20
முன்சொன்ன மாண்பு மகப்பலனாம் மாலையும்
இன்னொன்று தந்தால் இதுதாரும் - என்னிலையில்
பூமியிற் சென்றுநான் பேறுறச் சொல்லுவீர்
மீமிசை வேள்வி மணம்.
இன்னொன்று தந்தால் இதுதாரும் - என்னிலையில்
பூமியிற் சென்றுநான் பேறுறச் சொல்லுவீர்
மீமிசை வேள்வி மணம்.
நான் முன்பு சொன்ன அம்பரமெனும் மேன்மை, வேள்வியின் பலனாகக் கிடைக்கும் என்றார்கள். என்னுடைய இதே நிலையில் பூமிக்குச் சென்று, பின்னர் அந்த மேலுலக மேன்மையை அடைய, நான் செய்ய வேண்டிய வேள்வியின் விவரத்தைச் சொல்லுங்கள். இன்னொரு வரம் தருவதானால் இதையே தாருங்கள்.
மாண்பு: மேன்மை, இங்கே சொர்க்கத்தைக் குறிக்கிறது
மகப்பலன்: வேள்விப்பலன்
மாலை: வரம்
மீமிசை: மீ+மிசை, மேலுக்கும் மேல், இங்கே எமனுலகுக்கும் அப்பால் என்று பொருள்
மணம்: குணம் அல்லது சிறப்பு, இங்கே வேள்வியின் விவரத்தைக் குறிக்கிறது
தெளியச் சொல்வதும் திருந்தச் செய்வதும் முக்கியம். சிறு வயதிலிருந்தே பழகியும் பழக்கியும் வளர்க்க வேண்டியவை. தெளிந்த சிந்தையிருப்பினும் அது தெளிவான சொல் அல்லது செயலில் வெளிப்படவில்லையெனில், பெரும் இக்கட்டில் சிக்கவைக்கும்.
எண்ண வெளிப்பாட்டின் சிறப்பு, குறிக்கோள்-தேவை-செயல்பாடு இவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே. 'effective communication builds a sense of purpose' என்பார்கள். பயன் தொட்ட, ஒரு குறிக்கோளையொட்டிய பேச்சு, எதிர்பார்த்த விளைவுகளைக் கொடுக்கும்.
"சார், தாம்பரத்துக்கு எப்படிங்க வழி?" | "இப்படியே நேராப் போங்க"
"அம்மா, என்னோட ஸ்கூல் புத்தகம் காணோம்.." | "டிவி கிட்டே பாத்தனே?"
"டாக்டர், எனக்கு ஏன் இப்படி அடிக்கடி தலை சுத்துது?" | "எல்லாம் சரியாயிடும்"
"சேல்ஸ் ரிபோர்ட் ரெடியாயிடுச்சா? | லஞ்சுக்குப் போயிருக்காங்க மேடம்"
"ஏம்மா, இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதம் தானே?" | "உங்க இஷ்டம்பா"
மேற்கண்டது 'directional communication', இருதரப்பிலும் மேம்போக்கான வெளிப்பாடு. மேற்கண்ட உரையாடலில் நட்பும் உதவியும் தொனித்ததா? இல்லையென்று சொல்ல முடியாது. தெளிவானத் தகவல் பரிமாறப்பட்டதா? இதனால் யாருக்கு என்ன பலன் கிடைத்தது? சமீபச் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிடிஷ் இளவரசுக்கு ஒரு பரிசளித்தார்: இருபத்தைந்து டிவிடி அடங்கிய அமெரிக்கத் திரைப்படத் தொகுப்பு. ஒரு சிறு சிக்கல்: அமெரிக்கச் சீர்மையில் வடிவாக்கப்பட்ட டிவிடி இங்கிலாந்தில் இயங்கவில்லை. 'நானென்ன ராகெட்டா கேட்டேன்? வெறும் டிவிடி! இதைக்கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதா?' என்று தன் செயலாளரிடம் எரிந்து விழுந்தாரம். ஒபாமாவுக்கு அவமானம்; அமெரிக்க மக்களுக்கு அவமானம்; இதில் உண்மையான இழப்பு, அந்த டிவிடி அமைத்துக் கொடுத்தவருக்கு வேலை பறிபோனதே. 'எனக்குத் தான் அறிவில்லை; உனக்கு எங்கே போச்சு அறிவு?' என்று அடிக்கடி சொல்கிறோம், கேட்கிறோம். இது முட்டாள்தனமான வாதம் என்பது சற்றுச் சிந்தித்தாலே புரியும். எனக்கு மிக நெருங்கியவர்களிடம், "இது கூடத் தெரியாதா?" என்று பல முறை கேட்டிருக்கிறேன்; பிறகு என் கேள்வியின் முட்டாள்தனத்தில் நொந்திருக்கிறேன். மேற்சொன்ன உதாரணங்கள் சாதாரண பாதிப்பை உருவாக்க வல்லவை; தீவிர பாதிப்புகளை உண்டாக்கும் வெளிப்பாடுகளில் கூட மேம்போக்கையே அதிகம் காண்கிறோம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிகம் மேம்போக்கான வெளிப்பாட்டு முறையையே பயன்படுத்துவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது. தன் முயற்சியினாலான தனி வாழ்க்கை, பதினெட்டு வயதுக்குப் பிறகே தொடங்குகிறது. நம் வாழ்வின் மனக்கசப்புகளுக்கு, நம்முடையத் தெளிவற்ற, மேம்போக்கான சொல்லும் செயலுமே காரணங்களோ? "அம்மா, என்னோட ஸ்கூல் புத்தகம் காணோம்.." | "டிவி கிட்டே பாத்தனே?"
"டாக்டர், எனக்கு ஏன் இப்படி அடிக்கடி தலை சுத்துது?" | "எல்லாம் சரியாயிடும்"
"சேல்ஸ் ரிபோர்ட் ரெடியாயிடுச்சா? | லஞ்சுக்குப் போயிருக்காங்க மேடம்"
"ஏம்மா, இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதம் தானே?" | "உங்க இஷ்டம்பா"
மாறாக, 'precise communication' என்பது, தெளிந்து சொல்லுதல். 'இதனை இதனால் இவ்வண்ணம் இந்நேரம் இதுவாக' முடிக்க, விவரத்தோடு ஐயமறச் சொல்லுதல். ஐயம் இருந்தால் தானே சந்தேகம், ஏமாற்றம், எரிச்சல் எல்லாம்? 'course correction' என்பது இன்னொரு கலை. முதலில் சொன்னது எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால் அதையறிந்துத் தவறைத் திருத்தும் கலை. திருத்துவதை உடனே செய்ய வேண்டும். அல்லது மறுவாய்ப்பு கிடைக்காமலே போய்விடலாம். தெளிந்து சொல்லவேண்டும்; அப்படியும் திருத்தம் தேவையானால் உடனே திருந்தவோ திருத்தவோ வேண்டும்.
தெளிந்து சொல்லாமல், சொன்னதோ செய்ததோ தவறாக முடிந்தால் அதையும் திருத்தாமல், சொன்னதை வீம்புக்காகப் பிடித்துக்கொண்டு 'முயலுக்கு மூன்று கால்' என்று சாதிப்போரை நாம் தினமும் வீட்டிலும் வெளியிலும் சந்திக்கிறோம். பல நேரம் நாமே அவ்வாறு நடந்து கொள்கிறோம். தெளிந்த சொற்செயல் பழகியும், நேரத்தோடு திருந்தவோ திருத்தவோ தவறியதே நம் வாழ்வின் பல தோல்விகளுக்குக் காரணம். 'சொல்வது தெளிந்து சொல்' என்று பாரதி சொன்னது நமக்காகவே. நாமெல்லாம் கிணற்றுத்தவளையாக வாழ்ந்த போதே இந்த நிலையென்றால், பரந்த உலகக் கலாசாரக்குழம்பில் வளர்ந்து ஆளாகப் போகும் தலைமுறைகள் தெளிந்த வெளிப்பாட்டைப் பழக வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வார்த்தைகள் போதாது.
நசிகேதன் யோசித்தான். தான் கேட்ட முதல் வரத்தை எமன் வழங்கியதில் தவறில்லை. தான் கேட்ட விதத்திலே பிழை என்று தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் பக்குவம் அவனிடம் இருந்தது. இரண்டாவது வரத்தில் அவ்வாறு குழப்பம் வரக்கூடாது என்று தீர்மானித்தான். முதலில் சொர்க்கம் பற்றிச் சொல்லி, அந்த சொர்க்கத்தை அடையும் வழியான வேள்வியைப் பற்றியும் சொல்லி, அதன் பிறகு, 'இனி நான் அந்த வேள்வியைச் செய்து சொர்க்கத்தை அடைய வேண்டி அதற்கான விவரங்களைச் சொல்' என்று தன் குறிக்கோள், தேவை இரண்டையும் பிட்டு வைத்தான்.
இனி முதல் வரத்தின் திருத்தம். 'திருப்பி அனுப்புவதைப் பற்றித் தெளிவாகக் கேட்க மறந்தேன். முதல் வரத்தைத் திருத்த அனுமதியுங்கள்' என்று கேட்டால் அதுவே வரமாகிவிடுமே? வந்திருப்பது எமனுலகம். இதற்கு அப்பாலிருக்கும் பிறவிப்பிணி இல்லாத அம்பரத்தை அடைய, வேள்வி செய்ய வேண்டும் என்கிறார்கள். பிறவிப்பிணி துறக்க வேள்வி செய்வதென்றால் எங்கே செய்ய வேண்டும்? பிறவிப்பிணி இருக்குமிடத்தில் தானே? பூமிக்குச் சென்றால் வேள்வி செய்யலாம். வேள்வியைப் பற்றிய வரத்தோடு முதல் வரத்தையும் திருத்திவிடத் தீர்மானித்து, "இதே நிலையில் பூமிக்குச் சென்று" என்பதையும் சேர்த்துக் கேட்டான்.
பிறவிப்பிணியற்ற நிலை வேண்டும் என்று நேராகக் கேட்டிருக்கலாமே? சாப்பாட்டைக் கேளாது, சமையல் கலையை வரமாகக் கேட்பானேன்?
தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம். நசிகேதன் வேள்வி விவரம் கேட்டது தனக்காக மட்டுமல்ல, தன் தந்தைக்காக மட்டுமல்ல; தன்னைப் போல் பூமியில் வாடும் எண்ணற்ற மனிதர்களுக்கும் இந்த அறிவு பரவட்டும் என்ற எண்ணத்தோடு விவரங்களைக் கேட்டான். தன்னைப் பார்த்து மற்றோரும் வேள்வி முறைகளைப் பழகட்டும் என்ற எண்ணத்தோடு கேட்டான். இரந்திரமாக அழியாது, இந்த அறிவு நிரந்தரமாகப் பொதுவில் நிலைக்க வேண்டும் என்று நினைத்ததால் கேட்டான். ►
30 கருத்துகள்:
எவ்வேள்வி அம்பரத்துக்கான வழி எனும் கேள்வியை வைத்து அருமையான மேலாண்மை பாடம்....
இப்பொழுது இப்படி தெளிவான கேள்விகளே கேட்பதில்லை..... கேட்டால் முட்டாள் பட்டம் கிடைத்துவிடுமோ என்று கேட்காமாலேயே முட்டாள்களாக இருக்கிறார்கள்...
எதோ ஒரு preoccupation எப்பவும் பின் தொடர்ந்த நிலையில் , கேள்விகளும் மேம்போக்கு...பதில்களும் மேம்போக்கு என்பதற்கான சரியான உதாரணங்கள்..
// தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம். // நசிகேதனின் சிறப்பான வெளிப்பாடு....
கம்யூனிகேஷன் இந்தக்காலத்தில் முழுமையாகிறது என்று சொல்ல முடியாது.
தற்கால இளைஞர்களுக்கு செய்திகளைப் பொறுமையாகக்கேட்டு, என்ன கேட்கப்
படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பின் பதிலளிக்குமளவிற்கு
பொறுமை இல்லை. மாறாக, கேட்கப்படும்
கேள்வி முடிவதற்கு முன்னாலேயே பதில் சொல்லத் துவங்கிவிடுகின்றனர்.
நான் இதைக் கேட்கவில்லையே என்று அவர் சொல்ல, இவர் மறுபடியும் பாதியிலே
பதிலளிக்க, பேச்சுத்தொடர் ஒரு இலக்கை நோக்கி அமைவதில்லை.
நசிகேதன் யமன் இருவருடைய சம்வாதம் இன்றைய கம்யூனிகேஷனுக்கு
ஒரு சிறந்த உதாரணம்.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
precise communication பற்றி சொல்லும்போது பத்மநாபன் சொல்லியிருக்கும் அறியாமை வெளிப் படும் பயக காரணம் சரி என்று படுகிறது! இந்தக் காலத்தில் அவ்வளவு தெளிவான உரைநடை இல்லை,அல்லது சாத்தியமில்லை என்றும் தோன்றுகிறது. முன் ஜாக்கிரதை அல்லது இன்றைய அரசியல் கற்றுக் கொடுத்த பாடம்!
//"தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம்"//
கோபுரத்தில் ஏறி ஊர் மக்களுக்கு ரகசியம் உரைத்த ராமானுஜர் போல.
//"தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம்"//
இது அப்பாத்துரையின் குணம்.
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
நன்றி பத்மநாபன், sury, ஸ்ரீராம், சிவகுமாரன், ...
பனங்காய், இல்லை, பூசணிக்காயை இப்படித் தலையில் வைத்தீர்களே சிவகுமாரன்? இப்படி ஒரு பார்வை கிடைக்குமென்று எழுதும் போது எனக்குத் தோன்றவில்லை.
நம்பிக்கைக்கு நன்றி; தகுதிக்கு இன்னும் வெகுதூரம் போக வேண்டும். முயற்சி செய்கிறேன்.
தற்காலம் பற்றிய உங்கள் கருத்து புரிகிறது பத்மநாபன், sury, ...
நான் வளரும் போது இதே போல் என்னைப் பற்றி விமரிசனம் செய்த என் தாத்தா மாமாக்களின் விமரிசனம் நினைவுக்கு வருகிறது :)
பொதுவாக வளர்ச்சியோடு அழிவும் சேர்ந்தே வருகிறது. சில சமயம் நமக்கு நல்லதாகப் படும் சில அழிகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் தன்னையடுத்த தலைமுறையைக் கொஞ்சம் கடுமையாகவே விமரிசிக்கிறது.
இன்றைய தலைமுறையின் communication skills எனக்கும் மிகவும் கவலையைக் கொடுக்கிறது என்பது உண்மையே; ஆனால், இன்றைய தலைமுறையைக் குற்றம் சொல்லும் தொனியில் நம் கருத்துக்கள் அமைந்தால் நமக்குத் தான் முகம் பார்க்கும் கண்ணாடி தேவை என்றும் தோன்றுகிறது. ஒரு முறை பொறுப்பார்கள், இரு முறை பொறுப்பார்கள், மூன்றாம் முறை கண்ணாடியறைக்குள் நம்மைப் பூட்டி விட்டுப் போய்விடுவார்கள். நல்லதன் பயனை அனுபவித்தவர்கள் அவற்றை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தொடர்ந்து எடுத்துச் சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன்.
"ஏன் இப்படி டிவி முன்னாலயே உக்காந்திருக்கே? இதனால் என்ன பயன்? வெளில கொஞ்சம் காத்து வாங்கவாவது போகக்கூடாதா?"
"உன் சின்ன வயசுல டிவி இல்லேனே நீ தானே சொன்னே? இருந்தா நீ வெளியே போயிருப்பியா?"
எதிர்கேள்வியை பணிவோடும் புன்னகையோடும் தான் கேட்கிறார்கள். என்ன பதில் சொல்ல?
communication skills பற்றிய இன்னொரு கவலை. நாம் வளர்ந்த போது "எழுதப் படிக்க" கற்றோம். எழுதுவது சிந்திக்க வைக்கிறது என்றார்கள். இன்னும் முப்பது வருடங்களில் "எழுதுவது" என்பது கறுப்பு வெள்ளைத் திரைப்படம் போல் காணாமல் போன பொக்கிஷமாகும் என்கிறார்கள். கணினி உபயோகத்தில் டீச்சர்களுக்குக் கூட எழுதும் கலை மறந்து போயிருக்கும் என்கிறார்கள். இது அழிவா வளர்ச்சியா? பேனா பென்சில் உபயோகித்து எழுதும் போது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது; கணினியின் அவசரம் சிந்தைனையைக் குறுக்குகிறதே என்று கவலை. (பைலட் பேனா வைத்திருப்பவர்கள் பாதுகாத்து சேர்த்துவைக்கவும்; பேரர்களின் பிள்ளைகள் காலத்தில் அவர்களுக்கு பணம் கிடைக்க ஏதுவாகும்)
இன்னும் கொஞ்சம் யோசித்தால் (நல்ல டிகிரிக் காபி இருந்தால் யோசிக்க வசதியாக இருக்கிறது) இன்றைய தலைமுறை நம்மை விட மேலானவர்கள் என்றே தோன்றுகிறது. அவசரம் நம்மை உறுத்துவது போல, அவர்களின் முதிர்ச்சியும் வியக்க வைக்கிறது. அவசரமும் முதிர்ச்சியும் வேடிக்கையான முரண்!
உண்மை அப்பாத்துரை. எனக்கு வேண்டியவர்கள் எல்லோரிடமும் நசிகேத வெண்பா படிக்கச் சொல்லியிருக்கிறேன். என் மனைவியிடம் என் கவிதையின் பின்னூட்டத்தில் அப்பாத்துர-யை கிளிக் செய்து உங்கள் ப்ளாக் சென்று நசிகேத வெண்பா படிக்க சொல்லியிருந்தேன். அவள் வழி தவறி மூன்றாம் சுழி சென்று "பெரியவர் ஆசி" படித்து மிரண்டு போயிருக்கிறாள். வேப்பிலை அடித்து தெளிவாக்கி வெண்பா படிக்க வைத்திருக்கிறேன்.
வயிற்றைப் பிடித்துத் தரையில் உருண்டு சிரித்தேன், சிவகுமாரன் :)
தெளியச் சொல்; திருந்த செய். --நல்ல அறிவுரை. உன் விளக்க உரைகளை மீண்டும் வந்து படிக்கிறேன். நிறைய நல்ல பாடங்களை கூறியிருக்கிறாய். நன்றி.
ஒபாமா நிகழ்சியில் அந்த அதிகாரியின் மேல்தான் பிழை. மிகச் சிறிய விஷயத்தில் மிகப் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார்!!!.
good post..:)
இதுவரை தவற விட்ட நசிகேத வெண்பா முழுக்கப் படித்தேன் ஒரே மூச்சில். நல்லாப் போயிட்டிருக்கு. நன்றி. அதுவும் பின்னூட்டங்களோடு மிகுந்த சுவை!
விடையில்லாக் கேள்விகளின் கூட்டரங்கம் நசிகேதனின் கதை. அதுனாலியே பிடிக்கும். நீங்க உளவியல் / மேலாண்மைப் பாடங்களைக் கலந்து கொடுப்பது இன்னும் நல்லா இருக்கு.
ஒரு பதிவில் கேட்டீங்க: //மரணத்தின் மர்மம் தொட்டே கடவுளை மதிக்கிறீர்களா/மதிக்கிறோமா? கடவுளை மதிப்பதற்கு இன்னும் ஆழ்ந்த காரணம் தேவையோ? //
கடவுள் "ஒளியுறும் அறிவாய்" என்னோடு பயணிக்கிறார், (அதனால தான் இத்தனை திமிர் எனக்கு:-)னு நினைச்சாலும், மரணத்தின் மர்மம் தொட்டே கடவுளை மதிப்பது என்னைப் பொறுத்த வரையிலும் நிசம்.
'தெளிய சொல்வது' இது எல்லோருக்கும் வருவதில்லை, நிச்சயமாக எனக்கு. மிகவும் முயற்சி செய்கிறேன். தெளிய சொல்வதற்கு முன், சொல்வதை கேட்க என்னை பழக்கி கொள்ள வேண்டும் என்று மிகவும் பிரயத்தன படுகிறேன். அப்படியும் என் லொட லொட வாயை மூட முடியவில்லை. பிறவி குணத்தை மாற்றுவது என்பது என் போன்றவர்களுக்கு நாய் வாலை நிமிர்த்தும் கதைதான்.
நல்ல பதிவு! மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய நல்ல கருத்துக்கள்.
//அப்பாதுரை சொன்னது… நல்லதன் பயனை அனுபவித்தவர்கள் அவற்றை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தொடர்ந்து எடுத்துச் சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன்.//
அது முடியுமோ என்று தெரியவில்லை துரை. எதிர்ப்பார்ப்பு இல்லை இருந்தும் நம் மக்கள் நன்கு வரவேண்டுமே என்று பல சமயம் என் பெரியவனிடம் "நன்கு படி, நன்கு படி, நீ படிப்பது போதாது, இந்தியாவில் பிள்ளைகள் இன்னும் பிரயத்தன படுகின்றார்கள்" என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.
முன்பெல்லாம் நான் சொன்னபடி கேட்ப்பான் - இப்போது அவனை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கின்றது. கடுப்பாகி எதிர்த்து கத்தி அல்லது அடித்து விடுவானோ என்று ! நான் அவன் நன்மைக்கு சொல்லுகின்றேன் என்று புரிகின்றதா என்றே சந்தேகம் வருகின்றது. நான் நேற்று மட்டும் ஸ்ட்ர்யக்கர் என்ற மருத்தவ கம்பெனியில் இருக்கும் மூன்று மிக சிறந்த இந்திய பிள்ளைகளின் ப்ரோபைல் காண்பித்தேன் -இந்தியா மற்றும் இங்கே Wharton, ஹார்வர்ட் என்று படித்தவர்கள்)
நான் ஏதோ படிக்காமலே ஒப்பேற்றி விட்டேன். உழைக்கும் காலமும் எனக்கு விரைவில் முடிந்து விடும். இனி வரும் காலங்கள் அப்படி இருக்காது - "உன்னால் முடியும், நீ புத்திசாலி - இன்னும் மேலே வா" என்று சொல்லுவது எனக்கென்று எதிர்ப்பார்ப்பு இல்லாவிட்டாலும் - அவனிடம் கொண்ட எதிர்ப்பார்ப்போ ? அதுவும் கூடாதோ ?
வருகைக்கு நன்றி geetha santhanam, Samudra, கெக்கே பிக்குணி, meenakshi, சாய், ...
'விடையில்லாக் கேள்விகள்'னு aptஆ சொல்லிட்டீங்க கெபி. அத்தனை பதில்களுக்குப் பின்னும் ஒரு மாயப் போர்வை இருப்பதால், கேள்விகளின் சுவாரசியம் விடைகளில் வரவில்லை என்று நானும் நினைக்கிறேன். நசிகேதன் கதையின் சுவை விடைகளில் இல்லை கேள்விகளில் தான், கேள்விகள் தூண்டிய சிந்தனையில் தான், என்பது புரிய நேரமானது. மரணத்தையோ பிறவியையோ கட்டுப்படுத்த முடியாத பொழுது அவற்றை ஒட்டிய நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அறிவுடைமையா அறியாமையா என்ற loaded கேள்வி தான் புத்தகத்தின் சாரம். வேதகாலத்தில் இப்படி ஒரு கருவைக் கையாண்ட சிந்தனையாளரை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.
'மரணத்தின் மர்மம் தொட்டே'னு வெளிப்படையா சொல்லியிருக்கும் துணிச்சலைப் பாராட்டுகிறேன். அனேகமாக எல்லாருமே அந்த ஒரு காரணத்துக்காகத் தான் கடவுளை மதிக்கிறார்கள் என்பது என் கருத்து.
மரணத்துக்குப் பிறகு பிறவாமை கொடுக்கக் கடவுளால் முடியும் என்ற நம்பிக்கை/எதிர்பார்ப்பு, கடவுள் பேரிலிருக்கும் மதிப்பைக் கண்மூடித்தனமாக உயர்த்துகிறது. மதங்களுக்கு உரம் வேண்டுமே?
எல்லாமே கடவுள் தான் என்ற நோக்கில் ஒரு வசதி இருக்கிறது. தஞ்சமும் இருக்கிறது. மரணத்தை மீறி நாளைக்கு ஏதாவது தோன்றினால் அதுவும் கடவுள் தான் என்றாகிவிடும்! :)
நல்ல கருத்தை 'நைசாக'ச் சொன்னீர்கள், meenakshi. 'கேட்கப் பழகுவது' - listening skills - பேச்சுத் திறனுக்கு இணையாக முக்கியமானது. sury சொல்லியிருப்பது போல் பேச்சுத் தொடர் ஒரு இலக்கை எட்டாத காரணம் கேட்கத் தவறுவதில் தொடங்குகிறது. 'ஒரு வாய் இரண்டு காது' இருக்கும் காரணம் இரண்டு சொல் கேட்டு ஒரு சொல் பேச வேண்டும் என்பதால் - என்று என் தாத்தா சொன்னபோது, ஒரு காது செவிடாக இருந்தால் என்ன ஆகும் என்று பதில் கேள்வி கேட்டு ஓடிவிட்டேன்.
நல்ல கேள்வி சாய். அடுத்த பாடலில் எதிர்பார்ப்பு கட்டல் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
எதிர்பார்ப்பில் இரண்டு வகை: எதிர்பார்ப்பவர், செயல்படுத்துபவர் இருவருமே செயலின் பலனை அனுபவிக்கும் பொருட்டு ஏற்படும் எதிர்பார்ப்பு முதல் வகை. உதாரணம்: பொருளீட்டல், உறவு, சமூகம், தொழில் தொடர்பான எதிர்பார்ப்புகள். இந்த வகை எதிர்பார்ப்புகள் ஒரு இலக்கை ஒட்டிய எதிர்பார்ப்புகள் என்பதால் கட்டவோ கூட்டவோ சமாளிக்கவோ முடியும். இரு தரப்பினருமே செயலாக்கத்தில் பங்கு கொள்வதால் இந்த வகை எதிர்பார்ப்புகள் ஆரோக்கியமானவை.
இரண்டாவது வகை அபாயமானது. குளிர்காயும் வகை. இதைத்தான் நாம் பெரும்பாலும் 'எதிர்பார்ப்பு' என்று அறியாமையோடு தினம் பழகுகிறோம். செயலின் பலன் செய்கிறவருக்கு மட்டுமே; எதிர்பார்ப்பவர் குளிர் காய மட்டுமே முடியும். இதை வீட்டில் பார்க்கிறோம், செய்கிறோம். 'என் பிள்ளை டாக்டராவனும்' என்பதில் தனக்கு கௌரவம் உண்டு - அதை பூசிமறைத்து பிள்ளையை "படிச்சா டாக்டரவலாம், மிலியனேராவலாம்" என்று தினம் தார்க்கோல் போடும் ரகம். யோசித்துப் பார்த்தால், படிப்பில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் உழைப்பு 100% பிள்ளையினுடையது. பெருமை மட்டும் நமக்கு. இது எந்த விதத்தில் ஒழுங்கு? அதனால் இந்த எதிர்பார்ப்பில் இரு தரப்புக்குமே திருப்தி கிடைப்பதில்லை. நமது தோல்விகளையும் இழப்புகளையும் பிள்ளைகளின் வெற்றி வழியாக அனுபவிக்கும் ரகம். 'இதில் என்ன தவறு?' என்று என் நண்பர்கள் கேட்கும் பொழுதெல்லாம் என்னால் தெளிவான விடை சொல்ல முடிந்ததில்லை - தவறு என்பதோடு நிறுத்திக் கொள்வேன்.
கவலைப்பட வேண்டாம் சாய், பெரும்பாலான பெற்றோர்கள் இந்த வகை தான். நாமும் இப்படித் தான் வளர்ந்தோம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், படிப்பின் நன்மைகளை மட்டும் எடுத்துச் சொல்லி, நம் எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணிக்காமல் எதிர்பார்ப்புகளை சுயமாக வளர்க்க ஊக்கப்படுத்துவதே ஆரோக்கியமானது.
அப்படியே பிள்ளை படிக்காமல் பர்கர் புரட்டினாலோ வரட்டி தட்டினாலோ என்ன குறைந்து விடும்? பிள்ளையின் வாழ்க்கை தானே? பிள்ளைக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது பெற்றோரின் கடமையாகிறது - அதற்கு மேல் எதிர்பார்ப்புகளை சுமத்துவது ஆரோக்கியமானதல்ல.
சொல்வது எளிதென்றாலும், இந்தப் பக்குவம் கொண்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். தன் சொந்த கௌரவம் பின்னியிருக்கும் வரை இந்தப் பக்குவம் வராது. அதே நேரம், பக்குவம் வந்ததும் கிடைக்கும் நிம்மதியும் சுதந்திரமும் இருக்கிறதே - எழுத்தில் வடிக்க முடியாது. நம் வாழ்வின் சங்கிலிகள் அறுந்தது போல் ஒரு விடுதல் உணர்ச்சி கிடைக்கும்.
பிள்ளைகள் பர்கர் புரட்டினால் நமக்கு கௌரவம் குறையும் என்று நினைத்தோமானால் நம் எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணித்துக் கொண்டே இருப்போம்.
இந்நாளில் ஒரு வசதி: "i can't let you run my life" என்று பேசத் தெரிந்த மறு நாளே சொல்கிறார்கள் பிள்ளைகள்.
அப்பாதுரை சார், விடையில்லாக் கேள்விகள் என்று அறிந்தே கேட்கப்பட்டவை வேதகாலத்தில் இதை எழுதியவரால் ... இப்படி நினைக்கலைன்னா, நான் தான் ரொம்பப் பெரிய ஆள்னு நான் ஒப்புக்கணும். அவங்களுக்கு இருக்கும் / இல்லாத அறிவு எனக்கு இல்லை. எனக்கு இன்றைக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அறிவு புறக் காரணிகளால் உண்டானது. அந்த புறக் காரணிகள் வேத காலத்தில் இல்லாமல் இருக்கலாம்.
சாய்/அப்பாதுரை, //உண்மையைச் சொல்ல வேண்டுமானால், படிப்பின் நன்மைகளை மட்டும் எடுத்துச் சொல்லி, நம் எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணிக்காமல் எதிர்பார்ப்புகளை சுயமாக வளர்க்க ஊக்கப்படுத்துவதே ஆரோக்கியமானது.// படிக்காவிட்டால பர்கர் மட்டும் தான் புரட்டப் போவதில்லை, ஆனால் இப்படிச் சொல்லி குழந்தைகளிடம் பயத்தைப் புகட்டுவது பெற்றோரின் கடமை;-) ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் இல்லியா?
சாயின் பின்னூட்டத்தை இப்படிப் புரிந்து கொண்டேன். நாளைக்கு பையர் "நீ படிக்காம வாழ்க்கையிலே பாஸ், நான் மட்டும் ஏன் படிக்கணும்" என்று கேட்கும் போது படிப்பின் நன்மைகளை எடுத்துச் சொல்லி, ஏன் பையர் படித்தால் மட்டுமே உருப்படுவார் என்று பொய் சொல்ல ரெடியாயிருக்கணும். (நான் என் புள்ளைங்களுக்கு "பன்றி மேய்க்கப் போறே" என்று பயமுறுத்துகிறேன்!:-)
சாய், நாமளும் கராத்தே கத்துக்க வேண்டியது தான்!
>>>கடுப்பாகி எதிர்த்து கத்தி அல்லது அடித்து விடுவானோ என்று !
நீங்க சொல்வது மிகச்சரி கெபி.
வேதகாலத்தில் இந்தச் சிந்தனையானு நான் வியந்த காரணம் 'சமகாலச் சிந்தனை வேறுபட்டிருப்பது' தான். மற்ற உபநிஷதுகளும் வேதங்களும் கீதையும்.. கடவுளையும் மோட்சத்தையும் நியமங்களையும் சடங்குகளையும் பத்தின விவரமா இருக்கும் போது தனித்து நிற்கும் கடோபனிஷது - 'மோட்சத்துக்கான வேள்வி தனக்குள்ளே நடக்கும்' என்கிற புரட்சியான கருத்தை, மற்ற வேதகால நூல்களுக்கு எதிரான கருத்தை - சொல்லியிருப்பது தான் வியப்பு. மற்றபடி அவர்கள் அறிவில் எந்தக் குறையும் காணவில்லை. நீங்கள் சொல்வது போல் அவர்கள் காலப் புறக்காரணிகளின் தாக்கம் குறைவு.
மரணம் மறுபிறவி பற்றி (ஒரே ஒரு இடம் தவிர) விடையில்லாமலே விட்டதால்தான் இந்தப் புத்தகம் இன்றைக்கும் சுவாரசியமா இருக்குனு தோணுது.
நாம் எத்தனை பயமுறுத்தினாலும் ஆசைகாட்டினாலும் பிள்ளைகள் தங்கள் போக்கில் தான் படிப்பார்கள், வளர்வார்கள் என்று நம்புகிறேன்.
>>பயமுறுத்துவது பெற்றோர் கடமை
நாம் சிறுவயதில் பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காகவா படித்தோம்? என்ன கரடியாகக் கத்தினாலும் நம் விருப்பபடியே நடந்தோம். அப்பா அம்மாவின் அடி/திட்டுக்குப் பயந்தாலும் நம் போக்கில் தான் வளர்ந்தோம் (தன்னிலைப் பன்மைக்கு பதில் ஒருமை இருக்க வேண்டுமோ?)
சொல்வதில்/ பயமுறுத்துவதில் தவறில்லை - சொன்ன பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அடக்குவது நல்லது என்று நினைக்கிறேன்.
அபாரம் அப்பாதுரை. புரியற மாதிரி இருந்து கடைசியில் புரியாத மாதிரியும் இருக்கு. இன்னும் பல முறை படிக்கவேண்டும்.
//உண்மையைச் சொல்ல வேண்டுமானால், படிப்பின் நன்மைகளை மட்டும் எடுத்துச் சொல்லி, நம் எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணிக்காமல் எதிர்பார்ப்புகளை சுயமாக வளர்க்க ஊக்கப்படுத்துவதே ஆரோக்கியமானது. // எப்படி இதை செய்வது என்று போன் பண்ணி சொல்லு !
//அப்படியே பிள்ளை படிக்காமல் பர்கர் புரட்டினாலோ வரட்டி தட்டினாலோ என்ன குறைந்து விடும்? பிள்ளையின் வாழ்க்கை தானே? //
உண்மை தான். அது நன்கு அமைந்தால் அவர்களுக்கு தானே நல்லது. ஆனால் நீ சொல்லுவதுபோல் அவர்கள் வாழ்க்கை தானே !
// பிள்ளைக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது பெற்றோரின் கடமையாகிறது - அதற்கு மேல் எதிர்பார்ப்புகளை சுமத்துவது ஆரோக்கியமானதல்ல.//
நீ சொல்வது எளிதாக தோன்றினாலும், இந்தப் பக்குவம் எனக்கு வரவே வராது. பேசி பேசியே வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்று சில சமயம் சமீப காலங்களில் நிரம்ப தோன்றுகின்றது.
சொந்த கௌரவத்திற்காக சத்தியமாக நான் பெரியவனை சொல்லவில்லை.
நீ கூறுவதை பார்த்தல் எப்படில்லாம் வாழக்கூடாது என்பது விளங்குகின்றது ஆனால் நடைமுறைபடுத்த தெரியாமல் நாப்பத்தைந்து வருடம் ஒட்டிவிட்டேன் !!
எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் பிலாக் எழுதுறேன்? those who can't learn teach :)
>>>எப்படி இதை செய்வது என்று போன் பண்ணி சொல்லு
seriously, சொந்த கௌரவத்துக்காகத் தான் பெரும்பாலும் பிள்ளைகளை 'இப்படி வா அப்படி வா' என்று சொல்கிறோம். அவ்வளவு சுலபமாக இதை யாருமே ஒப்புக் கொள்ள மாட்டோம். deep denial. இதுக்குக் காரணம் கௌரவம் கூடுவதில் இருக்கும் விருப்பத்தை விட, கௌரவம் குறைவதில் இருக்கும் அச்சமே! sad.
பக்குவம் வரும். வேண்டுமென்றால் வரும். ஒரு கேள்வி: திருமணமான நம் பிள்ளை, தன் பிள்ளையை நன்றாக வளர்க்க வேண்டுமே என்று நாம் கவலைப் படுவதில்லையே, ஏன்? பெற்றவர்-பிள்ளை உறவில் என்ன மாறியது?
(வாழ்க்கையில் பாஸ் என்று எதைச் சொல்கிறோம்? எதைச் சொன்னாலும்) வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் படிப்பிற்கும் ஓரளவுக்குத் தான் தொடர்பு இருக்கிறதென்று நினைக்கிறேன் கெபி. இருந்தாலும், படிக்காமல் வெற்றி பெற்றவர்களை விட, படித்து வெற்றி பெற்றவர்கள் தான் மிக மிக மிக அதிகம். அதனால் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவதில் தவறே இல்லை.
ஆனால் அத்தோடு நிறுத்திக் கொண்டால் இருதரப்பிலும் நிம்மதி இருக்கும் என்று நினைக்கிறேன். எதிர்பார்ப்பு அளவுக்கு வந்துவிட்டால் அதை சரியாகக் கட்டுவது அவசியம் என்று நினைக்கிறேன். 'இப்படி வாழலாம்' என்று சொல்வதை, வெறுத்தாலும் ஏற்கிறார்கள் பிள்ளைகள்; 'ஏன் இப்படி வாழ மறுக்கிறாய்?' என்ற கேள்வியைத் தான் ஏற்காமல் வெறுக்கிறார்கள் என நினைக்கிறேன். 'why do i have to live by your rules?' என்று பிள்ளைகள் கேட்கலாம் (கேட்பார்கள் - கேட்கவில்லையென்றால் பெற்றோர்-பிள்ளை உறவில் விரிசல் என்றே நினைக்கிறேன் :) 'because you live in my house' என்று பதிலுக்கு நாம் முறைக்கலாம். அங்கிருந்து ஒரே சறுக்கல் தான் என்பது நமக்கே தெரியும்.
படிப்புக்கே இப்படியென்றால் boyfriend, girlfriend, touching, kissing, alcohol, drugs, sex என்று வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கும் கவலைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் - முட்டிக்கொள்ள சுவர் தேட வேண்டும். இவற்றைப் பார்க்கையில் 'படிப்பு பற்றிய கவலையும் வாக்குவாதமும்' என் கணிப்பில் lower priority என்று நினைக்கிறேன்.
பின்னூட்டக் கருத்துக்கள் சுவையாக இருக்கின்றன. பிள்ளை வளர்ப்பை Ph.D படிப்பு போல் எடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் Ph.D., supervisor போலத்தான். இப்படி இப்படி செய்யலாம் என்று கோடி காட்டுவதோடு சரி. மற்றவற்றை அவர்களேதான் செய்யவேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் ஆலோசனைக்கு நாம் இருக்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வு மட்டும்தான் பெற்றோர் தரவேண்டியது. அப்படியில்லாமல் 5-ம் வகுப்பு டீச்சர் imposition, punishment என்று பயமுறுத்தி படிக்கவைப்பதுபோல் இருந்தால் நமக்கும் அயர்ச்சி; அவர்களுக்கும் எரிச்சல்.
அப்பதுரை அவர்களே! இந்திய தத்துவ ஞானத்தில் நசிகேதன் வரவு ஒரு அற்புதம். விரைவில் புத்தகமாக வரவெண்டும்.உங்கள் விளக்கங்கள், பின்னூட்டங்கள் அத்துணையும் சேர்த்து---காஸ்யபன்..
//geetha santhanam சொன்னது…
அப்படியில்லாமல் 5-ம் வகுப்பு டீச்சர் imposition, punishment என்று பயமுறுத்தி படிக்கவைப்பதுபோல் இருந்தால் நமக்கும் அயர்ச்சி; அவர்களுக்கும் எரிச்சல்.//
கீது,
டூ லேட் !! (அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷ் சொல்லுவது போல் !!)
- சாய்
// நர்சிச்சுஸ்// எனக்கு புது செய்தி.
//அப்படியும் திருத்தம் தேவையானால் உடனே திருந்தவோ திருத்தவோ வேண்டும்.// ஏற்கனவே நல்லவாய்ப்பை தொலைத்து விட்டதாக சொல்லுகின்றார்களே சார். என்ன அது என்று கூட தெரியாத பல பாமரர்கள் இன்னும் irukkindraargal துரையப்பா.
//தெளிந்த வெளிப்பாட்டைப் பழக வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வார்த்தைகள் போதாது.// ஆத்தாடி நீங்க எழுதுங்கள் சார். naan படிச்சாவது ஏதாவது மாற்ற முடியுமான்னு பார்கின்றேன். இப்படி தான் அடிச்சி வளர்க்கவேண்டுமோ!!!
//தெளிந்த சொற்செயல் பழகியும், நேரத்தோடு திருந்தவோ திருத்தவோ தவறியதே நம் வாழ்வின் பல தோல்விகளுக்குக் காரணம். 'சொல்வது தெளிந்து சொல்' //
முதலில் தெளிய வேண்டுமே. :(
//பிட்டு வைத்தான்// இங்கயுமா பிட்டு. சரிதான்...
//"தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம்"// அடேங்கப்பா, இதற்கு கருத்துரைகள் அழகு.
//(பைலட் பேனா வைத்திருப்பவர்கள் பாதுகாத்து சேர்த்துவைக்கவும்; பேரர்களின் பிள்ளைகள் காலத்தில் அவர்களுக்கு பணம் கிடைக்க ஏதுவாகும்)// இதுவல்லோ எதிர்கால சிந்தனை.
//வேப்பிலை அடித்து தெளிவாக்கி வெண்பா படிக்க வைத்திருக்கிறேன். // :))))))))
//அதுவும் பின்னூட்டங்களோடு மிகுந்த சுவை!// ஆம்.
Padikkindren.
வருகைக்கு நன்றி கடைக்குட்டி. உங்கள் பின்னூட்ட ஸ்டைல் ரசிக்கிறேன். நர்சிச்சுஸ் என்றால் என்ன?
கருத்துரையிடுக