23
புள்ளகத் தோடே பகர்வேனே பிள்ளைநீ
தெள்ளெனக் கேட்டத் தகவலதை - கள்ளமாய்
எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ.
தெள்ளெனக் கேட்டத் தகவலதை - கள்ளமாய்
எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ.
சிறுபிள்ளையானாலும் நீ தெளிவாகக் கேட்டதனால் வேள்வி விவரங்களைச் மகிழ்ச்சியோடு சொல்கிறேன்; எள்ளுக்குள் எண்ணை மறைவாக உறைவது போல், வேள்வித்தீ நம் மனதினுள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது (என்றறிவாய் என்றான் எமன்)
புள்ளகம்: பெருமகிழ்ச்சி
கள்ளமாய்: மறைவாக
தாழிட்ட: பூட்டிய, அடக்கிவைத்த
பார்வையைத் தருவன கண்கள். கண்களுக்குக் காட்சியைத் தருவதோ ஒளி. கயல்விழி, மான்விழி, வேல்விழி என்று விழியழகைக் கொண்டாடினாலும், ஒளியின்றி விழிகளால் பயனில்லை. எனினும், ஒளி விந்தையானது. ஒளியைப் பயன்படுத்தி, இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் செய்து, கண்களை ஏமாற்ற முடியும். உள்ளேயும் ஒரு ஒளி உண்டு. அறிவு. கண்களுக்குப் புலப்படுவதும் அறிவுக்குப் புலப்படுவதும் வேறுபடலாம். உள்ளொளியைப் பயன்படுத்தும் பொழுது, வெளியொளியால் கண்களுக்குத் தென்படாதக் காட்சிகளையும் காண முடியும். ஐம்புலன்களும் அவ்வாறே. புறவிசைகளோடு தொடர்பு கொள்ளவும், முடிந்தால் அடக்கியாளவும் மட்டுமே நம் ஐம்புலன்களைப் பழக்கப்படுத்துகிறோம். அவற்றை உள்ளே திருப்பினால், நம் அகத்தே தறிகெட்டோடும் விசைகளைக் கட்டுப்படுத்தி ஆளலாம். உள்பார்வை, உள்பேச்சு, உள்மூச்சு, உள்கேள்வி, உள்ளுணர்வு எனும் இவற்றைத் தம் வாழ்நாளில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதே இல்லை.
'கண்ணை நம்பாதே' என்பது பிரபலத் திரைப்பாடல் மட்டுமல்ல, உலகின் மிகத் தொன்மையான சித்தாந்தங்களுள் ஒன்றாகும். கடோபனிஷதச் சமகாலக் கிரேக்க அறிஞர்களான சாக்ரேட்சும் ப்லேடோவும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ப்லேடோ தன் மாணவனான அரிஸ்டாடிலுக்குச் சொன்னதாகச் சொல்லப்படுவது: கண்களுக்கு வெளிப்பார்வை உள்பார்வை இரண்டும் உண்டு. வெளிப்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு மாற்றமும் அழிவும் தென்படும்; உள்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு உண்மை மட்டுமே புலப்படும். வெளிப்பார்வையினால் கிடைப்பது அபிப்பிராயங்களும் பேதங்களும்; உள்பார்வையினால் கிடைப்பது ஒருமையும் தெளிவும். வெளிப்பார்வையில் கிடைக்கும் அறிவு தினம் மாறும் தன்மையது, வளர்ச்சி பெறாதது; உள்பார்வையில் கிடைக்கும் அறிவானது முதிர்ச்சியைத் தருவதாகும், ஒரு இலக்கினை நோக்கிச் செலுத்துவதாகும். (plato, ~400 bce, republic)
நம் உடலின் ஓய்வு அல்லது இயல்பு வெப்பநிலை 36°C-37°C வரை என்கிறார்கள். இருப்பினும், வெளியே 20°-25°C வரை மட்டுமே ஏற்க, பொறுக்க முடிகிறது. அதற்குக் குறைவாகவோ கூடுதலாகவோ போனால், பலருக்குக் குளிர் அல்லது வெப்ப உபாதைகள் தோன்றுகின்றன. இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது? இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ஒரு மழைநாளுக்கான சிந்தனையாக ஒதுக்கலாம். மேற்கோளுக்குத் தத்துவப் புத்தகங்களும், நொறுக்குத் தீனியும், ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும்.
எமனுக்குச் சங்கடம். நசிகேதனின் அறியுந்திறனை ஆழம் காணவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம்; வரமளித்தால் அது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இன்னொரு புறம். அறிந்தே விழலுக்கு நீரிரைக்க யாருக்கு மனம் வரும்? 'பிறப்பற்ற இடம் ஏகும் வேள்வியைப் பற்றிப் பிள்ளைக்குச் சொல்வதா? புரியுமா? புரிந்தாலும் செயல்படுத்துவானா?' போன்ற பல ஐயங்களுக்கிடையே நசிகேதனின் இரண்டாம் வரத்துக்கான விவரங்களைச் சொல்லத் தொடங்கினான். முதலில் வேள்விக்கான தீயை எப்படி அடையாளம் காண்பதென்று சொன்னான். 'வெளிப்பார்வைக்கு எள் தெரியுமே தவிர எண்ணை தெரியாதது போல், உள் பார்வைக்கும் இந்தத் தீ எளிதில் தெரியாது. வேள்விக்கான தீ மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறது.' என்று எடுத்துச் சொன்னான்.
'அம்பர வேள்விக்கான தீ வளர்க்க, பசுஞ்சாண வரட்டியும் சுள்ளியும் அடுக்கி நெய் வார்த்து மந்திரம் சொல்ல வேண்டியதில்லையா? உள்ளுக்குள் தாழிட்ட தீ என்கிறாரே எமன்? உள்ளுக்குள் தீ எங்கே பூட்டி வைத்தோம்? அதைக் கண்டாலும் வேள்வி எப்படிப் புரிவது?' என்று நசிகேதன் சிந்தித்தான். தன் தந்தை தீ வளர்த்துப் பகட்டாகப் புரிந்த அண்டவாகை வேள்வி நினைவுக்கு வந்தது. 'அப்படியென்றால் தந்தையின் வேள்வி அவருக்குச் சொர்க்கத்தை நிலையாகத் தராதா? மழைநீர் போல் இன்னொரு பிறவியெடுத்து சுழலப்போகிறாரா? தந்தையைப் போல் இன்னும் எத்தனை பேர் உலகில் தீ வளர்த்து வேள்வி புரிகிறார்கள்! பலனில்லை என்பதறியாமல் வேள்வி செய்கிறார்களே!' என்று உலகமக்களின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'பொன்னும் மணியும் பசுவும் பூமியும் தீயிலிட்டு எதைத் தேடுகிறார்கள் இந்தக் கண்மூடிகள்? இவர்களின் பிணிக்கு மருந்து உள்ளிருப்பது தெரிந்தும் வேறு எங்கோ தேடுகிறார்களே!' என்று மக்களின் கண்மூடித்தனத்தை எண்ணிக் கலங்கினான். எமனிடம் விவரங்களைக் கேட்டறிந்து, தன் தந்தைக்கு மட்டுமல்லாது, மற்றவருக்கும் எடுத்துச் சொல்லி அவர்கள் அறியாமையைப் போக்குவதென்று தீர்மானித்தான். தீ வளர்க்கும் விதத்தையும் வேள்வி புரியும் விவரங்களையும் அறிந்து கொள்ள ஆயத்தமானான். ►
20 கருத்துகள்:
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
அப்பாஜி இட்ட தீ அறிவு திறக்கவே
//எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ//
Superb.
உள்பார்வை, வெளிப்பார்வை என்று அழகாக சொல்லி இருக்கின்றீர்கள். உள்பார்வை தீர்கமாக இருந்தால் வெளிப்பார்வை கண்ணை உறுத்தாது. அது எனக்கு நிரம்ப தேவை போலிருக்கின்றது.
//இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது? இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ....ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும். //
முதலில் ஆன்மீகத்தில் என்று சொல்லி ஆத்திகம் கலவாமல் என்று சொல்லி இருக்கின்றீர்கள். முரண்பாடோ அல்லது எனக்கு புரியவில்லையோ ?? இரண்டு நான் முன்பு உடல் தீயை உண்டாக்குவது பற்றி ஒருவர் சொல்ல பேசிக்கொண்டு இருந்தேன். என் மன அமைதிக்கு என்று நிறைய அறிவுரை வழங்கினார். அதில் உணவு வகைகள், தினமும் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் என்று. அதில் ஓன்று பிரணாயாமம் மற்றும் மனம் ஒருங்கி தியானம் என்று. இரண்டு நாளாக தான் செய்கின்றேன். பார்க்கவேண்டும். தீ என்று என் வீட்டையும் / பக்கத்து வீட்டையும் எரிக்காமல் இருந்தால் சரி தான் !!
//எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ.//
Superb, Hello simply superb.
வேள்விக்குள் இருக்கும் சாரத்தை மிகத் தெளிவாக்கி விட்டீர்கள்...
இந்த சாரங்களை என்றாவது அறிவோம் எனும் நம்பிக்கையோடு சடங்குகளை கண்ணைமூடிக் கொண்டு காப்பாற்றி வருகிறோம்..
உயிர்க்கு துடிப்பும் உடலுக்கேற்ற வெப்பமும் வருவதற்கான சிந்தனையை தூண்டிவிட்டுள்ளீர்கள்... அந்த சிந்தனையின் தீர்வுகள் நசிகேதனின் களத்திலேயே கிடைக்கும் என நம்புகிறோம்.
//தீ என்று என் வீட்டையும் / பக்கத்து வீட்டையும் எரிக்காமல் இருந்தால் சரி தான் // சாயின் நக்கலே நக்கல்...
பிராணயாமமோ...தியானமோ தொடர்ந்து செயல்பாட்டில் கொண்டுவந்தால் தான் உபயோகம் ..இல்லாவிட்டால் பெட்ரோலே ஊத்தினாலும் தீப்பிடிக்காது..
அதற்கிடையில் நம்மிடையே உள்ள எத்தனையோ ஜென்மாந்திர பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்
எமன் தான் நம்மை வாழவைப்பார் போலிருக்கிறது... பார்க்கலாம்
அப்பாதுரை அவர்களே! உலகிலேயே அழகானது எது? இந்த உடல் தான் என்றார் மார்க்ஸ்.katabolism,metabolism உடலுக்குள் எப்படி நடைபெறுகிறது? 1: பலகோடி விகிதத்தில் மூளையில் மின் அலைகள் உருவாகின்றனவே? .conductivity என்பது பற்றிய புரிதலுக்கு முன்பே மூளையில் மின் அலைகள் செயல் படுகின்றனவே எப்படி? இற்ந்த உடலைப் பார்க்கும்போது உறவு, பாசம், நட்பு என்பதற்காக மட்டும் நான் அழுவதில்லை.விலை மதிப்பற்ற ஒரு கணிணீயை இயற்கை கொடுத்ததை இழந்துவிட்டோமே என்றும் அழுகிறேன்.அறிவு என்பது அனுபவத்தின் சாறு.அனுபவிக்க மூன்று காரணிகள் தெவை.experiencer,ezperinced, then only experience. மூன்றுமே ஒன்றாகிவிட்டால், மூளையே முன்றுமாகிவிட்டால் எது அனுபவிக்கப்படுவது? எது அனுபவிக்கிறது? எது அனுபவம்? mindbogling question.let us discuss,deliberate, and try to deside.am i a little bit tangent?---காஸ்யபன்
நன்றி சிவகுமாரன், கெக்கே பிக்குணி, சாய், பதமநாபன், காஸ்யபன், ...
சாய், சரியான திசை. உங்கள் நண்பர் சொல்வது சரியே. உள்ளிருக்கும் தீயைப் பிராணாயாமம் வளர்க்கிறது. அடுத்த பாடலில் விவரம் வருவதற்கு முன் நீங்களே பிட்டு வைத்துவிட்டீர்கள்.
உங்கள் பின்னூட்டத்திலேயே இரண்டுக்குமான வேறுபாட்டை எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆத்திகம் மட்டுமே ஆன்மீகத்துக்கு வழி என்று சங்கரர், யேசு, நபி, போப் சமீப நித்யானந்தா வரை எல்லாரும் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆத்திகம் ஆன்மீகத் தேடலுக்கு உதவும் என்று நம்புவதில் தவறில்லை; அவரவர் விருப்பம். ஆனால் இரண்டையும் ஒன்று என்று நினைக்குமளவுக்கு ஆன்மீகத்துக்கும் ஆத்திகத்துக்கும் வேறுபாடு தெரியாமல் செய்தவர்கள் மதவாதிகள்; அதை நம்பி அவசியமான ஒன்றை மறந்தது நம் கண்மூடித்தனம்.
பத்மநாபன், காஸ்யபன் பின்னூட்டங்களில் கடோவின் சாரம்.
பத்மநாபன் சொல்வது போல் தியானம், பிராணாயாமம் - இரண்டும் உள்ளிருக்கும் தீயை வளர்த்து ஒரு இலக்கில் செலுத்தும் சாதனங்கள். எமன் இதையே வேள்வி என்றான்.
அழிவில் தவறில்லை என்ற முரண்பாட்டை விளக்க தீ சிறந்த உதாரணம். தீ இரண்டு சக்திகளைக் கொண்டது. ஒளி, வெப்பம். இரண்டுமே அழிக்கும் சக்திகள். ஆனால் பாருங்கள்... ஒளி இருளை அழிக்கிறது; வெப்பம் பொருளை அழிக்கிறது. இருளும் பொருளும் உவமை/உருவகமாக பலவற்றைக் குறிக்கின்றன. தீயை நாம் கட்டினால் ஒரு அழிவு; தீ நம்மைக் கட்டினால் இன்னொரு அழிவு. இதான் கடோ. சிந்திக்கச் சிந்திக்க ஆழம். தொடரும் கடோ பாடல்கள் அத்தனையும் உள் தீயை வளர்த்து அதன் ஒளியையும் வெப்பத்தையும் வைத்து அறியாமை இருளையும், அழுக்கெனும் பொருளையும் அழித்து நம்மை ஒரு இலக்கில் எடுத்துச் செல்லும் மூச்சடக்கியாளும் வித்தையைச் சுற்றி வருகிறது. (இனிமேல் நசிகேத வெண்பா தொடரவேண்டிய அவசியமே இல்லை; அம்புட்டுதேன் பத்மநாபன்:)
காஸ்யபன் ஐயா, எப்பேற்பட்ட உண்மையைத் தூசு தட்டிச் சுலபமாக விலக்கியிருக்கிறீர்கள்! நன்றி.
மார்க்ஸ் அதிகம் படித்ததில்லை, ஆனால் மனிதம் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை நுட்பமும் உள்ளேயே இருக்கிறது என்பது உண்மையே. இதைப்பற்றிப் படிக்க படிக்க வியந்து போனேன். 'one with nature' என்ற தத்துவத்தை 'sissy stuff' என்று நானும் நினைத்திருக்கிறேன். தவறே.
ஆக்கத்திற்கு அழிவு தேவைப்படுகிறது. இரண்டும் ஒரே வட்டத்தின் பகுதிகளே! 'constructive destruction' என்கிற அபார முரணை வைத்து இன்றைக்கு அணுசக்தியிலிருந்து கோள்வெப்பம் வரைப் பலவற்றைப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறோம்; புரிந்து நடவடிக்கை எடுக்குமுன் தாமதாகிவிடுகிறது - நிறைய அழித்துவிடுகிறோம். அழிவும் ஆக்கமும் தொடர்ந்து 24*7 நம் உள்ளேயே நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் இப்பொழுது நிறைய eco.scientists தோன்றியிருக்கிறார்கள். ஆய்வுகளில் எதிர்நிலை சமன்பாட்டு முறைகளைப் புகுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இளைய தலைமுறை நம்மை விடச் சிறப்பாகச் சிந்திக்கிறார்கள் என்பதால் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. புதியதோர் உலகம் செய்யப் போகிறார்கள். நம் காலக் கண்மூடித்தனங்களுக்கு கெடு வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடோவின் இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சக்திகளும் பரப்பும் விதம் பற்றியும் சில விவரங்கள் வருகின்றன.
சிந்திக்க வைக்கிறீர்கள் காஸ்யபன். நம் உடல், கணினியை விட பலமடங்கு உயர்ந்த ஒப்பற்ற கருவி என்று நினைக்கிறேன். conductivity பற்றி அருமையான உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள்.
creation பற்றியும் கொஞ்சம் சிந்தித்தால் அசர வைக்கும். அணுவின் வெடிப்பில் உலகம் வந்தது என்றால் நம்ப மறுக்கிறோம்; அணுவின் வெடிப்பில் புது உயிர் தினம் பிறக்கிறது. நம்முள் இருக்கும் creative forceன் பயன்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த நூற்றாண்டுகளில் 'self-realization led scientific and social breakthrough' நிறைய காணலாம் என்றே நினைக்கிறேன்.
நம் பிறப்பைப் பற்றியும் வளர்ப்பு இறப்பைப் பற்றியும் சிந்தித்தால் கடவுள் என்கிற கற்பனை புரியத் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்.
வேலை எனக்குக் கொட்டிக் கிடக்கிறது (அழிந்து போகிற வாழ்க்கை தானே, இதுல என்ன டெம்பரரி வேலையப் பத்தி பேச்சுனு கேக்க மாட்டீங்கனு தெரியும்... ஆக்கம் நெஞ்சார்ந்தது).
ஆனாலும் இந்த பதிவுக்கு பின்னூட்டங்கள் அருமையாய் வரும் என்பதாலேயே, வெறும் ஸுபர்ப் சொல்லிவிட்டுப் போனேன். ஏமாற்றவில்லை, எவ்வளவோ தெளிவையும் தரும் பின்னூட்டங்கள். மிகுந்த சந்தோஷம்!
நாம் அழித்திருக்கிறோம் என்று நான் சொல்ல மாட்டேன், மனிதம் வளர்ச்சியின்பாற்பட்டது. எதையும் எப்படியும் ஒருமுறை. இப்போ திருத்துகிறது அடுத்த தலைமுறை. நாம் நம் பெற்றோரைத் திருத்துகிறோம் (குப்பையை தனி இடத்தில் போடு, வெற்றிலை/புகையிலை சாப்பிடாதே). இந்த கேள்வி திரும்ப காஸ்யபன் சொல்வது போல், திருத்துபவர் யார், திருந்துபவர் யார், திருத்தப்படுவது எது எல்லாமே ஒன்று தானே.
ஆனாலும் இந்த பின்னூட்ட உரையாடல் அற்புதம். காஸ்யபன், அப்பாதுரை, பத்மநாபன் எங்கேயோ எடுத்துட்டுப் போயிட்டீங்க. Tangent என்றாலும், அதனால் மூளையில் மின்னலைகள். அதனால், metabolism Or physical changes ஏற்படக் கூடும் (நீங்கள் / நான் வேலை தொடர்ந்தால் அல்லது செயற்படுத்தினால்:-)
நன்றி!
great point, கெபி. திருத்தம் தான் இலக்கே தவிர திருந்துபவரோ திருத்துபவரோ அல்ல.
ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையை விட முற்போக்காகவும் அறிவோடும் செயல்படுகிறதென்றே நினைக்கிறேன்; நம் தலைமுறையைக் குறை சொல்லவில்லை. அழிவில்லாமல் ஆக்கம் இல்லை - இதைப் புரிந்து கொண்டது நம் தலைமுறை தான் என்று நினைக்கிறேன். (மூவாயிரம் வருடங்கள் முன்பே இதைப் பற்றி அறிஞர்கள் சொல்லியிருந்தாலும் :)
அதனால் ஆக்கத்தைத் தேடும் பொழுது அழிவைப் பற்றிய உணர்வும் நமக்குத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். அடுத்த தலைமுறைகள் செல்போன் கருவிகள் கண்டுபிடிக்கும் பொழுது குருவியின் நிலையையும் மனதில் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
'மனிதம் வளர்ச்சியின் பாற்பட்டது' சரியே. மனிதமும் வளர்கிறது என்பது தான் இனிமையான முரண். catch 22.
(எனக்கு ஒரு வேலையுமில்லை; வெளியே பனியை அள்ளலாமென்றால் அயரவைக்கும் அளவுக்கு சேர்ந்திருக்கிறது; பக்கத்து வீட்டுக்காரர்கள் தூங்கும் பொழுது நான் மட்டும் வெளியே போவானேன் என்று சோம்பலுடன் இணையம் மேய்கிறேன், காபி மாரி பிஸ்கட் துணையுடன் :)
//பத்மநாபன் சொன்னது…
அதற்கிடையில் நம்மிடையே உள்ள எத்தனையோ ஜென்மாந்திர பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் //
ரொம்ப ஈசியாக சொல்லிவிட்டீர்கள் ? என்னிடம் இருக்கும் கெட்ட குணங்கள் / பழக்கங்கள் ஒன்றா இரண்டா விடறத்துக்கு ? அதுக்குத்தான் இருக்கும் நல்ல குணத்தை விடமால் இருக்கு புது வருட தீர்மானம் எடுத்தேன் என் இடுகையில் ??
இரண்டு மாதம் விட்டிருந்த நான் மறுபடியும் புகை பிடிக்க ஆரம்பித்தது தான் நான் கண்ட புண்ணியம் !! அட போங்க சார். ஆனால் திரும்பவும் விடுவேன் - என் பிள்ளைகளுக்காக. அதான் சாய்ராம்
புகைபிடித்துக் கொண்டு பிராணயாமமா..பேஷ்.. பேஷ்..
கஷ்யாபன் அவர்கள் சொன்னாரே ஒரு திருவாக்கியம்
//விலை மதிப்பற்ற ஒரு கணிணீயை இயற்கை கொடுத்ததை //
அந்த கணிணியில் இதயம் ,நுரையீரல் இப்படி ஒவ்வோரு பாகத்தின் வடிவைமைப்பும் சற்று நினைத்து பார்த்தாலே புகைப்பக்கமும் தண்ணிப்பக்கமும் போக மாட்டோம்.
தவறாக நினைக்கவேண்டாம்..நீங்கள் ஐயப்ப காலத்தில் விட்டிருப்பீர்கள்..அடக்கினீர்கள்... இப்ப சேர்த்து பிடிக்கிறீர்கள்...அறிந்தீர்கள் என்றால் அந்த பழக்கம் காணாமல் போயிவிடும்...
Thanks பத்மநாபன் சொன்னது…
திரும்பவும் விடுவேன் - என் பிள்ளைகளுக்காக
விடுவது பிள்ளைகளுக்காக என்றால், இப்போது சிகரெட் பிடிப்பது யாருக்காக சாய்?
// அப்பாதுரை சொன்னது…
விடுவது பிள்ளைகளுக்காக என்றால், இப்போது சிகரெட் பிடிப்பது யாருக்காக சாய்? //
எனக்காக !! இது எப்படி இருக்கு !
கருத்துரையிடுக