வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/15

வெந்த பருப்பு


    டோபனிஷதத்தில் நசிகேதனின் இரண்டாவது வரம் பற்றியப் பாடல்களில் சடங்குகளும் இனக்குறிப்புகளும் நிறைய வருகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கிறேன் அல்லது குறைத்திருக்கிறேன். சில இடங்களில் விவரங்களை மாற்றியிருக்கிறேன்.

    இது குறித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி அறிவுரை சொன்ன அன்பர்களுக்கு நன்றி. இங்கே என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். முந்தைய பாடலின் பின் குறிப்பாகவோ பின்னூட்டமாகவோ எழுதியிருந்தால், பாடலுக்கு ஒரு திசைதிருப்பலாகப் போய்விடுமோ என்று அஞ்சி, தனிப்பதிவாக எழுதுகிறேன்.

    சடங்கு மற்றும் இன விவரப் பாடல்களைக் கடோவின் பிற்சேர்க்கை என்று நான் எண்ணினாலும், இது வடமொழி நூல் பற்றிய ஆய்வல்லாததால் அதுபற்றிய என் கருத்துக்களை எழுத விரும்பவில்லை. நசிகேத வெண்பாவில் வடமொழி நூலின் அடிப்படைக் கருத்தை, என் பார்வையில் சொல்ல முற்பட்டிருக்கிறேன். மூலத்தைச் சிதைக்கவோ, தார்மீகப் பிரசாரமாகவோ, சமூகமாற்றக் கொள்கையுடனோ, வேறெந்த புதைந்த எண்ணத்தோடோ எழுதவில்லை.

    எதற்காக எழுதுகிறேன்? இன்றைக்கும் புதுமையாகத் தோன்றும் கருத்துக்கள் உள்ளப் பழம்பெரும் நூலான கடோவின் கனமான ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் அறிவு, எள்ளளவும் எனக்கில்லை. உள்ளதை உரைக்கவே திண்டாடுகிறேன் என்பதும் உண்மை. கடோவைத் தழுவி எழுதப்பட்டு வரும் நூலானாலும், என்னளவில், நசிகேத வெண்பா மனிதநேயம் பற்றியத் தமிழ் நூல். ஒரு சிறப்பான வடமொழி நூல், மொழியின் தொன்மை காரணமாகத் தமிழில் படிக்க முடியாமல் போவதைத் தடுக்க, முடிந்தவரை பா வடிவில் கொடுக்க, முயற்சி செய்யலாமென்று தோன்றியதால் எழுதுகிறேன். பொழுதும் போகவும் ஒரு உருப்படியான வழி. சடங்குகளையும் இன விவரங்களையும் குறைத்ததற்கும் சில இடங்களில் நீக்கியதற்கும் காரணம், இக்காலத்துக்கு ஏற்ற வகையில் பரவலான படிப்புக்கு ஏதுவாகும் என்று நினைத்ததால். மேலும், அவ்விவரங்கள் படிப்பவரை நூலின் மையத்திலிருந்து விலக்கி நடத்துவதாக நான் தீவிரமாக நம்புகிறேன். என் நம்பிக்கைகள், என் அறிவின் நிறைகுறைகளைக் காட்டும் என்பதையும் உணர்கிறேன். மற்றபடி, அவரவர் நம்பிக்கைகளை மதிக்கிறேன்.

    'பலன் மட்டும் நிஜம், அதைக் கொடுக்கும் சடங்கு கண்மூடித்தனமோ?' என்ற கேள்விக்கு ஏற்ற பதில் இப்போது எனக்குத் தோன்றவில்லை (நல்ல கேள்வி!). 'தூக்கமும் தியானமும் கூடத் கண்மூடித்தனம் தான்' என்ற சுவையான முரணைச் சுட்டியதற்கும் நன்றி. அருமையான பார்வை. இதற்கான என் கருத்தை பின் பாடல்களில் விளக்கமாக எழுதுகிறேன். முன்பாடல்களில் அஜாதசத்ரு-பாலாகி உரையாடலை எழுதி, இதற்கு ஒரு சிந்தனைத் தளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். துயில் பலவகையானது என்றான் அஜாதசத்ரு. தியானமும் துயிலே. சாதாரணமாக உறங்கும் ஒருவனை வைத்து ஆன்மீகத் தேடலை, தன்னறிவை, மரணத்துக்கப்பாற்பட்டப் பயணத்தை அறிய முயல்வதாகச் சொன்னான் அஜாதசத்ரு. அவன் சொன்ன வழி, தீவிரத் தியானமே என்பது இந்நேரம் புரிந்திருக்கும். அறிவு மழுங்கிய நிலையில் செய்யப்படும் சுளிக்கத்தக்கச் செயல்களை விவரிக்கும் ஒரு சொல்லாக வழங்கப்பட்டாலும், கண்மூடித்தனம் என்பது ஒரு விசை. விசையை இயக்கினால் இயங்குவது யாதென்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும். தன்னறிவுக்கு ஓய்வு கொடுப்பதும் கண்மூடித்தனமே எனினும், ஓய்வு தன்னறிவை வளர்க்கவே என்றான் அஜா. தன்னறிவுக்கு நிரந்தர ஓய்வு உண்டா? ஓயுமானால் அதன் இருப்பிடம் (resting place) யாது? ஓய்வு துயிலென்றால், எந்த வகைத் துயில்? இந்தச் சிந்தனைத் தளத்திற்குத் திரும்பவும் வருவோம்.

    நானறியாத ஆழ்ந்த வேத விவரங்களும் கருத்துக்களும் கொடுத்து, மதநூல் எழுதும் முறை பற்றி அறிவுரை வழங்கியதற்கு மீண்டும் நன்றி. எழுத்துக்கு வழிகாட்டியாக அவற்றைக் கருதுகிறேன். அதே நேரம், இந்த நசிகேத வெண்பா மதநூல் அல்ல என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இது கடோவின் 1:1 மொழிபெயர்ப்பும் அல்ல (அதனால் சில சுதந்திரங்களை எடுக்க முடிகிறது :). உபனிஷதுகளின் மொத்தக் குத்தகைக்காரர் போல் வந்திருக்கும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லிப் பயனில்லை என்று நினைத்தாலும், சாதாரண இரட்டைநிலைக்கு மேலான ஆழமான பதிலைச் சொல்லத் தெரியவில்லை.

    மற்றபடி, பொதுவில் கருத்திட அழைக்கிறேன். அதனால் படிக்கும் ஏனையரும் தத்தம் கருத்துக்களைப் பகிர முடியும். திரு.காஸ்யபன் சொல்லியிருப்பது போல் தத்துவ விவாத விளக்கங்களுக்காக முழுமையாக எழுதப்பட்ட நூல் கடோபனிஷது. தத்துவங்களைப் புரிந்து கொள்ள அறிவில் முதிர்ச்சி வேண்டும்; விவாதிக்கவோ, தெளிவும் முதிர்ச்சியும் (நேரமும்) இன்னும் அதிகம் வேண்டும். இங்கே வரும் பின்னூட்டங்கள் பலவும் மிக நுண்மையாக இருப்பதாக நினைக்கிறேன். நிறைய பின்னூட்டங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக நினைக்கிறேன். தத்துவ விவாதத்தில் கவர்ச்சி இல்லை (குறிப்பாக நசிகேத வெண்பா :), திருப்பமில்லை. தத்துவ விவாதம், வெறும் வெந்த பருப்பைச் சுவைப்பது போன்றது. வாய்க்குள் இட்டப் பருப்பில் பச்சை மிளகாய், உப்பு, ஜீரகம், மிளகு, சிறு வெங்காயம், பூண்டு, இஞ்சி, நெய், ஏலக்காய், கருவேப்பிலை என்று பலவிதச் சுவைக்கூட்டிகளை மனம் கற்பனை செய்து சேர்க்கும் பொழுது, நாவில் சுவையுண்டாகி வெறும் பருப்பும் பெரு விருப்பாகிவிடுகிறது. சுவைக்கூட்டிகளாக விளங்கும் பின்னூட்டங்கள் நசிகேத வெண்பாவையும் ரசிக்க வைக்கின்றன (மிக நன்றி!). முடிந்தவரைப் பொதுவில் பின்னூட்டமிட நட்புடன் மீண்டும் அழைக்கிறேன்.

    இரண்டாம் வர உரையாடலில் கடோபனிஷத நூலின் சாரம் அடங்கியிருக்கிறது. பிற பகுதிகள் மரணம், உயிரின் பயணம் போன்ற கனமானக் கருத்துக்களைத் தொட்டாலும், இரண்டாம் வரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் 'நல்லொழுக்கமும் உள்ளுக்குள் உறையும் தீயுமே மேன்மைக்கு வழிகாட்டிகள்' என்ற கருத்து, மீண்டும் மீண்டும் பல விதங்களில் வலியுறுத்தப்படுகிறது. இரண்டாம் வர உரையாடல், வரும் பகுதிகளின் முன்னோட்டம் என்று எழுதி முடிக்கிறேன். (தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன் :)

    மூன்றாம் வரப்பாடல் அடுத்த பதிவில்.

28 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லாப் போயிட்டிருக்கு, இதுல இடையுரையா?! உங்களுக்குக் காரணமிருக்கும்....

//'பலன் மட்டும் நிஜம், அதைக் கொடுக்கும் சடங்கு கண்மூடித்தனமோ?'// இதுக்கு பதில் சொல்ல வந்தேன்.

சடங்குகள் (விதவையான பெண்ணுக்கு தலைமுடி எடுத்தல்) காரணகாரியமற்றவை என்றால் கட்டாயம் வேண்டாம். ஆனால், நமஸ்காரம் செய்வது ஸ்லோகம் சொல்வது போன்று சில சம்பிரதாயங்களையோ சடங்குகளையோ செய்கிறோம். அதற்கான பலன் சடங்குகளால் வருவது அல்ல. சடங்குகளை ஒப்பிச் செய்யும் நம் மனம் நம்மைச் செய்யத் தூண்டியதே "பலன்".

முன்வினைன்னு சொல்றதும் பலன்னு சொல்றதும் ஏறக்குறைய ஒன்றே. வாழ்வியல் சட்டங்களை மதித்து வாழக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். எனவே பலனை எதிர்பார்க்க மட்டுமல்லாமல் பலனை ஏற்படுத்தவும் நம்மை அறியாமல் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

இப்படிச் சொல்லியும் என்னை ஏமாற்றிக் கொள்கிறேன்னும் சொல்லிக்கலாம்; I am fine with that.

பத்மநாபன் சொன்னது…

இன , சடங்கு விவரங்களை தவிர்த்தது நல்லது... அவற்றை சேர்ப்பது இத்தொடரை பொறுத்தவரை நன்றாக பொறுக்கி புடைத்த அரிசியில் கல்லும் நெல்லும் சேர்த்த கதையாகிவிடும்....

வாழ்வியல் தொடருக்கு இனமும் சடங்கும் உதவுவதில் , உபத்திரப்படுத்துவதில் உள்ள வாதங்களை தனித் தொடராக்கி கொள்ளலாம்...

துயிலும் , தியானமும் பற்றிய ஆராய்ச்சி ஒரு பெரிய விஷயம் ..திருப்பி வருவோம் என்பது நசிகேதம் தொடர்ந்து படிப்பவர்களுக்கு உற்சாகம் எற்படுத்திய செய்தி...

பத்மநாபன் சொன்னது…

//வாழ்வியல் சட்டங்களை மதித்து வாழக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். எனவே பலனை எதிர்பார்க்க மட்டுமல்லாமல் பலனை ஏற்படுத்தவும் நம்மை அறியாமல் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.//

கெ.பி..நீங்கள் எழுதும் கருத்துகளுக்கும் வைத்துக் கொண்ட வலைப்பூப் பெயருக்கும் சம்பந்தமில்லை என்பதை அடிக்கடி நீருபிக்கிறீர்கள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

புது களம் - படிக்கும் எனக்கு...

பொறுமையா மொதல்ல இருந்து இன்னொருவாட்டி படிக்கறேன்... நன்றி

அப்பாதுரை சொன்னது…

வருக கெபி, பத்மநாபன், அப்பாவி தங்கமணி,...

அப்பாதுரை சொன்னது…

கை கொடுத்தீங்க கெபி, நன்றி.
1)பலன் கிடைக்காவிட்டால் கண்மூடித்தனத்தின் தேவை வலியுறுத்தப்பட்டதாகி விடும் 2)பலன் கிடைத்தால் 'கண்மூடித்தனத்தால் கிடைத்தது/கிடைக்கவில்லை' என்றும் நிச்சயமாக சொல்லமுடியாது.. இந்த ரீதியில், 'பலன் மட்டும் நிஜம் அதைக் கொடுக்கும் சடங்கு கண்மூடித்தனமோ?' என்கிற கேள்வியை அப்படியே acknowledge செய்தால் கண்மூடித்தனத்தினால் தான் பலன் கிடைக்கும் என்பதை ஏற்பதாகி விடுமே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். விவேகமான exit கொடுத்தீர்கள். (பத்மநாபன் சொல்வது சரியே)

பலனை எதிர்பார்க்கும்/ஏற்படுத்தும் மனம் சடங்கை ஒப்பிச் செய்வது புரிந்தாலும் motivation புரியாமல் i am still struggling with it. என்னால் i am fine with it என்று சொல்ல முடியவில்லை :).

அப்பாதுரை சொன்னது…

நன்றி பத்மநாபன்.

நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சடங்குகள், இனக்குறிப்புகளை தவிர்த்ததற்கு சரியான காரணத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை. இன்றைய நிலைக்கு ஒத்துவராது என்பது என்னுடைய அபிப்பிராயமே தவிர compelling reasonஆ சொல்ல முடியவில்லை, i admit.

உதாரணமாக, நண்பர் ராமசுப்ரமணியன் கேட்டிருந்தார்: அக்னிஹோத்ரம் என்பது பிராமணர்கள் செய்த காரணத்தால் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை வெளியிடுவதில் என்ன தவறு? பிராமணர்கள் அல்லாதவரும் அக்னிஹோத்ரம் செய்வதானால் செய்யட்டுமே? பிராமணன், அக்னிஹோத்ரம் என்ற சொற்களை நீக்குவதால் மட்டும் பரவலான ஏற்போ முற்போக்கோ வந்துவிடுமா?

இங்கே பொதுவில் பின்னூட்டம் இட்டால் எல்லோரும் படிக்கலாம் என்ற எண்ணத்தில் அழைத்தது ஒரு காரணம். தமிழில் இன்ன விவரங்களை நீக்கியிருக்கிறேன் என்று சொல்லாதது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை என்றாலும், தவறாகத் தோன்றாததே தவறோ என்று எண்ணும் அளவுக்கு சில கேள்விகள் அமைந்ததும் - இரண்டாது காரணம் - இடையுரை எழுதுவோம் என்று எழுதினேன். நீங்கள் சொல்லியிருப்பது போல் இதைத் தனியான தொடராகும் அளவுக்கு விவாதித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு விஷயமிருக்கிறது. அது என் எண்ணமல்ல. இதைப் பற்றிய கருத்துக்களுக்கான forumஆக இந்தப் பதிவு அமைந்து விட்டுப் போகட்டுமே என்பதே என் எண்ணம்.

சிவகுமாரன் சொன்னது…

நன்று செய்தீர்.
நசிகேத வெண்பாவில் இன, மத, சடங்கு விவரங்கள், விவாதங்கள் தேவையில்லை தான்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

email அனுப்பிய காரணம் தேவையில்லாத சச்சரவு வேண்டாம் என்ற காரணம். i believe there is a reason for the rituals. ஏதாவது சொன்னால் உடனே இன்டெர்னெட்டில் கட்சி கட்டி பார்ப்பான் அவன் இவன் என்று கட்சி கட்டுகிறார்கள். தெவையில்லையே? உங்க பதிவுகளை விரும்பிப் படிச்சதுனால என் கருத்துக்களை சொன்னேன். but i got your point. thanks for stating my question. where is the answer? forward என்பதற்கு முற்போக்கு என்று அர்த்தம் அல்ல. அக்னிஹோத்ரம் பற்றி எழுதாவிட்டால் முற்போக்குனு நான் சொல்லவில்லை - அக்னிஹோத்ரம் பிற்போக்கு என்று நினைத்தால் தானே?

keep up your usseful work.

மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை அவர்களே!
உங்கள் இடையுரை உங்கள் கருத்து நேர்மையைக் காட்டுகிறது.
நசிகேத வெண்பாவை , கடோவை அடியொற்றி எழுதுகிறீர்கள் என்றே கொண்டு... வேதாந்தக் கருத்துக்கள், சம்பிரதாயங்கள் சடங்குகளை எப்படி கொண்டுசெல்லப் போகிறீர்கள் என்று ஐயுற்று, தேவையெனின் நானும் என் சிற்றறிவுக்கு புரிந்த கடோவை உங்களோடு பகிரலாம் என்றும் முன்பு துணிந்தேன்.

எனினும், கடோவின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு.உங்கள் மனோதர்மப்படி வெண்பாவை நல்லவிதமாய்க் கொண்டு செல்கிறீர்கள்,

கம்பிமேல் நடக்காமல், தனியே கப்பிசாலையொன்று போட்டு
பயணித்து வருகிறீர்கள். இந்த மேன்மையான முயற்சிக்கு உங்கள்
சமகால புரிதலும் கை கொடுக்கிறது.

சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் பிற்போக்கு என்று ஒரு மனதாய் அவற்றை ஒதுக்கும் முன்னர், அவற்றில் பெரும்பான்மையானவை ஒரு நெறியான வாழ்க்கையை மனிதன் வாழ உத்தேசித்து செயல் பட்டவை என்றே தோன்றுகிறது.

நீத்தார் கடன் உட்பட சில சாத்திர சம்பிரதாயங்கள், நம்மைப் பெற்று ஆளாக்கி மறைந்த பெரியவர்களை மனதார நினைவு கோரும் பொருட்டு எழுந்தவை. இங்கிருந்தே அறிவு தொடங்குகிறது என்று குமரிமுனையில் பாரதத்தைப் பார்த்தபடி நிற்கிறாரே அய்யன் திருவள்ளுவர், அவர் குறளைப் பாருங்கள்..

தென்புலத்தார், தெய்வம்,விருந்து, ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார் என்பது நம் மூதாதையர் (தென்திசை எமதர்மனின் திசை. உயிர் நீத்த மனிதர்கள் அவனிடம் சேர்வதால் அவர்களை தென்புலத்தார் என்கிறார் அய்யன்) . முதலில் அவர்களை வணங்கிய பின்னரே தெய்வம் தொழப்படவேண்டும் என்கிறார்.

இந்தக் குறளின் பொருள், ஒருவன் வருமானத்தை ஐந்து பங்காக்கி அவற்றை மூதாதையர்கள்,தெய்வம்,விருந்தினர், உறவினர் மற்றும் தம் தேவை என்று பிரித்து செலவிட வேண்டும்.
நீத்தார் கடன் புரிந்து ஏழைகளுக்கு அன்னமிடுதல்,பொது இடமான இறை வழிபாட்டுத்தலம் பேணல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் எனப் பகுத்தபின் எஞ்சியதை தனக்காக ஒதுக்க சொல்கிறார்.

வடமொழியை ஒழிந்த மொழி என்று நீங்கள் குறிப்பிட்டது நெருடலாய் இருக்கிறது. மொழிகள் தம் பயன்பாட்டில்
மங்குவதும் பின் தழைப்பதும் கால ஓட்டத்தின் நிகழ்வுகள்.
அத்துணை வாழ்க்கை நெறிகளுக்கும் வடமொழியில் பொக்கிஷங்கள் உள்ளன. கடோ போன்ற ஆயிரமாயிரம் முத்துக்கள் அதில் விரவிக் கிடக்கின்றன. அதை ஆரிய மொழி, பார்ப்பன மொழி, தமிழுக்கு எதிரானது என்று ஒதுக்கப் படுவதும் காலத்தின் கோலம். சற்று அது ஜீவித்திருக்கட்டும் என்பதே என் வேண்டுகோள். உங்கள் வாயால் ஒழிந்த மொழி என்று சொல்லாதீர்கள்.

மற்றபடி நசிகேத வெண்பா பேராவலைத் தூண்டுகிறது. அவசரம் காட்டாமல் பதிவிடுங்கள். காலம் உம்மை சிம்மாசனத்தில் தூக்கி வைக்கும்.

பத்மநாபன் சொன்னது…

//தென்புலத்தார் என்பது நம் மூதாதையர் //

சரியான விளக்கம்... அறிவியலோடும் இதை ஆராயலாம் ...உடலில் உயிரோடு இருக்கும் வரை வடபுலம் -- காந்த புலம் ஈர்த்து பிடித்துக் கொள்கிறது

உடல் விட்டு உயிர் பிரிந்தவுடன் வடபுலம்விடுவிக்க தென்புலப்பயணம்...

தென்புலத்தை அவரவர் மனத்திற்கு தகுந்த வண்ணம் பெயர் வைத்துக்கொள்ளலாம்...இத்தொடரை பொறுத்தவரை எமதர்மனின் சாம்ராஜ்யம் ( எமன் மேல் மதிப்புகூடுகிறது )

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன், ராமசுப்ரமணியன், மோகன்ஜி,...

அப்பாதுரை சொன்னது…

உலுக்கி விட்டுச் சென்றீர்கள் மோகன்ஜி, நன்றி. உங்கள் தமிழ் இதமாக இருக்கிறது. திறமையில் குறையிருந்தாலும் தகுதியில் முழுமை எதிர்பார்க்கும் சராசரி மனிதன் நான் - உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி.

சாத்திர சம்பிரதாயங்கள் பிற்போக்கு என்றோ முற்போக்கு என்றோ எண்ணுவது அவரவர் விருப்பம்; ஆனால் அவற்றுக்கும் வாழ்க்கை நெறிக்கும் தொடர்பே இல்லை என்பதை முழுமையாக நம்புகிறேன். எத்தனையோ ஒழிந்த சம்பிரதாயங்கள் மனித நெறியைக் குறைத்ததாகத் தெரியவில்லை; தொடர்ந்து இருக்கும் சம்பிரதாயங்கள் மனித நெறியை வளர்த்ததாகவும் தெரியவில்லை. இமெயிலின் இக்கட்டான கேள்வி தான் மறுபடியும். பலனை நிஜமாக நம்பும் பொழுது செயலை - சடங்கை - நிஜமாக நம்புவது தானே முறை? கொடி அசைந்ததும் காற்று வந்ததா கதை. கெபியின் விளக்கத்தின் பின்னே ஒளிகிறேன். பலனை எதிர்பார்த்து ஏற்படுத்தும் மனம்.

இருப்பினும், historical model வைத்தோ, அல்லது புரட்சியாக இன்னொன்றைக் கணித்தோ - சடங்குகளுக்கும் நெறிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை ஒரு நீண்டகால social experiment வழியாக நிரூபிக்க முடியும். நிரூபித்தால் ஒழியுமா? அதன் பின்னும் மக்கள் கண்திறப்பார்களா மூடியே வைத்திருப்பார்களா தெரியாது (அதுவும் அவர்கள் உரிமையே).

தயவுசெய்து என்னை மன்னியுங்கள். 'மறைந்த' 'வழக்கில்லாமல் போன' என்ற பொருளில் தான் 'ஒழிந்த'வைப் பயன்படுத்தினேன். 'ஒழிக' என்று கட்சி பிடிக்க அல்ல. வடமொழியின் வளத்திலும் தொன்மையிலும் எனக்கும் பெருமை தான். எப்பொழுதாவது படித்தாலும், வடமொழியை அரைகுறையாகவேனும் கற்க நேர்ந்த வாய்ப்பை எண்ணி நிறைவடைகிறேன். (என் அம்மாவுக்கு நான் பட்டிருக்கும் கடன்களில் இது சில்லறைக்கடன்).

'ஒழிந்த' சொல்லை நீக்கி விட்டேன். மீண்டும் மன்னிக்கவும், மோகன்ஜி. (மேலும் தமிழில் வடமொழி அத்தனை கலந்திருக்கிறது - மொழியன்னம் கூட சிறகை உதறிப் போட்டு போயிவிடும். சென்னைத் தமிழை விட்டால், நடைமுறைத் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு கண்டுபிடிப்பது சுலுக்கெடுக்குற வேல நைனா :)

தென்புலத்தார் ஓம்பலுக்கு கொஞ்சம் தவளைக்கால் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் என்று தோன்றினாலும் நன்றாகவே இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

நன்றி ராம். உங்கள் கேள்விக்குப் பதில் தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டேனா? அதான் நல்ல கேள்வி என்றேன். :)

அக்னிஹோத்ர விவரங்களை விட்டதற்கு முற்போக்கு காரணமில்லை. நீங்கள் சொல்வது போல் முற்போக்கு என்றால் முற்போக்கு.

அந்த விவரம் அங்கே பொருந்தவில்லை என்று நினைத்ததால் தவிர்த்தேன்; உள்ளேயிருக்கும் தீ என்று முதல் பாடலில் சொல்லை அடுத்த பாடலில் நாலு பக்கமும் செங்கல் அடுக்கி தீ மூட்டச் சொல்வது பொருந்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.

மேலும் கடோவில் எனக்குப் பிடித்தது அதன் கருத்து மட்டுமே.

அப்பாதுரை சொன்னது…

தென்புலம்.. வடபுலம்.. எமனுலகம் அண்டம் என்றெல்லாம் சொல்லிவிட்டு தெற்குத் திசை எமனுக்கு என்பது கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே இடரவில்லையோ? வெளியில் வடக்கு ஏது தெற்கு ஏது? ஒரு சூரியனா ரெண்டா திசைக்கணக்குப் பார்க்க? விடுவோம். மண்ணில் இருக்கிறான் மனிதன், மண்ணிலேயே கணக்கு பார்ப்போம் என்றாலும்.. Northpoleல் கிழக்கு கூட தென்புலம் தானே?

உயிர் போவது திசையறிந்தல்ல என்று சொல்ல அனுமதி கொடுங்கள் பத்ம்நாபன்.

பத்மநாபன் சொன்னது…

வெளியில் திசையில்லை உண்மைதான்.. நாம் திசையை பற்றியும் பேசவில்லை..புலம் பற்றித்தானே பேசுகிறோம்.. பூமி எனும் ரெஃப்ரன்ஸ் எடுத்து பார்த்தோம் என்றால் ஈர்ப்பு வடபுலமென்றும், விலக்கல் தென்புலமென்றும் சாதா காந்த தத்துவத்தை பொருத்தி பார்த்தோம்

இங்கு கிழக்கு மேற்க்கிற்கு வேலை இல்லை...

அய்யனின் ``தென்புலத்தாரி``ன் பொருளை நெருங்கும் சின்ன முயற்சி....

வரதராசனாரும் இதை பற்றி சொல்லவில்லை..வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்...

அப்பாதுரை சொன்னது…

புலம் விளக்கத்துக்கு நன்றி பத்மநாபன். திசை என்று நினைத்தேன்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//அப்பாதுரை கூறியது... உலுக்கி விட்டுச் சென்றீர்கள் மோகன்ஜி, நன்றி. உங்கள் தமிழ் இதமாக இருக்கிறது. //

Ditto. மோகன்ஜி உங்கள் தமிழ் இதம்

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! உண்மையில் யமபட்டினம் அல்லது யமபுரம் தெற்கிற்கும்,தென் மேற்கிற்கும் இடையில் இருக்கிறது. அந்தப் பட்டினத்தின் பெயர் சையமணி. தன் உடன்பிறந்த யமுனை மேலேயே மோகம் கொண்டு அவளால் தண்டிக்கப் பட்டாராம் யமன். எல்.டி.சில அங்க போயி பாத்துட்டு வந்த மாதிரி சொல்றேன்னு பாக்காதீங்கன்னா.

பத்மநாபன்! உங்கள் புலம் விளக்கம் மிகச்சரி.

தமிழ் என்றுமே, எங்குமே இதம் சாய். என் தமிழ் என நீங்கள் சொல்வது அன்பின் பாற்பட்டு.

அப்பாஜி எங்க வானவில் பக்கம் வரமாட்டாராமா? கேட்டு சொல்லுங்க!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//அப்பாஜி எங்க வானவில் பக்கம் வரமாட்டாராமா? கேட்டு சொல்லுங்க! //

மோகன்ஜி, நீங்க ஏற்கனவே உங்கள் வானவில்லுக்கு எட்டாவது கலர் இடுகைக்கு வருபவர்கள் என்று சொல்லிவீட்டிர்கள் ! அதனால் எதுக்கு ஒன்பதவதாய் என்று வராமல் இருக்கலாம்.

அவர் ஒரு தந்திரம் வைத்திருக்கிறார். அவர் அழைக்கும்போது அவரிடம் பேச முடியும் அப்புறம் அவர் கைத்தொலைபேசியில் அழைத்தால் "ஏதோ புது விதமாக மெசேஜ் கொடுத்து - ஜகா வாங்குவார்"

RVS சொன்னது…

அப்பாஜி!
இந்தப் பதிவைக் காட்டிலும் பின்னூட்டங்கள் அதிகமாகக் கவர்கிறது.
கெ.பி, மோகன்ஜி, பத்துஜி போன்றோரின் செறிவூட்டும் பின்னூட்டங்கள் என்னை கருத்துக்களில் திளைக்க வைக்கின்றது.
என் பங்குக்கு...
பிற்போக்கு, முற்போக்கு என்றல்லாமல் செய்யவேண்டிய கடமையாக சாத்திரங்களை குறிப்பிட்டு, சிலவற்றை சொல்லி பயமுறுத்தி வைத்தால் நிச்சயம் அதைக் கடை பிடிப்பார்கள் என்று இருந்திருக்கலாம்.
அம்மா பருப்பு மம்மு ஊட்டும்போது "சாப்படலைன்னா... பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்.." அப்படின்னு மிரட்டறா மாதிரி. அம்மா நிச்சயம் புடிச்சு குடுக்க மாட்டா.. ஆனா சப்பாட்டா நமக்கு நல்லது தானே!
;-))))

M.Srinivasan சொன்னது…

Dear Mr.Durai Sir,

Thanks for removing my email.

M.Srinivisan

அப்பாதுரை சொன்னது…

சரியாச் சொன்னீங்க RVS..

அப்பாதுரை சொன்னது…

no worries, M.S.

அப்பாதுரை சொன்னது…

சடங்குகளைச் சுற்றிப் பயணிக்கிறேனே தவிர வேறெதையும் சிதைக்கவில்லை, மோகன்ஜி. மற்றதெல்லாம் உள்ளது உள்ளபடி. அதைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

>>>உங்கள் மனோதர்மப்படி வெண்பாவை நல்லவிதமாய்க் கொண்டு செல்கிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

என் கருத்தை நீங்கள் புரிந்து கொண்டபடியே தான் நான் சொன்னேன்.
'மனோதர்மப்படி' என்பதை 'உங்கள் இஷ்டப்படி' என்றதாய் யோசிக்கிறீர்களோ? எனக்கு சாடைப் பேச்சு வராது அப்பாஜி.. திட்டவும் தெரியாது..

உள்ளதைச் சொல்வேன்
நல்லதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் சொல்வேன்.
கபடம் கிடையாது..

மீதியை நீங்களே பாடிக் கொள்ளுங்கள் முதலாளி!

மோகன்ஜி சொன்னது…

மீதியை நீங்களே பாடிக் கொள்ளுங்கள் என்றது :உள்ளதைச் சொல்வேன்" பாட்டை என்று பொருள் கொள்ளவும்..