணம், ஒருமை அறியாது இருமைகளைப் பேணுவோரின் மனநிலை. இவர்களை எப்படி அடையாளம் காண்பது? 'இந்தக் கணத்திலிருந்து மாறினேன்' என்பார்கள், எனினும் சொல்லி முடித்த சில நாழிகையில் பழைய செய்கையைத் தொடர்வார்கள். தங்களின் பரிதாப நிலைக்குச் சமாதானமாக, 'நான் மாறப்போவதில்லை, இது என் குணம், என் விதி' என்பார்கள். இவர்களுக்குத் தன்னறிவு கிடைத்து என்ன ஆகப்போகிறது என்ற உன் கேள்வி முறையானதே. தன்னறிவு அவர்கள் வீட்டுக் கதவை உடைத்து வந்தாலும் உறங்கும் வகையினர். அவர்களுக்கு மருந்தும் பிணியாகிறது.

   தன்னறிவைத் தேடும் ஒரு சிலர் தனக்கும் பிறருக்கும் மேன்மையுண்டாகும் விதத்தில் நடக்கிறார்கள். தன்னறிவு பெற்றவர்களால், சாதாரணரின் வாழ்வில் சிறு அளவிலாவது முன்னேற்றம் ஏற்படுகிறது. அந்தப் பாதிப்பினால் பின்னொரு நாளில் அவரோ அவர் சந்ததியோ தன்னறிவைத் தேடுகிறார்கள். பின்னொரு நாளில் ஆன்மாவைத் தேட வைக்கும் உந்துதல் அவருள்ளேயும் வெளியேயும் அடங்கியிருக்கிறது. அதுவே ஆன்மாவின் தன்மையாகும்.

   ஒரு உடலுக்குள் அடைபட்டிருந்தாலும், ஆன்மா உலகங்களெங்கும் பரவக்கூடியது. உன் உடலின் ஆன்ம சக்தி உனக்குப் பிறகு உன் சந்ததிகளுக்குச் செல்லக்கூடியது. உன் ஆன்ம சக்தியின் விளைவு உன்னுடன் இருக்கும், இருக்கப் போகும், இன்னும் பலரால் அனுபவிக்கக் கூடியது. நமக்குள் அடைபட்டிருக்கும் ஆன்மா பரந்த ஆன்மாவுடன் நாமறியாமலே தொடர்பு வைத்துக் கொண்டேயிருப்பதால், ஆன்மா எங்கேயும் எப்போதும் இருப்பதாகத் தோன்றுகிறது. தன்னையறிவதால், பரந்த ஆன்மாவையும் அறியலாம்.

   ஆன்மாவை அறிய முற்படுவோர் இருமைகளை அறிந்து இயங்கும் பக்குவம் பெற வேண்டும். அந்தப் பக்குவம் பெற்றவருக்கே ஆன்மாவைத் தேடும் உந்துதல் பிறக்கிறது. ஆன்மாவைத் தேடி அறியத் தேவையான உறுதியும் தீவிரமும் வளர்கிறது. இருமைகளின் பிடியிலே சிக்கியிருப்போருக்கு தன்னறிவுப் பாதை தெரிவதில்லை. அப்படித் தெரிந்தாலும், அவர்களின் மன உறுதியும் தீவிரமும் வெள்ளத்தில் சிக்கிய மரத்துண்டு போல் நிலையில்லாது போகிறது. சுய முன்னேற்றத்துக்கான எந்தச் செயலையும் தொடங்காது தடுமாறுகிறார்கள். முடிவில் விதி என்று ஓய்கிறார்கள்" என்றான் எமன்.

   "அப்படியென்றால் ஆன்மா புலப்படும் என்கிறீர்களா?" என்று கேட்டான் நசிகேதன்.

   "நிச்சயமாக. ஒருமையில் மனதை செலுத்தி, தன்னறிவைத் தேடும் முயற்சியில் தீவிரமும் உறுதியும் கடைபிடித்தால் அவர்களுக்கு ஆன்மா புலப்படும்" என்றான் எமன். "புலப்படத்தானே பரந்திருக்கிறது ஆன்மா? அறிவாரற்றுப் போனால் அது ஆன்மாவின் தவறல்ல, கவலையுமல்ல. 'அறிவார் நின்று அறிவார், அறியார் நாளை வருவார்' என்று காலங்காலமாக அறியப்பட காத்திருக்கிறது ஆன்மா. மேலும் சொல்கிறேன் கேள்" என்றான் எமன்.

27 கருத்துகள்:

meenakshi சொன்னது…

// 'அறிவார் நின்று அறிவார், அறியார் நாளை வருவார்' என்று காலங்காலமாக அறியப்பட காத்திருக்கிறது ஆன்மா. //
அருமை!
தொடர்கிறேன்!

geetha santhanam சொன்னது…

கட்கிலி, கொட்கு என்று பல வார்த்தைகளை அறிமுகப் படுத்துகிறீர்கள்.
//'அறிவார் நின்று அறிவார், அறியார் நாளை வருவார்' //
இப்படி சிம்பிளாகவும் சொல்லிக் கலக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

ஒரு கருவில் இரு கதைகள் சொன்னது சிறப்பாக இருந்தது..அதிலும் குறவனின் எளிமையான உரையாடல் அருமையாக இருந்தது...

மனிதம் பேரறிவை நோக்கிய பயணம் எனக் கொள்வதை விட தானே தன்னைறியும் பயணம் என்பது சரியான புரிதல் ( அதனால் தான் தன்னறிவு என்று சொல்லி வருகிறீர்களோ)..

அறியார்க்கென படைத்த நாளையெனும் நாளை உணர்த்தினீர்கள்..

ஸ்ரீராம். சொன்னது…

//"ஆன்மாவை விடுங்கள். சூட்சுமம். விளக்க முடிகிற வாழ்வை, கண்ணுக்குப் புலப்படுகிற சாதாரண வாழ்வை, பத்தாங்கிளாஸ் அறிவுக்குட்பட்ட காரண-காரிய வாழ்வை, எனக்கும் பிறருக்கும் பயனுள்ளவாறு மாற்றியமைக்கும் எண்ணம் அடிக்கடி வரும். ஆனால், ஆயிரம் நொண்டிச் சாக்குகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் மனம். செயலில் இறங்க மாட்டேன். நொண்டிச் சாக்கு கிடைக்காவிட்டாலும் சோம்பித் திரிவேன். மாறுதல் பழம் தானாகத் தலையில் விழக் காத்திருப்பேன். போலிச் சமாதானம் செய்து கொள்ள அனுமதிக்கும் மனதை, செயலில் தீவிரம் காட்ட அனுமதிக்க மறுக்கிறேன். எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போல் எத்தனை பேர் இங்கே"//

உங்களைச் சொல்லிக் கொள்வது போல பெரும்பான்மையைச் சொல்லியிருக்கிறீர்கள்...நிச்சயம் நான் அந்த லிஸ்ட்டில் வருகிறேன். ஒரு அல்ப திருப்தி...(மனித பலவீனம்!) "அப்போ நம்மை மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போல..."

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, geetha santhanam, பத்மநாபன், ஸ்ரீராம், ...

கட்கிலி, கொட்கும் படித்து நானும் பயந்தேன் geetha. நசிகேதன் தயவில் நாலு தமிழ்ச்சொல் கத்துக்கலாமேன்னு தான்.

அப்பாதுரை சொன்னது…

மனிதம் அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய பயணம் என்பதில் எனக்கும் உடன்பாடு பத்மநாபன். அறிவிலக்கு எத்தகையது என்பது அவரவர் தகுதிக்கும் முயற்சிக்கும் ஏற்ப விளங்குமோ?

அப்பாதுரை சொன்னது…

சுவாரசியமான ஊற்றைத் தோண்டிவிட்டிருக்கீங்க ஸ்ரீராம்.

நானும் பெரும்பான்மையில் அடக்கம். சந்தேகமே இல்லை.

தன்னறிவு பெற்றவர்கள் என்று நான் நம்புகிற சிலரைப் பற்றி இன்னொரு பாடலின் தலையங்கத்தில் எழுதப் போகிறேன். அவர்கள் எல்லாருமே நம்மைப் போல், என்னைப் போல், பிறந்து வளர்ந்தவர்கள் என்பதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது - என் மேல். பணம் இனம் குணம் என்ற வேறுபாடுகளை விட்டுப் பார்த்தாலும் பிறப்பு வளர்ப்பினால் எனக்கும் அவர்களுக்கும் அதிக தூரமில்லை. இருந்தாலும் நான் எனக்குள் ஒரு வட்டத்தை வரைந்து உள்ளே நின்று வட்டமில்லாதிருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறேன். இது போல் உங்களுக்கும் சிலரைப் பற்றித் தோன்றியிருக்கலாம்.

எல்லோரும் எல்லாமும் பெற முடியாது, சாதிக்க முடியாது. அந்த வரையறைக்குள் - மிகப்பரந்த வரையறை - எல்லோரும் நிறையப் பெற முடியும், சாதிக்க முடியும். அதை அறிய மறுத்தது புரிந்தபோது வெட்கமாக இருந்தது. திருந்தினேனா என்றால் அதுதான் இல்லை! 'நேற்று இப்படிச் செய்திருக்கலாமே என்று இன்று எண்ணும் வழக்கம்' தொடர்ந்து வருவதே நான் திருந்தவில்லை என்பதற்கு அடையாளம்!

'x barriers' என்று பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி - நோர்மன் வின்சென்ட் பீல் மாதிரி யாரோ தொகுத்தது - பிரிடிஷ் அல்லது அமெரிக்க எம்பெசி நூலகங்களில் தொகுப்பு கிடைத்தால் பாருங்கள். சில பயிற்சிகளை நானும் செய்து பார்த்திருக்கிறேன். திறமையின் எல்லை இதுதான் என்று நினைக்கும் பொழுதெல்லாம் அந்த எல்லை அகண்டு போவதைக் கவனித்திருக்கிறேன். எல்லைக் கோடே இல்லை என்ற நிலையைப் பெற முடியும். சிலர் பெற்றிருக்கிறார்கள். நான் முயற்சி கூட செய்வதில்லை. என்னைப் போல் பலர் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. ஒருவேளை நீங்கள் சொல்வது போல் திருப்தி பட வேண்டுமோ என்னவோ?

சிவகுமாரன் சொன்னது…

\\தேடினால் தானே பதில் கிடைக்க வாய்ப்புண்டு? தேடும் எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறதே தவிர, தேடும் செயல் அல்ல. //
--நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். தேட விரும்புவதில்லை என்பதை விட தேடப் பயப்படுகிறோம் என்பதே உண்மை. தேடுதலின் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. எல்லோரும் வாழும் இயல்பான வாழ்க்கை வாய்த்தால் போதும் என்ற மனம் தேடுதலின் எதிரி.
--- சரியா அப்பாஜி ?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய அப்பாஜி!

ஆத்மாவைப் பற்றிய கருத்துக்களும் கேள்விகளும் ஆழ சிந்திக்க வேண்டியவன. தாம் கண்ட ஒரு காட்சியை, படித்த கவிதையை பிறர்க்கு எடுத்துக்கூறி புரிய வைக்கும் செய்கையாய் ஆத்மாவைக் கூற முற்படுவது அத்தனை எளிதானதல்ல.

கண்ணனின் மொழியில் பகவத் கீதை சுலோகம் ஒன்று

ஆஸ்சர்யவத் பஸ்யதி கஸ்சிதேநம்
ஆஸ்சர்யவத் வததி தாதைவா சாந்ய : I
ஆஸ்சர்யவச்சை நமந்ய : ஸ்ருனோதி
ஸிருத்வாப்யேநம் வேத ந சைவ கஸ்சித் II

1.யாரோ ஒரு மாமனிதன் மட்டுமே இந்த ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கிறான்.
2.அங்கனமே யாரோ ஒரு மகாபுருஷன் தான் இந்த தத்துவத்தை ஆச்சரியமாக வர்ணிக்கிறான்
3.மற்றொரு தகுதியுடையவன் ஆத்மா பற்றிக் கேட்கத் துணிகிறான்.
4.மேலும் வேறொருவன் அவ்விதமே கேட்டாலும் ஆத்மா குறித்து புரிந்துகொள்ளவே மாட்டான்.

1.புலன் வழியாக உணரும் புறஉலக பொருட்களை பார்ப்பது போல் ஆத்ம தரிசனம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தவனோ உணர்வதெல்லாம் பார்ப்பவன், பார்க்கப் படுவது, பார்க்கும் செயல் மூன்றும் அற்றுப்போய், தன்னையே பார்த்துக் கொள்கிறான்.

2. அப்படி ஆத்ம தரிசனம் பெற்றவன் கூட, எளிதில் அதை விண்டுரைக்க இயலாது. வேத நெறிநின்று, பரம்பொருளை உணர்ந்த ஞானியால் மட்டுமே அது இயலும். அதையும் ஒப்புஉவமை போன்றவற்றால் விளக்க இயலாது. அப்படி விளக்கப்படும் ஆத்மஞானம் நம் புரிதலின் எல்லைகள் தாண்டிய ஒரு ஆச்சரியமாக இருக்கும்.

3.மனம்மொழி மெய் வாக்கு இவற்றில் பரிசுத்தமுள்ள ஒருவன் இதைக் கேட்க அமைவதும் துர்லபம். அப்படிக் கேட்க வாய்ப்பமைந்த ஒருவன், இதுவரை சத்தியமாய் நம்பிக் கொண்டிருத்த கோட்டைகள் சரிய, சாஸ்வதம் என்று நம்பியவை அநித்தியமாக, பேருண்மையில் ஆழ்ந்து தன்வசம் இழக்கிறான்.

4.மனத்தூய்மை அற்றவனும், சித்தத்தில் சந்தேகமும், காமக் குரோதங்கள் நிறைந்தவனும், அசடனும் ஆத்மாவைப் புரிந்து கொள்வதென்பதுஇயலாது.

ஆத்மாவை பற்றி அலசி,ஆராய்ந்து, கிளிப்பிள்ளை போல் படித்ததைஃப் பகரும் நாடகம் மட்டுமே நாமெல்லாம் நடத்துவது. சூட்சமமான புலனறிவுக்கு அப்பாற்பட்ட இந்தப் பேருண்மை அறியும் தகுதி வாய்க்கும் காலம்.. தர்க்கங்களும், இரைச்சலும் ஓய்ந்து.. பேரானந்தப் பெருவெளியில்..... அவன் தன்னையே யாதுமாய்க் காண்பான்.


அதேசமயம் இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. விவேகானந்தர் சொன்னது போல் வாழ்வும் ஆன்மத் தேடலும் பொய்யிலிருந்து உண்மை நோக்கி செய்யும் பயணமல்ல.
அது உண்மையிலிருந்து பேருண்மை நோக்கிய பயணம்....

பத்மநாபன் சொன்னது…

அய்யா அய்தராபாத்தாரே... எங்கு வைத்திருந்தீர்கள் ..மடைதிறந்த வெள்ளமாய் ஆன்ம ஞானத்தை வழங்கிறீர்களே...

கீதை வடமொழியில்..பின் ஒவ்வோரு வரிகளில்..அதன் பின் சிறு சிறு பத்திகளில் என பொழிந்து விட்டீர்கள்...

ஒரு ஆற்றாமையை மட்டும் வெளிப்படுத்துகிறேன்...அந்த பெரும் நதி ஆழம் என்றும், இழுவை என்றும், குளிர்ச்சி என்றும் , குதிக்காமலேயே கரையில் குனிந்து இரு கை நீட்டி எத்தனித்து எத்தனித்து மடக்கி ... கொண்டே இருக்கிறோமா...

அப்பாதுரை சொன்னது…

நெற்றியில் அடித்தீர்கள் சிவகுமாரன். 'இயல்பான வாழ்க்கை போதும்' என்பது தேடுதலின் எதிரி. ஆகா!

'இயல்பான வாழ்க்கை என்பதன் விளக்கத்தை கணந்தோறும் மாற்றுவதாலும்' எனறு சேர்க்கலாமா?

சந்தோஷம் நிம்மதி இரண்டின் வேறுபாடு புரியாததால் 'சந்தோஷமே நிம்மதி, நிம்மதியே சந்தோஷம்' என்று குழம்பி அந்த டிஎன்ஏயை சுமந்து கொண்டிருக்கிறோம். அதனால் இயல்பின் இயல்பும் மாறிக் கொண்டே இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

வருக மோகன்ஜி. பிரமாதமான விளக்கம். பெரும்பாலானோர் கிளிப்பிள்ளைகளே. நீங்கள் சொல்லும் நாடக உவமையும் பிடித்திருக்கிறது. நன்றி.

ஒரு விதத்தில் வேறுபடுகிறேன். ஆன்மா எல்லோராலும் அறியக்கூடியதே. அறிந்தவர்கள் இருக்கிறார்கள். சிலருடன் பழகியிருக்கிறேன். ஆன்மா என்ற நுட்பத்தை கடவுள் என்ற கண்மூடித்தனத்தில் மறைத்து உயர்த்தி விட்டதால் மனிதம் அதை அறியத் தயங்குகிறது என்பது என் கருத்து.

அறிய விருப்பமுள்ளவர்களையும் 'உன்னால் அறிய முடியாது, அது கடவுளால் மட்டுமே முடியும்' என்று பொய்ப்பிரசாரம் செய்தக் காவிகளும் தாடிகளுமே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

வடமொழிக் கடோவின் சில இடங்களில், காவிதாடிகளின் பிற்சேர்க்கை என்று நினைக்கிறேன், ஆன்மாவை கடவுளுக்கு நிகராகவும் ஒரு சிலரால் மட்டுமே (கடவுளாக இருக்கும் பொருட்டில்) அறியமுடியும் என்கிறது. எங்கும் பரவி நிற்கும் ஆன்மாவுக்கு விஷ்ணுவின் 'விராட்' ரூப உவமைகள் தரப்பட்டிருக்கின்றன. ஆன்மாவை 'மகா புருஷன்' என்கிறது.

ஆன்மாவைப் பற்றியத் தன்னறிவு என்பது 'மனிதரில் மாணிக்கம்' எனும் நிலையடையச் செய்யும் மாண்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது - தன்னறிவு அடையக்கூடியது, அதனால் ஆன்மாவும் அடையக்கூடியதே என்று சொல்லலாம்.

ஆனால், காவிதாடிகளின் வாதம் எப்படிப்பட்டது? ஆன்மா அடைய முடியாது அதனால் தன்னறிவும் அடைய முடியாது என்று உல்டாப் படுத்திவிட்டார்கள். நாமும் மாடு போல் தலையாட்டி, தன்னறிவைத் தேடுவதை நிறுத்திவிட்டோம்.

'இவன் அறியாதவன். பிரம்மாண்டத்தைப் பத்திப் பேச இவனுக்கு என்ன தகுதி?' என்று ஆணவமாய்க் கைவீசும் கூட்டத்திடையே அறிவைத் தேடுவது - எத்தகைய அறிவானாலும் - எளிதல்ல. பிரம்மாண்டமாக இருந்து விட்டுப் போகிறது என அதனால் பாதிக்கப்படாமல் தேடினால் புலப்படும் என்று நினைக்கிறேன்.

வரலாறு இருக்கிறதே.. சூட்சுமமானது. உண்மைகளை விழுங்கியக் கடல் வரலாறு. சற்று ஆழ்ந்து படித்தால் நிறைய முத்தெடுக்கலாம். சங்கரர் போன்ற ஆன்மா அறிந்த மகான்களும் சாதாரண ஆசாமிகளாய் இருந்தவர்கள் என்பது வரலாற்றில் புதைந்திருக்கிறது. அதைப் புரிந்து கொண்டால் அவர்கள் அகழி தாண்டிய செய்கையின் உந்துதல், பின்னணியைப் புரிந்து கொள்ளலாம். பின்பற்றலாம். பின்பற்றுவோமா என்பதே கேள்வி. சங்கரராக முடியுமா என்பதல்ல கேள்வி. முடியும். சங்கரராகும் செயலைச் செய்வோமா என்பதே கேள்வி.

இரண்டாம் பகுதியின் இறுதிப்பாடலில் வருகிறது (கடோவின் வரிசையிலிருந்து மாறுபட்டிருக்கிறேன் :). 'யோவ்! ஆம்மா இப்படி அப்படினு உதார் உட்டுகினே போறியே? புடிக்ணும், புடிக்லாம், புட்ச்சாவனுன்றியேகன்டி அத்த எப்டி வல்சுப்புடிக்குறதுனு சொல்லாம ரூட்டு வுட்டுகினிருந்தா எபடி மாமூ?' என்கிறான் நசிகேதன். 'பட்டா டேய்! ஆம்மானா இன்னானு சொல்லிகினேன்; அது எங்ககிதுனு சொல்லிகினேன்; அத்த புடிக்க இன்னா செய்யணும்னு சொல்லிகினேன். அதுக்கு மேலே உனுக்கு இன்னா புட்சாந்து வாய்லயா வக்க சொல்றே? நீயே தான் புட்சிகணும். டௌசரு போட்டிகிறல்லே? போய்த் தேட்றா பேமானி" என்கிறான் எமன்.

பத்மநாபன், நீங்கள் வெளிப்படுத்திய ஆற்றாமை மிகச் சரி. நம்மால் முடியாது என்று நாமே போட்ட கோட்டைத் தாண்டிப் போக மனம் வராமல் தவிக்கிறோம் என்பதே என் கருத்தும்.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் அப்பாஜி!

/ஆன்மா எல்லோராலும் அறியக்கூடியதே. அறிந்தவர்கள் இருக்கிறார்கள். சிலருடன் பழகியிருக்கிறேன். ஆன்மா என்ற நுட்பத்தை கடவுள் என்ற கண்மூடித்தனத்தில் மறைத்து உயர்த்தி விட்டதால் மனிதம் அதை அறியத் தயங்குகிறது என்பது என் கருத்து. /
எவரெஸ்ட் சிகரம், கூட எட்டிப்பார்க்கக் கூடியதே.. எட்டிப் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அந்த உச்சியிலிருந்து உலகைப் பார்க்கும் அனுபவத்தை, இன்னொருவருக்கு விளக்கமுற்படுவதைப் போன்ற கடினமானதுஆன்மவிளக்கம் , என்பதே உண்மை. எவரெஸ்ட் சிகரம் அடைவது எத்துணை பிரயாசையும், தியாகமும் செய்து மேற்கொள்ள வேண்டிய பயணம்.? ஆன்மத்தேடலும் அப்படிப் பட்டதே.

’இழும்’ என விழும் அருவியைத் தாங்க மண்குடம் போதாது. ‘பொங்குமாங்கடல்’ போன்ற பெரும்பள்ளம் வேண்டும் என்பதே நான் குறிப்பிட்ட கீதையின் சாரம்..
அதற்கான கடும் உழைப்பையும் காலத்தையும் தர நாம் தயாரா என்பதே கேள்வி.

ஆன்மாவை அடைவது இயலவே இயலாது என்பது அல்ல. அதற்கு பெரும் விடாமுயற்சியும், முனைப்பும், சரியாக வழிநடத்த குருவும் தேவை. அவை அமையும் வாய்ப்பு அனைவருக்கும் இருப்பதில்லை.

// 'உன்னால் அறிய முடியாது, அது கடவுளால் மட்டுமே முடியும்' என்று பொய்ப்பிரசாரம் செய்தக் காவிகளும் தாடிகளுமே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.//

இந்த விபத்து அத்துணை துறைகளிலும் நடக்கிறது. அதுவும் ஆன்மீகத்தில் காலம் காலமாய் இத்தகு மடைமாற்றங்கள் சில குழுக்களாலும், வஞ்சகர்களாலும் நடந்தேறியே வந்திருக்கின்றன. இருந்தபோதிலும், விடாத தேடலும், ஆன்மதரிசனம் காண கொழுந்து விட்டு எரியும் வேட்கையும்,விழிப்பும் கொண்டோர் காலம்காலமாய் ஆன்மவிழிப்பு எய்தியிருக்கிறார்கள்.

மாறாக வேதாந்தமோ, அனைவரும் தன்னறிவு எய்தி ஆத்மனை உணர வேண்டும் என்றே சொல்கிறது.

ஈஸாஉபநிஷதத்தில் ஒரு ஸ்லோகத்திற்கு விளக்கம் அளிக்கும் ஆதிசங்கரர் சொல்வது...
“ என்றும் உடனிருக்கும் ஆத்மாவைப் பற்றி அறியாமல்
அஞ்ஞானத்தாலும், ஆன்மீகக் குருட்டுத்தன்மையாலும் இழியும் மானிடர் நிலைமை தற்கொலைக்கு ஒப்பானது” என்கிறார்.

ஆக இடைச்செறுகல்களுக்கு மதிப்பளித்து, தேடலை நிறுத்த வேண்டாம்.
எங்கோ படித்து, நினைவில் குடைந்து கொண்டேயிருக்கும் ஒரு ரசமான கருத்தைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

‘பனிக்கட்டி’யை சூடேற்றினால், அது ‘நீரா’ய் மாறுகிறது.
மேலும் சூடேற்ற ‘நீராவி’யாய் வெளியேறுகிறது. பனிக்கட்டிக்கு அதன் திடத் தன்மையால் நகர்ந்து செல்வது கடினம். ஆசாபாசங்களிலும், லோகாயத சிந்தனைகளிலும் கெட்டிபட்ட உள்ளம் தன்னிறைவு நோக்கி நகர்வது அசாத்தியம். அவற்றை தேடலும் வைராக்கியமும் சூடேற்றசூடேற்ற ,நீராய் மாறி நகர முற்படுவது சாத்தியமாகிறது.. அந்நிலையில், ஞானத்தீயில் மேலும்மேலும் கொதிக்கும் போது நீராவியாகி மேல்நோக்கி லகுவாய் செல்கிறது. எல்லைகள் கடந்து, நுட்பமாய் எங்கும் வியாபிக்கும் தன்மை அடைகிறது. ஆன்மதரிசனம் சாத்தியமாகிறது.

இதுவரை இல்லாத ஒன்றைப் பெறுவதற்கு, இதுவரை செய்யாத ஒன்றை செய்தாக வேண்டும். ஆன்மா தரிசனம் சர்வ நிச்சயமாய்க் காத்திருக்கிறது. இதுவரை முயலாத ஒன்றை முயல நாம் தயாரா?

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் ! உங்கள் கேள்விக்கு மேற்கண்ட பதிலும் பொருந்தும்..

அப்பாஜியின் பதிவில் ஒன்றை கவனித்தீர்களா?
//நாடினேன் தந்தது, வாசலில் நின்றது, வாழ வா என்றது, தேடினேன் வந்தது..' - கண்ணதாசன் ]//
இந்தப் பாடலைப் பாடும் போது கே.ஆர்.விஜயாக்கா ஃபிட்ஸ் வந்தாற்போல் உதறிஉதறி ஆடும் நடனத்தின் நினைவு வருகிறதா? அதன் சூட்சமம் புரிகிறதா உங்களுக்கு ?
எல்லாப் பற்றுகளையும் இதுபோல் உதறுஉதறு என்று நம்மைக் கடைத்தேற்ற ஆடப்பெற்ற ஞானப் பெரும்தாண்டவம்... சும்மாவா தெரிவு செய்வார் அப்பாஜி?!

3 ஜூலை, 2011 11:03 am

அப்பாதுரை சொன்னது…

நானும் பிட்ஸ் வந்தாப்புல விழுந்து விழுந்து சிரிக்கிறேன், மோகன்ஜி.

பத்மநாபன் சொன்னது…

எனக்கும் ஃபிட்ஸ் வரவேச்சிட்டிங்களே மோகன்ஜி... உங்க கிளாஸில் இப்படியெல்லாம் வெடிச்சிரிப்பு போட்டிங்கன்னா அடங்கறங்க்கு வெகு நேரம் ஆகுமே....

பத்மநாபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பத்மநாபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பத்மநாபன் சொன்னது…

அண்ணாத்தே திடீர்ன்னு எதுக்கு மெட்ராஸ் பாஷைக்கு போனார்ன்னு எனக்கு புரிஞ்சுது ....உங்களுக்கு மோகன்ஜி ?

மோகன்ஜி சொன்னது…

என்கு மெய்யாலும் இன்னாத்துக்கு ரூட்டு மாத்திக்கினார்னு பிரீல.. ஒங்கைல எதுனா சொன்னாரா தொர?

பத்மநாபன் சொன்னது…

நீங்க விஜயாக்கா பாட்டை தத்துவத்துல எப்படி ஃபிட் பண்ணுனிங்களோ அப்படியே இந்தபாசை மாற்றத்துல ஒரு தத்துவத்தை புடிச்சேன்...

பண்டிதனுக்குத்தான் ஞானம் என்பது இல்லை பாமரனுக்கும் காத்திருக்குன்னு பாசையை மாத்தி புரிய வைக்கிறாரு..

அப்பாதுரை சொன்னது…

ஞான ஒளின்றதே இப்பத்தான் புரியுது. பின்றீங்க பத்மநாபன்.

அப்பாதுரை சொன்னது…

'பொங்குமாங்கடல்' உவமையை இன்னுமிருமுறை படிக்கலாம் மோகன்ஜி. அருமை.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! We are blievers with the core doubt in the existance of God. And we are non blievers with the core fear to declare that there is no God. ஐயா! நம்முடைய தத்துவ விசாரணையும் அந்த லட்சணத்தில்தான் இருக்கும் .வாழ்துக்களுடன் ---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

உண்மை காஸ்யபன் ஐயா. அதற்கு என்ன காரணம் என்று நானும் நிறைய யோசித்திருக்கிறேன். கடவுள் உண்டு என்பது எத்தனை கண்மூடித்தனமோ, கடவுள் இல்லை என்பதும் அத்தனை கண்மூடித்தனமே என்று நினைக்கிறேன். 'படைத்ததனால் உண்டு' என்னும் கட்சியின் கண்மூடித்தனத்தை விட 'உடைத்ததால் இல்லை' என்ற கட்சியின் கண்மூடித்தனம் அப்படியொன்றும் குறையவில்லை என்று தோன்றுகிறது.

கடவுள் இல்லை என்ற கட்சியின் அறைகுறை அறிவும், அவசரமான postureம் அது என்று நினைக்கிறேன். கடவுள் இல்லை என்று வாதம் செய்வதை விட கடவுள் தேவையில்லை என்ற வாதம் புத்திசாலித்தனமானது, மெய்ப்பிக்கக் கூடியது, பொய் குறைந்தது (அதாவது statistically valid:).

'கடவுள் உண்டா' என்று பிள்ளை கேட்கும் பொழுது தந்தையோ தாயோ என்றைக்கு "எனக்கு உண்மையில் தெரியாது குழந்தாய்; பச்சைப் பிள்ளையான உன்னிடம் பொய் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய அப்பா அம்மா தாத்தா பாட்டி காலத்திலிருந்து உண்டு என்று சொல்லி வந்ததால் நானும் அப்படி நம்பினேன். உனக்கு நம்பிக்கை இருந்தால் நீ நம்பலாம்" என்று கற்பனையும் பயமும் கலக்காத தெளிவோடு சொல்கிறார்களோ - அன்றைக்கு மாறுதலின் விதை துளிர்த்தெழும்.

மேலும், கடவுள் உண்டு என்ற நம்பிக்கையில் 'பழி சுமத்தும்' ஒரு வசதி இருக்கிறது. 'பாரத்தை போடு' என்று சர்க்கரை பூசப்பட்ட வசதி.

'உண்டு இல்லை' என்ற விவாதத்தில் தத்துவ விசாரணையை சேர்ப்பதும் ஒருவகையில் unfortunate; காரணம் கடவுளும் ஒரு தத்துவம் என்று சேற்றை எல்லா இடத்திலும் கலந்தது தான். இதில் சிந்திக்கச் சொல்ல வேண்டுமென்றால் 'இல்லை' எனும் கட்சியினரைத் தான் என்று தோன்றுகிறது.

ஐந்தாயிரம் வருடத்துக் கண்மூடித்தனம் (இரு தரப்பிலும்) எளிதில் மாறுமா? இன்னும் நூறு வருடங்களில் கடவுள் பற்றிய சமூகக் கண்ணோட்டத்துடனான சட்டம் வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

கடவுள் கண்மூடித்தனத்தை விடுங்கள். கம்பன் சொன்னான் பாரதி சொன்னான் என்று 'ன்' விகுதி சேர்த்தால் 'கெட்டது குடி' என்று ஒருவர் தி. சுசீலாவின் பதிவில் புலம்பியிருக்கிறார். அவருக்கு புலம்பும் உரிமையுண்டு; படிக்கும் எனக்கு? மொட்டையடித்துக் கொண்டு முள்சுவரில் முட்டிக் கொள்ளும் உரிமையையைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. (மொட்டை அடிக்க நேரமாகாது என்பது ஒரு ஆறுதல்:)

ஸ்ரீராம். சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.