51
அண்டமும் காற்றும் அணுவும் கடலதும்
கண்டவொரு பண்டிதரைக் கண்டாயோ? நுண்ணறிவைக்
கண்ணாகக் கற்றல் அரிததிலும் கற்பிக்கும்
அண்ணாவிப் பற்றல் அரிது.
கண்டவொரு பண்டிதரைக் கண்டாயோ? நுண்ணறிவைக்
கண்ணாகக் கற்றல் அரிததிலும் கற்பிக்கும்
அண்ணாவிப் பற்றல் அரிது.
அண்டங்களையும், காற்றையும், அணுவையும், கடலையும் முழுதும் அறிந்தோரை அறிவாயோ? (அறியாய், நசிகேதா). இவற்றை விடப் பரந்த, விரிந்த, நுட்பமான, ஆழமான தன்னறிவை, கண்களைப் பேணுவது போல் போற்றிக் கற்பது அரிது; கற்றுத்தரும் ஆசிரியரைப் பிடிப்பது இன்னும் அரிது (என்றான் எமன்).
அண்ணாவி: ஆசிரியர்
['is there anyone so wise, as to learn from the experience of others?' - voltaire]
ஆசிரியர்-மாணவர் தேர்வு முறைகளைப் பற்றி முதல் பகுதியில் பார்த்ததைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு தொடர்வோம்.
ஆசிரியர் மாணவரைத் தேர்ந்தெடுக்கிறாரா, அல்லது மாணவர் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கிறாரா? பொதுக் கல்வி என்று பார்த்தால், குருகுல முறை தொடங்கியதிலிருந்து இன்று வரை, ஒருவரை ஒருவர் தேர்வு செய்யும் வசதி குறைந்து ஏறக்குறைய நின்று விட்டது எனலாம். தனிக்கல்வியிலும் இந்த வசதி அனேகமாக ஒருதலையாகவே இருக்கிறது. இப்போதைக்கு, ஒருவரையொருவர் தேர்ந்தெடுக்க வசதி இருப்பதாகக் கொள்வோம்; எனில், எது எளிது? ஆசிரியர், தனக்குத் தகுந்த மாணவரைத் தேர்ந்தெடுப்பதா? மாணவர், தனக்குத் தகுந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதா? ஒரு கணம் சிந்திக்கவும். விடை புலப்பட்டதா? இது சற்றே விவகாரமான வட்டக்கேள்வி. சிந்திக்கக் கணமெடுத்தமைக்கு நன்றி.
பொதுவாக, மாணவர்கள் கல்வி கற்றுப் பலவும் அறிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். அது அவர்கள் கடமை. அறிவை வழங்கத் தயாராக இருக்கும் ஆசிரியருக்கு மாணவர்கள் கிடைப்பது அரிதல்ல. கிடைத்த மாணவர்களுள், தான் வழங்கவிருக்கும் கல்வியை முக்கியமென எண்ணி, சிறந்த முறையில் குறிக்கோளோடு பயின்று, பரந்தும் ஆழ்ந்தும் அறிய முனையும் ஒன்றிரண்டு மாணவர்களையாவது ஆசிரியர்கள் விரும்புவார்கள். அந்த மாணவர்களைத் தேடிப் பிடித்து அறிவு புகட்டுவதே ஆசிரியருக்கு நிறைவு தருகிறது. அத்தகைய மாணவர்கள் கிடைப்பது அரிது. நூறு மாணவர்களில், அல்லது ஆயிரம் மாணவர்களில், ஒருவர் கிடைக்கக்கூடும். மாணவருக்கான இலக்கணங்களுள், 'தான் பெற்றக் கல்வியறிவைத் தொடர்ந்து பரப்ப வேண்டும்' என்பது ஒரு முக்கியமான இலக்கணம் என்று முன்னர் பார்த்தோம். கல்வி கற்க வரும் மாணவர்களுள் ஒருவராவது ஆசிரியராகும் எண்ணத்துடன் கற்பார்களா என்பது சந்தேகமே. இன்றையக் காலக்கட்டத்தில் 'ஆசிரியர்' என்பது காசு சேர்க்கும் ஒரு இடைநிலைத் தொழில் என்றாகிவிட்ட நிலையில், இந்த ஆய்வு சோர்வைத் தரலாம். இருப்பினும், சற்று சிந்தித்தோமானால், அத்தகைய மாணவர்களையே இன்றைய நாளிலும் நல்ல ஆசிரியர்கள் விரும்புவார்கள் என்பது புலப்படும். அந்த மாணவர்கள், ஆசிரியர்களாகியோ அல்லது வேறு விதத்திலோ, தாம் பெற்ற கல்வியைப் பரப்புவார்கள் என்ற நம்பிக்கை ஆசிரியர்களுக்கு இருப்பதால், அத்தகைய மாணவர்கள் தன்னைத் தேடி வரும் பொழுது மிகுந்த களிப்புடனும் நிறைவுடனும் கற்பிக்கிறார்கள். கற்க வரும் மாணவன் கற்ற கல்வி அவனுக்குப் பயன்படலாம்; அறிய வரும் மாணவன் கற்ற கல்வி அனைவருக்கும் பயன்படும். கற்க வரும் மாணவருக்கும் அறிய வரும் மாணவருக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் முகத்திலிருந்து அறியலாம் என்று ஆசிரியர்களைக் கேட்டால் சொல்வார்கள்.
நல்ல மாணவர்கள் கிடைப்பது அரிது; எனில், நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது? இன்றைய நிலவரத்தில் நல்ல ஆசிரியர் கிடைப்பது மிக அரிது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். காரணம், முன்னர் சொன்னது போல் வயிற்றுப் பிழைப்புக்கான வழியென்றானதும் ஆசிரியர் தொழிலிலும் குறைகள் நிரம்பிவிட்டன எனலாம். ஒரு வாதத்துக்காக இன்றைய நிலையை சற்றே மறந்துத் தொடர்வோம். நல்ல ஆசிரியர் என்பவர் யார்?
நல்ல மாணவரெல்லாம் நல்ல ஆசிரியராவதில்லை; ஆனால், நல்ல ஆசிரியர் அனைவருமே நல்ல மாணரானவர்கள். அறிவைப் பெறுவதில் கருத்தாக இருந்தவர்கள், அறிவைத் தருவதில் குறையோடு நடக்கக்கூடும். நம் வீட்டுக்குள்ளேயே உதாரணங்களைப் பார்க்கலாம். நன்கு படித்த தந்தையோ தாயோ தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இயலாமல் தவிப்பதைப் பார்க்கிறோம். ஆசிரியருக்கான இலக்கணங்களுள் பொறுமை, சகிப்புத்தன்மை, அடக்கம், அன்பான கண்டிப்பு போன்றவை அறிவுக்கு இணையானவை எனலாம். ஒரு மாணவரின் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது... தனக்குத் தேவையான அறிவைக் குறை வைக்காமல், அதே நேரம் தன் அறிவு வளர்ச்சிக்கேற்ற விதத்தில் தன்னளவுக்கு இறங்கி வந்து, தன்னோடு வளர்ந்து, அறிவை வழங்கி, சரியான நேரத்தில் தன்னிடமிருந்து விலகும் ஆசிரியரையே நல்ல மாணவர்கள் விரும்புகிறார்கள். நம்மில் எத்தனை பேர் நல்ல ஆசிரியராகத் தகுதியானவர்கள்? (நான் ஏதாவது சொல்லித் தருகிறேன் என்றாலே என் பிள்ளைகள் தலைதெறிக்க ஓடுவார்கள்).
அறிவில் கன்றாக இருக்கும் மாணவருக்கு இணையாக இறங்கி நின்று, அதே நேரம் மாணவரை வளர்த்து, மாணவரோடு வளர வேண்டியிருப்பதால்... நல்ல ஆசிரியர் கிடைப்பதே, நல்ல மாணவர் கிடைப்பதைக் காட்டிலும் அரிது.
ஆசிரியரைக் குரு என்கிறோம். குரு என்றால் வழிகாட்டி. வழிகாட்டிக்கு பாதையில் சென்ற அனுபவம் இருக்க வேண்டும்; பாதையைப் பற்றிய விவரங்களை, நல்லது கெட்டதை அறிந்து, பயணிக்கேற்றபடி சொல்லத் தெரியவும் வேண்டும். அதுவும், வாழ்வுக்கு வழிகாட்டியெனில், 'குரு' எத்தகைய அறிவும் சிறப்பும் பெற்றிருக்க வேண்டும்! 'குரு என்பவரே உண்மையான மேன்மையான அறிவின் உரு' என்ற பொருளில் வடமொழியில் குருவழிபாடு உண்டு. (கடவுளுக்கு வழங்கப்படும் தகுதி - பரப்ரம்ஹம் எனும் மேன்மையான அறிவு). போஸ்டர் ஒட்டிக் காசு சேர்க்கும் காவி வேட்டியெல்லாம் குருவாகிவிட்ட இந்த நாளில், இத்தகையச் சிந்தனை பெரும்பாலும் வாதத்துக்கு மட்டுமே உதவும். எனினும், சிறந்த வழிகாட்டிகளை மக்கள் அவ்வப்போது அடையாளம் கண்டு குருவாக ஏற்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் தங்கள் சீடர்களின், மாணவர்களின், மக்களின் வாழ்வில் ஏதாவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். காவி வேட்டிகளைத் தாண்டி சில நேரம் நம்மாலும் காண முடிகிறது.
['தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதிலலையா?' - கண்ணதாசன் ]
"தன்னறிவு என்பது மிக நுண்மையான அறிவாகும்" என்றான் எமன். "தெரியும், ஆனால் தெரியாது; புரியும், ஆனால் புரியாது".
"ஆ!" என விழித்த நசிகேதனைப் பார்த்துப் புன்னகைத்தான் எமன். "நசிகேதா! அண்டம் என்பது பல உலகங்களையும் சூரியன் சந்திரன் என இன்னும் பல நட்சத்திரங்களையும் கோள்களையும் வெளியையும் தன்னுள் அடக்கி, விவரிக்க முடியாத அளவுக்கு பரந்திருப்பதாகும். நம்முடையப் பார்வைக்குத் தெரிவது மிகச் சிறிதே. பார்வைக்குத் தெரியாத அண்டம் மிகப்பெரிது. தன்னறிவு என்பது அதைப் போன்றது. நம் பார்வைக்கு, உணர்வுக்கு, தெரிந்ததும் புரிந்ததும் சிறிதே. எனினும் மிகப் பரந்ததாகும். தேடத் தேட வளரும் அறிவாகும்.
அண்டத்தைப் போல் கண்ணுக்குப் புலப்படுவது கடல். கடல் புலப்பட்டாலும், கடலின் ஆழம் கண்ணுக்குத் தெரிவதில்லை. தன்னறிவும் அப்படியே. ஆழமானது என்று தெரிந்தாலும், அதன் ஆழம் தோண்டத் தோண்டப் புரியும். உள்ளத்தின் உள்ளே புதைந்திருப்பதால் மட்டுமல்ல, தன்னறிவு கண்டோரின் நடத்தை ஆழ்ந்த அறிவின் அடையாளங்களை எடுத்துக் காட்டுவதாலும், தன்னறிவு கடலைப் போலவும் கடலை விடவும் ஆழம் என்பேன்.
கண்ணுக்குப் புலப்படாதது காற்று. காற்றை உணர முடியும். கண்ணுக்குப் புலப்படாதாயினும் காற்று எங்கும் நிறைந்திருப்பது. தன்னறிவும் காற்றைப் போன்றது. அளவிட முடியாதத் தன்னறிவின் பலனை நீ உணர முடியும்; உணர்த்த முடியும்.
கண்ணுக்குப் புலப்படாத இன்னொன்று அணு. மிக மிகச் சிறியது. ஆனால் காற்றைப் போலவே எங்கும் பரவியிருப்பது. தன்னறிவும் அத்தகையதே. கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு நுட்பமானது. ஆனால் எங்கும் எதிலும் நிறைந்திருப்பதாகும்.
அண்டத்தையும் காற்றையும் கடலையும் அணுவையும் நன்கு அறிந்தவர்களை நீ அறிவாயோ? அறிய மாட்டாய். காரணம் அவர்கள் மிக மிக அரிதானவர்கள். தன்னறிவு பெறுவதும் அரிதான செயலே.
தன்னறிவைப் பெற விழையும் மாணவன், குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அத்தகைய மாணவர்கள் கிடைப்பது அரிது. தன்னறிவைத் தகுந்த முறையில் கற்பிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியர் கிடைப்பது, அதனினும் அரிதாகும்" என்றான் எமன்.
'அது தெரிந்து தானே வரம் கேட்கும் பொழுதே மூவாசான் நீர்தான் என்றேன்?' என்று மனதுள் நினைத்தாலும் எமனிடம் பணிவுடன், "மேலும் சொல்லுங்கள்" என்றான் நசிகேதன். ►
3 கருத்துகள்:
//தன் அறிவு வளர்ச்சிக்கேற்ற விதத்தில் தன்னளவுக்கு இறங்கி வந்து, தன்னோடு வளர்ந்து, அறிவை வழங்கி, சரியான நேரத்தில் தன்னிடமிருந்து விலகும் ஆசிரியரையே நல்ல மாணவர்கள் விரும்புகிறார்கள்.//
நல்லாசிரியருக்கான இலக்கணம் அருமை. அதுபோல் நுண்ணறிவின் பரிமாணங்களை விளக்கும் (ஆழம், அளவு என்று) உவமைகளும் சிறப்பு.
நாம் தயாராக இருக்கும் பொழுது நமக்கான ஆசிரியர் தயாராக இருப்பார் எனும் புத்தரின் கூற்றை இன்று எடுத்து பார்த்தோமேயானல், கொடுப்பாரும் இல்லை கொள்வாரும் இல்லை எனும் நிலைதான் மிஞ்சுகிறது...
ஆசிரியர் குரு நிலை உயர்வது அரிதாக வருகிறது.. நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை .. வெற்றிடத்தை வெள்ளம் நிறைப்பது போல்.. அறிவின்மை அறிவால் நிரம்பும்.. தன்னறிவின் பாடத்திட்டங்களின் விரிவை எமன் எடுத்து வைத்த விதம் சிறப்பு...
இன்றைய மாணவர்களுக்கு நல்ல குரு அமைந்தால் மட்டும் போதாது. நல்ல அரசும் வேண்டும் போலிருக்கிறது. மாணவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் , சமச்சீர் கல்வி கொண்டு வருகிறார் ஒருவர், இன்னொருவர் ரத்து செய்கிறார், அடுத்து கோர்ட் ரத்து செய்யாதே என்கிறது. இதற்கு என்னதான் விடிவென்று நசிகேதனைக் கேட்கச் சொல்லுங்கள்
கருத்துரையிடுக