வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/05/17

இன்பமா நன்மையா, எது மேன்மை?


44
நன்மையும் இன்பமும் நேரெதிர் பாதையிவை
மன்பதையைத் தக்கி முடக்கிடும் - தன்மையிலே
இன்பவழி ஊர்சுற்றிச் சேரா இடஞ்சேரும்
நன்மையே நேர்வழி ஆகும்.

   ன்பத்தைத் தேடுவதும் நன்மையைத் தேடுவதும் முரணான செயல்கள்; இரண்டுமே உலகத்தாரைத் தமது பிடியில் வசப்படுத்தி வைக்கின்றன. இன்பத்தையே தேடுவோர், தவறான வழியில் சுற்றி இலக்கையும் தவறவிடுவர்; நல்வழிகளோ, பாதை தவறாமல் இலக்கை அடையச் செய்கின்றன (என்றான் எமன்).


மன்பதை: மானிடம்
தக்கி: பிணைத்து, கட்டி, வசப்படுத்தி



['..there are two principles, whose guidance we follow to where they may lead; one, an organic desire of pleasure; the other, an acquired judgment of goodness' - socrates ]

    வை நிறைந்த வாழ்க்கை என்கிறோம்.

   எந்தச் செயலுக்கும் குறைந்தது இரண்டு வழிகள், அனேகமாக எதிர்வழிகள், தோன்றுகின்றன. யாரிடமாவது அறிவுரை கேட்டால், இன்னும் இரண்டு சொல்வார்கள். அவர்கள் சொன்ன இரண்டு வழிகளில் எதைப் பற்றுவது என்ற சிக்கல் ஒரு கவை; அவர்கள் சொன்ன வழிகள் நாம் நினைத்தவைக்கு எதிர்மாறாக இருந்தால், அவர் வழிப் போவதா, நம் வழியே மேலென்று தொடர்வதா என்று இன்னொரு கவை. இதைப் போக்க இன்னொருவரை வழி கேட்கத் தோன்றும். இப்படியே கிளைவிட்ட எண்ணங்கள், கடைசியில் யாரைக் கேட்டு, எதைப் பற்றி, எங்கே முடியும் என்றே சொல்ல முடியாது. நம்மில் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

   வீடு, வேலை, படிப்பு, செலவு, சேமிப்பு, காதல், திருமணம், பிள்ளை வளர்ப்பு போன்ற சற்றே முக்கியமான நிகழ்வுகள் மட்டுமல்ல, எந்த சினிமா பார்ப்பது, எந்த ஹோட்டலுக்குப் போவது, என்ன வாங்கிச் சாப்பிடுவது போன்ற மிகச் சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட பாதைகளின் போக்கிற்குக் கட்டுப்பட்டு நேரத்தையும் அறிவையும் விரயம் செய்கிறோம். சமீப அனுபவம்: பேருந்து நிலையப் பத்திரிகைக் கடையில் இருந்த என்னிடம் பத்திரிகை வாங்க வந்த ஒருவர், "சார், டைம்பாசுக்கு ஏதாவது வாங்கலாம்னு பாக்கறேன், குமுதமா குங்குமமா என்ன வாங்கலாம்றீங்க?" என்றார்.

   இடையில், வாழ்வின் மிக முக்கிய முடிவுகளுக்கு, 'நாம் யார், நமக்கு என்ன தேவை? நமது எதிர்காலம் என்ன?' போன்ற சற்றே தீவிர முடிவுகளுக்கு, நேரம் ஒதுக்க முடியாமலோ அல்லது கவைகளில் சிக்கியோ சீரழிந்து போகிறோம். சில நேரம் சமாளித்து எப்படியோ கரையேறினாலும், கடந்து வந்த பாதையை எண்ணி கலங்கிச் சோர்ந்து அடுத்த அடியெடுக்க முடியாமல் ஓய்ந்து போகிறோம்.

   இன்னும் சில கவைகள் உண்டு. ஆசைகளை அடைய நினைக்கும் பொழுது எந்தப் பாதையில் போவதென்ற முடிவுகள் எடுக்க நேர்கையில், நம்மில் நிறைய பேர் குறுக்கு வழிகளை நினைக்கிறோம். குறுக்குவழிகள் ஒன்றுக்கொன்று பிணைந்து கடைசியில் நேர்வழியை விட நேரமும் தூரமும் அதிகமென்று உணரும் பொழுது, சக்தியின்றி அடங்கி விடுகிறோம். உண்மையில் நம்மைச் சுற்றியடிக்கிறது என்று தெரிந்தும் குறுக்குவழியை விடாமல், 'இன்னும் கொஞ்சம் சென்று பார்ப்போம், இன்னும் ஐந்து நிமிடம், அடுத்தத் தெரு வரை..' என்ற உந்துதல்களில் சிக்கிப் பாதை தவறிப் போய்க்கொண்டே இருக்கிறோம்.

   வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இந்தப் பாதை-பயண உவமை பொருந்தும். எனில், முதலிலேயே சரியான பாதை இன்னதென்று அறிய முடியுமா?

   சாத்தியம் என்று அறிவு சொன்னாலும், சாத்தியமில்லை என்கிறது அனுபவம். ஒரு வினையைத் தொடங்குமுன் பயனைப் பற்றிச் சிந்தித்து, அது நம்மை 'எந்த விதத்தில் பாதிக்கும், எந்த வித்ததில் உயர்த்தும், நம் நிலைக்கும் சுபாவத்துக்கும் பொருந்துமா, பயன் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காவிட்டால் எப்படி விலகுவது?' என்ற அளவில் சிந்தித்து முடிவெடுத்தால், ஓரளவுக்குச் சரியானப் பாதை பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் அனுபவம் சொல்கிறது.

   இத்தகைய ஆய்வு எல்லாச் செய்கைகளுக்கும் பொருந்தினாலும், அவசரமும் ஆசையும் ஆய்வை அடக்கி, அறிவை ஒடுக்கி உடனடியாகச் செயலில் இறங்க வைக்கின்றன. பிறகு, 'இப்படிச் செய்திருக்கலாமே.. அப்படிப் போயிருக்கலாமே, வந்தது வந்து விட்டோம்.. அரை மணி பொறுப்போம், தவறிச் செய்துவிட்டோம்.. அடுத்த வருடம் திருத்திக் கொள்வோம், நம் தவறு யாருக்குத் தெரியப்போகிறது?' போன்ற சமாதானம், மறைப்பு மற்றும் சாக்குபோக்குகளில் நம் அறிவையும் நேரத்தையும் இழுத்தடிக்கின்றன.

   வாழ்வின் சுவையே அவசர முடிவுகள்தான் என்போரும் உண்டு. 'இன்றுள்ள வாழ்வு நாளை இருக்காது, வாழ்வே குறுகியது' என்ற நிலையில், ஆராய்ந்து முடிவெடுப்பது 'சாத்தியமற்றது மட்டுமல்ல, பைத்தியக்காரத்தனம் கூட' என்ற கட்சியும் உண்டு.

   இரண்டு வகை எண்ணங்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. என் அனுபவத்தில் பெற்ற ஒரு படிப்பினையை முன்வைக்கிறேன். முடிந்தவரை வினைப்பயன் பற்றிய தொலைநோக்கு அவசியம். அது முடியாமல் பயணத்தைத் தொடங்க நேர்ந்தால், போகும் பாதை சுற்று என்று தெரிந்தால், உடனே விலகி வேறு பாதைக்குச் செல்வது நல்லது. ஒரு செய்கை தவறு என்று தெரிந்து விட்டால், உணர்ந்த கணமே தவறுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, சரியான செய்கையைத் தொடர வேண்டும்.

   'rational thinking', 'life strategies' போன்ற கலைகளை மேல்நிலைப் பள்ளிப் பாடமாக்க வேண்டும்.

['பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய்ச் சேராது' - கண்ணதாசன் ]

    மெய்யறிவின் நோக்கத்தை விவரித்தான் எமன்.

   "மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது" என்றான்.

   'என்ன சொல்கிறான் கிழவன்?' என்று எண்ணிய நசிகேதன், எமன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

   எமன் தொடர்ந்தான். "மெய்யறிவின் குறிக்கோள், நோக்கம் என்ன? அறிவு என்பதென்ன? அறிவு, மெய்யறிவு ஆவதெப்படி? பொய்யறிவு என்று உண்டா?

   சொல்கிறேன், கேள். எந்த எண்ணத்திலும் செயலிலும் இரண்டு வகைப் பலன்களை எதிர்பார்ககலாம்.

   முதலாவது, உடனடியாகவோ தொடர்ந்தோ புலனின்பத்தைத் தரக்கூடியது. பார்க்க, பழக, அனுபவிக்கச் சிறந்த இன்பங்களைத் தரக்கூடியது. நான் உனக்கு வழங்குவதாகச் சொன்ன பொன்னும் பொருளும் பெண்ணும் சந்ததியும் சொர்க்கமும்... இவையெல்லாம் இன்பங்கள்.

   இரண்டாவது, உடனடியாகத் துன்பமோ சிக்கலோ தந்தாலும் தொடர்ந்து நன்மையைத் தரக்கூடியது. தனக்கும் தம்மைச் சூழ்ந்தவருக்கும் நன்மை தரக்கூடியது. சொர்க்கம், பிறவி போன்ற கவலைகளற்ற நிம்மதியைத் தரக்கூடியது.

   இரண்டையும் அடையாளம் கண்டு, நன்மையைத் தரும் செயல்களைச் செய்ய வேண்டும். மெய்யறிவின் நோக்கம் அதுவே" என்றான்.

   பொறுமையாகக் கேட்ட நசிகேதன், "ஐயா, இன்பம் நன்மை இரண்டையுமே அடையாளம் காட்டுவது அறிவு என்கிறீர்கள். எனில், அறிவின் தன்மையிலேயே குறையுள்ளது போல் தோன்றுகிறதே? இத்தகையக் குறையுள்ள அறிவை வைத்து மெய்யறிவை எப்படிப் பெறுவது? நொண்டிக் குதிரையால் பந்தயத்தில் வெல்ல முடியாதே?" என்றான்.

   நசிகேதனின் கேள்வியில் எமன் பெருமிதம் கொண்டான். "அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நீயாகக் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நீ தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், உன் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாடும் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே உன்னை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி உன்னை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு" என்றான்.

   "இன்பங்களைத் தேடுவதில் என்ன தவறு?" என்றான் நசிகேதன்

   "தவறில்லை. இன்பங்களைத் தேடுவதில் மனிதன் தன்னை இழந்து விடுவதால், பிறவியின் காரணத்தையே மறந்துவிட நேர்கிறது. இன்பத்தேடலால் அறிவையும், அறிவினால் இன்பத்தேடலையும், ஒருங்கே கட்டிவிடுவதால் ஒரு சுழல் உருவாகிவிடுகிறது. அந்தச் சுழலில், மீள வழியில்லாமல், மானிடம் சிக்கித் தவிக்கிறது. மனித அறிவுக்கோ, 'சுழலில் சிக்கியது நிறையா குறையா' என்று புரியாததால், தொடர்ந்து இன்பத்தேடலிலும் அதற்கான உந்துதல்களிலும் சுழற்றி அடிக்கிறது.

   இன்பத்தையே தேடி அலையும் மனிதம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறது. தவறுகளைச் செய்யத் துணிகிறது. தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறது. பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறது. தன்னைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறது. குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால் மானம் கெட்டு மடிகின்றனர்.

   எனில், அறிவை எப்படி வளர்ப்பது? நன்மையை மனதில் கொண்டு தேடினால் அறிவை இழக்காமல், செம்மையாக வளர்க்க முடியும். சாதாரண இன்பங்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பாங்கைப் பெற முடியும். மெய்யறிவுக்கான பாதையில் செல்ல முடியும்" என்றான் எமன்.

   தொடர்ந்து, "நசிகேதா, 'நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?' என்ற கேள்வியை ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் கலந்துவிட்டால், உன் மனம் மெய்யறிவுப் பட்டறையின் முதல் நிலையைக் கடக்கிறது. புடமிடத் தகுதி பெறுகிறது. நன்மையைத் தருவதும் இன்பத்தைத் தருவதும் எதிரெதிர் எண்ணங்கள், செயல்கள். நன்மையை அடைவது நேர்வழி; தடங்கலும் தாமதமும் நிறைந்த வழி. இன்பத்தை அடைவது சுற்றுவழி; குறுக்குவழி; போகாத ஊருக்கு வழி" என்றான்.

   "நன்மையை அடையும் நேர்வழி என்பது என்ன?" என்றான் நசிகேதன்.

   "உன்னை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. உன் ஒவ்வொரு செயலும் உன்னை - முதலில் உனக்கும், பிறகு உன் குடும்பத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. உலகும் உன்னோரும் நீயும் காணும், உன்னைப் பற்றிய அந்த அடையாளம் எந்த வகையில் உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உனது சொந்த நெறியைப் பின்பற்ற வைப்பது நல்வழி. உன் செய்கைகளால் நீயும், உன்னோரும், உலகத்தோரும் உயர்வடையும் வழி. அதைப் பற்றி மேலும் சொல்கிறேன்" என்றான்.

35 கருத்துகள்:

s. raghavan, chennai சொன்னது…

Superbly written, Appadurai. Arasan would have been proud.

பத்மநாபன் சொன்னது…

நன்மை இன்பம் புது கோணமாக இருக்கிறது... ‘’ எல்லோரும் இன்புற்றுஇருப்பதுவன்றி வேறில்லாமல்’’என்று பராபரத்தை வேண்டுவது எதற்கு..

இன்பத்தின் விளைவு தீமையா ? நன்மை வேண்டுமா இன்பம் வேண்டுமா எனும் கேள்வியே ஒரு வித்தியாசமான சிந்தனை....

இரண்டும் வேண்டாம் துன்பம் இல்லாமல் இருந்தால் சரி என்று சொல்லிவிடுவார்கள்..

geetha santhanam சொன்னது…

கடோவிலும் புத்தர் சொன்னது போல் சொல்லப்பட்டிருக்கே. ஆசையை விலக்கு என்றார் அவர்; இன்பத்தை நாடாதே என்கிறது கடோ.
//உன் ஒவ்வொரு செயலும் உன்னை - முதலில் உனக்கும், பிறகு உன் குடும்பத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது.//
அற்புதமான கருத்து; இதை மனதில் பதிய வைத்துக் கொள்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

இந்தப் பதிவிலும் ஓர் கருத்தை இட்டு காணாமல் போய் விட்டது. திரும்பவும் முனகிக் கொண்டே அடிக்கிறேன்..

முடிவெடுப்பதில் ஒத்தையா இரட்டையா ஆட்டம், பாதைத் தெரிவின் குழப்பம் வாழ்வியலின் தொடர் நிழல்.

ரத்தன் டாடா ஒருமுறை சொன்னார்
"எனக்கு சரியான முடிவு எடுப்பதில் நம்பிக்கையில்லை. முதலில் முடிவை எடுத்து விடுவேன். பின்னர் அதை சரியாக்குவேன்"

இந்த நிலை எனக்கு வாபி-சாபி எனும் ஜப்பானிய தத்துவத்தை நினைவுறுத்துகிறது.
(ஒரு பொருளோ அல்லது உணர்வின் வெளிப்பாடோ நம்மில் ஒரு தீவீர தனிமையையும்,தீரா ஆன்மீகத் தேடலையும் கிளர்த்துமானால் அதுவே வாபி-சாபி)
இந்த வாபி-சாபி மூன்று நிதர்சனமான நடப்புகளைச் சார்ந்தது :
1. எதுவும் நிலைப்பதில்லை
2. எதுவும் முடிவதில்லை
3. எதுவும் முற்றும் சரியானதில்லை

'எண்ணித் துணிக கருமம்' என்றான் வள்ளுவன்.
'யாரும் தொடராப் பாதையில் என் பயணம் மாற்றத்தை உருவாக்கும்'என்றான் கீட்ஸ்

எனக்கு முடிவெடுப்பதில் என்றும் குழப்பமில்லை. என் பார்முலாவே வேறு...

புத்தி சொல்வது - 40%
இதயம் சொல்வது -50%
பிறர் சொல்வது -10%

இந்த விகிதாசாரத்தில் முடிவெடுத்து விட்டு மனைவி என்ன சொல்கிறாளோ அதை செயல்படுத்தி விடுவது!
அதுதாங்க மேட்டர்!

அப்பாதுரை சொன்னது…

வருக s.raghavan, பத்மநாபன், geetha santhanam, மோகன்ஜி,...

அப்பாதுரை சொன்னது…

புதுமை இல்லை பத்மநாபன்.. உலகத்தின் மிகத் தொன்மையான மிக அதிகமாகக் கேட்கப்பட்ட/படும் கேள்வி இது தான்: 'do you seek pleasure or peace?'.

peaceக்குப் பின்னால் இருப்பது நன்மை, நற்செயல். [இரண்டாவது தொன்மையான, பிரபலமான கேள்வி 'will you marry me?' என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்]

இன்பத்தின் விளைவு 'தீமை' அல்ல என்றே நம்புகிறேன்.

கேட்கப்பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, 'இன்பம்' நன்மையின் எதிர்சொல் போல் தோன்றுகிறது. 'இன்பம்' என்ற சொல்லில் மகிழ்ச்சியிலிருந்து (மனம் தொட்ட) முத்தம் வரை (புலன் தொட்ட) மிகப் பரந்த பொருளைக் கொள்ள முடிவதால் இன்பத்தின் விளைவுகளைப் பற்றிச் சற்றுத் தள்ளி நின்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு கோணம்: 'இன்பத்தின் விளைவு' என்று பார்க்காமல் இன்பமே விளைவு என்று பார்க்கும் பொழுது (நன்மையும் இன்பமும் விளைவுகள்) இந்தக் கேள்வியின் ஆழம் புலப்படுகிறது என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

அப்பாதுரை சொன்னது…

கடோ 'இன்பத்தை நாடாதே' என்று சொல்வதாக நினைக்கவில்லை geetha santhanam. 'நன்மையை நாடு' என்று சொல்வதாக நினைக்கிறேன். 'நன்மையை எண்ணிச் செய்' என்று சொல்வதாக நினைக்கிறேன். 'தன்னை அறியச் செய்யும் செயலாக எதையும் செய்யவேண்டும்' என்று சொல்வதாக நினைக்கிறேன்.

கேட்கப்பட்ட விதத்திலும் ('நேரெதிர் பாதைகள்' என்று சொன்னதாலும்) இவற்றை எதிரிகளாக முதல் பார்வையில் நினைக்கத் தோன்றினாலும் சற்று தள்ளி நின்று பார்க்கும் பொழுது வேறு கோணங்கள் புலப்படும் என்று நினைக்கிறேன்.

நீங்களே சொல்லியிருப்பதால், இதோ என் கேள்வி: ஆசையின் விளைவு இன்பமா நன்மையா? (சற்று யோசித்து பதில் தேடுங்கள்.. அவசரப்பட வேண்டாம்)

ம்ஹ்ம்.. எங்கே போனார் 'நானும்'?

அப்பாதுரை சொன்னது…

தெரியவில்லையே மோகன்ஜி? ['நீண்ட பின்னூட்டம் எழுதினேன்;ஆனால் பதிவிடவில்லை' என்பார் meenakshi.]

டாடா சொல்லியிருப்பதைக் கேட்டால் பேடா எடுக்கத் தூண்டுகிறதே, மோகன்ஜி.. முடிவைச் சரிக்கட்டுவது மு இல்லையோ? ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பாரோ? டாடா நிறுவனத்தின் தொலைநோக்கைப் பார்க்கையில் இது பொருந்தவில்லையே?

உங்கள் முடிவெடுக்கும் சாமர்த்தியத்தை மெச்சினேன் மோகன்ஜி :)

அப்பாதுரை சொன்னது…

இன்னொன்று பத்மநாபன்.. கடோவின் ரகசியம்.. இப்போதே சொல்லிவிடுகிறேன். 'இன்பம் வேண்டுமா, நன்மை வேண்டுமா' என்று கேட்பதாலும், 'நன்மை நேர்வழி' என்று சொல்வதாலும் 'நன்மையைத் தேட வேண்டும்' என்ற prescription தரவில்லை கடோ. நிறைய ஆழம் இருக்கிறது, போகப் போகத் தெரியும் என்று நம்புகிறேன். [என்னுடைய கவன/அறிவு குறைவால் இந்த ஆழங்கள் புலப்படாமல் போகலாம் என்று அவ்வப்போது வருந்துகிறேன், தயங்குகிறேன்]

கடோவின் மையத் தத்துவம் 'உன்னை அறிக' என்பதே. இதை விளக்க, இன்பம் நன்மை போல் பல எதிர்நிலைக் கேள்விகள் வருகின்றன. 'ஒளி வேண்டுமா, நிழல் வேண்டுமா' என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? கேள்வியின் ஆழத்தோடு smartnessஐயும் பாருங்கள்.. (மோகன்ஜியின் முடிவெடுக்கும் திறன் போல இல்லை?)

ஒன்று நிச்சயம். இது போல் கேள்வி கேட்கவே நிறைய அறிவு வேண்டும் :)

அப்பாதுரை சொன்னது…

geetha santhanam.. 'புத்தருக்கு முன் எழுதப்பட்டதா கடோ?' தெரியவில்லை.

இன்றைய ஆராய்ச்சி கடோவை கிமு 300 வாக்கில் வைக்கிறது. ஆனால் இந்துமதம் உபநிஷதுகளின் காலமாக இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறது. மகாபாரதத்தில் கடோவின் கட் அன்ட் பேஸ்ட் காணப்படுவதால் நிச்சயம் மகாவினும் தொன்மையானதாகும் கடோ. மகா கிமு200 வாக்கில் நடந்திருந்தால்/எழுதப்பட்டிருந்தால் ஒழிய.

இது பற்றி நிறைய கருத்துக்கள் அடிபடுகின்றன. இந்துமத இலக்கியங்களுக்கு எதிராக கிறுத்துவ மத அறிஞர்கள் செய்த சதி என்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, எழுதியவர்கள் காலக்கணக்கைத் தோராயமாகவாது பாடலகளில் புதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 'அடே, அறிவிலி.. இவையெல்லாம் வெள்ளைக்காரன் காலக்கணக்குக்கு முற்பட்டது.. அந்தக் காலக்கணக்கை வைத்துப் பார்த்தால் எப்படிப் புரியும்?' என்கிறது ஒரு குரல். (ராமாயணத்தில் ராமன் காட்டுக்குப் போன போதும் பட்டாபிஷேகத்தின் போதும் இருந்த நட்சத்திர நிலைகளை வால்மீகி குறிப்பிட்டிருப்பதால் ராமாயண காலத்தைக் கணக்கிட முடிகிறது என்கிறார்கள். மூன்றாம் சுழியில் இது பற்றி எழுதியிருக்கிறேன்)

நேரம் கிடைக்கும் பொழுது இந்த வலைப்பூவைப் படியுங்கள். ஆன்மீகம் பற்றியும் இது போன்ற ஆய்வுகளையும் சுவாரசியமாக எழுதுகிறார் மயஸ்கரன்.

பத்மநாபன் சொன்னது…

இன்பமா நன்மையா சரியான ஸ்மார்ட்னெஸ் கொக்கி தான்

வின் வின் என்றால் நற்செயல் விளைவு இன்பம் என வரவேண்டும்.... முதலாவதை செயலாகவும் அடுத்ததை விளைவாகவும் போட்டால் மானிட சதவிகித விருப்பம் இப்படி இருக்குமா

இன்பம் - நன்மை---100%

துன்பம் நன்மை --- 50%

இன்பம் -தீமை --- 25%

துன்பம் - தீமை ---0%

செயலையும் விளைவையும் மாற்றிப்போட்டாலும் இதே சதவிகித விருப்பம் தொடரும் போலுள்ளது..
எப்படியோ இந்த கேள்வி நிறைய சிந்திக்க வைக்கிறது....

அப்பாதுரை சொன்னது…

சுவாரசியமான விகிதாசாரச் சிந்தனை பத்மநாபன்.
துன்பத்தையே இன்பமென்று நினைக்கும் கும்பலை எதில் சேர்ப்பது?

நீங்கள் நம்ப மறுக்கலாம், ஆனால் துன்பத்தை இன்பமென்று நம்பும் கண்மூடிகள் தான் நம்மில் அதிகம். பல காரணங்களை - கடமை, சமூகம், 'ஆண்டவனின் சோதனை', இயலாமை, சக்தியின்மை, 'செய்த பாவ புண்ணியம்' - தாங்களே தீட்டிச் சுமந்துகொண்டு தொடர்ந்து 'இன்பத்தை' அனுபவிக்கும் இந்தக் கண்மூடிகளை எந்த விகிதாசாரத்தில் சேர்ப்பது?

எமனின் கேள்வி இந்தக் கண்மூடிகளை மனதில் கொண்டு கேட்கப்பட்டதோ என்று தோன்றியதுண்டு.

அப்பாதுரை சொன்னது…

இன்பம் செயலல்ல, விளைவே என்று நினைக்கிறேன் பத்மநாபன். இன்பத்தைத் தரும் செயலா, நன்மையைத் தரும் செயலா என்பதே கேள்வி. இன்பத்தை செயலாகவும் விளைவாகவும் பார்க்கும் catch22 - understandable சங்கடம்.

பத்மநாபன் சொன்னது…

இன்பம் விளைவுதான் ...ஒரு நன்மையான செயல் செய்து அதில் இன்பம் துய்க்க வாய்ப்பில்லையா ..யோசிக்கலாம்.

geetha santhanam சொன்னது…

துரை, ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கும், ஆழ்ந்த கருத்துள்ள பின்னூட்டத்திற்கும் நன்றி. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரின் கருத்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாததோ; துறவியால் மட்டுமே practise செய்யக்கூடிய தத்துவமோ என்று நினைக்கிறேன். வேண்டுமானால் துன்பத்தைத் தராத ஆசையை வளர்த்துக்கொள்ள என் போல் சாமானியர்களால் இயலும்.
ஆசையின் விளைவு இன்பமா நன்மையா? யோசிக்கிறேன். ஆசை இன்பத்தையே (புலன்) தருகிறது; ஆசையை ஒழிப்பதே நன்மையைத் தரும் என்று நினைக்கிறேன். ஆனால் நடக்கிற காரியமா?

அப்பாதுரை சொன்னது…

தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி பத்மநாபன், geetha santhanam, ... சுவையான கருத்துப் பரிமாற்றம்.

நன்மையும் விளைவுதானே பத்மநாபன்? 'நன்மை எனும் விளைவைத் தரும் செயல் செய்து அதில் இன்பம் எனும் விளைவைத் துய்க்கலாம்' என்கிறீர்களா? ம்ம்ம்ம்.. எனக்கும் இந்தக் குழப்படி தீர நாளானது.

கடோவின் இந்தப் பாடலில் சிக்கினால் மீள்வது சிரமம் (இந்தப் பகுதியே இப்படி குழப்பக் கூட்டுங்க).

நன்மை, இன்பம் என்பது விளைவுகளே என்று புரிந்ததும் சட்டென்று திரை விலகினாற் போல் உணர முடியும் என்று நினைக்கிறேன். நன்மையினால் இன்பம் வருவதில்லை என்று புரிந்து கொள்ள நாளானது. அதே நேரம், நன்மை, இன்பம் இரண்டையும் ஒருங்கே தரும் செயலைச் செய்ய முடியும் என்றும் புரிந்தது. (ஆ! இது என்ன முரண்?! பின்னொரு பாடலில் பார்ப்போம்)

செயல்களாக எண்ணாமல், நன்மை இன்பங்களை விளைவுகளாக எண்ணிப் பழகினால் செயலில் தெளிவும் முனைப்பும் தீவிரமும் கூடும். (இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் புரிந்து கொள்ளாமல் போனேனே?)

அடுத்து, 'ஒளி வேண்டுமா நிழல் வேண்டுமா' என்ற குழம்பு பரிமாறப்படும் :-)

அப்பாதுரை சொன்னது…

'ஆசையின் விளைவு இன்பமா நன்மையா?' என்ற கேள்வி trick question, மன்னிக்க வேண்டும் geetha santhanam.

விடை: ஆசையைப் பொறுத்தது ;-)
(பத்து வரிகளுக்கு மிகுந்த விடையும் உண்டு. அடிப்படை ஒன்று தான்)

'ஆசை துன்பத்துக்குக் காரணம்' என்பதில் உண்மை இருக்கலாம். எனினும், 'ஆசையை ஒழி' என்பதில் அர்த்தமே இல்லை என்பது என் கருத்து. மாறாக, ஆசையே எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எரிவாயு என்று நினைக்கிறேன்.

பின்னொரு பாடலில் விரிவாகப் பார்க்கலாம், இங்கே முன்னோட்டம்: ஆசை என்பது விளைவுகளுக்கெல்லாம் அஸ்திவாரம். ஆசை, ஆர்வம், வேகம், விவேகம், திட்டம், தீவிரம் கடந்த ஏழாவது நிலை தான் விளைவு. ஆசையின் போக்கைத் தீர்மானிக்க குறைந்தது நான்கு நிலைகளாவது உண்டு (விவேகத்தில் தவறினால் திருப்பதி, எனினும் முதிர்ந்த அறிவென்றால் திட்டம் வரை சமாளிக்கலாம்). அதனால், 'ஆசையை ஒழி' என்பதும் அதைப் பின்பற்றுவதும் கண்மூடித்தனம் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

மெய்யறிவு பெற நசிகேதன் கொண்டது ஆசை தானே?

விடுங்கள், 'ஆசையை ஒழி' என்று சொல்ல அந்த ஞானிக்கு ஆசை!

Santhini சொன்னது…

இந்த வாபி சாபி இலிருந்தே துவங்கவா அப்பாதுரை?
தேடினீர்கள் போல ...இதோ வந்தேன்.

//இந்த வாபி-சாபி மூன்று நிதர்சனமான நடப்புகளைச் சார்ந்தது :
1. எதுவும் நிலைப்பதில்லை
2. எதுவும் முடிவதில்லை
3. எதுவும் முற்றும் சரியானதில்லை ///

கூடவே எதுவும் முற்றும் தவறானதும் இல்லை.
சரியென்று எதுவுமில்லை, தவறென்றும் எதுவுமில்லை.
நன்மையென்று எதுவுமில்லை, தீமைஎன்ரும் எதுவுமில்லை.
எதுவும் துவங்கவும் இல்லை, முடிவதும் இல்லை.
எதுவும் ஜனிப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.
வாழ்வு எனபது இருப்பதுமில்லை, இல்லாமலும் இல்லை.
மனிதம் மட்டுமே வாழ்வதற்கு பிறக்கவில்லை.

இதுதான் core. மனித சிந்தனைகள் இதை ஒட்டியே உருவாகியும் பெருகியும் வளர்கிறது. இந்த அடிப்படை உண்மைகள் மனிதன் தன்னை சமூக மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கி கொள்ளாமல் செயல்படும்போதே சாத்தியம்.
ஆசைகளை ஒழிக்க இயலாது. அது உயிரின் உயிர் வாழும் ஆசைக்கு எதிரானது. உயிர் வாழ்வதும், அதை பெருக்குவதும் இயல்பாக நிகழ வேண்டும், அனிச்சையாக. அனிச்சை செயல்களையும் கட்டுப்படுத்த முனைந்த சமூகம், அதன் கட்டு உடைகிற தருணங்களில் எல்லாம் தடுமாறுகிறது, எது ஆசை, எது துன்பம் , எது இன்பம் , எது நன்மை என்று. எவ்வளவு பரிதாபம்.

மனிதன் தான் உயிர் வாழும் காலத்தை நீட்டிக்க செய்யும் எல்லா செயல்களும் நன்மை என்று கருதுகிறான். தான் வாழ மரம், செடி , கொடி, விலங்கு என எத்தனையோ உயிர்களை துன்புறுத்துகிறான். அவை தீமை என்று யாரும் சொல்வதில்லை. மனிதன் தன்னை மட்டும் சுற்றியே இந்த மொத்த கேலக்சியும் இயங்குவதாக நினைக்கிறான். ஆனால் இயற்கை மனிதன் குறித்து எந்த கவலையும் கொள்வதில்லை. இயற்கையின் போக்குக்கு மனித உயிர் குறித்த எந்த அக்கறையும் கிடையாது.

அதை அறியாது, சொர்க்கம் , நரகம் , மறுபிறப்பு என்று மனித கற்பனைகள் பல கோட்டைகளை எழுப்பிக் கொண்டுவிட்டது.
கடோ மனித ஆசைகளின் மேல் எழுப்பப்பட்ட, அதன் ஒழுங்கு குறித்து, கவலைப்பட்ட, அதை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு புனைவு. நெறிகள் மெய்யறிவாகாது. எது இருக்கிறதோ அதுவே மெய். சமூக நெறிகளை அறிவதல்ல மெய்யறிவு. இயற்கையின் இயல்பினை அறிவதே மெய்யறிவு. இருப்பதை, இயற்கையின் இயல்பினை அறியும் போது, மனம் இன்பம், துன்பம், நன்மை தீமை, ஆசை எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறது.

Santhini சொன்னது…

ஒரு செயல் எல்லோர்க்கும் நன்மை விளைவிக்காது. சிலருக்கு நன்மையையும் சிலருக்கு தீமையும் உருவாக்கலாம். நன்மை மட்டுமே செய்வேன் என்று கிளம்பினால், மெண்டல் ஹாஸ்பிடல் போகும் நிலை உருவாகலாம். நன்மைகள் என சொல்லப்பட்ட செயல்கள் யாவும், கட்டுப்பாடு எனும் அடிப்படையில் கட்டப்பட்டது. அது சமூகம் கட்டுக்கோப்பை இயங்குவதற்காக உருவானது. சமூகத்தில் வாழும் சாதாரண மானுடர்கள் மெய்யறிவை தேடுவதில்லை. மெய்யறிவை ஒரு மனித மனம் எய்தும்போது அது சமூக கட்டுப்பாடுகளில் இருந்து விலகிவிடுகிறது. நான் சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பேன், ஆனால் எனக்கு மெய்யறிவு வேண்டும், என அடம் பிடித்தால்....அது நடப்பதற்கில்லை.
நானெப்படி நன்மை மட்டும் செய்து, நல்லவன் என்று எனக்கு நானே பேரேடுத்துக் கொள்வது அல்லது ஊரில் என்று பேரேடுப்பது என்று யோசித்தால் ....இலக்கியம், நாவல், ஆன்மீக புத்தகங்கள் என்று செட்டில் ஆகிவிடலாம். மெய்யறிவு வேண்டுமென்றால் ....ஊரை, உலகை, அதன் மதிப்பீடுகளை தள்ளி வைத்துவிட்டு வேறு கிரகத்தில் உட்கார்ந்து பூமியை வேடிக்கை பார்க்கவேண்டும். அதன் சுழற்சியை கவனிக்கவேண்டும். எல்லா உயிர்களின் சுழற்சியையும் வேடிக்கை பார்க்க வேண்டும். மதிப்பீடுகளை கவனிக்க வேண்டும். அவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கும்போது, உணர்வுகள் விலகி, அறிவு அதன் இயல்பில் செயல்படும். மெய்யறிவு வாய்க்கும்.
--

Santhini சொன்னது…

////ஆசையின் விளைவு இன்பமா நன்மையா? //// என்ற கேள்விக்கு நான் பதில் சொல்லவா?
ஆசை என்பது எதையும் சாராது இயங்கும்போது, அது தன் எல்லையை நீட்டிக் கொள்கிறது, அல்லது தன் இலக்கை அடைகிறது.
அதே ஆசை பிற பொருள் சார்ந்தோ, மனிதம் சார்ந்தோ அல்லது பிற உயிர் சார்ந்தோ இயங்குபோது அவை தடைகளை உருவாக்குகின்றன. ஆசை தன் இலைக்கை எய்த தடுமாறுகிறது. இது துன்பம் எனும் அலையாய் மனதில் பரவுகிறது.
இதில் நன்மை, தீமை எதுவும் இல்லை எனினும், துன்பம் என்பது மனதிற்கு வேண்டாத விஷயமாக கருதப் படுவதால், இங்கு நன்மை அல்லது தீமை என்ற கருத்தாக்கம்/ மதிப்பீடு உருவாகிறது.

சிவகுமாரன் சொன்னது…

முதல் வரியிலேயே நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள். இன்பமும் நன்மையும் நேரெதிரானவை என்பதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம்.
இன்பம் தருவன எல்லாம் நன்மை பயப்பன அல்ல. அது சரி, நன்மை தருவன எதுவுமே இன்பம் தருவதில்லையா ? எனக்கு குழப்புகிறதே அப்பாஜி.

சிவகுமாரன் சொன்னது…

பின்னூட்டங்களைப் படிக்காமல் முதலில் கேட்ட கேள்விக்கு , விடைகள் பின்னூட்டங்களைப் படித்தவுடன் கிடைத்திருக்கின்றன- இன்னும் நிறைய கேள்விகளுடன்.

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம் 'நானும்'! உங்கள் பின்னூட்டங்களை பல முறை படிக்க வேண்டியிருக்கிறது - புரிந்து கொள்வதற்காக அல்ல. உங்கள் எண்ணத்தின் தெளிவு எழுத்தில் வெளிப்படுகிறது. பல முறை படிக்க வேண்டியிருப்பது கருத்துச் செறிவையும் பரந்த எண்ண வீச்சையும் பலமுறை படித்து ரசிக்க. எழுத நேரம் எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.

அப்பாதுரை சொன்னது…

//அனிச்சை செயல்களையும் கட்டுப்படுத்த முனைந்த சமூகம், அதன் கட்டு உடைகிற தருணங்களில் எல்லாம் தடுமாறுகிறது..//

கட்டுப்படுத்த எண்ணியதில் பிழையா கட்டுப்படுத்தும் முறைகளில் பிழையா? என்ன நினைக்கிறீர்கள்? கட்டுப்பாடு என்ற பெயரில் கண்மூடித்தனமும் hypocrisyம் ஊடே வந்ததில் பிழை என்பது என் எண்ணம். கட்டுப்படுத்துவதை விட, நீங்கள் முன்பு சொன்ன 'accept and let go' பாணி உகந்ததோ என்று தோன்றுகிறது. செயல் என்பதே இறந்த காலம் என்கிறது பொது வேதாந்தம். எண்ணத்தில் நலமிருந்தால் செயலிலே நலமிருக்கும். எண்ணத்தைக் கட்டுப் படுத்த முடியாதே - செயலைத்தான் (தெரிந்தோ அனிச்சையாகவோ இருந்தாலும்) கட்டுப்படுத்த முனைகிறோம். அங்கேயே தகராறோ?

ஸ்ரீராம். சொன்னது…

"இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்" என்ற கவியரசர் வரிகள் ஞாபகம் வருகிறது..

//அப்பாதுரை கூறியது..."உங்கள் பின்னூட்டங்களை பல முறை படிக்க வேண்டியிருக்கிறது - புரிந்து கொள்வதற்காக அல்ல"//
நானும் பலமுறைதான் படிக்கிறேன். புரிந்து கொள்ளத்தான்...பலவீனமான மனம் எனக்கு!

அப்பாதுரை சொன்னது…

//இயற்கையின் இயல்பினை அறிவதே மெய்யறிவு. இருப்பதை, இயற்கையின் இயல்பினை அறியும் போது, மனம் இன்பம், துன்பம், நன்மை தீமை, ஆசை எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறது.//

கொஞ்சம் தயங்கி இதை எழுதுகிறேன். இயற்கையை மனிதம் மதிக்கவில்லை என்கிறீர்களா, அல்லது மதிப்பது போதவில்லை என்கிறீர்களா என்பது சரியாகப் புரியாமல்.. i agree with your principle, நானும். 'இயற்கையை மதிக்காத/மதிக்க மறுக்கும் மனிதம்' பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே.

ஒன்றை மறந்து விடுகிறோம். அண்டம் வெடித்து ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு மேலானாலும், மனிதம் தோன்றி 35000-70000 வருடங்கள்தான் ஆகிறது என்கிறார்கள். அதுவும், வளர்ச்சி என்பது சென்ற மூவாயிரம் ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் சொல்லப்படுகிறது. அதிலும், மனிதத்தின் 'potential' வெளிப்படத் தொடங்கி சில நூறு வருடங்களுக்கும் குறைவே.

தன்னைச் சுற்றியுள்ளவற்றை மனிதன் அறிந்து மதித்து வளர்வது is part of an evolution that we as homosapiens, are yet to attain என்று நினைக்கிறேன். மனிதத்தின் மேல் அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளின் கண்மூடித்தனங்களும் போலித்தனங்களும் வளர்ச்சியின் குறுக்கே வந்தபடி இருக்கின்றனவே? அது போதாமல், புது கண்மூடித்தனத் தொழிற்சாலைகள் தொடங்கியபடி இருக்கின்றனவே?

உங்களைப் போன்ற சில மனித மனங்கள் are ahead of its time. இது போன்ற தொலைநோக்குச் சிந்தனைகளை எடுத்து வைக்கின்றன. அவற்றை மனிதம் ஒதுக்குவதில்லை என்று நினைக்கிறேன். 'தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும்' என்று தெரிந்து கொள்ளும் அவசரத்தில் இருக்கிறது மனிதம். அந்நிலையில் இயற்கையிலிருந்து முரண்பட்டுப் போவது போல் தெரிகிறது.

நிச்சயம் இந்தத் திரையும் விலகும் - முப்பதைந்தாயிரம் வருடங்களில் இங்கே வந்திருக்கிறோம், இன்னும் ஐந்தாயிரம் வருடங்களில் இன்னும் முதிர்ந்த மனதுடன் செயல்படுவோம் என்று நிச்சயமாக நம்புகிறேன். அதுவரை உங்களைப் போன்றவர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் வழிகாட்டி போல் தானே?

அறிவுக்கு வலிக்கும்படி சாட்டையடி கொடுத்தீர்கள். நன்று.

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமார், ஸ்ரீராம் (உங்களுக்குப் புரியாமலா கவியரசின் வரியை மேற்கோள் காட்டினீர்கள்? :)
இருந்தாலும் உங்கள் டீமில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் அவர்களின் கருத்துக்கள் சில சமயம் சற்றுத் தெறித்து விழுகின்றன, பொறுக்கியடுத்து உள்வாங்க நேரம் பிடிக்கிறது.

கேள்விகளே நிரந்தரம், சிவகுமாரன். நான் சொல்லவில்லை, carl sagan சொன்னது. 'முடிவில் கேள்விகளே எஞ்சி நிற்கின்றன' என்றார். (அவருக்கு முன் யார் சொன்னதோ? :) நன்மையும் இன்பமும் தரும் எண்ணங்களை வளர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். செயல்கள்? அது வேறு விஷயம் - cup and lip கதை.

அப்பாதுரை சொன்னது…

'வாபிசாபி' பற்றிய கருத்துக்கு நன்றி மோகன்ஜி. சென் போல் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதிகம் தெரிந்து கொள்ள முயன்றதில்லை. நீங்கள் எழுதியதும் சற்றுத் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளத் தூண்டியது. படு சுவாரசியம் என்றே சொல்ல வேண்டும். (ஆணி கீணி இல்லாததால் இந்த luxury).

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாபிசாபியின் சாரம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்றாவது புள்ளி - முற்றிலும் சரியானதில்லை - என்பதில் வேர்விட்டிருக்கிறது.

இந்த 'accepting imperfection as is' என்பது கிழக்கத்தியக் கலாசாரம். அதுவும் தமிழ்க் கலாசாரம் என்பது கொஞ்சம் அகநானூறு பாடல்களிலிருந்தும் தெரிய வருகிறது. (நான் அதிகம் படித்ததில்லை; தெரிந்த வரை சொல்கிறேன்).

இந்தச் சிந்தனையைக் கொஞ்சம் differential diagnosis செய்து பார்க்கும் பொழுது நம் நாட்டு வடக்கத்திய இறக்குமதிகாளான வேதம், உபனிஷதுகள் வாபிசாபியின் எதிர்நிலைகளை வலியுறுத்துகிறதோ என்று தோன்றுகிறது. our scriptures seem to advocate 'perfection' as the root of bliss. வடமொழி கடோவில் கூட இந்தச் சார்பைப் பரவலாகக் கவனிக்க முடிகிறது.

(ஆரிய மாயையோ?)

அப்பாதுரை சொன்னது…

வாபிசாபியின் உங்கள் corollary ரசிக்க முடிகிறது, நானும். வெங்காயத்தை உரித்துப் பார்க்கச் சொல்கிறீர்கள்.

//மனிதன் தன்னை சமூக மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கி கொள்ளாமல் செயல்படும்போதே சாத்தியம்//

இதை எந்த உயரத்திலிருந்து கூவுவது? அப்படியாவது ஒரு சிலர் காதிலாவது விழுமா?

(பெயருக்கேற்ற மாதிரி தேடினதும் வந்து விட்டீர்கள்!)

Santhini சொன்னது…

சில பதில்கள்

///////முடிவில் கேள்விகளே எஞ்சி நிற்கின்றன///////
இல்லை. சரியாய் பார்க்கவும், இயற்கையோடு இயைந்து நிற்கவும் முடிந்தவர்களுக்கு பதில்கள் கிடைத்துவிடுகின்றன.


///// இயற்கையை மனிதம் மதிக்கவில்லை என்கிறீர்களா, அல்லது மதிப்பது போதவில்லை என்கிறீர்களா என்பது சரியாகப் புரியாமல்.. i agree with your principle, நானும். 'இயற்கையை மதிக்காத/மதிக்க மறுக்கும் மனிதம்' பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே.//////

இயற்கையை மனிதம் மதிக்கிறதா இல்லையா என்பது கேள்வியில்லை. இயற்கை என்பதை மனிதம் புரிந்து கொள்கிறதா இல்லையா என்பதே இங்கு கேள்வி. புரியாதபோது ஒத்துக்கொள்ளவேண்டாம் துரை. மேலும் பேசலாம். சின்ன எடுத்துக்காட்டு: மனிதம் புரிந்து கொள்வதும், புரியாமல் நிற்பதும்....இரண்டுமே இயற்கையின் இயல்பு. எல்லோரும் புரிந்து கொள்வதில்லை. அது குறையான விஷயமில்லை. அதுவே நியதி. இரட்டை. இயற்கையின் நியதியில் ஒரே கோட்டின் இரு முனைகளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அது அப்படித்தான் இயங்கும்.


///////தன்னைச் சுற்றியுள்ளவற்றை மனிதன் அறிந்து மதித்து வளர்வது is part of an evolution that we as homosapiens, are yet to attain என்று நினைக்கிறேன். மனிதத்தின் மேல் அசாத்திய நம்பிக்கை இருக்கிறது/////
வேதங்கள், உபநிஷத்துகள், பைபிள் மற்றும் குரான் போன்ற வழிகாட்டும், மெய்யறிவூட்டும் வெளிவந்து எத்தனை காலமாகிறது? அறிந்து வளர்கிற பரிணாமம் நிகழ்ந்திருந்தால், இன்னும் ஏன், மனித சமூகம் இன்றைய தேதியில் பல்லாயிரம் காலத்துக்கு முந்தைய வேதங்களின் கொள்கைகளை பேசிகொண்டிருக்கிறது ??? :)


//////இந்த 'accepting imperfection as is' என்பது கிழக்கத்தியக் கலாசாரம். அதுவும் தமிழ்க் கலாசாரம் என்பது கொஞ்சம் அகநானூறு பாடல்களிலிருந்தும் தெரிய வருகிறது. ............our scriptures seem to advocate 'perfection' as the root of bliss. வடமொழி கடோவில் கூட இந்தச் சார்பைப் பரவலாகக் கவனிக்க முடிகிறது.////////

கிழக்கு என சொல்கிறது, மேற்கு என்ன சொல்கிறது என்ற உங்களின் மதிப்பீடுகளை, ஆராய்ச்சிகளை மூட்டை கட்டுங்கள். யார் என்ன சொன்னால் என்ன? யார் வரையறை செய்வது, எது முழுமை, எது முழுமையற்றது என்று? நூறே வருஷ ஆயுளை தன்னோடு கொண்டு வந்து அதில் கொஞ்சமேனும் தன்னுணர்வோடு வாழும் காலத்தை வெகு சில வருடங்களே வைத்திருக்கும் மனித இனமா, கோடி, கோடி ....என எண்ண முடியா கால கட்டத்தில் சுற்றி சுழலும் பிரபஞ்சத்தின் இயல்பை வரையறை செய்து விட முடியும்?
எது முழுமை??? எது முழுமையில்லை???

////////கட்டுப்படுத்த எண்ணியதில் பிழையா கட்டுப்படுத்தும் முறைகளில் பிழையா? என்ன நினைக்கிறீர்கள்? கட்டுப்பாடு என்ற பெயரில் கண்மூடித்தனமும் hypocrisyம் ஊடே வந்ததில் பிழை என்பது என் எண்ணம். கட்டுப்படுத்துவதை விட, நீங்கள் முன்பு சொன்ன 'accept and let go' பாணி உகந்ததோ என்று தோன்றுகிறது. செயல் என்பதே இறந்த காலம் என்கிறது பொது வேதாந்தம். எண்ணத்தில் நலமிருந்தால் செயலிலே நலமிருக்கும் ///////
பூமியும், பிரபஞ்சமும் தன்னை கவனித்துக் கொள்ளும். எறும்பு ஊர்வது போல் பூமியின் பரப்பில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
காலில் நசுக்கிப் போவதுபோல், இயற்கையின் ஒரு கால் நம்மை நசுக்கிப் போகும். இது கட்டுப்படுத்த உருவானதில்லை. கட்டு படுவதுபோல், கட்டறுந்து ஓடும் இயற்கை. ஒழுங்காய் இருப்பதாய், மனித கண்களுக்கு பாவலா காட்டி, அது போகும் பாதை மனித கண்கள் அறிவதில்லை. எப்போதும் அறிவதில்லை. அறிய முடியும் என்பது நம்பிக்கை. அது வாழ்வை சுவைபட செய்கிறது.
இந்த வாழ்வை, எப்படி வாழ்வது என்பது அவரவர் விருப்பம். விருப்பம் என்பது இயற்கையின் உந்துதல்.

--

அப்பாதுரை சொன்னது…

இயற்கையை மனிதம் முழுதும் புரிந்து கொள்வது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். புரியாததை மதிப்பதும் மதிக்காமலிருப்பதும் இயற்கை தானே? இயல்பு தானே? மனிதம் இயற்கை என்றால் மனிதத்தின் புரிதலும் இயற்கையைப் போல் constantly evolving என்பதே நான் சொல்ல எண்ணியது.

//பூமியும், பிரபஞ்சமும் தன்னை கவனித்துக் கொள்ளும்// இதுவும் evolution தான் இல்லையா?

நான் வேதங்கள் உபநிஷதுகள் பைபிள் எல்லாம் மேலோட்டமாகப் புரட்டியது தான் :) இருந்தாலும், இவை எல்லாம் நெறி-நெறிதவறல்-தண்டனை என்ற 'disciplinary circuit'ல் வலம் வருகின்றனவே தவிர, நீங்கள் சொல்வது போல் இயல்பான, கட்டுப்பாட்டுக்கு உள்ளிடாத, அல்லது சுயக்கட்டுப்பாடுத் தீர்மானங்களுக்கு உள்ளிட்ட, நிலையை எடுத்துச் சொல்லாததே மனிதன் இன்னும் evolve ஆவதன் காரணமாக இருக்கலாம். என்னைக் கேட்டால் இன்னும் ஆயிரம் வருடத்திய மனிதம் இத்தகைய வேதங்களின் போதனையை பெரிதுபடுத்தாது என்று நினைக்கிறேன்.

//நூறே வருஷ ஆயுளை..
ஒப்புக்கொள்கிறேன். (சத்தியமாகப் புரிந்தது :) non-judgmental view தான் நிலைக்கும். ஆனால், அந்த முதிர்ச்சி அனேகம் பேரிடம் இல்லை என்பது travesty of evolution. இந்த நிலையைப் பலரிடம் நிறையப் பார்க்கிறேன் (என்னையும் சேர்த்து).

அப்பாதுரை சொன்னது…

//எல்லோரும் புரிந்து கொள்வதில்லை. அது குறையான விஷயமில்லை. அதுவே நியதி. இரட்டை.

ஹா! கவனிக்காமல் என் முந்தைய பின்னூட்டத்தை எழுதி விட்டேன். (அதான் சொன்னேனே.. தெறித்து விழுந்ததைப் பொறுக்கி எடுக்கு முன்..)

Santhini சொன்னது…

நீங்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தை குறித்து பேசுவோமா?
பரிணாமம்: அதன் வரையறை என்ன? எதை குறித்து நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்?
முழுமை பெறவா ? அந்த முழுமை என்பது எப்படி இருக்கும்? இன்னும் பெரிய பேருலகமா? அதில் இயங்கும் சக்திகள் குறித்த அறிவா? அன்றி இன்னும் சிறிய "God"s particle" போன்ற ஒன்றின் இயல்பை அறிவதா? அல்லது கணினிகள் போன்ற இயந்திரங்களின் பயன்பாட்டை உருவாக்குவதா?
பரிணாமம் என்பது எதை நோக்கி நிகழ்கிறது? உண்மையில் அப்படி ஒன்று நிகழ்கிறதா? அல்லது நிகழ்வது போன்ற மாயையை உருவாக்குகிறதா? பிரபஞ்ச துளிகளில் ஒன்றான பூமியும் அதன் உயிர்களும் மட்டும்தான், உலகின் மிக முக்கியமான, முழுமை நோக்கி நகரும் பரிணாமம் ( :) ) என்ற பொருளை நிகழ்த்துகிறதா? அது ஏன் பூமிக்கு அத்தனை முக்கியத்துவம் ???

பெயரில்லா சொன்னது…

அய்ய்யய்யா... இப்படி வேகுதே.. வெய்யில் வெக்கை தாங்க முடியலின்னா கரண்டை வேறே கட் பண்ணிடுறாங்களே? தாங்கமுடியலயப்பா.. இப்படி மண்டை காயுதே? அப்பா.. கடவுளே..

அப்பாதுரை சொன்னது…

//பரிணாமம்//

(சட்டென்று தமிழ்ச்சொல் மறந்துவிட்டது :)

எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்? சிக்கலான கேள்வி 'நானும்'. பரிணாமம் என்பது ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தால் அது பயணம், பரிணாமம் அல்ல என்று நினைக்கிறேன்.

பரிணாமம் நிகழ்ந்திருப்பதால் நிகழ்கிறது என்றே சொல்ல வேண்டும். அண்டம் வெடித்ததும் பூமி உருவாகவே சில கோடி ஆண்டுகள் பிடித்தனவே? பயிர்கள் தோன்றவும்உயிர்கள் தோன்றவும் இன்னும் கோடிக்கணக்கில்..

எல்லாமறிந்த கூட்டம் ஒன்று ரகசியமாக எல்லா உயிர்களையும் படைத்து காத்து அழித்து வருவதாக நம்பிக்கைகள் நிலவினாலும் - அந்த வகையிலும் மாறித்தான் வந்திருக்கிறது. அதனால் மாறுதல் நிஜம்.

சாதனைகள் பரிணாமத்தின் தடங்கள், மைல்கற்களே. அவையே பரிணாமத்தின் இலக்கு என்று சொல்ல முடியவில்லை. இன்றைய சாதனை நாளைய வேதனை என்பதும் நமக்குப் புரிந்து வருகிறதே?

பூமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை - எனினும் பூமியில் மட்டும் தான் மனிதர்கள்/intelligent beings இருப்பதாக நினைப்பது மாறும் வரை - நாம் மாறும் வரையிலும் - இந்த bias இருக்கும். அது தான் நம்முடைய பயணம் என்று நினைகிறேன்.

முடிவதால் முழுமை - முழுமையால் முடிவல்ல என்பது என் கருத்து. முழுமை என்பது முடிவில் நிகழும். அதுவரை பரிணாமும் தொடரும்.