வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/02/24

புலனடக்கப் பயிற்சி


83
பறியின் பொறியுட் புறத்துந் திறக்குங்
கிறியை அறிய உறங்கு - செறிக்கப்
பொறியை உறியும் நெறியிற் சிறந்து
வறிதைத் துறந்து விளங்கு.

   டலின் ஐம்புலன்கள் அகத்தேயும் பார்க்க வல்லவை என்பதை உறங்கும் பொழுது அறிவீர். (இந்த உண்மையின் உட்பொருளை உணர்ந்து) மூச்சை இழுத்துப் புலன்களைக் கட்டும் யோகத்தில் தேர்ந்து, அறியாமையை ஒழித்து வாழ்வீர் (என்றான் நசிகேதன்).


பறி: உடல்
பொறி: உறுப்பு, புலன்
கிறி: மாயம், தந்திரம்
செறிக்க: அடக்க, அழிக்க (பொறியைச் செறிக்க)
உறியும்: உள்ளிழுக்கும் (இழுத்துக் கட்டும்)
வறிது: அறியாமை



    வையோரின் கேள்விகளைக் கவனமாகக் கேட்ட நசிகேதன் தொடர்ந்தான். "நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள். நம் உடலின் ஐந்து பொறிகளும் புற நுகர்ச்சியில் இயல்பாகவே ஈர்க்கப் படுகின்றன என்றேன். அதே புலன்கள் அக நுகர்ச்சியிலும் இயல்பாகவே செயல்பட வல்லவை. நாமறியாமலே நாள்தோறும் அக நுகர்ச்சியிலும் செயல்படுகின்றன. நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான அளவில் அவை இயல்பாகவே அடங்கி நடக்கின்றன"

"எங்களுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணும் மூக்கும் செவியும் வாயும் வேறு எதையோ நுகருமா, என்ன சொல்கிறீர்கள் இளஞ்சுடரே?" என்றார் அவையில் ஒருவர். "விளங்கவில்லையே?"

"உண்மை" என்ற நசிகேதன் புன்னகைத்தான். "நாம் எல்லோருமே உறங்கும் வழக்கம் உள்ளவர்கள். உறக்கம் நமக்கு இயற்கையாகவே வருகிறது. உறங்காதவர் உலகத்தில் இல்லை எனலாம். உறக்கம் உடலின் இயக்கத்துக்குத் தேவைப்படுகிறது அல்லவா?"

"ஆம்.. எனில்.."

"கேளுங்கள். உறங்கும் பொழுது நம் புலன்களின் நிலை என்ன? கண்களால் வெளிக்காட்சியைக் காண முடியாது. செவிகள் வெளி ஓசைகளைக் கேட்பதைத் தாமாகவே நிறுத்திக் கொள்கின்றன. புற நுகர்ச்சியில் ஈடுபடும் நாசி மூச்சை உள்ளிழுத்து விடுவதில் மட்டுமே குறிப்பாக இருக்கிறது. உரையாடல்களை மறந்த வாய் பேசாதடங்குகிறது. உடலின் உணர்வுகள் அடங்கி விடுகின்றன.

இதோ இந்த அறையிலே எண்ணற்ற வண்ணச் சித்திரங்கள் உள்ளன. ஆயிரம் வித மலர்களின் அலங்காரம் கண்ணையும் மனதையும் பறிக்கிறது. மலர்களின் மணம் நம்மை மயக்குகிறது. மேலும் அரச விருந்தின் நறுமணம் நம்மைச் சுற்றி வருகிறது. பலவித உரையாடல்களில் திளைக்கிறோம். இதே அறையில் இந்தச் சூழலிலே சிறிது உறங்கினாலும் இவையெல்லாம் உடனே மறைந்து விடும் மாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இதே அறையில் இந்தக் கணத்தில் உறங்கும் ஒருவருக்கு இந்த நிறங்களும் மணங்களும் ஒலிகளும் எண்ணங்களும் தெரிவதில்லை. புரிவதில்லை. என்ன காரணம்? அவருடைய ஐம்பொறிகளும் அடங்கி அக நுகர்ச்சியில் ஈடுபடுவதால்.."

"புற நுகர்ச்சியை மறந்து ஒடுங்குவது புரிகிறது.. எனினும், புலன்கள் அக நுகர்ச்சியில் ஈடுபடுகின்றன என்பது சரியா?" என்றார் ஒரு அறிஞர்.

"..இங்கே உறங்கும் மனிதருக்குக் கனவு வருகிறது. கனவில் அவர் ஒரு அரசவைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இதே போன்ற அறை. இந்த அறை போலவே கனவறையில் வண்ண ஓவியங்களும், மலர்களும், அழகிய சிற்பங்களும் இருப்பதைப் பார்க்கிறார். ஓவியத்தில் இருக்கும் காட்சிகளைப் புரிந்து வியக்கிறார். மலர்களைத் தொட்டு நுகர்கிறார். மலரின் மென்மையை அவர் தொட்டு உணர்கிறார். மலரின் மணத்தை நுகர்ந்துத் திளைக்கிறார். எதிர்பாராமல் திடீரென்று வேகமாக ஓடிவரும் சில சிறுபிள்ளைகளுக்கு வழி விட்டு ஒதுங்குகிறார். ஒதுங்கும் பொழுது அருகிலிருந்தவர் மீது மோதி விழுகிறார். மோதிய வேகத்தில் தோளில் அடிபட்டு வலிக்கிறது. புலம்புகிறார். அதைக் கவனித்த சிறுபிள்ளை ஒன்று அவரை எழுப்பி மன்னிப்புக் கோருகிறது. அவர் மனமிறங்கிப் பிள்ளையைப் பார்த்து முறுவலித்து, அண்மையில் இருக்கும் இனிப்புத் தட்டிலிருந்து ஒரு பண்டத்தைப் பிள்ளைக்குக் கொடுத்துத் தானும் எடுத்து மெல்கிறார். நாவின் இனிமையில் வலியை மறக்கிறார்... இது சாத்தியமென்று நம்புகிறீர்களா?"

"ஆமாம்.. கனவில் எனக்கும் இது போல் தோன்றும்.. நேரில் நடப்பது போலவே உணர்வேன்.." என்றார் ஒருவர். அவையில் பலர் ஆமோதித்தனர். "பிள்ளை சொல்வது சரிதான்.. இத்தனை நாள் தெரியாமல் இருந்தேனே!" என்றார் ஒரு பாமரர். பலர் தங்கள் கனவில் நிகழ்ந்தவற்றை விவரிக்கத் தொடங்கினர்.

"அன்பர்களே, மேலும் சொல்கிறேன் கேளுங்கள். நம்முள் ஒருவர் இதே அறையில் இப்பொழுது உறங்கிக் கனவு கண்டு விழித்தால், எது கனவறை எது நனவறை என்ற குழப்பம் அவருக்கு உண்டாவதில்லை. காரணம், அவரது பொறிகள் புறவிழிப்பினால் சடுதியில் புற நுகர்ச்சியில் இறங்கிவிடுகின்றன."

"கனவுக்கும் புலனடக்கத்துக்கும் தன்னறிவுத் தேடலுக்கும் தொடர்பு உண்டா?" என்றார் ஒரு அறிஞர்.

நசிகேதன் அறிஞரை ஒரு முறை உற்றுப் பார்த்தான். இதென்ன.. என் ஆசான் போலவே தோன்றுகிறாரே? நான் கற்றதை முறையாக முழுதும் பகிர்ந்து கொள்கிறேனா என்று சோதிப்பது போலத் தோன்றுகிறதே? கேள்விகளால் என்னை வழி நடத்திச் செல்வது போல் தோன்றுகிறதே? 'எழுந்திரு! என்றும் விழித்திரு!' என்றாரே? 'கழுந்தராய் ஊழ்வினை என்று உழலாதே, உத்தமர்போல் வாழ்வினை நன்றென வாழ்' என்றாரே? அந்த அறிவை இவர்களுக்குப் புகட்டவே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறதா?

நசிகேதன் பலவாறு சிந்தித்தான். அறிஞரை நோக்கி வணங்கினான். "சொல்கிறேன்" என்றான். "புற நுகர்ச்சிகளைப் புரியவும் புரியவும் வைக்க இன்றியமையாதவை இரண்டு. முதலாவது மூச்சு. மூச்சு உள்ளவரை புற நுகர்ச்சிகளைப் புரிய முடியும். இரண்டாவது அறிவு. அறிவு உள்ளவரை நுகர்ச்சிகளின் பலனைப் புரிந்து கொள்ள முடியும்.

அக நுகர்ச்சிக்கும் இவையே காரணமாகின்றன. உறங்கும் நேரத்திலும் விழிக்கும் நேரத்திலும் இயங்குவதைப் போலவே, மூச்சும் அறிவும் அக நுகர்ச்சியிலும் இயங்க வல்லவை. உறங்கும் நேரத்து அக நுகர்ச்சி, நமக்கு ஒரு உதாரணம். ஒரு பயிற்சி. புலன்கள் அடங்க வல்லவை என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. உறக்கம் ஒருவித அக நுகர்ச்சி என்றாலும், அறியாமையை அகற்றும் உண்மையான அக நுகர்ச்சி அல்ல. உறங்கும் வேளையில் மூச்சும் அறிவும் நமக்கு பிறிதொரு நுகர்ச்சிக்கு வழி வகுப்பதைப் போலவே, விழிக்கும் வேளையிலும் அக நுகர்ச்சிக்கு வழிவகுக்க வல்லவை. இந்தத் திறனை நாம் இயல்பாகவே பெற்றிருந்தும், புற நுகர்ச்சியின் பலனால் துறந்து விடுகிறோம். புற நுகர்ச்சிகளே உண்மை என்று நம்பிப் பெரும் அறியாமையை வளர்த்து, இயல்பாக நமக்குக் கிடைத்த அறிவை ஒடுக்குகிறோம். ஒடுங்கிய அறிவு நாளடைவில் நலிந்து விடுகிறது.

என் இனிய நண்பர்களே! விழியுங்கள்! கண்களை நன்றாகத் திறந்து உங்கள் அகத்துள் பாருங்கள். புலநுகர்ச்சியின் மாயக்கட்டிலிருந்து விடுபட்டு எழுந்திருங்கள்! 'அகத்தின் ஒளியே அவம் ஓட்டும், அதை விடுத்து வெளியே சிவம் தேடல் வீண்' என்றார் என் ஆசான். தீவினைகளைத் தூண்டும் குணங்களை விரட்டியடிக்கும் ஒளியானது நம்முள்ளேயே இருக்கையில் அதை வெளியே தேடுவதினால் ஒரு பயனுமில்லை என்று பொருள். அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். அக நுகர்ச்சியைப் பழகுங்கள்"

"ஐயா.. தேர்ந்த அரசவை அமைச்சர் போலப் பேசுகிறீரே? புலனை எப்படிக் கட்டுவது.. என்ன வழி.. என்று சொல்லாமல் அக நுகர்ச்சி அக நுகர்ச்சி என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீரே? அதற்கான வழி உமக்குத் தெரியுமா தெரியாதா? உமது ஆசான் அதை விளக்கினாரா?" என்றுப் பொறுமையிழந்துக் கேட்டார் ஒருவர்.

"அக நுகர்ச்சிக்கான அடிப்படைக் கருவிகள் நம் அனைவரிலும் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்ற உண்மையை நன்றாகத் தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்ள வேண்டும். உறக்கம் ஒரு எடுத்துக்காட்டு. அதைச் சொல்லவே சற்று நிதானித்தேன். மன்னிக்கவும்" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "உறக்கத்துக்குத் தயாராவது போலவே புலன்கட்டுக்குத் தயாராக வேண்டும். கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்துக் கட்டிப் பழக வேண்டும். இந்த யோகமே தன்னறிவுத் தேடலுக்கான முதல் கட்டப் பயிற்சி. மூச்சையடக்கி புலனறிவைப் பெறவேண்டும். உறக்கத்தில் புலன்கள் கட்டுப்படுவதைப் போலவே நாளடைவில் இந்த யோகத்தினால் விழிப்பிலும் கட்டுப்படும். இது எளிதல்ல. தெளிவானக் குறிக்கோளுடன் ஆழ்ந்த, தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே அடைய முடியும்.

புலன்களைக் கட்டாது விட்டால் அவை, தறிகெட்டு ஓடும் புரவிகள் தேரை அழிப்பது போலவே நம்மை அழித்துவிடும். நம் புலன்கள் தேர்ப்புரவிகள். நம் உடல் தேராகும். நமது உள்ளமே கடிவாளம். நமது உயிர், தேரின் சக்கரங்கள். தன்னறிவு தேரோட்டி. நாமே, நமது ஆன்மாவே, தேரில் பயணம் செய்யும் வீரர். புரவிகளும் தேரும் வீரருக்கு அவசியம் என்பதை உணர்ந்து, தேரோட்டி தேரை ஒரு கட்டுக்குள் பாதையறிந்து செலுத்துவது போலவே தன்னறிவு நம்மைச் செம்மையானப் பாதையிலே செல்லப் பணிக்கிறது".

"தினமும் புலனடக்கிப் பயிற்சி செய்தால் தன்னறிவு பெற முடியுமா?"

"தன்னறிவுத் தேடலின் முதல் கட்டம், புலனடக்கப் பயிற்சி. அப்பயிற்சி உள்ளிருக்கும் ஒளியை வளர்க்கிறது. பெரும் அமைதியெனும் ஒளி வளர வளர, தீக்குணங்கள் ஒழிகின்றன. தன்னறிவு வளரத் தொடங்குகிறது. தீக்குணங்கள் ஒழிய ஒழிய, தன்னறிவு வளர வளர, பாவ புண்ணிய சொர்க்க நரகம் தொட்ட அறியாமைகள் இருக்க இடமில்லாமல் ஓடுகின்றன. நம் இயல்பை உணரத் தொடங்கிய நேரத்திலேயே பிறப்பு இறப்பு தொட்ட அச்சங்கள் விலகுகின்றன. ஆன்மாவை அறியத் தொடங்குகிறோம். ஆதலால் அன்பர்களே! எழுமின்! விழிமின்! அகவொளியை வளர்த்து அவங்களை அழிமின்! புலனடக்கும் பயிற்சியில் சிறந்து அறியாமைகள ஒழித்து வளமோடு வாழுங்கள்!".

அவையில் அமைதி. நசிகேதன் உரைத்தது உறைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் பொறுத்து மெல்லிய ஆரவாரம். "இறந்த பிறகு சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ போவதாகச் சொல்கிறார்களே? அந்த உண்மைகளை அறிந்தீரா? எனில் சொல்லுங்கள்" என்றார்கள் சிலர்.

5 கருத்துகள்:

meenakshi சொன்னது…

வெண்பா பிரமாதம்! இப்பொழுதான் படிக்க ஆரம்பித்தேன். மேலே தொடர முடியாமல் வெண்பாவையே மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். :)

பத்மநாபன் சொன்னது…

வலை வாய்ப்பு கிடைத்ததும் ஓடி வந்தேன் ...நான்காம் பகுதி உண்மையில் மிக ஆழங்களுக்கு எளிதாக செல்கிறது ...வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மேலும் மெருகு கூடி வருகிறது .. பொறி நெறி செறி வறியோடு கூடவே அறியா வார்த்தைகள் பறி கிறி யும் சேர்ந்து வெண்பா புதிய வண்ணத்தை பெறுகிறது .... புற நோக்கோடு ஐம்புலன்கள் அகநோக்கும் இயல்பாகவே கொண்டுள்ளது எனும் நசிகேதனின் விளக்கம் பல சிந்தனைகளை புரட்டி போடுகிறது ... பலதடவை படிக்க எடுத்து நன்றியோடு ஒட்டிக்கொண்டுள்ளேன் ..

middleclassmadhavi சொன்னது…

எனக்குப் பிடித்த தளமாக உங்கள் வலைப்பூவுக்கு 'லீப்ஸ்டர்' விருதை அறிவித்து மகிழ்கிறேன். சுட்டி இதோ: http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html

geetha santhanam சொன்னது…

வாழ்க வெண்பா வேந்தன். இந்தப் பகுதியில் விளக்கத்தைவிடப் பாவின் நயம் மேலோங்கி இருக்கு. வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

தட தட தட தடவென தாவிப் பாய்கிறது வெண்பா
அருமை.
வெண்பாவை மட்டும் தான் படித்திருக்கிறேன். விளக்கவுரை படிக்க நேரமில்லை.
நேரமும் ஓசிக் கணினியும் கிடைத்தால் மீண்டும் வருவேன்