வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/08

வேள்விக்கு நசிகேதன் பெயரிட்டான் எமன்


25
வேள்வித்தீ மாட்சியை வாய்ப்பாடாய் மீட்டுரைத்தோன்
வாள்முனைப் பாங்கறிந்து வந்தகாலன் - கேளென்றான்
என்னாதார் இல்லார் இதுவுந்தீ என்றினிமேல்
பொன்னாரம் ஒன்றினையும் போட்டு.

    வேள்வியின் சிறப்பையும் முறையையும் வாய்ப்பாடாகத் திருப்பிச் சொன்ன நசிகேதனின் வாள்முனை போன்ற கூர்மையான அறிவைக் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு ஒரு பொன்மாலையைச் சூட்டி, "இனி இந்த வேள்வியை உன்னுடையதாக உன்பெயரிட்டு அழைக்காதவர் எவருமில்லை" என்றான்.

பாங்கறிந்து வந்தகாலன்: பாங்கு அறிந்து உவந்த காலன்
என்னாதார்: என்று வழங்காதார்
இதுவுந்தீ: இது உன் தீ (நசிகேத வேள்வித் தீ)



    சடறக் கற்பதும், கற்றதைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் மாணவனுக்கு அழகு. மாணவனின் திறனறிந்து மெச்சி மேலும் நல்லறிவூட்டுவது ஆசிரியனுக்கு அழகு. தெளிந்த அறிவைப் பெற வழி செய்யும் கல்வியைக் கசடறக் கொடுப்பதே நல்ல மாணவனுக்குப் பெரும் பரிசு என்றாலும், தவறில்லாமல் கற்றான் என்பது தெரிந்து ஊக்கப் பரிசு கொடுப்பது, ஆசிரியரின் கடமை தாண்டிய அன்பை மேம்படுத்திக் காட்டுவதாகும்.

    'பொன்னால் செய்திருந்தாலும், ஆரம் சங்கிலியே. பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது. பொன்னைக் கண்டு மயங்காமல் அந்தச் சங்கிலியை அறுக்க, தெளிவான மனமும் ஒழுக்கமும் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே எமன் பொன்னாரம் வழங்கினான் என்பதை நசிகேதன் புரிந்து கொண்டான்' என்று வடமொழிப் பாடலுக்கு ஆதிசங்கரர் வழங்கிய விளக்கம் சுவையானது.

17 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

வித்தியாசமான நீளமான சொற்களைக் கொண்ட வெண்பா. அழகாக இருக்கிறது.
(முதலில் ப்ரெசென்ட் போட்டு விட்டேன். இனிமேல் தான் உள்ளே போக வேண்டும்)

சிவகுமாரன் சொன்னது…

ஆசிரியர் மாணவர் உறவைப் பற்றி இன்னும் கொஞ்சம் உங்கள் பாணியில் சொல்லியிருக்கலாமே அப்பாஜி.

பத்மநாபன் சொன்னது…

நசிகேதன் எமனிடம் பாடம் கற்று அதை தெளிவாக சொல்வது - ஆசிரியர் மாணவர் உறவுக்கான எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டது மேலாண்மையில் உள்ள உங்கள் ஆர்வத்தை காட்டுகிறது.

பொன்னாரம் - பிறவிபிப்பிணிக்கு ஒப்பீடு சிறப்பு.. ஆதிசங்கரர் இங்கு வந்திருக்கிறாரா ..நசிகேதம் வலு கூடுகிறது

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன், பத்மநாபன், ...

அப்பாதுரை சொன்னது…

இனி வரும் பாடல்களில் ஆசிரிய-மாணவ உறவு பற்றி அதிகம் எழுத வேண்டிவருகிறது சிவகுமாரன். இங்கே தொடங்கியிருக்கிறேன் :)

நல்ல ஆசிரியருக்கு அழகு நல்ல மாணவனை அறிந்து வளர்த்தல் என்று சொல்லியிருக்கிறேன். நல்ல ஆசிரியருக்கு அழகு, மோசமான மாணவனை அறிந்து வளர்ப்பதா? நல்ல மாணவனை அறிந்து வளர்ப்பதா? என்ன நினைக்கிறீர்கள்? (விடை: விரைவில் எதிர்பாருங்கள்.. :-):-)

அப்பாதுரை சொன்னது…

ஆதிசங்கரர் விளக்கத்தைப் படித்த பிறகு எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை பத்மநாபன், அதான். இந்தப் பாடலை முதலில் தமிழில் தவிர்க்க எண்ணியிருந்தேன் - தேவைக்கதிகமென்று பட்ட காரணத்தால். ஆனால் அவர் விளக்கத்தைப் படித்ததும் மனம் அதையே சுற்றி வந்தது. ரசித்தமைக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஒரு நல்லாசிரியன் நல்ல மாணவனுக்கு தந்தையாகிறான். தம்மிலும் பெரியோனாய் மாணவனை ஆளாக்கி இந்த சமுதாயம் அவனால் மேன்மையுற ஒரு விழிப்புள்ள,பொறுப்பான தந்தையாய் வழி நடத்துகிறான்.

அதே நல்லாசிரியன் மோசமான மாணவனுக்கு தாயாகிறான். பலவீனமான குழந்தைக்கு பக்குவமாய் உணவு படைத்து,ஆதூரமாய் அருகிருந்து, ஊக்கமூட்டி தேற்றுகிறான்.

"ஆசிரியப் பணி அறப்பணி
அதற்கே யுன்னை அர்ப்பணி."

அப்பாதுரை சொன்னது…

வித்தியாசமான பார்வை. அருமையான கருத்து மோகன்ஜி.

geetha santhanam சொன்னது…

மோகன்ஜியின் 'நல்லாசிரியன்' விளக்கம் (இலக்கணம்?) அருமை.

RVS சொன்னது…

நல்லாசிரியரே!! மாணவனாக பின் தொடருகிறேன்... நல்லாசி தாரும். ;-);-)

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! 1948ல் 8 ம் வகுப்பு. அப்பொது நல்லோழுக்கம், ஒவியம் என்று வகுப்புகள் உண்டு. அழகெசன் என்ற ஆசிரியர் தான் இரண்டு வகுப்பையுமெடுப்பார். புதுக்கோட்டை சாமிநாதசர்மா எழுதிய ரூசோ, வால்டயர்,கரிபால்டி,மாஜினி,ஷேக்ஸ்பியர்,மில்டன்,மார்க்ஸ்,லெனின் ஆகியொரின் வாழக்கை வரலாற்றி படிக்கக் கொடுப்பார்.அவர்களை மறக்க முடியாது.---காஸ்யபன்.

meenakshi சொன்னது…

//பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது// அருமை!
இந்த அழகான வெண்பாவை படிக்கும்போது உங்கள் தமிழ் அறிவை எண்ணி, வியந்து மனம் மிகவும் உவகை கொள்கிறது. வாழ்த்துக்கள் அப்பாதுரை!

மோகன்ஜி உங்கள் நலலாசிரியன் விளக்கம் அருமை. ஒரு தாய்க்கு என்றைக்குமே பலவீனமான குழந்தையின் மேல்தான் பாசம் அதிகம் இருக்கும். அப்பாதுரையின் கேள்விக்கு மிகச் சிறந்த பதிலை சொல்லி விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

அப்பாதுரை சொன்னது…

வருக geetha santhanam, RVS, kashyapan, meenakshi, ...

அப்பாதுரை சொன்னது…

நல்லொழுக்கம் என்று ஒரு வகுப்பா?
ஹ்ம்.. எத்தனை இழந்திருக்கிறோம்!

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi.
'பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது' என்று சொன்னவர் ஆதிசங்கரர். நான் அடித்தது பிட். ஆதிசங்கரர் அருகில் இல்லாததால் (இருந்தாலும் கண்டுக்க மாட்டார் என்று நினைப்பதால்) உங்கள் வாழ்த்துக்களை அவர் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன்..ஹி :)

சிவகுமாரன் சொன்னது…

நல்லொழுக்க வகுப்புக்கள் எண்பதுகளில் என் பள்ளிக்காலங்களிலேயே இருந்தது அப்பாஜி.