80
அழிந்தும் எழும்பும் அழலான் வழியே
செழிக்கும் சுழியே சித்து - கழியில்
அழுப்புக ஆசான் கொழித்தக் கெழுமை
முழுதும் பொழிந்தான் மொழிந்து.
செழிக்கும் சுழியே சித்து - கழியில்
அழுப்புக ஆசான் கொழித்தக் கெழுமை
முழுதும் பொழிந்தான் மொழிந்து.
விண்ணுலக ஆசான் வழங்கிய குறையற்ற அறிவொளியை அவையிலே பொழிந்த நசிகேதன், உதயமாகி மறையும் ஆதவனைப் போன்று ஆன்மாவும் சுழன்று வளர்வதாகும் என்று சொல்லி முடித்தான்.
அழலான்: ஆதவன் (அழல், அழலன்)
சுழி: விதை, சுழற்சி
சித்து: ஆன்மா
கழியில்: குறையில்லாத (கழி+இல்)*
அழுப்புகம்: விண்ணுலகம்
கொழித்த: பொழிந்த, பெருமளவில் வழங்கிய
கெழுமை: ஒளி, சிறப்பு (அறிவு)
* நசிகேதன் தன் ஆசானைக் குறையற்றவன் என்றதாகவும் பொருள் கொள்ளலாம்
அவையினர் கேட்டக் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்லுவதென்று சிந்தித்தான் நசிகேதன். அவையை நோட்டமிட்டான். அவன் மனதிலும் எண்ண மழை. உணர்வு ஓடை. எழுச்சி நதி.
திகைத்தான். எத்தனை பேர் கூடியிருக்கிறார்கள்! படித்தவர்கள் பாமரர்கள் என்றப் பாகுபாடின்றி அத்தனை பேரும் என்னைக் காண வந்திருக்கிறார்களே! எதற்காக? எத்தனை விதமான கேள்விகள் கேட்கிறார்கள்! கேள்விகளில் அறிவும் அறியாமையும் தொனிக்கிறதே! என் எமனுலகப் பயணக் கதையைக் கேட்க வந்திருக்கிறார்களா? இருக்காது. பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் இவர்களுக்கு ஏதாவது பயனேற்படுமா? பயண விவரங்களின் சிலிர்ப்பும் திகைப்பும் சில கணங்களில் மறைந்து விடுமே? இவர்களுடைய கேள்விகளின் வேர் யாது? சொர்க்கம் பற்றித் தெரிந்து கொள்வதா? அதை அடைவதற்கான வழி முறைகளைத் தெரிந்து கொள்வதா? அவ்வுலக நிலையை அறிந்து கொள்வதா?
விழித்தான். அவ்வுலகம் பற்றி அறிந்து கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு இருக்கிறதா? கண்மூடத் தயங்காத இவர்கள் கண்திறக்கத் தயங்குவார்களா? எத்தகைய வேள்வி புரியவேண்டும் என்று கேட்கிறார்களே? எத்தகைய தானங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? வேள்வியைப் பற்றி எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்களா? 'புரிந்தவர்க்கும் பொன்னுலகும் பிக்கும், பேதைக்கோ என்னுலகம் என்றும் எதிர்' என்றாரே என் ஆசான்! இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது!
திடுக்கிட்டான். அடடா! ஆசானிடம் நான் இவர்களைப் போலத்தானே அடாது கேட்டேன்? அவரும் என்னைப் போல் மனதைப் பிசைந்து கொண்டிருப்பார் என்பது இப்போதல்லவா புரிகிறது! ஆசான் என்னைச் சோதித்தது போல் நான் இவர்களைச் சோதிப்பதா? தேவையில்லை. அதனால் பலனில்லை. இவர்களின் தேவை, தேர்ந்த அறிவல்ல. ஞானமல்ல. இவர்களுக்குத் தேவை, குறுக்கு வழி. ஒரு பதில். இன்றையப் பொழுதுக்கான ஒரு வடிகால். சாதனம். வேறு வரங்கேள் என்று ஆசான் என்னை வற்புறுத்தியது இப்போதல்லவா புரிகிறது? பொன்னை அறியும் மாந்தரிடம் சற்றுத் தன்னையும் அறியச் சொல்வதால் பலனுண்டா? மெய்யறிவை வழங்குவதை விட, பொன்னையும் மணியையும் இவர்களுக்கு வழங்கினால் மகிழ்வார்களோ?
கலங்கினான். அந்தோ! அப்படி எண்ணிக் கைவிட முடியவில்லையே?! பிறகு, இந்த அறிவை இவர்கள் பெற முடியாது போகுமே! நான் பெற்ற அறிவின் பலனும் அழிந்து விடுமே! பாமரர்களை விட, படித்தவர்கள் மேல் பரிதாபம் தோன்றுகிறதே! படிப்பும் பட்டறிவும் பல கேள்வி ஞானமும் பெற்றும், தானும் கண்மூடிப் பிறரையும் குழியில் தள்ளுகிறார்களே! இவர்களின் கண்மூடித்தனத்துக்குக் கல்வியே காரணமோ? பாமரர்களோ பயந்திருக்கிறார்களே? இவர்களின் கண்மூடித்தனத்துக்கு பயம் காரணமோ? மெய்யறிவைப் பையிலடைத்து இவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறேன்?
சிலிர்த்தான். தேவர்கள் உண்டா, கடவுளைக் கண்டாயா என்றார்களே! கண்டேன் என்றால் புரிந்து கொள்வார்களா? என் ஆசிரியரை நினைத்தால் மெய் சிலிர்க்கிறதே! 'வெளியே சிவந்தேடல் வீண்' என்றதன் பொருள் இப்பொழுதல்லவா புரிகிறது! ஆசான் என்ன சொன்னார்? 'சுகம் தேடிச் செல்வார் போல் மெய்யறிவில் மூழ்க மனங்கொள்' என்றாரே? அவர் சொல்லின் உண்மைப் பொருள் இப்பொழுதல்லவா விளங்குகிறது! சாதாரணப் பாமரர்கள் தான் மெய்யறிவைச் சுலபமாகப் பெறத் தகுதியானவர்கள். சுகந்தேடும் அவர்களால் தான் மெய்யறிவிலும் மூழ்க முடியும். தத்துவப் பித்து கொண்ட தாடிகளும் காவிகளும் தங்களின் கண்மூடித்தனத்தினாலும் ஆணவத்தினாலும் மெய்யறிவைப் பெறும் தகுதியற்றவர்கள் என்பது இப்போதல்லவா புரிகிறது!
மருண்டான். மெய்யறிவுப் பாதையில் கல்லும் இல்லை முள்ளும் இல்லை. மெய்யறிவுப் பாதை எளிதான பாதை, எனினும் பயணம் கடுமையானது என்பதைப் புரிந்து கொள்வார்களா? யாகங்கள் விரதங்கள் தானங்கள் தியாகங்கள் எல்லாமே தேவை.. ஆனால் அவை இவர்கள் இப்போது புரியும் யாகங்கள் அல்ல, விரதங்கள் அல்ல, தானங்கள் அல்ல, தியாகங்கள் அல்ல என்றால் உணர்ந்து கொள்வார்களா? தேவைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு வெளி வரத் தயங்குகிறார்களே? வெளியே தீ வளர்த்துத் துதி பாடி தானம் செய்து கண்மூடும் இவர்களை உள்ளே தீ வளர்க்கச் சொல்வதெப்படி? வெளியில் பொன்னும் மணியும் பசுவும் சிசுவும் தானம் செய்யும் இவர்கள் செய்ய வேண்டிய தானங்களும் தியாகங்களும் அவர்களுக்குள்ளேயே இருப்பதை எப்படிச் சொல்வது? எனக்கே எமனுலகம் போனபின் தானே இவை புரிந்தது? ஒருவேளை இவர்களும் இறந்தபின் புரிந்து கொள்வார்களோ?
வருந்தினான். அடடா! இந்தப் பேதைகளின் முகங்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறதே! இல்லாததை நம்பிப் பொல்லாததைப் புரிகிறார்களே! இத்தனை எளிமையான உண்மையை இவர்கள் இறந்து அறிய வேண்டியிருக்கிறதே! தான் கற்றத் தத்துவம் 'ஞாலத்து மையகற்றும் ஞாயிறு' என்றதன் உண்மை உறைத்தது. அவனுள் நன்றியுணர்வு பொங்கியது. என் தந்தையின் அறியாமையினால் தானே எனக்கு அறிவு கிடைத்தது! தந்தையைப் பார்த்து மனதால் நன்றி சொன்னான்.
கனிந்தான். மீண்டும் அவையினரைப் பார்த்தான். 'உன்னால் மைவிலகி உய்யட்டும் உலகு' என்ற எமனின் ஆசி நினைவுக்கு வந்தது. ஒரு உயர்ந்த மாணவன் தன் மேலான ஆசிரியருக்குச் செலுத்த வேண்டிய நன்றியைப் புரிந்து கொண்டான். அவந்தேடி ஓட்டும் அகத்தின் ஒளியைப் பற்றி இவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியே தீரவேண்டும் என்ற வேகம் அவனுள் எழுந்தது. இவர்களுக்குத் தன்னறிவைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும். இவர்களில் ஒரு சிலர் புரிந்து கொண்டாலும் பலன் தானே?
மகிழ்ந்தான். அவன் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன. 'மூன்று வரங்கேள்' என்ற ஆசானின் நினைவு வந்தது. தானும் இதே நிலையில் இருந்ததை எண்ணினான். இவர்கள் ஞானப்பாதையில் போக விரும்புவதினால் தானே கேட்டார்கள்? பதிலுக்கு மெய்யறிவை வழங்க வேண்டியது என் கடமையல்லவா! எத்தகைய வாய்ப்பு இது! நான் பெற்ற ஞானம் இவ்வையமும் பெறுவதில் ஞானத்துக்குத் தானே பெருமை! இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு! இதற்காகவே தன்னை எமன் தயார் செய்திருப்பது புரிந்தது. தன் ஆசானுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துவிட்டுத் தொடங்கினான்.
"என்னைக் காண வந்த நல்ல உள்ளங்களே!" என்றான். "எல்லாம் அறிந்த ஞானிகளே!" என்றான். "உங்கள் அன்புக்கு முதலில் என் வணக்கங்கள்!" என்றான்.
அவையில் அமைதி.
எமனுடன் நடந்த உரையாடலை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று சிந்தித்தான் நசிகேதன். அவையோர் கேள்வியின் பின்னே இருந்த அச்சத்தை, ஆன்மாவின் சுழற்சி பற்றிய ஐயத்தை, அது தொட்ட பாவ புண்ணிய சொர்க்க நரக நம்பிக்கைகளை, அவற்றைப் பெறவும் விடவும் புரிய வேண்டியதாகச் சொல்லப்படும் கண்மூடித்தன சடங்குகள் பற்றிய அறியாமையை.. அனைத்தையும் நீக்க வேண்டிய, விளக்க வேண்டிய, தருணம் வந்ததை உணர்ந்தான். தன் ஆசான் இதற்காகவே தன்னைப் தயார் செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தான். தன் உரையைத் தொடங்கினான்.
"அன்புடையீர்.. இதோ இருக்கும் என் தந்தை அறியாமையினால் என்னை எமனுக்குத் தானம் கொடுத்தார். தனக்குச் சொர்க்கம் கிடைக்குமென்று காவிகள் சொன்னக் கட்டுக்கதையை நம்பி, பெரும் வேள்வி புரிந்து, பெற்ற மகன் என்றும் பாராமல் என்னை எமனுக்குத் தானம் கொடுத்தார்" என்று தொடங்கினான். அரியணையிலிருந்த அரசனை, வாசனை, தன் தந்தையைப் பார்த்தான். நசிகேதனின் பார்வையிலே ஆத்திரம் இல்லை. மாறாக கருணையும் நன்றியும் ஒளிர்ந்தது. "அப்பா!" என்று வணங்கினான். தொடர்ந்தான்.
"அன்புடையீர்.. என் தந்தையின் செயல், அறியாமையின் விளைவு என்றாலும் அவர் அவ்வாறு செய்யாதிருந்தால் எனக்கு இந்த அறிவைப் பெறும் வாய்ப்பு, பெற்று உங்களுடன் பகிரும் நிறைவு.. இரண்டுமே கிடைத்திருக்காது. அவருக்கு என் நன்றி. அறவரசனான எமன் என்னை அன்புடன் ஏற்று ஒப்பற்ற மெய்யறிவை வழங்கினார். என் ஆசான் களங்கமற்றவர். என் ஆசான் மாபெரும் அறிஞர். என் ஆசான் கருணையே உருவானவர். என் ஆசான் உங்கள் அனைவருக்கும் உய்யும் வழியை என்னிடம் சொல்லியனுப்பினார். அதனை முழுதுமாக உங்களிடம் சேர்க்க எனக்கு அவர் தொடர்ந்து அருள் புரியட்டும். எனக்குத் துணை நிற்கட்டும்.
மண்ணிலே விதை விதைக்கிறோம். விதை வளர்ந்துப் பயிராகிறது. பயிர் அழிந்து விதையாகிறது. விதை மீண்டும் அதே மண்ணிலே அதே பயிர் வளரக் காரணமாகிறது. இதைப் புரிந்து கொண்டவர்கள், விதை பயிராவதால் பெருமகிழ்ச்சியோ பயிர் விதையாவதால் பெருந்துயரமோ அடைவதில்லை. பயிர் அழியும் காலத்தில் விதையின் உண்மை, வளர்ச்சியின் தத்துவம், அறிந்து அமைதியாக இருக்கிறோம். பிறப்பும் இறப்பும் அது போலவே. உயிர் பிறப்பது விதை முளைப்பது போல. உயிர் பறப்பது பயிர் அழிவது போல. முளைத்து நல்முறையில் வளர்ந்து செழிப்பது மட்டுமே பயிரின் கடமை. விதையின் உரிமை பயிருக்கு இல்லை. அதுபோல் நல்முறையில் வளர்ந்து, மனித நேயத்தில் செழித்து, தன்னையறிந்து நடப்பதே நமது கடமையாகும்.
மழை நீரை அறிவோம். விழும் இடம் பார்த்தா விழுகிறது? கடலிலோ ஏரி குளங்களிலோ நிலத்திலோ விழுகிறது. விழுந்த நீர் குளத்திலோ நதியிலோ கடலிலோ கலந்து, அத்தன்மைக்கேற்ப உருமாறுகிறது. அறவே கலந்த மழைநீரானது, தான் விழுந்து கலந்த குளம் நதி கடலினின்று விலகி, தன்மைகளை விடுத்து மேலெழுந்து, உருமாறி மீண்டும் மழைநீராகவே அதே இடங்களிலோ, இடம் மாறியோ, விழுகிறது. ஆயின், இந்த சுழற்சி மாறுவதேயில்லை. தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து வேறு விதமாக மாறத் தெரியாத நீரானது எப்படி மழையாக மாறி கடல் நதி நிலம் என்றுச் சுற்றி வருகிறதோ, அதுபோல் ஆன்மாவானது உடலினின்று விலகிக் கலந்து விலகிக் கலந்துச் சுழல்கிறது.
என் ஆசான் இதைப் பற்றிச் சொல்லும் பொழுது, 'பாமரர்கள் மட்டுமல்ல பெரும் ஞானிகளும் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், பிறவாமை எனும் பேற்றினைத் தேடி என்னுலகம், பொன்னுலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் வந்து போகிறார்கள்' என்றார். அன்பர்களே! இந்தச் சுழற்சி தவிர்க்க முடியாதது. இயல்பானது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றின் நிறங்களை அறிய முடியும். இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. சுழற்சியின் கவர்ச்சியில் விழுவது எளிது. அதனால் நாம் பேராசைகளையும் பெருந்துயரங்களையும் வளர்த்து உழல்கிறோம்.
இங்கே விருந்துண்டோம். விருந்திலே மா பலா வாழை என முக்கனிகள் பரிமாறப்பட்டன. நம்மால் எத்தனை உண்ண முடிந்தது? முதல் கனியை வாய் ருசித்தது. மனம் மகிழ்ந்தது. எனினும், எத்தனை கனிகள் உண்ண முடிந்தது? மூன்றாவதாகவோ ஐந்தாவதாகவோ பறிமாறப்பட்டவை முதல் கனியின் சுவை போலவே இருந்ததா? இல்லையே? சாதாரணச் சாப்பாட்டின் இனிமையே நிலையில்லாதது என்று உணரும் பொழுது, நமக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது புரிகிறதா?
நிலையாமை என்பது நம் ஒவ்வொரு செயலிலும் இயக்கத்திலும் செய்தியாகப் புதைந்திருக்கிறது. நாம் தான் அறிவதில்லை. அறிவது எளிதல்ல. தன்னையறியும் பொழுது நிலையாமை முகத்தில் அடித்தாற்போல் புரிகிறது.
நீரிலே எழும்பித் திரியும் குமிழியில் பல வண்ணங்கள் பட்டுத் தெறித்து, கண்களுக்கும் மனதுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. குமிழி நிலைப்பதில்லை. குமிழி எப்போது வெடிக்கும் என்று தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதே. உலகத்தில் அளவற்ற நாள் வாழ வழியிருந்தாலும், அது நிலைக்காத குறுகிய காலமே. இசையும் இளமையும் வாரிசும் வாழ்வும் நசையாகும். அதனால், வாழும் காலத்திலே தன்னை உணர்ந்து கண்மூடித்தனங்களை விட்டு அறிவைத் தொடர்ந்து வாழ வேண்டும். அறிவுப் பாதையிலே போவோருக்கு அச்சமில்லை. துயரமில்லை. நல்ல மனிதராக வாழ்ந்த நிறைவு, அச்சத்தையும் துயரத்தையும் அழிக்க வல்லது.
எனது ஆசான் சொன்னதை இங்கே நினைவு கூர்கிறேன். 'மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது' என்றார்.
அஞ்சாதீர்கள். நமக்கு சாபம் எதுவும் இல்லை. நாம் அறிய வேண்டியதை, புரிய வேண்டியதை எடுத்துச் சொல்லவே என் ஆசான் அப்படிச் சொன்னார்.
என் ஆசானை நான் நன்கு அறிவேன். கள்ளமற்றவர். குறையற்றவர். கருணை வடிவானவர். தன்னையறியாமல் மானிடம் தடுமாறுவதைக் கண்டு வருந்தி அல்லாடுபவர். அவர் சொன்னது இது தான்.
நம் அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நாம் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நாம் தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், நம் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு, நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாடும் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே நம்மை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி நம்மை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு.
இன்பத்தையே தேடி அலையும் நாம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறோம். தவறுகளைச் செய்யத் துணிகிறோம். தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறோம். பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறோம். நம்மைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறோம். குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறோம். நம்மில் பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால், மானம் கெட்டு மடிகின்றனர்.
நம்மை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. நம் ஒவ்வொரு செயலும் நம்மை - முதலில் நமக்கும், பிறகு நம் சுற்றத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. அதனால் அன்பர்களே, இன்பமா நன்மையா எது தேவை என்பதை எப்பொழுதும் மனதில் வைத்து செயலில் இறங்குங்கள்.
மானிடம் இருவகைப்படும். ஒன்று அறிவுள்ள இனம். மற்றது அறிவற்ற இனம். நம்மில் வேறு பேதமேயில்லை.
அறியாதவர்கள் என்றால் எழுத்தறிவில்லாதவர்கள், கல்வி கற்காதவர்கள் என்று பொருளல்ல. அறிவற்றவரும், பார்வைக்கு அறிவுள்ளவர் போலவே தோன்றுவர். அறிவில்லாதவர் நன்கு படித்திருக்கலாம்; நெறிகளையும் வேதங்களையும் சாத்திரங்களையும் தந்திரங்களையும் கற்றிருக்கலாம்; வித்தை தெரிந்தவராக இருக்கலாம். எனினும், அறிவற்றவர்களாக நடப்பதாலும், பிறரை அறியாமையில் இழுப்பதாலும், இவர்கள் அறிவில்லாதவர்களே.
அரை எழுத்துக் கல்லாதவர், பாமரனிலும் பாமரன், வேதங்களோ சாத்திரங்களோ இன்னதென்றே தெரியாதவர், மிகச் சாதாரணர், அறிவோடு நடந்தால் அவர் அறிந்தவர் ஆவார்.
மனித மனம் இயல்பிலே இன்பத்தை நாடும் தன்மையது. துன்பத்திலிருந்து விலகி ஓடும் தன்மையது. இன்பத்தைத் தேடிச் சேர்க்கும் பொழுதும், துன்பத்திலிருந்து விலகும் பொழுதும், தூண்டுதல்களுக்குக் கட்டுப்படும் மனிதன் என்னென்ன செயல்களைச் செய்கிறான் என்பதே அறிந்தோனையும் அறியாதவனையும் அடையாளம் காட்டும்.
அறிவற்றோர் நற்குணங்களில் சிறிதும் வளர்ச்சி பெறாதவர்கள்; பகுத்தறிவு மழுங்கியவர்கள்; சந்தனம் கலந்த சாக்கடை போன்று சொல்லும் செயலும் கொண்டவர்கள்; தீய குணங்களில் தேர்ந்தவர்கள்; தன்னிலை உயரவேண்டி, கண்மூடித்தனங்களை விரும்பி ஏற்பதனால், இவர்கள் தங்களுக்குப் பிறவியிலே கிடைத்த நல்லறிவை அழித்துக் கொள்கிறார்கள்.
அறிவுள்ளவர்கள் புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு எனும் நான்கு வகை அறிவினையும் பெற்றவர்கள். தங்களுக்குள் இருக்கும் அசாதாரண சக்தியைப் புரிந்து கொண்டு, அதனால் தானும் தன்னைச் சுற்றியிருப்போரும் பயனடையும் விதத்தில் நடப்பவர்கள். அறிவுளோரின் அடையாளம் என்று என் ஆசான் சொன்ன பெரும் ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பிறப்பால் பெறும் மூன்று சொத்துக்களில் தன்னறிவு மட்டுமே இறக்கும் பொழுதும் உடன் வருவது என்பதை அறிந்தவரே அறிவுளோர்" என்றான்.
"பிறப்பால் வரும் சொத்துக்களா? பிறக்கும் பொழுது எதுவும் கொண்டு வருவதில்லை, இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்வதும் இல்லை. இதென்ன புதுக்கதை?" என்றார் ஒரு ஞானி.
நசிகேதன் புன்னகைத்தான். "சொல்கிறேன் அறிஞரே! மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் கொண்டு வரும் சொத்துக்கள் மூன்றாகும். முதல் சொத்து உள்ளறிவு. இரண்டாவது, உயிர்த்துடிப்பு. மூன்றாவது, தாய்-தந்தை என்ற உறவு. இவை மூன்றுமே பிறப்பால் உண்டாகும் சொத்துக்கள்.
பிற செல்வங்களும் சொந்தங்களும் இடையில் சேர்ப்பவை அல்லது தொலைப்பவையாகும்.
இம்மூன்று சொத்துக்களில் இரண்டு உண்டானவை, ஒன்று உருவாவது. இந்த மூன்றில் 'உண்டான' இரண்டு, பெற்ற உறவும் உயிர்மூச்சும் ஆகும். அவற்றை மாற்றவோ சீராக்கவோ மனிதரால் முடியாது. 'உருவாகக்' கூடியது உள்ளறிவு மட்டுமே. அதனை மட்டுமே மனிதரால் தேடியறிந்து, தன் விருப்பம் போல் உருவாக்கிச் சீராக்க முடியும். பிறப்பிலிருந்து இறப்பு வரை, அறிவுள்ள மனிதரின் ஒரே குறிக்கோள், தன்னறிவைத் தேடி வளர்த்துத் தனக்கும் பிறருக்கும் பயனுற வாழ்வதாக இருக்க வேண்டும். 'எப்படி வாழ்ந்தோம் என்கிற முத்திரையைப் பதிக்க வல்லது தன்னறிவு' என்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.
பிறப்பால் பெற்ற மூன்று உடைமைகளில், இறக்கும் பொழுது உயிர்த்துடிப்பு நின்று விடுகிறது. உயிர் நின்ற கணமே உடன் வந்த பெற்றோர் உறவும் முறிந்து விடுகிறது. அந்நிலையில், இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள். ஆதலின் அன்பர்களே, அறிவுள்ளவராக விளங்குவோம்" என்றான்.
அவையில் பெரும் அமைதி. கூடியிருந்த ஒவ்வொருவரும் தம் நுகர்ச்சிப் பாதைகளை எண்ணினர். இன்பத்தை நாடுகிறோமா, நன்மையும் தேடுகிறோமா என்று சிந்திக்கத் தொடங்கினர். எத்தகையக் கண்மூடித்தனங்களில் வாழ்வைக் கழிக்கிறோம் என்ற கழிவிரக்கத்தில் சிலர் வாடினர். நசிகேதன் தொடர்ந்தான்.
"தன்னறிவு என்பது மிக நுண்மையான அறிவாகும். தன்னறிவைப் பற்றி என் ஆசிரியர், 'தன்னறிவுக்கு உருவமில்லை. பன்னிரண்டு கைகளோ, நான்கு முகங்களோ, மூன்று கண்களோ, எட்டு தோள்களோ, பத்து தலைகளோ இல்லை. எனினும், அதை அடையாளம் காணலாம். தன்னறிவு, ஆறு தீக்குணப் பகையழிக்க வல்லது. எனினும், சூலமோ ஆயுதமோ வில்லோ வாளோ ஏந்தி நிற்பதில்லை. பூமிக்கும் ஆகாயத்தும் அண்டத்துக்கும் அப்பாற்பட்டுப் பரந்திருக்கக் கூடியதாயினும், அணுவுக்குள் அணுவாக அடங்கி எளிதில் புலப்படாத தோற்றமுடையது' என்றார். என் ஆசானின் அறிவை நான் என்னென்று போற்றுவேன்! கேளுங்கள். புறக்கண் இழந்தக் குருடர்களால் எப்படி வெளிக்காட்சிகளைக் கண்டு செயலாற்ற இயலாதோ, அவ்வாறே அகக்கண் குருடர்களால் தனக்குள்ளே கண்டு தன்னறிவைத் தேடிச் செயலாற்ற முடியாது"
"தன்னறிவை எப்படிப் பெறுவது என்று சொல்லுங்கள் இளவலே" என்றார் அவையில் ஒருவர்.
"அகக்கண்ணை மூடியே வைத்திருப்பது மனிதரின் இயல்பான குணம். புலன்கள் நம்மைக் கட்டுகின்றன. புலன்கள் இடையூறு எனும் களையாகி, தன்னறிவு எனும் பயிர் செழித்து வளராமல் தடுக்கின்றன. புலன்களை நாம் கட்டவேண்டுமெனில், அவற்றின் ஆக்கிரமிப்பில் இருந்து முதலில் விடுபட வேண்டும். தித்தியத் தீ என நான் முன் சொன்னது போல், உள்மனதின் தீ வளர்த்து புலனடக்க வேண்டும். தீவிர யோகத்தினால் மட்டுமே உள்ளுக்குள் உறையும் தீயை வளர்க்க முடியும். உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்துத் தன்னறிவைத் தேடிப் பெறுவோம். தன்னறிவைக் கண்டவர்கள் ஆன்மாவை அடையாளம் காண முடியும்"
"தன்னறிவும் ஆன்மாவும் வேறா?" என்று கேட்டார் ஒருவர்.
"தசையினால் கட்டப்பட்ட நம் உடல், தேர் போன்றது. உயிரானது, தேரின் சக்கரங்கள் போன்றது. எளிதில் அடங்காத நமது ஐம்புலன்கள், தேரில் பூட்டப்பட்டிருக்கும் புரவிகள் போன்றவை. ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே தன்னறிவாகும்"
அரியணையிலிருந்து இறங்கி வந்து அவையோருடன் அமர்ந்தான் வாசன். நசிகேதனை வணங்கி, "ஐயா, தன்னறிவு, ஆன்மா பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள். ஆன்மாவை அறிந்த உயிருக்கு என்ன கதி?" என்றான்.
"தந்தையே! நம்முடைய புலன்களுக்கும் பல நிலைகளுக்கு அப்பால் இருப்பது ஆன்மா. அதற்கும் அப்பால் பல நிலைகள் கடப்பதே உயிர்ப் பயணத்தின் இலக்கு. ஆன்மா சுழன்று கொண்டே இருக்கிறது" என்றான்.
புரியாமல் விழித்த வாசனையும் அவையோரையும் கண்ட நசிகேதன் தெளிவுடன் தொடர்ந்தான். "ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு குகைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். முதல் ஐந்து குகைகளில் தடுமாறித் தவறினா மீண்டும் முதல் குகையிலிருந்துத் தொடங்க வேண்டும். ஆறாவது குகையில் தடுமாற வழியில்லை. நமது பயணத்தின் நோக்கம் ஆறாவது குகைக்குச் செல்வதல்ல. ஆறாவது குகையை விட்டு வெளியேறுவதாகும்"
"ஆன்மாவைப் பற்றிக் கேட்டால் இந்தப் பிள்ளை ஏதோ குகையைப் பற்றிச் சொல்கிறதே?!" என்றார் ஒருவர்.
நசிகேதன் தொடர்ந்தான். "ஐம்புலன்களை அறிவோம். புலன்களை அறிய வைப்பது உணர்ச்சிகள். உணர்ச்சிகளே முதல் குகை. உணர்ச்சிகளை விட நுண்மையானவை உணர்வுகள். உணர்வுகளே அடுத்தக் குகை. உணர்வுகளை விட நுண்மையானது குணம். அதுவே மூன்றாவது குகை. குணத்தினும் நுண்மையானது, அப்பாற்பட்டது, மனம். அடுத்தக் குகை. மனதைக் கட்டும் அறிவோ, அதனினும் நுண்மையானது. அறிவே அடுத்தக் குகை.
மனித உயிரானது, பிறப்பிலிருந்து இறப்பு வரை உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் உயிரானது உலகாயதச் சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டுச் சுழல்கிறது. அவ்வப்போது தவறி விழுந்து மீண்டும் பயணத்தைத் தொடங்க நேரிடுகிறது.
அறிவுக்கும் அப்பாற்பட்டத் தன்னறிவு, ஆறாவது குகையாகும். அறிவு தன்னுடைய மனதை ஒழுங்கு செய்யும். தன்னறிவோ பிறருடைய மனதையும் ஒழுங்கு செய்யும் தன்மை கொண்டது. தன்னறிவு கண்டவர்கள் வெகு சிலரே. தன்னறிவைக் கண்ட உயிர், பிற குகைகளுக்குத் திரும்புவதில்லை.
மனிதன் இறக்குமுன் ஆறாவது குகைக்கு உயிரைச் செலுத்த வேண்டும். அனைத்து உயிர்களுமே தொடர்ந்து பயணிக்கின்றன என்றாலும், ஆறாவது குகையைக் கடந்த உயிருக்கு மட்டுமே, அடுத்தப் பயணத்தின் தெளிவு உண்டாகிறது. தன்னறிவை அறியாத உயிர்கள், ஆன்மாவை அறியாமலே பயணம் செய்ய நேரிடுகின்றன.
தன்னறிவுக் குகை வரையில், உயிரானது உடலென்னும் கூட்டுக்குள்ளேயே பயணம் செய்கிறது. உடலைப் பிரிந்ததும், உயிர் திடீரென்று பரந்த வெளியில் சிக்கியப் பறவை போலாகிறது. பறந்து பழகாத பறவையும் பறக்க அஞ்சும் பறவையும் கீழே விழும். உயிர்ப்பறவைக்குப் பறக்கும் பழக்கத்தைக் கொடுப்பது தன்னறிவு. தொடர்ந்து பயணிக்கவும், சேரவேண்டிய இலக்கைத் தேடிச் சேரத் தேவையான வலிமையையும் திடத்தையும், தருவது மேம்பட்டத் தன்னறிவு.
தன்னறிவுக்கு அப்பாற்பட்டது ஆன்மா. உடலெனும் கூட்டைவிட்டுப் பிரிந்த உயிர் ஆன்மாவுடன் கலந்துத் தனி ஆன்மாவாகிறது. ஆன்மாவையும் கடந்து நிற்பது, அனைத்து உயிர்களின் ஆன்மா அல்லது பேரான்மா. உயிரின் இலக்கு, பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை" என்றான்.
"பேரான்மாவா? அப்படியென்றால்?"
"பேரான்மா... ஒரு பேரலை போன்றது. பேரலை என்று தனியாக ஏதுமில்லை என்றறிவோம். பேரலை என்பதே சிற்றலைகளின் கூட்டாகும். வலுவானச் சிற்றலைகளை சேரச்சேர, பேரலை உருவாகிறது. வலுவானச் சிற்றலைகளின் சக்தி, பேரலையை உருவாக்குகிறது. வலுவடைந்த பேரலை, மற்றச் சிற்றலைகளை ஈர்த்து இன்னும் பெரிதாகிறது. பேரலையை வலியச் சேரும் வலுவான சிற்றலைகளினால், பேரலை இன்னும் பெரிதாகிப் பாறைகளையும் உடைத்தெறியும் சக்தியைப் பெருகிறது. பேரலையைச் சேராதச் சிற்றலைகள், நீராகவே ஒடுங்கி விடுகின்றன.
வலுவற்றச் சிற்றலைகளும் பேரலையைச் சேருகின்றன. வலுவற்றச் சிற்றலைகள், பேரலையின் வலுவைக் குறைக்கின்றன. பேரலையும் அடங்கிவிடுகிறது. சிற்றலையின் நோக்கம் பேரலையுடன் சேர்வதே. சிற்றலையின் சக்தி, பேரலையினால் புலனாகிறது, எனினும் சிற்றலையின்றிப் பேரலையை அறியவே முடியாது.
ஆன்மாவின் இலக்கு, பேரான்மாவுடன் இணைவதே. பற்றறுத்து, நல்லொழுக்கத்துடன் தன்னையறிந்த ஆன்மா, சக்தி வாய்ந்தது. சக்தி வாய்ந்த ஆன்மா, பேரான்மாவை எளிதாகச் சேர்கிறது. வலுவானச் சிற்றலை பேரலையுடன் இணைவது போலவே. அவ்வாறு சக்தி வாய்ந்த ஆன்மாக்களின் கூட்டணியில் உருவாகும் பேரான்மா, பெருஞ்சக்தி பெறுகிறது.
தன்னையறியாத ஆன்மாக்கள் பேரான்மாவுடன் இணைய முயன்று தோற்கின்றன. இணைந்தாலும் பேரான்மாவின் வலிமையைக் குறைத்து விடுகின்றன" என்றான்.
"பேரான்மாவுடன் இணைந்த உயிருக்குப் பிறப்பில்லையா?"
"இறப்பும் பிறப்பும் விபத்துக்கள். ஒரு பானைக்குள் அடைபட்டக் காற்றுப் போன்றது பிறப்பு. பானையைக் குயந்ததும் காற்று உட்சென்றதா? காற்றைச் சுற்றிப் பானை உருவானதா?
பானை உடைந்ததும் காற்று தன் இயல்பான நிலையில் கலந்தது போலவே, உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தன் இயல்பான நிலையில் கலக்கிறது. பானை உடைந்து போனதே என்று வருந்துவதில் பயனே இல்லை. உள்ளிருந்த காற்று தன் இயல்பு நிலைக்குச் சென்றதை எண்ணி அமைதியடைவதே முறை.
பானைக்குள் புகுந்த காற்று வெளிப்படக் காத்திருப்பது போலவே உயிரும் தன் இயல்பு நிலையில் சேரக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பை எண்ணி வருந்துகிறோம்.
கூட்டுக்குள் சிக்கிய உயிர், பேரான்மா எனும் பெரும் சக்தியின் அம்சம். அதை உணர்ந்தால் கூட்டின் மேன்மையை உணர முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை நெறிகளை அறிய முடியும். வாழ்க்கை நெறிகளை அறிந்து கொண்டால் பற்றறுத்து, பேராசையொழித்து, தீக்குணம் தவிர்த்து நல்வழியில் வாழ முடியும். கூடு கலைந்த பின் சக்தியும் தொலையும் என்பதை உணர்ந்தால், கூட்டையும் உடன் வந்த சக்தியையும் தனக்கும் பிறருக்கும் பலனளிக்கும் விதத்தில் பாதுகாக்க முடியும்" என்றான்.
"எனில், சொர்க்கம் நரகம் ஏதும் உண்டா? அல்லது அதற்கும் சட்டி, பானை என்று ஏதாவது சொல்லப் போகிறாயா?" என்றார் ஒரு ஞானி.
"சொர்க்கம், நரகம் உண்டு. உண்மை. ஆனால் அவை இடங்களல்ல. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே, உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது.
ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தோம். பேரான்மாவுடன் இணைவதே ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளாகும். தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா? அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது.
ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது.
அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது.
உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். நற்குணங்களைப் பேணாது தன்னறிவை மறந்து உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கிவிடுகின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க முற்படுகின்றன"
"அப்படியெனில் ஆன்மாவின் தன்மை தான் என்ன?"
"காலையில் கதிரவன் கிழக்கிலே தோன்றி மாலையில் மேற்கே மறைகிறான் என்கிறோம். சூரியன் ஒளிப்பிழம்பு, அக்கினிக் குழம்பு என்கிறோம். அப்படிப்பட்ட அக்கினிக்குழம்பு தினமும் தோன்றி மறையக்கூடியதா? சிந்திப்போம். உலகத்தையே ஒளிமயமாக்கும் ஒளிப்பிழம்பு தோன்றி மறைவதல்ல. சூரியன் தோன்றுவதும் இல்லை. மறைவதும் இல்லை. இருப்பினும் பூமியின் நடைமுறை வாழ்க்கைக்கு, இவற்றின் தோற்றமும் மறைவும் அவசியமாகின்றன. சூரியன் தோன்றாவிட்டால், சக்தி குன்றி ஆக்க சாதனமற்றுப் போகிறது. மறையாவிட்டால், சக்தி மேம்பட்டு அதுவே அழிவுச் சாதனமாகிறது.
பேரான்மா என்பது, சூரியனைப் போல அபரிமித ஒளிப்பிழம்பு, சக்திக்கூட்டு. பேரான்மா தனித்திருந்தால் ஒரு பயனும் இல்லை. பூமியின் கண்களுக்குச் சூரியன் தோன்றி மறைவது போலவே, மனிதத்தின் கண்களுக்கு பேரான்மா தோன்றி மறைகிறது. பேரான்மா உயிர்ப்பயணம் மேற்கொள்கிறது. பூமியின் வளர்ச்சிக்கு சூரிய தோற்றமும் மறைவும் அவசியம்; அது போலப் பேரான்மா, ஆன்மாவாகி வந்து போனால்தான் மனிதம் வளர முடியும்.
உலகில் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே நமக்காக ஏற்பட்டவை. நம் அறிவு வளர உருவானவை. மனிதநேயம் வளரத் தோன்றியவை. படிப்பினைகளும் பாடங்களும் நிறைந்தவை. உலகம் பிறந்ததும், ஓடும் நதிகளும் காற்றின் ஒலிகளும் கடலின் அலைகளும் நமக்கானப் பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கேட்கும் நாளில், கேட்டுச் செயல்படும் நாளில், மனிதம் சிறப்படையும். நாம் உய்வோம். அது புரியாமல் தீக்குணங்களிலும், கண்மூடித்தனங்களிலும், அறியாமையிலும் உழன்றால் மேம்பாட்டைக் காணாது உய்யும் வழியினின்று வெகு தூரம் விலகிச் செல்வோம்" என்றான்.
அவையின் அமைதி, பேரொலியை விடச் சக்தி வாய்ந்ததாக இருந்தது. நசிகேதன் சொன்னவை அவையோர் மனதிலே பதியத் தொடங்கியது.
தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்த நசிகேதன் எழுந்தான். "என் வணக்கத்துக்குரியவர்களே! அன்புக்குரியவர்களே! எனதருமைத் தந்தையே! எழுமின்! அறிவுக்கண் திறந்து எழுந்திருங்கள். விழிமின்! என்றைக்கும் அறியாமையைக் கண்டு விலக விழிப்புடன் இருங்கள்! பளபளக்கும் வாளின் முனையைப் போன்றது நமது வாழ்வு. அறிவு மழுங்கியவர்களைப் போல விதியை நம்பி வீணாகாமல், நன்னெறிகளைப் பேணும் மேன்மையானவர்களைப் போல் சிறப்பாக வாழ்வோமாக!" என்று சொல்லி முடித்தான்.
தன் தந்தையையும் அவையோரையும் விழுந்து வணங்கினான். எழுந்து, "அன்புக்குரியவர்களே! என் ஆசானிடம் நான் பெற்றதை உங்களிடம் சேர்த்து விட்டேன்" என்றான்.
அவையிலே அமைதி மறைந்து பெருத்த ஆரவாரம் எழுந்தது. தங்கள் முன் நின்ற இளையவன் அறிவிலே அவர்கள் அனைவருக்கும் முதியவன் என்று உணர்ந்து நசிகேதனை வாழ்த்தினார்கள்.
வாசன் எழுந்தான். "மகனே நசிகேதா! நீயே எங்களுக்கு ஆசான். எமனிடம் பெற்ற அறிவெனும் ஒளிமழையை எம்மேலும் பொழிந்தாய். நன்றி" என்றான்.
"ஆம் ஐயா!" என்றனர் அவையோர். "அப்படியெனின்ல் முக்தி என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது? இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். ►
10 கருத்துகள்:
இந்த பாடலில் மட்டும் முதிர்ந்த எழுத்தின் நடைத்தெரியவில்லை. சிறிய படபடப்புத் தெரிகிறது. "நான்கு வரிப்பாடலுக்கு இவ்வலவுப்பெரிய பொருளா?" ஒரு வார்த்தையைக் கொடுத்து வாக்கியத்திலமைத்துச் செல்வதுப் போல வ் ஆ நசி புத்திரா என்று மனம் கேட்பதுப்போலுல்லது.
கூட்டத்தின் புலுக்கத்தில் பயம் பொரித்தட்டியிருக்குமோ சந்துரு சார்.
முளைத்து நல்முறையில் வளர்ந்து செழிப்பது மட்டுமே பயிரின் கடமை. விதையின் உரிமை பயிருக்கு இல்லை. அதுபோல் நல்முறையில் வளர்ந்து, மனித நேயத்தில் செழித்து, தன்னையறிந்து நடப்பதே நமது கடமையாகும்.
சிறப்பான சிந்திக்கத் தக்க வரிகள்...
உங்கள் மூலம் நசிகேசன் சிறப்பாகவே பேசுகிறான்
தொடர்ந்து பேச அனுமதிக்கவும்
பகிர்வுக்கு நன்றி
தொடர வேண்டுகிறேன்
நன்றி இராஜராஜேஸ்வரி, Ramani,...
வழக்கம் போல காவிகளை சாடியிருக்கிறீர்கள். உண்மையிலேயே கடோவில் இப்படி உள்ளதா அல்லது இது உங்களுடைய கருத்தா என்று தெரியவில்லை! காவிகளில் நல்லவர்களும் உள்ளார்கள் ஐயா! இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது தான் நிதர்சனம். தாடிகளின் அட்டூழியம் நீங்கள் இருக்கும் இடத்தில் தெரிய வாய்ப்பு இல்லை தான். நேரில் அனுபவப்பட்டதனால் கூறுகிறேன். அதனால் தானோ கெட்டவர்கள் அனைவருமே காவிகள் என்று பொருள்பட கூறுகிறீர்களோ! Everyone is entitled to an opinion and I respect your right to have yours.
ரொம்ப நாட்களாகவே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆன்மா, பேரான்மா என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள். இதில் எமன் என்பவன் யார்? எமன் ஆன்மாவா, பேரான்மாவா? அல்லது எமனுக்கு ஆன்மாவே கிடையாதா? எமன் ஆசான் என்றால் எமனுக்கு ஆசான் யார்?
வெண்பாவில் வார்த்தை பிரயோகம் அற்புதமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
வருக expatguru. கருத்துக்கு நன்றி.
காவிகள் என்று வரும் இடங்களில் தாடிகள் என்று படித்துக் கொள்ளுங்களேன்?
முப்பதாண்டுகளுக்கு முந்தைய அறிமுகம் என்றாலும் கடோவைப் பத்து ஆண்டுகள் போல் தீவிரமாகப் படித்து வருகிறேன். இன்னும் புரியவில்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு வருடமும் படிக்கும் பொழுது புதிதாக ஏதாவது பொருளோ ஐயமோ தோன்றுகிறது. எனக்குப் புரிந்ததாகப் பட்டதை என் நம்பிக்கைகளின் extrapolationஆக இதை எழுதிவருகிறேன். அவ்வளவுதான். இதில் யாரைச் சாடி என்ன பயன்? பற்றறுப்பை ஒருதலையாகப் பேசும் பொய்யர்களை நான் சாடி என்ன பயன்? காவி என்றாலோ தாடி என்றாலோ பேதஜோதியில் கலந்து நானும் பொய்யனாவேனே? சாடுவதையே விட்டொழிக்கத்தான் இதை எழுதுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் :)
காவி தாவி மோடி தாடி அங்கி லுங்கி.. எல்லாமே புற அடையாளங்கள். அக அடையாளம் பற்றியல்லவா இரண்டு வருடங்களாக சொல்லி வருகிறேன்? (என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் :). நசிகேதன் கதை அகத்தைக் காணும் ஒரு பயணம். அகத்தில் காவி தாடி இல்லை.. அல்லது எல்லாமே ஒன்று தான். அகத்திலும் பேதம் பார்ப்பது அறியாமை என்று நம்புகிறேன்.
எல்லோரும் பிறப்பால் ஓரினமே. இறப்பால் ஈரினம் எனலாம்: அறிவுள்ள இனம், அறிவற்ற இனம்.
இறக்கும் பொழுது (தன்னை) அறிந்தவராக இறக்கிறோமா, அறியாதவராக இறக்கிறோமா? அது தான் கேள்வி.
மனிதத்தை அறியவொட்டாமல் இருப்பதும் தடுப்பதும் அறிவற்றவர் வேலை. இதில் தாடி என்ன காவி என்ன? தன்னை நம்பினாலும் சரி, காவியை.. க்குக்கும் தாடியை.. நம்பினாலும் சரி, இந்தக் கேள்வியைப் புறக்கணிக்கும் அத்தனை பேரிலும் தாடி காவி அங்கி லுங்கி இன்னபிற உண்டு என்று நினைக்கிறேன்.
காவிகளைச் சாடவில்லை. எவரையும் சாடவில்லை. எவரையும் சாடும் தகுதி எனக்குச் சிறிதும் இல்லை. சாடும் எண்ணமிருந்தால் காவிகளின் பேச்சைக் கேட்டு கண்மூடும் என் போன்ற அறிவற்றக் கூட்டத்தைச் சாடுவேன். அதற்கும் எனக்குத் தகுதியில்லாததால் கருத்தை முன்வைப்பதோடு சரி.
காவிகளைக் கெட்டவர்கள் என்று judgmentalஆக எங்கே குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள், திருத்திவிடுகிறேன். படிக்கும் பொழுது காவிகளோ தாடிகளோ கெட்டவர்கள் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் உருவானால் அது ஒரு வகை வெற்றி என்று தோன்றுகிறது. கவனமாக இருக்க வேண்டும் :)
நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை, ஒரே ஒரு வாய்ப்பை - 'ஒரே ஒரு வாய்ப்பு' என்பதில் மறைந்திருக்கும் மகத்துவம், my goodness, கோடியில் ஒருவருக்குக் கூடப் புரியாமல் போவது எத்தனை கொடுமை என்று நினைத்துப் பார்த்தால் இதன் தாக்கம் புரியும் - அப்படிப்பட்ட ஒரே ஒரு வாய்ப்பை மறந்து வாழ்நாள் முழுதும் அறியாமையில் மூழ்கியிருப்பது வறுமையிலும் பிணியிலும் கொடுமை இல்லையா? அப்படி மூழ்கியிருப்போரை மூழ்கியே இருக்க வைப்பது இன்னும் கொடுமையில்லையா? அப்படிச் செய்வோர் காவிகளாயிருந்தாலென்ன தாடிகளாயிருந்தாலென்ன நானாகவிருந்தாலென்ன நீங்களாகவிருந்தாலென்ன?
கடோவில் இந்தக் கருத்துக்கள் உள்ளதா இல்லையா என்பதைப் படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும் :) if it matters, தமிழில் எழுதியுள்ள செய்யுட்களுக்கு கடோவில் வேர் உண்டு. ஒரு சொல் விடாமல், அத்தனை விளக்கங்களுக்கும் விளக்கம் தொட்ட உரையாடல்களுக்கும் நானே பொறுப்பு. கடோவில் செங்கல் அடுக்கிய ஹோமகுண்டம் அக்னிஹோத்திரம் யாகம் பிராமணம் விராட் புருஷம் என்று வருகிறது. நான் நற்குணங்களை செங்கல் என்கிறேன். உளத்தூய்மையை வேள்வி என்கிறேன். புருஷமாவது பிராமணமாவது என்கிறேன். மற்றபடி கடோவின் சாரத்தை தமிழில் கொடுத்திருக்கிறேன். இதுபற்றிய என் கருத்துக்களை முன்னுரையிலும் இடையுரையிலும் நிறைய எழுதியிருக்கிறேன். பின்னுரைக்கும் மிச்சம் வைத்திருக்கிறேன் :)
எமன் யார், எமனுக்கு ஆசான் யார் என்பதற்கு எனக்குப் பதில் தெரியாது. கடோ வசதியாக எமனைக் கடவுள் என்கிறது. மூச் பேச் கூடாத்.
எனினும், எமன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு மூன்றாம் பகுதியில் (இரண்டாம் பகுதியோ?) பதிலிருப்பதாக நினைக்கிறேன். எமனும் பேரலையின் அம்சம் என்பதே. இங்கே நசிகேதன் எனும் ஒரு விடாமுயற்சிச் சிற்றலையைத் தன்னுள் சேர்த்தப் பேரலை.
தொடர்ந்து படிப்பதற்கும் சிந்தனைகளைக் கிண்டுவதற்கும் நன்றி.
படித்து மலைத்து விட்டேன். பேரான்மாவின் தன்மையை விளக்கி இருக்கும் விதம் அருமை.
சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள் என்று அழகாய் சொல்லிவிட்டீர்கள். உங்கள் நசிகேத வெண்பாவின் மிக சிறந்த பதிவில் இதுவும் ஒன்று. முன்பு விளக்கமாக எழுதி இருந்ததை இந்த ஒரு பதிவில் இரத்தின சுருக்கமாய் தொகுத்து அழகாய் கொடுத்து விட்டீர்கள். மனம் பக்குவ படவேண்டும்.
அதற்காக இதை மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.
//மானிடம் இருவகைப்படும். ஒன்று அறிவுள்ள இனம். மற்றது அறிவற்ற இனம். நம்மில் வேறு பேதமேயில்லை.// மிகவும் சரி.
இதை படித்தபின் அவையோர் கேட்பது போல் நானும் கேட்கிறேன் இனி என்ன செய்ய வேண்டும். :) கண்மூடித்தனத்தை விட்டாலே போதும். ஆனால் அது எளிதல்ல இல்லையா. தவறு என்று வருந்தினால் மட்டும் போதாது, திருந்தவும் வேண்டும்.
பின்னூட்டத்திலும் உங்கள் கருத்து மிகவும் நன்று.
அருமையான விளக்கம், அப்பாதுரை. இதை தான் நான் எதிர்பார்த்தேன். உங்களை குற்றம் கூறும் எண்ணம் எனக்கு இல்லை, அந்த தகுதியும் எனக்கு இல்லை. ஒரு அருமையான தொடரை படிக்கும் போது என்னை போன்ற பாமரர்களுக்கு சிறிதளவும் ஐயம் ஏற்பட்டுவிட கூடாது இல்லையா? அதற்காக தான் அப்படி எழுதினேன். உதாரணத்திற்கு இந்த பதிவையே எடுத்து கொள்ளுங்களேன். "...தனக்குச் சொர்க்கம் கிடைக்குமென்று காவிகள் சொன்னக் கட்டுக்கதையை நம்பி...." என்ற வரியில் "சில காவிகள்" என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களது பிரமாதமான விளக்கம் பதிவை விட அழகாக இருந்தது.
புரிகிறது Expatguru. 'சில' என்று சேர்த்துவிட்டால் போகிறது.
மீண்டும் படித்தபோது தான் நெற்றியில் அடித்தது. இதுவரைக் கவனிக்காததற்கு மன்னிக்க வேண்டும். நான் 'காவி' என்று குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட மத இனத்தை என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது. இங்கேயும் தாடிகள் உண்டு. தாடி வைத்தக் காவி?
இந்த நினைவில் நான் தாடி வளர்க்கத் தொடங்கியிருக்கிறேன் :).
இது அப்பாதுரை எழுதுற சொந்தக் கடோபனிஷது திரு.Expatguru.
இருந்தாலும் செய்யுளெல்லாம் சூப்பர். பொறி பறக்கும் எடிடோடிரியல். நசிகேதன் நல்லா வாச்சான் உங்களுக்கு.
கருத்துரையிடுக