வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/02/17

சொர்க்கத்தின் திறவுகோல்


82
பிறப்பிற் திறக்கும் புறத்தே தறிக்கும்
உறக்கம் வரைக்கும் உறுப்பு - புறத்தே
கறங்குங் கரண மிறுக்குந் துறவே
துறக்கந் திறக்குந் துறப்பு.

   பிறந்தக் கணத்தில் இயங்கத் தொடங்கும் புலன்கள், இறக்கும் வரையிலும் புறத்தையே இயல்பாக நாடுகின்றன. அத்தகையப் புறச் சுழற்சியினின்று மனதை விடுவிக்கும் ஒழுக்க நெறியே சொர்க்கம் எனும் பேரின்பத்தின் திறவுகோல் (என்றான் நசிகேதன்).


தறிக்கும்: நிலையின்றித் தாவும்
உறக்கம்: மரணம்
உறுப்பு: ஐம்பொறிக்கு ஆகி வந்தது
கறங்கும்: சுழலும்
கரணம்: மனம்
இறுக்கும்: நிலைப்படுத்திக் கட்டும்
துறக்கம்: சொர்க்கம்
துறப்பு: திறவுகோல்



    சிகேதன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் எழுந்து, "உள்தூய்மையை வளர்ப்பது எது, வளர்க்க விடாமல் தடுப்பது எது?" என்றார்.

அவையிலிருந்த இன்னொருவர் குறுக்கிட்டு, "அதான் அழகாகச் சொன்னாரே ஐயா. உள்தூய்மையை வளர விடாமல் தடுப்பவை நம் புலன்கள் என்று, கவனிக்கவில்லையா?" என்றார். பிறகு நசிகேதனிடம், "இளஞ்சுடரே! அப்படியெனில் உள்தூய்மையை வளர்ப்பது எது?" என்றார்.

நசிகேதன் புன்னகையுடன், "புலன்கள் தான்!" என்றான்.

அதைக் கேட்டதும். "ஆ! என்ன இது! சில காவிகளைப் போலவே கணத்துக்கு ஒன்று சொல்லிக் குழப்புகிறீரே ஐயா?" என்றார் மற்றொருவர்.

நசிகேதன் அமைதியாக, "விளக்கிச் சொல்ல முயல்கிறேன்" என்றபடி அவையைச் சுற்றி இன்னொரு நோட்டமிட்டான். பிறகு குரலைச் சற்றே உயர்த்திப் பேசத் தொடங்கினான். "அன்பு உள்ளங்களே! உள்தூய்மையே முக்திக்கான நெறி என்றேன். முக்தியடையும் வழியென்றேன். உள்தூய்மை அடையவிடாமல் தடுப்பவை நம்முடைய புலன்கள் என்றேன். உள்தூய்மையை அடைய வழி செய்வதும் புலன்களே!

பிறந்த கணத்திலே மனிதரின் உடல் உறுப்புக்கள் இயங்கத் தொடங்குகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலங்களின் வழியாக மனமானது இயங்கத் தொடங்குகிறது. இயங்கத் தொடங்கிய அந்தக் கணத்திலேயே உள்தூய்மை மாசடையத் தொடங்குகிறது. மனிதன் வளர வளர உள்தூய்மை கெட்டழிந்து போகிறது.

பிறந்த கணத்திலிருந்து நம்முடைய செவியானது வெளிப்புற ஓசைகளையும் ஒலிகளையும் கேட்டு ஒரு புறம் தாவுகிறது. நாசியோ வெளிப்புற மணங்களால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து தேடுகிறது. கண்களோ புறக்காட்சிகளின் அற்புதத்திலோ அதிர்ச்சியிலோ சிக்கி வேறொரு திக்கிலே தொடர்கிறது. வாயானது இனிய உணவு வகைகளாலும் இன்மொழி வன்மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு இன்னொரு புறம் தறிகெட்டு ஓடுகிறது. மெய்யான உடலோ தொடல்களில் கிறங்கி இன்ப துன்பமென்று மற்றொரு திக்கிலே சுழல்கிறது. பிறந்த கணத்திலிருந்து வெளிப்புற இன்ப துன்ப உணர்ச்சிகளிலே சிக்கியப் புலன்கள், நாம் இறக்கும் வரையில் அதே நிலையில் தொடர்கின்றன.

இது இயல்பு. நம் புலன்கள் அமைக்கப்பட்டிருப்பது வெளியுலக, உலகாயத கவனத்தோடு செயல்படுவதற்காகவே. அதனால் அவை தமக்கு உணர்வு பிறந்த கணத்திலிருந்து நிலைகெட்டு அலையத் தொடங்குகின்றன".

“விசித்திரமாக இருக்கிறதே! மனிதராகப் பிறந்தவர்கள் உலகத்தை அனுபவிக்காமல் எல்லாவற்றையும் துறந்து ஒடுக்க வேண்டும் என்பது போல் பேசுகிறீரே ஐயா? பிறகு உலக அற்புதங்களினால் என்ன பலன்?”

“அற்புதங்களைத் தேடி அனுபவிக்கவே நம் புலன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றேன். உலகாயத் தேடல்களில் தவறே இல்லை. அதுவே நம் இயல்பு.”

“எனில்?”

“எனில், அத்தகையத் தேடல்களினால் நம்முள் இருக்கும் மனிதம் மேன்மையடைகிறதா, மாசடைகிறதா என்பதே நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி. மாசடைந்த மனம், பாவ புண்ணியங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. பாவ புண்ணிய அச்சத்தில் சிக்கித் தவிக்கிறது. மாசகன்ற மனமோ உலகாயத இயல்பிலும் பண்பட்டு நிற்கிறது. பாவ புண்ணிய அச்சங்கள் அதற்கில்லை.

எனது ஆசானான அறவரசன் இதை மிக அருமையாக விளக்கினார். நமது உடலை ஒரு தேர் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அந்தத் தேரில் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து புரவிகள் நம்முடைய ஐம்புலன்கள். தேரை இழுக்கும் ஐந்து புரவிகளும் தறி கெட்டு ஒவ்வொரு திக்கிலும் ஓடுவது இயற்கையல்லவா?" என்றான்.

"அதெப்படி? தேரோட்டியிருக்கும் பொழுது புரவிகள் ஒரே பாதையில் ஒழுங்காகப் பயணம் செய்யுமே?"

"மிகச்சரி. திக்குத் தெரியாமல் திசைக்கொருவராகத் தேரை இழுத்து நாசமாக்கக்கூடிய அதே புரவிகள், தேரை நேர்த்தியாக நேர்ப்பாதையிலும் கொண்டு செல்ல வல்லவை. அதைப் போலவே நமது ஐம்புலன்களும் நம்மைச் சரியான திசையில் இழுத்துச் செல்ல வல்லவை"

"ஐயா.. நம் உடல் தேர் என்றீர்கள், புரிகிறது. நம் புலன்கள் புரவிகள் என்றீர், புரிகிறது. தேரோட்டி யார்?"

"சொல்கிறேன். என் ஆசான் சொன்னது என் நினைவில் நிற்கிறது. நம் ஆன்மா தேரில் பயணம் செய்யும் வீரரைப் போன்றது. தேரில் பயணம் வீரருக்கு ஒரு இலக்கு இருப்பதைப் போலவே ஆன்மாவுக்கு ஒரு இலக்கு உண்டு. ஆன்மாவின் இலக்கைப் பிறகு விளக்குகிறேன். முதலில் தேரோட்டியை அறிமுகம் செய்து கொள்வோம். தன்னறிவே தேரோட்டி. தன்னறிவே புலன்களைக் கட்டி ஆன்மாவை சரியான பாதையிலே செலுத்த வழிசெய்கிறது. அந்தத் தன்னறிவைப் பெறுவதே நான் முன்பு சொன்ன வேள்வி. அத்தகையத் தன்னறிவை வளர்க்கும் உள்தூய்மையே நான் முன்பு சொன்ன வேள்வித்தீ.

வெளியுலக நுகர்ச்சிகளில் சிக்கியப் புலன்களால் கட்டுண்ட மனம், இயல்பாகவே அந்நுகர்ச்சிகளின் இன்பங்களைத் தக்கவைக்க விரும்புகிறது. அதனால் ஆசை, கோபம், களவு, பொய் எனும் தீக்குணங்களை விதைத்து வளரச் செய்கிறது. இத்தீக்குணங்கள், உள்தூய்மையை அரித்துக் கெடுத்து அழித்து விடுகின்றன. இறக்கும் வரையிலும் இந்த அழிவு தொடர்கிறது.

புறந்தழுவியப் புலன்களைக் கட்டி அகம் தழுவ வைக்கும் ஒழுக்கமே, உள்தூய்மையை வளர்க்கும் நெறியாகும். இந்த நெறியை அறிவதே அரிது. அறிந்து செயல்படுத்துவது இன்னும் அரிது. ஐம்புலன்களின் புறச்சுழற்சியில் சிக்கிய மனம், ஐம்புலன்கள் அடங்கிச் சீரான பாதையிலே இயங்கும் பொழுது தூய்மையடையத் தொடங்குகிறது. நாளடைவில் தூய்மை பெருகத் தொடங்குகிறது. தன்னறிவு பெறும் நிலையடைகிறது. ஐம்புலன்களைக் கட்டி மனதைத் தன்னறிவுப் பாதையிலே அழைத்துச் செல்லும் இத்தகைய ஒழுக்கமே, துறவே, சொர்க்கம் எனும் பேரின்ப நிலையின் திறவுகோலாகும்” என்றான்.

“புலன்களைக் கட்டினால் தன்னறிவைப் பெறலாம் என்கிறாயா?”

“இல்லை. புலன்களைக் கட்டினால் தன்னறிவுப் பாதையிலே செல்லலாம். புலன்களுக்கு அப்பாற்பட்டது தன்னறிவு. தீவிர யோகத்தினால் மட்டுமே தன்னறிவைப் பெற முடியும். புலன்களை கட்டுவதே மிகவும் கடினம். புலன்களைக் கட்டித் தீவிர யோகத்தினால் தன்னறிவைப் பெறுவது இன்னும் கடினம். தன்னறிவு பெற்ற நிலையில், சொர்க்கம் ஒரு பொருட்டேயல்ல. அந்த நிலையே பேரின்பத்தின் திறவுகோலாகும்”

அவையோர் நசிகேதன் பேச்சைக் கவனமாகக் கேட்டனர். “ஐயா, புலன்களைக் கட்டினால் தன்னறிவு பெறலாம் என்றீர்கள். தன்னறிவு சொர்க்கத்தின் திறவுகோல் என்றீர்கள். ஆனால் தன்னறிவைப் பெறத் தீவிர யோகம் செய்ய வேண்டுமா? அது என்ன என்று விளக்கிச் சொல்லுங்கள்” என்றனர்.

22 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மாசகன்ற மனமோ உலகாயத இயல்பிலும் பண்பட்டு நிற்கிறது. பாவ புண்ணிய அச்சங்கள் அதற்கில்லை.

அழகான விளக்கம்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தேரை நேர்த்தியாக நேர்ப்பாதையிலும் கொண்டு செல்ல வல்லபுரவிகளைப் போலவே நமது ஐம்புலன்களும் நம்மைச் சரியான திசையில் இழுத்துச் செல்ல வல்லவை".

கீதையில் கண்ணன்
நீயே உனக்கு நண்பன் என்றாரோ!

Madhavan Srinivasagopalan சொன்னது…

Good post. .Thanks

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து..

meenakshi சொன்னது…

இது என்ன tongue twister வெண்பாவா! கடைசி இரண்டு வரிகள் படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. :)

//தேடல்களினால் நம்முள் இருக்கும் மனிதம் மேன்மையடைகிறதா, மாசடைகிறதா என்பதே நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி.//
Superb!

நல்ல பதிவு.

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே! ஐம்புலங்களில் கண்ணும்,வாயும் மூடமுடியும்.செவியும்,மூக்கும், தொடு உணர்வும் மூடமுடியாது.வெளி உலகத்திலிருந்து தூங்கும் போதும் பாதுகாப்பு மனித உயிருக்கு வேண்டும் என்பதால் இயற்கை கொடுத்த வரம் அது.சிசுவாக இருக்கும் பொதே பிறப்பதற்கு முன்பே இவை செயல் படுகின்றன.பிரகலாதனும்,அபிமன்யுவும் தாயின் வயிற்றில் இருக்கும் போதே கற்றுக்கொண்டவர்கள் என்பது புராணம்.புராண காலத்திலேயே இந்த அறிவு இருந்து இருக்கிறது. ---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

தொடர்ந்து படிப்பதற்கு நன்றி இராஜராஜேஸ்வரி, Madhavan Srinivasagopalan, meenakshi, kashyapan,...

அப்பாதுரை சொன்னது…

உணர்வுகளைத் தன்னிச்சையாக மூட (அடக்க) முடியும் என்று லேசாக நம்புகிறேன் காஸ்யபன். நசிகேத உரையின் கடைசிப் பாடலில் இதைச் சொல்லப் போகிறேன். 'சமாதி' என்பதைப் பற்றி கடோபனிஷதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமாதியின் விளக்கங்களையும் 'சமாதி'யான சிலரைப் பற்றியும் படித்தேன். உணர்வுகளை அறிவின் நிலைக்குக் கொண்டு வரும் பொழுது பொறிகள் எதையும் உணர்வதில்லை. இந்த alignmentக்குப் பெயர் சமாதி - இது என்னுடைய over simplified definition. அந்த நிலையில் மனிதன் தன் உயிரை அறிய முடியும் என்று படித்த போது கொஞ்சம் பிரமித்தேன் தீவிரப் பயிற்சியினால் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது. உயிரைத் தேவைப்பட்ட போது ஒடுக்கிக் கொள்ளும் சாத்தியம் கொஞ்சம் சிலிர்ப்பூட்டுகிறது.

ஐம்பொறிகளின் இயக்கத்தை அறிய வைப்பது அறிவு. அந்த அறிவு இல்லாமல் உணர முடியாது. சிசுவுக்கு அந்த உணர்வுகள் பெறச் சாத்தியம் மிக மிகக் குறைவு. இருபது வாரங்களில் கருவின் செவிகள் இயங்கத் தொடங்குகின்றன. கருப்பைத் திரவங்களின் கொள கொள ஒலியைக் கேட்க முடியும். வளர வளர வெளிச் சப்தங்கள் சிலவற்றைக் கேட்க முடியும். சிலவற்றை மட்டுமே. அடைபட்ட இடத்தில் ஒலிகள் ஊடுறுவும் சாத்தியம் மிகக் குறைவு. மூச்சு விடவோ, வாய் பேசவோ சிசு வெளியே வரும் வரை இயலாது. தொடல்களுக்கு கருப்பையில் வாய்ப்பே இல்லை. கருப்பையின் இருட்டில் எதையும் பார்க்க இயலாது. கருக்காலத்தின் கடைசி பத்து வாரங்களில் கணிசமான ஒளி கருப்பைக்குள் வரச் சாத்தியமிருப்பதால் அந்த நேரத்தில் சிசுவினால் பார்க்க இயலும் என்றாலும் என்ன பார்க்கிறோம் என்று புரியும் அறிவு கிடையாது. ஆக, செவியைத் தவிர சிசுவினால் ஒரு பொறியையும் அதிகம் உபயோகிக்க இயலாது. உபயோகித்தாலும் அறிவு வளராத நிலையில் உபயோகத்தின் பலன் புரியாது. இந்த நிலையில் கதை சொன்னான், பாட்டு கேட்டான், வேதம் கேட்டான் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் கப்சா. புராண கப்சாக்கள் படிக்கும் பொழுது சுவையாக இருக்கிறது. சூபர்மேன் கதை போல, அவ்வளவு தான்.

(உங்கள் பின்னூட்டத்தின் நோக்கம் புரிந்தது :)

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! ஐம்புலங்களை உணரவைப்பது அறிவு என்பது சரிதானா என்று ஐயம் ஏற்படுகிறது. புலனுணர்வின் காரணமாகவே புலனறிவும் பின்னர் அதன் நீட்சியாக சிந்தனையும் உருவாகிறது என்று நம்புகிறேன்.. ஜெயா தொலைக்காட்சிக்கு நான் அளித்த நேர்காணலை U tube அதில் இது பற்றி உளறியிருக்கிறேன். மெலும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு உணர்வுக்கும்,அறிவுக்கும் உள்ள சங்கிலியை துலங்க வைக்க வேண்டும் என்று கருதுகிறேண்.சிரமம் இல்லை என்றால் நேர்காணலைப் பார்த்துவிட்டு என்னையும் நேர்படுத்துங்களேன். ---காஸ்யபன்

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே! U tube kashyapan interview என்பது லிங்க்---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

விடியோ இரண்டு பகுதிகளையும் பார்த்தேன். சரளமாகத் தமிழ்ப் பேசுவதை கேட்டதும் பிரமிப்பாக இருந்தது.
சிறுகதைகள் புத்தகமாக வந்திருந்தால் விவரம் கொடுங்கள் சார்.

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் சொல்வதே சரியாகவும் இருக்கலாம் காஸ்யபன் சார்.
அறிவு நிலையாக இல்லாவிட்டாலும் புலன்கள் இயங்கும். இயங்குவதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது என் கருத்து. இயங்குவதைப் புரிந்து கொண்டால் தான் உணர்வு. அறிவு இல்லையென்றால் புரிதலுமில்லை, உணர்வுமில்லை என்பது என் எண்ணம்.

சின்மயா தன் கடோ விளக்கத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்: கண்களுக்குப் பார்வை உண்டென்று தனியாகக் கழற்றி வைத்தால் அவை பார்த்துக் கொண்டிருக்குமா?

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! தலித் எழுத்து பற்றி,காதல் பற்றி ,கிருஷ்ணன் பற்றி நிறைய உளரியிருக்கிறேனே! அதுபற்றியும் கூறலாமே! ., ---காஸ்யபன்

bandhu சொன்னது…

இந்த பதிவுகள் நீங்கள் செய்திருக்கும் மகத்தான சேவை! மேலும் புகழ்ந்து 'சொரிபவனில் ஒருவனாக' (நன்றி, காஷ்யபன் சார்) இருக்க விரும்பவில்லை. மேலும் அது, தங்கள் பதிவுகளுக்கு வரும் செறிந்த பின்னூட்டங்களின் அழகை குலைக்கும்.
இருந்தாலும், நீங்கள் அறிந்ததை, உணர்ந்ததை, அற்புதமாக பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.. மௌனமாய் இனியும் தொடர்வேன்.
அதேபோல், குருடர்களை கை பிடித்து அழைத்து செல்வது போல், பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் மூலம் தெளிவு பிறப்பிக்க செய்யும் பத்மநாபன், மீனாக்ஷி, ராஜ ராஜேஸ்வரி, காஷ்யபன், ஸ்ரீ ராம், சிவகுமாரன், சாந்தினி ... அனைவருக்கும் நன்றி..

அப்பாதுரை சொன்னது…

ரொம்ப நன்றி bandhu. இங்கே எல்லாருமே ஒன்றாகத்தான் கற்றுக் கொள்கிறோம்; யாரோ 'மண்டபத்துல எழுதின'தை நான் எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன், அவ்வளவு தான்.

Expatguru சொன்னது…

சிந்தனையை தூண்டும் பதிவு, அப்பாதுரை. "சிசுவினால் ஒரு பொறியையும் அதிகம் உபயோகிக்க இயலாது. உபயோகித்தாலும் அறிவு வளராத நிலையில் உபயோகத்தின் பலன் புரியாது" என்று கூறுகிறீர்கள். 'அறிவு' என்பதற்கு பதிலாக 'மூளை' என்று நீங்கள் கூறியிருந்தால் அதை வரவேற்றிருப்பேன்.

சில விஷயங்களை so-called "முற்போக்கு" என்று கூறப்படுகிற மேற்கத்தீய விஞ்ஞான ரீதியாக பார்த்தால் விடை கிடைப்பது கடினமே. ("பகுத்தறிவு" என்று நம்மூர் திராவிட குஞ்சுகள் கூறிக்கொண்டு திரிவது போல). என்ன செய்வது, இன்றைய யுகத்தில் 'எதுவாக இருந்தாலும் அது விக்கிபீடியாவில் இல்லை என்றால் பொய்' என்று கூறும் அளவுக்கு நமது மனம் 'பக்குவப்பட்டிருக்கிறது(tuned).

நூற்றுக்கணக்கான பசுமாட்டு கும்பலில் தனது கன்றை மட்டும் எப்படி ஒரு தாய் பசு கண்டு கொள்கிறது? இது "பகுத்தறிவு" என்பதையும் தாண்டிய‌ விஷயம் அல்லவா? அதே போல, மின்சாரம் என்கிற விஷயத்தை யாருமே கண்களால் பார்த்ததில்லை. மின்சாரத்தினால் ஓடும் மோட்டர், மின்விசிறி, விளக்கு போன்றவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் மின்சாரமே இல்லை என்று கூறிவிட முடியுமா? மின்சாரம் என்பதே கப்ஸா என்று கூற முடியுமா?

வயிற்றில் வளரும் குழந்தை கண்டிப்பாகவே தாயின் சுக/துக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறது என்று மேற்கத்திய விஞ்ஞானிகளே ஏற்றுக்கொள்ள‌ ஆரம்பித்து விட்டனர் (என்ன செய்வது, வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்மூரில் மதிப்பு, இதையே நம் வீட்டு பாட்டி சொன்னால், கிழவி உளறுகிறாள் என்போம்). ஆகையால், 'கப்ஸா' என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. அதே போல, புலன்களை அடக்கி, கூடு விட்டு கூடு பாயும் வித்தையை நமது முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் நமது "பகுத்தறிவு" அதை ஏற்க மறுக்கிறது. என்ன செய்வது, ஆதி சங்கரர் காவி உடுத்தி விட்டாரே!

பதிவை விட பின்னோட்டம் நீளமாகி விட்டது, மன்னிக்கவும். மற்றபடி, அருமையான வெண்பாவுக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

வருக expatguru. சுவையான பின்னூட்டம். நன்றி.

சிசுவுக்கு மூளை உண்டு; அறிவு வளர்ச்சி தான் குறை என மறுபடியும் சொல்ல அனுமதியுங்கள். மூளை என்பது உறுப்பு - பிற உறுப்புகளைப் போலவே அந்தக் கட்டத்துக்கான வளர்ச்சியைப் பெறுகிறது. உணர்வுகளை வளர்த்துத் தேக்குவது அறிவு. கருவிலிருக்கும் சிசுவுக்கு அது கிடையாது, தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

பசுமாட்டை விடுங்க, ஒரு அம்மாவுக்கு பல ஆயிரம் குழந்தைகளில் தன் குழந்தையை எப்படி அடையாளம் தெரியும்? சிதம்பர ரகசியம் சொல்கிறேன். பழக்கம்.

பிறந்த குழந்தையை ஒரு முறை கூடக் காணாத தாயை நூறு பச்சிளம் குழந்தைகள் முன்னே விட்டு தன் குழந்தையை அடையாளம் சொல்லி அணைக்க முடியுமா? முடியாது. சிலவற்றை நாம் 'மகத்துவ'க் கண்ணோட்டத்தில் கண்டு பழகி நம் dnaவில் கலந்து விட்டது. என்ன செயவது!

தற்செயலின் மறுபக்கம் மகத்துவம். பார்வை மட்டும் அவரவருக்குச் சொந்தம்.

தவறாக எண்ணாதீர்கள். கருவிலிருக்கும் குழந்தை தன் தாயின் சுக/துக்கங்களை 'பகிர்ந்து' கொள்ளவே முடியாது. அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை நான் அறிந்ததில்லை. சுகம் துக்கம் என்றால் என்னவென்றே அறிய வாய்ப்பில்லாத நிலையில் அச்சிசுவை அப்படிப் பார்ப்பது நமக்கு என்னவோ பெருமையாக இருக்கலாம், சிசுவுக்கு இல்லை. வெளியே வரும் வரை சிசு is a lump of flesh with a heartbeat. சற்று குரூரமான பார்வை எனினும் உண்மைக்கு அண்மையென்று நம்புகிறேன். கருவில் இருக்கும் சிசுவுக்குக் கொடுக்கும் மகத்துவத்தை பெற்ற பிள்ளைக்குக் கொடுத்து மதிப்புடன் நடந்து கொண்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் :) கருவைச் சுமக்கும் தாய்க்குக் கொடுத்தால் இன்னும் மகத்தானதாக இருக்கும். கருவைச் சுமந்த காலத்தில் எத்தனை பெண்கள் தாங்கள் மதிப்புடன் அன்புடன் அதீத ஆதரவுடன் நடத்தப்பட்டதாகச் சொல்வார்கள்? நம் கலாசாரத்திலேயே இல்லையே? கருவான சில வாரங்களில் பிறந்த வீட்டுக்கு அல்லவா அனுப்புகிறோம்? இல்லாத மகத்துவத்தைப் பிடித்துக் கொண்டு அலைவதே நமக்கு வழக்கமாகிவிட்டது :)

நசிகேத வெண்பாவிலிருந்து வெளியே வந்துவிட்டேன் போலிருக்கிறது :) இதைப் பற்றியும் மின்சாரம் மற்றும் 'கண்ணுக்குப் புலனாகாத'வை பற்றியும் சங்கரர்கள் பற்றியும்.. எனக்கு எட்டியதை மூன்றாம் சுழியில் எழுத நினைத்திருக்கிறேன். அங்கே தொடர்வோமே?

பகுத்தறிவு எல்லாருக்கும் உண்டு (shockingly, சில மிருகங்கள் உட்பட). பொதுவில் வைக்கிறேன். பயன்படுத்துகிறோமா இல்லையா என்பதும் கூட அவரவர் விருப்பம்/முனைப்பைப் பொறுத்தது. பகுத்தறிவு என்பது மேற்கோளுக்குட்பட்டக் கேலிக்குரிய சொல்லானதன் காரணம் சில கடவுள் மறுப்புக்காரர்களின் அறிவின்மை. வருந்துகிறேன்.

அப்பாதுரை சொன்னது…

புலன்களைக் கட்டுவது சாத்தியம். கூடுவிட்டுப் பாய்வது வேறு விஷயம். இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கிறேன். சங்கரர் கூடுவிட்டுப் பாய்ந்தார் என்பதில் ஒரு சூட்சுமம் இருப்பதாக நினைக்கிறேன். இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? (கண்ணுக்குப் புலப்படாத மகத்தான சக்தியின் அருளால் கூடு விட்டுப் பாய்ந்தார் என்றால் ஒருவேளை க்க்க்க்ம்ம்ம்ம் போட வைக்கலாம் :) 'இலக்கணம் படிக்காதே கோவிந்தனைத் துதி' என்று சங்கரர் சொன்னதாகவே நாம் எடுத்துக்கொள்கிறோம். எல்லாவற்றிலும் சூட்சுமம் தேடிப் பழகியிருக்கும் நாம் அவர் சொன்னவற்றில் சூட்சுமம் தேடாதிருப்பது விந்தையாகத் தோன்றுகிறது. விடுங்கள், 'கூடுவிட்டுப் பாய்ந்தார்' என்பதே தவறான புரிதலாக இருக்குமோ என்று தோன்றுகிறது. எண்ண அலைகள் பயணிக்க முடியும் என்பது இன்றைக்கும் ஆச்சரியமான, இன்னும் தேடப்படுகிற, உண்மை. நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்னொரு வெண்பாவின் தலையங்கமாக இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களே இதை உங்கள் பின்னூட்டமொன்றில் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு பக்குவம் இல்லாததால் இதைப்பற்றி ஆணித்தரமாக எழுத முடியவில்லை, சாத்தியக்கூறு என்றே sidelinesல் நின்று கைதட்ட வேண்டியிருக்கிறது. நிச்சயமாக மூன்றாம் சுழியில் தொடர்வோம் :)

kashyapan சொன்னது…

அப்பதுரைஅவர்களே! expatguru வுக்கு எழுதிய விளக்கம் அருமையான ஒன்று.simply great!-------காஸ்யபன்...

ஸ்ரீராம். சொன்னது…

கருவிலிருக்கும் சிசுவை விடுவோம். பிறந்தபின் பகுத்தறியும் அறிவு வளர்ந்தபின் நடப்பதுதானே நம் நினைவில் நிற்கிறது? நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைப் பருவத்தில் எந்த நாள் வரை நினைவுக்குக் கொண்டுவர முடியும்?
கருப்பையிலிருந்து பிறக்கும்நாள் வருமுன்பு ஒரு விபத்தாக கை மட்டும் வெளியில் நீட்டிய குழந்தையை மறுபடி கருப்பைக்குள்ளே செலுத்த என்ன வழி என்று எல்லோரும் குழம்ப, ஒரு புகழ்பெற்ற மருத்துவர் 'சட்'டென சிகரெட்டைக் கொளுத்தி சிசுவின் கையில் வைத்ததும் அது கையை கருப்பையின் உள்ளே இழுத்துக் கொண்டது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

அப்பாதுரை சொன்னது…

வாங்க ஸ்ரீராம்.. எந்த டாக்டர்னு தெரிஞ்சா கொஞ்சம் ஒதுங்கி நிற்கலாம். அறிவு ஜோதி நம்மளை எரிச்சுடக் கூடாது பாருங்க.

விபத்தா எல்லாம் கை வராது. வந்தாலும் சிகரெட் சுட்டா உள்ளே இழுக்காது. உள்ளே இழுத்துக்கொள்ள கருப்பை என்ன ஜன்னலா?

கருப்பை ரொம்பப் பாதுகாப்பானது. நீரணை. அணை உடைந்தால் தான் சிசு வெளியே வர வாய்ப்பே உண்டு. அப்படி (அசம்பாவிதமா) வெளியே வந்தா வந்தது தான். திரும்ப உள்ளே போக முடியாது. நல்ல வேளை, இந்த செய்தியை நான் படிக்கவில்லை - படிச்சிருந்தா அன்றிலிருந்தே நொந்திருப்பேன் :) எவ்வளவு மோசமா ஜனங்களை ஏமாத்துறாங்கனு நினைக்குறப்போ நடுக்கமா இருக்கு.

இதையெல்லாம் நம்பமாட்டாங்கனு நம்புறேன் :)

ஸ்ரீராம். சொன்னது…

//"அறிவு ஜோதி நம்மளை எரிச்சுடக் கூடாது பாருங்க."//

:))))


பகிர்ந்ததில் பிழை...! அவசரம், மன்னிக்கவும். பிரசவ சமயத்தில் தலைக்கு பதில் கால் முதலில் வெளியில் வந்துவிட, அந்த சமயத்தில்தான் இது மாதிரி 'லே.....சாக' சுட்டு காலை உள்ளே தள்ளினாராம் டாக்டர் ரங்காச்சாரி. அப்புறம் நார்மல் டெலிவரி ஆச்சாம்.

geetha santhanam சொன்னது…

பிரசவ வார்டில் சிகரெட்டோட வந்தாரா பயமாயிருக்கே. துரை, கருப்பையில் குழந்தை இருக்கையில் ஆபரேஷன் செய்த டாக்டரின் கையைக் குழந்தை பிடித்திருக்கும் படம் இமெயிலில் வலம் வந்ததே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்