வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/05/20

அறிவுளோர் நல்வழியே நாடுவார்


45
நேற்றூர்ப் பயணத்தில் நித்தம் புதிர்போலே
மாற்றூர் வழியிரண்டும் முன்வரும் - ஆற்றும்
அறிவிலார் இன்பவழி நாட நடப்பார்
அறிவுளார் நன்மை அறிந்து.

   வாழ்க்கைப் பயணத்தில் இன்பம், நன்மை எனும் ஊர்களுக்கான வேறு பாதைகள் தினமும் தோன்றும். பகுத்தறிந்து செயலாற்றும் அறிவற்றவர்கள் இன்பவழியை விரும்புகையில், அறிவுள்ளவரோ நல்வழி அறிந்து நடப்பர் (என்றான் எமன்).


ஆற்றும்: செயல்படுத்தும்
நேற்றூர்: வாழ்க்கைப் பயணத்தின் முடிவு, நடந்தது


['One is after this. One is after that. One seems to seek joy. One seems to shun joy. Still both enjoy. Both are after pleasure and peace. The killer kills. The healer heals. Still both pursue the same' - Kannan Gopinathan (Poems by Kannan Gopinathan) ]

    ரு கதை.

புத்தூர் திறப்பு விழா. புத்தூரில் செல்வமும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருக்கெடுப்பதாகக் கேள்விப்பட்டு மக்கள் திரண்டு வந்து கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்குப் புத்தூரில் கடவுள் வேறு அசலில் இருப்பதாகச் சொல்வதால், புத்தூரை அடைய மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது.

புத்தூர் வழியின் தொடக்கத்தில், 'வழிகாட்டி' என்று ஒரு பெரிய அறிவிப்பை மாட்டி, அங்கே ஒருவர் வருவோருக்கு ஏதோ ஒரு அடையாளம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னே, 'புத்தூர் போகும் வழி' என்று இரண்டு பாதைகள் தொடங்கின.

அடித்துப் பிடித்து முன்னேறி வந்த நபர் வழிகாட்டியிடம் கேட்டார், "யாருங்க நீங்க?"

"நான் கடவுளின் காரியதரிசி" என்றார் வழிகாட்டி.

"ஆமா, புத்தூருக்கு எந்த வழி? அங்கே கடவுள் இருக்குறதா சொல்றாங்களே? பாக்கலாமா?"

"அதோ போட்டிருக்கு பாருங்க, 'புத்தூர் போகும் வழி'னு.. அதுல போங்க. அவசியம் கடவுளைப் பாக்கறது என்ன, கடவுளோடு சேர்ந்தும் வாழலாம்"

"அட, ரெண்டு பாதை இருக்கேய்யா? ரெண்டுமே புத்தூர் போகும்னு போட்டிருக்கு? என்னா கிண்டலா? இல்லே ரெண்டு புத்தூர் இருக்குதா? என்னய்யா சமாசாரம்?"

"ரெண்டுமே புத்தூர் போற வழிதாங்க"

"அப்போ எதுலயா போறது?"

"கொஞ்சம் இருங்க" என்றார் வழிகாட்டி. கையிலிருந்த குறிப்பைப் படித்து விட்டு, "இதா இதுல போனீங்கன்னா மகிழ்ச்சிப் பாதைனு போட்டிருக்குதுங்க. அதா அந்தப் பாதைல போனீங்கன்னா.. அட, அதும் மகிழ்ச்சிப் பாதைனு போட்டிருக்குதே?" என்றார். பிறகு யோசித்து, "எதுக்கும் இந்த மகிழ்ச்சிப் பாதைல போங்க" என்றார்.

சற்று சிந்தித்த நபர், "யோவ்.. காரியதரிசி.. ரெண்டும் மகிழ்ச்சிப் பாதைனு சொல்லிட்டு என்னாத்துக்கு இதுல போனு சொல்றே?" என்றார். "நான் அந்தப் பாதைல போறேன்" என்றபடி, அடுத்தவரிடம் தன் தெரிவைச் சொல்லிவிட்டுப் புத்தூருக்கான மகிழ்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தார். காரியதரிசி வருவோரிடம் எல்லாம் அதே பாணியில் வழிகாட்டிக் கொண்டிருக்க, வந்தவர்கள் எல்லோரும் கொஞ்சம் யோசித்துவிட்டுத் தங்களுக்குத் தோன்றியப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நபர் நூறு அடி நடந்திருப்பார். கீழே பொற்காசுகள் கொட்டியிருந்தன. அள்ளிக் கொண்டார். ஒரே மகிழ்ச்சி அவருக்கு. இன்னும் நடந்தார். சற்று தூரத்தில் ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடிக் களித்துக் கொண்டிருந்தனர். அங்கே போனதும் அவருக்கும் பாடத் தெரிந்து விட்டது, ஆடத் தெரிந்து விட்டது. மகிழ்ச்சியில் குளிர்ந்து போனார். இன்னும் கொஞ்ச தூரம் நடந்தார். அறிவகம் என்று ஒரு குடிசை வாசலில் எழுதியிருந்தது. நுழைந்தார். உள்ளே யாருமில்லை. வியந்தபடி, திறந்திருந்த பின்வாசலில் வெளிவந்தார். அதுவரை முறையாக எழுதப்படிக்க அறியாதவர், உடனே ராமாயணக் காவியத்தை எண்சீர் விருத்தத்தில் சரளமாகப் பாடத் தொடங்கினார். மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தார். அழகுக்குளம் என்ற அறிவிப்புடன் ஒரு சிறு குளம் மின்னியது. உடனே அதில் மூழ்கி எழுந்தார். பெற்ற உடலகழும் உடையழகும் அவரையே ஒரு கணம் சிலிர்க்க வைத்து விட்டது. 'ஆகா!, நல்ல வேளை இந்த வழியில் வந்தோமே!' என்று தனக்குள் மகிழ்ந்தபடி நடந்தார். சற்றுத் தொலைவு வந்ததும் அழகான பெண் ஒருத்தியைக் கண்டு, மையல் கொண்டார். தன் காதலைத் தெரிவித்து உடனே அவளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்னும் சற்றுத் தூரம் வந்ததும், ஒரு கடையில் ஒருவர் தங்கத்தால் ஆன சாவிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். "என்னங்க இது?" என்றார் நபர். "புத்தூர்ல புது வீட்டுக்கான சாவிங்க" என்றார் கடைக்காரர். நாலைந்து சாவிகளை எடுத்துக் கொண்டு, நபர் மனைவியுடன் புத்தூருக்கு நடந்தார். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தார். ஒரு வழியாகப் புத்தூர் வந்தார் நபர்.

நபரைப் போலவே, வழியில் பொன்னும் பொருளும் மண்ணும் துணையும் இன்னும் பெற்றபடி, அந்த வழியில் வந்தவரெல்லாம் பெரும் மகிழ்ச்சியோடு புத்தூர் அடைந்தார்கள்.

புத்தூர் வந்த நபர், கடவுளைப் பார்த்துவிட்டு வரலாமென்று மனைவியை அழைத்துக் கொண்டுக் கிளம்பினார். கடவுள் தோட்டத்தில் ஒரே கூட்டம். வரிசையில் சேர்ந்து அக்கம் பக்கத்திலிருந்தவரிடம் பேசத் தொடங்கினார். தனக்குப் பொன் கிடைத்த விவரம் சொன்னார். அருகில் இருந்தவர், இன்னும் அதிகமாகப் பொன் கொட்டிக் கிடந்ததாகவும் தான் முழுவதையும் எடுத்துக் கொண்டதாகவும் சொன்னார். நபருக்கு எரிச்சல் வந்தது. அங்கிருந்து விலகி, கூட்டத்தில் முன்னே நடந்து கலந்து கொண்டார். அருகில் இருந்தவரிடம் ஆடல் பாடல் கற்றுக் கொண்டதைப் பற்றிச் சொன்னார். அவரோ, "அடடா, நான் ஆடல் பாடலுடன் வீணை நாதம் குழல் என்று பலவும் கற்றேனே!" என்றார். இன்னும் எரிச்சலுடன் நபர் அங்கிருந்து விலகி, முன்னால் நடந்து கலந்தார். அருகிலிருந்தவரிடம் அறிவகம் பற்றிச் சொல்லி, தான் பண்டிதரான விவரம் சொன்னார். அவரோ தலையைச் சொறிந்தபடி, "கவனிக்லீங்கலே? என்ன சொல்றீங்கோ?" என்றார். நபருக்கு அவருடைய பேச்சைக் கேட்டதும் அருவருப்பானது. எழுத்தறிவில்லாதவனுடன் சேர்ந்து நிற்க விரும்பாமல் அங்கிருந்து விலகி இன்னும் முன்னே சென்று கலந்தார். அழகுக்குளம் பற்றிச் சொல்ல முன்னால் நின்றவரைத் தொட்டுத் திருப்பியதும் அசந்து போனார். அப்படி ஒரு அழகு, பொலிவு, உடல்வாகு, உடையலங்காரம்! அழகுக்குளம் பற்றி அவர் நபரிடம் விவரிக்கத் தொடங்க, நபருக்கு கடுப்பாகிவிட்டது. உடன் வந்த மனைவியோ, "என்னாங்க, உங்களை விட அவரு அழகா அந்தஸ்தா இருக்காரு பாருங்க!" என்றாள். எரிச்சலுடன் அங்கிருந்து விலகி முன்னால் நடந்து கலந்தார். கடவுளுக்கு அருகே வந்து விட்டார். அருகில் இருந்தவரிடம் வீட்டுச் சாவிகளைப் பற்றிச் சொல்ல, அவர் தனக்கு ஒரே ஒரு சாவி மட்டுமே கிடைத்ததாகச் சொன்னர். நபருக்கு பெருமை பிடிபடவில்லை. அதே நேரம், தன்னை விட அந்தஸ்து குறைந்தவருடன் நிற்கப் பிடிக்காமல் இன்னும் முன்னே சென்றார்.

அப்போது தான் கவனித்தார். சுற்றி இருந்த ஆண் பெண் அனைவரும் அவரைப் போலவே புலம்பிக் கொண்டிருந்தார்கள். 'இவனை விடப் படிப்பு, அவளை விட அழகு, இவனை விட அதிகச் செல்வம்' என்று ஒரே புலம்பல். கடவுளைப் பார்க்க வருமுன் இருந்த மகிழ்ச்சி மறைந்து, எரிச்சலும் கோபமும் மிகுந்திருந்தது. பொருமிக் கொண்டிருந்த நபர், முன்னேறிக் கடவுள் எதிரே வந்தார்.

நபரைக் கண்டதும் கடவுள் அவரை வரவேற்று வணக்கம் சொன்னார். நபரோ, "யோவ், என்னய்யா பெரிய வணக்கம்? நீ தான் கடவுளா? என்னய்யா இது, மகிழ்ச்சிப் பாதைனு போட்டு, பிறகு என்னை விட அந்தாளுக்கு அதிக அழகும் பொன்னும் குடுத்தா எப்படி? எங்கேயா மகிழ்ச்சி? எப்படியா வரும் மகிழ்ச்சி?" என்று வெடித்தார்.

"எனக்கு எப்படி தெரியும்? அவரவர்கள் என்ன தேடினார்களோ, அடைய முயன்றார்களோ.. அதை நான் கட்டுப்படுத்தவில்லையே? உங்களுக்கு அதிகம் எழுத்தறிவு கிடைத்திருக்கிறதே?" என்றார் கடவுள்.

"யோவ், வயித்தெரிச்சலைக் கெளப்பாதே. தேடிப்பாத்தா என்னைவிட இன்னும் யாருக்காவது அதிகம் எழுத்தறிவு கெடச்சிருக்கும்யா.. வர்றவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி மகிழ்ச்சி தரவேணாமா? இப்ப பாரு எங்க நிலமையை.." என்று புலம்பினார்.

கடவுளோ, "என் நிலையைப் பாருங்கள். ஆயிரக்கணக்கில் என்னிடம் வந்திருக்கிறீர்கள். வழியைத் தேர்ந்தெடுத்தது நீங்கள். வழியில் தேடியதும் நீங்கள். ஏதேதோ தேடியெடுத்தாலும், இங்கே வந்து என்னிடம் புலம்பிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தேடலுக்கும் பயணத்துக்கும் என்னைப் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள்" என்றார். பிறகு, சற்று மூக்கை உறிஞ்சி கண்களைத் துடைத்துக் கொண்டு, "நான் புத்தூர் வந்ததிலிருந்து காபி டிபன் கூட சாப்பிடவில்லை தெரியுமா? உங்கள் புலம்பல்களை நாட்கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

நபர் சற்று அமைதியாகி, "நல்ல கடவுள்யா நீ! சரி, சரி, இன்னொரு மகிழ்ச்சிப் பாதை இருந்துச்சே.. அதுல வந்தவங்க யாரு? அது எப்படி, இதை விட நல்ல பாதையா? எல்லாருக்கும் மகிழ்ச்சி கிடைக்குதா?" என்றார்.

"இதுவரை ஒரு மனிதர் கூட அந்தப் பாதை வழியாக வரவில்லையே? வந்து விவரம் சொன்னால்தான் தெரியும்" என்றார் கடவுள்.

    னிதம் 'நாளை'யை அடையும் முயற்சியில், 'நேற்றை' நோக்கிப் பயணம் செய்கிறது. 'நாளை' எனும் இலக்கை அடையவே முடியாது என்ற நிச்சயத்தை மறந்துத் திட்டங்களைத் தீட்டுகிறது. நாளையை அடையும் நேரத்தில் அது இன்றாகி விடுகிறது. இன்றைய பயணமாகி விடுகிறது. இப்போதைய 'இன்றில்' 'நாளை' என்ற இலக்கை அடையத் தீட்டிய திட்டங்கள், இன்னொரு 'இன்றில்' எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றதும் சற்று ஏமாற்றம் தோன்றுகிறது. அடுத்த 'இன்றை' சற்றே செப்பனிடலாமென்றால் அதே நேரம், 'இன்றை'யும் முழுதுமாகக் கடக்க முடிவதில்லை. அதற்குள் 'இன்று' நேற்றாகி விடுகிறது.

   'நேற்று' மட்டுமே மனிதனின் இலக்கு. போகாமலே சேரும் இலக்கு. நாளை நடக்கப்போவது தெரியாது; இன்று நடக்கப் போவதும் தெரியாது - நடந்து கொண்டிருப்பதும் புரியாது. ஆனால், நேற்று நடந்ததோ, தெரிவதும் புரிவதும் மட்டுமல்லாமல் அறிவதற்கும் ஏதுவாகிறது.

   மனிதன் உண்மையில் அடைவது நேற்றை மட்டுமே, மனிதனின் வாழ்க்கைப் பயணச் சேமிப்பு, சில ஆயிரம் 'நேற்றுகள்' ஆகும் என்பதை எண்ணும் பொழுது, சற்றுச் சூனியமாகப் படுகிறது. மிஞ்சியவை நேற்றுகள் மட்டும் என்றால், நடந்ததையே நினைத்திருக்குமா மனம்? இதை உள்ளபடியே ஏற்றாலும், 'நேற்றுகள்' எத்தகைய சேமிப்பாக இருக்கவேண்டும் என்ற அறிவு இன்றிருந்தால் உபயோகமாக இருக்குமா? அல்லது, அறிவு இன்றிருப்பதைத் தெரிந்து கொண்டும் வாளாவிருந்து, நேற்றை அடைந்ததும் புலம்புவதே பழகி விட்டதா? ஒருவேளை, நேற்றையும் நாளையையும் பற்றிப் புலம்பிக்கொண்டே இன்றைக் கோட்டை விடுவதில் தீவிரமாக இருக்கிறோமா? (இந்தக் கடைசி வகையில் ஒலிம்பிக்ஸ் அளவில் பந்தயம வைத்தால், எத்தனை கோடி பேர் தங்கப் பதக்கம் பெறுவார்கள்?)

['நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா' - கண்ணதாசன் ]

    மன் இன்பம் நன்மைகளைப் பற்றித் தொடர்ந்து சொன்னான்.

"நசிகேதா, மனித வாழ்க்கை என்பது தொடர்ந்த பயணம். முடிவில்லாத பயணம். பிறவிக்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் உண்டா என்று கேட்டாய். ஒவ்வொரு பிறவிக்குள்ளும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் உண்டு. மனிதனின் தினசரி வாழ்வே இந்த மூன்று காலங்களில் பயணிப்பதே.

மனமானது ஒரு இலக்கைத் தீர்மானம் செய்து, அதை அடைவதற்கான முயற்சியில் இறங்கி, வளைந்து கொடுத்து, இலக்கை அடையத் தீவிரமாக இயங்குகிறது. இலக்கை அடைந்த பின்னரே முயற்சியைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறது. இலக்கை அடைந்தும் நிறைவு ஏற்படவில்லையெனில் வாடுகிறது. இலக்கை அடைந்து நிறைவு ஏற்பட்டாலோ எல்லாவற்றையும் மறந்து நிறைவு நிலையானதென்று நம்பி விடுகிறது. இலக்கை அடைந்த பின்னர் பெறும் அறிவு பயனற்றதாகி விடுகிறது.

மனித மனம் எதிர்காலம் பற்றிய கனவுகளிலும் திட்டங்களிலும் லயிக்கிறது. அதற்கான தேடல்களில் ஈடுபடுகிறது. எதிர்காலத் திட்டங்கள் இன்பத்தைத் தருவனவா நன்மையைத் தருவனவா என்று சிந்திக்க முற்படுகிறது. செயலாக்கும் பொழுது இன்பத்தையே தேர்ந்தெடுக்கிறது. இன்பங்கள் வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்குவதால் மனம் இனிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறது. அதற்காக எதையும் செய்யத் தயாராகிறது.

இனிமை என்பது உடனே மறைந்து விடுமென்பதை மனம் புரிந்து கொள்வதில்லை. இனிமை நிலைக்கும் என்று நம்புகிறது. அந்தக் கணத்தின் இனிமையில் லயிக்கும் பொழுது, நாளை என்பதையே மறந்தும் விடுகிறது. இன்று என்பது விரைவில் மறைந்து நேற்றானதும், மனம் விழித்துக் கொண்டு நடந்ததை நினைத்துப் பார்க்கிறது.

முதிர்ந்த மனமானது, நேற்றின் வலிகளை முன்பே சிந்தித்து, அவை நாளையும் நிகழாமல் தவிர்க்கப் பார்க்கிறது. இன்பம், நன்மை இரண்டையும் பகுத்தறிந்து இன்பவழியைப் புறக்கணித்து நன்மைக்கான பாதையில் போகிறது. இது போல் பகுத்தறிந்து செயலாற்றும் அறிவற்றவர்களோ, எப்பொழுதும் இன்பங்களையே நாடிப் போகிறார்கள்"

"இன்பமும் நன்மையும் இரண்டுமே வேண்டுமென்றால்?" என்றான் நசிகேதன்.

"நல்வழியிலே இன்பம் அடையலாம் நசிகேதா. எண்ணங்களிலும் செயல்களிலும் எது நன்மை, எது இன்பம் என்பதை உணர வேண்டும்" என்றான் எமன்.

"இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டான் நசிகேதன்.

"இன்பத்திற்கு புலனாலும் மனதாலும் அழிவு உண்டு. அதன் காலம் கணக்கிடக்கூடியது. நன்மைக்கு அழிவு இல்லை. நன்மை புலனாலும் நினைவாலும் உடன் வரக்கூடியது. ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கையில் இதை மனதில் கொண்டு செயல்படுவோரே அறிவுள்ளவர்கள். இன்பம் நிலையற்றது என்பதையும் அறிவுளோர் அறிவார்"

"பாதைகளை எளிதில் அடையாளம் காண முடியாதா?"

"முடியும். முதிர்ந்த அறிவுள்ளவர்கள் பாதையைத் தேர்ந்தெடுக்குமுன் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுக்கிறார்கள். அதனால் நன்மைக்கான பாதையை அவர்களால் அடையாளம் காண முடிகிறது"

"ஐயா, உலகில் சாதாரணர்களே அதிகம். அவர்களால் நன்மைக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனால் அது அவர்கள் தவறல்லவே? மேலும் சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு பொருள் தருவதே இன்பங்கள் தானே? இன்பங்களின் காலம் குறுகியதாக இருந்தால் என்ன? சாதாரண மனிதனின் வாழ்க்கை இன்பம் பெறும் பொழுது நிறைவாகிறதே?"

"சாதாரணர்களுக்கு மெய்யறிவு பெறும் நோக்கம் கிடையாதே நசிகேதா? அதனால் தானே என் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்? விதியென்றும் வினையென்றும் பலியென்றும் பரிகாரமென்றும் தவமென்றும் தானமென்றும் கண்மூடித் துடிக்கிறார்கள்? மெய்யறிவு என்பது எல்லோருக்கும் உகந்ததும் அல்ல. புரிந்து கொள்ள முடியாமலே போனால் அந்த அறிவினால் என்ன பயன்? கால விரயம் செய்வதை விட, சாதாரணர்கள் தங்களுக்குக் கிடைத்த இன்பங்களை அனுபவிப்பதும் முறைதான். ஆனால் அத்தகையோர் குறுகிய இன்பங்களினாலான நிறைவைப் பெறுவதிலேயே குறியாக இருப்பதால், இன்பங்களைப் பெற்றும் உணர்வதில்லை. இயற்கையில் பெற்ற அறிவுச் சுடரையும் அணைத்து விடுகிறார்கள். அறிவுள்ளவர்களோ, இன்பங்களைத் துய்க்க நேரும் பொழுதும் அதன் நிலையாமையை அறிந்து, நிலையான நிறைவுகளைப் பெரும் வழியை, பெற்று அனுபவிக்கும் முறையை, அறிந்து செயல்பட முனைகிறார்கள்."

"முதிர்ந்த அறிவுள்ளவர்கள் என்றால்.. அவர்கள் எப்படி இருப்பார்கள்? அறியாரை எப்படி அடையாளம் காண்பது?"

"அவர்களின் செயல்களால். அறிவோர் பற்றியும் அறியார் பற்றியும் விவரமாகச் சொல்கிறேன். அவர்களின் வழிமுறைகளைப் பற்றிச் சொல்கிறேன், கேள்" என்று தொடர்ந்தான் எமன்.

13 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

புத்தூர் கதை நல்லா இருந்தது. எத்தனை பெற்றாலும் நிறைவு தராது இன்பம் என்று சொல்கிறீர்களோ!
//முதிர்ந்த மனமானது, நேற்றின் வலிகளை முன்பே சிந்தித்து, அவை நாளையும் நிகழாமல் தவிர்க்கப் பார்க்கிறது. இன்பம், நன்மை இரண்டையும் பகுத்தறிந்து இன்பவழியைப் புறக்கணித்து நன்மைக்கான பாதையில் போகிறது.//
இதையும் மனதில் குறித்துக்கொண்டேன். அருமை.

அப்பாதுரை சொன்னது…

நன்றி geetha santhanam.
'பெறுவதினால்' இன்பமோ நிறைவோ வருவதில்லை என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

இந்த இடுகையின் நீளத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

Santhini சொன்னது…

Nice story and good explanations.
Will continue the arguments when needed.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

நல்லாத்தான் கட்டியிருக்கீங்க புத்தூர் கட்டு!

உங்கள் நேற்று ,இன்று நாளை பற்றிய வரிகள் சிந்தனையைத் தூண்டுபவை.

நேற்று என்பது ஒரு காலாவதியான பிராமிசரி நோட்டு. நாளையென்பது போஸ்ட் டேட்டட் செக். இன்று என்பதோ கையில் உள்ள கரன்சி நோட்டு. என்பார்கள்.இன்றில் மனம் வைத்து கடமை செய்தால் போதாதோ?

//இனிமை என்பது உடனே மறைந்து விடுமென்பதை மனம் புரிந்து கொள்வதில்லை. இனிமை நிலைக்கும் என்று நம்புகிறது. அந்தக் கணத்தின் இனிமையில் லயிக்கும் பொழுது, நாளை என்பதையே மறந்தும் விடுகிறது.//

'நற்றிணை ' என்று நினைக்கிறேன்.. பல வருடங்களுக்கு பின்னர் நினைவுகூர்வதில் சில பிழைகள் இருக்கலாம்.(மேலும் தற்போது நான் tourஇல் இருக்கிறேன்.)
பொருளீட்டி வீடு திரும்ப யத்தனிக்கும் தலைவன் கூற்றாய் ஒரு பாடல் வரும்.தன் தலைவி அவனுக்கு எத்தனை இனிமையானவள் என்று அவளை ஒப்பிடும் விஷயங்களைவிட இனிமையானவள் என்பதால்
முத்தாய்ப்பாக "வினை முடித்தன்ன இனியள் நீ!" என்பான் ..

எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடித்த பின்னர் ஏற்படும் மன நிம்மதியும் சந்துஷ்டியும் இருக்கிறதே.. எவ்வளவு நிறைவும் இனிமையும் கூடியது அது?

இன்றில் நின்று, செய்யும் வினையில் மனம் ஒன்றி முடித்து, அச்செயலின் பலனில் பற்று நீக்கி... நிற்றல் கர்மயோகம்...

இன்னமும் கொஞ்சம் தொடர்வேன்.

Priya Schaefer சொன்னது…

Very nice story. Great quotations. Can you please share more details on the poems by Kannan Gopinathon?

ஸ்ரீராம். சொன்னது…

நாளைய தினத்தைப் பற்றி யோசிக்காமல் இன்று வாழ்ந்து நேற்றிலேயே தங்கி விடுகிறோம்....சிநதிக்க வைத்தது. நேற்று இன்று நாளை பற்றிப் பேசும்போது எங்கள் யோகா மாஸ்டர் சொல்லிக் கொடுத்த வசனம் நினைவுக்கு வருகிறது. "நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில்மேல் பூனை. இன்று என்பது இறைவனின் கொடை (கூகிள் பிரச்னையா சென்னையின் வெய்யில் பிரச்னையா தெரியவில்லை கொடை என்று டைப் செய்தால் கூகிள் கோடை என்று அடிக்கிறது!) - present is a present of god - "என்பார்.

புத்தூர் கதை எளிமை....

பத்மநாபன் சொன்னது…

புத்தூர் கதையின் புல்லரிப்பில் இருக்கிறேன் .. இது மாதிரி ஓஷோக்களிடம் படித்திருந்தாலும், இந்த கதை புது மாதிரி யாக அமைத்துள்ளீர்கள். ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் வெம்பும் செயலை ஒழித்துக் கட்ட இந்த மாதிரிக் கதைகள் நல்ல அழுத்ததைக் கொடுக்கும்...

அப்பாதுரை சொன்னது…

வருக Nanum, மோகன்ஜி, Priya, ஸ்ரீராம், பத்மநாபன், ...

அப்பாதுரை சொன்னது…

'வினை முடித்தன்ன இனியள்' - புதுமை, பிரமாதம். நன்றி, மோகன்ஜி.

அப்பாதுரை சொன்னது…

Priya, Kannan's poems are available on the net; don't know where to get his books, if any.

சிவகுமாரன் சொன்னது…

புத்தூர் கதை அருமை.
வினை முடித்தன்ன இனியள். - எவ்வளவு இனிமையாக இருக்கிறது.