வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/29

நிலையாக நின்றான் நசிகேதன்


37
மண்ணிலே தேடும் தனமெல்லாம் மூடிய
கண்ணிலே ஓடும் கனவாகும் - நண்ணி
ஒளிக்குள்ளே போந்தார் இருளோம்பார் ஆம்போல்
வெளிக்குள்ளே போந்தார் வளி.

    லகில் செல்வங்களைச் சேர்ப்பது, உறக்கத்தில் காணும் கனவு போன்றது. ஒளியான இடத்தை விரும்பியவர்கள் இருளைச் சிறப்பாகக் கருதுவதில்லை; அது போல, எல்லாம் அடங்கிய வெளிக்குள் விரும்பிப் புகுந்தவர்கள், காற்றைச் சிறப்பாகக் கருதுவதில்லை (என்றான் நசிகேதன்).

நண்ணி: விரும்பி
வெளி: அண்டம்
வளி: காற்று
வெளியும் வளியும் முறையே ஐம்புலன் கடந்த நிலையையும் மூச்சையும் குறிப்பன.



    subtext என்று ஒரு உரையாடல் உத்தி. சொல்லும் பொருளும் பிரிந்திருப்பது போல் ஒரு மாயையை உண்டாக்கும், குறிப்பால் உணர்த்தும், நுட்பம். அறிவில் சிறந்தவர்களிடையே வீண் கோபங்கள் குறுக்கிட்டுப் பேச்சு வார்த்தையைத் திசை திருப்பாதிருக்கக் கடைபிடிக்கப்படும் உத்தி. நேரிடையாகச் சொல்வதனால் உண்டாகக் கூடிய தாக்கத்தைத் தணிப்பது. காதலருக்கு இயல்பாக வருவது :). அவசியம் பழக வேண்டிய நுட்பம்.

    வெளிக்குள் வளி அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது சிரமமென்றாலும் முடியும். ஒளிக்குள் இருள் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது இன்னும் கடினம். ஒளியும் இருளும் ஒரே வட்டத்தின் பகுதிகள் (வட்டவில்?). இருள்-ஒளி போன்றதே பிறப்பும் இறப்பும். இருளும் ஒளியும் எதற்குள் அடங்கியிருக்கின்றன? பிறப்பும் இறப்பும் எதற்குள் அடக்கம்? சற்றே ஆழமான நுட்பங்கள். இங்கே அறிமுகம் செய்து கொண்டு, பின்னொரு பகுதியில் பழகுவோம். எதிர் நிலைகளை அறிந்து சாராது இயங்க வேண்டும் என்பது கடோவின் பிற பகுதிகளின் சாரம்.

    'அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன்' என்று ஆசை காட்டிய எமன், தொனியை மாற்றி, 'பிடிவாதம் விடு' என்றதைக் கவனித்தான் நசிகேதன். எமனின் பிடிப்பு தளர்வதைப் புரிந்து கொண்டான். எமனின் எரிச்சலைத் தணிக்க வேண்டும், அதே நேரம், தான் இன்னும் உறுதியாக இருப்பதையும் உணர்த்த வேண்டும். 'நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என் நிலை மாறாது' என்று சொல்வது ஒரு வழி. "நான் கேட்டது மரண அறிவு; எத்தனை முறை சொல்வது? நான் கேட்டதைக் கொடுக்க முடியுமா முடியாதா? முடியாவிட்டால் சொல், அதை விட்டு பிடிவாதம் கிளிப்பிள்ளை என்று தனித் தாக்குதல் தேவையில்லை" என்று நசிகேதன் பதில் சொல்லியிருக்கலாம். 'என் நிலை மாறாதிருக்க காரணங்கள் உண்டு' என்று சொல்வது இன்னொரு வழி. காரணங்களை எடுத்துச் சொல்லிக் காரியத்தைப் புரிய வைக்க முனைந்தது, எமன் மேல் நசிகேதன் வைத்திருந்த மதிப்பை உணர்த்தும் செயல். தான் மெய்யறிவை விரும்புவது எதனால் என்பதை எடுத்துக் காட்டினான். நசிகேதனுக்கே அறிவு தரவேண்டியவனென்றால் எமனிடம் இல்லாத அறிவா? அதனால் 'கொடுப்பாயா மாட்டாயா?' என்று சிறுபிள்ளை போல் கேட்காமல், 'ஐயா, கொடுக்காமல் போனால் அது உங்கள் விருப்பம்; ஆனால் சிறகை விரும்பும் எனக்கு நடைவண்டியில் விருப்பம் இல்லை' என்று எமனே புரிந்து கொள்ளும் விதத்தில் குறிப்பாகவும் தெளிவாகவும் மென்மையாகவும் வலியுறுத்தியும் சொன்னான். படியாத வயதல்ல, அறிவைப் பெறும் முதிர்ச்சி தன்னிடம் உள்ளது என்பதையும் குறிப்பால் விளக்கினான்.

    "ஐயா, உறக்கத்திலே நல்ல கனவொன்றைக் காண்கிறோம். உறங்கும் நேரம் அது கனவென்று தோன்றுவதேயில்லை. உலக வாழ்வில் அடையும் இன்பங்களும் செல்வங்களும் அத்தகையதே. விழித்ததும் கனவுகள் கலைந்து விடுகின்றன. எத்தனை இனிய கனவானாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. அதே போல் சேர்த்த செல்வங்களும் அடைந்த இன்பங்களும் ஒரு நாள் பயனற்றுப் போகின்றன. மூச்சடக்கி மூட்டும் தீ என்று சொன்னீர்களே? மூச்சைக் கட்டி தன்னறிவு பெற வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்? நீங்கள் ஆசை காட்டும் பொன்னும் பொருளும் மூசசைப் பெருக்க ஏதுவாகுமே? இந்த ஆசைகள் என்னைக் கட்டிப் போடுமே? நான் ஆசைகளைக் கட்டிப் போட அல்லவா விரும்புகிறேன்?" என்றான். 'செல்வங்கள் வேண்டாம்' என்று சொல்லவில்லை நசிகேதன். 'சிறந்த செல்வம் ஒன்று உண்டு - மெய்யறிவு - அது வேண்டும்' என்றான்.

    செல்வங்களைச் சேர்ப்பதால் யாரும் நெறி தவறவில்லை; செல்வங்களைப் புறக்கணிப்பதால் நெறி பேணவும் இல்லை. நிலையில்லாத செல்வங்களை தேடி, நிலையான உண்மையான செல்வமான மெய்யறிவைப் பெறவில்லையென்றால் பிற செல்வங்களினால் எந்தப் பயனும் இல்லை என்பதே நசிகேதன் சொன்ன கருத்து. கனவு இதமாக இருக்கின்றதே என்று தொடர்வதில் பயனுண்டா? மெய்யறிவு பெறுவதே உண்மையான விழிப்பு என்பது நசிகேதனுக்குப் புரிந்தது. தான் விரும்புவது உண்மையான விழிப்பு என்பதைக் குறிப்பாகச் சொன்னான்.

    "ஐயா, ஒளியை விரும்பி ஏற்றவர்கள் இருளுக்குத் திரும்ப எண்ணுவதில்லை. மெய்யறிவு ஒளி போன்றது. பிற செல்வங்கள் இருளுக்கு ஒப்பானவை" என்றான். தனக்குத் தேவை ஒளி என்பதை மென்மையாக வலியுறுத்தினான். இதில் என்ன subtext? 'வேண்டாம் என்பதில் ஆணவமோ, வேண்டும் என்பதில் பிடிவாதமோ இல்லை' என்பதே அவன் சொன்ன குறிப்பு. தேவையைக் கேட்பது பிடிவாதமா?

    எல்லாம் அடங்கிய நிலை இருக்கையில், ஒரு பகுதியை விரும்பி என்ன பயன்? ஐம்பொறிகளும் அடங்கிய வெளி அண்டம். ஐம்புலனும் அடங்கிய வெளி ஆன்மா. வளி என்பது இங்கே வாழ்வதற்கு இன்றியமையாத மூச்சுக்காற்றை குறிக்கிறது. "ஆன்மாவை அறிய முற்படும் எனக்கு வாழ்வின் சாதாரண இனிமைகள் பொருட்டல்ல" என்றான் நசிகேதன். தான் விரும்புவது, ஆன்மாவைப் பற்றிய அறிவே என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினான்.

28 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

/மூடிய கண்ணிலே ஓடும் கனவாகும்/
கருத்தின் கனம் மீறி தவழும் அழகு வரி..
செல்வம் சேர்க்கும் பெருவிளையாட்டில் வாழ்க்கை தொலைந்து போகிறது.
குசேலோபாக்கியானத்தை தேவராசப் பிள்ளை தமிழில் கண்டார். செல்வம் விளைக்கும் விபரீதத்தை அழகான பாடலில் சொன்னதை இங்கு தருகிறேன்

செல்வம்வந் துற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார்
சொல்வன அறிந்து சொல்லார்
சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவ தல்லால்
வெம்பகை வலிதென்று எண்ணார்
வல்வினை விளைவை ஓரார்
மண்ணின்மேல் வாழும் மாந்தர்.

செல்வம் தேவையில்லை என்பதன்று. அதன் தேடலில் வாழ்வின் இனிமையை தொலைக்காதிருக்கலாம் அல்லவா?

ஒளியும் இருளும், வாழ்வும் இறப்பும் எல்லாம் புரிந்து கொள்ள ஒரே பார்முலாதான். ஒளி இல்லாத நிலையே இருளாகிறது. இல்லாத ஒளி ‘இருட்டு’ இதுகூட subtext தானோ.?

உமது நசிகேத வெண்பாவுக்கு என்னைத் தயார் படுத்திக் கொண்டுவிட்டேன் என்றே தோன்றுகிறது! முற்றுமாக உங்கள் உத்தியை ஸ்வீகரித்தாயிற்று. இதன் subtext என்னவெனில் நான் துய்த்த ‘கடோ’வை, இணையாக பொருத்திக் கொண்டே வருவதை நிறுத்திவிட்டேன்.

தாயின் சமையலுக்கு பழகிய நாக்கு.. சம்சாரத்தின் கைப் பக்குவத்துக்கும் மாறிக் கொள்வதில்லையா? அதுபோலத்தான்..!!
ஆகவே என் அன்பு மனைவியே! உன் சமையல் கூட எனக்கு இதமே...

இன்னும் கொஞ்சம் சொல்வேன்.. கொஞ்ச நேரம் கழித்து..

பத்மநாபன் சொன்னது…

subtext புதிய யுக்தி யாக இருக்கிறது..ரத்தம் வராமல் குத்தும் யுக்தி.... பிரமாண்டத்தை உணரும் வேட்கையில் இருப்பவனுக்கு அண்டமே சிறியது எமன் பிண்டத்தைக் (மிகச்சிறிய-அற்ப )காட்டி தட்டிகழிக்க, நசிகேதனின் தொடர்பிடிவாதம் பல விளக்கங்களை வெளிக்கொணர்கிறது...

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கு நன்றி மோகன்ஜி, பத்மநாபன், ...

அப்பாதுரை சொன்னது…

subtext உத்தி இப்போதெல்லாம் இரட்டை அர்த்த சினிமா வசனமாகி விட்டது பத்மநாபன். social form of the art may be dead.

இந்திரா காந்தி, காமராஜ் இவர்களெல்லாம் subtext வித்தகர்கள் என்று படித்திருக்கிறேன். "என்ன சௌக்கியமா?" என்று இந்திரா காந்தி புன்னகையோடு கேட்டால் அர்த்தமே வேறே என்பார்கள் - உண்மையா தெரியாது. ஏதோ ஒரு தொகுதிச் சுற்றுப்பயணத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனேகமாக பிள்ளைகளே இருந்ததைப் பார்த்த காமராஜ், "இந்தப் பிள்ளைங்களுக்கு புத்தகமும் கொடுங்கனேன்" என்றாராம். அடுத்த மாதம் போல் பள்ளிக்கூடங்களில் பகலுணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதாம். "படிக்க வேண்டிய நேரத்தில் சாப்பிட வரிசை கட்டி நிற்கிறார்களே ஏழைப் பிள்ளைகள் - இந்த நிலையை மாற்ற வேண்டும்" என்பது அவருடைய subtext. அதைவிட்டு, "என்னய்யா இது, ஒரே பிள்ளைகளா இருக்கு?" என்று பேசியிருந்தால் விவகாரமே வேறு விதமாக இருந்திருக்கும். இதையே எம்ஜிஆர் பரவலாக அமல்படுத்த முனைந்ததையும் subtext விவகாரம் என்பார்கள். சினிமாக் காரராச்சே - subtext புரியாமலா இருக்கும்? எம்ஜிஆர் 'கணக்கு' கேட்டதே subtext என்பார்கள். (அரசியல்.. அரசியல்.. விலகுவோம்.)

அப்பாதுரை சொன்னது…

அழகான பாடல், மோகன்ஜி.

ஒளி இருள் பார்முலா யோசிக்க வைக்கிறது. ஒளி இல்லாத நிலை இருள் எனலாம்; இருளும் ஒளியே என்றும் சொல்லலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். 'இருளும் ஒளியே' பார்வை என்னுடையது. இதற்கு இயற்கையான ஆதாரங்கள் நிறைய சொல்லலாம். காட்சி என்கிற physical manifestationக்கு கண்கள் என்கிற physical propertyயை வைத்து ஒளி இருள் என்று பாகுபாடு செய்திருக்கிறோம். ஒளியான இடத்தில் கண்ணை மூடினாலும் இருளைக் கொண்டு வர முடியும். இருளான இடத்தில் கண்ணைத் திறந்தும் காண முடியும். ஒளியான இடத்தில் கண்ணைத் திறந்தும் காண முடியாமல் போகலாம். காட்சியை வைத்து ஒளி இருள் பாகுபாட்டையும், ஒளி இருளை வைத்து காட்சியையும் அறியும் வரை இந்த முரண் இருக்கும். காட்சியையும் எடுக்காமல் இருக்க முடியாது - பிறகு ஒளி இருள் தேவையில்லையே? இதையே கொஞ்சம் metaphysicalஆகப் புரட்டிப் போட்டு பிறப்பு இறப்பு வாழ்வு என்று பார்க்கலாம். பிறப்பில் இறப்பு அடக்கம், அல்லது இறப்பில் பிறப்பு அடக்கம் என்று தோண்டிப் பார்க்கலாம். சிலிர்க்க வைக்கும் உண்மைகள் தோன்றும் என்று நம்புகிறேன் - என் அனுபவத்தில்.

மோகன்ஜி சொன்னது…

அருமையான விளக்கம் அப்பாஜி! கால தேச வர்த்தமானம் கருதி
எதிர்மறையாய்த் தோன்றுபவை யாவுமே ஒன்றாயும் பிரிதொன்றாயும் வெளிபடுகின்றது போலல்லவா இருக்கிறது? இரவில் காணும்
நட்சத்திரங்கள் பகலில் தென்படுவதில்லை.
சுற்றிசுற்றி 'மரத்தில் மறைந்தது மாமதயானை' என்று அடுத்த நிலை வந்துவிடுகிறது.இது ஆழ்ந்து விவாதிக்க ஏற்றதொரு விஷயம்.. நல்லதொரு கருத்தை அம்பலமேற்றி இருக்கிறீர்கள். இன்னும் விவாதிக்கலாம்.

அப்பாதுரை சொன்னது…

மரத்தில் மறைந்தது மாமத யானை - மறந்து விட்டது, மோகன்ஜி.

(ஆமா.. அன்பு மனைவின்றீங்க.. சமையல்ன்றீங்க.. அவ்ளோ தானா? மையல் கிடையாதா?)

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சாரே!
திருமந்திரத்தில் ஒரு பிரபலமான பாடல் அது.. உங்களுக்கு நினைவூட்ட இதோ அது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
பொருள் : மரத்தால் செய்யப்பட்டிருந்தது அச்சு அசலாய் ஒரு யானை சிலை. அது யானை என்றெண்ணி பார்த்தவர்களுக்கு அது மரம் எனத் தோன்றாது. அதையே மரமாய்க் கருதி நோக்க அது யானை என்று நினைக்கத் தோன்றாது. இரண்டும் ஒன்றே.. அவரவர் கண்ணோட்டத்தில் வேறுவேறாகத் தோன்றும். அதேபோல் பரம்பொருளும் பஞ்சபூதங்கலாளான இவ்வுலகமும் ஒன்றே.

/ஆமா.. அன்பு மனைவின்றீங்க.. சமையல்ன்றீங்க.. அவ்ளோ தானா? மையல் கிடையாதா?/
தல! ஒரு ப்ளோல சொல்லிட்டேன்.. உங்க கேள்வியப் பார்த்துட்டு ஆர்.வீ.எஸ் ‘அவனா நீயி?’ ன்னு ரவுசு பண்ணத்தான் போறாரு! ஆனானப் பட்ட மகாத்மா காந்தியே இப்போ படாதபாடு பட்டுகிட்டிருக்காரு! மையலாமே? மையல்? மரத்தை பார்க்கச் சொன்னா மதயானையை பாத்துகிட்டு!

பத்மநாபன் சொன்னது…

நன்றாக இருந்தது அப்பாதுரை..subtext தலைவர்களுக்கு இருக்கும் பெரும் தகுதி போல இருக்கு ....காமராஜர் எம்.ஜி .ஆர் கையாண்ட விதம் நன்றாக இருந்து ... பெரும்பாலும் நன்மைக்கே பயன் படுத்தினார்கள் ... இப்பொழுது பொய்ப் புலவர்களாக இருக்கிறார்கள் ...

பத்மநாபன் சொன்னது…

மோகன்ஜி .... மரத்தை மரத்தில் ...பரத்தை பரத்தில் ..... மறைத்தது மறைந்தது ...திருமந்திர தமிழ்த் திருவிளையாட்டை சரியாக எடுத்து போட்டிருக்கிறிர்கள்...

அப்பாதுரை சொன்னது…

திருமந்திரமா.. நன்றி மோகன்ஜி. மரத்தில் மறைந்தது மாமத யானை எனக்கென்னவோ சூனிய பாஷை போலத் தோணுதுங்க..
சூபான்னதும் நினைவுக்கு வருது - சென்னைப்பித்தன் சுவாரசியமா எழுதுறாரு இங்கே.

அப்பாதுரை சொன்னது…

அட! அவரும் திருமந்திரப் பாட்டு எழுதியிருக்காரு..

RVS சொன்னது…

அப்பாஜி! திருமந்திரம் எழுதறது மதுரை சொக்கன். சென்னைப் பித்தன் இல்லை.
மையல்ன்னு நீங்க சொன்னா மோகன்ஜி அண்ணா என்னை வம்புக்கு இழுக்கறார் பாருங்கோ...
இந்த 'வம்பு'ங்கற வார்த்தையை subtext-ஆ வச்சு வைரமுத்து 'வில்லோடு வா நிலவே' ங்கற கவிதைக் கதை புஸ்தகத்தில் வம்பா எழுதியிருப்பார்.
(இந்த கமேன்ட்டுக்காக நசிகேதன் என்னை மன்னிக்கக் கடவது..... ;-)) )

RVS சொன்னது…

சென்னைப் பித்தனும் அவரே.. மதுரை சொக்கனும் அவரே.. கண்டுகொண்டேன்... ;-)

அப்பாதுரை சொன்னது…

நன்றி RVS.. காதலுக்கும் மோதலுக்கும் subtext ரொம்ப ஒத்துவரும். சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. கடைசியில.. மையல்காரரை சமையல்கட்டோடு நிக்க வைக்க வேண்டியது தான்றீங்க.. சரி.

சூன்ய பாஷைனு சொல்றது தான் subtextஓ? வேறே ஏதாவது அழகான வழக்கு இருந்தால் நல்லா இருக்கும்.

அப்பாதுரை சொன்னது…

RVS..வைரமுத்துவின் கவிதைகளில் சில சமயம் இருபொருள் தொனிக்குமே தவிர அவர் subtext எழுதி நான் படித்ததில்லை. வம்பு புத்தகத்தைப் படித்துப் பார்க்கிறேன், நன்றி.

இருபொருள் மறைபொருள் உறைபொருள் மூணுத்துக்கும் வித்தியாசம் உண்டு. உறைபொருள் (புதைபொருள்) subtextக்கு அருகில் வரும் என்று தோன்றுகிறது. உறைபொருளோடு தமிழில் எழுதுவோர் மிகக் குறைவு (நான் படிச்சதும் ரொம்பக் கம்மி). இன்னொன்று: இருபொருளை ரசிக்க முடியும், மறைபொருளைச் சுவைக்க முடியும், உறைபொருளை அனுபவிக்கத்தான் முடியும். 'பாறையிலுற்ற பறக்கின்ற சீலை' எனும் திருமந்திர வரிக்கு யோசிக்க யோசிக்க பொருள் வரும்; கடைசியில் பாறையும் இல்லை, சீலையும் இல்லை என்று புரிந்ததும் பிரமிப்பாக இருக்கும்.

உறைபொருளை அனுபவிக்க நேரமும் பொறுமையும் வேண்டும், + யோசிக்கணும். (இந்த நாளில் முடியுற காரியமா)

பொதுவா உறைபொருளோடு எழுதியவர்கள் கடவுள் வேதாந்தம் என்றே எழுதியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை அது தான் உறை பொருள் என்று நினைத்தார்களோ!

Santhini சொன்னது…

மதுரை சொக்கன் அவர்களின் வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி.

Santhini சொன்னது…

மனைவி, சமையல் , மையல் என்று என்னென்னவோ நடக்கிறது. :)
நடத்துங்கள். நடத்துங்கள். அதுவும் இந்த நேரம் பார்த்து மோகன்ஜி....மாட்டிக்கொண்டிருக்கிறார்.
--

Santhini சொன்னது…

உறைகின்ற பொருளை அறிந்திருந்தால்தானே அனுபவிக்கவும் முடியும்?
அறிவோர் குறைவு என்பதால் எழுதப்பட்டதும் குறைவோ என்னவோ ?
குறியீடுகளால் ஆக்கப்பட்ட ஆக்கங்கள், உறையும் பொருளையே பேசுகின்றன, என நினைக்கிறேன்.
உறையும் பொருள் ----எதுதான் அது ?

Santhini சொன்னது…

தற்காலிகமாக விடைபெறுகிறேன்.
மீண்டும் சந்திப்போம், அப்பாதுரை.

சிவகுமாரன் சொன்னது…

ஒடம்பு எப்படி இருக்கு? - இது subtext ஆ?
மோகன்ஜியின் திருமந்திர பிரயோகம் அருமை.

meenakshi சொன்னது…

வெண்பாவும், விளக்கமும், பின்னூட்டங்களும் வெகு சுவாரசியமாய் இருக்கின்றன.
மரத்தில் மறைந்தது மாமதயானை. கதையாக கேட்டிருக்கிறேன் இதை. அருமையாக இருக்கும். நினைவு படுத்தியதற்கு நன்றி மோகன்ஜி.
//ஒளியான இடத்தில் கண்ணைத் திறந்தும் காண முடியாமல் போகலாம். காட்சியை வைத்து ஒளி இருள் பாகுபாட்டையும், ஒளி இருளை வைத்து காட்சியையும் அறியும் வரை இந்த முரண் இருக்கும். காட்சியையும் எடுக்காமல் இருக்க முடியாது - பிறகு ஒளி இருள் தேவையில்லையே?//
அருமை அப்பாதுரை! இருளும், ஒளியும் பற்றிய விளக்கங்களை மிகவும் ரசித்து படித்தேன்.

meenakshi சொன்னது…

குசேலோபாக்கியானம், திருமந்திரம்.... ஆஹா! கலக்கறீங்க மோகன்ஜி! உங்கள் தமிழ் மொழி வளமும், ஆர்வமும் மிகவும் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்!

அப்பாதுரை சொன்னது…

வருக Nanum enn Kadavulum, சிவகுமாரன், meenakshi, ...

அப்பாதுரை சொன்னது…

அறிவோர் குறைவென்பதால் எழுதப்பட்டதும் குறைவு - சரியே. மீண்டும் அவசியம் சந்திப்போம். நன்றி Nanum.

அப்பாதுரை சொன்னது…

கேள்வி subtextஆ தெரியாது சிவகுமாரன், "உடம்புக்கென்ன, கூடவே வருது" என்று பதில் வந்தால் அது நிச்சயம் subtext.

அப்பாதுரை சொன்னது…

மாமத யானைக்கதை கேட்டதில்லையே meenakshi?

meenakshi சொன்னது…

இது எனக்கு கோவிலில் தேவாரம் ஓதும் ஒரு பெரியவர் சொன்னது.