28
மழையெருமை போல்காலன் மாத்திரைப் பேந்திப்
பிழையிலாது கேள்பிள்ளாய் என்றான் - இழையுமுயிர்
ஈர்ந்தபின் எங்குபோகும் என்னவாகும் என்றுரைக்க
நேர்ந்தான் நசிகேதன் நொய்த்து.
பிழையிலாது கேள்பிள்ளாய் என்றான் - இழையுமுயிர்
ஈர்ந்தபின் எங்குபோகும் என்னவாகும் என்றுரைக்க
நேர்ந்தான் நசிகேதன் நொய்த்து.
மழையில் நனையும் எருமைமாடு போல் ஒரு கணம் சலனமற்று விழித்த எமன், "தெளிவாகக் கேள், இளையவனே" என்றான்; பதிலுக்கு, "இழைநூல் போன்ற உயிரானது, அறுந்ததும் எங்கு போகிறது, அதற்கு என்ன ஆகிறது என்பதை உரைக்கும்படி" எமனிடம் விவரமாக வேண்டினான் நசிகேதன்.
மாத்திரை: சிறு கால அளவு
பேந்தி: விழித்து
ஈர்ந்த: அறுந்த
நேர்ந்தான்: வேண்டினான்
நொய்த்து: நுண்மையாக்கி, பொடியாக்கி, பிரித்து
தர்மசங்கடம், அதாவது இக்கட்டான நிலை, என்றால் என்ன?
'அடுத்த அறைக்குள் என்ன நடக்கிறது என்றறிய ரகசியமாகச் சாவித்துளையில் கண் வைத்துப் பார்க்கையில், மறுமுனையிலும் கண் தெரிந்தால் இக்கட்டு' என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னதாகச் சொல்வார்கள். சுவாரசியமான விளக்கம்.
சற்றும் எதிர்பாராததைக் கண்டுப் பேதலிக்கிறோம். வீட்டிலோ வெளியிலோ இது போன்ற இக்கட்டுகளை எதிர்கொள்கிறோம். பல நேரம் வெறும் பேச்சு வார்த்தை கூட நம்மை நிலைகுலையச் செய்வதை அறிவோம். அத்தகைய சூழலில், எதிர் நடவடிக்கையில் உடனே இறங்காதிருப்பது ஒரு தந்திரம். "என்ன சொன்னீர்கள்?" என்று புரியாதது போல் ஒரு முறை கேட்டால், அந்தக் கணத்தின் கொந்தளிப்பு திசைமாறக் கூடும். பதில் வேறு விதமாக வரச் சாத்தியமுண்டு. delay and deflect என்பது அவசரம், குழப்பம், மற்றும் தர்மசங்கடமான நிலைகளில் கையாளப்படும் தந்திரம். இதற்கான உதாரணங்களைச் சட்டமன்றங்களிலும், அரசியலிலும் அடிக்கடிக் காணலாம். சர்சில், இந்திரா காந்தி, பில் கிலின்டன், கருணாநிதி போன்றவர்களின் அரசியல் சமாளிப்புத் தந்திரங்கள் முதுநிலைப் பாடமாக வேண்டிய அளவுக்கு நுண்மையானவை.
எமன் அனுபவித்ததும் எதிர்பாராத சங்கடம். வரம் தருவதாக வாக்களித்து விட்டான். ஆனால் நசிகேதன் கேட்ட வரமோ, மரண உண்மையின் விளக்கம்.
இதில் எமனுக்கு என்ன இக்கட்டு?
மரணத்தின் தன்மை மர்மமாக உள்ள வரை மனிதருக்கு மரண பயம் இருக்கும்; அந்தப் பயத்தை வைத்து நன்மை தீமைகளை நேராகவோ, கண்மூடித்தனமாகவோ, அறியச் செய்யலாம். fear is the best motivator - பயத்தைப் போல் சிறந்த உந்துதல் எதுவுமே கிடையாது என்பார்கள். இந்தப் பிள்ளை மரண உண்மையை வேண்டுகிறானே? அதுவும் மரண தேவனிடமே கேட்கிறானே? மரண உண்மை தெரிந்துவிட்டால் மரண தேவனை யார் மதிப்பார்கள்? 'வரம் தருவதாகச் சொன்னோம், இப்போது ஆளையே கவிழ்க்கும் வரத்தை எப்படி வழங்குவது'? இதுவே எமனின் தர்மசங்கடம்.
நசிகேதன் கேட்ட வரம் காதில் விழுந்ததும் எமனுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. என்ன கேட்கிறான் இந்தப் பிள்ளை?! மழையில் நனையும் எருமை போல் சலனமில்லாமல் நின்றான் எமன். பிறகு நிலைக்கு வந்து, "பிள்ளாய், நீ சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. தவறாகக் கேட்டது போலிருந்தது. சற்றுத் தெளிவாகக் கேட்கிறாயா?" என்றான். ஒருவேளை வேறு ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தான்.
நசிகேதன் விடுவானா? முதல் வரத்தில் பாடம் கற்றவன் அல்லவா? மரணத்தின் தன்மை என்று பொதுவாகச் சொன்னால் விளங்காமல் போய்விடப் போகிறதே என்று நினைத்தவன், கிடைத்த வாய்ப்பை இழப்பானா? எமனுக்கு நிகராகப் பதில் சொன்னான். "ஐயா, உயிர் பிரிந்ததும் எங்கே போகிறது? என்ன ஆகிறது? இதைச் சொல்லுங்கள்" என்று, தான் அறிய விரும்பிய மரண உண்மையின் விவரங்களை குழப்பமே வராத அளவுக்குப் பிட்டு வைத்தான்.
ஒருவேளை இந்த உரையாடல், எமன் என்னும் ஆசிரியன் நசிகேதன் என்னும் மாணவனுக்கு வைத்த நுழைவுத்தேர்வா?►
29 கருத்துகள்:
நசிகேதனுக்கு இணையான ஆவலுடன் மரணத்தின் பின் என்ன நடக்கும் என்ற மர்மத்தைச் சொல்லுவீர்கள் என்று பார்த்தால் இந்தப் பாடலிலும் சொல்லாமல் வாய்தா வாங்கிவிட்டீர்களே.
என்னவாகும் என்பதற்கு இன்னொரு எபிசோடுக்கு காத்திருக்கணும்... சரி...
மரணபயம் வாழ்வின் நெறிக்கு உதவுவது போல் இருந்தாலும் . இது எதிர்மறையான விஷயம் தான். இதனால் பெறும் திருத்தம் , தாழ்வு மனப்பான்மையைத்தான் உருவாக்கும் . சலிப்பாக மாறும்... ஓரு நிலை வரை இந்த பயம் தேவைதான் .. குழந்தைக்கு பூச்சாண்டி மாதிரி ... மனிதனின் நேர் மறையான வாழ்வுக்கு மரணபயம் தாண்டிய சுத்த வாழ்வு நெறி ... எமனிடமிருந்து இதற்கான பதில் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் நசிகேதனோடு நானும் ....
நானும்....
\\மழையெருமை//
அட
ஒருசொல் கவிதை
மூலத்தையும் அதன் உரையையும் படித்துப் பார்க்கும்போது கட உபநிடதத்தை எவ்வளவு எளிதாக அனைவருக்கும் புரியும்படி வெண்பாவாகவும்,பொருளுடனும் தருகிறீர்கள் என்று வியப்பு ஏற்படுகிறது.சிறப்பான பணி!
வாங்க geetha santhanam, RVS, ஸ்ரீராம், சிவகுமாரன், சென்னை பித்தன், ...
உயிர்ப் பயணம் பற்றி அறியும் அவசரமா geetha santhanam, RVS, ...?
விவரம் ஐந்தாம் பகுதியில் வருகிறது. இன்னும் ஐம்பது பாடல்களுக்காவது பொறுமை வேண்டுமே?
என்ன செய்வது? இந்த அறிவைப் பெறும் தகுதி இருக்கிறதா என்று எமன் தன் மாணவனை சோதிக்கிறானே? பிறகும் மெள்ள மெள்ள இன்னும் மெள்ள அல்லவா சிக்கல் அவிழ்க்கிறான்?
செறிவான கருத்து பத்மநாபன்.
மரணபயம் கூட நமது தினசரி பயங்களுக்கு ஒரு உருவகம் எனலாம். அறியாத புரியாத எதையும் ஏற்கவோ மறுக்கவோ அஞ்சுவது மனித இயற்கை. அப்பா அம்மா கணவன் மனைவி பிள்ளை என்று உள்ளேயும் மேலாளர் வம்புக்கு வரும் தெருக்காரர் அரசியல்வாதி என்று வெளியேயும்.. நமது சுயமரியாதையை தினம் இழக்க வைப்பதும் காரணமில்லாத பயமே. தன்னையே கண்டு பயப்படும் கோழைகளையும் பார்க்கிறோம்/றேன். எத்தனை அச்சம்! தினம் செத்து செத்து மடிகிறோமே? எல்லாமே ஒரு வகையில் மரண பயம் தான். பிட்டால் அத்தனையும் புழு! அதை உணர்ந்தால் கிடைக்கும் விடுதலை - நல்ல புழுக்கத்தில் எதிர்பாராமல் அடிக்கும் ஈரக்காற்று அல்லவா?
தொடர்ந்த வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சென்னை பித்தன்.
பத்மநாபானின் கருத்து அருமை! மரண பயம்,மயான வைராக்கியம் எல்லாமே மனிதனை அவ்வப்போது நிறுத்தி யோசிக்க வைக்கிறது.
லட்சத்தில் ஒருவரே "காலா வாடா உன்னைக் காலால் உதைக்கிறேன்' என்று மார்த்தட்ட இயலும்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் ஒரு கவிதையை இங்கு சொல்வது பொருத்தமாய் இருக்கும். காலத்தையும் காலனையும் இணைக்கும் அழகைப் பாருங்கள்.
நெல்லறுக்க வோர்காலம்,மலர்கொய்ய
வோர்காலம்,நெடிய பாரக்
கல்லறுக்க வோர்காலம், மரமறுக்க
வோர்காலம், கணிதமுண்டு:
வல்லரக்க னேயனைய நமன்நினைத்த
போதெல்லாம் வாழ்நாளென்ன்னும்
புல்லறுக்க வருவனெனில் நெஞ்சமே!
மற்றினியாம் புகல்வ தென்னே!
மரணமில்லாப் பெருவாழ்வு.. பற்றியும் பேசலாமே அப்பாதுரை சார்!
அன்பு பத்மனாபனின் காலை இழுத்து 'பத்மநாபான்' ஆக்கிவிட்டேன். மன்னிக்கவும். காலை இழுத்தேன் அன்றி காலை வாரவில்லை!
//காலை இழுத்தேன் // பானுமதி புருஷன் மாதிரி.. நட்புக்குள்ளும் கபடி ஆட்ட கால் இழுக்கலாம் மோகன்ஜி
நெல்லறுக்கவோர்காலம் அருமை மோகன்ஜி..படித்ததில்லை..புல்லறுக்க எனும் வரியை படிக்கும் பொழுது தானாக வருகிறது ``கருக்``
//மரணமில்லாப் பெருவாழ்வு.// வள்ளலார் சொன்னது.. இதற்கு உடலில் ஆரம்பித்து , சுவாசம் சுத்திகரித்து, மனம் பயிற்சியில் விரிந்து விரிந்து செல்ல வேண்டும்.
இதெல்லாம் வணிக சாமியான்களிடம் சிக்கி கெட்ட வார்த்தை ஆகிவிட்டது..
குறைந்த பட்சம் நோயில்லா பெருவாழ்வு வாழ்ந்தாலே, நம் குழந்தைகளுக்கு கடனில்லா பெருவாழ்வு கொடுத்த மாதிரிதான்...
இந்த பதிவு கொஞ்சம் ஏமாற்றமாகதான் இருந்தது. மிகுந்த ஆவலுடன் மரணத்திற்கு பின் என்ன என்பதை அறிய ஆவலுடன் இருந்தேன். ம்ம்ம்ம்......!
'மழையெருமை போல்' எமன் என்பதால் எருமையே உதாரணமா! மிகவும் ரசித்தேன்!
எதையும் அறிந்து கொள்ளும்போது அதன் தன்மையுடன் அறிந்து கொள்ள எவ்வளவு பேருக்கு சாத்தியமாகும்! இந்நிலையில் எமனின் இக்கட்டானா நிலையை அழகாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்.
மனிதர்களிடம் மரணம் பற்றிய பயம் இருப்பதால்தான், சிலபேர் எதற்கெடுத்தாலும் நான் சாகிறேன், தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றெல்லாம் சொல்லியே அடுத்தவரை பயமுறுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொள்கிறார்கள்.
மரணத்தின் தன்மையை நன்கு உணர்ந்து, மரணத்துக்கு பின் உயிர் பயணம் பற்றிய தெளிவான அறிவை பெற்றாலும், நாம் கண்ணார கண்டு, பழகி, அன்பு செலுத்தி, ஆனந்தம் கண்ட அந்த உடல் அழிவது மிகுந்த வேதனைதான்.
வெண்பா மிகவும் அருமை! மீண்டும் மீண்டும் படித்தேன்!
//காலை இழுத்தேன் அன்றி காலை வாரவில்லை// Arputham Mognan Sir.
//வணிக சாமியான்// Inge Niraya Katrukolla mudigindrathu Sir. :))))
வருக மோகன்ஜி, meenakshi, பெயரில்லா (?)...
தேசிக விநாயகம் பிள்ளை அதிக படித்ததில்லை மோகன்ஜி. ஆழமான வரிகள். சூனிய பாஷையாக இருக்குமோ? நெடிய பாரக்கல் என்னவோ நினைக்கத் தோன்றுகிறது.
தொடர்ந்து ஏமாறப் போகிறீர்கள் meenakshi :) RVS, geetha santhanam ஸ்ரீராம் எல்லாம் கேட்ட அதே கேள்விக்கு என் அதே பதில்.. பொறுமையாகத் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.
சரியே, meenakshi.
உடலை வைத்துத் தான் உயிரை அறிகிறோம். உண்மை. இருந்தாலும் இறந்தாலும் இன்னாரென்று ஒரு மனிதனின் உடலை வைத்துத் தான் அறிகிறோம். கொஞ்சம் உல்டா செய்து பார்த்தால் திடுக்கிட வைக்கும் உண்மையை அறிவோமோ? நீங்கள் சொல்லியிருப்பது சிதம்பர ரகசியம். அதை அறிந்தவர்கள் கண் மூடுவதில்லை என்று நினைக்கிறேன். நல்ல கருத்து. நன்றி.
சிறு திருத்தம் அப்பாஜி.
தேசிக விநாயகம் பிள்ளை என்பவர் கவிமணி என்றழைக்கப்பட்டவர். ரசிகமணியின் மகன் இறந்தபோது இவர் எழுதிய இரங்கற்பா படித்துவிட்டுத்தான் " இப்படி ஒரு வெண்பா கிடைக்குமென்றால் இன்னும் எத்தனை பிள்ளைகளை வேண்டுமானாலும் இழக்கலாமே" என்றாராம் ரசிகமணி.
மோகன்ஜி சொல்வது தமிழின் முதல் புதினமான "பிரதாப முதலியார் சரித்திரம் " எழுதிய மாயூரம் வேத நாயகம் பிள்ளை.
சரி தானே மோகன் அண்ணா
நன்றி சிவகுமாரன்.
அப்பாதுரை சார்! நான் சொன்னக் கவிதை நீங்கள் குறிப்பிட்டது போல் தேசிய விநாயகம் பிள்ளை எழுதியது அல்ல. அவர் கவிமணி.. அவர்பற்றி ஒரு பதிவிட உத்தேசம். பார்க்கலாம்.
நான் குறிப்பிட்ட கவிதை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. தமிழின் முதல் நாவலான 'பிரதாபமுதலியார் சரித்திரம்' படைத்த பெருமைக்குரியவர். கிருத்துவ சமயம் சார்ந்தவர்.ஆங்கிலேயர் காலத்தில் நீதிபதியாய் பணிபுரிந்தவர். பெண்ணியம் பற்றி நிறைய எழுதியும்,பேசியும் வந்தவர
(நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னர்)எதிலும் தமிழ் கொள்கையுடைய தமிழார்வலர். அவரின் பேரனோ அல்லது கொள்ளுபேரனோ.. பால் வேதா நாயகம் என் தந்தையின் நெருங்கிய நண்பர்.
அக்கவிதையின் வரிகள் பற்றி நீங்கள் நினைத்தது போலவே நானும் நினைத்திருக்கிறேன்.. என்னிடம் அவரின் சில கவிதைகள் உள்ளன..பிரிதொருசமயம் விவாதிப்போம்.
மரணத்தின் ரகசியம் அறிய ஆவலிருந்தாலும், உங்கள் வெண்பா மற்றும் விளக்கம் படிக்க அதைவிட ஆவல். அதனால் மெதுவாக உங்கள் எண்ண ஓட்டப்படியே பதிவிடுங்கள். நாங்கள் ரசித்துப் படிப்போம்.
சிவகுமாரன் முந்திக்கிட்டார் மோகன்ஜி!
பிழைக்கு வருந்துகிறேன். மனதில் தேசிக விநாயகம் பிள்ளை என்று ஏன் தோன்றியதோ தெரியவில்லை. (நாயகம் பிள்ளையும் தெரியாது; விநாயகம் பிள்ளையும் தெரியாது)
நன்றி geetha santhanam. பொறுமையா படியுங்கள். முதல் பகுதி விரைவில் முடியப்போகிறது - பகுதிக்கான கேள்விகளுக்கு பதில் சரியாகச் சொல்லவேண்டும். (பிட் அனுமதிக்கப்படும்)
'பிரதாப முதலி சரித்திரம்' பம்மல் சம்பந்தனார் எழுதியது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. தமிழ்ச்சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதா?
அருமையான விளக்கம். நன்றி அப்பாதுரை!
கீதா எழுதி இருப்பதையேதான் நானும் இப்பொழுது சொல்ல விரும்புகிறேன். நான் அறிந்து கொள்ள விரும்புவதை படிப்பதற்காக பொறுமையுடன் காத்திருக்கிறேன். அதுவரை தொடர்ந்து நீங்கள் எழுதுவதை படிக்கவும் ஆவலுடன் இருக்கிறேன்.
//அப்பாதுரை கூறியது...உடலை வைத்துத் தான் உயிரை அறிகிறோம். உண்மை. இருந்தாலும் இறந்தாலும் இன்னாரென்று ஒரு மனிதனின் உடலை வைத்துத் தான் அறிகிறோம்.//
அப்பாதுரை நான் புதுசு !! நான் அதையும் தாண்டி உடலாலும் / உள்ளத்தாலும் / உயிராலும் ரசிக்கபடுவதில்லை. அதனால் பிரச்சனை இல்லை. எந்த உருவு எடுத்தாலும் செருப்படி தான் !!
'செருப்பாலடிபட்ட குடும்பம்' சாய்
கருத்துரையிடுக