வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/03/09

உடலெனும் மாயப் பை


85
பதினொரு பொத்த லதிசய மித்தன்
பதியறும் பத்து முதிரும் - விதியறி
மூச்சறு முன்னரே பேச்சிலும் வீச்சிலும்
ஆச்சிய மாச்சறு ஆறு.

   தினொரு துளைகளைக் கொண்ட அதிசயமாம் இவ்வுடலின் அரசனான ஆன்மா (மூச்சு நிற்கும் பொழுது) விலகும். அப்பொழுது ஐம்புலன்களும் ஐந்துணர்வுகளும் அழியும். இந்த உண்மையை அறிவீர். (அறிந்து) மூச்சு நிற்கும் முன்னரே உங்கள் சொல்லிலும் செயலிலும் கேவலத்தையும் குற்றத்தையும் அகற்றி அடங்குவீர் (என்றான் நசிகேதன்).


பதினொரு பொத்தல் அதிசயம்: உடல்1
பத்தும்: ஐந்து புலன்கள், ஐந்து உணர்வுகள்2
இத்தன்: இதன்
பதி: ஆளுனன், அரசன் (ஆன்மா, உயிர்)
அற: அற்றுப் போக, விலக, விடுபட
விதி: உண்மை
ஆச்சியம்: கேலிக்குரியது, கேவலமானது
மாச்சு: குற்றம்
ஆறு: அடங்கு
1 மனித உடலின் பதினொரு துளைகளாவன: உச்சந்தலை அல்லது கபாலம் ஒன்று, கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய் ஒன்று, தொப்புள் ஒன்று, குய்யம் ஒன்று, குதம் ஒன்று (கபாலம் துளையல்ல என்பாரும் உண்டு)
2 ஐம்புலன்களாவன: மெய், வாய், கண், மூக்கு, செவி | ஐந்துணர்வுகளாவன: தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் (புலனுகர்ச்சியால் உருவாகும் ஆசை, பாசம், மகிழ்ச்சி, வருத்தம், கோபம் எனும் ஐந்து வேர் உணர்வுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்)


    சிகேதன் தொடர்ந்தான். "அன்பர்களே! நாமே உருவாக்கி நாமே சிக்கித் தவிக்கும் கண்மூடித்தனங்கள் பற்றியும், நிலையாமை மற்றும் மனித இயல்புகள் பற்றியும், நான் கற்றதை சில கதைகள் வழியே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி நாமே குழி வெட்டி, அதில் நாமே விழுந்து, நாமே நம்மை மூடிக் கொள்வதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.."

"ஆகா! சொல்லுங்கள் இளவலே!"

"இந்த உடல் ஒரு பை போன்றது. ஓட்டைப் பை" என்றான்.

"நம் உடல் ஓட்டைப் பையா? என்ன சொல்கிறீர்கள்?"

"ஆம். நம் உச்சந்தலையில் ஒரு ஓட்டை. மூச்சடங்கி ஆன்மா வெளியேறும் தருணத்தில் பிளக்கும் ஓட்டை. கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித்துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று என முகத்திலே ஏழு ஓட்டைகள். பிறவியை அடையாளம் காட்டும் தொப்புள் ஒரு ஓட்டை. நீர்வாயில், மலவாயில் என்று இடுப்பின் கீழே இரண்டு ஓட்டைகள்".

அவையோர் சிரித்தனர். நசிகேதன் தொடர்ந்தான்.

"அன்புடையீர். பையில் ஓட்டை விழுந்தால் என்னவாகும்?"

"பையிலிருப்பது கீழே கொட்டும்"

"கொட்டாதிருந்தால்?"

"கொட்டாதிருக்க அது என்ன மாயப் பையோ?"

"ஆகா! மாயப் பை! நன்றி, அவையோர்களே! நம் உடல் ஒரு மாயப் பை போன்றது. ஓட்டைப் பையில் எதையும் கொட்டாது பிடித்து வைக்க முடியுமா? அப்படி முடிந்தால் அது அதிசயப் பை அல்லவா? நம் உடல் அத்தகைய அதிசயப் பை.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களால் நாம் பெறும் உணர்வுகளைப் பற்றி முன்னர் சொன்னேன். ஐம்புலன்களால் நாம் பெறும் பற்றுகளையும் பந்தங்களைப் பற்றியும் சொன்னேன். புலனுகர்ச்சியால் விளையக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் அறிந்தோம். புலனுகர்ச்சியின் போது நன்னெறிகளைப் பற்றினால் அகத்திலும் மேன்மை கூடுகிறது; நன்னென்றிகளை மறந்து தீய வழிகளில் சென்றால் ஆசை, கோபம், பொறாமை, களவு, பிணி போன்றவற்றைச் சுமக்க நேரிடுகிறது.

ஓட்டைப் பையின் குணம் என்ன? பையிலிருப்பது கீழே கொட்டும் அல்லவா? ஆனால் இந்த உடல் எனும் ஓட்டைப் பையைப் பாருங்கள். எத்தனை தீக்குணங்கள் ஏற்றித் தாங்குகிறது! எதுவும் வெளியே கொட்டுவதில்லையே? இது அதிசயப் பை அல்லவா?

அதே போல் நற்குணங்களைப் பேணினால் நிம்மதியும் நிறைவும் ஏறும். பையிலிருந்து கொட்டாது. ஆனால் நாம் இந்த மாயப்பையில் தீக்குணங்களையே திணித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டு, நன்னெறி, நிம்மதி, நிறைவினைத் திணிப்போமானால் தன்னறிவைப் பெற்று ஆன்மாவை அறிய முடியும்.

மாயப் பை என்பதை மறவாதீர்கள். ஓட்டைப் பையில்.. மாயப் பையில்.. நன்மை, தீமை இவற்றில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். எதைச் சேர்க்கப் போகிறீர்கள்?

அதிசயமான இந்தப் பொத்தல் மாயப்பை உடலை ஆளும் ஆன்மாவும், ஆன்மாவுக்கு அடங்கும் அல்லது ஆன்மாவை அடக்கும் புலன்களும் உணர்வுகளும்... எல்லாமே சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைந்துவிடுவன. ஆன்மா விடுபட்டதும்.. மூச்சு நின்றதும் புலன்களும் உணர்வுகளும் காய்ந்த இலைகள் போல் உதிர்ந்து விழுகின்றன. அழிகின்றன. அந்தக் கணத்திலிருந்து நிலைத்திருப்பது மறைந்த விதமல்ல; வாழ்ந்த விதம்.

மாயப் பையின் மாயம் தொலைந்துவிடும். ஆனால் பையுள் சேர்த்தவை மறையாது. எனவே மாயப்பை நிலைக்கும் பொழுதே தீநெறிகளைக் களைவோம்.

நம் எண்ணங்களும் சொற்களும் செயல்களும் நமக்கும் நம் சந்ததிக்கும் இந்த உலகுக்கும் பெருமை சேர்க்கலாம். அல்லது சிறுமை சேர்க்கலாம். பெருமை சேர்க்கும் சொல்லையும் செயலையும் நமதாக்குவோம். புலனில் தொடங்கி மனதில் இறங்கி ஆன்மாவை அழுக்கடையச் செய்யும் மாசு படிந்த எண்ணங்களையும் செயல்களையும் தவிர்ப்போம். புலன்களை அடக்குவோம். அதனால் ஏற்படும் நிறைவில் அடங்குவோம். அமைதி பெறுவோம்" என்றான்.

19 கருத்துகள்:

Expatguru சொன்னது…

வார்த்தை பிரயோககும் விளக்கமும் அற்புதம். ஐம்புலன்களில் 'மெய்' என்று கூறியிருக்கிறீர்கள். இதற்கு 'எண்ணம்' என்ற பொருளா அல்லது 'உண்மை' என்ற பொருளா?

geetha santhanam சொன்னது…

இந்த வெண்பாவும் அருமை. தொப்புள் எப்படி ஓட்டையாகும்?

சிவகுமாரன் சொன்னது…

நவ துளைகள் என்று தான் சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஓட்டை வீடு ஒன்பது வாசல் என்று கண்ணதாசனும் சொல்கிறார்.
காபலத்தை மூடிய துளை என்று சொல்லலாம் .ஒரு NRV( Non Return Valve) போன்றது ,
தொப்புள்..?

வெண்பாவில் விளையாடுகிறீர்கள்.
அருட்கவிக்கு அன்புடன் அழைக்கிறேன்

சிவகுமாரன் சொன்னது…

விட்டதை எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சரி
இந்த மாயப் பையில் வெறும் அழுக்கு களை
அழுகல்களை அடுக்கிவைத்துத்தான் நாமும் அவதியுற்று
அடுத்தவர்களையும் அவதிப்படவைத்துக் கொண்டுள்ளோம்
மனம் கவர்ந்த பதிவு

meenakshi சொன்னது…

வெண்பா அருமை! வெண்பா வேந்தர் பட்டம் உங்களுக்கு வெகு பொருத்தம். :)

//பதினொரு துளைகளைக் கொண்ட அதிசயமாம் இவ்வுடல்//
'உடலுக்கு ஒன்பது வாசல், மனதுக்கு எண்பது வாசல்' இந்த பாடல் வரிகளை படிக்கும் காலத்தில் கேட்ட போதெல்லாம் ஒன்பதுக்கு மேல் வருகிறதே, இந்த பாடலில் ஏன் ஒன்பது என்கிறார்கள் என்று நினைப்பேன். இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

வெண்பாவின் விளக்கமும் நன்றாக இருக்கிறது. எழுத்து நடையும், வார்த்தை தேர்வுகளும் அருமை!
//புலனில் தொடங்கி மனதில் இறங்கி ஆன்மாவை அழுக்கடையச் செய்யும் மாசு படிந்த எண்ணங்களையும் செயல்களையும் தவிர்ப்போம். புலன்களை அடக்குவோம். அதனால் ஏற்படும் நிறைவில் அடங்குவோம். அமைதி பெறுவோம்"//
பிரமாதம்!

ஸ்ரீராம். சொன்னது…

கடைசி பாரா பிரமாதம். ஆனால் முடியுமா...! இந்த ஒன்பது பதினொன்று குழப்பம் நீங்கள் தீர்க்கும்போது படிக்கிறேன்...ஒன்பது வாய் ஓட்டைக்கு ஒரு நாளைப்போல் என்று ஒரு பட்டினத்தார் பாடல் கூட உண்டு இல்லை?

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! நவ துவாரங்கள் தான் சரி என்று கருதுகிறேன்..கண் 2,காது2,மூக்கு 1, வாய் 1, இடுப்புக்குக் கீழே 3 மொத்தம் 9.கணக்கு எங்கேயோ அடிக்கிதே!---காஸ்யபன்.

அப்பாதுரை சொன்னது…

வருக Expatguru, geetha santhanam, சிவகுமாரன், Ramani, meenakshi, ஸ்ரீராம்., kashyapan, ...

அப்பாதுரை சொன்னது…

ஓட்டைக் கணக்குப் போட்டவர்களுக்கு நன்றி :-).

பதினொன்றில் எனக்கும் உடன்பாடில்லை. உடலை பதினொரு வாசல் கோட்டை (நகரம்) என்கிறது கடோ. மாற்றலாமா என்று நிறைய யோசித்தபின் அப்படியே எழுதினேன். கடோவை மாற்றிவிட்டதாக (ஒருவராவது) சொல்லக்கூடாது பாருங்கள் :)

இலக்கணத்தில் வழுவமைதி என்று ஒன்று உண்டு, நினைவிருக்கலாம். ஏற்கனவே சொல்லப்பட்டதை அப்படியே ஏற்று அமைவதால் இதை மரபு வழுவமைதியில் சேர்க்கலாம். அதற்கு இலக்கணப் போலீஸ் இணங்காவிட்டால் வழக்குவழு என்று எட்டாவது வகையில் சேர்ப்போம். என்ன சொல்கிறீர்கள்?

கடோ குறிப்பிட்டிருப்பது கணக்குப்படி சரியில்லை என்றாலும் தத்துவப்படி சரிதானென்று நினைக்கிறேன். இந்த பதினொரு ஓட்டைகளில் கபாலம் மட்டுமே கேள்விக்குறி, ஏனெனில் அது எதிர்கால (?) ஓட்டை. தொப்புள் கடந்த கால ஓட்டை என்பதால் அது சரியே. மனிதப் பிறவியின் முதல் ஓட்டை, இல்லையா?

கிடக்கட்டும், உண்மையில் மனித உடலில் எத்தனை ஓட்டைகள்? சரியான விடை உண்டு :)

ஷ்! ஒரு தெரிந்த ரகசியம்: 'ஒன்பது ஓட்டை' என்று பாடியவர்கள் அத்தனை பேரும் ஆண்கள்.

அப்பாதுரை சொன்னது…

'மெய்' என்பது உடல் என்ற பொருளில் வருகிறது Expatguru. 'தொடுதல்' என்ற உணர்வை வழங்குவதால் ஐம்புலன்களில் மெய் ஒன்று.

கண், செவி எல்லாம் உடம்பு தானே... உடலின் (முகத்தின்) பகுதிகளைச் சேர்த்துவிட்டு பிறகு மெய் என்று தனியாகச் சேர்ப்பானேன் என்று நீங்கள் கேட்கலாம்.. இல்லையெனில் நான் கேட்கிறேன் :)

ஏன் உடலின் பகுதிகளான காது, கண், மூக்கு, வாய் என்று தனிப்படுத்தி, பிறகு 'மெய்' என்று பொதுவாகச் சேர்த்து 'ஐந்து' என்றார்கள்? என்ன நினைக்கிறீர்கள்?

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! மெய் என்பது உண்மையல்லவா! காது கெட்காதவன் தொடு உணர்வு உள்ளவனாச்சே! கண்ணில்லாதவன் தொடு உனர்வால் தானே உலகத்தை புலப்படுத்திக் கொள்கிறான்.!எங்கேயோ அடிக்கிறது சாமீயோவ்!---காஸ்யபன்

meenakshi சொன்னது…

தொடுதல் என்ற உணர்வு உடலில் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உணரப்படும் உணர்ச்சி. மீதி நான்கு புலன்களின் செயல்களை நம்மால் சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்க முடியும். ஆனால் இந்த தொடுதல் உணர்வு நாம் நம்மையறியாமல் உறங்கும்போது கூட நம் உடலின் மொத்த அவயங்களாலும் உணரமுடிவதால் 'மெய்' என்கிறோம். மீதி நான்கு அவயங்களுக்கும் தனி தனி செயல்கள் இருப்பதாலும், ஒன்றின் செயலை மற்றதால் செய்ய முடியாது என்பதாலும் அவைகளை தனியாக குறிப்பிடுகிறோம்.
'மெய்' என்பதற்கு உண்மை என்ற பொருளும் உண்டு என்றாலும், ஐம்புலன்களில் வரும் இந்த 'மெய்' உடல்தான். ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று
வரும்போது 'மெய்' என்பது உண்மை என்ற பொருளில் வராது.

சொல்ல வந்த கருத்தை தெளிவாக எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். :)

பத்மநாபன் சொன்னது…

காயமே இது பொய்யடா..வெறும் காற்றடைத்த பைய்யடா..

பை கொண்டு மெய் பற்றிய விளக்கம் அருமை..

புலனை அறிந்து அடக்கினால் பை குறையாது....

பெயரில்லா சொன்னது…

வழுவமைதிyaa? yerkanave venbaanu thalaiya suththurappo ilakkannam vereyaa?

அப்பாதுரை சொன்னது…

ஓட்டைகளை இன்னும் எண்ணி முடிக்கவில்லை. வேறொரு பதிவில் எழுதுகிறேன் :)

அப்பாதுரை சொன்னது…

காஸ்யபன் ஐயா.. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. (உங்களுக்குத் தெரியாததா?) காது கேளாதவரும் குருடரும் தொடுதலினால் புலப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் தொடுதல் ஐம்புலனில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

meenakshi அவர்கள் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பது போல் கண், வாய், செவி, மூக்கு இவற்றைக் கட்டுப்படுத்தினாலும் மெய்யைக் கட்டுப்படுத்துவது கடினம். உறக்கத்தில் வரும் இன்பக்கனாவின் வெளிப்பாட்டை மெய்யால் உணரமுடிகிறதே?

மெய் எனும் உடல் (தொடல்) நுகர்ச்சியை மற்ற நான்கு கருவிகளும் மேலும் முனைப்பாக்குகின்றன. கண் வாய் செவி மூக்கின் உதவியினால் தொடமாலே கூட புலனுகர்ச்சி கூடும். அதனால் மெய் என்பதே கட்டுப்படுத்த மிகவும் கடினமானது.

ஐம்புலன்களில் முதலாவதாகச் சொல்லப்படுவதும் அதனால் தான். மெய் அல்லது தொடலுக்கு அடுத்தபடி மிகக் கடினமானது வாய். அதனால் வாய் இரண்டாவது. தேடலின் தீவிரம் காரணமாக கண்கள் அடுத்த நிலை. மனதுக்கும் உடலுக்கும் சுகம் தரும் நுகர்ச்சியினால் மூக்கு அடுத்து வருகிறது. செவி கடைசி. மெய் அடக்கி, வாய் பேசாமல், கண்களையும் மூக்கையும் கட்டுப்படுத்தி, காதினால் நல்லவற்றை கேட்டால் மனம் நிறையும்.

meenakshi சொன்னது…

தெளிவான விளக்கம். நன்றி அப்பாதுரை!

சிவகுமாரன் சொன்னது…

அருமையான விளக்கம் அப்பாஜி