வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/03/16

ஆன்மா சேருமிடம்


86
அருவி லரியுங் கருவிற் சரியு
முருவி லிரியு மிருந்து - சுருளும்
நுருவி னொருமை புரிந்தா ரிருப்பார்
திருவிற் துரியந் தெரிந்து.

   (உடலைப் பிரிந்த ஆன்மா) அணுவாக அண்டத்தில் திரிகிறது; சில நேரம் அறுந்து இன்னொரு கருவில் விழுந்து உடலில் தங்குகிறது; தங்கினாலும் உடலிலிருந்து வெளியேறுகிறது. பூ காயாகிக் காய் கனியாகி வெடித்து விதை பரவி முளைத்து மீண்டும் பூப்பது போன்ற பிறப்பிறப்பின் சுழற்சி, உண்மையில் ஒருமையே என்று புரிந்தவர்கள் அமைதியும் தன்னறிவும் பெற்று வாழ்வார்கள்


அருவில்: அணுவில், அணுவாக
அரியும்: உலவும், பிரியும், தனிப்படும்
கருவில்: கருப்பையில்
சரியும்: விழும், தங்கும்
உருவில்: உடலில்
இருந்து: தங்கி
இரியும்: பிரியும், பறக்கும், வெளியேறும்
சுருளும்: சுற்றும், சுழலும்
நுருவின்: காய் பழுத்து வெடித்துப் பிஞ்சாவதை, பயிரறுத்துத் தளிர் தோன்றுவதை (நுரு)
ஒருமை: ஒன்றிலடங்குவது
திருவில்: அமைதி நிலையில்
துரியம்: தன்னறிவு தோன்றும் யோகநிலை, மேன்மை, கடவுள்



    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! 'இறந்த பின் நிகழ்வதென்ன? உயிர் எங்கே போகிறது? ஆன்மாவுக்கு என்ன ஆகிறது' என்று பல கேள்விகள் கேட்டீர்கள். என் ஆசானிடமிருந்து நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

இறந்தக் கணத்தில் உயிரெனும் மூச்சுக்காற்று அடங்குகிறது. ஆன்மா உடலிலிருந்துப் பிரிகிறது. உடலிலிருந்துப் பிரிந்த ஆன்மா அண்டத்தில் அணுவாகிறது. சிற்றலை பேரலை எனும் உதாரணங்களை முன்பு சொன்னேனல்லவா? வலிமையான சிற்றலை பேரலையோடு சேர்ந்து இன்னும் வலிமையானப் பேரலையாவது போல ஆன்மா பேரான்மாவின் தேடலில் ஈடுபட்டுச் சேர்கிறது. சில நேரம் பேரலை அடங்குவது போலவே, அணுவிலிருந்து பிரிந்த ஆன்மா மீண்டும் இன்னொரு கருவில் விழுகிறது. கருவில் சேர்ந்த ஆன்மா மீண்டும் பிறவியின் பாதையில் பயணம் செய்கிறது. ஆன்மா அங்கேனும் தொடர்ந்து தங்கியிருக்கிறதா என்றால் இல்லை. தங்குவதில்லை. மீண்டும் உடலிலிருந்து வெளியேறி அண்டத்தில் கலக்கிறது. இந்த சுழற்சி இயல்பானது. பிறப்பும் இறப்பும் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒன்றே. எது தொடக்கம் எது முடிவு என்று அறியவியலாத சுழற்சி.

பயிரறுந்து மீண்டும் தளிராவதை நுருவென்கிறோம். பிறப்பிறப்பும் நுருவே. இந்த உண்மையை உணருவீர். முற்றிலும் உணர்ந்தால் பிறப்பு இறப்பு எனும் பேதங்களைத் துறப்போம். இறப்பினால் துக்கமுமில்லை, பிறப்பினால் மகிழ்ச்சியுமில்லை.

ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணத்தில் இளப்பாறத் தங்கும் நிழல் போன்றது பிறப்பு. ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணமெனில், எந்த மரணத்துக்காக அஞ்சுவது? அழுவது? ஆர்ப்பரிப்பது? ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்கான பயணமெனில், எந்த மரணத்தைத் தொடர்ந்து சொர்க்கம் வரும்? நரகம் வரும்? எந்த சொர்க்கத்துக்காக வேள்விகள் செய்வது? எந்த நரகத்தைத் தவிர்க்க வேள்விகள் செய்வது?

இந்த உண்மையை ஆழ்ந்து அறிந்தோமானால் மரணத்துக்கு அஞ்ச மாட்டோம். அஞ்சிக் கண்மூட மாட்டோம். பாவ புண்ணிய சொர்க்க நரக நாடகங்களில் பங்குபெற மாட்டோம். இளைப்பாறக் கிடைத்த நிழலின் பெருமையை உணர்ந்து நடக்கப் பழகுவோம். நம்முள் புதைந்திருக்கும் மெய்யறிவானத் தன்னறிவைத் தேடத் தொடங்குவோம்.

ஒளி வீசுகிறது. வீசுகிற ஒளியில் வந்து விழுகிற பொருட்களைப் பற்றி ஒளிக்குத் தெரியாது. ஒளியில் விழும் தருணத்தில் பொருளின் தன்மை புலப்படுகிறது. அழகை மேலும் அழகாக்குகிறது. அல்லது அழுக்கை இன்னும் அழுக்காக்கிக் காட்டுகிறது. ஒளியைக் கடந்ததும் பொருள் புலப்படுவதில்லை. அழகையோ அழுக்கையோ அறிய முடிந்த அந்தக்கணத்தில் ஒளியையும் சேர்த்தே அறிந்தோம். ஆன்மா ஒளியைப் போன்றது. நம் குணங்களின் அழகையோ அழுக்கையோ அறியச் செய்கிறது. ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்றுவோம்" என்றான்.

சற்று இளைப்பாறினான். பிறகு அவையோரை நோக்கி, "உங்களுக்கு அச்சம் தருவது தீயா, நீரா?" என்று கேட்டான்.

"இதில் என்ன சந்தேகம்? தீயே அச்சமூட்டுவதாகும்" என்றனர் அவையினர்.

நசிகேதன், "உண்மை. தீ அச்சமூட்டுவதாகும். அண்டத்தில் தீயின் அணுக்கள் பரவியிருக்கின்றன. அண்டத்தில் நீரின் அணுக்களும் பரவியிருக்கின்றன. தீ வெளிப்படையாக எரிந்து கொண்டேயிருப்பதில்லை. ஒரு கணத்தின் உரசலில் தீயை அறிய முடிகிறது. தீயை அறிய முடிவதால் மட்டுமே தீயின் தன்மையை உணர முடிகிறது. நீர் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிந்தே இருப்பது. இரண்டின் தன்மைகளையும் நன்கு அறிவோம். எனினும், கண்ணுக்குத் தெரிந்த நீருக்கு நாம் அஞ்சுவதில்லை; கண்ணுக்குப் புலப்படாதத் தீயைக் கண்டு அஞ்சுகிறோம். கண்ணுக்குப் புலப்படாத தீ, கண்ணுக்குப் புலப்படும் நீரில் அடங்கி ஒடுங்கும் என்பது தெரிந்திருந்தும் நம் மனம் கண்ணுக்குப் புலப்படாததை எண்ணிச் சஞ்சலபடுகிறது. இந்த உண்மையை உணர்ந்தக் கணமே அச்சம் அழிந்துவிடும். அறிவு தெளிந்துவிடும்.

பிறப்பு இறப்பு, மகிழ்ச்சி துக்கம், செல்வம் வறுமை, ஒளி இருள், தீ நீர் என்று உலகில் எத்தனையோ வகை இருமைகளைக் காணலாம். அவை ஒருமையின் வெளிப்பாடுகளே என்று உணர்ந்தக் கணத்தில் உள்ளத்தில் பெரும் அமைதிக்கான வழி உண்டாகிறது. அந்த அமைதியைத் தொடர்ந்து வளர்த்தால் தன்னறிவு எனும் மேன்மையை அடையலாம்" என்றான்.

அவையில் அமைதி. நசிகேதனின் கருத்துக்கள் அவையோர் மனதில் பதியத் தொடங்கின.

8 கருத்துகள்:

'பசி'பரமசிவம் சொன்னது…

நசிகேதன் சொன்னது சரி. ஆன்மா, மறுபிறப்பு பற்றியெல்லாம் தங்களின் கருத்துகளையும் வெளியிட்டிருக்கலாமே?

Expatguru சொன்னது…

பிறப்பு இறப்பு பற்றிய விளக்கம் அருமை. இதையே வினாயகர் அகவலில் ஒளவையார் "அணுவிற்கு அணுவாக அப்பாலுக்கு அப்பாலாய்" என்று கூறியிருக்கிறார். முன்பு ஒரு பதிவில் எமனின் தூதர்கள் நசிகேதனை அழைத்து கொண்டு செல்வதாக கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய வெண்பாவில் பல இடங்களில் எமனே கடைசியில் அனைவரும் தன்னிடம் வருவதாக கூறியுள்ளான்.

இப்போது இந்த விளக்கத்தையும் பார்த்தால் சற்றே முரண்பாடாக தெரிகிறதே. எல்லாமே அணுவாக கலந்தால் எமனும் எம தூதர்கள் என்றும் யாருமே கிடையாதே! முன்பு ஒரு பின்னூட்டத்தில் எமனை கடவுள் என்று கடோவில் கூறி இருப்பதாக சொன்னீர்கள். கடைசியில் யோசித்து பார்த்தால், 'கடவுள் யார்' என்ற கேள்விக்கே வருகிறோம் என்று எனது சிற்றறிவிற்கு தோன்றுகிறது. பேரான்மா தான் கடவுளா? கடோவில் இதை பற்றி ஏதாவது உள்ளதா?

அப்பாதுரை சொன்னது…

வருக பரமசிவம். இந்தப் பதிவின் நோக்கம் ஒரு அருமையான வடமொழி நூலைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே. ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் பற்றிய என் கருத்துக்கள் மாறுபட்டாலும் அவற்றை தலையங்கமாக (முதல் மூன்று பகுதிகளில்) அன்றிப் பாடலிலோ பொருளிலோ சேர்க்க மனம் வரவில்லை. மூல நூலின் மதிப்பை என் சொந்த விருப்பு வெறுப்புகளால் பாதிக்க விரும்பவில்லை. தமிழில் தரும் பொழுது மத/இன/தெய்வ/சடங்குக் குறிப்புகளை நீக்க மட்டும் உரிமையெடுத்துக் கொண்டேன் :) இது நசிகேதன் கதை. அப்படியே இருக்கட்டுமே?

அப்பாதுரை சொன்னது…

சரியான கேள்வி Expatguru!

கடோவைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். 'கடவுள் யார்' என்ற கேள்விக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இன்னொரு முறை படித்தால் வேறு கேள்வி எழலாம். நானும் உங்களைப் போல் தான். இந்தப் புத்தகத்தைப் பலமுறை படித்தபின் எனக்குள் எழுந்த கேள்விகளில் நிலையானது 'நான் யார்' என்பதே. அந்தக் கேள்விக்குப் பிறகே இதை எழுதத் தொடங்கினேன்.

கடவுள் யார் என்று தெரிந்து என்ன பயன்? கடவுள் எல்லாம் வல்ல சக்தி என்பது தெரிந்தால் 'ஹ்ம்ம் ஏற்கனவே தெரிந்தது தானே' என்ற சிறு ஏமாற்றம். கடவுள் ஒரு நனைந்தப் பட்டாசு என்று தெரிந்தாலும் அதே நிலை. எப்படியிருந்தாலும் சிலருக்குப் பெருத்த ஏமாற்றம். ஆனால் நாம் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் அது நமக்கு எப்போதுமில்லாத சமநிலைக் கண்ணோட்டத்தையும் அமைதியையும் வழங்கும் - நிச்சயம். நான் யாரெனத் தெரியாமல் வாழ்ந்தேன், இனி வாழேன் என்ற குறிக்கோள் தொட்ட வேகத்தைக் கொடுக்கும் - நிச்சயம். கடோ எழுதியவர்களின் நோக்கமும் அதுவாகவே இருந்திருக்கும் என எண்ணுகிறேன். தன்னையறிந்து கொள்ளும் தேடலில் இறங்கவே இதை எழுதினார்கள் என்று நம்புகிறேன். இதைப் படிப்பவர்கள் பலரும் பலதரக் கேள்விகளுக்குப் பின்னர், 'தான் யார்' என்ற கேள்வியை கேட்பார்கள் என்று எண்ணுகிறேன்.

எமன் 'கடைசியில்' 'அனைவரும்' தன்னிடம் வருவதாகச் சொல்லவில்லை - மீண்டும் படித்துப் பாருங்களேன்?

எமன் யார்? நசிகேதன் யார்? போன்ற கேள்விகளுக்குச் சரியான விடை கிடையாது. கதை சொல்லும் பாணிகளில் இது ஒன்று. இதைத் தத்துவக் கண்ணோட்டத்துடன்.. even logical கண்ணோட்டத்துடன்... பார்த்தாலும் எமன் யார் என்பதற்கான ஒரு விடையைப் பின்னுரையில் எழுத எண்ணியிருக்கிறேன். (அவசரமென்றால் பதில் சில பாடல்களிலும் பின்னூட்டங்களிலும் புதைந்திருக்கிறது :)

உங்கள் கேள்வியிலேயே ஒரு விடை புதைந்திருப்பதை இப்போது தான் கவனித்தேன்: "எல்லாமே அணுவாக கலந்தால் எமனும் எம தூதர்கள் என்றும் யாருமே கிடையாதே!"
ஒருமையில் கவனியுங்கள் :)

meenakshi சொன்னது…

வெண்பா படிக்க அழகாக இருக்கிறது. வாய்விட்டு ஒரு முறை சொல்லி பார்த்தேன். தமிழ் இனிமைதான்.

//ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்திற்கானப் பயணத்தில் இளப்பாறத் தங்கும் நிழல் போன்றது பிறப்பு. // மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
இளைப்பாறும் இடத்தில் நிம்மதியாக இளைப்பாற முடிகிறதா?!


தீயையும், நீரையும் வைத்து விளக்கி இருப்பது பிரமாதம். இருமைகள் எல்லாம் ஒருமையின் வெளிப்பாடு. உண்மை. எதற்கும் கலங்காமல் எல்லாவற்றையுமே ஒரே மன நிலையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் வந்தால் மனதில் என்றுமே அமைதிதான். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க இயலாது என்பது போல் கலங்கிய மனதில் தெளிவு பிறக்காது. அமைதியே தன்னறிவு பெறுவதற்கு முதல் படி என்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். அருமையான விளக்கம்.

சிவகுமாரன் சொன்னது…

படிக்க படிக்க சுவையான வெண்பா.
புதிய ( பழைய ??) சொற்கள். பொறாமையாக இருக்கிறது அப்பாஜி

சிவகுமாரன் சொன்னது…

ஒளி-பொருள் , ஆன்மா - குணம் அருமையான உவமை. சிந்திக்க வைத்த விளக்கம்.

\\ஒளியிலிருந்து விலகுமுன் அழுக்கையகற்றுவோம்"//
அருமை

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, சிவகுமாரன், ...

'ஒளி' பற்றிய குறிப்பு கேனோபஷிதில் வருகிறது சிவகுமாரன். அதை லேசாகத் திரித்து இங்கே பயன்படுத்தியிருக்கிறேன். ஆழமோ அழகோ வெளிப்பட்டால் அந்தப் பெருமை கேனோபனிஷது எழுதியவர்களுக்குச் சொந்தம்.