18
சினந்துறப்பான் உன்னய்யன் செம்மாப் பொழிப்பான்
மனந்திறப்பான் மாசு மறுப்பான் - தினமும்
சிறுபிள்ளை உன்னோடே சேர்ந்திருப்பான் உன்னால்
பெறுவானே பொன்னுலகப் பேறு.
மனந்திறப்பான் மாசு மறுப்பான் - தினமும்
சிறுபிள்ளை உன்னோடே சேர்ந்திருப்பான் உன்னால்
பெறுவானே பொன்னுலகப் பேறு.
உன் தந்தை சினத்தைக் கைவிடுவான்; தன்னலம் தழுவிய இறுமாப்பை ஒழிப்பான்; கண்மூடித்தனம் விட்டுத் தெளிவுடன் இயங்குவான்; பொய்மை பகட்டு போன்ற இழிவுகளை ஒழிப்பான்; மகனென்று உன்னுடன் என்றும் அன்போடிருப்பான் ; உன்னால் விண்ணுலக வீடு பேற்றினையும் அடைவான் (என்று எமன் வரம் கொடுத்தான்)
    செம்மாப்பு: தற்பெருமை, தன்னைச்சுற்றிய சிந்தனைகள், இறுமாப்பு
    மனந்திறப்பான்: அறிவைப் பயன்படுத்துவான், கண்மூடித்தனம் விடுவான் என்ற பொருளில் வருகிறது
    மாசு மறுப்பான்: மாசும்+அறுப்பான்; குறைகளை, சிறுமைகளைக் களைவான்
    சிறுபிள்ளை: மகன் என்ற பொருளில் வருகிறது.
அறிவு வந்த நாளிலிருந்து மனிதனை ஆட்டி வைக்கிறது செம்மாப்பு. தீவிரத் தன்மையக் கண்ணோட்டம். narcissus என்ற கிரேக்க அழகன் தன்னை விடச் சிறந்தவன் இல்லை என்ற இறுமாப்பில், தன் பிம்பத்தையே போட்டியாக எண்ணித் தன்னை அழித்துக்கொண்ட கதை தெரிந்திருக்கும். தன்மையப் பார்வைக்கு, அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் பிரித்தறியத் தெரியாது. மற்றவர்களின் உழைப்பில், பெருமையில் கூடத் தன்னை இணைத்துக் கொள்ளும். 'எனக்குப் பிறந்ததால் என் மகன் வெற்றி பெற்றான், யாருடைய ரத்தம்?', 'என்னைத் திருமணம் செய்து கொண்ட வேளை, என் கணவனுக்கு வெற்றி மேல் வெற்றி', 'நான் வேண்டிக்கொண்டதால் கடவுள் உனக்கு இந்தப் பலன் கொடுத்தார்' என்ற கண்மூடித்தனப் பேச்சுக்களை தினம் சொல்கிறோம்; கேட்கிறோம். பொதுப்பார்வையிலும் தன்னிலை கலந்து பேசுகிறோம். 'ஏ.ஆர்.ரகுமான் எங்க ஊர்க்காரர்' என்ற பெருமைக்கும், 'எங்க ஊர்க்காரர் ஏ.ஆர்.ரகுமான்' என்ற பெருமைக்கும் நுண்ணிய வேறுபாடு இருப்பதை அறிய முடிகிறதா? ஆபத்தில்லாத வழக்கென்றாலும், இரண்டாவது பெருமை தன்மைய அல்லது தன்னிலைப் பார்வை. "நான் உன்னிலும் உயர்நதவன்" என்ற பகட்டு. "என் துன்பம் உன் துன்பத்தை விடக் கொடிது" என்ற அறியாமை. அப்பாவித்தனமாகத் தோன்றினாலும், இது சுயநலமும் கண்மூடித்தனமும் உறைந்து கிடக்கும் 'அடப்பாவி'த்தனமாகும். 'நான், எனது' என்ற வியாதிக் கறையான்கள், மெள்ள 'என் குடும்பம், என் நாடு, என் மதம், என் கடவுள்' என்று கண்மூடித்தனமாகப் பரவி அமைதி மாளிகையைத் தின்றழிக்கின்றன.
பெரும்பாலான இத்தகைய கண்மூடித்தன வழக்குகளில் ஆபத்தில்லை. எனினும், அடிப்படையில் இவை மன வியாதியின் அறிகுறிகளே. உளவியலில் pathological narcissism என்ற வியாதி பற்றி நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. இந்த வியாதி இருப்பது தெரியாமலே நம்மில் பெரும்பாலானோர் வாழ்கிறோம். நாமோ நம் சுற்றமோ சொந்தமோ இந்த வகையில் மிகையாக நடந்தால், மனநல ஆலோசனையோ மருத்துவ உதவியோ பெறுவது நல்லது.
வாசனின் தன்மையச் செய்கைகளினால் நசிகேதனுக்கு ஏற்பட்ட இன்னலை முன்னர் பார்த்தோம்.
நசிகேதன் கேட்ட முதல் வரத்தில் சற்றே அசந்து போன எமன், நசிகேதனின் சாமர்த்தியத்தைக் கண்டான். நசிகேதன் தன் தந்தையின் கண்மூடித்தனங்கள் தொடராமலிருக்க விரும்புவதைக் கண்டாலும், வரத்தின் அடிப்படையில் அன்புக்காக ஏங்கும் ஒரு சிறுவனின் வேதனையைக் கண்டான்.
பொறுப்புள்ள ஒரு மன்னன் கூட அகந்தையிலும் அறியாமையிலும் உழலும் பொழுது, சாதாரண மானிடர்களின் வாழ்வில் கண்மூடித்தனம் கலந்திருப்பதில் வியப்பில்லை என்று உணர்ந்தான். கண்மூடித்தனங்களின் கேடு பற்றி, நசிகேதன் வழியாக உலகுக்குச் செய்தி சொல்ல ஒரு வாய்ப்பைக் கண்டான். ஞான போதனைக்குச் சரியான மாணவன் நசிகேதன் என்று தோன்றியது. மாணவனின் தகுதியைச் சோதிக்க நினைத்தான். "உன் தந்தை சினம் விட்டு உன்னுடன் அன்புடன் இருப்பான், வீடும் பெறுவான்" என்று வரம் கொடுத்தானே தவிர, "உன்னைத் திருப்பி அனுப்புகிறேன்" என்று எமன் நேரடியாகச் சொல்லவில்லை. நசிகேதன் அடுத்துக் கேட்கப் போகும் வரத்துக்காகப் புன்னகையுடன் காத்திருந்தான்.
நசிகேதன் யோசித்தான். 'திருப்பி அனுப்புவதாக எமன் சொல்லவில்லையே? எமனுலகம் வந்தோரெல்லாம் இன்னொரு பிறவியெடுத்தல்லவா பூமிக்குப் போவார்கள்? 'சினந்துறப்பான் சேர்ந்திருப்பான் வீடு பெறுவான்' என்று என் தந்தை பற்றி எமன் சொன்னதெல்லாம், நான் இந்தப் பிறவியில் இந்த நிலையில் திரும்பிப் போனால் நடக்குமா? சிறுபிள்ளை என்றாரே, அதே தந்தைக்குப் பிள்ளையாக இன்னொரு பிறவி எடுக்க வேண்டுமா? ஒரு வேளை, இன்னொரு பிள்ளை வழியாக இத்தனையும் நடைபெறுமோ? என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் எமன்?' என்று பலவாறு சிந்தித்த நசிகேதன், கேட்ட வரத்தைக் கேட்ட விதத்திலேயே எமன் வழங்கியதை உணர்ந்தான். தான் 'மீட்டனுப்பின்' என்றதைப் போல், எமன் கொடுத்த வரத்திலும் நிச்சயத்தின் தெளிவை விட, சாத்தியமே தொனித்ததைப் புரிந்து கொண்டான். எமனின் மறுமொழி விளையாட்டை மதித்தான். விட்டுக் கொடுக்காமல், அடுத்த வரத்தைக் கவனமாகக் கட்டினான். ►
10 கருத்துகள்:
சினந்துறந்து, இறுமாப்பு ஒழிந்து, மாசு மறுத்து, மனம் திறந்தாலே போதுமே .... ஒரே வெண்பாவில் வீடு பேறு கிடைக்க வழி சொல்லி விட்டீர்கள். நன்று.
கவனமாக அடுத்த வரத்தைக் கட்டுவதையும் எவ்வளவு வேகமாகக் கட்ட வேண்டும்? உன் தந்தை சினம் விட்டு உன்னுடன் சேர்ந்திருப்பான் என்பது திருப்பி அனுப்புவதைதானே காட்டுகிறது?
வாங்க சிவகுமாரன், ஸ்ரீராம், ...
"சார், என் பையனுக்கு உங்க கம்பெனில வேலை வாங்கித் தரணும்"
"அதுக்கென்ன, செஞ்சா போச்சு. வேலை வாங்கித் தருகிறேன்"
ஸ்ரீராம், மேற்கண்ட உரையாடலில் சாத்தியம், நிச்சயம் - இரண்டில் எது புதைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
வீட்டுக்கு வருகிறோம்; எரிந்து விழுகிறார் மனைவி அ கணவன். "என்ன?" என்கிறோம்.
"இன்னிக்கு சாப்பாட்டுக்கு அரிசி மணி கூட இல்லை..ஒரு வாரமா அரிசி வேணும்னு சொல்லிட்டிருக்கேன், வாங்கிட்டு வரக்கூடாதா?"
"சமைக்க அரிசி இல்லை, இன்னிக்கு வரப்ப ரெண்டு மூட்டை அரிசி வாங்கிட்டு வானு மொதல்லயே சொல்ல வேண்டியது தானே? அரிசி வேணும்னு சொன்னா எனக்கு என்னானு தெரியும்?"
"படம் போட்டா காட்டுவாங்க? இது கூட புரியலின்னா மண்டைல என்ன களிமண்ணா இருக்கு?"
"உன்னைக் கட்டிகிட்ட என் மண்டைல வேறே என்ன இருக்கப் போவுது?"
மேற்கண்ட உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வீட்டிலும் சரி வெளியிலும் சரி, communication skill என்பது as much an art as it is skill. சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தெளிவில்லாத சாத்தியம் தொட்ட பேச்சு வார்த்தை ஏமாற்றத்திலும் நம்பிக்கையிழப்பிலும் சச்சரவிலும், சில சமயம் சண்டையிலும், முடியும்.
'திருப்பியனுப்புவதைத் தானே காட்டுகிறது?' என்ற உங்கள் கேள்வி சரியே, ஸ்ரீராம். 'காட்டுகிறது' is key. இங்கே கோடிட்டு, அடுத்த பாடலில் விரிவு படுத்துகிறேன். 'directional communication', 'precise communication' என்ற இருவகைகளில், நசிகேதன் எமன் இருவருமே directional communication பின்பற்றி இருக்கிறார்கள். 'directional' முறை 'காட்டும்', செயல்படுத்தாது. தொடங்குபவர் 'directional' வழியைப் பின்பற்றினால் தொடர்கிறவரும் அதே வழியைப் பின்பற்றும் சாத்தியம் மிக அதிகம். மேல்தட்டு மேலாண்மை மற்றும் அரசியலில் இதைக் காணலாம்.
செம்மாப்பு.....இறுமாப்புக்கு இன்னமும் பலம் கூடிய வார்த்தையாக வந்திருக்கிறது.. தன்முனைப்பு என்றும் கூறுவர் நடுநிலை சித்தர்கள்...
``நானே பெரியவன் `` வியாதி பெரும்பாலோர்க்கு இருக்கிறது... பின்னூட்டத்தை வளர்த்துவதற்காக இதைக் குறிப்பிடவில்லை .இங்க தான் ``நாம பெரியவங்க இல்லப்பா`...` நமக்கு மேல ஒருத்தன் இருக்கான்ப்பா தேவைப் படுகிறது... அந்த வியாதி முதல்ல பயத்துல/ எச்சரிக்கையில் சரியாக அரம்பிச்சு பின்னர் விழிப்புணர்வுல முழு குணமடைய வாய்ப்பு இருக்கிறது... அந்த கதவை முழுசா அடைச்சிட்டு சாவியையும் தொலைச்சிட்டோம்.
முதல் வரத்திற்கான எமனின் பதிலில் நசிகேதனின் குழப்பத்திற்கு நியாயம் உள்ளது...சில சமயத்தில் கேட்டது கேட்டபடி உடனே கிடைத்துவிட்டாலும் குழப்பம் வந்து விடுகிறது...
இரண்டாவது வரத்தில் முதல் வரமும் கலந்து நசிகேதனை தெளியச் செய்யுமா....
வருக பத்மநாபன்,...
தன்மூப்பு என்று ஒரு அருமையான சொல் - வழக்கொழிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இறுமாப்பைக் குறிக்கும்.
self centered என்பதற்கு தமிழ் தேடிச் சலித்து 'தன்மைய' என்று பயன்படுத்தினேன். நல்ல சொல் தெரிந்தால் சொல்லுங்கள். அகராதியில் முழ நீளத்துக்கு பொருள் சொல்கிறார்களே தவிர சொல்லைக் காணோம்.
தமிழ் சரியாகத் தெரியாமல் தமிழெழுதுவது சிரமம் :)
அப்பாதுரை அவர்களே! நீங்கள் சொல்வது சரியே! There is ambuiguity in dharmarajas statement. அசுரர்களை வெல்ல கடவுளர்கள் இத்தகைய குழப்பமான வரங்களைக் கொடுப்பார்கள். இரண்ய கசிபுக்குக்கு கொடுத்தது போல.அது மட்டுமல்ல. உங்கள் கவித்துவ, தர்க்க ரீதியான மனத்தையும் சுட்டுகிறது---காஸ்யபன்.
தன்மூப்பு இல்லை .. தன்முனைப்பு ...இது self centered அருகில் வருகிறது..இதை நான் எளிய தமிழில் ஆன்மிகம் சொல்லிய மகான் வேதாத்ரியிடம் தெரிந்து கொண்டேன் ..அவரது கவி...
தன்முனைப்பு ` தான் ` என்ற ஆட்சிப் பற்றும்
தனது எனும் பொருளுடைய மக்கட்பற்றும்
என் உரிமை எனும் எண்ண எழுச்சி ஊக்கி
எவ்வகையிலோ பிறரை அடக்கி ஆளல்
முன் வினையின் தொடராகும் ; அடங்கி வாழ்வோர்
மோது மன வேகம் எளிது அல்ல
புன் செயலாம் அடிமை கொளல் பிறர் உள்ளத்தைப்
புண் படுத்தல் ஆள்வார்க்கு கடுஞ்சாபம் ஆம்...
நன்றி kashyapan, ...
கடவுளும் அரசியல்வாதியும் ஒன்று தானோ?
நன்றி பத்மநாபன்.
'தன்முனைப்பு' நன்றாக இருக்கிறது.
தன்மூப்பு என்பதும் அருமையான தமிழ்ச்சொல். இறுமாப்பு என்று பொருள். self centered என்பதற்கு தன்முனைப்பு ஒட்டிவருகிறது.
பதிவும், பின்னூட்டங்களும் அருமை. தொடர்கிறேன்!
கருத்துரையிடுக