வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/11

நசிகேதன் வேண்டிய முதல் வரம்


17
எந்தையார் சீர்பெற்றச் செய்தியொடு எம்மைநீர்
முந்தைய நாளுக்கே மீட்டனுப்பின் - சிந்தை
தெருளாகிச் சீறாதத் தந்தையே தந்து
அருளுவீர் ஆதி வரம்.

    ன் தந்தை வீடுபேறு பெற்றச் செய்தியுடன் என்னை மீண்டும் பழைய நிலைக்கே அனுப்புவதாக இருந்தால், தெளிவான அறிவுடன் கூடிய சினமற்றத் தந்தையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறேன்; இதை முதல் வரமாகத் தந்தருள வேண்டும் (என்றான் நசிகேதன்).

    தெருளாகி: தெளிவடைந்து, அறிவுடன் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் பெற்று



    தெருவில் போகிற முன்பின் அறியாதவரைக் கூட "என்ன சுகமா?" என்று புன்னகையுடன் விசாரிக்கத் தயங்க மாட்டோம். வீட்டிலே மனைவி, கணவன், பிள்ளைகளிடம் தினம் நலம் விசாரிக்கத் தயங்குகிறோம். 'அண்டியிருப்பவர் தானே?' என்ற அலட்சியம், மனித இயல்பாகும். பிள்ளைகள் நம் சொற்படி நடந்து, நம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்புகிறோம். அவர்கள் விருப்பப்படி நாம் நடக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. பெற்றோரின் செய்கைகளில் பிடிக்காத ஒன்றைச் சொல்லுமாறு வார இறுதியில் பிள்ளைகளைக் கேட்க வேண்டும்; ஏற்றத் திருத்தங்களைத் தத்தம் நடவடிக்கைகளில் புகுத்த வேண்டும். இந்தப் பழக்கம், 'பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் கூட்டுவதோடு, பெற்றோரிடம் உண்மையான நெருக்கத்தையும் உண்டாக்கும்' என்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் நம் பெற்றோர்களிடம் அவர்கள் தவறைச் சொல்ல துணிந்திருப்போம்? நம் தவறுகளைப் பிள்ளைகள் எடுத்துச் சொன்னால் நம்மில் எத்தனை பேர் கோபப்படாமல் பொறுமையாகக் கேட்போம்? 'அப்பன் அவனுக்கு பாட்டன் எல்லாம் இப்படித் தான் வளர்ந்தான் வளர்த்தான் வளர்ந்தேன், என் சந்ததியும் இப்படியே வளரும்' என்ற என் எண்ணம், இன்றுடன் ஒழிந்தால் நன்றாக இருக்கும்.

    ஒரு சிறு சமூகப் பரிசோதனை. வீட்டில் ஏதோ வேலையாக இருக்கிறீர்கள். ஒலிப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளையின் தொல்லை பொறாமல், கோபத்துடன் பிள்ளை கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கி ஒளித்து வைக்கிறீர்கள். சிறிது பொறுத்து, பிள்ளையிடம் பரிதாபமேற்பட்டு "உனக்கு என்ன விருப்பமோ கேள்" என்று ஆதரவாகப் பேசுவதாக எண்ணி வாக்களிக்கிறீர்கள். பிள்ளை, "பொம்மையைத் திருப்பிக் கொடு" என்றால், உங்களுக்குப் பிள்ளை மேல் அன்புண்டு என்று பொருள். "இனி நான் தொல்லை தரும்போது கோபப்படாமல், பொம்மையைப் பிடுங்காமல் இருக்க வேண்டும்" என்று பிள்ளை சொன்னால், பிள்ளைக்கு உங்கள் மீது அன்புண்டு என்று பொருள். முதல் வகை அன்பு, வெறும் கடமையினால் உண்டானது. இரண்டாம் வகை அன்பு, ஆழ்ந்த நம்பிக்கையினால் உண்டானது. ஆழ்ந்த நம்பிக்கை அன்பு பெற, உழைக்க வேண்டும்.

    கோபமற்றத் தந்தையை வரங்கேட்டப் புராணப் பிள்ளையின் பரிதாபநிலை நெஞ்சைத் தொடுகிறது. பெற்றோரின் அன்பை வரம் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இன்றும் சில பிள்ளைகளிருப்பது வருந்தத்தக்கது.

    'மீட்டனுப்பின்' என்பதை இரு வகையில் பொருள் கொள்ளலாம். 'மீண்டும் அனுப்புவதாக இருந்தால்' என ஒரு பொருள். 'மீண்டும் அனுப்புகையில்' என மற்றொரு பொருள். 'திருப்பி அனுப்புங்கள்' என்று நசிகேதன் கேட்கவேயில்லை. 'திருப்பி அனுப்புவதானால்.. தந்தைக்குப் பேறு கிடைத்தது என்றச் செய்தியுடன் என்னை அனுப்புவதானால்.. தெளிவான மனம் கொண்ட, கோபம் துறந்தத் தந்தையிடம் திருப்புங்கள்' என்று கேட்டான். இன்னொரு கோணம். அன்பில்லாத இடத்திற்குத் திரும்புவானேன்? அறிவில்லாத தந்தை தன்னை மறுபடி எமனுலகு அனுப்பினால்? அடுத்த முறை எமனுக்குக் கருணையில்லாது போனால்?

    எல்லாமறிந்து நசிகேதன் கேட்ட வரம், எமனை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். அவன் கேட்டது ஒரு வரமா? பல வரங்களா? தனக்காக வேண்டியதா? தந்தைக்காக வேண்டியதா? முதல் வரத்திலேயே எமன் தலையில் மிளகாய் அரைத்தான் என்று தோன்றுகிறது. தந்திரத்தில் நசிகேதன் எமனுக்கு இணை.

19 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

முதல் வரத்திலேயே பின்னி பின்னி எவ்வளவு செய்திகள்.. மீட்டனுப்பின் ...எமனுக்கு சரியான சோதனை.

// பெற்றோரின் செய்கைகளில் பிடிக்காத ஒன்றைச் சொல்லுமாறு வார இறுதியில் பிள்ளைகளைக் கேட்க வேண்டும் // இது புதிய சிந்தனையாக இருக்கிறது.. நடைமுறை படுத்தினால் முதலில் பட்டியல் நீளமாக இருக்கும்...அப்புறம் படிப்படியாக குறையும் வாய்ப்பு உள்ளது..

//பெற்றோரின் அன்பை வரம் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இன்றும் சில பிள்ளைகளிருப்பது // சில அல்ல பல குழந்தைகளுக்கு...

நசிகேதன் இப்பொழுது தீவிர மேலாண்மை ஆசிரியனாக மாறி வருவது இனிமையாக இருக்கிறது...

சிவகுமாரன் சொன்னது…

பிள்ளை வளர்ப்பு பற்றி.... யப்பா எவ்வளவு செய்திகள். நான் சரியாக வளர்க்கின்றேனா என்று என்னையே கேட்க வைக்கிறது. நசிகேதன் உங்களுக்கு ஒரு கருவி.அவ்வளவுதான்.நசிகேதன் உங்களையும் நீங்கள் எங்களையும் நிறைய யோசிக்க வைக்க, பிரமிப்போடு காத்திருக்கிறேன், அடுத்த வரத்துக்காக.

ஸ்ரீராம். சொன்னது…

மூன்று வரம்தான் என்று ஆன பின் கேட்கும் ஒரு வாரத்திலேயே பல வரங்களைக் கேட்கும் சாமர்த்தியம். ஊமைப் பையன் பேச வேண்டும், இறந்து போன என் மனைவி உயிரோடு வர வேண்டும் நான் கவலையில்லாமல் இருக்க வேண்டும் என்று மூன்று வரமாய்க் கேட்காமல் "கனிமழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும், கண்மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்.." என்ற பாடல் நினைவிற்கு வந்தது!

"பெற்றோரின் செய்கைகளில் பிடிக்காத ஒன்றைச் சொல்லுமாறு வார இறுதியில் பிள்ளைகளைக் கேட்க வேண்டும்"

நல்ல யோசனை.

அப்பாதுரை சொன்னது…

நன்றி பத்மநாபன், சிவகுமாரன், ஸ்ரீராம், ...

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் சொல்வது சரி, பத்மநாபன்.

பிடிக்காதது 'எல்லாம்' சொல் என்றால் லிஸ்ட் வளரலாம். அதுவும் என் போன்ற தந்தைகளிடம் லிஸ்டுக்கு அவசியமில்லை, புத்தகம் போடுமளவுக்கு வளரும்.

பிடிக்காத 'ஒன்றை'ச் சொல் என்றால், எதை 'முக்கியமாக'ச் சொல்ல வேண்டும் என்ற முக்கியப்படுத்தும் கலையும் பிள்ளைகளுக்கு வளரும் (நாமும் பிழைப்போம்:) முக்கியப்படுத்தும் கலை வாழ்க்கையில் மிக முக்கியம் - இதை நான் உணர்ந்த போது பாதி வாழ்க்கை ஓடி விட்டது. இதை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு உணர்த்த நாமே கருவியாக இருக்க ஒரு வாய்ப்பு!

ஒன்றோ ஒன்பதோ எதையாவது சொன்னால் சரிதான். சொல்வார்களா என்பதுதான் சந்தேகம்.

நானறிந்த வரை பிள்ளைகள் அம்மாவிடம் திறந்த மனதுடன் பேசுமளவுக்கு அப்பாவுடன் பேசுவதில்லை. பிள்ளைகளில் ஆண் பெண் வெவ்வேறு விதமாக நடக்கிறார்கள். இரண்டு வருடம் போல் திரும்பத் திரும்பக் கேட்டு பிறகு மெள்ள என்னிடம் பிடிக்காதது பற்றிப் பேசத் தொடங்கினான் மகன். மகளோ முதல் வாரத்தில், லிஸ்ட் போட்டு மாற்றதுக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று எழுதி, எப்போது மாறுவேன் என்று என்னையே தினம் நச்சரிக்கத் தொடங்கினாள். இப்போதெல்லாம் "சும்மா ஏன் கேட்கிறே டேடி.. உன்னால மாற முடியாதுனு தெரியும்.. ஜஸ்ட் லெட் கோ" என்று முதிர்ந்த அறிவுரை. பெண்கள்!

நம் பிள்ளைகளிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ளலாம். 'child is the father of man' என்பது மிக ஆழமான தத்துவம் எனலாம். கவியரசின் 'என்னைப் பார்த்து எனை வெல்லவும்' வரி புரிய வருடக்கணக்கானது.

மாறுகிறோமோ இல்லையோ, நம் செய்கைகளில் பிடிக்காதது ஒன்று சொல் என்று குடும்பத்தில் உடனிருப்பவர்களோடு - மனைவி கணவன் மக்கள் - கேட்க வேண்டும்; சொல்ல வேண்டும். ஒன்றுக்கு மேல் சொன்னால் குறை சொல்வது போலாகிவிடும். ஒன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் :)

காசை நம்பி உறவு வளர்க்கும் வெளியுலகில் 'performance review' என்று படாடோபம் செய்கிறோம்; குணத்தை நம்பி உறவு வளர்க்கும் குடும்ப சூழலில்.. எங்கே performance review மிக முக்கியமோ அங்கே அசட்டையாக இருக்கிறோம். அதனால் தான் காசுக்கு அடிமையாகிறோம் - இது என் கருத்து. யாரையும் புண்படுத்த எண்ணவில்லை; திரவியம் தேடுவது மனித இயல்பு. காசும் வளர வேண்டும்; குணமும் வளர வேண்டும்.

கேட்பதும் சொல்வதும் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் என்று நினைக்கிறேன். 'பேசவே மாட்டேங்குறோம்' போன்ற குறைபாடுகள் நீங்கும். "என் கிட்டே என்ன பிடிக்கலே"னு கேட்டமுனா லைன் கட்டிப் பேச வரமாட்டாங்களா? குடும்பத்துள் நெருக்கம் வளர அருமையான சந்தர்ப்பம். இன்றைய சமுதாய சூழலில் நெருக்கமும் நம்பிக்கையும் வளர நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

இவையெல்லாம் சொல்வது எளிது; செய்முறை மிகவும் அரிது. முயற்சி செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.

பத்மநாபன் சொன்னது…

மிக்க நன்றி ...இந்த பகுதியை அப்படியே வெட்டி ஒட்டி பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் ... மிக சரியாக சொன்னீர்கள் ,ஆயிரம் திட்டினாலும் ,அம்மாவிடம் தான் பிள்ளைகள் உண்மையான சுதந்திரமாக இருக்கிறார்கள் ....நம்மிடம் விளையாட்டு சுதந்திரமாக வேண்டுமென்றால் இருக்கிறார்கள் ( காமெடி பீஸ் , மொக்கை என்ற வகையில் ).. அம்மாவிடம் இமேஜ் கெடாமல் நல்லா பிள்ளைகளாகவே இருக்க விரும்புகிறார்கள் .

பதட்டப்படாமல் , இந்த சோதனையை ஆரம்பிக்க வேண்டும் ...ஆரம்பித்தாலே முக்கால் வெற்றி பெற்று விடுவோம் என நினைக்கிறேன் .

மீண்டும் நன்றி ..

geetha santhanam சொன்னது…

குழந்தை வளர்ப்பு பற்றி அருமையான யோசனைகள். முயற்சிக்கிறேன். நீ சொன்னதுபோல் குறையென்ன சொல் என்றால் லைன் கட்டி பேச வந்தால் கூட நாம் இன்னும் திருந்துவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகப் பொருள். குறை சொல்லக் கூட விரும்பாவிட்டால்தான் நம்மைத் தண்ணி தெளித்துவிட்டுவிட்டார்கள் என்று பொருள்.

அப்பாதுரை சொன்னது…

வருக geetha santhanam.
'குறையெல்லாம் சொல்' என்றால் வரிசையாகச் சொல்லக்கூடும். அடுத்தவரைக் குற்றம் சொல்ல நாமே கற்றுக் கொடுப்பது போல் ஆகிவிடும். 'எதற்காகக் கேட்கிறோம்' என்பதை முதலில் விளக்கி (ஐந்து வயது குழந்தைக்கு விளக்க முடிந்தால் அதுவே முதிர்ச்சியின் அடையாளம் தான்) பிறகு ஒரு குறையைச் சொல்லுமாறு கேட்டால், பிள்ளைகளுக்கு இதன் முக்கியத்துவம் விளங்கும். நாளடைவில் அவர்களுக்கு சின்ன விஷயங்களை ஒதுக்கும் பக்குவமும் வரும்.

(சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாலும், சொல்கிறேன். இது என் மனைவியிடமிருந்து கற்றது - எனக்கு அறிவு கிடையாது :)

geetha santhanam சொன்னது…

உங்கள் மனைவி மனோதத்துவம் படித்தவரல்லவா அதுதான் நல்ல யோசனைகள் தருகிறார். நானும் அதை பரீட்சித்துப் பார்க்கிறேன். நன்றி.

Jaleela Kamal சொன்னது…

//பெற்றோரின் செய்கைகளில் பிடிக்காத ஒன்றைச் சொல்லுமாறு வார இறுதியில் பிள்ளைகளைக் கேட்க வேண்டும்.//

நல்ல புதுமையான யோசனை./

வார இறுதியில் நான் எப்பவாவது என் பையனிடம் கேட்பது, நம்மை பற்றி என்ன சொல்கிறான் என்று.


முக்கியமான பாயிண்டு களைகொஞ்சம் இடைவெளி விட்டு எழுதினால் நல்ல இருக்கும் இல்லை அதை போல்டாக்கிடுங்க

பெயரில்லா சொன்னது…

சார்,

இது இயல்பாகவே எல்லா வீடுகளிலும் வேறுவிதமா கேட்கபடுகின்றதா நினைக்கிண்ரேன். குழந்தைடம் "உனக்கு அப்பாவை புடிக்குமா, இல்ல அம்மாவை புடிக்குமா" என்ற கேள்வி. கேள்வி என்னவோ தவறானாலும், அதற்கடுத்த ஆய்வில் யாரும் இறங்குவதாய் அதிகம் தெரிவதில்லை.

அது ஏன், சரி பிடிக்காதவர் இனி என்ன செய்தால் உனக்கு பிடிக்கும் என்று கேட்டு அதை செய்யவாவது முயற்சிக்கின்றார்கள?

"இது என்னவோ, சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தோட கிளைமாக்ஸ் போல இருக்கும்"

ஆனால், ரஜினி சொன்ன மாதிரி குடும்பத்தில் "கல்யாணம் ஆனவருக்கோ ஆயரதெட்டு பிரச்னை" என்பதால் கேள்வி கேட்க நேரம் கிட்டுவதே அதிகமோ!? அனுபவஸ்தர்கள் தான் சொல்லவேண்டும்.
s.நாதன்

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி Jaleela Kamal. படிப்பதற்கு எளிதாக்க முயற்சிக்கிறேன்.

உங்கள் பின்னூட்டத்தைக் கவனிக்கத் தவறியதற்கு வருந்துகிறேன்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//கேட்பதும் சொல்வதும் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் என்று நினைக்கிறேன். 'பேசவே மாட்டேங்குறோம்' போன்ற குறைபாடுகள் நீங்கும். "என் கிட்டே என்ன பிடிக்கலே"னு கேட்டமுனா லைன் கட்டிப் பேச வரமாட்டாங்களா? குடும்பத்துள் நெருக்கம் வளர அருமையான சந்தர்ப்பம். இன்றைய சமுதாய சூழலில் நெருக்கமும் நம்பிக்கையும் வளர நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.//


Sorry, only in NEXT BIRTH

அப்பாதுரை சொன்னது…

சரியான பாயின்டு நாதன்!
வீட்டில் கேட்கத்தான் செய்கிறோம் - ஒருவேளை அப்பா-அம்மா என்கிற போட்டியை பிள்ளையின் மனதில் ஏற்படுத்துவதால் விவரங்கள் வெளி வருவதில்லையோ? அப்பாவைப் பிடிக்குமா அம்மாவைப் பிடிக்குமா என்பதற்குப் பதில் அப்பாவிடம் என்ன பிடிக்காது அம்மாவிடம் என்ன பிடிக்கும் (vice versa) என்று கேட்டுப் பார்க்க வேண்டுமோ? (இந்தக் குறிப்பிட்ட கேள்வி 'அம்மா'வின் மனதையும் குளிற வைக்கும் :)

அப்பாதுரை சொன்னது…

:) சாய்.

பெயரில்லா சொன்னது…

// :)//

Unga baaniye thani sir :)

Inikkum karumbinaal adithaal vadu theriyaathaam, ellam ullkuthu maathri thaan irukkumaam. Polish nanban sonnathu. unmayaa?

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//அப்பாவைப் பிடிக்குமா அம்மாவைப் பிடிக்குமா என்பதற்குப் பதில் அப்பாவிடம் என்ன பிடிக்காது அம்மாவிடம் என்ன பிடிக்கும் (vice versa) என்று கேட்டுப் பார்க்க வேண்டுமோ?//

இதை கேட்டு வேறு தெரியணுமா ?

எப்படி கேட்டாலும் என் வீட்டில் என்னை யாருக்கும் பிடிக்காது என்பது தான் என்றோ தெரிந்த விஷயம் ஆயிற்றே !

மோகன்ஜி சொன்னது…

மன்னிக்கணும் மக்களே! லேட்டாயுடிச்சு..
அப்பாஜி ! யதார்த்தமான ஒரு வழிமுறையை சொல்லியிருக்கிறீர்கள். நீங்க சொல்வது போல் 'இது குறைகாணல் வாரம்' என்று கொண்டாடிவிடுவார்கள் தான்!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தவம போல் செய்யப்படவேண்டும்.. குழந்தைகள் பெற்றபின்,பெற்றோரின் தலையாய குறிக்கோள் "man making process(&woman making process) என மாற வேண்டும்.
மனதில் தோன்றுவதை,தயக்கமும் பயமும் இன்றி,மரியாதையையும் குறைக்காமல் குழந்தைகள் சொல்லக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.அது ஓர் நாளில் வருவதல்ல.. அன்பும் பிடிப்பும் செல்லம் கொடுப்பதிலிருந்து வேறு படுபவை.என் குழந்தைகளை இப்படித்தான் வளர்த்தேன் என்று நம்புகிறேன் ..FEEDBACK will be a continuous and natural.
நம் பிள்ளைகளிடமும், மனைவியிடமும் நமது reactionsஐ கொஞ்சம் கவனத்துடன் செய்தால்கூட பல மனக்குறைகளைத் தவிர்க்கலாம்.
சாய் காமென்ட் ரசித்தேன்..
பத்மநாபனின் எசப்பாட்டு அற்புதம்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//மோகன்ஜி சொன்னது…

நம் பிள்ளைகளிடமும், மனைவியிடமும் நமது reactionsஐ கொஞ்சம் கவனத்துடன் செய்தால்கூட பல மனக்குறைகளைத் தவிர்க்கலாம்.//

Next birth again.