வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/05/27

அறிவிலார் தம்பெருமை பேசுவார்


47
கிணற்றுள் கடற்குளியல் காணும் அறியார்
சுணக்கராய்த் தம்பெருமை சொல்வார் - கணமும்
குருடர்பின் போகும் குருடரைப் போலே
இருளில் இருப்பார் இவர்.

   றிவற்றவர்கள், குறுகிய கிணற்றுக்குள்ளே முங்கிவிட்டு பெருங்கடலிலே மூழ்கிக் குளித்தது போலே வீண்பேச்சு பேசும் இயல்பினர்; விடாமல் குரைக்கும் நாயைப் போல இவர்கள் தம்பெருமை பேசுவர். குருடரை எந்நேரமும் பற்றித் தொடரும் குருடருக்கு இருளை விட்டு வெளிவர வாய்ப்பில்லாதது போலவே, அறிவுக்குருடர்களைத் தொடர்ந்து அறியாமை எனும் இருளிலே தடுமாறி வாழ்வர் அறிவற்றவர் (என்றான் எமன்).


சுணக்கர்: நாய் போன்றவர்

['..desire, greed, arrogance and ego.. the fire of ignorance destroys the world' - guru granth sahib ]

    ற்பெருமை பலவிதங்களில் வெளிப்படுகிறது.

    தன்னுடைய சாதனை மற்றும் பெருமைகளையே தொடர்ந்து பேசி, அடுத்தவரை எரிச்சல் படுத்தும் வகையை அறிவோம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வகையில் விழுந்து எழுந்தவர்கள் எனலாம். அனுபவங்களின் காரணமாக, வளரும் வயதில் முதலில் விழும் பழுது தற்பெருமை என்பார்கள். வளரும் வயதில் விழாது போனால் வாழ்நாள் முழுதும் தொடரும் பழுது என்றும் சொல்லப்படுகிறது.

   தன்னைப் பற்றிய பெருமைகளைப் பேசுவது மட்டும் தற்பெருமை அல்ல. தன் பெருமையைப் பற்றிப் பேசாமலே தற்பெருமைக்காரர் ஆகலாம். எப்படி?

   யார் எதைச் சொன்னாலும், அதற்கு எதிராக ஒன்று சொல்லித் தன்வயப்படுத்தும் பேச்சு ஒரு வகைத் தற்பெருமை ஆகும். இது சாதாரண பேச்சில் தொடங்கி மிகத் தீவிரமாகப் போகலாம். தன்னுடைய அறிவே மேன்மையானதென்று பல வகையிலும் தெரிவிக்கும் குணம்.

   பிறர் கருத்துக்களை மதிக்காத குணமுடையவர்கள் தற்பெருமைக்காரர் ஆவர். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவும் நேரம் இல்லை இவர்களுக்கு. அடுத்தவரைப் பேசவிடாமல் தம் கருத்துக்களைத் திணிப்பவர்கள். அல்லது, அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளவும் முயலாமல், தம் கருத்தை அடுத்தவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே திணிப்பவர்கள். எப்பொழுதும் தன்னைப் பற்றிய கவனத்தில் இருப்பதாலும், அடுத்தவர் கவனத்தையும் தன்வசம் திருப்ப முயல்வதாலும், இவர்கள் தற்பெருமைக்காரர்கள்.

   பிறருடைய பெருமைகளைப் பாராட்டாமல், அலட்சியம் செய்வோர் அல்லது மிகையாகச் சிறுமைப்படுத்துவோர் இன்னொரு வகைத் தற்பெருமைக்காரர்கள். பரம்பரைப் பெருமை, குலகௌரவம் போன்ற போலிப் பெருமைகளைப் பேசிப் பேசி நேரத்தையும் நேசத்தையும் வீணடிப்பவர்கள். கணவன், மனைவி, பிள்ளை, நட்பு என்று யார் எதைச் சாதித்தாலும் தன் காலத்தில் நடந்தவற்றையே சொல்லி, மிகக் கேவலமான விதத்தில் பிறரின் வெற்றிகளை ஏளனம் செய்பவர்கள்.

   தான் செய்தவற்றை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்துச்சொல்லி, அதற்குப் பலனோ நன்றியோ எதிர்பார்ப்பவர்களும் தற்பெருமைக்காரர்களே. பெற்ற பிள்ளையை வளர்த்த தந்தையும் தாயும், அதற்கான நன்றி எதிர்பார்த்ததால், இறந்தபின் அவர்களுக்குக் கிடைத்தத் தண்டனைகளைப் பற்றிய native american folk tale ஒன்று உண்டு.

   தற்பெருமை என்பது கரையான். புற்றுநோய்க் கிருமி. அரித்து அரித்து அழிவு ஏற்படுமே தவிர, குணமாவது மிக அரிது. எந்த விதத்தில், எந்த அளவில், எந்த முறையில் தற்பெருமை வெளிப்படும் என்பதைக் கணிப்பதும் அரிது. சுயநலம், பொறாமை, ஆத்திரம், கோபம், பொய், பேராசை என்று பல மனநோய்களுக்குத் தற்பெருமை - தன்னைப் பற்றிய அளவில்லாத உணர்வு, narcissism - காரணம் என்கிறார்கள். தற்பெருமை நிறைந்த மனங்களுக்குத் தாம் வியாதியில் வாடுவது புரிவதில்லை.

   குடும்பத்தில் (அல்லது வெளியிடங்களில்) நாள்தோறுமோ வாரத்தில் ஒரு முறையோ, உடன் பழகுவோருடன் 'சொல்லாலும் செயலாலும் மனம் புண்பட' நடந்ததைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது பயன்தரும் என்கிறார்கள். சுயநல பழக்கங்கள் குறையும் என்கிறார்கள். மன்னிக்கும், மறக்கும் குணமும் வளரும் என்கிறார்கள்.

['கண்ணை மறைக்கும் பெருமைகளாலே தன்னை இழக்கும் வீரரைப் போலே' - கண்ணதாசன் ]

    "இன்பங்களைப் பெருக்குவதிலே கவனமாக இருப்பார்கள் என்றேன் அல்லவா? அறிவற்றோரை மேலும் அடையாளம் காட்டுவேன்" என்று எமன் தொடர்ந்தான். "தற்பெருமை பேசித் திரிபவர்களும் அறிவற்றவர்களே" என்றான்.

   "தம் பெருமையைப் பேசுவதில் என்ன தவறு?" என்றான் நசிகேதன்.

   "நாய் குரைக்கிறது. ஒரு முறை குரைத்தால் நாயைப் பாராட்டித் தட்டிக் கொடுக்கிறோம். இரண்டாவது முறை குரைத்தால், ஏனென்று பார்க்கிறோம். தொடர்ந்து குரைத்தால் நாராசமாக ஒலிக்கிறது. நாய்க்கு வெறி பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம். எதற்கு நாயுடன் பழகினோம் என்று வெறுத்து நாயை அடித்து விரட்டுகிறோம், அல்லது, நாய்க்குப் பயந்து நாம் ஓடுகிறோம்.

   தற்பெருமை பேசித் திரிவோர், குரைக்கும் வெறிநாய் போல் பிறருக்குத் தோற்றமளிக்கிறார்கள். குரைக்கும் நாய் தனக்கு வெறி பிடித்திருப்பதை அறிவதில்லை. தற்பெருமைக்காரர்களும் அவ்வாறே அறியாமல் நடக்கிறார்கள்.

   தற்பெருமை கொண்டவர்கள் தன்னால் முடியாதது எதுவுமில்லை என்று நினைப்பார்கள். தன்னை விட எதுவும் எவருமே உயர்வில்லை என்று கருதுவார்கள். தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று நினைப்பார்கள். தான் பாராதது, புரியாதது எதுவுமே இல்லை என்று நினைப்பார்கள். தன்னைச் சுற்றியே எல்லாம் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வீணர்கள்.

   கிணற்றுக்குள் முங்கிக் குளித்து விட்டு ஆழ்கடலில் மூழ்கி முத்துக்குளித்தது போல் வீணாகப் பேசுவார்கள். எந்தச் சொல்லையும் செயலையும் எண்ணத்தையும் தன்னையோ தன் பெருமையையோ சுற்றிவரச் செய்வார்கள்.

   இருளில் கிடந்தாலும் தன்னைச் சுற்றிய இருள் மிக இருண்டது என்று வீண் பெருமை கொள்ளும் பேதைகள்.

   கண்ணிழந்த குருடர்கள், பார்வை மிகுந்தோரை வழிகாட்டியாக ஏற்றுப் பின்பற்றினால், போகும் வழியறிவார்கள். அதைவிட்டு, இன்னொரு குருடரைப் பின்பற்றினால் அவர்களுக்குத் தாங்கள் போகவேண்டிய பாதை தெரிவதில்லை. தற்பெருமைக்காரர்களும் அப்படியே. தான், தன் மக்கள், தன் சுற்றம், தன் இனம் என்று தற்பெருமை வட்டத்துக்குள் சுழல்வதால், ஒருவரையொருவர் தொடர்ந்து, இவர்கள் அறியாமை இருளில் வீழ்ந்து விடிவேயில்லாமல் கிடக்கிறார்கள்" என்றான் எமன்.

   "அப்படியென்றால் இவர்களின் கதி?" என்றான் நசிகேதன்.

   "அறிவற்றவர்களை முழுதும் அடையாளம் காட்டிவிட்டு, அவர்களின் கதியைப் பற்றிச் சொல்கிறேன். கவனமாகக் கேள்" என்றான் எமன்.

14 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

கிணற்றுள் கடற்குளியல்
குருடரைக் கட்டும் குருடர்
--அருமையான உதாரணங்கள். வெண்பா மிக அருமையாக இருக்கிறது.

சிவகுமாரன் சொன்னது…

பார்வையற்றவர்கள் சாலையை கடப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒருவர் பின் ஒருவராக முன்னாள் உள்ளவர் குச்சியை நீட்டிக் கொண்டும் தட்டிக் கொண்டும் நடக்க , அவரைப் பிடித்துக் கொண்டு ஐந்தாறு பேர் , பிறர் உதவியின்றி சாலையைக் கடப்பார்கள்.
" குருடரைக் கட்டும் குருடர்" - தன்னம்பிக்கை மிக்கவர்கள் என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது. ( இதைத்தான் குருட்டு நம்பிக்கை என்கிறார்களோ? )

ஸ்ரீராம். சொன்னது…

/"தன்னைப் பற்றிப் பேசுவது மட்டுமல்லாமல் எதிராளியைப் பேச விடாமல் தானே பேசுவதும் தற்பெருமையே...."//

நிறையப் பேரை இப்படிப் பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் வரும்போதே என்னைப் பற்றிய சிந்தனை கூடவே வந்தது! நான் என்னென்ன செய்கிறேன் என்று சிந்திக்க வைத்தது. இனியாவது பேசுவதைக் குறைக்க வேண்டும் என்று தோன்றியது.
துணைக்கழைத்த கண்ணதாசன் வரிகளும் பொருத்தமாய்....

Santhini சொன்னது…

பலவிதமாம் பூதம் பொய் புவனம் பொய்யே
யுரைதருபா வாபாவ மியாவும் பொய்யே
யுற்பத்தி திதிநாச மனைத்தும் பொய்யே
விரிவுபெறு போகம்பொய் பந்தம் பொய்யே
விடயமுத லியாவும் பொய் விதியும் பொய்யே
சுருதியோடு நூலும்பொய் சொல்லும் பொய்யே
சுககனமாம் பரபிரம மொன்றே மெய்யாம்
.........
தகுகுரவன் சீடன்பொய் குணதோடம் பொய்
.......
பரவியிடு முலகும் பொய் யுயிர்களும் பொய்
பந்தமொடு மோட்சசுக துக்கம் பொய்யே
....
சுத்தமதா மனதும் பொய் வாக்கும் பொய்யே
...
எனக்கயலாய்த் தூலமுதற் றேகமில்லை
எனக்கயலாய் நனவுமுதலவத்தை இல்லை
எனக்கயலாய் விசுவன்முத லாருமில்லை
...
எனக்கயலா யாந்தரமாஞ் சகத்துமில்லை
எனக்கயலா எவையுமில்லை பிரம மேநா
னென்று உரமா இருந்திடுவோன் சீவன் முக்தன்

எனக்கயலாய் தீர்த்தமில்லை தானமில்லை
எனக்கயலாய் தலங்கலில்லை தெய்வமில்லை
எனக்கயலாய் தெய்வத்தின் சேவையில்லை
எனக்கயலாய் தருமமில்லை பாவமில்லை
எனக்க்யலாய் ஞானமில்லை மோட்சமில்லை
எனக்கயலாய் வேதமில்லை நூலுமில்லை
எனக்கயலாய் விதியுமில்லை நிதேதமில்லை
எனக்கயலாய் பூதமில்லை புவனமில்லை
எனக்கயலா ஒருமையில்லை இருமை இல்லை
எனக்கயலா உயர்வுமில்லை தாழ்வுமில்லை
எனக்கயலா புகழ்வுமில்லை இகழ்வுமில்லை
.......
யான்பிரம மென்ருனர்வோன் சீவன் முக்தன்

-----ரிபு கீதையிலிருந்து ......இந்த தற்பெருமையை என்ன செய்யலாம் ???

Santhini சொன்னது…

ரிபு கீதை: வட மொழி சிவா இரகசியத்திலுள்ள ஆறாவது அம்சத்தின் நான்காவது அத்தியாயம் முதல் நாற்பத்தி ஏழாவது அத்தியாயம் வரையிலான சுலோகங்களின் விரிந்த மொழிபெயர்ப்பே தமிழ் ரிபு கீதை.
அருணாச்சல சுவாமிகளின் உத்தரவுப்படி திருவிடைமருதூர் ஸ்ரீ பிட்சு சாஸ்திரிகள் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தார். பதிப்பு: ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை.

--

பத்மநாபன் சொன்னது…

கடலென நினைத்து கிணற்றுக்குள் குளியல் ...சிறந்த உதாரணம் அறிவின்மையை அறிவாய் காட்டுவதற்கு ...
// இருளில் கிடந்தாலும் தன்னைச் சுற்றிய இருள் மிக இருண்டது // இப்போதைய கால கட்டத்தில் தற்பெருமையின் தாக்கம் மிக மிக அதிகரித்துவிட்டது.. அமைதியான வாழ்வென்பதே வழக்கொழிந்து வருகிறது ...தற்பெருமைக்கு எரிபொருளாக ஒப்பிடும் தன்மையும் பேராசையும் கூடி நன்றாக எரிய வைக்கிறது ... எமனின் அறிவு / அறிவின்மை நல்ல விளக்கம்....

மோகன்ஜி சொன்னது…

தற்பெருமை பற்றி பலகோணத்திலும் உங்கள் அலசல் மிகவும் சிந்திக்கத் தகுந்தது..

ஆதாரமாய் மனிதன் தன்வயமானவன். தன் கோணத்தில் தான் எதையும் பார்ப்பது.. சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது பெரும்பாலும் தன்னை பிறர் உதாசீனப்படுத்திவிடக் கூடாது என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு மனநோய்.

"நான்" செத்தால் ஆனந்தமே!

மோகன்ஜி சொன்னது…

எழுத விட்டுப்போய் விட்டது... வெண்பா மிக சுகமாய் இருந்தது..

meenakshi சொன்னது…

தற்பெருமை அலசல் அபாரம். தற்பெருமைகாரர்களில்தான் எத்தனை விதம். இதில் நான் எந்தவிதம் என்பதை அறிந்து கொண்டேன். ஸ்ரீராம் எழுதி இருப்பது போல் சுய அலசல் தேவைதான். வாழ்வில் இது மிகவும் முக்கியமானது, இன்றியமையாதது. மாதத்தில் இருமுறையாவது மௌன விரதம் இருக்க பழகி கொள்ளவேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். . முதலில் இதை ஒரு முறையாவது முயன்று பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் விருப்பம்.

தான் கெட்ட குரங்கு, வனத்தையும் சேர்த்து கெடுத்துதாம்! அறிவில்லார் செயலும் இது போலத்தான், அல்லவா!

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன், ஸ்ரீராம், Nanum, பத்மநாபன், மோகன்ஜி,...

அப்பாதுரை சொன்னது…

ரிபுகீதை விவரத்துக்கு நன்றி Nanum.
வழக்கம் போல் உங்கள் பரந்த ஆன்மீக வீச்சு திகைப்பிலும் திளைப்பிலும் ஆழ்த்தியது. superb! தமிழ் நூலை அடுத்த சென்னைப் பயணத்தின் போது தேடிப்பிடிக்க வேண்டியது தான்.

உங்கள் கமெந்ட் பார்த்த பிறகு தேடியதில், பிரம்மகீதை என்பதையும் சேர்த்து மூன்று கீதைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். சிவகுமாரன் கவனிக்க :)

[மெமோரியல் டே வார இறுதிக்காக நண்பர்களுடன் இரண்டு நாள் ஆற்றில் குளிக்கப் போயிருந்தேன். திரும்பத் திரும்ப ரிபு கீதையின் 'எனக்கயலாய்' வரிகள் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. எனக்கே பயமாகி விட்டது - திரும்பி வருவேனே அப்படியே துணியோடு எங்கேயாவது கிளம்பி விடுவேனோ என்று :)]

அப்பாதுரை சொன்னது…

குருடர்கள் தங்களுக்குத் தாங்களே உதவுவது தன்னம்பிக்கையா தெரியவில்லை, சிவகுமாரன்.

இந்தப் பாடலின் contextல் 'ஒரு குருடர் இன்னொரு குருடரைத் தொடருவதால் அவர்களுக்கு இருள் தான் கதியே தவிர, ஒளியைப் பற்றி அறிய வாய்ப்பில்லை' என்பதே கருத்து. (உண்மையில், இருளைப் பற்றியும் அறிய வாய்ப்பில்லை - காரணம் இருள் என்றால் என்ன என்று புரிய ஒளியைப் பற்றித் தெரிந்தாக வேண்டுமே? 'our days are darker than your nights' - milton. குருடர்களுக்கு இருளும் ஒளியும் ஒன்று தான். இந்த socratic வாதம் நமக்குள் இருக்கட்டும் :)

குருடர்கள் தங்கள் பார்வைக்காக இன்னொருவரை நம்புவது இயலாமையின் காரணமாக என்ற யதார்த்த நிலையின் கண்ணோட்டத்தில், இன்னொரு குருடரை நம்புவதால் மோசம் போக சாத்தியம் அதிகம். அதைத் தான் பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.

'குருடரைத் தொடரும் குருடர்' என்று தான் வடமொழிப் பாடலில் வருகிறது. 'blind leading the blind' என்ற ஆங்கிலத் தொடர் (விவிலியத்தில் வருவது - மிகப் பிரபலமான ஆங்கில quote), கடோபனிஷதிலிருந்து வந்தது என்று பரவலாக நம்பப் படுகிறது. கடோவின் காலம் பைபிளுக்கு 400லிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது குறிப்பிடத்தக்கது.

'குருடரைக் கட்டும்' என்பது கொஞ்சம் positive ஆகத் தோன்றியதன் காரணம் புரிகிறது. அது என் பிழையே. 'குருடர்பின் போகும்' என்று மாற்றி விட்டேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி - இல்லையென்றால் இது தோன்றியிருக்காது. மிகவும் நன்றி. இப்போது கருத்து ஒன்றிப்போகிறதா சொல்லுங்கள். நன்றி.

இன்னொன்று.. சொன்னால் politically incorrectஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். குருடர்கள் சாலை கடக்கையில் குச்சி தட்டி நடப்பது primarily மற்றவர்களின் கவனத்துக்காக வேண்டி. குச்சியைத் தட்டி நடந்தாலும் குழியில் விழக்கூடும். தட்டும் ஒலி கேட்டு அண்மையில் இருப்பவர்கள் அவர்களுக்குத் தேவையான எச்சரிக்கையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையால். அடுத்த முறை குருடர்களைக் கண்டால், முடிந்தால் கேட்டுப் பாருங்கள். பழக்கத்தின் logicஐ சொல்வார்கள்.

குருட்டு நம்பிக்கை என்று நீங்கள் சொல்வது மிகச்சரி. இன்னொருவர் செய்வதால் சரியாகத்தான் இருக்கும் என்ற அடிப்படை security அல்லது போலி security.

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi. 'தானும் கெட்டு வனத்தைக் கெடுத்த குரங்கு' இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஏதாவது கதை உண்டா பின்னணியில்?

ஸ்ரீராம், meenakshi,... தற்பெருமை வகைகளைப் பற்றி எழுதியது எவரையும் அடையாளம் காட்ட அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளாதீர்கள். (இதை எழுதிப் படித்ததும் ஒவ்வொரு வகையிலும் என்னைப் பார்க்க முடிந்தது!)

இது போன்ற கருத்துக்கள் சில நேரம் முகம் பார்க்கும் கண்ணாடிகளாய்த் தோன்றக் காரணம் நம்முடைய தேடல்களே. அடிப்படையில் பெரும்பாலும் மனிதநேயம் மிக்கவர்களாய் நடந்து கொள்கிற வரையில் இது போன்ற முகக்கண்ணாடிகள் அவ்வப்போது நம்மை பாதிப்பதில் தவறில்லை. முகக்கண்ணாடி இல்லாமலும் நம்மை நாம் தெரிந்து கொள்ளலாம். (Nanum எழுதிய கருத்து ஒன்றைப் புரட்டிப் போட்டது.. ஹிஹி :)

சிவகுமாரன் சொன்னது…

எனக்குத் தோன்றியதை எழுதினேன் அப்பாஜி. அதன் மூலம் , தங்களிடம் நல்ல விளக்கம் புதிய கோணத்தில் கிடைத்தது. நன்றி