வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/01

எமன் நசிகேதனிடம் மன்னிப்புக் கோரினான்


14
மன்னிக்க வேண்டுகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன்
என்னில்லில் ஏற்பட்ட இன்னலுக்கு - என்றெமனும்
ஏகிப் பணிந்தான் நயந்தான் நசிகேதன்
தாகந் தணியவே நீர்.

    மன் நசிகேதனை அணுகி, தன் வீட்டில் எந்த வசதியுமில்லாது தங்கியிருக்க நேர்ந்த இன்னலுக்குப் பலமுறை மன்னிப்பு கோரினான். நசிகேதனின் தாகம் தணிய நீர் அளித்தான்.

நயந்தான்: அன்புடன் வழங்கினான், உபசாரம் செய்தான், நட்புடன் பழகினான்


    ரு வாய்த் தண்ணீர் தருவதில் மகத்துவமோ சூட்சுமமோ இருக்கிறதா?

    விருந்தினருக்கு முதலில் நீர் வழங்குவது, உலகக் கலாசாரமாகும். இது பற்றியக் குறிப்புகள் இலக்கியங்களிலும் இறைநூல்களிலும் மதநூல்களிலும் உள்ளன. வந்தவருக்கு நீர் கொடுக்க இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்: 1)விருந்தாளி சுத்தம் செய்து கொள்வதால் விருந்தோம்புகிறவருக்கும் நன்மை 2)நீர் அருந்தினால், விருந்தினர் விருந்தோம்பலை ஏற்றதாகப் பொருள். கொடுத்த நீரை ஏற்க மறுத்துவிட்டால் பகையைக் காட்டுவதாகப் பொருள். ('அவன் வீட்டில் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்' என்ற ஏச்சை அறிவோம்). தண்ணீர் கொடுப்பது, சமாதானத்தையும் அமைதியையும் நாடுவதற்கு இணை.

    கலவரக் கட்டுப்பாடு (crisis control) என்பது நுண்ணிய மேலாண்மைத் தந்திரம். இது அனைவருக்கும் அவ்வப்போது தேவைப்படும், ஆனால் எளிதில் வராத கலை. கலவரக் கட்டுபாட்டின் முதல் படி, பொறுப்பேற்றல். கவன மாற்றம் (deflection or change of focus), திருத்தம் (correction), பரிகாரம் (remedy) என்று வழிமுறைகள் தொடரும். தவறுக்கு உடனே பொறுப்பேற்பது, சிறந்த வாடிக்கைச் சேவை மற்றும் மேலாண்மையின் அடையாளம். பொறுப்பேற்றவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்தப் பாதுகாப்பும் தேவையானக் கவனிப்பும் அளிக்க வேண்டியது அவசியம். தவறைப் பற்றிய அவர்களின் நினைவுகளை திசைதிருப்பவும் மறக்கடிக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை நேர்மையாகவும் உண்மையாகவும் உடனே செய்தாக வேண்டும். அரசியல் தலைவரோ, அம்பீஸ் கபே முதலாளியோ - இந்த நெறியும் எதிர்பார்ப்பும் பொதுவாகும். சுனாமித் தீவிரமாகட்டும் ஸ்பெக்டரம் சிக்கலாகட்டும், கலவரக் கட்டுபாட்டுக் கலை அவசியம்.

    வறு நிகழ்ந்து விட்டது. தான் செய்யாவிட்டாலும், தன் வீட்டில் நடந்த தவறென்பதால் எமனே பொறுப்பேற்றான். தன் வீட்டில் நடந்த கேடு, தனக்குப் பொதுவில் அவமானமாக மாறி, நீதிக்கு அரசனான தன் மதிப்பைக் கெடுக்குமோ என்று அஞ்சினான். கேளாத தானம் தானாக வந்து, பெரும் தலைவலியாகிவிடும் போலிருக்கிறதே என்று நினைத்தான். விருந்தினரைக் காக்க வைப்பது பாவம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், வந்தவனோ பச்சிளம் பிள்ளை - களைப்பில் அவனுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்? இது அனைவருக்கும் தெரிந்தால் தன் செல்வாக்கு என்னாகுமோ என்று எமன் கலங்கினான்.

    பார்த்தக் கணத்திலேயே பிள்ளையின் முகத்தில் அகம் தெரிந்து கொண்டான் எமன். அவனைத் தன்வழிப்படுத்த எண்ணினான். விருந்தோம்பல் குறைகளுக்கு வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டான். தண்ணீர் கொடுத்தது, நசிகேதனின் களைப்பைப் போக்க மட்டுமல்ல. தண்ணீர் வெம்மையைத் தணிக்க வல்லது. 'சான்றோர் சினம்' எனும் வெப்பத்தைத் தவிர்ப்பதே, எமன் தண்ணீர் வழங்கியதன் உட்பொருள். நசிகேதனைத் தன்வழிப்படுத்த, எமன் என்ன செய்தான்?

10 கருத்துகள்:

meenakshi சொன்னது…

வீட்டிற்கு வரும் விருந்தினர், ஒன்றும் வேண்டாம் கிளம்புகிறேன் என்று சொன்னால், கொஞ்சம் தண்ணியாவது குடிச்சுட்டு போங்க என்று சொல்லும் வழக்கமும் இன்றும் உள்ளது.
இந்த வெண்பாதான் படிக்கும் போதே புரிந்தது. உங்களோட அபிராமி அந்தாதி, இப்போ இந்த பதிவு என்று தவறாமல் படித்து வருவதால் எனக்கு கூட கொஞ்சம் நல்ல தமிழ் புரியுது. ஒரே பெருமைதான் போங்க! :)
இந்த வெண்பாவின் விளக்கமும் எளிமை, அருமை.

geetha santhanam சொன்னது…

கலவரக் கட்டுப்பாடு குறித்த கருத்துக்கள் அருமை. தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டால் தாமாகவே அதைத் திருத்தும் எண்ணமும் விளையும்; வழியும் பிறக்கும். நல்லா பாடமும் எடுக்கறீங்க.

பத்மநாபன் சொன்னது…

நீரின் சிறப்பை உணரவைத்துள்ளீர்கள்..

நீரினின்று அமையான் உலகு...இப்படி சொல்லிய அய்யன் மேலும் சொன்னது..புறத்தூய்மை நீரால் ,அகத்தூய்மை வாய்மையால் ..நீரின் சிறப்பு உணர்த்தியுள்ளார்..

எமனின் மேலாண்மை ..எதோ தவறு நடந்துவிட்டது என்று உடனடியாக புரிந்துகொண்டு சீர் செய்யும் வேகம் ..எமனும் நேர்மையாளன் என்பதை காட்டுகிறது....இது பெரிய கதைதான்...நேர்மையுள் நேர்மையை தேடுவது சாதாரணமான விஷயமா...என்ன ..

ஸ்ரீராம். சொன்னது…

நீரின் மகத்துவம் சொல்லியிருப்பது அருமை. சாதாரணமாக நாம் கடைப்பிடிக்கும் பழக்கங்களின் பின்னணியில் பல தத்துவங்கள்...!
//"இது அனைவருக்கும் தெரிந்தால் தன் செல்வாக்கு என்னாகுமோ என்று எமன் கலங்கினான்"//

தர்ம நெறி தவறி விட்டோமோ என்று எண்ணியிருப்பான். பாவம்...!

சிவகுமாரன் சொன்னது…

புதுவருட வாழ்த்து சொன்ன கையோடு புறப்பட்டுவிட்டேன்.ஆற அமர இப்போதுதான் காலன் வீடு (?) வந்தேன்.
முந்தைய வெண்பாவில் நெருப்பு பற்றி. இப்போது நீர் பற்றி.( அட கவிதை வரி போல இல்லை? நெருப்பு பற்றும். நீர் பற்றுமா?). விண்ணேகினான் என்று ஆகாயமும் தொட்டிருக்கிறீர்கள். காற்றும் , நிலமும் அடுத்தா ? Impression டெக்னிக் , crisis control போன்று மேலாண்மைத் திறன் பற்றிய விளக்கங்கள் மிக மிக அருமை.

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கு நன்றி meenakshi, geetha santhanam, சிவகுமாரன், பத்மநாபன், ஸ்ரீராம், ...

எமன் நசிகேதனை வசியம் செய்யும் விதம் என்னை மிகவும் கவர்ந்த கட்டம். கடைசியில் யார் யாரை வசியம் செய்தார்கள் என்பதே சுவையான குழப்பமாகிறது.

எமன் நசிகேதனுக்கு காட்டும் பரிவின் பின்னணியில் தன் தவறை மறைப்பது ஒரு புறம்; நசிகேதனை சோதனை செய்வது மறு புறம். எமனின் strategy games சுவையானவை என்று கருதுகிறேன்.

அப்பாதுரை சொன்னது…

உண்மை ஸ்ரீராம். நீர் வழங்குவது சாதாரண செயல் - பின்னணி ஆழமானது. கடோவில் இதைப் பெரிது படுத்திச் சொல்கிறார்கள். எமன் நசிகேதனுக்கு தண்ணீர் வழங்குவது யாகம் போல் சொல்கிறார்கள்.

அப்பாதுரை சொன்னது…

சபாஷ் சிவகுமாரன்.. நான் எழுதாவிட்டாலும் தானாகவே தெரிந்துவிடுகிறது பாருங்கள்! ஒத்த சிந்தை என்பது இது தான்.

காற்று மட்டும் தான் இனி.. மூச்சுக்காற்று. நிலத்தில் தொடங்கினோம்..விண்ணுக்குச் சென்றோம். உள்ளங்காலும் உச்சந்தலையும் இவையென்றால்.. இதையே கொஞ்சம் புரட்டிப் போட்டு ஐந்தையும் நம் உடலில் உருவகப்படுத்திக் காணமுடியும். ஐந்து வகை சக்திகளை நமக்குள் வைத்துக்கொண்டு நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் சக்தியைத் தேடி அலைகிறோமே?

'பற்று' மிகவும் ரசித்தேன்; நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நன்று பத்மநாபன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோனை வானுறையும் தெய்வத்துள் வைத்து ஒன்றரை வரியில் கடோவைச் சொன்னார் வள்ளுவர். அதற்கு மேலே ஒன்றுமே சொல்வதற்கில்லை!

துளசி கோபால் சொன்னது…

ஊரில் இல்லை. இன்றுதான் விட்டுப்போன பகுதிகளை வாசித்து முடித்தேன்.

ஒரு சொல்தான் சொல்ல முடியும். அருமை!

தொடருங்கள்.